மூதாதையர்களின் நாக்கு – 2: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

01

பி.ஏ.கிருஷ்ணன் அரங்கு

கீழே இறங்கியபோது ஜெயமோகன் தன் பயணக்குழுவின் நண்பர் ஒருவரைக் கலாய்த்துக்கொண்டிருந்தார். சிரிப்பும் கேலியுமாகக் காலையிலேயே தொடங்கிவிட்டிருந்தனர். உடல் நலம் கொஞ்சம் தேறியிருந்தது. நான் அந்த வட்டத்தில் நுழைந்தவுடன் கவனம் என்னை நோக்கி திரும்பியது. மலேசிய எழுத்தாளர்கள் மத்தியில் உள்ள பூசல்கள் பற்றிய கலாய்ப்புகளாக அந்தப் பேச்சு பரிணாமம் எடுத்தது. ஏதும் பதில் பேசினால் கிண்டல்கள் தொடரலாம் என மௌனமாகச் சிரித்தபடி இருந்தேன். இதற்கு முன் சிக்கிக்கொண்டவரும் அதே உத்தியைத்தான் கையாண்டார். ஜெயமோகன் கிண்டல்களில் சிக்கும் ஒருவர் இறந்ததுபோல நடித்தால் கரடி முகர்ந்து பார்த்து போய்விடும் எனும் நீதிக்கதையின் காட்சியை நினைவில் வைத்திருப்பது நலம். தம்பிடித்து இறந்தவன் போல இருந்ததால் ஜெயமோகன் கவனம் விஜயலட்சுமி பக்கம் தாவியது. “நீங்க பெண்ணிய எழுத்தாளரா?” என ஆரம்பித்தார். விஜயலட்சுமி என்ன சொல்வதென தெரியாமல் குத்துமதிப்பாக தலையை நேராகவும் பக்கவாட்டிலும் ஆட்ட நான் கழண்டுகொண்டேன்.

காலையிலேயே எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் வந்திருந்தார். அன்றைய முதல் அரங்கம் அவரது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தார். வணிக எழுத்துகளின் தேவை குறித்த பேச்சு அது. கல்கி, சாண்டில்யன் எழுத்துகளுக்கு தமிழ் இலக்கியச் சூழலில் எவ்வாறான இடம் உண்டு என்றும் அவ்வெழுத்துகள் ஒரு காலக்கட்டத்தில் உருவாக்கிக் கொடுத்த பிரமாண்ட கற்பனை உலகம் குறித்தும் அந்த உரையாடலின் சாரம் இருந்தது. நேற்று எத்தனை மணிக்கு படுத்தீர்கள் என்று பொதுவாகக் கேட்டார். அதிகாலை வரை ஜெயமோகனுடன் பேசிக்கொண்டிருந்ததாகச் சிலர் கூறினர். நான், “கண் விழித்தபோதும் அவர் கீழே பேசிக்கொண்டுதான் இருந்தார்,” என்றேன்.

02

பாரதி மணி அவர்களுடன்

“அவன் பிசாசு…” என்றவர் கொஞ்சம் யோசித்து “இல்ல…வேதாளம்” என்றார். ‘உடம்ப கெடுத்துக்கிறான்’ எனும் அண்ணனின் குரல் அதில் ஒளிந்திருந்தது. பி.ஏ.கிருஷ்ணன் அரங்கில் பெரும்பாலான கேள்விகள் அவரது நாவல்கள் ஓவிய நூல் (மேற்கத்திய ஓவியங்கள்) பற்றியும் இருந்தன. ஜெயமோகனிடமிருந்தும் பெரும்பாலான கேள்விகள் எழுந்தன. லட்சுமி மணிவண்ணன் கேள்விகளால் அரங்கில் ஆயுர்வேத மருத்துவம் X நவீன மருத்துவம் என விவாதம் எழுந்தது. நான் திரும்பி சண்முகசிவா வந்துள்ளாரா எனப் பார்த்தேன். ஆயுர்வேதம் – நவீன மருத்துவம் குறித்த அவரது பார்வை அண்மைய ஆராய்ச்சி தரவுகளைத் தொகுத்து வகுக்கக்கூடியவை. விவாதம் முடிந்தபின்பே அவர் வந்து சேர்ந்தார்.

பாரதி மணி அவர்கள் என் பின்னால் அமர்ந்திருந்தார். “நீங்க நவீன்தானே?” என்றார். நான் அவரிடம் பேச வேண்டும் என பிரியப்பட்டாலும் அவர் நூலை வாசிக்காமல் எதிர்க்கொள்வது தயக்கமாக இருந்தது. ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ எனும் நூலில் அவரது மொத்தப் படைப்புகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அந்த நூல் குறித்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார். மலேசிய இலக்கிய வரலாறு குறித்து முதல்நாள் நான் கொடுத்த விளக்கங்கள் சிறப்பாக இருந்தது என்றார்.

03

சீ.முத்துசாமி அரங்கு

ஓய்வுக்குப்பின் சீ.முத்துசாமியின் அமர்வு. முதல்நாள் எங்கள் அமர்வு முடிந்தவுடன் “நீ பரவால நிம்மதியா தூங்குவ… நாளைக்கு என்னைக் கேள்வி கேப்பாங்களே” என விரக்தியோடு பேசிவிட்டுச் சென்றவரை அப்போதுதான் மீண்டும் பார்த்தேன். கேள்விகளுக்கு முத்துசாமி சிறப்பாகவே பதில் கூறினார். ஆவணப்படத்துக்காக நான் அவரை கேள்விகளால் வாட்டி எடுத்தது நல்ல பயிற்சியாக இருந்திருக்க வேண்டும். சீ.முத்துசாமியிடம் பி.ஏ.கிருஷ்ணன் கேட்ட கேள்வி முக்கியமானது. தொழிற்சங்க போராட்டம், எஸ். ஏ. கணபதி குறித்து அவரது கேள்விகள் இருந்தன. அரங்கு முடிந்தபின் ‘வல்லினம் 100’ புத்தகத்தில் ஜீவி காத்தையா அவர்களின் நேர்காணல் தோட்டத் தொழிற்சங்கம் குறித்த மிக விரிவான வரலாற்றுத் தகவல்களை விமர்சனங்களுடன் வழங்கியுள்ளதைக் கூறினேன். வாசிப்பதாகச் சொன்னார்.

அன்றைய இறுதி அரங்காக மேகாலய எழுத்தாளர் ஜெனிஸ் பரியத்துடனான உரையாடல் அமைக்கப்பட்டிருந்தது. ராம்குமார் தமிழில் அவரது உரையாடலை மொழிபெயர்த்து வழங்கினார். ஆங்கிலத்தில் எழுதும் அவரது மென்மையான பேச்சு ஈர்ப்பாக இருந்தது. இன்னொரு மொழி என அந்நியமாகாமல் அரங்கு முழுமையடைந்திருந்தது. அன்று இரவு ராமேஸ்வரம் புறப்பட வேண்டியிருந்ததால் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லியும் வண்டி ஏற்பாட்டுக்காகவும் நான்தான் உரையாடலில் சில பகுதிகளைத் தவற விட்டிருந்தேன்.

அரங்குகள் முடிந்து அனைவரும் பொதுநிகழ்ச்சிக்குத் தயாராகினர். எழுத்தாளர் சு.வேணுகோபால் வந்திருந்தார். என்னை அவர் வாசகராக அறிமுகப்படுத்திக்கொண்டேன். அப்படிச் சொல்வதற்கு கொஞ்சம் தகுதிகள் வேண்டும் என நம்புபவன் நான். ஓர் எழுத்தாளனிடம் அவர் வாசகராக அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒருவன் குறைந்தபட்சம் அவரது முக்கியமான ஆக்கங்களை வாசித்திருக்க வேண்டும். அவரிடம் அப்படிக் கூற எனக்குத் தகுதிகள் இருந்தன. நான் என்னைக் கவர்ந்த அவரது சிறுகதைகள் குறித்து கொஞ்சம் பேசினேன். என் சிறுகதை தொகுப்பைக் கொடுத்தேன். சு.வேணுகோபால் உற்சாகமாக அவரது சிறுகதைகள் மைய உணர்ச்சிகள் குறித்து பேசினார். புதிதாக அவர் எழுதியுள்ள சிறுகதை குறித்தும் கூறினார். அக்கதையை அவர் விவரித்த விதம் மனதளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

04

சு.வேணுகோபலுடன்

விஷ்ணுபுரம் அரங்குகளில் பல விடயங்கள் பெரிதும் கவர்ந்தன. பல முன்னணி எழுத்தாளர்களிடம் வெகு எளிதில் உரையாட முடிவது அதில் முக்கியமானது. அவர்களும் உரையாடும் மனநிலையில் இருக்கின்றனர்.  ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் தனிப்பட்ட குழு உரையாடல்களில் போய் இணைந்துகொள்வதும் சுவாரசியமானது. செவிச்செல்வம் செல்வத்துட் செல்வமல்லவா! மூத்த படைப்பாளிகளை அங்கீகரித்தல், இளம் படைப்பாளிகளை கவனப்படுத்துதல், சமகாலத்தில் தீவிரமாக இயங்கும் படைப்பாளிகளுடன் விவாதம் செய்தல் என அனைத்துத்தரப்பையும் கவனத்தில்கொள்ளும் பாங்கு எந்த இலக்கிய இயக்கமும் முன்மாதிரியாகக் கொள்ளக்கூடியவை.

அடுத்து, நேர ஒழுங்கு மிக கவனமாகக் கையாளப்படுகிறது. அவசியமற்ற பேச்சுகள் மூலம்  அரங்குகளிலும் நேரம் விரையமாவதில்லை. தத்தம் கருத்துகளை நீட்டி முழக்கி அதை கேள்வியாக முன்வைப்பது குறைவாக இருந்தது. அதற்கான முயற்சியில் யாராவது ஈடுபட்டாலும் உடனே அமைப்பினரால் தலையீடு செய்யப்பட்டது. பல சமயம் கேள்விகளை ஜெயமோகனே செம்மையாக்கி வேறொரு வடிவில் எளிமையாக விளக்கினார். இதே ஒழுங்கு உணவு பரிமாறலிலும் இருந்தது. தங்கும் வசதியும் மனநிறைவைக் கொடுத்தது.  கல்யாண மண்டபத்தில் தங்குவதற்கான அறைகளும் இருக்கும் என்பதை இப்போதுதான் அறிந்தேன். தமிழ்ப்படங்களில் கல்யாண மண்டபத்தில் தங்குவது குறித்து காட்சிகள் இருந்தாலும் முழுமையாகப் புரிந்ததில்லை. அது கலாச்சாரத்தின் நவீன மாற்றம். மலேசியாவில் எந்தக் கல்யாண மண்டபத்திலும் அதுபோல தங்குவதற்கான வசதிகள் இல்லை. அம்மண்டபங்கள் சீனர்களின் தேவைக்காகக் கட்டப்படுபவை. மலாய்க்காரர்கள் மண்டபங்களில் திருமணம் நடத்துவது குறைவு. குடியிருப்பின் வெளிப்புறத்தில் நீண்ட கூடாரம் அமைத்து எளிமையாகவும் உறவுகளுடனான நெருக்கத்தைக் கூட்டியும் திருமணத்தைச் செய்து முடிப்பர்.

எல்லாவற்றுக்கும் மேலாக பங்கேற்பாளர்கள் நல்ல வாசகர்களாக இருந்தனர். கேள்விகளில் படைப்புகளை அவர்கள் வாசித்து வந்தது தெளிவாகியது. பொத்தாம்பொதுவான கேள்விகள் எழவில்லை. இது எழுத்தாளர்களை மேலும் அறிய உதவியதுடன் குறிப்பிட்ட படைப்பை வாசிக்கவும் தூண்டியது.

இரண்டு விடயங்களை விஷ்ணுபுரம் குழுவினர் அடுத்த வருடம் கவனத்தில் கொள்ளலாம்.

  • அரங்கில் பங்கெடுக்கும் எழுத்தாளர்களின் பெரும்பான்மையான நூல்களையும், விருதுபெருபவரின் நூல்களையும் விற்பனைக்கு வைக்க ஏற்பாடு செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் நூலன்றி வேறு நூல்களை அங்கு விற்பனையில் தவிர்க்கலாம். இது அந்த வருடத்துக்கான முன்னெடுப்பை இன்னும் கூர்மைப்படுத்தக்கூடும்.
  • இனி ஒவ்வொரு ஆண்டும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தமிழ் எழுத்தாளர்களுக்கும் அரங்குகளை ஒதுக்கலாம். வருடத்திற்கு ஒரு நாடு எனும் ரீதியில் செய்தாலும் பயனாக இருக்கும். விஷ்ணுபுரம் விழா தமிழின் முக்கிய எழுத்தாளர்கள், வாசகர்கள் இணையும் களமாக இருப்பதால் இங்கிருந்து உருவாகும் அறிமுகம் வெகு எளிதில் தமிழகம் முழுக்கவே பரவக்கூடும்.

பொது நிகழ்ச்சி

செல்வேந்திரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நான் இயக்கிய ஆவணப்படத்தின் சுருக்கம் 15 நிமிடம் திரையில்05 ஓடியது. பலமுறை பார்த்திருந்தும் மீண்டும் ஆர்வமாகப் பார்த்தேன். நண்பர் செல்வத்தின் அற்புதமாக எடிட்டிங்கில் படம் அனைவரையும் கவர்ந்தது. இது எனது 12ஆவது ஆவணப்படம். அதிக உழைப்பைக் கோரிய படமும் இதுதான். சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது என அறிவிக்கப்பட்டவுடன் நானே முன்வந்து இயக்கித் தருவதாக ஜெயமோகனிடம் கூறியிருந்தேன். விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துக்கு அந்த ஆவணப்படத்தின் 100 குறுவட்டுகளை வல்லினம் சார்பாக அன்பளிப்பாக வழங்குவதாகவும் சொல்லியிருந்தேன். ஒரு மலேசியப் படைப்பாளிக்குக் கிடைக்கும் உயரிய அங்கீகாரத்தின் மகிழ்ச்சியை அதன் மூலமே பகிர்ந்துகொள்ள முடியும் என நம்பினேன்.

சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட ஓரிரு மாதங்கள் இருக்கும் முன்பே  அவரை ஆவணப்படம் இயக்க எழுத்தாளர் அ.பாண்டியன் மூலம் அனுமதி கேட்டிருந்தபோது முத்துசாமி மறுத்திருந்தார். அது எனக்கு மிகுந்த மனச்சோர்வைக் கொடுத்தது.  எனக்கும் சீ.முத்துசாமிக்கும் இடையில் சிறு பிணக்கு இருந்தது. ஆவணப்படத்தின் தேவை அறிந்து மறுக்கமாட்டார் என்றே நினைத்திருந்தேன். மலேசிய நவீன இலக்கிய முன்னோடிகள் எனும் வரிசையில் அவரது ஆவணப்படம் வராமல்  வரலாறு முழுமையடையாது என்பதை எடுத்துக்கூறியும் பிடிவாதமாக மறுத்திருந்தார். நான் பேசினால் மேலும் அவர் கோபம் அடைந்து சூழல் மோசமாகக் கூடும் என்ற அச்சம் இருந்தது.

07

வண்ணதாசனுடன்

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியிடம் எனது நோக்கத்தை விளக்கினேன். ஆவணப்படம் இயக்குவது எனக்காக அல்ல. இதுவரை இயக்கிய எந்த ஆவணப்படத்திலும் எனது பெயரை நான் இணைத்துக்கொண்டதில்லை. ஆவணப்படத்தில் பதிவாகும் ஆளுமைகளே முக்கியமானவர்கள். இயக்குபவர்கள் கருவிகள் மட்டுமே. சீ.முத்துசாமியை பதிவு செய்வது ஒரு காலத்தைப் பதிவு செய்வது என அவரின் சிபாரிசை வேண்டினேன். அப்போதும் சீ.முத்துசாமி மறுத்திருந்தார். சுவாமி நிதானமாக ஒன்றைக் கூறினார். “உண்மையில் உங்கள் நோக்கம் உயர்வானதென்றால் அது தடைபடாது. அப்படித் தடைபடுவதாகத் தோன்றலாம். ஆனால் உங்கள் எண்ணத்தின் நேர்மையைப் பொறுத்து அதன் தன் இலக்கை அடையும்.” சுவாமியிடம் பேசுவது மனதுக்கு எப்போதும் ஆறுதலானது. அவர் சட்டென சலனத்தைப் போக்குவார். சமநிலைப்படுத்துவார். நான் அமைதியானேன். ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் வழிநடத்திய கூலிம் இலக்கியக் கலந்துரையாடலில் சீ.முத்துசாமி வந்திருந்தார். தாமதிக்காமல் பார்த்த இடத்தில் கட்டிப்பிடித்து சமாதானம் செய்தேன். அன்று மாலையே கடையில் அமர்ந்து காப்பி குடிக்கும் அளவுக்கு அனைத்தும் அவ்வளவு சீக்கிரம் இயல்புக்குத் திரும்பியது. அதன் உச்சமாக ஜெயமோகன் விஷ்ணுபுரம் விருதை மூன்றாம் நாள் அறிவித்ததும் சுவாமி கூறியது நடந்தது. ஆம்! நோக்கம் உயர்வானதென்றால் எதுவும் தடைபடாது.

ஆவணப்படத்துக்கு ‘ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்’ எனத் தலைப்பிட்டிருந்தேன். ரப்பர் விதைகள் பார்க்க பளபளப்பானவை. தரையில் தேய்த்து தோலில் வைத்தால் பொசுக்கிவிடும். முத்துசாமிக்கான படிமமாக அத்தலைப்பை வைத்தேன். மிகவும் ரசித்து இயக்கிய ஆவணப்படம் அது.

06

கோவை ஞானியுடன்

மேடையில் அமர அழைத்தபோதுதான் கோவை ஞானியைப் பார்த்தேன். நான் 23 வயதில் சண்முகசிவாவை சந்தித்தபோது அவர் வாசிக்கக் கொடுத்த நூல்களில் பிரதானமாக இருந்தவை எம்.ஏ.நுஃமான் மற்றும் கோவை ஞானியுடையவை. இலக்கிய வாசிப்பைவிட சிந்தனை உருவாக்கம் எனக்கு முக்கியம் என நினைத்தார் சண்முகசிவா. நான் கதைகளைப் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தாலும் சண்முகசிவா சொல்வதைத் தட்டாமல் வாசிக்கத் தொடங்கினேன். கவிதையிலிருந்து மெய்யியலுக்கு, மார்க்சியமும் தமிழ் இலக்கியமும், தமிழில் நவீனத்துவம், பின்நவீனத்துவம், மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் என கோவை ஞானியின் எழுத்துகள் அடிப்படையாக என் சிந்தனை வளர்ச்சிக்குக் காரணியாகின. மிக முக்கியமாக இலக்கியப்பிரதிகள் துணையுடன் அந்நியமாதலில் உண்டாகும் பிரச்சினைகளை கோவை ஞானியிடமிருந்தே எளிமையான வடிவில் பெற்றுக்கொண்டேன். எஸ்.வி.ராஜதுரை  நூல்கள் (அந்நியமாதல், இருத்தலியமும் மார்க்ஸியமும்) பின்னர் விரிவாக அதுகுறித்த விளக்கங்களை விசாலமாக்கின.

இன்று சமகால மலேசியச் சிறுகதைகளின் அடிநாதமாக இருக்கும் அந்நியமாதல் மனநிலையை  கார்ல் யங் (Carl Jung) முன்வைத்த (சிக்மண்ட் பிராய்டின் மாணவர்) அந்நியமாதலின் உளவியல் தன்மைகளின் அடிப்படையிலும் மெல்வின் சீமனின் (Melvin Seeman) சமூக ஆய்வின் வழி நவீன அந்நியமாதல் கோட்பாடுகளின் அடிப்படையிலும்  உள்வாங்க கோவை ஞானி கொடுத்த அடிப்படை பாடமே காரணம். இப்படி பல சிந்தனைகளை விரிவாக உள்வாங்கிக்கொள்ள கோவை ஞானியின் நூல்களே காரணமாக அமைந்தன. அவற்றை வாசித்து பொதுவில் பேசுவது ஓர் ‘இலக்கிய கௌரவத்தை’ அந்த வயதில் கொடுத்தது.  எளிமையான எழுத்து என்பது ஆழமான அறிவின் வெளிபாடு என எனக்கு புரியவைத்தவர் கோவை ஞானி. ஒரு துறையை ஆழமாக அறிந்தவர்களால் மட்டுமே சிக்கல் இல்லாத மொழியில் அதன் சாரத்தைப் போதனையாக்க முடிகின்றது. அப்படி அவரது போதனைகளே இலக்கியத்தைக் கையில் எடுத்துக்கொண்ட வயதில் சிந்தனை வளர்ச்சிக்குக் காரணமாகின.

ஆவணப்பட வெளியீடு, நூல் வெளியீடு, விருது வழங்கும் நிகழ்வு என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் விரைவாக நகர்ந்தாலும் நான் கோவை ஞானியிடம் என்ன பேசுவது என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். ‘உங்கள் நூலை வாசித்திருக்கிறேன்’ என்று சொல்லலாம். ஆனால் பலரும் வாசித்திருப்பார்கள். அப்படிச் சொல்வதில் ஒரு பிரத்தியேகமும் இல்லை. அவர் எழுத்தை வாசித்து சிந்திக்கத் தொடங்கிய பெரும் கூட்டத்தில் ஒருவன் என்னவென்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்ற குழப்பம் எழுந்தாலும் பள்ளியில் என்னிடம் பயின்ற மாணவர்கள் எங்காவது எதிர்கொண்டு என் மாணவனாக அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது நான் மகிழ்வதை எண்ணிப்பார்த்து, அப்படியே அறிமுகம் செய்துக்கொள்ளலாம் என முடிவுக்கு வந்தேன். இந்தத் தவிப்பில் மேடையில் பேசுவதற்கு என் முறை வந்ததை கவனிக்கவில்லை. அறிவிப்பாளர் மலேசிய இலக்கியத் தளபதி என்றதும் சுயநினைவுக்கு வந்தேன். பி.ஏ.கிருஷ்ணன் “அப்படித்தான் உங்களை மலேசியாவில் அழைப்பார்களா?” என்று கேட்டதற்கும் ஏதோ குழப்பத்தில் “ஆம்” எனச் சொல்லிவிட்டேன். அவர் “ஓ” என திகைத்தார். அது அவருக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும் என ஊகிக்க முடிந்தது. அப்படியெல்லாம் இல்லை என  சொல்லிவிட வேண்டும்  என குழப்பத்திலேயே கோவை ஞானிக்கு வணக்கத்தை வைத்துவிட்டு பேசத்தொடங்கினேன்.

கடந்தமுறை மலேசியாவில் எனது பேச்சு அத்தனை சிறப்பாக இல்லை என கேமரன் மலையின் தங்கும் விடுதியில் ஜெயமோகன் கூறியிருந்தார். “முதல்ல ஒரு கேள்விய வைங்க. அந்தக் கேள்விக்கான விளக்கம்தான் உங்கள் உரையின் உடலா இருக்கனும். முடிவில் சிறுகதைபோல ஒரு திருப்பம். அவ்வளவுதான்” என எளிய சூத்திரம் சொன்னார். அந்த வடிவத்தை ஓரளவு உள்வாங்கி பேசினேன். சீ.முத்துசாமி எவ்வாறு மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாகிறார் என்றும் அதன் போதாமைகளையும் ஜெயமோகன் விமர்சனபூர்வமாகவே முன்வைத்துப்பேசினார்.  சீ.முத்துசாமி பாவனைகள் இன்றி அவராக நின்று இயல்பாகப் பேசினார். பொங்கிவந்த உணர்ச்சிகளை அடக்குகிறார் என பின் இருந்து செவிமடுக்கும்போதே புரிந்தது.

அனைத்து உரைகளையும் காண

நிகழ்ச்சி முடிந்தது கோவை ஞானியிடம் ஓடினேன். அதற்கு முன்பே அவர் “யார் நவீன். அவரைச் சந்திக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டிருந்தது தெரிந்ததும் சேமித்து வைத்த எல்லா உத்திகளும் கடகடவென சரிந்து 23 வயது நவீனாக அவர் முன்பு நின்றேன். “சார் நான்தான் சார் உங்கள பார்க்க ஓடி வந்தேன்” என்றேன். ஜெயமோகன் அவர் கைகளை என் கைகள் மேல் வைத்தார். நான் அவர் கரங்களைப் பிடித்துக்கொண்டேன். “உங்களை வாசித்திருக்கிறேன் சார்” என்றேன். சொல்லி முடித்தவுடன் அப்படிச் சொன்னது அபத்தமாகப்பட்டது. நான் தொடர்ந்து பேசினால் உளறக்கூடும் என அறிவு சொன்னது. நிதானமானேன். “என் புத்தகமெல்லாம் கிடைக்குதா?” என்றார். “யாரிடமாவது இருந்தால் உடனே நகல் எடுத்துக்கொள்வேன்” என்றேன். எதுவுமே முதிர்ச்சியில்லாத பதில்கள். ஆம் நான் 23 வயது நவீன்தான்.

நண்பர்கள் சிலர் பேசுவதற்குக் காத்திருந்தனர். சிலர் படம் பிடிக்கக் காத்திருந்தனர். தினமணி பத்திரிகை நிருபர் நேர்காணல் ஒன்று செய்ய இயலுமா எனக்கேட்டார். அந்தக் கணம் கோவை ஞானியுடன் இருப்பது மட்டுமே எனக்கு முக்கியமாகப் பட்டது. ஓர் ஆசான் ஒரு மாணவனை அறிந்து பெயர் சொல்லி அழைத்துள்ளார். அது அபூர்வமான நிகழ்வு. அந்த 23 வயது நவீன் பத்திரிகையிடம் பேச ஒன்றுமே இல்லை. மீண்டும் எங்கள் சந்திப்பு நடக்கும்போது நான் அவரிடம் பல சந்தேகங்கள் கேட்கலாம். இன்றைய அவரது அரசியல் நிலைபாடுகள் குறித்த விளக்கங்களை அறியலாம். தெளிவு பெறலாம். முரண்படலாம். ஆனால் அவை எதுவும் இந்த நிமிட அனுபவத்துக்கு நிகரானவையல்ல.

நாங்கள் புறப்பட நேரமாகிவிட்டதை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செந்தில் நினைவுருத்தியபடியே இருந்தார். நானும் இதோ போகிறேன் எனக் கூறிக்கொண்டு மீண்டும் மீண்டும் அங்கேயே வட்டமிட்டுக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என் இரு கன்னங்களையும் அவர் கைகளில் ஏந்திப்பிடித்த செந்தில் “வண்டி வந்திருச்சிம்மா. போறேன் போறேன்னு சொல்லிட்டு அப்படியே அங்கயே நிக்கிறியே. ரயில விட்டுடுவம்மா” எனக் கொஞ்சத் தொடங்கிவிட்டதால் காத்திருந்த காருக்குச் சென்றேன். இறுதியாக ஜெயமோகனிடம் விடைப்பெற்றேன். அதே அன்பான அர்த்தம் பொதிந்த புன்னகை. கீழே சென்றபோது கோவை ஞானி வாகனத்துக்குக் காத்திருந்தார். இப்போது 35 வயதுக்காரனாக மாறியிருந்தேன். ‘வல்லினம் 100’ கொடுத்தேன். இணையம் மூலமாக அவரது பல படைப்புகள் கிடைப்பதைக் கூறினேன். அவர் சிந்திக்கக் கற்றுக்கொடுத்தவர் என்றேன். “வயதென்ன?” என்றார். சொன்னேன். “நல்ல வயது” என்றார். காரின் அருகில் அரங்கசாமி நின்றுக்கொண்டிருந்தார். காரில் ஏறும் வரை உடன் இருந்தார். பல வேலைகளில் இருந்த அவர் எங்களையும் பொருட்படுத்திய அக்கறை நெகிழ வைத்தது.

காரில் விஜியும் தயாவும் உரை நன்றாக இருந்தது என்றனர். ஜெயமோகன் மேடையில் புகழ்ந்ததில் மகிழ்ந்திருந்தனர். நான் “ஜெயமோகனின் புகழ்ச்சிக்கு ‘பொறுப்பு’ என இன்னொரு பெயர் உண்டு. அவர் என் பொறுப்பை உணர்த்துகிறார். அதில் வழுவாதிருக்கச் சொல்கிறார். அது மொத்த தமிழ் இலக்கியத்தின் மேல் உள்ள அக்கறையின் குரல். அன்பின் குரலும் இருந்தது. ‘இளம் சிறுகதை ஆசிரியராக வளர்ந்து வரும் நவீன்’ என்றார். அங்குதான் உள்ளது சவால். சிறுகதை எழுத்தாளனாக நான் வளரவேண்டிய தூரங்களை உணர்த்தும் அன்பு. அந்தச் சவாலை நான் ஏற்று தொடர்ந்து எழுதுவது அவசியம்.” என்றேன்.

கார் ரயில் நிலையத்தில் சேர்ந்தவுடன் நண்பர் கலைசேகரின் தமிழக நண்பர் வசந்தன் அவ்வதிகாலையில் தேடிவந்தார். அவர்தான் ராமேஸ்வரத்துக்கு ரயில் டிக்கெட் ஏற்பாடு செய்திருந்தார். டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு புறப்படச்சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் கலைசேகரின் கட்டளைப்படி ரயிலில் ஏற்றிவிட்டுதால் கிளம்புவேன் எனக் காத்திருந்து எங்கள் மூவரையும் அனுப்பிவிட்டு கிளம்பினார். நான் ராமேஸ்வர பயணத்துக்கு ஏற்பாடு செய்ய ஒரே காரணம் பாம்பன் பாலம்தான். ரயிலில் கடலுக்கு நடுவில் பயணிக்கும் அனுபவம் எவ்வாறு இருக்கும் என அறிய நினைத்ததால் இப்பயணத்துக்குத் திட்டமிட்டேன். அசாமில் முருகபூபதியுடன் நாடக அரங்கேற்ற அலுவலாகச் சென்ற எழுத்தாளர் கோணங்கி எங்கள் பயணத்துடன் இணைந்துகொள்ள ராமேஸ்வரம் வருவதாகக் கூறியிருந்தார். பாம்பன் பாலத்தை ரயில் காலை ஏழு மணிக்கு மேல் கடக்கும் என அட்டவணை சொன்னதால் படுத்துக்கொண்டோம். ரயில் ஊர்ந்துகொண்டிருந்தது. வயது உடலுக்குள் பயணிக்கிறதா? மனது வயதுக்குள் பயணிக்கிறதா? என சம்பந்தமில்லாத ஒரு கேள்வி எழுந்து உறக்கத்தை மந்தமாக்கியது.

  • தொடரும்
(Visited 715 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *