சிறுகதை: வைரம்

“வைரத்த தோண்டி எடுத்துடலாமா?” எனக் குமாரசாமி கேட்டபோது ஒரு ஜோடி மஞ்சள் பறவைகள், விருட்டென கொன்றை மரத்திலிருந்து பறப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு நேரம் அவை அங்கு இருந்ததை நான் கவனிக்கவில்லை. அது சித்திரை மாதம். மரத்தை மூடியிருந்த கொன்றை மலர்களுக்குள் அவை மறைந்து இருந்திருக்க வேண்டும்.

“ஒன்னைய தான்டா கேக்குறேன் லச்சு”. 

குமாரசாமியின் முகத்தைப் பார்த்தேன். பார்வையில், சிரிப்பில், அசைவில் என எல்லாவற்றிலும் கிண்டல் தெரிந்தது. அதை நான் தவிர்க்க விரும்பினேன். அவன் எதைச் சொல்கிறான் என்று நான் அறிவேன். கோலி குண்டைப் புதைத்து வைத்தால், சில வருடங்களில் வைரமாகிவிடும் என சிறுவனாக இருக்கும்போது நம்பியது அப்படி ஒன்றும் கேலிக்குரியதல்ல என்று தோன்றியது.

காற்று வீசவும் கொன்றை மலர்கள் மழை போல கொட்டத் தொடங்கின. ஆசிர்வதிப்பதுபோல பொன்னிதழ்கள் எங்கள் தலைகளில் ஒன்றிரண்டு உதிர்ந்தன. தரையெங்கும் பொன்.

குமாரசாமி எதையும் ரசிக்கவில்லை எனத் தெரிந்தது. அவன் நிலம் என்பதால் பழகியிருக்கலாம்.

அவன் அப்பா விட்டுச்சென்ற நிலத்தை நன்றாகவே பராமரித்திருந்தான். பெரிய மர வீட்டுக்கு பின்னால் வாழை மரங்கள் செழித்துக்கிடந்தன. இடது பக்கம் முழுவதும் பண்டான் தென்னைகளை நட்டிருந்தான். அவை ஆறடிக்கு மேல் வளராது. அதில் காய்க்கும் இளநீருக்கு சந்தையில் விலை அதிகம். தூரத்தில் சிவந்த கொழுந்திலைகளைப் பார்த்து மாமரங்கள் இருப்பதையும் கண்டுகொண்டேன். உண்மையில் அவ்விடமே கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அரச மரத்து வேர்கள், மர வீட்டில் பழுதை ஏற்படுத்தியிருந்ததால் சீரமைப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தன.

எனக்கு அந்த அரச மரத்தைத் தெரியும். அது குமாரசாமியின் வீட்டிலிருந்து குறைந்தது நூறு மீட்டர் தொலைவில் இருக்கும். ரப்பர் மரங்களில் இலை உதிரும் பருவத்தில் அந்த அரச மரமும் இலைகளை உதிர்ப்பதைப் பாத்துள்ளேன்.

“முன்ன சித்திரையிலதான் ரப்பர் மரமும் பூக்கும். அது இப்படி பவுனாட்டம் நெறக்காது. ஆனா தோட்டம் முழுக்க பவுனோட வாசம் வீசும்,” என்றேன். தலையில் விழுந்த பூவை விரல்களால் அலைந்து எடுத்தபோது ஒன்றிரண்டு நரைகளும் உடன் வந்தன. குமாரசாமிக்கு தலை முழுவதுமே நரைத்திருந்ததே தவிர என்னைப்போல பின் வழுக்கை விழவில்லை.மேலும் முதுமையிலும் அவன்  கம்பீரமாகத் தெரிந்தான். தொப்பையற்ற உடல். நிமிர்ந்த முதுகு. செல்வம் அவன் தோலை வெளுக்க வைத்திருந்தது.

“பவுனுக்கு எங்கேருந்துடா வாசனைய கண்டுபிடிச்ச நீ?” என்றான்.

“அப்படி இருந்தா… அது கித்தா காட்டு வாசமாட்டந்தான் இருக்கும்,” என்றேன்.

“பேச்ச மாத்தாத நீ… வைரத்த தோண்டி எடுப்பமா?” என மறுபடியும் அங்கேயே வந்து நின்றான்.

நான் குமாரசாமியைச் சந்தித்திருக்கவே கூடாதோ என்று நினைத்துக்கொண்டேன். அவன் இன்னும் மாறவில்லை. என் உடல் தன்னிச்சையாகக் குறுகுவதை உணர்ந்தபோது வலுக்கட்டாயமாக நிமிர்ந்து நிற்க முயன்றேன்.

மகனின் கல்யாணப் பத்திரிகை வைக்க, பெராங் தோட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்களைத் தேடி, மாத்தா மலிவு அடுக்குமாடி வீடுகளில் அலைந்தபோது என்னை அடையாளம் கண்டுகொண்டவர்கள் குமாரசாமியைப் பற்றியும் சொன்னார்கள். “பொண்டாட்டி, பிள்ளையோட அவங்கப்பன் நெலத்துல பங்களா ஊடு கட்டி வசதியா இருக்கான். மறக்காம பத்திரிகை வையி!” என ஒரே திசையில் கையைக் காட்டினார்கள். என்னதான் நடந்துவிடும் என வந்தது தவறாகப் போய்விட்டது. அல்லது நான் இந்தச் சந்திப்பை விரும்பியே நிகழ்த்தினேனா?

நானும் அவனும் இந்த பெராங் தோட்டப்பள்ளியில் ஒன்றாகப் பயின்றோம். பயின்றோம் என்றால் அவன் படித்தான். நான் அவனிடம் படித்துக்கொண்டேன். எனக்கு படிப்பு வராமல் முரண்டுபிடிக்கும். குறிப்பாக கணக்கு ஆமணக்குபோல கசக்கும். அதனால் என் அப்பா பள்ளி முடிந்த பிறகு குமாரசாமியின் வீட்டுக்குச் சென்று பாடம் படிக்கச் சொல்வார். அவன் எனக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதால் மாதம் தோறும் ஐம்பது காசை அவனுக்கு குருதட்சணையாகக் கொடுத்தார். வெளியில் டியூசன் சென்டர்களில் சேர்த்தால் பத்து ரிங்கிட் வரை செலவாகும் என்பதால் இந்த உத்தி. மாதம் தோறும் அவர் சாராயம் குடிப்பதற்குப் பணத்தை ஒதுக்கிவிட்டு இப்படிக் கட்டுசெட்டாக குடும்பத்தை நடத்தினார். அம்மா, அப்பாவின் காலடியிலேயே அடங்கிக் கிடப்பவர். போதையில் அப்பா குத்துமதிப்பாக கையை வீசி கொடுக்கும் அடியெல்லாம் விரயமாகாமல் அம்மாவே குறிபார்த்து பணிந்து பெற்றுக்கொள்வார்.

எப்படியாயினும் அப்பா எனக்குச் செய்த ஒரே நன்மை லட்சுமணன் என்ற பெயரை இட்டதுதான்.

குமாரசாமிதான் வகுப்பிலேயே கெட்டிக்காரன். பரீட்சையில் அவன் பக்கத்தில் அமர பலருக்கும் ஏக்கம் இருந்தது. ஆனால் ஆசிரியர்கள் எழுத்து வரிசையின் அடிப்படையில் அடுக்கும்போது எல்லாமே தலைகீழாக மாறியிருக்கும். கயல், கீர்த்தனா, குமாரசாமி, குட்டப்பன், கேசவன், கோவலன், என்ற ‘கே’ வரிசைப் பெயர்கள் எல்லாம் அடுக்கப்பட்டு ‘எல்’ எழுத்தில் என் பெயர் தொடங்கும்போது நான் சரியாக அவன் பக்கத்தில் அமர்த்தப்பட்டிருப்பேன். உண்மையில் அந்த வகுப்பில் ‘எல்’ எழுத்தில் தொடங்கும் பெயர் எனக்கு மட்டுமே இருந்தது.

குமாரசாமியிடம் டியூசன் படிப்பதில் உள்ள நன்மையும் அதுதான். பரீட்சையின்போது நான் தேர்ச்சி பெரும் அளவுக்கு பதில்களை ரகசியமாகக் காட்டிவிடுவான். பொதுவாக நாற்பது கேள்விகளில் இருபதுக்குச் சரியாக பதில்களைக் கருமையாக்கிவிட்டாலே தேர்ச்சி அடைந்துவிட்டதாகப் பொருள். நான் குமாரசாமியின் வலது பக்கம் அமருவதால் இருபத்து ஒன்றிலிருந்து நாற்பது வரை அனைத்துக்குமே சரியான விடையைக் கருமையாக்கியிருப்பேன். திருத்தப்பட்ட என் விடைத்தாள் வலது பக்கம் முழுக்க சரியாவும் இடது பக்கம் முழுக்க தவறாகவும் காட்சியளிக்கும்.

நான் தேர்ச்சி அடைவதன் மூலமே குமாரசாமி தான் ஒரு நல்லாசிரியர் எனும் தகுதியை என் அப்பாவிடம் பெற்றிருந்தான். “மூள இல்லாத எம்புள்ளயே ரெண்டாங் கிராணி மவனால பாஸாயிட்டான்!”  என அவன் புகழைத் தோட்டம் முழுவதும் பரவச் செய்தார். எனவே டவுனில் உள்ள டியூசன் சென்டர்களில் பயின்ற சில லயத்து பையன்கள் குமாரசாமியிடமும் படிக்க வந்தார்கள். எல்லாரிடமிருந்தும் மாதம் தோறும் அவனுக்கு ஐம்பது காசுகள் கிடைத்தன.

பணத்தைத் தவிர குமாரசாமிக்கு எங்களைப் போன்றவர்களால் மேலும் சில நன்மைகள் இருந்தன. அவன் எங்களுக்குக் குருவாகிவிட்டபடியால் அவன் ஏவும் வேலைகளைத் தட்டாமல் நாங்கள் செய்ய வேண்டும். அவன் காலணியைத் துவைத்துக்கொடுப்பது, சைக்கிளைக் கழுவிக்கொடுப்பது, கான்டீனில் அவன் சொல்லும் உணவை வாங்கி வந்து மேசையில் வைப்பது, பென்சில்களைத் திருகிக்கொடுப்பது, அவனது வீட்டுப்பாடங்களை அவன் சொல்லச் சொல்ல அழகான எழுத்தில் எழுதுவது என பொறுப்புகள் அதிகரித்திருந்தன. இதனால் கொஞ்ச நாட்களிலேயே சில நண்பர்கள் கழன்று கொண்டனர். இரண்டாம் கிராணி மகன் என்பதால் அவனைக் கண்டிப்பதற்கு லயத்து பெற்றோர் எவருக்கும் தைரியம் வரவில்லை. கடைசியில் என்னுடன் மாடசாமியும் கந்தனும் மட்டும்தான் எஞ்சினர். இறுதி ஆண்டுத் தேர்வு நெருங்கியதால் நான் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன்.

அவன் வீட்டு வாசலில் பாய் விரித்து அதில் எங்களை அமர வைத்து பாடம் சொல்லிக்கொடுப்பான். அவனுக்கான ஒரு பிரத்தியேக முக்காலி இருந்தது. அதில் அவன் அமர்ந்தவுடன் நாங்கள் எழுந்து நின்று ‘வணக்கம் ஐயா’ என்போம். கொஞ்ச நாட்களில் அவனுக்கு அது போதவில்லை என்று தோன்றியதால் ‘ஓம் நன்றாக குரு வாழ்க! குருவே துணை!’ என்று கூப்பிய கரங்களுடன் கூறும்படி கட்டளையிட்டான். அப்படியே செய்தோம். அதன் பிறகே அவன் பாடத்தைத் தொடங்குவான்.

பாடம் என்றால் ஆசிரியர் அன்று பள்ளியில் சொல்லிக்கொடுத்ததை அப்படியே அச்சுப் பிசகாமல் ஒப்புவிப்பான். அவனால் எப்படி அனைத்தையும் இம்மி பிசகாமல் நினைவிலிருந்து மீட்டுச்சொல்ல முடிகிறது என்பது ஆச்சரியமாக இருக்கும். பாடத்தை ஒப்புவித்து முடிந்தவுடன் அவன் செய்யும் அன்றைய வீட்டுப்பாடங்களை பார்த்து காப்பியடித்துச் செய்ய எங்களை அனுமதிப்பான். எந்த ஆசிரியர் என்ன பாடம் கொடுத்தார் என்பது அவன் நினைவில் தெளிவாக இருக்கும் என்பதால் அவனைப் போலவே எங்களுக்கும் பள்ளியில் நற்பெயர் கிடைத்தது. ஆசிரியரிடம் அடிவாங்குவது குறைந்துபோனது.

எங்கள் வீடு மேட்டு லயத்தில் இருந்தது. குமாரசாமியின் வீடு கிராணிமார்கள் இருக்கும் இறக்கமான பகுதியில் சுற்றிலும் வேலிகள் போடப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது. என் வீட்டிலிருந்து அவன் வீட்டைப் பார்க்கலாம். சைக்கிளை, சரிந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் விட்டால் பெடலை மிதிக்காமலேயே அவன் வீட்டின் முன்  அதுவாகவே சென்று நின்றுவிடும். மீண்டும் ஏறிச்செல்வதுதான் பெரும்பாடு. சில சமயம் சைக்கிளை மிதிக்காமல் தோளில் சுமந்துகொண்டு ஏறுவேன்.

நான் குமாரசாமியின் வீட்டுக்குப் படிக்க மட்டும்தான் சென்றேன் எனச்சொல்ல முடியாது. மாடசாமியும் காந்தனும் இணைந்த பின்னர் எங்கள் கவனம் மெல்ல மெல்ல விளையாட்டை நோக்கிச் சென்றது. முதலில் கல்லாங்கா, பல்லாங்குளி, நொண்டி என ஆரம்பித்தோம். குமாரசாமி எதிலும் கலந்துகொள்ளாமல் வேடிக்கை மட்டுமே பார்ப்பான். சில சமயம் ஆங்கிலக் கதை புத்தகம் எதையாவது எடுத்து மடியில் வைத்தபடி அமர்ந்திருப்பான். நாங்கள் அவனைப் பலமுறை விளையாட அழைத்தும் “எல்லாமே பொம்பளப் புள்ளைங்க வெளையாட்டு” எனக் கேலி செய்து விளையாட்டில் சேர மறுத்துவிட்டான்.

அப்படித்தான் கோலி குண்டுகள் எங்கள் விளையாட்டில் இணைந்தன.

ஒருநாள் மாடசாமி காற்சட்டை பை நிறையக் கோலி குண்டுகளை எடுத்துவந்து “இன்னைக்கு ஆம்பள புள்ளைங்க வெளையாட்டு ஆடலாம்,” என்றதும் எங்கள் மத்தியில் உற்சாகம் தொற்றியது. எங்கள் யாரிடமும் கோலி குண்டுகள் இல்லை. அழகான சிறிய கண்ணாடிக் குண்டினுள் நீலம், சிவப்பு, பச்சை, ஊதா என மூவிதழ் பூ ஒன்று மலர்ந்து கிடப்பதை ஆச்சரியமாகப் பார்த்தோம். குமாரசாமியின் போதனையின்போது கூட  அவனது சிறிய அசைவில் குண்டுடன் குண்டு உராய்ந்து எழுப்பும் ‘கிர்க்க்’ என்ற ஒலி விளையாடும் ஆர்வத்தைத் தூண்டுவதாய் அமைந்தது.

கோலி குண்டு விளையாட்டு எங்கள் மத்தியில் சாதாரணமாகத்தான் தொடங்கியது. மாடசாமியே அதன் விதிமுறைகள் அனைத்தையும் அறிந்து வைத்திருந்தான். எனவே அவனே விளையாட்டை வழிநடத்துபவனாகவும் இருந்தான். அது குமாரசாமிக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. “இங்க நில்லு… இப்படி வீசு” என்று சாதாரணமாகச் சொல்லும்போதெல்லாம் “என்னா வாத்தியார மெரட்டுற?” எனக் கத்தினான். அதற்காகவே மாடசாமி விளையாட்டை மென்மையாக நடத்திவைக்கும்படி ஆனது.

ஒரு சிறிய வட்டம் போட்டு, அதன் பக்கத்திலேயே நீண்ட கோடு ஒன்றைக் கிழித்தான். அந்தக் கோட்டிலிருந்து நான்கு அடி வைத்து மீண்டும் ஒரு நீண்ட கோடு போட்டான். வட்டத்தினுள் எட்டுக் குண்டுகளை வைத்தவன், அருகில் இருந்த கோட்டிலிருந்து தொலைவாக உள்ள கோட்டுக்கு அவரவருக்கு வழங்கப்பட்ட குண்டுகளை வீச வேண்டும் என்றான். குண்டு கோட்டைத் தாண்ட வேண்டும். ஆனால் கோட்டுக்கு அருகாமையில் இருக்க வேண்டும். கோட்டின் மீதோ கோட்டைத்தாண்டி அதன் அருகாமையிலோ குண்டை வீசுபவர்களே முதல் விளையாட்டாளர். குண்டு தொலைவாகச் செல்ல செல்ல இரண்டாம், மூன்றாம் போட்டியாளர் தகுதி பெறுவார்கள்.

நான் வீசிய குண்டு, கோட்டுக்கு முன்பே விழுந்ததால் நான் நான்காவது போட்டியாளன் ஆனேன். குமாரசாமி வீசிய குண்டு கோட்டைத் தாண்டி நெடுதூரம் போய் விழுந்ததும் அவன் மூன்றாவது போட்டியாளன் என அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். அவனைச் சமாதானம் செய்யும் வகையில் முதல் போட்டியாளராக ஒரு மனதாக நியமித்தோம். ஆயிரந்தான் இருந்தாலும் அவன் எங்கள் ஆசான் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருந்தது.

முதல் போட்டியாளனாக குண்டை வீசினாலும் அவனால் குண்டில் குறிவைத்து அடிக்க முடியவில்லை. ஆக்ரோஷமாக அவன் தாக்கிய குண்டுகள் எல்லாம் மண்ணை முத்தமிட்டு அங்கேயே சுழன்றன. மேலும் கோலி விளையாடுபவர்கள் விரலை மடித்துப் பயன்படுத்தும் உத்தியெல்லாம் அவனுக்கு வசப்படாமல் போனது. குளத்தில் கல் எறிவது போல கட்டை விரலிலும் ஆள்காட்டி விரலிலும் கோலியைப் பிடித்து வீசுவது வேடிக்கையாக இருந்தது.

இரண்டாவது போட்டியாளனான மாடசாமி விரைவாக எல்லா குண்டுகளையும் அடித்ததோடு விளையாட்டாளர்களின் குண்டுகளையும் அடித்து வெளியேற்றினான். குமாரசாமிக்கும் அது நிகழ்ந்தபோது கடுமையான கோபம் அடைந்தான்.

“இது என்னோட வீடு… என்னையவே வெளிய போவச் சொல்லுறியா?” எனக் கத்தினான். நாங்கள் வெளியேறச் சொன்னது விளையாட்டிலிருந்து மட்டுமே எனச் சொல்லிப் புரியவைக்க முயன்றோம். ஆனால் அப்போது எங்களுக்கு ஏனோ சிரிப்பு வந்தது. சிரிக்கச் சிரிக்க அது தன்னிச்சையாக கூடிக் கொண்டே சென்றது. நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம். அது திரண்டு குமாரசாமியின் பக்கம் திரும்பியது. குமாரசாமி கத்தினான். தரையில் இருந்த குண்டையெல்லாம் பொறுக்கி புதர்களை நோக்கி வீசினான். எங்கள் முகத்தில் அப்போதும் சிரிப்பு இருந்தது. காந்தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டுச் சிரித்தான். மறுநாளில் இருந்து மாடசாமி டியூசனுக்கு வரக்கூடாது என குமாரசாமி சொல்லிவிட்டான். மாடசாமி வராத இடத்தில் தனக்கென்ன வேலை என்பதுபோல காந்தனும் வருவதை நிறுத்திக்கொண்டான்.

மறுபடியும் நானும் குமாரசாமியும் மட்டும் படிக்க ஆரம்பித்தோம். முன்பிருந்த உற்சாகம் அகன்று இறுக்கமாக இருந்தேன். அப்போதுதான் குமாரசாமி மீண்டும் குண்டு விளையாடும் ஆசையைத் தூண்டினான்.

“அவனுங்க எல்லாம் வேணாம். நாம ரெண்டு பேரு மட்டும் வெளையாடுவோம்,” என்றான். எனக்கு இருவர் மட்டும் குண்டு விளையாடுவதில் அவ்வளவு விருப்பம் இல்லை. அது மிகுந்த சோர்வளிப்பது. குமாரசாமியின் மிரட்டல்களுக்குக் கட்டுப்பட்டு விளையாடுவது இன்னும் எரிச்சல் கொடுக்கக்கூடியது என்பதால் தயங்கினேன்.

“ஆனா ஒரு கண்டிஷன்” என்றவன் வீட்டினுள் ஓடினான். ஒரு சிறிய பிளாஸ்டிக் குடுவையை எடுத்து வந்தான். சுற்றுமுற்றும் ரகசியமாகப் பார்த்தவன் “இத பாத்தியா…” என குடுவையைத் திறந்து காட்டவும் எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. அதனைக் கைகளில் எடுத்து காட்டியபோது ஆச்சரியமாக இருந்தது. நான் அப்படியான குண்டை அதுவரை பார்த்ததில்லை. கண்ணாடி குண்டுகளுக்குள் மூவிதழ்வெள்ளிப்பூ ஒன்று மின்னியது.

“நெசமான வெள்ளியா?” என்றேன்.

“பின்ன…” என்றவன் சட்டென அதனைக் குடுவையில் போட்டு மூடினான்.

“இன்னோரு தடவ காட்டேன்,” என்றேன்.

“ஒரு தடவதான். இது எங்க அப்பாவோடது. குண்டுனா இந்த மாதிரி குண்டுல வெளையாடனும். இந்த வெள்ளிக் குண்டுல வெளையாடுறதுதான் பவரு. இதுல வெளையாண்டா எல்லாத்தையும் தோக்கடிச்சிருவேன். இந்த மாதிரி குண்டு அவனுங்க கிட்ட இருக்கா…?”  என்றான்.

“இல்ல!”

“அப்ப யாரு பெருசு?” என்றான்.

“நீதான்!” என்றேன்.

அவனுக்கு அது மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

“நல்லா குண்டு வெளையாடுறது வெளையாட்டில்ல… நானெல்லாம் இந்த மாதிரி வெள்ளிப் பூ உள்ள குண்டு வச்சிருக்கறவனோடதான் வெளையாடுவேன். ஒங்கிட்ட இருந்தா எடுத்துவா… வெளையாடலாம்!” என்றான்.

எனக்கு அது அதிக உற்சாகத்தைக் கொடுத்தது. குமாரசாமியை வெகு எளிதில் என்னால் தோற்கடித்துவிட முடியும். அப்போது என்னிடம் இரண்டு வெள்ளி குண்டுகள் இருக்கும். ஆனால் அதற்கு முதலில் ஒரு வெள்ளி குண்டு தேவையாக இருந்தது.

நான் மாடசாமியிடம் வெள்ளிக் குண்டு பற்றி கூறினேன். அதெல்லாம் உண்மையான வெள்ளி இல்லை என்றும் வண்ணக்கலவையால் ஆனது என்றும் கூறினான். ஆனால் அவனிடம் அப்படியான குண்டு ஒன்றுகூட இல்லாதது அவன் பேச்சில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. பின்னர் அவனே குண்டு விளையாடும் பக்கத்து தோட்டத்து நண்பர்களிடம் அழைத்துச் சென்றான். யாரிடமும் வெள்ளி நிற குண்டு இருக்கவில்லை. சிலர் அப்படி ஒன்றைப் பார்த்ததுகூட இல்லை என்று கூறினார்கள். மாடசாமி அதுபோன்ற குண்டுகள் நிச்சயம் கோலாலம்பூர் டவுனில் கிடைக்கும் என்றான். எனக்கு அவன் பேச்சில் நம்பிக்கை எழவில்லை. மேலும் கோலாலம்பூர் நாங்கள் இருந்த பெராங் தோட்டத்தைவிட்டு வெகுதூரத்தில் இருந்தது.

வெள்ளிக் குண்டு இல்லாமல் குமாரசாமியைச் சந்திக்கச் சென்ற ஒவ்வொரு மதியமும் எனக்கு அவமானகரமான பொழுதாகவே முடிந்தது. “குண்டு கெடைச்சாதான் கூட்டாளி; இல்லனா நான் ஒனக்கு வாத்தியாரு,” என வேலைகளை ஏவுவான். அவன் தோற்றபோது நாங்கள் சிரித்ததை அவன் மறந்திருக்கவில்லை என்பது பேச்சில் வெளிபடும். மேலும் மேலும் ஆழமாக அந்தச் சிரிப்பை விதைத்து வைத்து கசப்பை மட்டுமே காட்டுவான். ஓரிரு முறை எனக்குப் பாடம் ஏறவில்லை என பிரம்பால் தொடையில் அடிக்கவும் செய்தான். அவனது எல்லாச் செயல்களிலும் கோபம் மட்டுமே இருந்தது. அவன் இட்ட வேலைகளைச் செய்தே நான் அதிகம் சோர்ந்திருந்துவிடுவேன். படிப்பது எதுவும் நினைவில் தங்காது. அப்பாவிடம் எது சொன்னாலும் அடிவிழுந்தது.

இது தொடர்ந்த மூன்றாவது வாரம் நான் அவன் வீட்டுக்குச் சென்றபோது என் முகத்தில் இருந்த மலர்ச்சியில் அவன் எதையோ புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

“குண்டா?” என்றான்.

நான் சிரித்தேன்.

“வெள்ளி குண்டா?” என்றான். அவன் கண்களில் அத்தனை அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அதுவரை நான் பார்த்ததில்லை.

“இல்ல!” என்றபோது. கொஞ்சம் நிதானமானான். “ஆனா இது வேற!” என என் காற்சட்டைப் பையில் இருந்து எடுத்துக்காட்டினேன்.

“இதென்னா கறுப்பு பூ? வெள்ளிக் குண்டு இருந்தாதான் கூட்டாளி,” என்றான். முகத்தைச் சுழித்தான்.

“கறுப்பு பூ குண்ட நீ பாத்துருக்கியா?” என்றேன்.

“கறுப்பெல்லாம் யாரு வச்சிருப்பா… உவேக்!” அருவருப்பாக முகத்தை வைத்துக்கொண்டான்.

“இது கறுப்பில்ல,” என்றேன். “என்னோட வா!” என அவன் வீட்டை ஒட்டி இருக்கும் பழைய பொருட்களை வைக்கும் அறைக்குள் அழைத்துச் சென்றேன். அது நல்ல இருளான அறை. அருகில் இருக்கும் நபர்கூட கண்ணுக்குத் தெரியமாட்டார்.

“இப்ப பாரு மேஜிக்க,” என்று அந்தக் குண்டை நோக்கி கையுடன் கொண்டு வந்திருந்த கைவிளக்கை அடித்தேன். குண்டின் உள்ளே இருந்த கறுப்பு நிற பூ சட்டென தீயாகச் சுடர்ந்தது. தீ மெல்ல மெல்ல தங்க நிறமாக மாறியது.

நான் விளக்கை அனைத்துவிட்டு வெளியே வந்தபோது, குமாரசாமி முகத்தைப் பார்த்தேன். தொங்கிக் கிடந்தது. “இதேது ஒனக்கு?” என்றான்.

“அம்மா கொடுத்தாங்க… எங்க சாமி மேடையில துன்னூருல போட்டு வச்சிருந்தாங்க,” என்றேன்.

“அம்மாவுக்கு ஏது?”

“அப்பா கொடுத்ததாம்”

“அப்பாவுக்கு ஏது… திருடுனாரா?”

எனக்குக் கோபம் வந்தது. “அப்பா முன்ன குண்டு வெளையாடி ஜெயிச்சதாம்!” என்றேன்.

“எனக்குக் கொடுப்பியா?” என்றான்.

“என்னோட வெளையாடி ஜெயிச்சிக்கோ” என்றேன்.

“அப்படினா படிப்புச் சொல்லித் தரமுடியாது. பரீட்சையில எதையும் காட்ட முடியாது” என்றான். வெகுவிரைவில் இறுதியாண்டுத் தேர்வு நெருங்கியிருந்தாலும் நான் அவனுடன் விளையாடி வெள்ளி குண்டை ஜெயிப்பதில் பிடிவாதமாக இருந்தேன். மேலும் அம்மா அதைச் சாமி குண்டு என்றும், அப்பாவுக்கு தெரிவதற்குள் வீட்டுக்கு எடுத்து வரவும் சொல்லியிருந்தார்.

அப்போதுதான் குமாரசாமி அந்தக் குண்டைப் பற்றிய அதிசய தகவல் ஒன்றைச் சொன்னான். “டேய் நாம ஸ்கூல்ல படிச்சோமுல்ல. வைரக்கல்லு எப்படி உருவாவுதுண்ணு…”

“ஆமா,” அது எனக்கு நினைவிருந்தது.

“கரியிலேருந்துதான வருது…”

“ஆமா!”

“கரி பூமிக்குள்ளாற ரொம்ப வருசம் இருந்தா வைரமாயிடுமுன்னு வாத்தியார் சொன்னாரில்லையா?”

“ஆமா!”

“இதுக்குள்ள இருக்குறது அப்படி ஒரு கரிதான்டா!”

“நெசமாவா?”

“பின்ன… அதான் ஜொலிக்குது. இத மண்ணுக்குள்ள பொதச்சி வச்சா கொஞ்ச நாளுல வைரமாயிடும். நீ வித்து காசாக்கிடலாம்!”

“ஆனா அம்மா திரும்ப கொண்டாந்து சாமி ரூம்புல வச்சிர சொன்னாங்களே…”

“அவங்களுக்குத் தெரியாதுடா… இத நாம பொதச்சி வச்சி வைரமா மாத்தலாம். அப்ப சந்தோச படுவாங்கல்ல…” என்றான்.

எனக்கு முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் குண்டினுள் இருக்கும் கரி ஒளிர்வதைவிட அது வைரமாக மாறினால் நல்லதுதானே என்று தோன்றியது. மேலும் ஆசிரியர் கரிதான் வைரமாகும் எனச் சொன்னது  என் மனதில் அப்படியே பதிந்திருந்தது. பல ஆங்கில நூல்களைப் படிக்கும் குமாரசாமி சொன்னால் சரியாகவே இருக்குமென நினைத்தேன். எங்கே புதைப்பது என்பதில்தான் குழப்பம் இருந்தது. குமாரசாமி அவன் வீட்டின் அருகில் புதைக்கச் சொன்னான். நான் என் வீட்டிலேயே புதைப்பதாகச் சொன்னேன். பின்னர் இருவருமாகச் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம். அதன்படி அவன் அப்பா தோட்டத்தை ஒட்டி வாங்கியுள்ள நிலத்தில் புதைப்பதாக முடிவானது. ஒருவரை ஏமாற்றி மற்றவர் எடுக்கும் வாய்ப்பு குறைவு.

நாங்கள் சென்றபோது கடும் வெய்யில். நல்ல இடமாகத் தேடியபோது அரசமரம் ஒன்று கண்ணுக்குப்பட்டது. அவன் அப்பா நட்டது என்றான். குழி தோண்டும் பொறுப்பும் எனக்கே வழங்கப்பட்டது. குமாரசாமி அருகில் நின்று வேடிக்கை மட்டும் பார்த்தான். சிறிய சப்பையான ஸ்லோப் மூலம் நான் ஆழமாகக் குழியைத் தோண்டினேன். ஒரு வாழைக்கன்றை உள்ளே செருகும் அளவுக்கான பரப்பளவில் குளியை உருவாக்கினேன். பத்துமுறை குத்தி கையை விட்டு மண்ணை எடுத்தேன். அரசமரம் அப்போது மிடுக்கான இளவரசனைப் போல இருந்ததாக நினைவு. வேர்கள் இடையில் எங்கும் தட்டுப்படாமல் இருந்தது நிம்மதியளித்தது. குமாரசாமி அவசரப்படுத்திக்கொண்டே இருந்தான். நான் என் காற்சட்டைப் பையில் கறுங்குண்டை வைத்திருப்பது ஏதோ பெரும் குற்றம்போலவே அவனது பரபரப்பு இருந்தது. ஒரு சமயம் கையை விட்டு மண்ணை வாற முடியாத அளவுக்கு ஆழம் கூடியிருந்தது. அதன் பின்னரும் மேலும் கொஞ்சம் தோண்டி ஸ்லோப்பால் மண்ணை தோண்டி எடுத்துவிட்டு, எட்டிப்பார்த்தேன். ஆழ் இருள் மட்டுமே தெரிந்தது.

குமாரசாமி “போதும்!” என்றான்.

நான் ஆசையோடு குண்டைக் கையில் எடுத்துப் பார்த்தேன். வெய்யிலில் சாதாரண கறுப்புக் குண்டாகவே தெரிந்தது. அப்பாவை நினைத்துப் பயமாக இருந்தது. ஓடிவிடலாமா என்றுகூட நினைத்தேன். குமாரசாமி சட்டென என் கையில் இருந்த குண்டைப் பறித்து குளியினுள் போட்டான். மனதை திடப்படுத்திக்கொண்டு மண்ணைக் கொண்டு மூடினேன். காரணமில்லாமல் கண்ணீர் வந்தது.

“அழாத… இந்த அரச மரந்தான் அடையாளம். குண்டு கொஞ்ச வருசத்துல வைரமா மாறுனதும் தோண்டி எடுப்போம்.” என்றான்.

அப்பாவின் காலடியில் அமரும்போது அம்மா எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுபவர் என்பதால் எனக்கு செமத்தையான அடி கிடைத்தது. ஆனால் குண்டு தொலைந்துவிட்டது எனச் சொன்னேனே தவிர அது வைரமாகப் போகும் ரகசியத்தை யாரிடமும் சொல்லவில்லை.

எனக்கு அதெல்லாம்கூட வருத்தமில்லை. அந்த வருட இறுதியாண்டுத் தேர்வில் நான் குமாரசாமி பக்கத்தில் அமர முடியாமல் போனது பெரிய ஏமாற்றமானது. புதிதாக வந்திருந்த தலைமை ஆசிரியர் என் பெயரை நல்ல தமிழில் இலட்சுமணன் என்றே எழுத வேண்டும் என திருத்தம் செய்தார். தமிழில் புதிதாக ‘இ’ சேர்ந்ததால் வகுப்பாசிரியரும் குழம்பிப்போய் ஆங்கிலத்தில் ‘ஐ’ சேர்த்து என்னை வேறொரு மூலையில் அமரவைத்தார். கேள்வித்தாள் முழுவதும் நான் குமாரசாமியின் காலணிகளைத் துவைத்ததும், வெள்ளை பூசிக் காயவைத்ததும், ஏவிய பணிவிடைகளைச் செய்ததுமே காட்சிகளாக வந்துபோயின.

புள்ளிகள் குறைந்ததால் வீட்டில் ஓய்வில்லாத அடி கிடைத்தது. அதோடு நான் குமாரசாமி வீட்டுக்கு டியூசன் செல்லவில்லை. மறுவருடமே தோட்டம் பெருநகரமாக புதிய பரிணாமம் எடுக்கத் தொடங்கியப்பிறகு நாங்கள் கோலாலம்பூரில் அப்பாவின் அண்ணன் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிக்கு மாற்றலானோம். அது இரவோடு இரவாக நடந்த மாற்றம் என்பதால் என்னால் குண்டை தோண்டி எடுக்க முடியவில்லை. மேலும் அது வைரமாக மாற அதிக காலமாகும் என்றே குமாரசாமி சொல்லியிருந்தான். அப்பாவுக்குத் தோட்டத்தைச் சுற்றி கடன் இருந்ததால் அதன் பிறகு பெராங் பக்கம் நாங்கள் வரவே இல்லை.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு என் மகனின் திருமணப் பத்திரிகையை வைக்க வந்த இடத்தில் குமாரசாமி என் பழைய அறியாமையைச் சீண்டுவது எரிச்சலை மூட்டியது. அரச வழக்கறிஞராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அவன் நல்ல நிலையில் இருந்தான். வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘பென்ஸ்’ காரே அவன் அந்தஸ்தைச் சொன்னது. அவன் மேல் வீசிய வாசனை திரவியத்தின் நெடி, உடுத்துவதில் இருந்த நேர்த்தி, விரல்களை மூடிய சிலிப்பர் என எல்லாமே என் இயல்பான உற்சாகத்தை முடக்கியிருந்தது. அவன் மகனும் வழக்கறிஞர்தான் என்றான். நான் கோலாலம்பூர் அடுக்குமாடி வீட்டின் வளாகத்தில் வைத்திருக்கும் டெய்லரிங்கடை பற்றி சொன்னேன். அவன் அதை அசட்டையாக எடுத்துக்கொண்டபோது என் சொந்தக் கடை என்றேன். அவன் அலட்சியமாகச் சிரித்து வைத்தான்.

“என்னா இருந்தாலும் வாக்கு கொடுத்தது கொடுத்ததுதான் லச்சு… பொதச்சி வச்ச குண்டு வைரமா ஆயிருக்கான்னு பாக்க வேண்டாமா நாம?” என்றான். குரலில் சிரிப்பிருந்தது.

நான் வேண்டாம் என்றேன். அப்படிச் சொல்லும்போது நான் அவமானமாக உணர்ந்தேன். ஏன் இவனிடம் ஒடுங்குகிறோம் என்று எனக்கே என் மேல் கோபமாக வந்தது.

“என்ன வேணாங்கற… தோ அந்த மரத்தாண்டதான பொதச்ச… வைரமுன்னு சொன்னதும் என்னா வேகமா குழியத் தோண்டுன…”

அவன் பேச்சு லேசாகக் குழறியதை அப்போதுதான் கவனித்தேன். கோணலாக சிரித்துக் கொண்டான். குடித்திருக்கிறான் என்று தெரிந்தது.

அரச மரமும் கொழுந்து விட்டிருந்தது. பிரமாண்டமான மரம். நான் சிறுவனாக இருந்தபோது பெரியதாக தெரிந்த அனைத்துமே இப்போது சிறியதாகக் காட்சியளித்தன. ஆனால் இந்த அரச மரம் மட்டும் முன்பைவிடப் பெரிதாக வளர்ந்து பிரமாண்டமாக இருந்தது. அரசன் எப்போதுமே பெரியவன்தான்.

வீட்டைச் செப்பனிட வந்த பணியாளர்களிடமிருந்து குமாரசாமி ஒரு ஸ்லோப்பை வாங்கி வந்து கையில் கொடுத்தான். “தோண்டு!” என்றான்.

எனக்கு அவன் மேல் கடும் கோபம் வந்தது. அவனது திமிருக்கு சுலோப்பை எடுத்து அவன் மண்டையைப் பிளக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அவன் என் ஏமாற்றத்தைச் சீண்டுகிறான். என்னை முட்டாளாக்கிவிட்டதைச் சொல்லி நிறைவு அடைகிறான். அரச மரத்தை  அண்ணாந்து பார்த்தேன்.

“தோண்டுடா…” என்றான் மீண்டும். குரலில் சிறிய மிரட்டல். என் வயதே இருந்தாலும் ஏன் என்னால் அவனை அப்படி அழைக்க முடியவில்லை என என்னையே கேட்டுக்கொண்டேன்.

நான் ஏதோ ஒரு வேகத்தில் தோண்டத் தொடங்கினேன். எனக்கு அந்த இடம் மிகத் துல்லியமாக நினைவில் இருந்தது. வேர்கள் எதுவும் குறுக்கே பாயாமல் மண் அழகாகப் பெயர்ந்து வந்தது. நான் தீவிரமாகத் தோண்டத் தொடங்கியிருந்தேன். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு நான் இங்கு வந்ததே இந்த வைரத்தை எடுத்துச்செல்லதான் என்று தோன்றியது. மற்றவை எல்லாமே நானாக உருவாக்கிக்கொண்ட பொய்க் காரணங்கள் என மனம் சொல்லிக்கொண்டது. இந்தக் கணத்துக்காக மட்டுமே நான் காத்திருந்ததைப்போல உடல் இயங்கியது. தோண்டத் தோண்ட  அங்கு நிச்சயம் வைரம்தான் இருக்குமென மனம் சொன்னது. என் அறிவு அவ்வளவு சீக்கிரம்  செயலிழந்து உடலை இயக்குவது ஆச்சரியமாக இருந்தது. மூச்சிரைத்தது. தோள்கள் வலிக்கவும் நான் என்ன முட்டாளா என என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஆனால் ஏதோ என்னை விடாமல் இயக்கியது. நான் வேகமாகத் தோண்டிக்கொண்டே இருந்தேன்.

குமாரசாமி அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் உதட்டில் சிரிப்பு இருப்பதை பார்க்காமலேயே என்னால் உணர முடிந்தது. அந்தச் சிரிப்பை கோலியைப் புதைக்க குழி தோண்டியபோதே நான் பார்த்திருக்கிறேன். தோண்டிய மண்ணைக் கையால் அள்ளி அள்ளி எடுத்தேன். வியர்வை தலை முழுவதும் நனைந்து பூமியில் சொட்டியது. இதோ இதோ என மனம் அரற்றியது. என் கண்கள் வைரத்தைத் தேடின. கருமண் முடிந்து களிமண் வெளிப்படத்தொடங்கியது.

என் தீவிரம் குமாரசாமியையும் கொஞ்சம் பயம் கொள்ள வைத்திருக்க வேண்டும்.”முடியலனா உட்டுடு ஓல்ட் மேன்” என்றான். அவன் முகம்  வியர்த்திருந்தது. கைகள் தாளமிடுவதை மெல்லிய அசைவாக உணரமுடிந்தது. நான் நிறுத்தவில்லை. எனக்கு அதன் ஆழம் தெரியும். அதன் அளவு தெரியும். இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது. குனிந்து கையால் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு மீண்டும் ஸ்லோப்பால் இரண்டு முறை குத்தி மண்ணைக் கிளறியபோது இரும்பில் ஏதோ இடிப்பதை உணர்ந்தேன். மெல்ல ஸ்லோப் நுனியால் கிண்டிப் பார்த்தேன். உள்ளே ஏதோ மினுக்கென ஒளிர்ந்தது. நான் நிறுத்திவிட்டு ஆச்சரியம் பொருந்திய கண்களுடன் குமாரசாமியைப் பார்த்தேன். அவனும் என்னை விலக்கிவிட்டு குழியை எட்டிப்பார்த்தான்.

“அது வைரமா?” என்றேன்.

“நோ நோ!” என்றவன் அவசரமாக என்னிடமிருந்து ஸ்லோப்பை வாங்கி மண்ணை மூடத்தொடங்கினான்.

“அது வைரமில்லையா… ஏதோ மின்னுச்சே…” என்றேன்.

“ஏய் ஸ்டுப்பிட்… கண்ணாடிக் குண்டு எப்படி வைரமாகும்?” என்று ஆவேசமாக மண்ணை வாரி குழியில் கொட்டினான்.

“நா பாத்தேனே…!” என்றேன்.

“மொதல்ல இது என்னோட நெலம்… வெளிய போ ஓல்ட் மேன்!” எனக் கத்தினான்.

(Visited 2,591 times, 1 visits today)