‘நகம்’: விடாமல் விரட்டும் டிராகன்.
நகம் கதையில் அடிநாதமாக இருப்பது கப்பாளாதான். அவன்தான் கதையின் முக்கிய விசை.
அவன் வளர்மதியை அணுக்கமாவும் உன்னிப்பாகவும் அவதானித்து வருகிறான் என்பது கதையின் கடைசி கட்டத்தில் புலனாகிறது. அவள் விரல்களில் ராணி தூக்கி வீசிய நகத்தை அணிவிக்கும்போது அவனின் அந்தரங்கமான வியூகம் புரிபடத் தொடங்குகிறது. இந்தத் திருப்பம் அபாரம்.
கப்பாளா வீட்டு வாடகைக்காக வளர்மதிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறான்.பின்னர் அவளை வீட்டு வாடகைக் கட்டுவதற்காக, மலம் அள்ளும் வேலையைத் திணிக்கிறான். அடுத்து அந்த வேலையில் அக்கம் பக்கத்து வீட்டார் அவளை இழிவாகத் தூக்கி எரிவர் என்பதையும் பூடகமாக தன் உள்நோக்கத்தையும் கூறி,தன்னை நோக்கி அவளை நகர்த்துகிறான். அந்த வேலை எவ்வளவு கீழ்த்தரமானது என்பதையும் சொல்லிச் சொல்லி தன் உளவிருப்பத்தை நோக்கி அவளைத் தள்ளிக்கொண்டே இருக்கிறான். மலம் வாங்குபவன் தன் கையில்தான் கூலியைக் கொடுப்பான். அவள் செய்த வேலைக்கான கூலியை, கப்பாளாவே பார்த்துக்கொடுத்தால்தான் ஆயிற்று என்று வேறு உபரி அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறான். அவன் கொடுக்கும் அழுத்தங்களில் மிக நாரசமானது , நீ ஒத்துக்கொள்ளவில்லையென்றால் உன் உடலைவிற்றுத்தான் சம்பாதிக்கவேன்டும் என்பது. உள்ளபடியே அவளிடம் மலவாளியையும் கையுறையைம் கொடுக்கும் நோக்கம் அவனுக்கு இல்லையென்று தெளிவாகும் கட்டமே நகத்தை அணிவிக்கும் கட்டம்தான். இங்கேதான் கதைக்கான படிமத்தை வாசகன் வளர்ந்துகொள்ள ஏதுவாகிறது. அவன் நெருங்குவதைக் கேட்பதற்கு எந்த உறவுத் துணையும் இல்லாதவள் என்ற தைரியம் வேறு அவனை அவன் நோக்கத்தை நோக்கி அவளை இழுக்க வைக்கிறது. அவளுக்கு இளம்பருவ வயது எனவே, அவளை எளிதில் வளைத்துப் போட்டுக்கொள்ளலாம் என்கிற துணிவு வேறு கப்பாளாவுக்கு.
அவளின் தாய் யாரோடோ ஓடிப்போன பின்னர் அவள் தனக்கு அந்த அவப்பெயர் வேறு விரட்டிக்கொண்டே இருக்கிறது. அந்த இடர் தரும் கவலையைக் கதாசிரியர் ஓரிடத்தில் பொருத்தமான குறியீட்டின் மூலம் சொல்கிறார். வீட்டின் ஓர் இருட்டான மூலைக்கு அவளை அந்த அவப்பெயர் கொண்டுபோய்ச் சேர்க்கிறது என்பதுதான் அது. நிர்க்கதியான, தன்னைப் பின்தொடரும் அம்மாவின் கீழான போக்கு அவளை இருளான பிரதேசம் நோக்கித் தள்ளுவது அவள் மீதான் கழிவிரக்கத்தைக் கோரும் நல்ல இடம்தான்.
தான் தன் அம்மாவைப்போல ஆகிவிடக்கூடாது என்ற வைராக்கியம் அவளை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. இந்தக் காரணமே அவள் அவனிடமிருந்து தப்பிக்க வகைசெய்துகொண்டே இருக்கிறது. ஆனால் அவள் அருதியாய்த் தப்பித்து விட முடியும் என்பது சந்தேகம்தான். பசியால் வேகும் இரண்டு வயிறுகள் அந்தப் பிடிவாத்தைத் தளர்த்திவிடுமே என்று வாசக நெஞ்சம் பதறுகிறது.
இங்கே எனக்கொரு கேள்வி உண்டு இவ்வளவு அந்தரங்கமாகத் தன் இழிநோக்கத்துக்காகக் காய் நகர்த்தி அவளை தன்வசப்படுத்தத் துடிக்கும் காப்பாளா ஏன் பொதுவில் அவளுக்கு நகத்தை அணிவிக்கவேண்டும்?
இத்தனைக்கும் அவன் சுற்றுவட்டார சமூக மதிப்பு உள்ளவன்.
இதற்கும் கதைபோக்கில் ஒரு விடை இருப்பதாக என் விமர்சன மனம் சொல்கிறது. மொழி புரியாவிட்டாலும் அவள் சீனக்கூத்துக் கதையில் ஒன்றித்துவிடுகிறாள். நாடக ராணியின் பதவியிழப்பு மொழியறிந்த பிற ரசிகர்கள் போலவே அவளையும் அலைக்கழித்து அழவைக்கிறது. எங்கிருந்தோ கப்பாளா அவளை அணுக்கமாக அவதானிக்கும் கன்களால் அவள் அகத்தை இழை இழையாகப் படித்துக்கொண்டே இருக்கிறான். எனவே அவனுக்கு உவப்பான நேரம் பார்த்தே அவன் ஆசையை அவளிடம் பூடகாமாக தெரிவிக்கும் துணிவு வந்துவிடுகிறது. அவனிடம் இருக்கும் பணபலமும் அவளை மலத்தின் துர்நாற்றம் போல விரட்டும் ஏழ்மையும் இன்னொரு காரணம் அவன் அவளை நெருங்க.
கதை நெடுக்க கவித்துவமான தருணங்கள் சுவாரஸ்யம் குன்றாமல் வைத்திருக்கிறது புனைவை. அதில் ஒன்றுதான் ‘அவ்வளவு இரைச்சலில் கப்பாளாவிடம் அதைச் சொல்வது மட்டும் அவளுக்கு சாத்தியமெனப்பட்டது என்ற இடம். அவள் வெறுத்த மலம் அள்ளும் அந்த வேலையை, வயிற்றுப் பாட்டுக்காக- வேறு வழியெ இன்றி ஏற்க அவள் படும் மன அவஸ்த்தையை அழகாய்க் காட்டிய இடம் இது.
வாசிக்க வேன்டிய புனைவு.
கோ.புண்ணியவான்.
உங்கள் கதையை வாசித்தேன். அபாரமான கதை. நகம் ஒரு வகையான பேண முடியா ஆடம்பரமாக ஆகும் தருணம் துயர்மிகுந்ததாக இருந்தது. நகங்களை இழப்பது தன்னை இழப்பதற்கு ஒப்பானது வளர்மதிக்கு. தன்னைப் பேணி வெளிப்படுத்திக் கொள்ளுதலை இழந்த பின் எஞ்சுவது நிச்சயம் வெறும் உயிர் வாழ்தலுக்கான குறைந்தப்பட்சச் சாத்தியமே. என்றோ நன்கு பரிச்சயமான சீன இசைக்கருவிகளின் துயரார்ந்த இசையை அளிக்கிறது.
அர்வின் குமார்
அன்பான நவீன். நலம்தானே. சிறுகதையை நீலம் இதழிலேயே வாசித்தேன். அற்புதம். எல்லா மனிதனுக்குள்ளும் அன்பு ஒளிந்துள்ளது. அது வெளிபடும் தருணம்தான் ஒவ்வொருவருக்கும் மாறுகிறது. அந்நிமிடம் மலரும் வினாடி துளியை அழகாக சித்தரித்துள்ளீர்கள். ஒலியும் ஒளியும் மனதை அள்ளி விட்டது. மனம் அதிர அந்நிலத்தில் நான் இருந்தேன். அவ்விடமே கருணையால் நிறைந்திருக்கும். அதுதான் கப்பளாவுக்குள்ளும் நிறைந்தது அல்லவா?
கீதா