“காச கொண்டுப்போய் தூர போடுடா” என வளர்மதி கத்தவும் அப்போய் கொஞ்சம் பயந்துதான் போனான். திடுக்கிட்டு உறங்கி எழுந்தவளின் கண்கள் சிவப்பேறியிருந்தது. கரகரத்த குரலில் உறுமல்.
உறங்குவதற்கு முன் நெஞ்சை அழுத்திய அழுகை அப்படியே அங்கேயே அடைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். இன்னும் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் சூழ்ந்திருந்த சீன ஊதுவத்திகளின் புகை கதவைத்திறந்ததும் உள்ளே நுழைந்து மூக்கை எரித்தது. தொலைவில் கேட்ட நன்யின் இசை இருண்டு கிடந்த சாயுங்கால வீட்டை மேலும் துக்கமாக்கியது.
வாசலுக்கு நேராக நீட்டி நகங்களைப் பார்த்துக்கொண்டாள். கையின் அசைவுகளை நகங்கள்தான் நளினமாகவும் கம்பீரமாகவும் மாற்றுவதாகத் தோன்றியது. அவை கைகளின் கிரீடங்கள். நாளை அவற்றை வெட்ட வேண்டும். கிரீடம் இல்லா கரங்களில் மலவாளியைத் தூக்க வேண்டும். தன்னால் அது முடியாது எனத் தோன்றியது. ஓடிப்போய் கப்பளாவின் முகத்தில் ரப்பர் கையுறைகளை வீசி எறிந்துவிட்டு வரவேண்டும்போல இருந்தது. ஆனால் அதற்குப்பிறகு எங்கு போவது என்றுதான் தெரியவில்லை.
வீட்டினுள் தலையைத் தொங்கவிட்டபடி நுழைந்த அப்போய் நேராக துணி மூட்டைகளுக்கு மத்தியில் சென்று அமர்ந்துகொண்டான். இப்போதெல்லாம் அக்கா அதிகம் ஏசுவதாக அவனுக்குத் தோன்றியது. காகித நோட்டுகளைப் பொறுக்கிவர அவன் அதிகம் கஷ்டப்பட்டிருந்தான். காற்றின் சுழிப்புகளுக்குப் பின்னாலெல்லாம் அலைந்திருந்தான். நடுங்கிய கைகளுடன் அள்ளிவந்த அத்தனை நோட்டுகளையும் மீண்டும் வீதியிலேயே வீசியபோது காற்று ஏந்திக்கொண்டு மறுபடியும் வீதி முழுவதும் பரப்பியது.
“அதெல்லாம் சீன பேய்களுக்குடா. நாம எடுத்து வச்சிக்கிட்டா அதுங்க நம்ம வீட்டுக்குள்ள வந்துடாதா” என்றாள். குரலில் கரகரப்பு குறைந்து இனிமையாகத் தொனித்தது.
உண்மையில் அவள் அப்போது ஒரு கனவு கண்டுக்கொண்டிருந்தாள். கனவில் சுண்டுவிரல்களிலும் மோதிரவிரல்களிலும் நீண்ட நகங்களைக் கொண்ட தேவதை ஒன்று அவள்மேல் பண நோட்டுகளை தூவியது. ஒளியை மறைத்து வாசலில் நின்றதால் நிழல்வடிவாக மட்டுமே காட்சி கொடுத்த அதன் கரங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. நோட்டுகள் சுழன்று பறந்து ஒன்றன் மேல் ஒன்றாக வந்து அமர்ந்தடங்கின. அவற்றை எடுக்கக் கைகளை நீட்டியபோதுதான் அப்போய் படார் எனக் கதவைத் திறந்தான்.
தலையைக் குனிந்தபடியே தன் முன் அமர்ந்திருக்கும் அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. கையை வலுவாகப் பிடித்து இழுத்து தலையைத் தடவவும் அப்போய்க்குப் பொழபொழவென கண்ணீர் ஊற்றியது. மடியில் படுத்துக்கொண்டான். அவள் அப்படி கொஞ்சுபவள் அல்ல. அவனுக்கு அம்மாவின் நினைவு வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். அப்போய் தன் வாழ்வில் இல்லாமல் இருந்தால் தானும் அம்மாவைப்போல எங்காவது ஓடிப்போயிருக்கலாம் எனத்தோன்றியது.
தலைக்குள் கோதிக்கொண்டிருந்த தன் விரல்களை வெடுக்கென எடுத்து ஒருதரம் நகங்களை உற்றுப்பார்த்தாள். ஓர் அங்குல நீளத்தில் சிவப்பாக மினுமினுத்தன. உறங்கிப்போவதற்கு முன்புதான் சாயம் பூசியிருந்தாள். இரவில் மறுபடியும் அதன்மேல் சாயம் பூசவேண்டுமென தோன்றியது. சற்றுமுன் நோட்டுகளைக் கொட்டிய கைவிரல்களின் நகங்கள் நினைவுக்கு வந்தன. அதுபோல அவள் எங்குமே பார்த்ததில்லை. வண்ணங்களற்ற அவை விரல்களைவிட நீண்டு வளர்ந்து வளைந்திருந்தன. வந்தவள் தேவதையென அவளாக முடிவுசெய்ததை எண்ணி சிரித்துக்கொண்டாள். பேயாகவும் இருக்கலாம். அப்படி நினைத்தபோது பயம் கௌவியது. அப்போய் எடுத்துவந்த நோட்டுகள் தீய சக்தியின் அடையாளமாக இருக்கலாம் என நினைத்தாள்.
“பசிக்குதாடா?” என்றாள்.
“கப்பளா ஊதுவத்தி எரிஞ்சி முடிஞ்சதும் பன்டிய சாப்புட தரதா சொன்னான்.” என்றவன் ஏதோ நினைவுக்கு வந்தவனாக துள்ளி எழுந்து ஓடி, மையத்தில் ஆளுயரத்துக்கு எரிந்துகொண்டிருக்கும் ஊதுவத்திகளைப் பார்த்தான். பச்சை, நீலம், சிவப்பு என பல வண்ணங்கள் கொண்ட டிராகன் சுழன்றிருப்பதைப் போல பிரமாண்டமாக வடிவமைந்திருந்தது. மையத்தில் இருக்கும் டிராகனின் தலையை நெருப்புக்கொழுந்து நெருங்கிக்கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் முழுதுமாக எரிந்துவிடும். அதுவரைதான் பேய்கள் சாப்பிடும் நேரம் என கப்பளா சொல்லியிருந்தார். உணவு படைக்கப்பட்ட இடத்தில் ஏதாவது கண்ணுக்குத் தெரிகிறதா என வெறித்துப்பார்த்தான். படையல் மேசை இருந்த கூடாரம் வெறிச்சோடி கிடந்தது. கம்பத்தில் அலையும் நாய்கள் மாமிச வாடையைச் சட்டைசெய்யாமல் எதாவதொரு மூலையில் சுருண்டு கிடந்தன.
கடந்த பதினைந்து நாட்களாக அவை நள்ளிரவுகளில் ஓயாமல் ஊளைவிடும்போதெல்லாம் அப்போய் வளர்மதியைத்தான் கட்டிப்பிடித்துக்கொண்டான். நாய்கள் கண்களுக்கு பேய்கள் தெரியுமென்றும் அப்படித் தெரியும்போது ஊளையிடுமென்றும் அவனது பள்ளி நண்பர்கள் சொல்லியிருந்தனர். அவன் கண்களுக்கும் பேய்கள் தெரியவேண்டுமென்றால் நாயின் கண்களில் உள்ள பீழையை எடுத்து கண்களில் ஒட்டிக்கொள்ள வேண்டுமென்று ஆலோசனை கூறியிருந்தனர். வளர்மதியிடம் அதை ஓர் இரவில் சொன்னபோது “அதெல்லாம் பேசாத” எனத் தொடையைக் கிள்ளினாள். அதன் தழும்பு மூன்று நாட்கள் இருந்தன. கத்திபோன்ற கூரிய நகம் அவளுக்கு.
படையல் கூடாரத்துக்கு அடுத்து அமைக்கப்பட்டிருந்த மேடையில் அசைவு தெரிந்தது. மேகங்கள் வரையப்பட்ட துணி ஒன்றை கருப்பு உடையணிந்த நான்கு இளைஞர்கள் மேடையில் கட்டிக்கொண்டிருந்தனர். அப்போய் அன்று முழுவதும் வாயில் முணுமுணுத்துக்கொண்டிருந்த பாடல் ஒன்றை உற்சாகமாகப் பாடிக்கொண்டு மேடையை நோக்கி ஓடினான்.
வளர்மதிக்கும் அந்தப்பாடல் தெரியும். விலங்குகளின் ஓலியை எழுப்பிக்கொண்டு அதை பாட வேண்டும். கொஞ்ச நேரம் முணுமுணுத்தபோது பள்ளியின் நினைவு வந்தது. இவ்வருடம் அவளுக்கு எஸ்.பி.எம் தேர்வு. ஜூலை மாதமென்பதால் கடுமையான பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கும். அரையாண்டு சோதனைகளில் குறைவான புள்ளிகள் எடுத்தவர்களை சபைக்கூடலில் கடுமையாகத் திட்டியிருப்பார்கள். அவள் சுமாரான மாணவி என்றாலும் இதுவரை ஆசிரியர்களிடம் திட்டுவாங்கியதில்லை. அம்மா இருந்திருந்தால் எஸ்.பி.எம்மை ஒருவாராக முடித்திருக்கலாம். எங்காவது குமஸ்தா வேலை கிடைத்திருக்கும். குமஸ்தா வேலை செய்தால் குளிர்சாதன அறை கிடைக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறாள். பள்ளியிலும் குமஸ்தாக்கள் குளிர்சாதன அறையில்தான் இருந்தனர். அவளுக்குக் குளிரூட்டிய அறையில் வேலை செய்ய ஆசை இருந்தது.
தலைமுடியை இழுத்துக்கட்டிக்கொண்டு வீதிக்கு வந்தாள். வரிசையாக ஊன்றப்பட்ட ஊதுவத்திகள் தெருவைப் புகைமண்டலமாக்கியிருந்தன. வீதியெங்கும் வழிபாட்டுக்காகக் குவித்து வைத்திருந்த காகித நோட்டுகள் சிதறிக்கிடந்தன. சிவப்பு நிற தகர பெட்டிகளில் தங்க நிற காகிதங்கள் ஆங்காங்கு சீனர்கள் வீட்டு வாசலில் எரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. கொஞ்சம் முன்னோக்கி நடந்தபோது நீண்ட மேசையில் முழு பன்றி வாட்டி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வாத்துகளும் கோழிகளும் அதைச் சுற்றி கால்களை மேலே விரைத்துத் தூக்கியபடி கவிழ்ந்து படுத்திருந்தன. காகிதங்களால் செய்யப்பட்ட ஆடம்பர ஆடைகள், மகிழுந்துகள், வீடுகள், தங்க நாணயங்கள் என அடுத்தடுத்த மேசைகளில் குவிந்து கிடைந்தன. அடுத்தப் பத்து நாட்களில் அவை எல்லாமே எரிக்கப்படும். அவை நரகத்துக்குள் மறுபடியும் நுழையும் மூதாதையர்களால் எடுத்துச்செல்லப்படும்.
வளர்மதி அப்போயைத் தேடினாள். கொஞ்சம் பௌடர் பூசி அவனை அனுப்பிவிட்டிருக்கலாமென தோன்றியது. அவனுக்கு அணிவித்து அனுப்ப நல்ல உடையென எதுவும் இல்லை. அம்மா இருந்தவரை அவன் முகம் முழுவதும் பௌடர் பூசி, சட்டையை கால்சட்டைக்குள் விரைப்பாகத் திணித்து, வெள்ளை பூத்துள்ள கால்களில் எண்ணெய் பூசியப்பின்தான் வெளியே அனுப்புவாள். அவளுக்கு எப்போதும் வீடும் மனிதர்களும் சுத்தமாக இருக்க வேண்டும்.
அம்மாவும் ஒவ்வொரு நாளும் வேலைக்குப் புறப்பட தயாராகி நிற்கும்போது மஞ்சளும் குங்குமமும் இட்டு பிரகாசமாகத்தான் இருப்பாள். நீண்ட கூந்தல் அவளுக்கு. மனைக்கட்டையில் ஏறி நின்றே தலைவாருவாள். அதற்கு முன் சாம்பிராணி புகையிடுவாள். மாலையில் கூந்தல் நுனியில் மட்டும் சிறிய முடிச்சுபோட்டுக்கொள்வதே அம்மாவுக்கு அவ்வளவு அழகாக இருக்கும். அப்பா விபத்தில் இறந்தபிறகும் அவளது அலங்காரத்தில் எந்தக்குறையும் இருந்ததில்லை. யார் சொல்வதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன்னை முழுமையாகப் பேணுபவளாகவே இருந்தாள். குறிப்பாக நகங்களில் சிவப்பு வெளுத்து வளர்மதி பார்த்ததில்லை. சாவுக்கு வந்த பாதி பேர்கூட கருமகிரியைக்கு வரவில்லை. தவசத்துக்கு அம்மா யாரையும் அழைக்கவில்லை.
அம்மா கைகளில் எப்போதும் மஞ்சள் மணக்கும். வளர்மதி அம்மாவின் கைகளை முகர்ந்து பார்த்து அவள் முகத்தில் அணைத்துக்கொள்வாள். மெதுவெப்பக் கரங்களில் மஞ்சளுக்குப் பிரத்தியேக மணம் கூடியிருக்கும். அவள் அந்த மணத்தை தன் முகமெல்லாம் சூழ வைப்பாள். அம்மா சந்தோஷமாக இருந்தால் ஐந்து விரல்களையும் விரித்து வளர்மதி கன்னத்தில் குவிக்கும்போது அதன் கிளர்ச்சி கழுத்து, தலை என பாவி மனமெல்லாம் பரவும். போன மாதம் ஓர் அதிகாலை வேலைக்கு ஏற்றிச்செல்லும் வேனில் ஏறிய அம்மாவைப் பார்த்ததுதான் கடைசி. அன்று அம்மா என்றைக்கும் விட பிரகாசமாகத் தெரிந்தாள். வளர்மதி நெற்றியில் முத்தமிட்டவள் சாமி மேடையின் அருகில் கொஞ்சம் பணம் வைத்திருப்பதாகக் கூறினாள்.
“அப்போய்” என கத்தி அழைத்தாள். அவள் குரல் இரண்டு வீடுகளைக் கூடத் தாண்டாது எனத் தெரியும். அன்று அதிகம் சோர்ந்திருந்தாள். ஏழாவது நாள் சீனக்கூத்துக்காக தெருவே முற்றாக மாறியிருந்ததால் மறுபடியும் கத்தி அழைக்க தயக்கமாக இருந்தது. பசித்தபோது மதியம் வாங்கிவந்த காயா பாவ் நினைவுக்கு வந்தது. வீட்டுக்குள் ஓடி நீராவியால் வியர்த்து நெகிழிப்பையில் ஒட்டியிருந்த அதை எடுத்துக்கடித்தாள். மாவு பிசுபிசுத்தது. சீனக்கூத்து தொடங்கிய கடந்த ஒரு வாரமாக அப்போய்க்கு உணவு தயாரிப்பதில் பெரிய சிக்கல்கள் வராதது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அம்மாவையே சுற்றி சுற்றி வந்தவன் ஒரே மாதத்தில் பெரிய மனிதன்போல கம்பம் முழுவதும் உலாத்துவது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. எல்லோரையும் அறிமுகம் செய்துக்கொண்டிருந்தான். ஒன்றிரண்டு மென்டரின் சொற்களையும் பேசப்பழகியிருந்தான். என்றாவது அம்மா வந்து தம்பியை தான் ஒழுங்காக வளர்க்கவில்லையென திட்டுவாளா என நினைக்கும்போது அச்சம் வரவே செய்தது. பாவ்வை கடித்தபடி அப்போய் கண்ணுக்குத் தெரிகிறானா என மீண்டும் எட்டிப்பார்த்தாள்.
கம்போங் லாமாவின் வீடுகள் ‘ப’ வடிவில் யாரையும் எளிதில் காட்டிக்கொடுக்கும்படிதான் அமைந்திருக்கும். இடது வரிசையில் பதினைந்து வீடுகள் என்றால் வலது பக்கம் பனிரெண்டு வீடுகள். இருபக்க முனைகளையும் இணைக்கும் அகலத்துக்கு கப்பளாவின் வீடு பிரமாண்டமாக கோடியில் அமைந்திருந்தது. முன்பு அவன் சிறிய மர ஆலை ஒன்றை வைத்திருந்தான். அது எரிந்தபிறகு கிடைத்த காப்புறுதி பணமே எஞ்சிய அவரது பிரம்மச்சாரிய வாழ்க்கைக்குப் போதுமானதாக இருந்தது. அப்பணத்தைக் கொண்டு கம்பத்தில் பெரும்பாலான வீடுகளை ரொக்கமாக வாங்கினான். அதில் நல்ல வாடகை வந்தது. சிலர் அவனே அவ்வாலையை காப்புறுதி பணத்துக்காகத் திட்டமிட்டு எரித்ததாக ரகசியமாகப் பேசிக்கொண்டனர்.
கம்பத்துக்குள் நுழையும் யாருமே முனைகள் வளைந்த பிரத்தியேக கூரைகளாலான அவன் வீட்டை சீனக்கோயில் என்றுதான் நினைப்பார்கள். தொழிற்சாலை எரிந்தபிறகுதான் கப்பாளா சாமியாட தொடங்கியிருந்தான். வீட்டின் முகப்பறையிலேயே தாடி மீசையுடன் கறுப்பும் ரத்தச்சிவப்புமான சாமி சிலைகளை வைத்திருப்பான். ஏராளமான சிறு ஊதுவத்திகளும் மெழுகுவர்த்திகளும் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும். யாருக்கும் ஏதும் வினோத நோய் கண்டால் அவன் மந்திரித்து எழுதிக்கொடுக்கும் வாசகங்கள் அடங்கிய நீளமான மஞ்சள் காகிதங்களை கொளுத்தி அதன் சாம்பலை நீரில் கலந்து குடிப்பார்கள். எந்த செய்வினைக்கும் முறிக்கும் சக்தி கொண்ட பச்சை திராட்சை நிறக்கல் மோதிரம் ஒன்றை எப்போதும் அணிந்திருப்பான். கழுத்தில் ஏராளமான தங்காய்கள் இருக்கும்.
கப்பளா ஒரு காலத்தில் லுனாஸ் வட்டாரத்தின் பிரபல சண்டியன் என்றும் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டவன் என்றும் பேச்சிருந்தது. பணபலமும் இருந்ததால் கம்பத்தில் உள்ள துடுக்கான இளசுகள் அவனிடம் பணிந்தே போவார்கள்.
பேய் மாதம் தொடங்கியதிலிருந்து கப்பளா பரபரப்பாகவே இருந்தான். அவனது வீட்டில்தான் கம்பத்தில் உள்ள சீனர்கள் அனைவரும் சந்திப்புக்காக ஓர் இரவில் கூடினர். நல்ல அகன்ற தொப்பையுடையவன் கப்பளா. உடலில் உரோமங்கள் வளராது என்பதால் புருவங்கள் இல்லாமல் மழித்த பூதம்போல மையத்தில் வந்து அமர்ந்தான். அவ்வருடம் நரக வாசல் திறக்கும்போது செய்ய வேண்டிய பேய் வழிபாடுகள் குறித்து அவன் சொன்ன அனைத்துக்கும் கம்பத்துச் சீனர்கள் தலையாட்டினர். ஜூலை மாதம் முழுக்க அவர்கள் தங்களால் ஆன உணவுகளை கூடாரங்களில் அடுக்கிவைக்க சம்மதித்தனர்.
பேய் வழிபாடு செய்வதை வளர்மதி அதற்குமுந்தைய ஆண்டுகளிலும் பார்த்துள்ளாள். ஆனால் அப்போயைப் போல அவளுக்கு அதையெல்லாம் வேடிக்கைப் பார்க்க பிடிக்காது. அவளுக்கும் அம்மாவைப் போல அழகாக இருக்க வேண்டும் என மட்டுமே ஆசை இருந்தது. எனவே கம்பத்தில் யாரிடமும் அதிகம் சேராமல் அம்மாவைப் போலவே அனைத்திலிருந்தும் ஒதுங்கியே இருந்தாள். அம்மா குறைவாக பேசுபவள். இதழ் ஓரங்கள் மேல்நோக்கி இருப்பதால் எப்போதும் சிரிப்பதுபோலவே இருக்கும். கண்ணோரம் மையை சற்று மேல்நோக்கி வளைத்திருப்பாள். பள்ளி கட்டுப்பாடுகளை மீறி நீளமான நகங்களை வளர்த்தபோது அம்மா வளர்மதியை ஏசவில்லை. தன்னிடம் இருந்த நகப்பூச்சுகளைக் கொடுத்தாள். நகத்தில் சாயம் பூசத்தொடங்கியது முதலே வளர்மதிக்கு அதிகமாக வெட்கம் வரத்தொடங்கியது. ஓய்வு நேரங்களில் நயனம் இதழில் வரும் பாடல்களை வெட்டி நோட்டுப்புத்தகத்தில் ஒட்டி வைத்திருந்தாள். அம்மா இல்லாதபோது அவற்றைப் பாடிப்பார்ப்பாள். தனக்கு நன்றாகப் பாட வருவது அவளுக்குப் பெருமையாக இருந்தது. யாரிடமாவது செந்தூரப்பூவே பாடலைப் பாடிக்காட்ட வேண்டுமென நினைத்திருந்தாள். புதிதாக வந்த பாடல்களில் அதுதான் அவள் குரலுக்கு ஏற்றதாக இருந்தது.
இவ்வருடம் சீனக்கூத்துக்காக மேடையொன்றை போட்டிருந்தது வளர்மதிக்கும் புதிதுதான். வழக்கமாக பதினைந்தாவது நாள் நள்ளிரவுவரை பாரம்பரிய சீன இசை கச்சேரி மட்டும் நடக்கும். இம்முறை ஏழு நாட்கள் கூத்து நடத்த கப்பளா வீட்டையே மறைத்தபடி பிரமாண்டமாக மேடை எழுப்பப்பட்டிருந்தது.
முதல்நாள் கம்பத்தில் உள்ள சிறுவர்களுக்கெல்லாம் மேடையைப் பார்த்ததும் ஏக கொண்டாட்டம். மாலையானால் மேடையில் ஏறி விளையாடுவர். படுத்து உருள்வார்கள். யாரும் தடுப்பதில்லை. கப்பளா சிகரெட் பிடித்தபடி முறைத்துப்பார்த்துவிட்டு போய்விடுவான். அப்போயும் பள்ளி முடிந்து வந்தவுடன் மேடையில் ஏறிக்கொள்வான். வளர்மதியால் அவனை நிறுத்தமுடியவில்லை. அம்மா இல்லாத இந்த ஒரு மாதத்தில் ஒருமுறைகூட அம்மாவை எண்ணி அவன் அழுது அடம்பிடிக்காததே நிம்மதியாக இருந்தது. விசாரிக்க வந்த உறவினர்கள் அம்மாவைப் பற்றி கேவலமாகப் பேசி விட்டுச் செல்லும்போதெல்லாம் அவள் அழுவதை அசைவில்லாமல் பார்ப்பானே தவிர எதுவும் கேட்கமாட்டான். அப்போய்க்கு எந்த விபரமும் தெரியாமல் இருப்பதே வளர்மதிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
வாரத்தொடக்கத்தில் கூத்து ஆரம்பித்தபோது அதற்குப்பிறகு கப்பளா யாரையும் மேடையேற அனுமதிக்கவில்லை. கம்பத்தில் வாழும் ஒரு சில தமிழர்களுக்கு இரவு முழுவதும் ஒலிப்பெருக்கியிலிருந்து வரும் சத்தம் இம்சையாக இருந்தாலும் பொருத்துக்கொண்டனர். சிலர் வீட்டு வாசலில் விளக்கமாற்றையும் ஆணிகளையும் கொட்டிவைத்தனர். புதிதாக ஆங்காங்கு முளைத்த உணவுக்கடைகள் தோறும் பிரதானமாகப் பன்றி இறைச்சி பல வடிவங்களில் விற்கப்பட்டது. பேய் மாதத்தில் ஏழு நாட்களுக்குக் கூத்து நடைபெறுவது லுனாஸ் வட்டாரத்தில் புதிதென்பதால் இரவு நெருங்கும்போது சுற்றுவட்டார சீனர்களெல்லாம் கம்பத்தில் குழுமத்தொடங்கினர். கப்பளா கூத்துபோடுபவர்களுக்கு தன் வீட்டிலேயே தனி அறைகள் கொடுத்திருந்தார். எல்லா வேளை உணவும் அவர் வீட்டிலேயே வழங்கப்பட்டதால் கூத்துக்கலைஞர்கள் பகல் நேரங்களில் உறங்குவதும் ஒத்திகைப்பார்ப்பதுமாக இருந்தனர்.
கடந்த ஆறு நாட்களைவிட இறுதிநாள் கூத்தே சிறப்பானதென்றும் அதற்காகவே அனைவரும் காத்திருப்பதாகவும் பேசிக்கொண்டனர்.
வளர்மதிக்கு கூத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தாலும் வெளியில் செல்ல கால்கள் கூசின. நாளை முதல் அந்தக் கம்பத்தில் மிஞ்சி இருக்கும் மரியாதையும் போய்விடும் என நினைக்கும்போது கனத்தது. அம்மா போனதிலிருந்து அவள் வேலைதேடாத இடமில்லை. கூலிம் வரை சென்று அம்மா வேலை செய்த ரொட்டி தொழிற்சாலையில்கூட முயன்றாள். சில இடங்களில் எஸ்.பி.எம் தேர்வு முடிவை கேட்டனர். வேலைக்கு எடுப்பதாகச் சொல்லிய சில தொழிற்சாலைகள் போக்குவரத்து வசதியை உருவாக்கித் தரமுடியாது என கைவிரித்தன. கம்போங் லாமாவிலிருந்து பேருந்து எடுக்க அரைமணி நேரம் நடந்து லுனாஸ் டவுனுக்குச் செல்ல வேண்டும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறைதான் பேருந்து வந்தது. அது எந்த ஒரு மணி நேரம் என்பதை அறியவே அவளுக்குப் பெரும்பாடாக இருந்தது. முதல் மாதம் வாடகைத் தள்ளிப்போனபோது கப்பளா கத்தத் தொடங்கினான்.
அவன் அப்படி செய்வான் என அவள் நினைத்துகூட பார்த்ததில்லை. அவனுக்குச் சொந்தமான ஒரு பலகை வீட்டில் கால் பகுதியைத் தனியாகத் தடுத்து ஐம்பது ரிங்கிட் வாடகைக்கு விட்டிருந்தான். ஓரறை கொண்ட வீடு அது. மாலை ஆறு மணிக்குள் கிணற்றிலிருந்து தேவையான நீரை தூக்கிச்செல்ல வேண்டும். அம்மா வாளியில் நீரைப்பிடித்து எடுத்துவரும்போது சில துளிகள் சிந்தினாலும் பக்கத்து வீட்டு சீனக்கிழவி ‘ச்சீபாய்’ எனக் கொச்சையாகத் திட்டுவாள். அம்மா பதிலுக்குப் பேசாமல் சிந்திய இடங்களைத் துடைத்துத் தருவாள்.
“உன்னுடைய அம்மாவைப்போல எங்காவது நீயும் ஓடிப்போகலாமே. அதுதான் மார்பில் கொழுப்பு கூடியிருக்கிறதே” என வாசல் முன் நின்று அவன் கத்தியபோது வீட்டினுள் இன்னும் இருளான இடம் கிடைத்தால் ஓடிச்சென்று மூழ்கிக்கொள்ளலாம் எனத் தோன்றியது. வேடிக்கை பார்த்தவர்கள் முன் நிர்வாணமாக நிற்பதுபோல ஒடுங்கினாள்.
கையில் அப்போது வைத்திருந்த கொஞ்சம் பணத்தை அவன் கையில் திணிந்து நிலையைக் கட்டுப்படுத்தினாள். அவன் பார்வையில் உடலெல்லாம் கூசியது. கப்பளா வீட்டுக்குள் சென்றவுடன் எதிர்வீட்டு ஆசோ வீட்டில் இருந்தபடி துணி வெட்டும் வேலை செய்யலாம் என வளர்மதிக்கு ஆலோசனை கூறினாள்.
ஒரு சீனன் லாரியில் கொண்டு வந்து இறக்கிவிட்டு செல்லும் மூட்டையிலிருந்து பல கோணங்களில் தைக்கப்பட்ட துண்டுத்துணிகள் இருக்கும். அவற்றை கட்டம் கட்டமாக அளவெடுத்து தையல் பிரியாமல் வெட்ட வேண்டும். அப்படி வெட்டினால் கிலோவுக்கு பத்து சென் கிடைத்தது. வளர்மதி நாள் முழுவதும் அதிலேயே பாடுபட்டும் தினமும் கிடைக்கும் பணம் உணவுக்கே சரியாக இருந்தது. சிக்கனம் பிடிக்க சமைக்கத் தொடங்கியபோது துணி வெட்டுவதில் வருமானம் குறைந்தது. தன்னைக் கயிற்றால் இறுக்கி இருபக்க முனைகளையும் யாரோ தினம் தினம் இழுத்துக்கடைவதாக உணர்வாள். வேறு வழியே இல்லையென ஆனப்பிறகுதான் வீட்டில் இருந்த வானொலியை விற்று பாதிப்பணத்தைச் செலுத்தினாள். அவளிடம் விற்க அதுமட்டும்தான் இருந்தது. அவள் குழந்தையாக இருக்கும்போதே அது அவள் வீட்டில் இருந்தது. வெள்ளை நிறத்தில் அகலமாக இருக்கும் வானொலி அது. கவனமாகத் திருகினால் சிங்கப்பூர் அலைவரிசையெல்லாம் கிடைக்கும். வளர்மதி அதனுடன் சேர்ந்து அவள் பாடாத நாள் இல்லை. கடந்த ஒருவாரமாக செந்தூரப்பூவே பாடலை தினமும் ஒலிபரப்பினர். அதை விற்றபோது ஒரு தோழியை மறைந்து நின்று கொன்றது போல மனம் துடித்தது.
பாதித்தொகையை மட்டும் பார்த்தபோது கப்பளாவுக்கு முகமெல்லாம் சிவந்தது. மூச்சை மூர்க்கமாக இழுத்துவிட்டான். அவளிடம் வாகனம் இல்லை. கல்வி முழுமைபெறவில்லை. பேருந்து எடுக்க அறை மணி நேரம் நடக்க வேண்டும். எதுவுமே அவளுக்கு உதவ சாதகமாக இல்லாதபோது கப்பளாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதைச்சொன்னபோது அவன் முன்பே அவள் வாந்தியெடுக்கத் தொடங்கினாள்.
ஆறு வீடுகளுக்கு ஒன்று எனும் கணக்கில் கம்பத்தில் நான்கு கழிப்பறைகள் இருந்தன. கழிப்பறைகள் தூண் கொடுத்து உயரமாக அமைக்கப்பட்டிருக்கும். மலம் கழிக்கும் பேசினுக்கு அடிப்பகுதியில் வாளிகள் வைக்கப்பட்டிருக்கும். மூன்று நாளைக்கு ஒருதரம் வாளி மலத்தால் நிறைந்துவிடும். அதனை எடுக்க அதிகாலையிலேயே காய்கறிகளைப் பயிர் செய்யும் ஒரு சீனன் வருவான். மனித மலம் அவன் தோட்டத்துக்கு நல்ல எருவாக இருந்தன. அந்த மலவாளியை கொண்டுபோய் சீனனின் காய்கறி தோட்டத்திலேயே கொடுத்தால் வாளிக்கு இரண்டு ரிங்கிட் தருவதாகச் சொல்லியிருந்தான். தேவையான அளவு காய்கறிகளை தோட்டத்திலேயே இலவசமாகப் பறித்துக்கொள்ளலாம். கம்பத்தில் இருந்த நான்கு வாளிகளையும் நாளைக்கு இரண்டு என கொடுத்தாலும் வீட்டு வாடகைக்குக் கொடுப்பதை விட அதிகம் சம்பாதிக்க முடியும் என்பது கெப்பாளாவின் கணக்காக இருந்தது.
அன்று இரவு முழுவதும் அதை நினைக்கும்போதெல்லாம் அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. வாளிகளைக் கற்பனையால் காணும்போதெல்லாம் கழிப்பறைக்கு ஓடிச்சென்று வாயை அகலத்திறந்து வாந்தியெடுக்க முயன்றாள். வயிற்றில் ஒன்றும் இல்லாதபோது எச்சிலைத் துப்பினாள்.
அவள் தினமும் விடியும் முன்பே கழிவறைக்குச் சென்றுவிடுவாள். எப்போதோ அடித்தப் பலகைகளில் உடைசல்கள் இருந்தன. எல்லோரும் போல இல்லாமல் போகும்போதே இரண்டு வாளி நீரை எடுத்துச்சென்று கண்களை மூடிக்கொண்டு தண்ணியை விசிறி அடிப்பாள். உபயோகித்தப்பின் அடுத்தவாளியையும் காலி செய்தப்பின்பே வீட்டுக்கு வருவாள். அதுபோன்ற அதிகாலை வேளையில் பழைய கறுப்பு நிற வேன் ஒன்றில் சீனன் வாளிக்காகக் காத்திருப்பதைப் பார்த்திருக்கிறாள். வெளியில் வரும் அவளைப்பார்த்து நன்றியுணர்ச்சியுடன் புன்னகை செய்து வாளியை வெளியே எடுப்பான். கொண்டு வந்துள்ள பையால் அதன் வாயை மூடி அழுங்காமல் குலுங்காமல் வேனில் ஏற்றுவான். பின்னர் தான் கொண்டு வந்த காலியான வாளியை வைப்பான். செம்பனைத்தோட்டத்துடன் ஒட்டியிருந்த காட்டில்தான் அவன் தோட்டம் போட்டிருந்தான்.
“நீ விடிவதற்குள் காட்டோரமாகவே நடந்துபோய் கொடுத்துவிட்டு வரலாம். பத்து நிமிட நடைதான். ஒரு நாளைக்கு இரு வாளிகள் எடுத்தால்கூட போதுமானது”
கப்பளா சொன்ன எந்த ஆலோசனையும் அவள் காதுகளில் ஏறவில்லை. அவள் முன்பைவிட தீவிரமாக துணி வெட்ட ஆரம்பித்தாள். மாதம் முடிந்து இரண்டாவது வாரம் தொடங்கியபோது கப்பளா வசைகள் அதிகமானது. அவளால் பத்து ரிங்கிட்டு மேல் சேர்க்க முடியவில்லை. அது மின்சாரக்கட்டணத்துக்கே சரியாய் போனது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகத் திட்டியவன் மூன்று நாட்களுக்கு முன் “அடுத்தவனோட படுத்து சம்பாரிக்கப்போறன்னா சொல்லு… நான் ஏற்பாடு செய்யுறேன்” எனச்சொன்னபோது கத்திரிக்கோலால் அவன் நாக்கை வெட்ட வேண்டும் போல இருந்தது. இரவு முழுவதும் அழுதாள். அப்போயைப் பார்க்க கோவமாக வந்தது. அவன் இல்லாமல் இருந்தால் தன்னால் எங்காவது சென்று வாழ்ந்துவிட முடியுமென நினைத்தாள். தனது வலியின் காத்திரமெதுவும் அறியாமல் நிம்மதியாகத் தூங்குபவனின் மேல் வெறுப்பு வந்தது.
ஆறாவது நாள் சீனக்கூத்தில்தான் கப்பளாவிடம் சம்மதம் சொன்னாள். அப்போது மேடையில் சீனர்களின் பாரம்பரிய தொப்பி மற்றும் உடைகளுடன் இருவர் ஈட்டி சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் ஐந்து நிமிடம் சத்தமிட்டு பேசி ஒரு முறை தாக்குதல் நடத்தினர். பின்னணியில் அவர்களுக்குக் குரல் கொடுப்பவர்கள் உற்சாகமாகப் பேச இவர்கள் வாய் அசைப்பது தெரிந்தது. பெரிய தோல்கருவியின் பின்னணி இசை பிரமாண்டமாக இருந்தது. தாக்குதலின் தீவிரத்தை இசையால் காட்டினர். அவ்வளவு இரைச்சலில் கப்பளாவிடம் அதை சொல்வது மட்டுமே அவளுக்கு சாத்தியமென பட்டது. பெரும் இரைச்சலில் தனது அவமானத்தின் சொற்கள் உடனே கரைந்துவிடும் என நம்பினாள். கூத்தில் வாய் அசைப்பவர்கள் போல தானும் வாயை மட்டுமே அசைப்பதாக நினைத்தாள். அந்த வாய் அசைவை அவன் புரிந்துகொள்வான் எனத் தோன்றியது. கப்பளா இளக்காரமாகச் சிரித்து நல்லது என்றான். இரவு முழுவதும் வளர்மதி எதையும் சாப்பிடவில்லை.
சீனக்கூத்து ஆரம்பித்திருந்தது. தம்பியை அப்படி ஏசியிருக்க வேண்டாமோ எனத் தோன்றவும் கண்களை தீவிரமாக அலையவிட்டாள்.
ஒருவன் பழுப்பு நிற தோம்பு போல காட்சியளித்த தோல் கருவியை இரண்டு குச்சிகளால் அடித்துக்கொண்டிருந்தான். மரத்தோம்பைச் சுற்றிலும் அழகான டிராகன் வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
ஊதிவத்திகள் அணைந்திருந்தன. அப்போய் இந்நேரம் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டிருப்பான் என நினைக்கும்போது நிம்மதியாக இருந்தது. அரங்கின் முன் வரிசை காலியாக இருந்தது. அது இறந்த தங்கள் மூதாதையர்கள் வந்து அமரும் இடம் என சீனர்களின் நம்பிக்கை. வளர்மதி ஆகக்கடைசியில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தாள். கடைசிநாள் நாடகம் உணர்ச்சிகரமாக இருக்கும் எனப் பேசிக்கொண்டனர். அவள் அமர்ந்திருந்த இருக்கையின் பக்கத்தில் இருந்த கிழவி ஒருத்தி தான் சின்ன வயதில் இந்தக் கூத்தை பினாங்கில் பார்த்ததாகவும் தான் சாவதற்குள் மீண்டும் பார்ப்பதற்காக பினாங்கிலிருந்து வந்திருப்பதாகவும் கூறினாள்.
கப்பளா அனைத்தையும் நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தான். அவன் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அவ்வளவு பெரிய உருவத்தைத் தூக்கிக்கொண்டு அவனால் எல்லா இடங்களிலும் தளராமல் அலைய முடிவது வளர்மதிக்கு வியப்பாக இருந்தது.
மலவாளியை எடுத்துச்செல்ல அவள் ஒப்புக்கொண்ட பிறகு அதிகாலையிலேயே வீட்டுக்கு வந்து ஒரு நெகிழிப்பை நிறைய ரப்பர் கையுறை கொடுத்தான். “நீ நாளைக்கே தொடங்கலாம். முகத்துக்குத் துணிக்கட்டிக்கொள். நன்றாக கேட்டுக்கொள். தோட்டக்காரன் என்னிடம்தான் பணத்தைக் கொடுப்பான். உன் வாடகை பிடித்தம் போக மீதம் இருந்தால் உனக்கு கொடுப்பேன்” என்றான்.
அவள் ஒன்றும் பேசவில்லை. ஒரு கையுறையை அணிந்துபார்க்க முயன்றபோது நகங்கள் குத்தி உரையின் விரல் முனைகள் கிழிந்தன. கப்பளா கடுப்பாகக் கத்தினான்.
“உங்களுக்கெல்லாம் சோறு இல்லாவிட்டாலும் இதற்கு குறைச்சல் இல்லை. நீ நகங்களை வெட்டதான் வேண்டும்” என்றபோது அவள் நடுங்கிவிட்டாள். துணிக்கையுறை அணிந்துகொள்வதாகக் கூறினாள்.
“துணிக்கையுறையில் மலம் ஒட்டிக்கொண்டால் வீடுவரை வாடை வரும். நீ மலத்துடன் வாழும் ஜென்மம். ஆனால் அது பக்கத்து வீட்டுக்கிழவிக்கு அசௌகரியமாகலாம். பின்னர் வாடகை கொடுப்பதில் முரண்டு செய்வாள் ” என்றான்.
அவள் மற்றுமொரு ரப்பர் கையுறையை பொறுமையாக அணிந்துப்பார்த்தாள். கைகளை மடக்கியபோது முனைகள் கிழிந்தன.
“நகங்கள் மட்டும் வெளியில் தெரிந்தால் பரவாயில்லைதானே” என்றாள். அப்படிச் சொல்வது அவளுக்கு சிறுபிள்ளைத்தனமாக இருந்தது.
கப்பளாவுக்கு வெடுக்கென கோபம் வரும். அவனுக்கு எதையும் நின்று விளக்க பொறுமையில்லை. “நீ இன்னமும் வாளியைப் பார்த்ததில்லை. அது உன் முகத்தைவிட கேவலமாக இருக்கும். அதன் வாடையெல்லாம் உனக்கு கொஞ்ச நாளில் பழகிவிடலாம். ஆனால் தூய்மையாக இல்லாவிட்டால் கம்பத்தில் நோய்கள் தாக்கும். உன் ஒருத்தியால் மற்றவர்கள் பாதிக்க வேண்டுமா?” என்றான்.
“நான் தூய்மையாக கழுவி விடுவேன். மேலும் நகங்களை கழுவுவது எளிது” என்றாள். அப்போதைக்கு கப்பளா அவ்விடத்தை விட்டு போக வேண்டும் என்று மட்டுமே அவளுக்குத் தோன்றியது.
கப்பளாவின் உடல் குலுங்கியது. “இது பேய்களின் மாதம். கொஞ்சம் பிசிறு என்றாலும் உன் உயிருக்கு ஆபத்து வரலாம். இந்த மாதத்தில் தூய்மை மிகவும் முக்கியம். இஷ்டம் இருந்தால் செய். இல்லாவிட்டால் வாடகை பணத்தை வைத்துவிட்டு வேறெங்காவது கிளம்பு” என்றவன் சீனத்தில் கத்திக்கொண்டே சென்றான்.
பேய் மாதம் குறித்து முன்பு அவள் பள்ளித்தோழிகள் கூறியுள்ளனர். ஜூலை மாத முழுக்க நரகத்தின் வாசல் திறக்குமென்றும் அந்த மாதம் மட்டும் நரகத்தின் துன்பங்களில் இருந்து விடுபட்ட மூதாதையர்களின் ஆன்மாக்கள் பூமிக்கு வந்து தாங்கள் விரும்பியதை உண்ணும் என சொல்லியிருந்தாள். அப்படி அவர்கள் வரும்போது அவர்களை அவமதிக்கும் நிகழ்வுகள் ஏதும் நடத்தால் தங்கள் சேஷ்டைகளை காட்ட எல்லா அனுமதியும் உண்டு என்றும் அதனால் அந்த ஒரு மாதம் அவள் அப்பா கடலுக்கு மீன் பிடிக்கக் கூட செல்லமாட்டார் எனக்கூறியிருந்தாள்.
வளர்மதிக்கு வேறு எங்கு செல்வதென்றும் தெரியவில்லை. இதைவிட குறைவான வாடகைக்கு வீடு கிடைக்காது என்றே அப்பா பல மாதங்கள் ஆராய்ந்து இந்த வீட்டைப் பிடித்திருந்தார். தன் வாழ்வில் அருவருப்பைச் சூடிக்கொள்ளும் ஒரு நாளில் மகத்தான ஒன்றையும் இழப்பது கடும் மனவலியைக் கொடுத்தது.
மேடை பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆறு நாட்களாக அதிகமான சிவப்பு வண்ணங்களில் அலங்கரிப்பட்டிருந்ததை மட்டுமே பார்த்தவளுக்கு வெண்மையும் இள நீலமுமாக காட்சியளித்த மேடை தேவலோகம் போலவே தெரிந்தது. கூடுதலாக ஒளியை படரவிட்டு பிரகாசமாக்கியிருந்தனர். தரை முழுவதும் புகை மேய்ந்துகொண்டிருந்தது. கடைவிளக்குகள் தெரு விளக்குகள் என அனைத்தும் அணைக்கப்பட்டு மேடையில் மட்டுமே மொத்த வெளிச்சமும் பிரகாசித்தது. மெல்லிய லியுசின் இசைக்கு நடுவில் அறிவிப்பாளர் சீனத்தில் பேசினார்.
மொழி புரியாவிட்டாலும் வளர்மதி கூத்தின் கடைசிநாள் கதையை விசாரித்து வைத்திருந்தாள். சீனாவின் கடைசி பேரரசான குயிங் முடிவுக்கு வரப்போகிறது. புயியின் அந்த சாம்ராஜியத்தின் கடைசி பேரரசர். ஆனால் அவர் சார்பாக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது பேரரசி டொவேஜர் லோங்யு. சீனாவில் நெடுங்காலம் ஆட்சி செய்த மாபெரும் பேரரசை முடிவுக்குக் கொண்டு வருவதாக பேரரசி டொவேஜர் லோங்யு தன் மக்களுக்கு அறிவிக்கும் தினமது.
அறிவிப்புக்குப் பின் தண்டோரா ஒலி கேட்கவும் வளர்மதியும் அனைவருடனும் சேர்ந்து கைத்தட்டினாள். தனக்குப்பின்னால் ஏராளமான நாற்காலிகள் திடீரென போடப்பட்டு பெரும் கூட்டம் நிரம்பியுள்ளதைப் பார்த்தாள். சிலர் மோட்டாரை நிறுத்திவிட்டு அதிலேயே அமர்ந்திருந்தனர். தம்பியை அதில் தேட முடியாது எனப் புரிந்தது.
அரங்கில் புகை அதிகரித்தது. தங்க நிற வெளிச்சம் பரவியது. அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர். பட்டாசுகள் வெடித்தன. எல்லோரும் எழுந்ததால் வளர்மதியால் எதையும் பார்க்க முடியவில்லை. கூட்டம் அமர்ந்தபோது அரங்கில் நட்சத்திரங்கள் ஆங்காங்கு மின்னின. அரங்கின் மையத்தில் பிரமாண்டமான இருக்கை போடப்பட்டிருந்தது.
ஆரவாரமான கைத்தட்டல்களுக்கிடையே சில பெண்கள் வந்தார்கள். நீண்ட இரட்டை சடைகள், மேல் நோக்கிய புருவங்கள், மை தீட்டிய மான் விழிகள், கண்களைச் சுற்றி மென் சிவப்பும் முகமெல்லாம் அடர்வெள்ளையுமாக அழகிய வேலைப்பாடுகள் கொண்ட விசிறிகளுடன் அவர்கள் மெல்லிய அசைவில் நடனம் ஆடினர். அவர்களின் நீல உடைகளுக்கு ஏற்ற மணியால் செய்த கிரீடங்கள் விளக்கொளியில் ஜொலித்தன. மகாராணியை வரவேற்கும் நடனமது என வளர்மதி அறிந்துகொண்டாள். அவளும் மகாராணியின் வருகைக்கு ஆவலாகக் காத்திருந்தாள். காதைக்கிழிக்கும் இசையின் பின்னணியில் பூனை அடித்தொண்டையில் வெளிப்படுத்தும் கூர்மையான குரலுடன் பெண் ஒருத்தி பாடுவதை நிறுத்தியதும் நடனமும் நின்றது.
கோங் இசை கம்பீரமாக ஒலிக்கவும் மகாராணி மேலும் இரு பாதுகாவலர்களுடன் அரங்குக்கு வந்தாள். தங்க ஜொலிக்கும் உடை. சீனர்களின் பாரம்பரிய தொப்பிக்குமேல் தங்க கிரீடம். அகன்று தொளதொளத்த அங்கியின் கைப்பகுதிகள் கறுமை நிறத்தில் இருந்தன. அது தங்க நிறத்தின் பிரகாசத்தை மேலும் கூட்டியது. பலவண்ண ஒளிகள் அலைபோல மேடையை நிரப்பிக்கொண்டிருக்க மத்தியில் கம்பீரமாக நின்றாள் மகாராணி.
வளர்மதி மூச்சு முட்டுவதுபோல உணர்ந்தாள். அந்தப்பெண் அவள் கனவில் கண்டவள் போலவே இருந்தாள். அத்தனை விளக்குகளையும் அணைத்துவிட்டால் தெரியக்கூடிய கருவடிவம் அவள் வடிவமாகத்தான் இருக்கும் என மனம் அழுத்தமாகச் சொன்னது. வியர்த்தது. மகாராணியின் நகங்களைப் பார்க்க ஆசையெழுந்தது. ராணி அங்கியினுள் கையை மறைத்து வைத்திருந்தாள். அவள் உடலில் முகம் மட்டுமே வெளியே தெரிந்தது. வெண்மையும் இளஞ்சிவப்புமான முகம். இசை நின்றது உணர்ச்சி தழுதழுக்க ராணி பேசத்தொடங்கினாள். கூட்டத்தில் அமைதி. சியொ குழல் மெல்ல பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்தது. அவ்வொலி அவள் துக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக தூண்டுவதாக உணர்ந்தாள். மூச்சை இழுத்து அழுகையை அடக்கிக்கொண்டாள். ஒரு கோங் இசையில் உதவிப்பெண்மணியால் ராணி தலையிலிருந்து கிரீடம் கழற்றப்பட்டது. அரங்கில் பெரும் ஆரவாரம் கேட்டது. அனைவரும் ‘வேண்டாம் வேண்டாம்’ என்பதைப் புரிந்துகொண்டாள். அப்படிச் சொல்ல அவளும் வாயெடுத்தபோது கூச்சமாக இருந்தது.
கிரீடம் இல்லாத மகாராணியின் கண்கள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தாள். முதலில் அதை தன் மனப்பிரம்மை என்றே நினைத்தாள். ஆனால் ராணியின் கலங்கிய கண்கள் அவளையே கூர்ந்துகொண்டிருந்தன. வளர்மதிக்கு பின்கழுத்து சிலிர்த்தது. தலையில் அவள் அம்மா நகத்தைக் கொண்டு கோதுவதுபோல ஒவ்வொரு அணுவும் சிலிர்த்தது. மெல்ல உடலை வல இடமாக அசைத்தபோது மகாராணியின் கண்கள் அவளை விட்டு அகலவில்லை. பெரும் நிசப்தம்.
மகாராணியின் கண்ணீர் திரண்டு திரண்டு பேரழுகையானது. அவர் பேச முடியாமல் கதறியபோது எழுந்த பென்ஹு நரம்புக்கருவி வளர்மதியைத் தூண்டிவிட்டது. கொப்பளித்து வந்தது அழுகை. அங்கு ஒலித்த நூற்றுக்கணக்கான அழுகையுடன் அவளும் இணைந்துகொண்டாள்.
ஒளிவெள்ளத்தில் மகாராணி கையை உயர்த்தியபோது ஒரு கணம் நகங்கள் மின்னியதைப்பார்த்தாள். அழுகை இன்னும் ஓய்ந்திருக்கவில்லை. அவளால் கண்களை அகற்ற முடியவில்லை. மகாராணி அவளை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தாள். அழுகையை நிறுத்தியபோதும் பென்ஹு ஒலித்துக்கொண்டிருந்தது. மகாராணி தன் விரல்களைப் பார்த்தாள். இரு கரங்களிலும் உள்ள மோதிர விரல்களிலும் சுண்டுவிரல்களிலும் தங்க நிற நகக்கவசங்கள் இருந்தன.
“நகம் என்பது அதிகாரத்தின் குறியீடு. இந்த மாபெரும் சாம்ராஜியத்தின் கடைசி ராணியான நான் தங்கத்தால் ஆன நககவசத்தை அணிந்தவள்” பார்வையாளர்களிடம் கைத்தட்டல் ஒலித்தது. “நகம் ராணிகளை வேலை செய்ய விடுவதில்லை. நகங்களைக் காப்பதே ராணிகளின் அதிகாரத்தைக் காப்பதும் ஆகிறது. இனி எனக்கு இந்த நகக்கவசம் தேவையில்லை” என்றவள் தங்க நிறத்தில் ஜொலித்த அதை விரல்களிலிருந்து பிடுங்கி வளர்மதியை நோக்கி வீசினாள். அது அவளை வந்து சேரும் முன் பார்வையாளர்கள் முண்டி இடித்து அதைத் தேடத்தொடங்கினர். “ராணி போகாதீர்கள். நாங்கள் உங்கள் விரல்களில் அதைப் பொருத்துகிறோம்” என நாற்காலிகள் உடைய, குழந்தைகள் அழ, பெண்கள் அலற நகம் விழுந்த இடங்களிலெல்லாம் சிறு அடிதடிகள் நடந்தன. தனக்கு எப்படி மகாராணி பேசுவது புரிகிறது என்பதே வளர்மதிக்கு வியப்பாக இருந்தது. “வேண்டாம் ராணி… வேண்டாம் ராணி” என அழுதபடி சொல்லிக்கொண்டிருந்தாள்.
மெய்காப்பாளனிடம் இருந்த ஒரு பெரிய வாளை எடுத்து ராணி தன் நகங்களை வெட்டிக்கொண்டபோது வளர்மதி அலறினாள். அத்தனை அலறல்களுக்கு மத்தியில் அவளது குரல் கிழித்துக்கொண்டு மகாராணியின் காதுகளில் விழுந்ததாகவே அவளுக்குத் தோன்றியது. கண்ணீர் மல்க வளர்மதியைப் பார்த்துக்கொண்டிருந்தவள் திரை மூடியதும் மறைந்துபோனாள்.
அனைவரும் எழுத்து கைத்தட்டினர். “மகாராணி டொவேஜர் லோங்யு” எனக்கூச்சல் எழுந்தது. சுற்றிலும் மீண்டும் விளக்குகள் எரிந்தன. எல்லோருடைய முகத்திலும் கண்ணீர். பக்கத்தில் அமர்ந்திருந்த சீனக்கிழவி “நான் சாவதற்குள் மகாராணிய பாத்துட்டேன்” என்றாள்.
வளர்மதியால் சரியாக மூச்சுவிட முடியவில்லை. இதயத்துடிப்பு அதிகரித்திருந்தது. அப்படியே அமர்ந்திருந்தாள். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் களைந்தது. நாற்காலியைப் பிடித்துள்ள கைகளை எடுத்து கண்களைத் துடைக்க பயமாக இருந்தது. கைகளை எடுத்தாள் தன்னால் பறந்து செல்ல முடியக்கூடும் என நம்பினாள். அப்போய் எங்கிருந்தோ ஓடிவந்து அவளை அணைத்துக்கொண்டான். கலைந்து செல்லும் கூட்டத்தைப் பார்த்து மென்டரின் மொழியில் ஏதோ கத்திக்கொண்டு குதித்தான். அவளுக்கு எதுவும் விளங்கவில்லை.
கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்த கப்பளா அவள் அருகில் வந்து நின்றான். அவனைப் பார்த்ததும் பயம் வந்தது. எல்லாமே கற்பனை என மூளை சொல்லத்தொடங்கியது. நாற்காலியில் இருந்து எழுந்தால் அவன் தொப்பையில் உரசக்கூடும் என்பதால் அமர்ந்தபடியே தலையைத் தூக்கி பார்த்தாள். இடுப்பில் கைகளை வைத்து அவளைக் கூர்ந்து பார்த்த கப்பளா ஒன்றும் சொல்லாமல் ராணி வீசிய நகக்கவசம் ஒன்றை அவள் சுண்டு விரல்களில் மாட்டினான்.
சொற்கள்
· கப்பளா – தல (தலைவன் என்பதன் பேச்சுவழக்கு)
· பன்டி
– பன்றி
· காயா பாவ் – சீன ரொட்டி வகை
· தங்காய்கள்
– தாய்லாந்து தாயத்து
நீலம், (ஏப்ரல் 2021)