மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம், மண்டபம் எனும் ஊரில் அமைந்திருந்தது. முந்தையநாள் தோழர் தமிழ்மணி கூறிய மீன் அறுவடை செயல்திட்டத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தோம். Cobia மற்றும் pompano ரக மீன்களைப் பராமரித்து அவை உற்பத்தி செய்யும் குஞ்சுகளைக் கூண்டுகளில் வளர்க்கும் தொழில்நுட்ப முறையை இந்த ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்கின்றனர். 18 மீட்டர் சுற்றளவு கொண்ட மிதவைக்கூண்டுகள் பல்வேறு அளவு துவாரங்கள் கொண்ட வலைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு முறையாக உணவிட்டு வளர்ச்சி அடைந்தவுடன் அதை அறுவடை செய்கின்றனர்.
தோழர் தமிழமணி அங்கு இரண்டு விதமான நடவடிக்கை உள்ளதாகச் சொன்னார். முதலாவது, மீனை அறுவடை வரை வளர்த்து அதை உணவுக்காக விற்பது. மற்றது மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து மீனவர்களிடம் விற்பனை செய்வது. மீனவர்களும் இம்முறையிலேயே கூண்டுகள் அமைத்து கடலில் மீன் குஞ்சுகளை வளர்த்துப் பலனடைகின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மீனுடைய வளர்ச்சி குறைவாகவும் அது உண்ணும் உணவின் அளவு அதிகமாகவும் இருக்கும் என்பதால் நட்டமடையாமல் இருக்க போதுமான விளக்கங்களும் ஆலோசனைகளும் இத்தொழிலை மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.
எங்களை மீன்கள் உள்ள தொட்டிகளுக்கு அழைத்துச் சென்றார் தமிழ்மணி. மீன்களின் படிப்படியான வளர்ச்சியைக் காண முடிந்தது. மிகச்சிறியனவாக இருக்கும் குஞ்சுகள் இலக்கில்லாமல் புழுக்கள் போல நீரில் நீந்திக்கொண்டிருந்தன. மனித நிழல் நீரில் தெரிந்ததும் உணவுக்காக ஒரே இடத்தில் குழுமிவிடுகின்றன. அதன் குதூகல உலாத்தல் வளர வளர குறைகிறது. இறுதியில் 35 கிலோ வரை இருக்கும் தாய்மீனின் அசைவு ஈபானியர் நடனம் போல நளினமானது.
காலை பசியாறல் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள விருந்தினர் வீட்டில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அமைதியான சூழலில் உருவாக்கப்பட்டிருந்த அவ்விடம் அக்காலை வேளையில் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. தமிழ்மணி தொடர்ந்து வல்லினம் வாசித்து வருகிறார் என்பது அவரை மேலும் நெருக்கமாக்கியது. மலேசிய இலக்கியச் சூழல் குறித்து அறிந்து வைத்திருந்தார். பேசிக்கொண்டிருந்த சுவாரசியத்தில் விடைபெற்றுப் புறப்பட தாமதமானது.
போகும் வழியில் ஆவுடையார் கோயில் செல்வதாகத் திட்டம். கோணங்கியின் பரிந்துரை அது. மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றியதாகச் சொல்லப்படும் இக்கோயிலுக்குச் செல்ல அதன் கலைநுட்பங்களை அறிந்தவர் துணையிருந்தால் பயனாக இருந்திருக்கும். நாங்கள் அதை அறிந்தவர்கள் இல்லை. கோணங்கி சொன்னது முதலே அக்கோயில் குறித்து இணையத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். அதன்மூலம் பிறர் துணையில்லாமல் ஓரளவு கோயிலை உள்வாங்க முடியும் என நம்பினேன். நரியைப் பரியாக்கிய புராணங்களையெல்லாம் மீறி மூன்று விடயங்களை மனதில் இருத்திக்கொண்டேன். இக்கோயிலில் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார். இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்று. ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டிருக்கும்.
கோயிலில் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்தபடியால் பொழிவிழந்து காணப்பட்டது. அங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார் என்ற எண்ணமே கிளர்ச்சியடையச் செய்தது. நூலின் துணையில்லாமல் முழுமையாக என்னால் திருவாசகத்தைப் பத்து வயதிலிருந்தே பாட முடிந்திருந்தது. வீட்டில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மா என்னையும் அக்காவையும் அமர வைத்து சிவபுராணம் பாட நாங்கள் அவரைப் பின்பற்றிப் பாடுவோம். மொழியின் மீது பிடிப்பு வந்ததும் திருவாசகத்தின் அர்த்தத்தை ஆராயத் தொடங்கினேன். சரியாக ‘நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு’ எனும்போது குரலில் ஒரு பணிவு தொற்றிக்கொள்ளும். நான் ஒன்றுமே இல்லை என்று சுயம் அறுந்துவிழும் ஒலி கேட்கும். கால ஓட்டத்தில் மரண வீடுகளில் நூலின் துணை இல்லாமல் சிவபுராணத்தைப் பாட என் உதவி பலருக்கும் தேவைப்பட்டது. எங்களுக்காக எழுத்தாளர் தூயன் காத்திருப்பார் என்பதாலும் விரைந்து மதுரைக்குச் சென்றுவிட வேண்டும் என்பதாலும் விரைவாகவே கோயிலை விட்டு வெளியேறினோம்.
ஆவுடையார் கோயிலுக்கு பொருத்தமான துணையில்லாமல் சென்றது ஓர் இழப்பாகவே உறுத்திக்கொண்டிருந்தது. பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய ‘மேற்கத்திய ஓவியம்’ நூலை வாசிக்கும்போது ரசனை மேம்பட வரலாற்று உணர்வும் படிமங்களின் தன்மைகளை அறியும் நுணுக்கமும் எவ்வளவு முக்கியம் என அறியமுடிந்தது. அவர் கொடுத்திருக்கும் குறிப்புகளை வாசிக்கும் வரை அவ்வோவியம் ஒருவிதமான ரசனையை வழங்கினாலும் குறிப்புகளை வாசித்து அதன் நுட்பங்களையும் அறிவியலையும் அறிந்தபின் வேறொன்றாக மனதில் விரிகிறது. கவிதைகளை வாசித்து வாசித்து ஒரு ரசனை மனநிலையை உருவாக்குவதுபோலதான் இதற்கும் ஒரு பயிற்சி தேவை. அப்பயிற்சி இல்லாவிட்டால் எப்படி ஓர் ஆரம்ப வாசகன் கவிதையை நெருங்குவானோ அப்படித்தான் நாங்களும் சிற்பங்களை நெருங்கினோம். அதன் நுண்ணிய வேலைப்பாடுகளும் பிருமாண்ட மதில்களையும் தொடுவதன் வழி காலத்திற்குப் பின்னோக்கி செல்ல முயன்றேன். மீண்டும் ஒருமுறை தகுந்த வழிகாட்டியோடு வரவேண்டும் என முடிவெடுத்துக்கொண்டேன்.
தூயனைச் சந்திக்க நான் ஆவலாக இருந்தேன். அவரது சிறுகதை தொகுப்பு அவரைச் சந்திக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. தூயன் வேலைக்கு அன்று அரைநாள் விடுப்புப் போட்டிருந்தார். காத்திருந்த அவரைப் பின் தொடர்ந்து சென்று வீடு அடைந்தோம். சிறிய தோட்டம் உள்ள மொட்டை மாடியும் வாசலில் வேப்ப மரமும் உள்ள அழகிய வீடு அது.
தொடரும்