அன்புள்ள நவினுக்கு,
நகம் சிறுகதை வாசித்தேன். ஒரு கதையின் தொடக்கப்புள்ளி எங்கிருந்து வருகிறது என யோசிக்கத் தோன்றியது. இக்கதை உங்களுக்கு பேய் மாத காலத்தின் கடைசி நாள் கூத்து என்ற ஒற்றை நிகழ்விலிருந்து வளர்த்தெழுந்திருக்கலாம். ஆனால் ஒரு சிறுகதையின் வெற்றியில் மூன்று முக்கியமான விஷயங்களை இக்கதை கொண்டிருக்கிறது.
ஒன்று அந்த நாடகத்திலுள்ள ராணி வளர்மதியுடன் பொருந்தி போவது. இரண்டு அந்த நகமென்ற படிமம் இரண்டு கதைகளிலும் ஒரு சேர வளர்ந்துவருவது. நாடகத்திலுள்ள நகமென்ற படிமம் ஒரு சிறு விலகலை கதையில் கொண்டிருந்தால் கூட கதை இறங்கி விடும். இது சிறுகதையில் ஒரு கயிற்றை பிடித்து மலையின் உச்சிக்கு செல்லும் மனநிலை ஒரு சிறு விலகல் கூட கதையின் இலக்கிலிருந்து வாசகனை திசை திருப்பிவிடும். இறுதியாக கதை முடிந்த பின் நகமென்ற படிமத்தை பற்பல கோணங்களில் வாசகன் மனதில் வளர்த்தெடுப்பதற்கு சாத்தியமான முடிவு. அதுவும் இக்கதையில் சிறப்பாக அமைந்திருக்கிறது.
கதைக்காக வந்த முதல் கடிதங்களிலேயே அது தெரிகிறது. கதை முடிந்த பின் அதனை விரித்தெடுக்கும் பார்வை இரண்டு கடிதங்களில் வெவ்வேறு கோணங்களில் வெளிப்பட்டிருக்கிறது, எழுத்தாளர் கோ.புண்ணியவானின் கோணம் ஒன்று, கீதாவின் கோணம் ஒன்று. இரண்டு நேர் எதிர் மனநிலையில் கதையை விரித்தெடுக்கும் வாசகனின் சாத்தியங்களுக்கான சான்றுகள். இப்படி பலதரப்பட்ட சாத்தியங்கள் தான் இக்கதையை அழகாக்குகிறதென நினைக்கிறேன்.
மேலும் எழுத்தாளர் கோ.புண்ணியவான் சொன்னது போல் பல இடங்களில் கவித்துவமான மனநிலை வெளிப்படுகிறது, அதன் உச்சமென நான் கருதுவது, அத்தனை சிக்கலுக்கு நடுவிலும், ”நகங்கள் மட்டும் வெளியே தெரிந்தால் பரவாயில்லை தானே” என்பது. மகாராணிக்குள் ஒழிந்திருக்கும் சிறுமியின் வரிகள் அவை.
நன்றி,
நிரஞ்சனா தேவி
நவீன், பயணத்தில் இருக்கிறேன். எனவே சுருக்கமான என் விமர்சனம், முதலில் கதையின் உள்ள இரண்டு முக்கிய அம்சங்களை மட்டும் சொல்லட்டுமா? முதலாவது அதில் உள்ள நேர்மறை நிலை. இப்படியான கதைகள் தமிழில் உண்டு. ஆனால் அது கடும் துக்கத்தில் முடியும். இக்கதை வாழ்வை குறித்த நம்பிக்கையைக் கொடுக்கிறது. இரண்டாவது, நகம் தேவதைக்கும் பிசாசுக்குமாக மாறி மாறி அணிகலனாகவும் ஆயுதமாகவும் மாறும் காட்சி. அபாரம். ஆனால் கதையில் எனக்கு சில ஏமாற்றங்கள் உண்டு. நீங்கள் அதிகமாக கதையில் தலையீடு செய்துள்ளீர்களோ என நினைக்க வைக்கிறது. வாசகனான நான் நுழைந்து அடையும் இடம் இக்கதையில் குறைவு என்பதே என் கருத்து.
ராம்