பாம்பன் பாலத்தில் பயணிக்க வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. 2,340 மீட்டர் நீளம் கொண்ட இது இந்தியாவின் முதல் கடல் பாலம். 1914இல் சேவையைத் தொடங்கி 100 வருடங்கள் கடந்துவிட்ட இப்பாலம் பெரிய கப்பல்கள் கடக்கும்போது நடுவில் தூக்கி வழிவிடும். திட்டமிட்டபடி காலை 7 மணிக்கெல்லாம் எழுந்து காத்திருந்தோம். இடையில் இரயில் பரமகுடி நிறுத்தத்தில் நின்றவும் தயாஜி பரவசமாகி அந்தப் பூமியில் கால்பதித்தார். கமலஹாசன் பிறந்த ஊரின் அருளால் தான் ஒரு சிறந்த நடிகனாக வரலாம் என்ற ஏக்கம் தெரிந்தது. அரை மணி நேரத்தில் பாம்பன் பாலத்தில் ரயில் ஊர்ந்து செல்லத் தொடங்கியது. நாங்கள் கடலைப் பார்த்துக்கொண்டே வந்தோம். காலைக் குளிரைச் சுமந்திருந்த காற்று சிலிர்க்க வைத்தது. கீழே தண்டவாளத்தையோ அதை தாங்கியுள்ள தூண்களையோ பார்க்க முடியவில்லை. அகன்ற ரயில் கடலுக்கு மேல் அந்தரத்தில் மிதப்பது போன்றதொரு உற்சாகம். பக்கத்தில் வாகனம் செல்லும் பாலத்தில் நின்றபடி நிறைய பேர் எங்களைப் பார்த்துக் கையசைத்துக் கூச்சலிட்டனர். அது ரயிலுக்கான கையசைப்பு. அவர்கள் பார்வையில் நாங்கள் ரயிலின் உயிருள்ள உபரிப் பாகங்கள்.
கோணங்கி அவர் நண்பர் மூலம் எங்களுக்கு ஆரியாஸ் தங்கும் விடுதியை ஏற்பாடு செய்திருந்தார். உணவகத்துடன் வசதியாக இருந்தது விடுதி. காலையில் இராமநாதசுவாமி கோயில் செல்வது திட்டம். சம்பந்தர், அப்பரால் பாடப்பெற்ற தளம். பக்தர்களுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. இக்கோயிலில் வழிபட்டு காசி சென்றால் பாவம் தீரும் எனும் நம்பிக்கையில் வந்து கூடுகின்றனர்.
‘கடலிடை மலைகள் தம்மால்
அடைத்துமால் கருமம் முற்றித்
திடலிடைச் செய்த கோயில்‘ என நாங்கள் நடந்து சென்ற பாதையில் எங்கேனும் நின்றுதான் அப்பர் பாடியிருக்கக்கூடும். நான் மதச் சடங்குகளில் நம்பிக்கையில்லாதவன். வேண்டுதல்களின் சட்டதிட்டங்களாக நான் எந்த சடங்குகளையும் பின்பற்றியதில்லை. ஆனால் பயணம் என்பது முற்றிலும் வேறானது. பயணத்தின் அனுபவம் தணிக்கைகளால் முழுமை பெறுவதில்லை.
2005இல் தமிழகம் முழுவதும் கோயில்களைக் காண மட்டுமே கன்னியாகுமரி முதல் திருப்பதி வரை பயணம் செய்தேன். எந்தச் சிறப்புத் தரிசனத்துக்கும் பணம் கொடுக்காமல் எவ்வளவு நீண்ட வரிசையிலும் காத்திருந்து வழிபடச் சித்தமாக இருந்தேன். காசியிலும் அதையே கடைப்பிடித்தேன். ஒரு நாட்டு மக்களை அறிந்துகொள்ள சிறப்பு வழித்தடங்கள் உதவுவதில்லை. 300 ரூபாய்க்கு எங்களை உள்ளே விரைவாக அழைத்துச் சென்று கோயிலின் உள்ளே உள்ள 22 கிணறுகளிலும் குளிக்க வைப்பதாக பேரம் பேசினார்கள். எதற்கும் செவி கொடுக்கவில்லை. 25 ரூபாய் கட்டணத்தில் எல்லோரும் செல்லும் வழியில் சென்றோம். கிணற்றில் நீர் இரைத்து ஊற்றுபவர்களுக்கு வெளியில் இருந்த தரகர்களிடமிருந்து கமிஷன் கிடைக்கும் என்பதால் எங்களைப் போன்றவர்களை ஒருவித அலட்சியத்துடன் எதிர்கொண்டனர். இவ்வாறு பேரம் பேசுபவர்கள் உறுப்பினர்களாக உள்ள ஓர் சங்கம் இருப்பதாகவும் அவர்கள் பல்வேறு கட்சிகளில் இருப்பதால் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் வாகனமோட்டி கூறினர். தங்கள் மீது கிணற்றின் நீர் இன்னும் கொஞ்சம்படாதா, பாவங்கள் தீராதா என முதியவர்கள் புலம்புவது கேட்டுக்கொண்டே இருந்தது. கிணற்றின் மீது நின்றுகொண்டு அலட்சியம் காட்டும் யாராவது ஒருவனை ஓங்கி உதைத்துக் கிணற்றில் தள்ளிவிட்டால் மொத்த மக்கள் பாவத்தையும் தீர்த்துவிடலாம். ஆனால் நல்லபடியாக ஊர்போய் சேர முடியாது என்பதுதான் பிரச்சினை.
22 கிணறுகளிலும் நீராடியபின் வழிபாட்டுக்குச் சென்றோம். அனைவரது பார்வையிலும் லிங்கம் அகப்பட மேடைபோல அமைத்திருந்தனர். அதன் மையத்தில் சிறிய நந்தி. நந்தியிடம் தூவப்பட்ட மலர்களை பொறுக்கும் பணியை ஒரு மூதாட்டி செய்துகொண்டிருந்தார். மண்டியிட்டு அவர் ஒவ்வொரு பூவாகப் பொறுக்கிக்கொண்டிருந்தார். பக்தர்கள் தவறவிடும் சில்லறைகளை அவ்வளவு சிரமத்துடன் குனிந்து சேகரிக்கச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். நான் தயாஜியிடம் கூறினேன், “இந்த மூதாட்டி எப்படியும் ஒரு கதாபாத்திரமாக என்னிடமிருந்து வெளிபடுவார். இலக்கியவாதி கவனிக்கவேண்டிய இடம் மூலஸ்தானத்தை அல்ல. இந்த மூதாட்டியைத்தான்”
அறைக்குச் சென்று குளித்துவிட்டு மீண்டும் தனுஷ்கோடிக்குப் புறப்பட்டோம். 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் உண்டான ராட்சத அலைகளால் தனுஷ்கோடி மூழ்கடிப்பட்டபின் எஞ்சி இருந்த ஒரு தேவாலயத்தையும் சில சிதிலமடைந்த வீடுகளையும் பார்க்க முடிந்தது. தேவாலயத்தைச் சுற்றி சங்கு, சிப்பி, முதலான பொருள்கள் சுற்றுலாப்பயணிகளை நம்பி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தேவாலய வாசலில் ஒரு முதியவர் தான் சிறுவனாக இருந்தபோது கண்ட பேரலையை விவரித்தார். தன் கையிருப்பில் இருந்த அழிவுக்கு முன்பான தனுஷ்கோடி படங்களை காட்டினார். நாங்கள் மணலில் நடந்து கடலின் அருகில் சென்றோம். கடல் அலைகள் உக்கிரமாக இருந்தன. மணல் துகள்கள் பறந்துகொண்டே இருந்தன. நான் மனுஷ்ய புத்திரனின் ‘மணலின் கதை’ கவிதையைச் சொன்னேன். மணலைப் பார்க்கும்போதெல்லாம் நான் அந்தக் கவிதையைச் சொல்லி அலுப்பூட்டுவதாக நண்பர்கள் நொந்தனர்.
மாலையில் கோணங்கியின் நண்பர் தமிழ்மணி வந்தார். நல்ல இலக்கிய வாசகர். சமகால இலக்கியச் சூழல் குறித்தும் நூல்கள் குறித்தும் தனித்த அபிப்பிராயம் வைத்திருந்தார். இரவுணவுடன் பேசிக்கொண்டிருந்தோம். அவர் பணிபுரியும் கடல்மீன் ஆராய்ச்சி நிலையம் குறித்த தகவல் வெகு சுவாரசியமாக இருந்ததால் மறுநாள் மதுரைக்குச் செல்லும் முன் அவர் பணிபுரியும் இடத்தையும் பார்வையிடலாம் எனத் திட்டமிட்டோம். அப்படியே மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் காரில் பயணமானோம். இப்போது எங்கள் வலதுபுறம் பாம்பன் பாலம் இருந்தது. இறங்கிச்சென்று பார்த்தோம். காற்றழுத்தம் அதிகமாக இருந்தது. ரயில் வரவில்லை. வந்திருந்தால் நாங்களும் கையசைத்து ஆரவாரம் செய்திருப்போம். ஜடப்பொருள்களுடன் உரையாடுதல் முதிர்ச்சியின்மைபோல மனதில் படிந்துவிட்டது. அதனாலாவது அறிமுகம் இல்லாத மனிதர்களைப் பார்த்து புன்னகைப்பதும் கையசைப்பதும் நல்லதுதானே.
தொடரும்
மூதாதையர்களின் நாக்கு – 1: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்
மூதாதையர்களின் நாக்கு – 2: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்