அன்புள்ள நவீன், வணக்கம். நலம்தானே? உங்கள் சமீபத்திய கதைகளில் நேற்று படித்த வைரம் சிறுகதை மிகவும் பிடித்திருந்தது. இயல்பாக வளர்ச்சியுற்று உச்சத்தைத் தொடும் கதை.
‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்’ என்றொரு பழமொழி உண்டு. கல்வியும் நாகரிகமும் சிற்சில பழக்கங்களை மாற்றவும் செழுமைப்படுத்தவும் உதவக்கூடும். ஆனால் பிறவிக்குணம் என ஒன்றுண்டு. அது மாறாது போலும்.
இந்தக் கதையில் வரும் சிறுவன் அப்படித்தான் இருக்கிறான். புத்திசாலி. கல்விமான். நினைவாற்றல் உள்ளவன். அதனாலேயே பட்டம்பெற்று வழக்கறிஞராகவும் பணியாற்றி ஓய்வு பெறுகிறான். ஆனால் என்ன உயர்ந்து என்ன பயன்? அவன் இளமையில் கொண்டிருந்த தன்னகங்காரம், உயர்வுணர்ச்சி, தந்திரம், மேட்டிமைத்தனம் எல்லாம் அப்படியே உள்ளன. கரி வைரமாகும் என்பது உண்மைதான். ஆனால், அந்த நற்பேறு ஆயிரம் கரிகளில் ஒரு கரிக்கு கிடைக்கலாம். மீதமுள்ள 999 கரித்துண்டுகள் கரியாகவே எஞ்சும்.
அவன் கரியாகத் தோன்றி கரியாகவே எஞ்சும் கரித்துண்டு. பெரிய நிலங்களுக்குச் சொந்தக்காரனாக இருக்கலாம். பெரிய படிப்பாளியாக இருக்கலாம். ஆனாலும் கரித்துண்டுதான். நல்ல கதையை வாசிக்கும் வாய்ப்பை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துகள்.
அன்புடன் பாவண்ணன்