வைரம்: ஒரு விவாதம்

அன்புள்ள நவீன்,

உங்கள் வைரம் கதை படித்தேன். நல்ல சிறுகதை, ஆனால் இது எனக்கான சிறுகதை அல்ல. இங்க கொஞ்சம் அழுத்தம் கூட்ட விரும்புகிறேன், இல்லையென்றால் இது தப்பான அர்த்தத்தில் புரிந்துக் கொள்ளப்படும். மேலும் இந்த கடிதம் வைரம் கதைக்கான வாசிப்பு அனுபவமாக எழுதாமல், ஒரு விவாத கட்டுரையாக எழுதலாம் என தோன்றியது. காரணம் அடுத்தடுத்த நீங்கள் எழுதிய இரண்டு சிறுகதைகள் (நகம், வைரம்) அதனை ஒட்டி வந்த கடிதங்கள். இந்த இரண்டு கதைகளுக்கான வாசிப்பை கூறி அதிலிருந்து இப்போது சிறுகதைக்கான டிரெண்ட் என்ன என்பதை சொல்லலாமென நினைக்கிறேன்.

ஒரு முன்னறிவிப்பாக சொல்கிறேன், இதில் எது வெற்றிப் பெற்ற கதை என நான் பேச போவதில்லை. அப்படி பேசுவதே அபத்தம். ஒரு கதை எழுதி முடிக்கப்பட்டுவிட்டதும் வெற்றிப் பெற்று விடுகிறது அதன் பின் அது வாசகன்/வாசகியிடம் எத்தனை தொலைவு வளர்கிறது என்பதே அளவுகோல். ஆகையால் இக்கட்டுரை அந்த இரண்டாம் தர விமர்சனத்துக்கானதல்ல. இக்கட்டுரை பொதுவாக சிறுகதைகளின் இப்போதைய டிரெண்ட் என்ன என்பதை பத்தி மட்டுமே பேசும்.

முதலில் கதைக்கான கடிதங்களில் இருந்து தொடங்கலாம் என நினைக்கிறேன். இரண்டு கதைகளுக்கு பலதரப்பட்ட வாசிப்பு அனுபவங்கள் வந்தன. வெவ்வேறு மனநிலையில் இருந்து கடிதங்கள். சிலருக்கு நகத்தில் இருக்கும் கற்பனையும், கனவு தன்மையும் ஈர்த்தன, சிலருக்கு வைரம் கதையின் கச்சிதமான சிறுகதை வடிவம் ஈர்த்தன. இதில் எது சிறந்த வாசிப்பு என தராசு தட்டில் வைத்து நிறுவ முடியாது. ஏனென்றால் எல்லா கதைகளும் எல்லோருமானதல்ல. பொதுவாக தர்க்க மனம் கொண்டவர்கள் வைரம் கதையில் உள்ள கச்சிததன்மையை விரும்புவார்கள். கலைந்து, அலைந்து செல்லும் மனிதர்கள் நகம் கதையில் உள்ள கனவு தன்மையை விரும்பலாம். அது அவரவர் மனம் சார்ந்தது. ஆனால் எல்லா வாசிப்பு ஒன்று சேர்ந்து, ஒரு கூட்டு வாசிப்பின் மூலம் ஒரு சமுகத்திற்கான ஒட்டுமொத்த ரசனை ஒன்று உருவாகி வரும். அதனடிப்படையில் ஒவ்வொரு காலத்திற்கான ஒரு தரப்படுத்துதல் உருவாகி வரும். அதுவே ஒரு காலத்திற்கான கதைகளின் டிரெண்டை உருவாக்கும்.

மீண்டும் உங்கள் சிறுகதைக்கே வருகிறேன். நகம் கதையின் கடிதத்தில் நண்பர் ராம் இப்படி குறிப்பிட்டிருந்தார், “ஆனால் கதையில் எனக்கு சில ஏமாற்றங்கள் உண்டு. நீங்கள் அதிகமாக கதையில் தலையீடு செய்துள்ளீர்களோ என நினைக்க வைக்கிறது. வாசகனான நான் நுழைந்து அடையும் இடம் இக்கதையில் குறைவு என்பதே என் கருத்து.” அவரே வைரம் கதைக்கான கடிதத்தில், “உங்கள்நகம்சிறுகதை என்னை நெருங்கி வராததை குறித்து கடிதம் எழுதி இரண்டு வாரத்தில்வைரம்சிறுகதை. ஆனால் எனக்கு இக்கதை மிகவும் நெருக்கமான கதையாகிவிட்டது. ஆச்சரியம்தான்.நான் முன்னரே இரண்டும் இரு வேறு மனநிலைக்கான கதையென குறிப்பிட்டேன் அதற்கு எடுத்துக்காட்டவே அவரது விமர்சனத்தை முன் வைக்கிறேன். மேலும் நான் சொல்லப்போவதற்கு எதிர் மனநிலையை குறிப்பிடும் பத்தி என்பதாலும்.

வைரம் கதை சிறுகதையின் சிறந்த வடிவத்தை தொட்ட கதை. அதை கச்சிதமான கதையென்று சொன்னேன். அந்த வைரம் எப்போது புதைக்கப்படுகிறது என்ற கணக்கு அதில் இருக்கிறது. லட்சுமணன் மற்ற இரண்டு நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு குமாரசாமியை பார்த்து சிரிக்கும் தருணத்தில் அந்த கருப்பு கோலி புதைக்கப்பட்டுவிட்டது. அது எப்போது வைரமாகிறது என்றால் குமாரசாமி அந்த புதைத்த இடத்தை தொண்ட சொல்லும் இடத்தில். மனித மனமென்பது விளையாட்டல்ல அது தொண்ட தொண்ட ஆழம் பெருகிக் கொண்டே செல்லும் முடிவற்ற ஆழம். அந்த ஆழம் எதை நோக்கிய பயணமென்பதும் முக்கியம் ஒரு நட்பின், ஆழமா, காதலின் வெளிப்பாடா? வன்மமா? என கதை தன் தரிசனத்தை முன் வைத்துச் செல்லும். ஏனென்றால் ஒரு கதை அப்போதைக்கான கேள்வியை முன் வைக்கிறதா இல்லை மேலெழுந்து எப்போதைக்குமான கேள்வியை முன்வைக்கிறதா என்பது முக்கியம். அந்த கதையில் Multiplicity of Reading எழுகிறதா என்பது அடுத்த வினா. சிறந்த சிறுகதைக்கான அடுத்த நகர்வு.

இறுதியாக எழும் வினா என்பது அந்த Multiplicity of Reading தனிமனிதனும், தனிமனித அகம் சார்ந்த கேள்விகளை நோக்கி மட்டும் நகர்கிறதா. இல்லை தன்னை இன்னும் விரித்து பறந்து செல்ல நினைக்கிறதா என்பது தான் என நினைக்கிறேன். ஏனென்றால் இந்த தனிமனிதம் மற்றும் அவனுடைய அகம் சார்ந்த கேள்விகள் நவீனத்துவம் அறுபது ஆண்டுகளாக எழுதி, எழுதி தன்னை நிறுவிவிட்ட ஒன்று. அதன் போதாமைகளும், எல்லைகளும் பேசி நிறுவப்பட்டு அடுத்தக்கட்டத்திற்கான நகர்வை நோக்கி இலக்கியம் செல்கிறது. அது இலக்கியத்திற்கான போக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சூழலிற்கான போக்கும் கூட, உதாரணத்திற்கு நம்முள் ஒரே மனம் கர்நாடக சங்கீதத்தையும், சென்னை கானாவையும், குத்துப்பாட்டுகளையும், ஹந்துஸ்தானியும், வெஸ்டர்ன் ஓப்ராவும் கேட்க முடியும் என்பதே பின் நவினத்துவ அலை வந்த பின்னரே அறிகிறோம். போன தலைமுறை கர்நாடக சங்கீத வித்வானால் ஒரு ஹந்துஸ்தானி இசையை கேட்க முடியாது இவருக்கு அவர் ஆலாபனை எடுப்பது இழுவைப்போல் தோன்றலாம். அதன் எல்லைகள் வரையறுக்கப்பட்டு பின் நவினத்துவம் வருகிறது. அதில் மனித மனதின் ஆசாத்திய சாத்தியங்கள் பேசப்படுகிறது அதன் கனவிற்கான, கற்பனைக்கான சாத்தியங்கள். தன் குறுகிய வட்டத்தின் கலையும், கற்பனையும் போதவில்லை என நிறுவப்படுகிறது, அதற்கடுத்தே அடுத்தக்கட்டத்திற்கான அலை எழுகிறது. இலக்கியம் பின் நவினத்துவத்தை எடுத்து கையாள்கிறது. அதன் பின்னே இலக்கியத்தின் அனைத்து சாத்தியங்களும் பரிசோதிக்கப்படுகிறது.

இப்போது நகம் கதைக்கு வருகிறேன். அப்பா, அம்மா இழந்து தம்பியை பார்த்துக் கொள்ளும் கடமையில் கட்டுண்டு வறுமையில் வாடி மலம் அள்ளும் நிலைக்கு செல்லும் வளர்மதிக்கும், சீனர்களின் நம்பிக்கையான படையலை ஏற்றுக் கொள்ள வரும் சீனத்து பேய்களுக்கும் என்ன சம்பந்தம்? அப்படி வாடிய நிலையில் இருக்கும் வளர்மதிக்கு சீனாவின் கடைசி பேரரசியான டொவேஜர் லோங்யுவிற்கும் என்ன சம்பந்தம்? கதையில் அவள் ஏன் ஒரு கனவு கண்டுக் கொண்டிருக்கிறாள். அந்த கனவில் கைகளில் நகம் வளர்த்த தேவதை ஒன்று அவள் மேல் ஏன் பண நோட்டை தூவுகிறது. அந்த தேவதைக்கும், இந்த பேய் மாதத்தில் வரும் பேய்களுக்கு என்ன சம்பந்தம்? அந்த தேவதைக்கும் கடைசி பேரரசிக்கும் என்ன சம்பந்தம்? அந்த தேவதைக்கும், பேய் மாத பேய்களுக்கும்? கதையில் ஏன் இத்தனை விவரணைகள் வருகிறது. கப்பளா அவளை நெருங்கி வர வர அவள் வீட்டின் இருளை நோக்கி ஏன் சென்றுக் கொண்டிருக்கிறாள்? கதையின் பின்பாதியில் ஒளியும், ஒலியும் வந்து அவளை ஏன் நிறைக்கிறது? இவை அனைத்திற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? கதையின் இறுதியில் சொல்லப்பட்ட பேரரசியின் கடைசி நாள் கதைக்கும், வளர்மதிக்கும் என்ன சம்பந்தம்?

இந்த கதையிலும் மனத மனித்தின் விசித்திரமான ஆழம் தான் பேசப்படுகிறது. முந்தைய கதையில் வைரம் ஒரு படிமமமாவது போல் இதில் நகம் ஆகிறது. ஆனால் முந்தைய கதையிலிருந்து இது எங்கே வளர்கிறது. நான் மேலே சொன்ன அத்தனை சாத்தியக் கூறுகளையும் நிரப்பிக் கொண்டு இந்த கதையை வாசி என சொல்லுமிடத்திலேயே இக்கதை வளர்கிறது. ஒரு விதமான wild dream என அதனை சொல்லலாம். அத்தனை கனவுகளும் உள்ளிழுத்துக் கொண்டு மனித மனதை அலசிப்பார்க்கிறது. அதுவே அடுத்தக்கட்ட நகர்வு என முன்னே சொன்னேன். அந்த கதையில் உள்ள Imbalance ஆன கனவு தன்மையே எனக்கான கதை. அதுவே என்னை கதையை விரித்து யோசிக்க வைக்கிறது மேலும் மேலும் சாத்தியமான வாசிப்பிற்கு கொண்டு செல்கிறது.

இக்கட்டுரையின் பொதுதன்மைக்காக மற்றவர்களின் கதைகளை பற்றி நான் பேசவில்லை. ஆனால் உங்கள் கதைகளையே எடுத்துக் கொள்வோமே ஏன் உச்சை, கன்னி கதைகள் சிறந்த கதைகளாக பேசப்பட்டன? கன்னி கதை ஜெயமோகன்.இன் தளத்தில் வந்தது என்பது என் நினைவு. எவ்வாறு அவை சிறந்த சிறுகதைகள் என ஒரு விமர்சகரால் வரையறுக்கப்படுகின்றன. அவற்றுள் உள்ள Multiplicity of Reading இன் Multiplicity தான், அதற்காகவே உச்சை கதையில் மலேசியாவின் வரலாறு பயின்று வருகிறது. உச்சைசிரவஸ் என்ற தொன்மம் உடன் வருகிறது. கன்னி கதையில் ஒரு மித்தாலஜி உருவாகிவருகிறது. கதைகள் தனிமனிதனிடமிருந்து அகன்று வரலாற்றை பேசுகிறது, தொன்மத்தை, கனவை, இயற்கையை, இருட்டை, ஒலியை, 21 ஆம் நூற்றாண்டின் அறிவியலை, எதிர்காலத்தை, செவ்வாய் கிரகத்தை, நாம் அறிந்திடாத ஒரு கிரகத்தில் வாழும் வாழ்வை என அத்தனை சாத்தியங்களையும் தன்னுள் நிரப்ப முயற்சிக்கிறது.

இதற்காகவே நான் சொன்னேன் வைரம் நல்ல கதை ஆனால் எனக்கான கதை இல்லை என்று. எனக்கு இத்தனை கனவுகளையும் உள் நிறைக்கும் கதை தேவை அதனை நகம் கதை தன்னுள் எடுத்துக் கொள்கிறது. ஆகவே எனக்கு அது சிறந்த கதையாகப்படுகிறது. அதன் சாத்தியங்கள் மற்றவர்களின் வாசிப்பில் வளரும் போது அது பின்பும் பேசப்படும். முதலில் சொன்னது போல் ஒரு கூட்டு வாசிப்பின் பொது தன்மையிலிருந்தே ஒரு காலக்கட்டத்திற்கான ரசனை உருவாகி வரும்.

இக்காலக்கட்டத்திற்கான ரசனை இது தான் என நினைக்கிறேன். கதையில் அதிக விவரணை வந்து கதையை கலைத்து போடலாம். கதைக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கனவு கதையில் பயின்று வரலாம். வரலாறு உள்ளே வரலாம், தொன்மங்கள், சடங்குகள் என நீட்டி செல்லலாம் ஆனால் எல்லாம் எழுதுபவன் கனவாக கதையில் வளர வேண்டும்.

இந்த ரசனை தமிழ் இலக்கியத்தில் எங்கிருந்து உருவாகி வருகிறது என பார்க்கலாம். எல்லாருக்கும் வசதியாக புதுமைபித்தனிலிருந்தே சொல்லலாமென நினைக்கிறேன். நவீனத்துவ வாதிகளால் பெரிதும் கொண்டாடப்பட்ட புதுமைபித்தன் கதை செல்லம்மாள். அதன் கச்சித தன்மை மற்றும் பேசு பொருளுகாகவே அது பேசப்பட்டது. ஆனால் அடுத்த அலை வருகிறது. ஜெயமோகன் என்ற விமர்சகன் உருவாகி வந்து புதுமைபித்தனின் கபாடபுரம் தான் அவரின் சிறந்த சிறுகதை என்கிறார். அடுத்த காலக்கட்டத்திற்கான ரசனை உருவாகி வருகிறது.

முப்பது வருடம் தாண்டி அந்த விமர்சனம் பட்டியல் இன்னும் உச்சமான நிலையில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். நான் விமர்சகி அல்ல, ஒரு வாசகி என்ற இடத்தில் என்னை வைத்தே அந்த கேள்வியை எழுப்புகிறேன். புதுமைப்பித்தன் மொத்த தொகுப்பிலும் கபாடபுரம் கதை தான் எனக்கும் சிறந்த சிறுகதையாக படுகிறது. ஆம் என்றே சொல்வேன். பெரும்பாலும் ஆம் என்றால் அது இக்காலக்கட்டத்திற்கான மனநிலை.

என் கணிப்பில் ஆம் என்று வைத்துக் கொண்டே கட்டுரையை முன் நகர்கிறேன். எனவே ஜெயமோகன், கோணங்கி உருவாக்கி அளித்த பின் நவினத்துவ தமிழ் இலக்கியம் இன்று மேலும் தீவிரமாக பேசப்பட வேண்டுமென்றே நினைக்கிறேன். இக்காலக்கட்டத்தின் சிறந்த கதைகள் யதார்த்த வாத அல்லது இயல்புவாத தனிமனித கதைகளாக இருக்க வாய்ப்பில்லை. அவை நல்ல கதைகளாக இருக்கலாம். கச்சிதமான சிறுகதையாக வளர்ந்து வரலாம். ஆனால் இக்காலக்கட்டத்திற்கான சிறந்த கதைகள் கற்பனாவாத கதைகளாகவே இருக்க முடியும்.

இதனை எழுதியவுடன் என்னை மறுக்கவே விரும்புகிறேன். ஏனென்றால் அப்படி இது அல்லது அது என நான் ஒரு வரையறையை சுருக்கிக் கொள்ளவும் விரும்பவில்லை. எல்லாதையும் தொகுத்துக் கொள்ளவே விரும்புகிறேன். ஏனென்றால் பின் நவினத்துவ காலக்கட்டத்தில் தான் பூமணி, இமையம் என தமிழ் இலக்கியத்தின் புதிய யதார்த்தவாத சாத்தியங்களும் சாதனையை நிகழ்த்தியுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதைப் பற்றி விரிவாக விவாதித்தால் கட்டுரை அதன் பேசுபொருளில் இருந்து விலகி செல்லும். எனவே இங்கே நிறுத்துகிறேன்.

இப்படி சொல்லலாமென நினைக்கிறேன். எந்த கதைகள் Multiplicity of Reading இல் Multiplicity கொடுக்கிறதோ அதுவே சிறந்த சிறுகதைகளாக இருக்குமென நினைக்கிறேன். அது ஒரு யதார்த்தவாத கதையாக இருக்கலாம் அல்லது fantasy கதையாக இருக்கலாம். ஆனால் தனிமனிதன் அவன் அகம் என்ற பேசு பொருளில் இருந்து கூடுதலாக ஒரு doze கதையில் இருக்க வேண்டும்.

இது 2020 கான டிரெண்டின் என் அவதானிப்புகள் மட்டுமே. மேலும் நாற்பது, ஐம்பது ஆண்டுகள் கழித்து ஒரு புதிய அலை உருவாகி வரலாம். அப்போது சிறுகதையில் கச்சிதமான வடிவமே சிறந்த கதைகள் என்ற ஒரு அலை உருவாகலாம். நவினத்துவ அலை மீண்டும் வீருகொண்டு எழலாம். அப்போது வைரம் கதை முதன்மை இடத்தை அடையலாம். அதனை நம்மால் ஊகித்து முன்னறிய இயலாது.

எனவே என் கால வரையறையை மிகவும் சுறுக்கி கொண்டே இக்கட்டுரையை அணுகுகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் இருந்து அடுத்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் என வரையறுக்கலாம். தோராயமாக எட்டில் இருந்து பத்து ஆண்டுகள் என்ற வரையறைக்குள் நிறுத்தலாம் என நினைக்கிறேன்.

இறுதியாக ஒரு எழுத்தாளன் இந்த பாணி கதைகளை எழுத வேண்டுமென நான் சொல்ல வரவில்லை. ஒரு கதை டிரெண்டாவதை பார்த்து எழுதுவது ஒரு போலி எழுத்துமுறை என்றே நினைக்கிறேன். ஒரு சிறந்த எழுந்தாளன் அவன் சிறந்த கதைகளில் இருந்து விலகியே புதிய சாத்தியத்தை யோசிப்பான். ஆனால் ஒரு வாசகனுக்கான தரப்பட்டியலை தர முயற்சித்தேன். அந்த தரப்பட்டியலில் இருந்து இப்போதைக்கான டிரெண்டை மட்டுமே சொல்ல முயற்சித்தேன்.

எனவே இக்காலக்கட்டத்திற்கான கதைகள் ஒரு doze அதிகம் தந்தால் மட்டுமே பேசப்படும் என நினைக்கிறேன். மேலும் இவை சிறுகதை டிரெண்டிற்கான எனது அவதானிப்புகள் மட்டுமே. இதற்கு நேர் எதிர் மனநிலையில் ஒரு கட்டுரை எழுதப்பட்டால் அதுவே இக்கட்டுரையின் வெற்றி. குறைந்த பட்சம் இது ஒரு விவாதமாக மாற வேண்டுமென ஒரு எளிய வாசகியாக விரும்புகிறேன். அப்போது தான் புதிய சாத்தியங்களுக்கான பல கதவுகள் திறக்கும். எனவே வல்லினத்தில் தற்போது தொடர்ந்து சிறுகதை எழுதி வரும் அ.பாண்டியன், லதா, அர்வின் குமார், ஜி.எஸ்.வி.நவீன், கிருத்திகா, சண்முகசிவா, ஸ்ரீகாந்தன் போன்றவர்களிடமிருந்து தற்போதைய சிறுகதை டிரெண்ட் என்ன என்பதை ஒட்டி ஒரு விவாத கட்டுரை எழுந்தால் மகிழ்வேன். அதுவே ஆரோக்கியமான இலக்கிய சூழலும் கூட.

நன்றி,

நிரஞ்சனா தேவி.

niranjanadevin95@gmail.com

(Visited 206 times, 1 visits today)