வைரம்: கடிதம் 3

சிறுகதை வைரம்

அன்புள்ள நவீன் அவர்களுக்கு


இருளில் மட்டுமே மின்னும் அந்த கருப்பு வைரம் மனிதன் தன்னிடம் மீதம் வைத்திருக்கும் நல்லவைகளின் படிமமோ? நானும் பார்த்திருக்கிறேன் உச்சகட்ட நெருக்கடியே பேரன்பையோ பெரும் குணத்தையோ வெளி கொணர்கிறது,  ஏனோ பெரும் ஆற்றலின் மரம் சிறிய கசப்பிலேயே விதை ஊன்றுகிறது, விதி விலக்குகள் உண்டு, ஏனோ நல்லத்தனத்திற்கு அவ்ளோ மதிப்பில்லை என்பதை மக்கள் விரைவில் கண்டு கொள்கின்றனர் , மீண்டும் அவற்றை புதைப்பதில் முனைப்பு காட்டாவிடினும் அவ்வாறு அவை புதைகையில் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

யாரோ கசப்பை உமிழ்ந்தபடியே இருக்கிறார்கள் , எதிரே இருப்பவர் கசப்பின் அத்தனை அசைவுகளையும்  அறிந்திருக்கிறார் நாட்குறிப்பில் அடிக்கொடிட்டு கண்டு கண்டு வெம்புகிறார்,  ஆற்றலின் உரமாக இவை இருக்க வாய்ப்புண்டு என்றே கருதுகிறேன், அதே நேரத்தில் அந்த கசப்பின் எதிர் படிமமாக நான் வைரத்தை காண்கிறேன், அனைத்தையும் நீங்கள் புரிந்து கொண்ட பின் உங்களுக்கு எஞ்சும் அந்த வைரம், இரண்டாம் முறை மட்டுமல்ல மீண்டும் மீண்டும் நம் துணையுடனே புதைக்கப்படும் வேறொன்றின் தொடர்ச்சி பொருட்டு. மீண்டும் கசப்பின் வழியே அதை நாம் தோண்டித் தோண்டி எடுத்து மீண்டும் மீண்டும் புதைப்போம்.

விவேக் சன்பாக் இன் வேங்கைச் சவாரி Riding the Tiger,  சிறுமி கொண்டு வந்த மலர்,  பேராசிரியர் தர்மராஜ் அவர்களின் தலை கீழ் பாரதிராஜா ஆகிய விஷயங்களை நினைவூட்டியது தங்கள் நல்ல கதை


அன்புடன்

மணிகண்டன்

அன்பு நவின் நலமே இருப்பீர்கள் என நம்புகிறேன்.

நிரஞ்சனா அவர்களின் கடிதத்தை வாசித்தபிறகு உங்கள் நகம் சிறுகதையை வாசித்தேன். என்னால் தர்க்க ரீதியாக இதை அணுக முடியாவிட்டாலும் என் வாசிப்பில் ‘வைரம்’ சிறுகதையே சிறந்தது.

நகம் சிறுகதையில் நிரஞ்சனா கூறும் அனைத்து அம்சங்களும் வைரம் சிறுகதையிலும் உண்டு. ஆனால் கூடுதலாக அதில் ஒருமை கூடி வந்துள்ளது. அந்த ஒருமையே பல வாசிப்புக்கு சாத்தியமாகிறது. வைரம் சிறுகதையில் உள்ள நேர்மறை தன்மை என்னைக் கவர்ந்தது.

இது சிறந்தது அது சிறந்தது எனச் சொல்லும் தகுதியில் நான் இல்லை. ஆனால் வாசித்து முடித்தவுடன் பலநூறு கதவுகள் திறக்கும் உணர்வை ‘வைரம்’ சிறுகதை கொடுத்தது.

நா.சேகர் நாராயணன்

(Visited 55 times, 1 visits today)