நவீன் நலம்தானே…
அடுத்தடுத்த சிறுகதைகளை உங்களிடமிருந்து பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்தக் கொடுங்காலத்தில் கலைஞர்கள் செய்ய வேண்டிய பணி அதுதானே. உங்கள் ‘நகம்’ சிறுகதை என்னை நெருங்கி வராததை குறித்து கடிதம் எழுதி இரண்டு வாரத்தில் ‘வைரம்’ சிறுகதை. ஆனால் எனக்கு இக்கதை மிகவும் நெருக்கமான கதையாகிவிட்டது. ஆச்சரியம்தான்.
ஒரு நல்ல சிறுகதையை நான் வரையறுத்துள்ள விதம் (எனக்கு மட்டும்) பற்றி சொல்கிறேன். முதல் வாசிப்பில் அது சாதாரணம் எனத் தோன்ற வைக்கவேண்டும். எப்போதைக்கும் உள்ளது எனத் தோன்ற வேண்டும். அந்த சாதாரணத்தில் இருந்து அசாதாதரணம் உருவாக வேண்டும். அது ஒருங்கே பொருந்தி வந்த கதை ‘வைரம்’. (இது எல்லோருடைய வாசிப்புக்கும் பொருந்துமா எனத் தெரியவில்லை. ஆனால் நான் வாசித்து வாசித்து அரூபமாக அடைந்துள்ள அளவீடு இது.)
ஒரு முதலாளியின் அகங்காரத்தில் ஒரு தொழிலாளி என்னவாகிறான் என்பதை அடிப்படையான வாசிப்பாகக் கொள்ளலாம். (இதைதான் கதையை சாதாரணப்படுத்தல் எனச் சொல்ல வருகிறேன்.) தோட்டத்தொழிலாளர்களின் குறியீடாக ரப்பர் மரங்களும் (ரப்பர் மரங்களின் தோற்றமே ஏழை மக்களின் துன்பம்போல காட்சிதரும்தானே) முதலாளி அல்லது பணக்காரர்களுக்கு குறியீடாக அரச மரம் என புரிந்துகொண்டு வாசிக்கலாம். இரண்டு மரங்களும் ஒரே காலத்தில் இலை உதிர்க்கின்றன. ஆனால் தன்னை அழித்து மற்றவர்களுக்காக வாழும் ரப்பர் தோட்டம் அழிக்கப்படுகிறது. சொந்த நிலம் இருந்ததால் அரச மரம் தொடர்ந்து வாழ்கிறது.
நவீன், மேலே நான் சொன்னது எளிய வாசிப்பு. நான் நண்பரிடம் பேசும்போது அவரும் இவ்வாறே புரிந்துகொண்டார். ஆனால் இந்த கதையில் அடுத்த தளத்தில்தான் நீங்கள் கலைஞன் ஆகிறீர்கள் எனச்சொன்னேன். அது குமாரசாமியின் வன்மம் பற்றி சொல்லும்போது. அவனைப் பார்த்து சிரித்த பிற நண்பர்களின் சிரிப்பை அவன் ஐம்பது ஆண்டுகளாகச் சுமந்துள்ளான். அவனை விளையாட்டை விட்டு வெளியேறச்சொன்ன அந்த நிமிடத்தை அவன் மறுபடியும் நிகழ்த்திப்பார்க்கும் அந்த தினத்துக்காக காத்திருக்கிறான். அது விளையாட்டில் அவனுக்கு சாத்தியப்படாது. எனவே ஐம்பது வருடம் கடந்து அதிகாரத்தில் நிகழ்த்துகிறான்.
இந்தக் கதை முக்கியமான இடத்தைத் தொட மேலே உள்ள வாசிப்பும் காரணியாக அமையவில்லை. அது நீங்கள் கதைக்கு அடியாளத்தில் வைத்துள்ள இன்னொரு அடுக்கில் உள்ளது. எப்போதுமே வைரமாகாத அந்த குண்டை ஏன் குமாரசாமி அவ்வளவு வேகமாக மறைக்கிறான் என்பதில் அவ்விடம் துலங்கி வருகிறது. அதை நீங்கள் ஏன் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நீங்கள் சொல்லாமல் அந்த அதிகாரத்தின் அச்சத்தை, குமாரசாமியினுள் நிகழ்ந்து கொண்டிருந்த குறுகலை நான் புரிந்துகொண்டேன். நீங்கள் விளக்க முடியாமல் நான் விளங்கி கொண்ட அந்த தருணத்தில் இச்சிறுகதை ஆயிரம் வெடிகளுடன் என் வானத்தை நிறைத்தது.
நன்றி உங்களுக்கு.
ராம்
கதை வடிப்பதில் நவீன் அவரின் பாணி என்னை அதிகம் கவர்ந்த ஒன்று.
சிறுகதையில் குண்டு ஒன்று காட்டப்பட்டால் அந்த குண்டு கதை முடிவில் வெடித்திருக்கவேண்டும், என்பது சிறுகதை வடிப்பின் சாராம்சம். அப்படி இங்கு ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஒரு கரிக்குண்டு இறுதியில் வைரமாவதை நான் உள்வாங்கினேன். (கோவிட்’யிலும் சரிவில்லாத தொழில் அதுதான்)
கண்ணாடிக் குண்டுகளுக்குள் இருக்கின்ற இதழ்விரியும் வர்ண மலர்கள் மற்றும் வெள்ளி மலர்கள் கொண்ட குண்டுகளைக் கண்டு பல வருடங்கள் ஆனபோதும் அவை என் கண்முன் மிக அழகிய காட்சியாகி மறைந்தன.
அக்குண்டுகளுக்குள் இருக்கின்ற கலைத்திறன் வெறும் வெளிப் பார்வை பளபளப்புக் கண்ணாடித் திரவத்தால் எப்படி மூடப்பட்டு மறைக்கப் படுகிறதோ அதே போல் ஏழை எளிய மக்களிடம் உள்ள புத்திக்கூர்மை, கலைத்திறன் போன்றவை வசதி அந்தஸ்து படைத்தவர்களால் எப்படி மட்டப்படுத்தப்படுகிறது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் படி எளிய நடையில் சிறப்பாகச் சொல்லியுள்ளார்.
இருவருக்குள் நடக்கின்ற உரையாடலில், பின்னோக்கிச் சென்ற கதையில் பசுமையான நினைவுகள் பகிரப்பட்டு அங்கு ஏட்டுக்கல்வியை மட்டும் வைத்துக்கொண்டு பொய், பித்தலாட்டம், வெறுப்பு, வெட்டிப் பெருமை, தான் என்கிற அகங்காரம், சுயநலம், கீழறுப்பு, ஆதிக்கம் செய்தல், பிறரை அடிமைப்படுத்துதல், பேச்சுத் திறனால் அப்பாவிகளின் மூளையைச் சலவை செய்வதல், ஏமாற்றுவேலை என அனைத்து குணக்கேடுகளையும் சொத்தாக வைத்திருக்கின்ற ஒருவன் என்னவாக மாறியிருக்கிறான் என்பதுதான் கதை.
அவன் தேர்ந்தெடுத்திருக்கும் துறையும்/தொழிலும் அதற்குத் தோதான ஒன்றாக இருப்பது கதாசிரியரின் கூர்மை வெளிப்பட்டுள்ளது.
கல்விக்கூடங்களில் ஏட்டுக்கல்வி மட்டுமே சிறந்த கல்வியாகப் பார்க்கப்பட்டு மற்ற அனைத்துத் திறமைகளையும் கேலிக்கூத்தாக மாற்றப்படும் பார்வையினை தோட்டத்து இயற்கைச் சூழலோடு மாணவர்களின் நட்பு விளையாட்டுகள் மூலம் மிக அழகாகச் சொல்லியிருக்கின்றார்.
சிலரிடம் அடிமை உணர்வு என்றும் மாறாமல் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நட்பில் ஏற்படும் மெல்லிய ஒவ்வாமை உணர்வு ஐம்பது வருடங்கள் கழிந்தும் இருப்பது எதனால் என்பது இங்கே கண்கூடு.
கதை பயணிக்கும் நோக்கு மற்றும் நேர்கோடு, எழுத வருகிறவர்களுக்கு நல்ல வழிகாட்டி.
ஶ்ரீ விஜி
எழுத்தாளரின் வரிகளும் வைரமாய் மின்னுகிறது. ஒரு சாதாரண கருவை கொண்டு கதையை இவ்விதமும் நகர்த்திச் செல்ல முடியும் என்பதில் கதாசிரியரின் ஆளுமை ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது. முதல் பெஞ்ச் மாணவரின் அடாவடித் தனத்தை அருமையாய் படம் பிடித்து காட்டிய பாங்கு அருமை.
அவர் வளர்ந்து பெரியவனாகியும் அதே அடாவடித் தனத்தோடு பேசுவதோடு கதையை முடித்திருக்கிறீர்கள். அந்த கறுப்பு நிற கோலிக் குண்டு கடைசியில் வைரமாகியதாவென்பதை காண, அந்த வரிகளினூடே நானும் அந்தக் குழியை எட்டிப் பார்த்ததை இங்கே மறைக்க விரும்பவில்லை.
மீண்டும் கதையை எழுதிய விரல்களுக்கு எனது வாழ்த்துக்கள். சிறப்பு நண்பரே. தொடருந்து எங்களை வியக்க வைத்துக்கொண்டே இருங்கள்.
‘ஈப்போ’ ஸ்ரீ