2021: ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்

2021இன் தொடக்கம் லங்காவி தீவில்தான் விடிந்தது. லங்காவி வரி விலக்குத் தீவு. எனவே வெளிநாட்டினர் அதிகம் இருப்பர். அதனால் கொண்டாட்டங்களும் அதிகம் இருக்கும். நாங்கள் சென்றபோதும் கேளிக்கைகளுக்குப் பஞ்சமில்லை. கொரோனா தொற்று தொடர்பான எச்சரிக்கை இருந்தாலும் யாரும் பெரிதாக அச்சப்பட்டதாகத் தெரியவில்லை.

புத்தாண்டைக் கடற்கரையில் கொண்டாடலாம் என்பதுதான் எங்கள் திட்டம். ஆனால் ஆண்டு பிறந்தபோது நான் மட்டும் விடுதி அறையில் தனியாக அமர்ந்து 2021இன் முதல் வல்லினத்தைப் பதிவேற்றிக்கொண்டிருந்தேன். அப்பணி வேறு எதையும்விட எனக்கு நிறைவையும் உற்சாகத்தையும் தருவது. மறுநாள் விடிந்தவுடன்தான் எனக்கு லங்காவியில் கொண்டாட்டங்கள் தொடங்கின.

பிப்ரவரி தொடங்கி நாட்டில் கோவிட் நிலை மோசமடையவே அநேகமாக எங்குமே செல்லாமல் பத்து மாதங்கள் முடங்கி இருக்க வேண்டியதானது. மீண்டும் பயணத்தைத் திட்டமிட்டது டிசம்பரில்தான். ஆனால் அது ஒரு வித்தியாசமான பயணம்.

மலேசிய இந்தியர்களின் சஞ்சிக்கூலி வாழ்க்கை பெரும்பாலும் ரப்பர்த் தோட்டங்களில் புதைந்திருப்பதுபோல சீனர்களின் வாழ்க்கையைத் தேட ஈய லம்பங்கள்தான் பொருத்தமானவை. மலேசியத் தமிழ் இலக்கியங்களில் ரப்பர்க் காடுகளும் அதில் நிகழ்ந்த வாழ்வியல் சிக்கல்களும் பதிவு செய்யப்பட்ட அளவுக்கு ஈய லம்பங்கள் குறித்தோ அதில் சீனர்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்தோ எளிய அறிமுகங்கள்கூட இல்லை என்றே சொல்லலாம். மலேசிய சீனர்களின் வரலாற்றை அறிய, அவர்கள் விட்டுவந்த வழித்தடங்களை சென்று காண்பது அவசியம் எனத் தோன்றியது. அதற்கு ஏற்றவை ஈயச் சுரங்கம் சார்ந்த இடங்கள்தான். பாட நூல்களில் உள்ள தகவல்களைத் தாண்டி சீனர்களின் ஈயச் சுரங்கத்துடனான வாழ்வியலை ஓரளவு நேரடியாக அறிந்துகொள்ளும் பொருட்டு இரண்டு நாள் பயணம் ஒன்றைத் திட்டமிட்டேன். டிசம்பர் 16, 17 திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட இப்பயணத்தில் சரவணன், முத்து, பூபாலன் ஆகிய நண்பர்களும் இணைந்துகொண்டனர்.

எனவே இவ்வருடம் இரு பயணங்கள்தான். ஒன்று கொண்டாட்டம்  என்றால் மற்றது தேடலை அடிப்படையாகக் கொண்டது.

வல்லினம் செயலி

ஜனவரி 26 ல்லினம் செயலி அறிமுகம் கண்டது. இம்முயற்சி முழுமைபெற நண்பர்கள் ஜி.எஸ்.எஸ்.வி நவீனும்  தர்மாவுமே பிரதான காரணிகள். வல்லினம் செயலியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் முதலில் அதை நண்பர் தர்மாவிடம்தான் சொன்னேன். வல்லினத்தின் அனைத்து இணையச் சிக்கல்களையும் கண்காணிப்பது அவர்தான். பின்னர் ஓர் இரவில் நண்பர் ஜி.எஸ்.எஸ்.வி நவீன் நினைவுக்கு வந்தார். அவர் கணினித்துறையில் பணியாற்றுகிறார் என மட்டும் நினைவிருந்தது. அழைத்து என் ஆவலைச் சொன்னேன். அதன் பின்னர் அவர் தர்மாவிடம் தொடர்புகொண்டு பணியைத் தொடங்கினார். அவருக்கும் இது புதிய அனுபவம் என எனக்குத் தாமதமாகத்தான் தெரிந்தது. ஆனால் நான் அவருடைய தொழில் நிபுணத்துவத்துவத்தைவிட அவரது அக்கறையையும் ஆர்வத்தையும் அன்பையுமே நம்பினேன். எந்த திறனையும்விட அதுவே மேம்பட்ட பலனைக் கொடுக்கக்கூடியது. இணைய இலக்கிய இதழ்களில் செயலியைக்கொண்டு இயங்கும் இதழ் வல்லினமாகத்தான் இருக்கவேண்டும். கைத்தொலைப்பேசிக்கு நேரடியாக இதழ் பதிவேற்றச் செய்தியை அனுப்புதல், வல்லினத்தை எளிமையாக வாசித்துக்கொள்ளல், படைப்புகளுக்கு கருத்து தெரிவித்தல் என இச்செயலி வல்லினம் வாசகர் பரப்பை அதிகரிக்க பெரும் துணை நின்றது.

மின் நூல்களும் ஒலி நூல்களும்

விற்றுத் தீர்ந்தபின் மறுபதிப்பு கொண்டுவர விரும்பாத எனது சில நூல்களை மட்டும் அமேசானின் மின் நூலாக வெளியிடும் முயற்சியில் இவ்வருடம் இறங்கினேன். அப்படிப் பலரும் வாசிக்கக்கேட்டு பலகாலம் அச்சில் இல்லாத என் முதல் சிறுகதை தொகுப்பான ‘மண்டை ஓடி‘யை பிப்ரவரி 1இல் அமேசானில் விற்பனைக்குக் கொண்டு வந்தேன். தொடர்ந்து மார்ச் 10இல் ‘மலேசிய நாவல்கள்‘ எனும் விமர்சன நூலை மின்னூலாக அறிமுகம் செய்தேன். அதுபோல ‘ஒலிப்பேழை’ எனும் யூடியூப் தளத்தில் என் நான்கு கதைகள் (வண்டி, ஒலி, இழப்பு, ஒலிப்பேழை) இடம்பெற்றன. எனக்கு நெடுநாள் பழக்கம் உள்ள பலரும் அக்கதைகளைச் செவிமடுத்து அழைத்தனர். ஒலிநூல்களின் தேவை வருங்காலத்தில் அதிகரிக்கும் என உணர்த்திய முயற்சி அது. இவ்வருடம் என் பெரும்பாலான சிறுகதைகளை ஒலி வடிவில் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளேன்.

உலக மொழிகளில் என் சிறுகதைகள்

தொடர்ந்து என் சிறுகதை மலாய் மொழியில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரசுரமாகும் இதழ்கள் மலேசிய இலக்கியத்தின் முகத்தைக் காட்டும் டேவான் சாஸ்திரா, மற்றும் எக்ஸென்திரிகா (Eksentrika) என்பது மகிழ்ச்சிக்குறியது. இதை சாத்தியமாக்கியவர் நண்பர் சரவணன். இவர் மொழிபெயர்ப்பின் தரத்தைக் கண்டு அந்தந்த இதழ் ஆசிரியர்கள் என்னிடம் ஆச்சரியப்பட்டதுண்டு. இவ்வருடம் ஏற்கனவே தமிழில் வெளிவந்த என் சிறுகதைகளான ‘யாக்கை‘, ‘ஜமால்‘, ‘பட்சி‘, ‘டிராகன்‘, ‘ராசன்‘, ‘நகம்‘, ‘கன்னி’ போன்றவை எக்ஸென்திரிகாவில் (Eksentrika) பிரசுரமானதைப்போல ‘பூனியான்‘ மற்றும் ‘உச்சை‘ போன்றவை டேவான் சாஸ்திராவின் இடம்பெற்று மலாய் வாசகர்கள் மத்தியில் என் புனைவுகள் குறித்த நல்ல கவனத்தை உண்டாக்கியது.

மலாய் இலக்கியச் சூழலில் கவனம் கிடைத்ததைத் தொடர்ந்து Words Without Borders எனும் ஆங்கில இலக்கிய இதழில் என் ‘ஒலிப்பேழை’ எனும் சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு செப்டம்பர் 9இல் பிரசுரமானது. ‘வேர்ட்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ (எல்லைகள் இல்லா சொற்கள்) என்ற அனைத்துலக அமைப்பு மிகச் சிறந்த அனைத்துலக தற்கால இலக்கியங்களை மொழிபெயர்த்தல், வெளியிடுதல், விளம்பரப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்து வரும் ஓர் இயக்கமாகும். இத்தகையப் பணிகள் மூலம் அனைத்துலக கலாச்சார பரிமாற்றத்திற்கான கதவுகளைத் திறந்திருக்கிறது இந்த அமைப்பு. கல்வியாளர்களுடன் இணைந்து இலக்கியத்தை வகுப்பறைகளுக்குக்கொண்டு செல்லவும், வெளிநாட்டு எழுத்தாளர்களுடன் நிகழ்வுகளை நடத்தவும், உலகளாவிய எழுத்தின் விரிவான காப்பகத்தை பராமரிக்கவும் இந்தத் தளம் செயல்பட்டு வருகிறது. உலக இலக்கிய உரையாடலுக்கான தளமாக அனைத்துலக எழுத்தாளர்கள் முதல் பொதுமக்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், ஊடகங்கள் என  அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்கும் தளமாகத் திகழும் ‘வேர்ட்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ பல அனைத்துலக அங்கீகாரங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதுவரையில் 140 நாடுகளின் 126 மொழிகளைச் சேர்ந்த 2,700க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துகளை இவ்விதழ் வெளியிட்டுள்ளது. மலேசிய இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் தயாரான செப்டம்பர் இதழில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதித்து என் கதை தேர்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து YOMU என அழைக்கப்படும் ஆசிய இலக்கிய செயல்திட்டத்தில் தமிழைப் பிரதிநிதித்து என் சிறுகதையும் இணைக்கப்பட்டது. ‘ஒளி‘ என்ற தலைப்பில் இந்தத் திட்டத்துக்காக நான் எழுதிய கதை ஐந்து மொழிகளில் (ஆங்கிலம், சீனம், மலாய், ஜப்பான், தமிழ்) மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  மலேசியா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 27 ஆசிய எழுத்தாளர்கள் பல மொழிகளில் எழுதிய புதிய கதைகளைக் கொண்டுள்ள ‘YOMU’ எனும் இத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரே தமிழ்க் கதை ‘ஒளி’ என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கியப் பட்டறைகள்

வருடம் தொடங்கியது முதலே தொடர்ச்சியாக இலக்கியப் பட்டறைகள் நடத்துவதற்கு அழைப்புகள் வந்தன. அவற்றில் என் முன்னறிவு மற்றும் நேரம் ஆகியவற்றை பொறுத்து சிலவற்றில் பங்கெடுத்தேன். பிப்ரவரி 11இல் தமிழகத்தில் உள்ள குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்திய சிறுகதைப் பயிற்சி பட்டறையில் ‘சிறுகதை எடுத்துரைப்பு முறைகள்’ எனும் தலைப்பில் உரையாற்றினேன்.

நியூசிலாந்து தமிழ்ப் புத்தக மன்றம் (Nztamilbc.org) ஏற்பாட்டில் தொடர்ந்து மூன்று வாரங்கள் சிறுகதைப் பட்டறையை வழிநடத்தினேன். நியூசிலாந்தில் வாழும் இலக்கிய ஆர்வலர்களுக்கு மட்டும் இப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலேசிய ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் புரிதலுக்காக ‘நவீன இலக்கியம் என்றால் என்ன?’ எனும் தலைப்பில் நவம்பர் 27லிலும் டிசம்பர் 1இல் ‘நவீன கவிதை’ எனும் தலைப்பிலும் விளக்க உரை ஆற்றினேன்.

அதுபோல செல்லியல் இணையத்தள நிர்வாகி திரு.முத்தரசு அவர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ‘மலேசிய சமகால இலக்கியங்கள்‘ என்ற தலைப்பில் குறிப்பிடத்தக்க புனைவு முயற்சிகள் குறித்து காணொலிகள் தயாரித்து வழங்கினேன். மா.சண்முகசிவாவின் சிறுகதை, சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான் ஆகியோரின் நாவல்கள் என பேசப்பட்ட அந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழாசியா

27.3.2021 ‘தமிழாசியா‘ என்ற இணைய புத்தகக் கடையை அறிமுகம் செய்தேன். என் எல்லா தொடக்கங்களிலும் எழுத்தாளர் ஜெயமோகன் இருக்கவேண்டும் என விரும்புபவன் நான். எனவே அவர் சிறப்புரை அதன் துவக்க விழாவில் இடம்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்தார்.

தமிழாசியா (Web Store) உருவாக அடிப்படையான மூன்று நோக்கங்கள் இருந்தன. முதலாவது, நூல்களை முடிந்தவரை மலிவான விலைக்கு வழங்குதல். இரண்டாவது, எவை நல்ல நூல்கள் எனப் பரிந்துரை செய்தல். மூன்றாவது, நூல்கள் குறித்து உரையாடுதல். இதன் அடிப்படையில் புதிய இணையத்தளம் அமைய வேண்டுமெனக் கருதினேன். அதுகுறித்து ஆராய்ந்தேன். அவ்வகையில் ரூபாய்க்கு 10 காசு எனும் அடிப்படையில் நூல்களை விற்பனை செய்யத் திட்டம் வகுக்கப்பட்டது. தடிமனான நூல்கள், கெட்டி அட்டைக்கு தபால் செலவு அதிகம் என்பதால் நூல்கள் ரூபாய்க்கு 15 காசு என முடிவானது. தளத்தின் பெயர் குறித்து குழப்பம் வந்தபோது பலவாறான எண்ணம் தோன்றியது. இறுதியில் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் இலக்கியம் எழுதப்பட்டாலும் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஆசிய நாடுகளில் இருந்து சென்றவர்களே. எனவே இத்தளத்துக்கு ‘தமிழாசியா’ எனும் பெயர் பொருத்தமாக அமைந்தது.

Simbiotic technologies எனும் நிறுவனத்துடன் உரையாடி நான் கற்பனையில் வைத்திருந்த அகப்பக்க தேவைகளை தர்மா பூர்த்திசெய்து கொடுத்தார். எல்லா நூல்களுக்கும் இதில் இடமில்லை. தேர்ந்தெடுத்த நூல்களைக் கொண்டுதான் வாசிப்பு ரசனையை மேம்படுத்த முடியும். அவ்வகையில் இந்நினைவுகளை எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் தமிழகத்தில் இருந்து எடுத்து வந்த 200க்கும் மேற்பட்ட தலைப்பிலான நூல்கள் விற்று முடிந்துவிட்டன என்பது எங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.

தமிழாசியா –  வல்லினம் கூட்டுமுயற்சியில் தொடர்ந்து இலக்கிய உரையாடல்கள் இணையம் வழி நடைபெற்றன. ‘ஸூம்’ போன்ற இணையச் சேவைகள் வந்தபிறகு இலக்கியத்தை வளர்ப்பதாக, சகட்டுமேனிக்கு உரைகளை இடம்பெற வைத்து அதன் எண்ணிக்கையை ஒரு சாதனையாக நிறுவ முயலக்கூடிய சூழலில் மிகக் கவனமாகவே இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ஒரு படைப்பாளியை அழைக்கும் முன் அவரது நூல் குறித்து தமிழாசியாவில் விரிவான அறிமுகங்கள் செய்து, அவற்றை வாசிக்க வைத்து, அதன்பின்னரே அந்தப் படைப்பாளியை சந்திப்புக்கு அழைத்தோம். அச்சந்திப்பில் முதல் ஒரு மணி நேரம் வாசகர்கள் தாங்கள் வாசித்தவற்றைப் பொதுவில் பகிரும்படி ஏற்பாடு செய்தோம். அதுவே ஓர் எழுத்தாளனுக்குக் கொடுக்கும் முதல் கௌரவம். அதைத் தொடர்ந்து எழுத்தாளருடனான உரையாடல்களை உருவாக்கினோம். இது பங்கேற்பாளர்கள் பலருக்கும் அந்த எழுத்தாளரை நெருக்கமாக அறிமுகம் செய்வதுடன் வாசிப்பில் கொடுக்க வேண்டிய கவனம் குறித்தும் புரிதல் ஏற்பட்டது. இப்படிப் பல்வேறு ஆளுமைகள் மாதம் ஒருவரென அழைக்கப்பட்டனர். எழுத்தாளர்கள் இமையம், கோ.புண்ணியவான், சு.வேணுகோபால், பாலாஜி பிருத்விராஜ், நரேன், நாஞ்சில் நாடன், சுரேஷ் நாராயணன், செல்வேந்திரன் என பலரும் இலக்கியம், வாசிப்பு, பயணம் என உரையாற்றியது புதிய வாசகர்களுக்கு பெருந்திறப்பு.

தமிழாசியா உரையாடல்கள்

யாழ் பதிப்பகம்

யாழ் பதிப்பகம் வழி இம்முறை இரு நூல்கள் வெளிவந்துள்ளன. யாழ் பதிப்பகம்தான் நாங்கள் முன்னெடுக்கும் பல்வேறு இலக்கிய முயற்சிகளுக்கான பணத் தேவையை ஈடுகட்டும் நிறுவனம். யாழ் பதிக்கத்தில் என் பணி ஆசிரியர்களால் தயாரிக்கப்படும் நூலை மேம்படுத்துவதுதான். அது சடங்கான ஒரு பயிற்சி நூலாக இல்லாமல் மாணவர்களின் கற்பனையாற்றலை வளர்க்கும் வகையில் உருவாவதையே நான் அவசியமாகக் கருதுவேன். அவ்வகையில் உருவான ‘யாழ் அறிவன்’ மலேசியாவில் இதுவரை வெளிவந்துள்ள அறிவியல் வழிகாட்டி நூல்களில் முதன்மையானதாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. இதில் என் பங்களிப்புக் குறைவு என்றாலும் நூலை தயார் செய்த ஆசிரியர் குழுவின் உழைப்பு போற்றத்தக்கது. அதுபோல ‘யாழ் தமிழ்மொழி பாட விளக்க நூலை’ மேம்படுத்தி பதிப்பித்தேன். அடுத்த ஆண்டு இவ்விரு நூல்களும் மாணவர்களுக்குப் பலனளிக்கும் என ஆசிரியர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

புனைவுகள்

இவ்வருடம் மனம் முழுவதும் நாவலில் இருந்தபடியால் மிகக்குறைவான சிறுகதைகளையே எழுதினேன். முதல் கதையான ‘நகம்‘ தமிழக நீலம் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து வைரம், அப்சரா, ஞமலி என மூன்று சிறுகதைகள் மட்டும் எழுதினேன். மே மாதம் எழுதத் தொடங்கிய ‘சிகண்டி’ நாவல் ஜூலையில் நிறைவு பெற்றது. என் பிறந்தநாளின்போது அதன் அறிமுகக் காணொலியைப் பதிவேற்றினேன்.

என் பிறந்தநாளுக்கு முதல்நாள் கோவிட் தாக்கப்பட்டதால் டாக்டர் சண்முகசிவா முயற்சியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கான இடம் கிடைப்பது சிரமம்தான். கொஞ்சம் வசதியான தனி அறை. கூடவே மடிக்கணினியைக் கொண்டு சென்றதால் சிகண்டியின் சில பாகங்களை எழுத முடிந்தது. ஆச்சரியமாக சிகண்டியில் தனித்துவமான சில பகுதிகள் மருத்துவமனையில் அமர்ந்துகொண்டு எழுதியவையாக உள்ளதை இப்போது வாசிக்கும்போது உணர்கிறேன். அதுபோல தொடர்ந்து கவிதை எழுதுவதற்கான மனநிலை மருத்துவனையில் இருந்த பத்து நாட்களில் வாய்த்தது.

‘சிகண்டி’ நூலாக டிசம்பரில் வெளிவந்தது. அப்போதிருந்தே மனம் பரபரக்கத் தொடங்கியது. ‘பேய்ச்சி’ நாவல் 2019இல் வந்தபோது யாவரும் பதிப்பகம்  அலுவலகத்தில் நாவலை எடுத்துக்கொண்டு நாகர்கோயிலில் இருக்கும் ஜெயமோகன் வீட்டுக்குச்செல்லத் திட்டம். ஆனால் முதல் பிரதியை அவரிடம் கொடுப்பது சாத்தியமாகாது. ஊர் திரும்பும்போதுதான் நாகர்கோயில் சென்று அப்படியே திருவனந்தபுரத்திலிருந்து மலேசியா திரும்புவது அறிவார்த்தமானது என நண்பர்கள் அறிவுறுத்தினர். அது எனக்கு கடும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆனால் நான் சென்ற நேரம் ஜெயமோகன் சென்னையில் இருந்தார். புத்தகத்தை எடுத்துக்கொண்டு நேராக அவர் இருந்த விடுதிக்கே சென்றுவிட்டேன். முதல் பிரதியை அவரிடம் கொடுத்து ஆசி பெற்றேன்.

இம்முறை கோவிட் என்பதால் தமிழகம் செல்ல முடியவில்லை. ஆனால் என் இரண்டாவது நாவலான சிகண்டி வந்தவுடன் ஜெயமோகனுக்கும் முன்னுரை வழங்கிய ராஜகோபாலனுக்கும் முதலில் அனுப்பும்படி ஜீவகரிகாலனிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். இடையில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் நூல் அச்சுக்குச் செல்ல தாமதமாகி இரண்டு நாட்களுக்கு முன்புதான் நாவல் பணி அச்சகத்தில் முழுமையானது. உடனடியாக அச்சகத்தாரால் விஷ்ணுபுரம் விருது விழா நடக்கும் கோவைக்கே நாவல் அனுப்பப்பட்டது. அங்கு ஜீவகரிகாலன் மற்றும் சுனில் கிருஷ்ணன்  ஏற்பாட்டில்  ஜெயமோகன் சிகண்டியை வெளியீடு செய்ய ராஜகோபாலன் பெற்றுக்கொண்டார். ஒருவேளை திட்டமிட்ட நேரத்திற்கு நாவல் வந்திருந்தால் இத்தகைய இனிய தருணம் அமைந்திருக்காது.

நாம் ஒருவரை மனதில் குருவாக நினைக்கும்போது அவர் ஆசி எப்படியும் கிடைக்கும் என்பது இதுதான்.

நேர்காணல்கள்

ஆகஸ்ட்டு மாத ‘புரவி‘ இதழில் வந்த என் நேர்காணல் முழுக்க பேய்ச்சி நாவல் சார்ந்ததாகவே அமைந்தது. அது எழுதப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை நானே மீட்டுப் பார்க்க அந்த நேர்காணல் துணை புரிந்தது. நாவலை வெளியில் நின்று பார்ப்பதற்கான மனம் வாய்த்திருந்ததால் அந்த நேர்காணலில் நான் வழங்கிய பதில்கள் கொஞ்சம் தனித்துவமாகவே தெரிந்தன.

ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் (George Town Literary Festival) என்னை மலாய்மொழியில் நேர்காணல் செய்தது மற்றுமொரு நல்ல அனுபவம்.

‘ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா’ அனைத்துலக அளவில் மதிக்கப்படும் மலேசியாவின் மிகப் பெரிய இலக்கிய விழா ஆகும். இவ்விழா பினாங்கில் உள்ள யுனெஸ்கோ உலக மரபுடைமைப் பகுதியான ஜார்ஜ் டவுனில், ஆண்டுதோறும் நவம்பர் வார இறுதியில் நடத்தப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இவ்விழாவில் மலேசியத் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதித்து ஒருவர் அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ‘மலேசியத் தமிழ் இலக்கியம்’ எனும் தலைப்பில் என்னுடன் உரையாடல் நடந்தது. மலேசியத் தமிழ் இலக்கியத்தின் போக்குகள், எதிர்கொள்ளும் சவால்கள், முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள், தேசிய ரீதியான அங்காரத்தின் அவசியம் மற்றும் பேய்ச்சி நாவலின் தடை என இந்த கலந்துரையாடலில் விரிவாகவே பேசினேன். மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் நடக்கும் போலிச் செயல்பாடுகளை அரசும் அரசு சார்ந்த அமைப்புகளும் அறிந்துகொள்ள மலாய் மொழியில் எண்ணங்களை வெளிப்படுத்துவது சிறந்ததெனப்பட்டது.

ஆவணப்படங்கள்

வல்லினம் மூலம் தொடர்ந்து ஆவணப்படம் இயக்கும் முயற்சியை மீண்டும் தொடங்கினோம். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பின் தொடர்ந்துள்ள முயற்சி. இம்முறை இளம் எழுத்தாளர் அரவின் குமார் இம்முயற்சியின் இயக்குனராக செயல்பட்டார். ‘மை ஸ்கில்ஸ் அறவாரியம்’ அன்பளிப்பாகக் கொடுத்த CanonXA40 ரக காமிராவில் எங்கள் ஆவணப்பட இயக்கம் டிசம்பர் 4 தொடங்கியது. இதுவரையில் எழுத்தாளர்களை ஆவணப்படுத்தி வந்த நாங்கள், இம்முறை சமூகச் செயல்பாட்டாளர்களை பதிவு செய்து அறிய வரலாற்று தருணங்களைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அவ்வகையில் மா.ஜானகிராமன்,  டான் ஶ்ரீ குமரன் ஆகியோர் வாழ்க்கை இவ்வருடத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நண்பர் செல்வம் அவர்கள் இம்முயற்சிக்கு வழக்கம்போல துணையாக நின்று செயல்படுகிறார். 

இழப்புகள்

மா.செ.மாயதேவன்

இவ்வருடம் பிரான்சிஸ் கிருபாவின் மரணம் தமிழ் இலக்கிய உலகை கடும் வருத்தத்தில் தள்ளியதென்றால் மலேசியாவில் மா.செ.மாயதேவன் அவர்களின் மரணம் மலேசிய இலக்கியத்தில் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மலேசியாவில் புத்திலக்கியம் வளர உழைத்தவர்களில் ஒருவர் மா.செ.மாயதேவன். 1950களில் மலேசியாவில் ஏற்பட்ட புதிய இலக்கிய அலையில் உருவானவர். ‘திருமுகம்’ என்ற கையெழுத்துச் சஞ்சிகையை நடத்தியவர். அவ்வகையில் மலேசியச் சிற்றிதழ் சூழலின் முன்னோடிகளில் ஒருவர். இரு நாராயணன்களும் நடத்திய கதை வகுப்பு, கு.அழகிரிசாமி உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’, கோ.சாரங்கபாணியின் தமிழர் திருநாள் என பல்வேறு கலை இலக்கிய முன்னெடுப்புகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு, சிறிது சிறிதாகத் தன்னைச் செதுக்கிக்கொண்டவர்.

வல்லினம்

வல்லினம் வழக்கம் போல ஆறு இதழ்கள் வந்தன. அவற்றில் ஜனவரி – சிறுகதை சிறப்பிதழ், ஜூலை – சிங்கப்பூர் சிறப்பிதழ், செப்டம்பர் – புதிய படைப்பாளிகள் சிறப்பிதழ் என மூன்று சிறப்பிதழ்களும் மற்ற மூன்று இதழ்கள் வழக்கமான படைப்புகளுடனும் பதிவேற்றம் கண்டது. உண்மையில் இந்த வருடம் வல்லினம் தரமாக வெளிவர எழுத்தாளர் அ.பாண்டியன் கொடுத்த நேரமும் உழைப்பும் மிக அதிகம். பொதுவாக வல்லினம் தரமாக வருகையில் அதன் மூல காரணமாக என்னை மட்டுமே நண்பர்கள் கருதும்போது மிகுந்த சங்கடம் அடைகிறேன். அப்படி தனி ஒருவர் முயற்சியில் எந்த மேன்மையான முயற்சியும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது சிரமம் என உறுதியாகவே நம்புகிறேன். வல்லினம் இதுவரை அப்படி தனி மனிதர் முயற்சியில் வந்ததும் இல்லை. அவ்வகையில் இவ்வருடம் நாவல் முயற்சியாலும் நோய்மையாலும் நான் விடுபட்டு இருக்கையில் அப்பொறுப்புகளை முழுமையாகச் சுமந்தவர் அ.பாண்டியன். இதழ்களை ஒட்டிய அனைத்துப் பாராட்டும் அவரையே சேரத்தக்கது.

இளம் படைப்பாளிகளோடு எழுத்தாளர் எம்.கோபலகிருஷ்ணனுடனான சந்திப்பு அமர்வு ஒன்றையும் வல்லினம் வழி ஏற்பாடு செய்திருந்தோம். படைப்புகளில் உள்ள நிறைகுறைகளை விரிவாக அலசும் அமர்வாக அது அமைந்தது.

வல்லினத்தின் வாசகர்கள் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து 20,000ஐ அடைந்துள்ளது கூடுதல் உற்சாகம் தரக்கூடியதாக இவ்வருடத்தில் அமைந்தது. அது ‘கிளிக்’ சார்ந்த எண்ணிக்கைதான் என்றாலும் இந்த தொகையில் 10% வாசகர்கள் இருப்பதுகூட ஓர் இலக்கிய இதழுக்கு ஆரோக்கியமே.

கோவிட் காரணத்தால் பொது நிகழ்ச்சிகள் என எதையும் ஏற்பாடு செய்ய முடியாமல் போனது. ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளையும் ஒத்திப்போட்டோம். இவ்வருடம் அவையெல்லாம் ஒவ்வொன்றாக பூர்த்தி செய்யப்படுமென நம்புகிறேன்.

2022

இன்று ஒரு புதிய ஆண்டு தொடங்குகிறது. இவ்வாண்டில் மேலும் அதிகம் வாசிக்க வேண்டும் என்பதுதான் அடிப்படைச் சிந்தனையாக உள்ளது. ‘சிகண்டி’ நாவலை எழுதும்போது அவ்வப்போது எதிர்கொண்ட மொழியின் போதாமை தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. பேரிலக்கியங்களை வாசிப்பதும் சிறந்த படங்களைப் பார்ப்பதும் என இவ்வாண்டை நிறைக்க வேண்டும். காப்பி, டீ பழக்கத்தை ஒருவருடமாவது கைவிட வேண்டும். தமிழிலும் மலாயிலும் சிறுகதை தொகுப்பு கொண்டுவர வேண்டும். மலேசியச் சிறுகதைகள் குறித்த விமர்சன நூல் ஒன்றை வெளியிட வேண்டும். கோவிட்டிடம் விடுதலை கிடைத்தால் தமிழகம் சென்று வர வேண்டும்.

கடந்த ஆண்டைத் திரும்பி பார்க்கும்போது எடுத்துள்ள எல்லா முயற்சிகளும் முழுமை பெற நண்பர்களே உடன் இருந்துள்ளனர். அ.பாண்டியன், தர்மா, தென்னரசு ஜி.எஸ்.எஸ்.வி நவீன், எஸ்.தி.சரவணன், அரவின் குமார், டாக்டர் மா.சண்முகசிவா, வழக்கறிஞர் பசுபதி, செல்வம் என ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு கை என்னைத் தாங்கிப் பிடித்துள்ளது. என் எந்த வெற்றியானாலும் அதில் அவர்களுக்கும் ஒரு பங்குண்டு. பலவீனங்களை நான்தான் கண்டறிந்து சரிசெய்துகொள்ள வேண்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

2018: கண்டநற் சக்திக் கணமெலாம் நான்

2019: இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்!

2020: அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்

(Visited 304 times, 1 visits today)