வைரம்: கடிதம் 2

வைரம் சிறுகதை

நவீன்,

ஒரு வெற்றிகரமான சிறுகதை அதன் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற்றிருக்கும். வைரம் அத்தகைய சிறுகதை. ஒரு உயர்தர சிறுகதையைப் படித்தபின் நம்முள் கிளைவிட்டு வளரும் மலர்ந்த கனியை நாம் பறிப்போம். வைரம் அந்த வகையில் கூட உயர்தரமான சிறுகதை. ஓர் ஆழமான சிறுகதை வாழ்க்கையில் இருந்து பெற்ற வினாக்களை வாழ்க்கையை நோக்கி ஏவும், இம்முகத்திலும் வைரம் ஆழமிக்க சிறுகதை.

பாடத்தில் ஆசிரியனான குமாரசாமி விளையாட்டில் பின் தங்குவது ஓர் அழுத்தமான முரண். லட்சுமணனின் கண் வட்டத்தில் விழும் பாதி பகுதி விடைகள் சரியாக அமைவது, பெயரின் துவக்க எழுத்து மாறியவுடன் வரிசை மாறி அமர வைக்கப்படுதல் போன்றவை சுவாரஸ்யமான பகுதிகள். கோலி குண்டு என்பதே கூட தன்னளவில் ஒரு அழகிய பொருள். அது டார்ச் வெளிச்சத்தில் சுடர்வது ஒரு அற்புத காட்சி அனுபவம்.

நாம் மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் நெடிய ஆண்டுகளில் அவர்கள் மாறியது போலவும் மாறாதது போலவும் ஒரே சமயம் தோன்றும். 50 ஆண்டுகளுக்கு பின் குமாரசாமி – லட்சுமணன் குணாம்சம் என்னவாகிறது, அவர்கள் உறவு என்னவாகிறது என்கிற ஆழமான கேள்விகளை எழுப்பி அவர்கள் உறவு மாறவில்லை, இருவரின் குணமும் மாறவில்லை, குமாரசாமியின் ஆழத்து இருள் கோலிகுண்டாக அப்படியே தான் உள்ளது அதைப் நேரிட்டுப் பார்க்க குமாரசாமி அஞ்சுகிறான் என முடிந்தது ஒரு வாழ்க்கை தரிசனம். அருகே அரசமரம் மட்டும் தான் வளர்ந்துள்ளது எனக் காட்டப்பட்டது ஒரு கலைத் திறம்.

இது என்னுடைய நிலம் என குமாரசாமி ஏன் கூறுகிறான் என்பதும், லட்சுமணன் வரும்வரை மண்ணை தோண்டாமல் 50 ஆண்டுகள் ஏன் காத்திருக்கிறான் என்பதும் இது கிளர்த்தும் அடுத்த கேள்விகள். மனித இயல்பு மண் போல, அம்மண்ணில் அதுதான் விளையும் எனவும் லட்சுமணனை சந்தித்தது ஒரு நிமித்தம் அப்போதுதான் தன்னுள்ளில் செல்ல குமாரசாமிக்கு தோன்றுகிறது எனவும் விடையளித்துக் கொண்டேன்.

அந்த கோலி குண்டில் இருக்கும் பூ தான் ஒரு மனிதனின் character என எண்ணுகிறேன். குமாரசாமியின் கோலி, கோட்டை தாண்டி மீறுவது அவன் அறிவை அவன் அகங்காரம் மீறும் இடம் எனவும் வாசிக்க இடமிருக்கிறது.

இருந்தும் வாசல்கள் தீர்ந்தபாடில்லை குமாரசாமி கை கோலிகுண்டு என்ன, லட்சுமணன் கை கொலிகுண்டு என்ன, அந்த விளையாட்டில் உள்ள இலக்குக் கோட்டை தாண்டி செல்லும் காய் என மிச்சம் இருக்கிறது. ஆகவே தான் சொல்கிறேன் இது அடர்த்தியான வெற்றிகரமான சிறுகதை, எளிதில் இதை சாத்தியப் படுத்தியுள்ளீர்கள் வாழ்த்துகள்.

கிருஷ்ணன்,
ஈரோடு.

அன்புள்ள நவீனுக்கு,
நலம், மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

நிலத்தை ரசிக்கத் தெரியாத குமாரசாமி, அந்த நிலத்திலேயே வேர்விட்டு ஆள்கிறான்.  அவனை விட அறிதல்தன்மை குறைந்தவன் லட்சுமணன். அவனை தனக்கு அருகில் , ஒரு படி கீழேயே  சீண்டியபடி எப்போதும் வைத்திருக்கிறான் குமாரசாமி. ஒவ்வொரு மலரையும் , மரங்களையும் நுட்பமாக உணரத்தெரிந்த லட்சுமணன் அந்த நிலத்திருந்து அப்புறப்படுத்தப்படுகிறான். மேல் லயத்தில் இருந்திருந்தாலும் சாராயம் குடித்து சேமிக்காமல் மறைந்த அவனது தந்தை அதற்கு காரணமாக இருக்கலாம். 

லட்சுமணன் – Ilakshmanan ஆதல்

பவுனாட்டம் மணக்கும் ரப்பர் மரம் பூத்தல்

அரசன் எப்போதும் பெரியவன்தான்

பரிட்சை விடைத்தாளில் பாதியை மட்டும்  காட்டும் குமாரசாமியின் நுட்பம்

மாடசாமி , காந்தனின் கோலிகுண்டு  விளையாட்டுத் திறமை

என ரசிக்க வைத்து நல்ல வாசிப்பனுவம் தந்த கதை..

ஆண்,  பெண்  விளையாட்டு எங்கும் ஓயாது நிகழுவது. பெரும்பாலும் சீண்டலுக்கான விழுப்புணர்வுடன்தான் துவங்குகிறது .   ஏதோ ஒரு கணத்தில் அந்த விழிப்புணர்வு மறைந்து ஈர்ப்பு உணர்வு தந்த மயக்கத்தில் இருவரும் முயங்குகிறார்கள். பின்னர் உறவு முறிந்த போதும் மீட்டிப்பார்க்க சில நல்ல தருணங்களைப்  பெற்றே பிரிகிறார்கள். 

ஆனால் ஆண் ஆணிடமும், பெண் பெண்ணிடமும் விழிப்புடன் விளையாடும் விளையாட்டு குரூரமானது. ஒவ்வொரு சிறு தோல்விக்கும்,  பின்வாங்கலுக்கும் , வஞ்சினத்துடன் பதிலடி கொடுக்காமல் அது ஓய்வதேயில்லை. அவரவர் பலத்தினைப் பொறுத்து முழுவெற்றி பெற்று முழுத்தோல்வியை மற்றவருக்கு கொடுக்க போராடுகிறார்கள், எத்தனை வருடங்கள் கடந்தாலும் கணக்கினைத் தீர்க்காமல் அது முடிவதேயில்லை.

அன்புடன்   சிவமணியன்

அதிகாரத்தை வைரமாக்கும் ரசவாதம்

கருப்பு குண்டு வைரமாகாது என்று வாசகன் அறிவான்.

ஆனால் குமரசாமி ஆசான் நிலையிலிருந்து வழக்கறிஞர் ஆனதும், கதை சொல்லி படிப்பு ஏறாத மாணவன் நிலையிலிருந்து சாதாரண தையல் கடைக்காரனாக மாறியதும் , அவர்களுக்குள் உள்ள வர்க்க வேறுபாட்டையும் அதன் சமூக கட்டமைப்பின் உள்ள ஏற்றத் தாழ்வையும் கதை மையச் சரடாகப் பிடித்துக்கொண்டு முன்னேறுகிறது.

சம வயது குமரசாமி கெட்டிக்கார மாணவனாக, ஆசானாக இருக்கும்போதோ அவன் அகந்தை வளர்ந்து அது சீண்டப்படும்போது அதிகாரத் திமிர் வந்துவிடுகிறது. ஆனால் கதைசொல்லியின் படிப்பு ஏறாத  நிலை அவனை ஆசானுக்குக் கீழேயே வைத்திருக்கிறது.

எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன அந்தச் சம்பவம் நடந்து ஆனாலும் அது கல்விநிலை மேலிட்டால் இன்னும் உக்கிரமாகியிருக்கிறது குமாரசாமிக்கு.  குமாரசாமி அடைந்த அந்த உயர்வால் கதைசொல்லியை இன்னுமே கீழிறங்க வைத்துவிட்டது.

இது சமூகக் கட்டமைப்பின் சாபக் கேடு.

கருங்குண்டு கண்டிப்பாய் வைரமாக மாறாது. ஆனால் குமாரசாமியின் உயர்ந்த அந்தஸ்தும் அன்றைக்கு அவன் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசானாக இருந்தது அந்தக் குண்டு வைரமாக மாறியிருக்கலாம் என்று கதைசொல்லியை எண்ண வைக்கிறது. குழி தோண்டும் போது, சட்டென்று மின்னும் அந்தக் கணம் கதை சொல்லிக்கு உண்டான கற்பனையே  என்று குமாரசாமிக்குத் தெரியும் . இருப்பினும் அதனையே சாக்காக வைத்துக்கொண்டு தான் சிரித்து அவமானபடுத்தப்படடத்தை வெகு ஆண்டுகள் கழித்தும் நினைவு வைத்து பழி தீர்க்கிறான் என்றால் ( இங்கே தொன்மம் என்னைச் சீண்டிப்பார்க்கிறது. மகாபாரதத்தில் கௌரவர்கள் கண்ணாடித் தரையைத் தண்ணீர் தடாகம் என நினைத்து தடுமாறியதைப் பார்த்த திரௌபதி சிரித்ததும் கௌரவர்களின் அகந்தை சீண்டப்பட்டு சினமாகி அதன் பாதிப்பால் பாரதப் போருக்கு வித்திட்டதும்) அதே போன்ற ஒரு கொலை சிரிப்புதானே குமாரசாமியின் ஆளுமையைச் சீண்டி விடுகிறது. அது வெறும் சிரிப்புதான், திறந்த மனம் கொண்டு அதனை நகைச்சுவையாகக்கூட எடுத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் குமாரசாமியால் அது முடியாது. ஏனெனில் அது தன் இடம் என்று விரட்டுகிறான்.(அதிகாரம்) தான் உயர்ந்தவர் அவர்கள் தாழ்ந்தவர் என்ற எண்ணம். உயர்ந்தவன் என்ற மேட்டிமை எண்ணம் இத்தனை ஆண்டுகள் கழித்தும் மாறவில்லை என்பதையே பூடகமாகச் சொல்கிறது கதை . எப்படி மாறும்?  மிடிமையும் பணிவும்தானே அவர்களை அந்த பீடத்தில் ஏற்றி வைத்து அழகு பார்க்கிறது.

அந்த அதிகாரம்  ஆண்ட கதையைச் சொல்கிறது ‘வைரம்’.

ஓரிடத்தில் நவீன் சொல்வார் அரசன் மற்றவர்களைவிட உய்ர்ந்தவன் தான். அதற்கு அரச மரத்தைக் காட்டுவது சரியாகப் பொருந்தி கதையின் கவித்துமாகிறது. கதையைக் கலையாக்கி நிறுவிவிடுகிறது. ஏதோ மின்னிய இடத்தில் தான் புதைத்த குண்டு வைரமாகிக் கிடக்கிறது என்று சொல்லும்போது பழையபடி மீண்டும் குமாரசாமி சீற்றம்கொண்டு இது என் இடம் என்று   விரட்டும் கதையின் முடிவும் கலைநயம் கொண்டு துலங்குகிறது.   ( இப்படிச் சில இடங்கள்).

எப்போதுமே அடித்தட்டு மக்களின் அறியாமையை (கரிய நிறக் குண்டை, வைரமாக அறுவடை செய்துகொள்ளும் திறமை அதிகார வர்க்கத்துக்கு வாய்த்துக்கொண்டே இருக்கிறது. அது வைரமாக ரசவாதம் நிகழ்ந்திருக்கும் என்று கதைசொல்லி நினைப்பது எதனால்?  சாதாரணர் அந்நாந்து பார்த்து பிரமிப்பதால், கூனிக்குருகி அடிபணிவதால்,  அவர்கள் உயர்ந்த அந்தஸ்த்தில் பொருளாதார பலத்தில்  நின்றுகொண்டு சொல்வதில் உண்மைதான் என நம்புவதால் உண்டாகிறது. இப்படி அவர்களை மேலான இடத்தில் நம் மனம் வைத்திருப்பதால் கரிய நிற குண்டு வைரமாக மாறும் வாய்ப்பு உண்டு என்று முடிவெடுப்பது இன்று நேற்றல்ல , நெடுங்காலமாகவே நடந்துகொண்டுதானிருக்கிறது.

அரசியல் தலைவர்கள் ரசவாதம் செய்யக்கூடிய மாந்திரீகர்கள் எனப் பேதை மக்கள் மதித்து ஏமாறும் தளத்தில் வைத்துக் கூட கதையை வாசித்துப் பார்க்கலாம்.

எனவே , கண்டிப்பாய் இது  விளையாட்டுப் பொருளை வைரமாக்கும் கதையல்ல.

கோ.புண்ணியவான்

(Visited 156 times, 1 visits today)