அன்புள்ள நவீனுக்கு,
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
அம்மாவைப் போல நகங்களில் சாயமிடவும், நன்றாகப் படித்து குளிரூட்டப்பட்ட அறையில் குமாஸ்தா வேலை செய்யவும் ஆசைப்படுகிறாள் வளர்மதி. துரத்தும் வாழ்வு கையறு நிலைக்கு இட்டுச் செல்கிறது.
மலவாளியை அள்ளும் இக்கட்டிற்குத் தள்ளினாலும் அவள் முன்னோடி அம்மா போல பொறுப்பை உதிர்த்து விட்டு அங்கிருந்து ஓடவில்லை. குழந்தைமை இழக்காத அப்போயின் மீதான அன்புப் பிடிப்பினால், தான் விரும்பி வளர்த்த நகங்களை இழந்து, ஆகக் கடினமான வேலையை செய்து தன்னை அந்த சூழலில் தன்னை தகவமைத்துக் கொள்கிறாள்.
‘நகம் என்பது அதிகாரத்தின் குறியீடு’ என்னும் வரிதான் என்னை கதையை மீள வாசிக்கத் தூண்டியது. நாயின் கண் பீழையைத் தேய்த்து பேய்களை பார்க்க முடியும் என நம்பும் வர்ணனையும் என்னை கவர்ந்து. வளர்மதி பொது கழிவறையிலிருந்து வாளியை அள்ளும் தருணங்களின் சித்தரிப்பு அப்பட்டமாக இரக்கமின்றி இருந்தது.
படையலை பேய்கள் இறங்கி உண்ணுவதாக நம்பப்படும் சீனர்களின் திருவிழாவின் விவரனை கதையின் பின்புலமாக உறுத்தாமல் ஒன்றி அமைந்திருந்தது. வானில் இருந்து இறங்கிய சீன பூதங்களில் ஒருவனாக தோன்றுமளவிற்கு கப்பளாவின் உருவ வர்ணனை இருந்தது.
மலவாளி அள்ளும் வேலையை
வளர்மதிக்கு கொடுத்தாலும், சம்மதித்தபின் அவளை முற்றாக ஒதுக்கி விலக்காமல்,
கையுறையை வாங்கித் தந்து, தூய்மையாக இருப்பதற்கு வெறுப்புமொழியில்
ஆலோசனை கூறுமிடம் கப்பாளாவை துளி கருணை கொண்டவனாகக் காட்டியது.
கப்பளாவின்
மனமாற்றத்திற்கான காரணம் என்ன என பல கோணத்தினாலான வாசக கற்பனைக்கு
விடப்பட்டிருந்தாலும். கதையின் முடிவு இனிமையான உணர்வினையையே எனக்குத்
தந்தது.
அன்புடன்,சிவமணியன்
ஒரு முறைக்கு இரு முறை வாசித்தேன்.கதையொட்டம் படிப்பதற்குச் சுவாரிசத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். வளர்மதி வாழ்வில் நேர்ந்த அவலங்களைப் படிக்கும் போது மனம் துயரத்துக்குத் தள்ளப்படுகிறது. தந்தையை விபத்தில் பறிக்கொடுத்து, தாய் பிள்ளைகளைக் கைக்கழுவிய நிலையையும் சகித்துக்கொண்டு பள்ளிப்பருவத்தையும் தொடரமுடியாமலும் தம்பியை வளர்க்க தன் ஆசைகளையும் அவிழ்த்து வாழ்க்கை போரில் தத்தளிக்கிறாள். தனக்குப் பிடித்தமான நகத்தை வளர்ப்பதிலும் பராமரிபிலும் காட்டும் ஆர்வம் ஒரு பெண்ணுக்குண்டான இயல்பு. ஆனால், அவள் நகத்திற்குக் காட்டும் அக்கறை அதன் மீதுள்ள ஈர்ப்பை எழுத்தாளர் விவரித்த போக்கு அருமை.
நான் இடைநிலை பள்ளிக்குப் போகும் வழியில் சீனக் கடைகளுக்கு முன் மேடையமைத்து பேய் மாதக் கொண்டடத்திற்கு ஏற்பாடுகளைப் பார்த்ததுண்டு. கதையில் வருவதைப் போல் காகிதத்தில் வீடு, மகிழுந்து, ஆடைகள் போன்றவற்றை வைத்திருப்பார்கள். கதையைப் படிக்கும் போது அத்தருணம் என் நினைவுக்கு எட்டியது எனலாம். அந்நிகழ்வை செய்வதற்கான காரணங்களைத் தெளிவாக வர்ணித்து எழுதியுள்ளார்.
கப்பளாவின் பேச்சிகளுக்கு இடையிலும் அவள் அயராது உழைத்தும் வீடு வாடகைப் பணத்தைக் கொடுக்க இயலாமல் பல இன்னல்களில் அவதியடைகிறாள். இறுதியாக மல வாளியை எடுக்கும் வேலைக்கு ஒப்புக்கொள்ளும் காட்சியை எழுத்தாளர் விவரித்த விதம்படிப்போரை நெகிழவைக்கும் தருணத்தை வெளிபடுத்துகிறது. என்னதான் அந்த வேலைக்கு ஒப்புக்கொண்டாலும் தன் நகத்தின் மீதிருந்த ஆசை அவளை விடவில்லை என்றே கூறலாம். இறுதியில் அவள் கனவில் கண்ட நகம் அவள் கை வந்து அடைகிறது.
புஸ்பவள்ளி