தர வரிசை – சீனு

imagesன்பு அண்ணா ,

உங்களுடன் நிகழ்த்திய உரையாடல் பல அலகுகளில் என்னை தொகுத்துக்கொள்ள உதவியது.  ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு எதிராக ஆன்மசுத்தியுடன் போராடிக்கொண்டிருக்கும் ஒரு ஆளுமையுடன்  உரையாடி இருக்கிறேன். அதில்  உரையாடல் என்பதையும் கடந்த பொறுப்புணர்வு  உண்டு. அந்த பொறுப்புடன்தான் அந்த உரையாடலில் ஈடுபட்டிருக்கிறேன் என அதை மறுவாசிப்பு செய்த்து அறிந்து கொண்டேன் .

ஒரு சூழலுக்கு எதிராக  போராடிக்கொண்டு இருக்கும் ஓர்  எழுத்தாளனின் வலைப்பூ என்ற அளவில்,  இந்த வலைப்பூவின் பயன் இனிவருங்காலங்ளில் இன்னும் அதிக ஆழங்களை நோக்கி செல்லும்.    ஆக  நாளை இவ்வுரையாடலில் இருந்து  கேள்விகள் முளைத்து எழும் எனில்,  இந்த உரையாடலில் கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், பிறகு சுரா என நான் முன் வைத்த  ரசனை தர வரிசை மீதுதான் முதல் கேள்வி எழும் .

நாளை அந்த கேள்வியை எழுப்பப்போகும் வாசகனுக்கு இன்றே நமது விடையை முன் வைக்கவேண்டியது நமது பணிகளில் ஒன்று அல்லவா . ஆகவே இப்பதிவு .

அவரவர்க்கு அவரவர் வரிசை. இந்த குறிப்பிட்ட தர வரிசைத்தான் சரி என்பதற்கு என்ன அளவுகோல்?   இதுவே எழும் கேள்வியாக இருக்கும் .

மிக மிக எளிதான, மிக மிக லௌகீகமான ஒரு உதாரணத்தில் துவங்குகிறேன்.  இரண்டு உணவகங்கள். இரண்டிலும் காலை நேரம் ஒரு மணி நேரம் உள்ளே வரும் அனைவருக்கும்  ஒரு மெதுவடையும் கெட்டி சட்னியும் இலவசம்.  இரண்டு கடைகளில் ஒரு கடையில் மட்டும்  கொஞ்சம் அதிகமாக கூட்டம் முன்கூட்டியே வருகிறது. காரணம் என்ன?   மற்ற கடை வடையை விட இக்கடையின் வடையும் சட்னியும் ருசி மிக்கதாக இருக்கிறது .

இந்த தரவரிசை சரியா என யாரும் கேட்கமாட்டோம். ஏன் எனில் நம் நாவே நமக்கு அளவுகோல். அவரவர்க்கு அவரவர் ருசி என்பது ருசி அறியாதவன் கூற்று .

இந்த கடையை விட அதில் கூட்டம் ஏன்? இதுவே  திறனாய்வு   உரையாடல். இன்ன காரணத்தால் இந்த கடையில் கூட்டம் என வகுத்து வைக்கிறோமே  அதன் பெயரே விமர்சன மதிப்பீடு .

அதுதான் இலக்கியத்திலும் நிகழ்கிறது. இது சீனு என்ற ”ஒருவன்” உருவாக்கிய வரிசை அல்ல. ஒரு வாசிப்பு சூழலில், அதன் ஒட்டுமொத்தத்தில் இருந்து   உரையாடல்கள் வழி  உயர்ந்து வந்து நிலை பெற்ற வரிசை .

இலக்கிய விமர்சனத்தின் வழி என்ன? ஒரு படைப்பின் நிறை குறைகளை ஒப்பு நோக்கி, இலக்கிய மரபில் அந்த படைப்பின் இடம் என்ன என வகுத்து வைப்பது .

முதலில் கு.அழகிரிசாமி.  ராஜா வந்திருந்தார் கதை ஒரு எளிய நேரடியான கதை.  ஆனால்   மகத்தான மானுட சமத்துவம் ஒன்றின் பதாகை அது என விமர்சனமே இன்றி வாசிக்கும் அனைவரும் அறிவர். கதையின் இறுதியில் கண்கள் கலங்கி, வாசகனின் ஆழ் மனம், ஆம் ஆம் ஆம் என அரற்றுகிறதே  அதுதான். தீவிர இலக்கிய சிறுகதை மரபின் சிகரத்தில் அந்த கதையை இருத்துகிறது.

அடுத்த இடத்தில் ஜெயகாந்தன் ஏன்?  நமது பண்பாட்டின் சாரம் எதுவோ, அதன் பிரதிநிதியாக நிற்பவை  சுயதரிசனம்  மற்றும் விழுதுகள் போன்ற கதை .

இந்த இரண்டு வீச்சுகளும் நிகழாததாலேயே சு.ரா மூன்றாம் இடத்தில் நிற்கிறார். இன்னும்  நெருங்கிப் பார்த்தால் சு.ரா  உலகை, அவரது தேடல்களை, அது தொட்ட வீச்சை விட பல மடங்கு உயர்ந்தது  அ.மி கதைகளில் உருவாகி நிற்கும் தருணம்.  உதாரணமாக அ.மி கதை ஒன்றில் வரும் சித்திரம். ஒரு அம்மா பையன் ரயிலில் பயணிக்கிறார்கள். பையன் படு சுட்டி, நில்லாமல் அங்கும் இங்கும் ஓடி ஏதேதோ செய்து கொண்டு இருக்கிறான், அம்மாவால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை .அவளுக்கு ஒரு கால் ஊனம்.  அம்மா  எந்த சொல்லை சொன்னால் பையன் அடங்கி அமர்வானோ அதை சொல்கிறாள் . பையனும் அடங்கி அமர்கிறான் . அமர்வதற்கு முன் கோபத்துடன் அம்மாவை ஒரு அடி போட்டுவிட்டு அமர்கிறான் .எங்கே? அம்மாவின் ஊனமான காலில்.   சுராவின் ஜகதி கதையில் ஒரு பைத்தியக்காரி தனது குழந்தையை ,தார் ட்ரம்மில் முக்குகிறாள் .இப்படி சுரா பல கதைகளில் இருளை வித விதமாக சித்தரித்து பார்க்கிறார் . அனால் அமி கதையில் உருவாகி வந்த இந்த இருள் தருணத்தின் ஆழத்தை அவரது எந்த கதையும் தொடவில்லை.

அ.மி பட்டினி என்றால் என்ன என அறிந்தவர். தன் பசியும், தனது குடும்ப பசியும் போக்க பொதிமாடுகளுக்கு இணையாக உழைத்தார் .இதனிடையே தான் கதைகள் எழுதி  தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க இயலா சொத்தாக உயர்ந்தார் .  ஆனால் அவரது கதைகளில்  பசி ,உணவு சார்ந்த சித்தரிப்புகள் என்னவாக இருக்கிறது?  கு.அழகிரி சாமி  முன்வைத்த பசியுலகத்தை அசோகமித்திரன்  விஞ்சவில்லை என்பதே அவரது இடம் .

சரி இது எல்லாம் பலம் பலவீனம் ஒப்பு நோக்கி அடைந்த மதிப்பீடு, இரண்டு பலமான கதைகள்  உதாரணமாக ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு .நாஞ்சில் நாடனின் யாம் உண்பம். இந்த இரண்டு வலிமையான சிறந்த கதைகளில் எது முதன்மையான கதை ?  இரண்டுமே பசியையும் , உணவிடும் பண்பாடு , அந்த உணவிடும் ஆளுமை இவற்றை மையம் கொண்டது. இரண்டில் எது முதல் படியில்? அல்லது இரண்டுமே சம உயரம் கொண்ட சிகர முனையா?  இரண்டுடனும் உரையாடும் வாசகன்  யாம் உண்பேம் கதையையே முதல் படியில் வைப்பான்.  காரணம்  சோற்று கணக்கில் உணவு இடுபவர்  ஓர் ஆளுமை. அதற்காக தான் கொண்ட அனைத்தையும் ஒப்புவிப்பவர்.  யாம் உண்பேம் கதையில் உணவிடுபவன், இந்த பாரத்தை உருவாக்கிய பல கோடி சராசரிகளில் ஒருவன்.  அதுவும் அவன் உணவு இடவில்லை. இணைந்து உண்கிறான் .உணவு கேட்பவனும், உணவை தயங்கி கேட்கவில்லை. சேர்ந்து உண்போமா என்று கேட்கிறான்.  யாம் உண்பேம்.  ஆம் கொடுப்பவன் ஆளுமை என்றாகாத,கேட்பவன் சிறுமை கொள்ளாத மானுட சமத்துவத்தில் உச்சம் கொள்கிறது இக் கதை .ஆகவே யாம் உண்பேம் , சோற்றுக் கணக்கு கதையை விட ஒரு படி மேலானது .

இது அனைத்தும் பொது வாசிப்பின் முழுமையில் உயர்ந்து வருவது, ஆனால் தனிப்பட்ட முறையில்  சீனு எனும் வாசகன் தன்னளவில் இது இதற்க்கெல்லாம் மேலே என ஒன்றை கொண்டிருப்பான். அதில் அவனால் பெரிதும் விவாதிக்க முடியாது, நிறுவ முடியாது. ஆனால் இதை கருத்தில் கொண்டு பாருங்கள் என அவனால் பரிந்துரைக்க முடியும்.  உதாரணமாக  அசோகமித்திரனின் பிரயாணம்,  குகை ஓவியங்கள், ஜெயமோகனின் வெறும் முள் போன்ற கதைகள .  காரணம் இலக்கியம் காலம்தோறும் பரிசீலிக்கும் காமம் க்ரோதம் மோகம் முதல் படியில், ஜெயகாந்தன் போல பண்பாட்டுடன் உரையாடும் கதைகள் அதற்கு மேலான படியில் ,  மானுட சமத்துவத்தின் பதாகையான ராஜா வந்திருந்தார் அதற்கும் மேல் . ஆனால்  என் நோக்கில் எத்தனை  விரிந்த பின்புலத்தில் வைத்து உரையாடிய பின்னும் இவை எல்லாம் லௌகீகம் சார்ந்தவை .

மானுடன் ஆகி இங்கே வந்து, மானுடம் கொள்ளும் அத்தனை தவிப்பும்  அதன் சாரத்தில் ஆத்மீக தவிப்பு என்றே சொல்வேன் . இந்த லௌகீக தளத்திலிருந்து உயர்ந்த , இலக்கியம் முதன்மையாக எந்த வினாவை தனது அடிப்படை வினாவாக கொள்ள வேண்டுமோ ,அந்த வினாக்கள் பரிசீலிக்கப்பட்ட  கதைகள் என அவற்றை சொல்வேன்.  என்றென்றும் என்னை அலைக்கழிக்கும் நாவலான விஷ்ணுபுரம்  முதன்மையாக மையம் கொள்வது இந்த வினாக்களையே .

இப்படித்தான் , இந்த இயங்கு முறை வழியேதான்  மதிப்பீட்டு விமர்சனம் வழியே தர வரிசை உருவாகிறதே அன்றி. எந்த கருத்தியல் பாசிச அளவுகோல் கொண்டும் அல்ல .

இந்த எல்லையில்தான் அவரவர்க்கு அவரவர் வரிசை  எனும் கருதுகோள் பிழை என்றாகிறது.

சீனு

அன்பான சீனு, நான்  தர வரிசையை தனி மனிதன் வாசிப்பின் வழி உருவாவதாகவே கருதுகிறேன். இட்லி கடை கூட்டத்தோடெல்லாம் ஒப்பிட்டால் இன்று வைரமுத்துதான் சிறந்த எழுத்தாளர். ஆனால் அதுவும் ஒரு ரசனையின் வரிசைதான். இதேபோல தொடர்ச்சியான/ நுணுக்கமான வாசிப்பு உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு வரிசை உண்டு. அந்த வரிசை ஒவ்வொரு காலத்திலும் உடன்பட்டும் இணங்கியும் மேலெழுந்து செல்கிறது. அந்தப்பின்னலை இன்னொரு வரிசை அசைத்து பிணைந்தோ புதிய வரிசை உருவாகலாம். வேதசகாயகுமார் ஜெயகாந்தனை மறுத்தே அவர் ஆய்வேட்டை எழுதியுள்ளார். அவருக்குப் புதுமைப்பித்தன் முக்கியமான படைப்பாளி. ஜெயமோகன் விரிவாக ஜெயகாந்தனை வேறொரு தளத்தில் வைக்கிறார். நாளை மீண்டும் ஜெயகாந்தன் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படுத்தப்படலாம். படுத்தினால்தான் அது வாசிப்பு. இலக்கியத்தில் நிகழும் ஒரு தொடர் நடவடிக்கையை முழு முடிவான நீதியாக நான் நினைக்கவில்லை. அது ஓடிக்கொண்டிருப்பதுதான் நியதி என்றும் நம்புகிறேன். அவரவர்க்கு அவரவர் ருசிதான். ஏன் அப்படி என்பதைதான் வாசிப்பு வழி தொடர வேண்டியுள்ளது. அதுவே இலக்கியத்தை அறியும் வழியாக நான் கருதுகிறேன்.

நன்றி

நவீன்

(Visited 306 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *