மூதாதையர்களின் நாக்கு – 1: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

IMG-20171222-WA00212011இல் பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது எழுதிய சிறு குறிப்பில் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்களைவிட ஓர் எழுத்தாளரே பூமணியை கௌரவிக்க பொறுத்தமானவர் என எழுதியிருந்தேன். அது பாரதிராஜாவையோ விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தையோ அவமதிக்கும் நோக்கம் கொண்டதல்ல. தமிழ்த்திரை உலகில் பாரதிராஜாவின் அழுத்தமான இடத்தை அறிவேன். ஆனால் பூமணியின் நாவலை வாசித்திருக்கும் எழுத்தாளர் ஒருவரால் அவர் ஆளுமையை இன்னும் அணுக்கமாக அறிய முடியும் என நம்பினேன். விருது வழங்கும் கரங்கள் பெறுபவரின் முக்கியத்துவத்தை ஆழமாக அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். அது என் விருப்பம் மட்டுமே. இவ்வாண்டு மலேசிய எழுத்தாளர் சீ. முத்துசாமிக்கு புலிநகக்கொன்றை, கலங்கிய நதி போன்ற நாவல்களுடன் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுத்திய பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் விஷ்ணுபுரம் விருதை வழங்குவதை அறிந்ததும் பயணத்துக்கான உற்சாகம் முழுமை பெற்றது.

டாக்டர் சண்முகசிவாவும் நானும் ஒரு விமானத்திலும் விஜி மற்றும் தயாஜி மற்றுமொரு விமானத்திலும் என 15ஆம் திகதி பயணமானோம். கையில் ‘களவு போகும் புரவிகள்’ வைத்திருந்தேன். ஏற்கனவே வாசித்த தொகுப்புதான். பயணத்தின்போது இப்படி ஏற்கனவே வாசித்த நூல்களை வைத்திருப்பதுதான் எனக்கு வசதிப்படும். ஸ்கேன் வாசிப்பு செய்யலாம். புற கவனமும் இருக்கும். சண்முகசிவாவிடம் புத்தகத்தை வழங்கி ‘சங்கிலி’ கதையை வாசிக்கச் சொன்னேன். அவர் உளவியல் மருத்துவர். காமம் கூடாத ஆணின் மனம் குறித்து அதற்கு முன்பு நாங்கள் பேசியிருந்ததால் அவருடன் இக்கதை குறித்து இன்னும் ஆழமாக விவாதிக்க முடியும் எனக் கருதினேன். வாங்கிக்கொண்டார். ஆனால் வாசிப்புக்கு இடம் தராமல் பேசிக்கொண்டே இருந்தோம். பெரும்பாலும் ‘மை ஸ்கில்ஸ் அறவாரிய’ முன்னெடுப்புகள் பற்றி. விமானத்தில் ஏறியபோது நான் மீண்டும் அவரிடமிருந்து தொகுப்பை வாங்கிக்கொண்டேன். இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் இருக்கை. சளி, காய்ச்சலினால் விமானத்தின் குளிர் துன்புறுத்தியது.  ஒவ்வொரு முறை தமிழகப் பயணத்தின்போதும் இப்படி ஏதாவது இம்சையாகி விடுகிறது. இறங்கும்போது டாக்டர் கையில் வண்ணதாசன் சிறுகதைத் தொகுப்பு இருந்தது.

20171222_235810

                       இமையத்துடன்

சந்திக்கும் விருப்பத்தைக் கூறியிருந்ததால் திருச்சி விமான நிலையத்திற்கு எழுத்தாளர் இமையம் வந்திருந்திருந்தார். சமீபத்தில் வெளிவந்த அவரது நேர்காணலின் சில பகுதிகள் உவப்பானது. ‘எங் கதெ’ நாவல் குறித்த கட்டுரையில் அதன் பலவீனமாக கமலாவின் மௌனத்தைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். வாசகர்கள் பலருக்கும் அக்கருத்து இருந்தது. இமையம் கமலாவின் மௌனத்தின் தேவை பற்றி அந்த நேர்காணலில் பேசியிருந்தார். முகநூல் இலக்கியம், விருதுகள் என  பாசாங்கில்லாத அவரது இயல்பான நேர்காணல் குறித்து உணவகத்தில் பேசிக்கொண்டிருந்தோம். ‘வல்லினம் 100’ கொடுத்தேன். சளிகாய்ச்சலால் நான் அவதியுறுவதைப் பார்த்தவர் மருந்துக்கு ஏற்பாடு செய்தார். மருந்தால் ஒருவித மயக்கம் தொற்றிக்கொண்டது. விஜியும் தயாவும் விமானநிலையம் வந்த பிறகு விடைபெற்றோம். ஏராளமான பணிகளுக்கு மத்தியில் மாறாத அன்புடன் நிதானமாக விடைகொடுத்து அனுப்பினார்.

நரேன்

                                      நரேனுடன்

கோவையில் ராஜஸ்தானிசங் அரங்கத்திற்கு சென்று சேரும்போது இரவு மணி 10.30. கார் ஓட்டுனருக்கு நான்தான் வழிகாட்டினேன். அநேகமாக இம்முறை பயணத்தில் பல வாகன ஓட்டுனர்களுக்கு நான் வழிகாட்டியானது waze தயவு.  நரேன் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். பயணத்திட்டங்கள், ஆவணப்பட வேலைகள் தொடர்பாக அவரிடம்தான் ஒரு மாதமாக உரையாடிக்கொண்டிருந்தேன். ராதா கிருஷ்ணன், விஜய் சூரியன், விஜயராகவன் ஆகியோருடன் சீனு இருந்தார். சீனுவின் கடிதங்களை ஜெயமோகன் தளத்தில் வாசிக்கும்போதெல்லாம் நான் அவரது குரலையும் பேசும் பாணியையும் வேறொன்றாகக் கற்பனை செய்து வைத்திருந்தேன். முற்றிலும் மாறாக சட்டென நெருக்கமாகிவிடும் குரலும் உடல்மொழியும் அவரது. அறைக்குச் சென்று சேரும் முன்பே ‘புயலிலே ஒரு தோணி’ குறித்த என் கட்டுரை ‘மண்டை ஓடி’ சிறுகதை பற்றி பேசினார். உற்சாகமான தொடக்கம் அது. அறை வரை சீனுவும் விஜயராகவனும் வந்தனர். விஜயராகவன் காலச்சுவடு பதிப்பித்த ‘வீட்டின் அருகே நீர்ப்பரப்பு’  என்ற ரேமண்ட் கார்வர் சிறுகதைகள்  மொழிபெயர்ப்புக் குழுவில் ஒருவர். இருவருக்கும் ‘வல்லினம் 100’ கொடுத்தேன். மலேசியாவில் வாசிப்புச் சோம்பல் கொண்டவர்கள்  இலக்கியச் செயல்பாட்டாளராக மட்டுமே என்னிடம் பேசும் சூழலில் சீனு போன்றவர்கள் என் படைப்புகள் குறித்து பேசுவது இன்னும் உரையாடத் தூண்டியது. களைப்பும் மயக்கமும் கூடிக்கொண்டே இருந்தது. உடல் நிலை காரணமாக அரங்குகளில் கலந்துகொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற பயம் கௌவியது. என்னுடன் வந்திருந்த தயாவும் விஜியும் கடும் சோர்வில் இருந்தனர். மலேசிய நேரப்படி அப்போது மணி நள்ளிரவு 1.30. குழலினிது யாழினிது என்பதம் படைப்பின் வாசகச்சொல் கேளா தவர் என்பதை அறிந்தாலும் வேறு வழியில்லாமல் உறங்கிவிட்டேன்.

***

IMG-20171222-WA0012

                          சுரேஷ் பிரதீப்புடன்

காலையில் சீனுவின் தயவில் எங்கள் மூவருக்கும் நல்ல டீ கிடைத்தது. சாலையோரம் நின்றபடியே டீ குடிக்கும் அனுபவம் மலேசியாவில் உருவாகும்போதுதான் நவீன இலக்கியம் வளரும் என நினைத்துக்கொண்டேன். சுனில் கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப் ஆகியோரை காலையிலேயே சந்தித்தபோதே அடையாளம் கண்டுகொண்டாலும் பெயரில் குழப்பம் இருந்தது. இருவரும் ஜெயமோகன் தளம் மூலமே அறிமுகம். சுனில் கிருஷ்ணன் சிறுகதை தொகுப்பான அம்புப் படுக்கையை விழாவில்தான் பார்த்து வாங்கிக்கொண்டேன். சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ நாவலை விழாவுக்குப் பின் கோணங்கியுடன் மதுரையில் சுற்றும்போது ஒரு புத்தகக் கடையில் வாங்கினேன். இருவரையும் முழுமையாக வாசிக்காததால் பொதுவாக மலேசிய இலக்கியம் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். ஒரு நுரைக்குமிழி பிதுங்கி பிரிந்து பன்மையாவதுபோல மண்டப வளாகத்தில் சிறு சிறு குழுக்கள் தோன்றி மற்றொன்றாக பிரிந்து பன்மையாகியபடி இருக்க ஜெயமோகன் காரில்  வந்து இறங்கியதும் எல்லா குமிழ்களும் சட்டென இணைந்து ஒன்றானது. உடன் லட்சுமி மணிவண்ணன், தேவதேவன் ஆகியோர் இருந்தனர்.

ஜெயமோகனிடம் அபாரமான தலைமைத்துவப் பண்பிருந்தது. வந்துள்ள அனைவரின் பெயர்களை அறிந்து வைத்துள்ளார். ஒருவரை பிறருக்கு அறிமுகம் செய்கிறார். அப்படிச் செய்யும்போது ஆளுமையை விவரித்து பயமுறுத்தி அந்நியமாக்கி வைக்காமல் ‘இவரைப் பற்றி ஒன்று சொல்லனும்’ என ஆரம்பித்து சின்னச் சின்ன கிண்டல்கள் மூலம் ஒருவரை மொத்தக் குழுவும் இயல்பாக ஏற்கும்படி செய்கிறார். பெரும் சிரிப்புதான் அனைவருக்குமான மொத்த முகமன் ஆகிறது. கிருஷ்ணன் போன்ற கூர்மையான உரத்த குரல் கொண்ட, உருவத்தில் உயரமான ஒரு வழக்கறிஞரை நெருக்கமாக்குவது இந்தக் கலாய்ப்புகள்தான். அது மானசீகமாக அவர் தோளில் கைபோட உதவுகிறது. அதற்குப்பின்தான் உரையாடல் சாத்தியம். இலகுத்தன்மை இல்லாத இடத்தில் இலக்கியம் வளர்வதில்லை.

அமர்வுகளைத் தொடங்கும் முன்பும் ஜெயமோகன் அதையே செய்தார். கிருஷ்ணனிடமிருந்து கிண்டல்களைத் தொடங்கி அரங்கின் இறுக்கத்தை நீக்கினார். “பலியாடுகளை வரவேற்கிறேன்” எனக்கூறி இளம் படைப்பாளிகளை அழைத்தார்.

அமர்வுகள்

33

            கே.ஜே.அசோக்குமார், தூயன்

முதல் அமர்வு தூயன், கே.ஜே.அசோக்குமார் ஆகியோரிடமிருந்து தொடங்கியது. யாவரும் பதிப்பகத்தின் நூல்கள் சில ஜீவகரிகாலன் மூலம் முன்பே கிடைத்திருந்ததால் தூயனின் சிறுகதைத் தொகுப்பை முழுக்கவே வாசித்திருந்தேன். தூயனைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. ஒரு தொகுப்பை வாசித்து முடித்தபின் சக மனிதர்கள், சூழல், காலம், வாழ்வு குறித்த அவர்களின் தனித்த பார்வை என எதுவும் இல்லாதபோதோ, பெரும்பான்மையின் தரப்பாகவோ அல்லது சிறுபான்மையினரின் குரலாகவோ மட்டும் இருக்கும்போதோ அவ்வாசிப்பின் மீதே ஆழ்ந்த சோர்வு  ஏற்படுவதுண்டு. ஆனால் புதிதாக எழுதத் தொடங்கியுள்ள தூயன்  நிகழ்வுகளின் விவரிப்புகள், மனதின் நுண்மையான சித்திரங்கள், புறநிலைவிவரிப்பின் வழி அகத்தின் சிடுக்குகளில் அலையும் தன்மை என  வெகு எளிதாகவே ஈர்த்து விடுகிறார். முதல் சிறுகதையை (இன்னொருவன்) வாசித்தபோது வாழ்வின் சந்தர்ப்பங்கள் குறித்த நுண்மையான சிந்திரங்கள் கவர்ந்தாலும் அந்தப் பார்வையைச் சுமக்கும் பாத்திரங்களின் உருவாக்கம் குறித்து மட்டுமே சில மாறுபட்ட கருத்துகள் எழுந்தன. ஆனால் ‘எஞ்சுதல்’ வரை வாசித்து முடித்தபோது ‘இருமுனை’ நல்ல தொகுப்பு என்பது உறுதியானது.

அடுத்த அமர்வில் விஷால்ராஜா, சுரேஷ் பிரதீப் ஆகியோரிடம் கேட்கப்பட்ட கேள்விகளைப் பார்த்தபோது நாமெல்லாம் மேடையில் ஏறத்தான் வேண்டுமா என நினைத்துக்கொண்டேன். இத்தனை கூர்மையான, உழைப்புள்ள வாசகப் பரப்பைக் கண்டு வெகுநாட்களாகிவிட்டிருந்தது. விஷ்ணுபுரம் உரையாடல் அரங்கில் மேடை என்பது பார்வையாளர்கள் இடம்போல இன்னொரு பகுதி மட்டுமே. ஆழமான கேள்விகளும் கருத்துகளும் கீழிருந்தும் தொடர்ந்து எழுந்த வண்ணமே இருந்தன. இடைவேளை வந்தபோது ஜெயமோகனிடன் எங்கள் அமர்வுகளை அடுத்த வருடம் வைத்துக்கொண்டால் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டு வருவோம் என விண்ணப்பம் வைத்துப் பார்த்தேன்; நடக்கவில்லை. முந்தைய அரங்குகள் என்னைத்தான் பயமுறுத்தியது என்றால் டாக்டர் சண்முகசிவா காதருகே வந்து, “நான் மேடைக்கு வரல. என் உறவினர் ஒருவருக்கு மருத்துவம் பார்க்கப் புறப்படனும்” என்றார். “ஏன் என்னாகிவிட்டது” என தனித்துவிடப்பட்டதை எண்ணிப் பதறியபோது “உடல் பருமனால் கஷ்டப்படுகிறார். நான் அவரை இளைக்க வைக்க மருத்துவம் செய்யப்போகிறேன்” என வழக்கமான கிண்டலுடன் கழண்டு கொள்ளப்பார்த்தார். சுவாமி, “நான் சிறுகதை எழுத்தாளன் இல்லையே. நான் ஏன் மேல வரணும். நீங்க போங்க” என எனக்கு ஆசி கொடுக்கத் தொடங்கிவிட்டார்.

9

                             போகன் சங்கர்

தடம் பதித்த படைப்பாளிகள் அரங்கில் வெய்யில், ஆர்.அபிலாஷ், போகன் சங்கர் ஆகியோர் பேசி முடித்த பின்புதான் என்னால் எந்தக் கேள்விகளுக்கும் பதில் தர முடியும் எனத் திடமாக நம்பினேன். அதற்குக் காரணம் போகன் சங்கர்தான். நாம் என்னவாக இருக்கிறோமோ அதை பொதுவில் வைப்பது மட்டுமே உரையாலுக்கான வழி என உணர்த்தினார். அரங்குக்காகத் தன்னை மாற்றுவது, அரங்குக்காக அறிவைச் சுமந்து அலைவது, அலட்சியங்கள் மூலம் பொய்யான ஆளுமையைக் கட்டமைப்பது, போலியான உடல் மொழியால் தீவிரம் திணறுவதுபோல பாவனை செய்வது எல்லாமே வெகுசன அரங்கில் செல்லுபடியாகுமே தவிர இத்தனை நுண்மையான வாசிப்புக் கொண்டவர்கள் அதை நுகர்ந்து  முகம் சுளிப்பர் என இவ்வரங்கே உணர்த்தியது. அறியாமையும் தோல்வியும்கூட கலைஞனுக்கானவைதான். அதை நிரூபிக்க திணறத் திணற பதில் தர வேண்டியதில்லை என வெகு இயல்பாகப் பேசிய போகன் மூலம் உள்வாங்க முடிந்தது. அவர் பேச்சில் எந்தப் பாசாங்கும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஜெயமோகனின் இலக்கியப் போக்குகளுக்கு முற்றிலும் மாறான எண்ணத்தைக் கொண்டிருந்தாலும் அதை மிகச் சரியாகவே முன்வைத்தார். பல்வேறு போக்குகளைக் கொண்ட இலக்கிய முயற்சிகளே தமிழ் இலக்கியத்தை வசீகரமாக்குகிறது. அதில் போகனை இன்னும் நெருங்கிப்போக வேண்டும் என்று தோன்றியது.

111மலேசியாவுக்கான அரங்கில் என்னுடன் டாக்டர் சண்முகசிவா, சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி, விஜயலட்சுமி, தயாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். தயாவும் விஜியும் அரங்கில் இடம்பெறுகின்றனர் என அவர்களைப்போல எனக்கும் அழைக்கும்போதுதான் தெரியவந்தது. அரங்கை சீனு வழிநடத்தினார். அரங்கில் ஏறும் முன் நண்பர் கிருஷ்ணனிடம் ஒரு முறைக்கு மேல் நாகஸ்திரத்திரைப் பயன்படுத்தக்கூடாது என சத்தியம் வாங்கிக்கொண்டேன். அது ஏனோ அவர் பேசினால் வழக்குமன்றத்தில் நிற்பதுபோலவே ஒரு மாயை தொற்றிக்கொள்கிறது. மலேசிய இலக்கியம் குறித்து எளிய அறிமுகம் ஒன்றைக் கொடுத்தேன். கு.அழகிரிசாமி , கோ.சாரங்கபாணி , தண்டாயுதம் ஆகியோர் முன்னெடுத்த இலக்கிய முயற்சிகள் குறித்து மேலும் விரிவாகப் பேச எண்ணங்கள் திரண்டு வந்தாலும் அறுவையாகிவிடுமோ எனக் கட்டுப்படுத்திக் கொண்டேன். இப்படிப் பல சமயங்களில் ஏதாவது பேசப்போய் சூழலை ஆக்கிரமித்துவிடுவதாக நண்பர்கள் குற்றம் சாட்டியுள்ளதால் கட்டுப்பாடாகவே இருந்தேன்.

கிருஷ்ணன் மேடையில் ஏறினார். மலேசியாவில் எங்கள் செயல்பாடுகள் குறித்து பாராட்டினார். அதே சமயம் கட்டுரையைக் காட்டிலும் என் சிறுகதைகள் பலவீனமாக இருக்க மலேசியாவின் கலப்பு மொழியுடனான வாழ்வு ஒரு காரணமா எனக் கேட்டார். நான் அது என் போதாமையாக இருக்கலாம் எனக்கூறினேன்.

பொதுவாகவே மலேசிய இலக்கியவாதிகள் மீண்டும் மீண்டும் சிலவற்றைச் சொல்லி தமிழக விமர்சகர்களிடம்b சில சலுகைகள் கேட்பதுண்டு. முதலாவது, அங்குள்ள பாடத்திட்டம் தமிழகம் போல ஆழமானதல்ல. இரண்டாவது, மலேசியாவில் தமிழ் இலக்கியம் சஞ்சிக்கூலிகளால் உருவாக்கப்பட்டது. எனவே அது பலவீனமாக இருக்கும். மூன்றாவது, நூல்கள் வாசிக்கக் கிடைப்பதில்லை. 20 வருடங்களுக்கு முன்பான இந்தக் காரணங்களை இன்றும் சொல்லி இலக்கியத்தில் சிறப்புச் சலுகையைக் கேட்கும் தொணி எனக்குக் கடும் அவமான உணர்ச்சியை ஏற்படுத்துவதுண்டு. ஒரு விமர்சகர் தமிழகத்தில் சமகாலத்தில் இயங்கும் ஒரு படைப்பாளியை அளவிடும் அதே இடத்தில் நின்றுகொண்டு என் படைப்பையும் அளவிடுவதுதான் எனக்கான அங்கீகாரம் என நினைக்கிறேன். அப்படி மதிப்பிட்டுப் புறக்கணிக்கப்பட்டாலும் சம்மதம்தான்.

மலேசிய அரசியல் சூழல் குறித்து சண்முகசிவா மற்றும் சுவாமியும் எழுத்துச் சுதந்திரம் குறித்து விஜயலட்சுமி மற்றும் தயாவும் பேசினர். சண்முகசிவா முன்வைத்த கருத்தில் எனக்குச் சில முரண்பாடுகள் இருந்தன. சிறுபான்மை இனத்திடம் இருக்கும் ஆண்ட பரம்பரை போன்ற மிகையான மொழி, இனப் பெருமைகள் அவர்களின் தன் ஊக்கத்திற்கு அவசியம் எனும் வகையில் பேசினார். உண்மையில் மலேசிய வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட பெருமைகள் தமிழர்கள் மத்தியில் உண்டு. நவீன மலாய் இலக்கியத்தின் தந்தை ஒரு இந்தியர் என்பது தொடங்கி மலேசியாவில் முதல் சீனப் பத்திரிகையைத் தொடங்கியவரும் இந்தியர்  என விரிவாகும் அந்த வரலாறு குறித்த உரையாடல்கள் இல்லாமல் நிரூபிக்கப்படாத பழம் பெருமைகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

மலேசியப் படைப்புகள் தமிழகப் படைப்புகளின் நகல்போல உள்ளதாக ஒரு வாசகர் வினவினார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டுதோறும் மலேசியாவின் முக்கிய படைப்புகள் என கொண்டு செல்லும் நூல்களாலும் சில வசதி படைத்த படைப்பாளிகள் தங்கள் படைப்புகளைப் பணம் கொடுத்துப் பதிப்பித்து மலேசிய எழுத்தாளர்களாக அடையாளம் காட்டிக்கொள்வதாலும் மலேசியாவின் அசல் இலக்கியங்கள் தமிழக வாசகர் மத்தியில் சேராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டினேன். அதேபோல தமிழகத்தில் நிகழ்ந்ததுபோல கறாரான விமர்சன சூழல் உருவாகாமல் போனதும் குவிந்துகிடக்கும் மலேசியப் படைப்புகளில் எது தரமானது என அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளதையும் அதை செய்யத் தவறிய மூத்த படைப்பாளிகளின் மெத்தனத்தையும் சொல்ல வேண்டியதாய் போனது.

அரங்கு முடிந்ததும் ஜெயமோகன், “இப்படி உங்கள மலேசியாவில யாரும் புகழ்ந்திருக்காங்களா? கிருஷ்ணன் உங்களை எப்படிப் புகழ்ந்தார் பாருங்க” என்றார். நான் வாங்கிய சத்தியம் பற்றி கூறினேன். சிரித்துக்கொண்டோம்.

Untitled

                     பாவண்ணனுடன்

கவிஞர் தேவதேவனிடம் வல்லினம் 100 கொடுத்தேன். எழுத்தாளர் பாவண்ணனை 2006இல் தமிழகம் வந்தபோது சந்தித்தேன். என்னை மறந்திருக்கக்கூடும் என நினைத்தேன். அவரை அப்போது சந்தித்தபோது அவரது ‘வேஷம்’ என்ற சிறுகதை பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அது அசல் மலேசிய புத்தக வெளியீட்டை கிண்டல் செய்வதுபோல இருந்ததால் மிக நெருக்கமாக உணர்ந்திருக்கலாம். அப்போது அதிகம் பேசாமல் நான் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தார். இம்முறை மீண்டும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். நன்றாக ஞாபகம் வைத்திருந்தது ஆச்சரியம். அவர் வல்லினம் பதிப்பில் வந்த ‘பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது’ என்ற மொழி பெயர்ப்பு கவிதை நூலை ஒட்டி கட்டுரை எழுதியிருந்ததை நினைவுகூர்ந்தார். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தைக் கொடுத்தேன். சிறுகதை நூல் குறித்து அவர் கருத்தைக் கூறும்படியும் கேட்டுக்கொண்டேன்.

இதுபோல எழுத்தாளர்களைப் பார்த்து பேசும்போது இயல்பாக எனக்குள் நடக்கும் மாற்றத்தைக் கவனிக்கிறேன். தமிழ் இலக்கியத்தில் அவர்கள் செய்த சாதனைகள், கொடுத்த உழைப்பு, விடாத வாசிப்பு இவை அனைத்திற்கும் முன் நான் மிகச்சிறியவனாகி விடுகிறேன். மலேசியாவின் நவீனத் தமிழ் இலக்கியச் சூழலை முன்னெடுக்க இயங்குவதால் கிடைத்துள்ள கவனம் ஒரு சிறுகதை எழுத்தாளனாக எனக்குண்டா என்ற கேள்வி எப்போதும் ஆழத்தில் ஒலிப்பது. இரு கவிதை தொகுப்புகள் ஒரு சிறுகதை தொகுப்பு என மட்டுமே புனைவிலக்கியத்தில் பதிப்பித்துள்ள நிலையில் புதிதாக எழுத வந்தவனைப் போலத்தான் என் சிறுகதைத் தொகுப்பை சக நண்பர்களிடம் வழங்கும்போது தயக்கம் நிறைந்தவனாக மாறிவிடுகிறேன். வேறு யாராக இருப்பதைவிடவும் ஒரு புனைவு எழுத்தாளனாக அடையாளம் காணப்படும்போது அடையும் பரவசத்தை கூச்சமே இல்லாமல் துய்க்க மனம் அலைகிறது. அதற்கான பணிகளைதான் அடுத்தடுத்து செய்ய வேண்டும் என இந்த விழா உணர்த்திக்கொண்டே இருந்தது.

தேவதேவனுடன்

                            தேவதேவனுடன்

நெடுநாளைக்குப் பின் வாழை இலை உணவு பரிமாறலில் உற்சாகமாய் சாப்பிட்டேன். பெரிய ஆரவாரங்கள் இல்லாமல் எல்லாமே எப்படி நேர்த்தியாக நடக்கிறது என ஆச்சரியமாக இருந்தது. அவரவருக்கு அவரவர் பணிகள் தெரிந்தன. நண்பர்கள் செந்திலும் மீனாம்பிகையும்  சுழன்றுகொண்டே இருப்பதைப் பார்க்க முடிந்தது. காய்ச்சலால் வாந்தி வருவதுபோலவும் இல்லாததுபோலவும் மாறி மாறி உணர்வுகள் வந்துபோயின. வெளியில் நடந்தால் தேவலாம்போல இருந்தது. நண்பர்களுடன் சென்று காப்பி குடித்தேன். டாக்டர் சண்முகசிவாவுக்குத் தெரிந்தால் உடனே மருத்துவமனை அழைத்துச்சென்றுவிடக்கூடும். ‘கபாலி’ திரைக்கதை பணியாக வந்தபோது கடும் சளியால் மூச்சுவிட முடியாமல் திணறிய பாவத்திற்காக தமிழக மருத்துவர்கள் ஸ்கேன் செய்ய வேண்டும் என பயமுறுத்தியது நினைவுக்கு வந்தது. பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சியில் எல்லோருமே குதூகலமாக இருக்கும்போது அதில் கலந்துவிடுவதான் உற்சாகத்துக்கான வழி. அதைச் செய்தேன்.

ஓய்வுக்குப்பின் வினா விடை அங்கம் நடந்தது. கூடவே காய்ச்சல் அதிகரித்திருந்தது. உடல் ஓய்வுக்கு இறைஞ்சி நின்றது.  அரங்கில் அமர்ந்து கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஜெயமோகன் கடந்தமுறை மலேசியா வந்தபோது அவரது கண்கள் சிவந்து, வீங்கி, நீர் வடிந்தவாறு உரையாற்றியதையும் வெண்முரசை இடதுகண்களால் மட்டும் பார்த்து எழுதிக்கொண்டிருந்ததும் நினைவுக்கு வந்தது. யாக்கை திரி.   இவ்வங்கத்தை செந்தில் சிறப்பாக வழிநடத்தினார்.  என் சுவாசத்தில் சூடு கூடியிருந்தது. உணவுக்குப்பின் உண்ட மாத்திரைகள் மங்க வைத்தன. அறைக்குத் திரும்பினேன். இடையில் விழிப்புவந்தபோது ஜெயமோகன் பேசுவது தொலைவில் எங்கோ கேட்டது. காலையில் குளித்து அறைக்கதவைத் திறந்தபோதும் ஜெயமோகன் எங்கோ பேசிக்கொண்டிருப்பது கேட்டது.

தொடரும்

(Visited 906 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *