வைரம் விவாதம்: வி.ஜி.சூர்யா

அன்பு நவீன்,

வணக்கம்.

உங்களின் நலம் விழைகிறேன்.

உங்கள் தனி தளத்தில் தோழி நிரஞ்சனா தேவி எழுதிய வைரம் – ஒரு விவாதம் கட்டுரையை கண்டேன். தமிழில் இலக்கியத்தில் ஒரு சிறுகதை சார்ந்து விவாதம் தொடங்குவது மகிழ்ச்சி. அந்த விவாதங்கள் மூலமே வாசிப்புக்கான புதிய திறப்புகள் நம்மிடம் திறக்கும். அந்த வகையில் அக்கட்டுரை முக்கியமானதே. ஆனால் அதில் சில போதாமைகள் தெரிகின்றன. அதனை ஒட்டி நான் பேசலாமென நினைக்கிறேன். அவர் போல் நானும் இதனை ஒரு விவாதமாகவே எழுப்ப விரும்புகிறேன்.

அவர் கதைகளின் வடிவம் சார்ந்து பேசியிருந்தார். முதலில் அப்படி இரு கதைகளை எடுத்துக் கொண்டு ஒப்பிட்டாய்வதில் எனக்கு உடன்பாடில்லை. இரண்டாவதாக அவர் இரு கதைகளிலும் முன் வைக்கும் வாசிப்பு.

முதலில் இரண்டு கதைகளை ஒப்பிட்டு பேசலாமா? அப்படி பேசுவதில் தவறில்லை ஆனால் அவை இரண்டும் ஒரே தரிசனத்தை முன்வைக்க வேண்டும். ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடும் போது ஒன்று மற்றொன்றை வளர்த்தெடுக்க வேண்டும். அப்படி வளரும் போது இரண்டு கதைகளை எடுத்து பேசும் போது அர்த்தப்படுகிறது. தோழி தன் தரப்பை முன் வைப்பதற்காக நகம் கதையின் வாசிப்பை ஒரு படி மேலும், வைரம் கதையை ஒரு படி கீழும் வைக்கிறார் எனத் தோன்றுகிறது. முன் முடிவுகளோடு அவர் அதை செய்யவில்லை என்றால் கூட கட்டுரையின் போக்கில் தன்னிச்சையாக அது அப்படி தான் வருகிறது. மாறாக வைரம் கதையின் தரிசனம் எவ்வாறு நகம் கதைக்கு வழு சேர்த்தது என்று சொன்னால் கூட சரியாக இருந்திருக்கும்.

இரண்டாவதாக அவர் முன் வைக்கும் வாசிப்பு, மேலே உள்ள சிக்கல் இதிலும் தெரிகிறது. ஒரு கதையை வாசிக்கும் போது குறைந்த பட்சம் அதனை விவாத தளத்திற்கு எடுத்து செல்லும் போது அதன் உச்சபட்ச வாசிப்பு சாத்தியத்தை முன் வைக்க வேண்டும். அப்போது தான் அடுத்த விவாதம் அதனை தாண்டி எழ வாய்ப்புண்டு.

உதாரணமாக உங்கள் வைரம் கதை முன் வைக்கும் தரிசனமென்ன? அது குமாரசாமியின் வன்மத்தை மட்டும் தான் பேசுகிறதா? அந்த வைரம் என்ற பொருள் அவன் வன்மத்தின் படிமமாக தான் வளர்ந்து வருகிறதா? அவ்வாறென்றால் கதையில் கதை சொல்லிக்கு என்ன அத்தனை பெரிய வேலை?

இலக்கியத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று Polyphonic, அதாவது பல குரல் எழும் தன்மை. அதாவது, இந்த கதையில் வைரம் குமாரசாமியின் வன்மத்தின் வெளிப்பாடாக எழுகிறது என எடுத்துக் கொள்வோம். அப்படி என்றால் அந்த வைரம் கதை சொல்லியான லட்சுமணனுக்கு? குமாரசாமியின் வன்மத்தின் வெளிப்பாடாக தெரிகிறதா என்பது கேள்வி. அப்படி சொன்னால் கதை ஒரு வாசிப்பில் நின்றுவிடுகிறது. ஆனால் அப்படி வைரம் அவன் வன்மத்தின் வெளிப்பாடாக லட்சுமணன் உணர்ந்தால் அவனை தோண்ட சொல்லும் போது அத்தனை ஆர்வத்துடன் ஏன் தோண்ட வேண்டும். “நான் ஏதோ ஒரு வேகத்தில் தோண்ட தொடங்கினேன். எனக்கு அந்த இடம் மிகத் துல்லியமாக நினைவில் இருந்தது.” ஐம்பது வருடங்களுக்கு பிற்பாடு அவன் அந்த வைரத்திற்காகவே அங்கே வந்ததாக நினைக்கிறான். அவனை மீறிய ஒரு விசை அவனை இயக்குகிறது. அப்படியென்றால் அது லட்சுமணனுக்கே வைரமாகிறது, குமாரசாமிக்கு என்றும் அது கருங்கல்லே, அதுவே அவன் உளக் கிலேசையும்.

எது கருங்கல்லை லட்சுமணனுக்கு வைரமாக்குகிறது, குமாரசாமிக்கு வெறும் கருங்கல்லாகவே நின்றுவிடுகிறது என்ற கேள்வியையே கதை முன் வைத்து செல்கிறது.

கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் கதையின் இறுதியில் ஒரு வரி வரும், ”அதனால என்ன எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கிறார்” என்று. அங்கே எது அந்த குழந்தையை ராஜாவாக கற்பனை செய்ய வைத்ததோ அதுவே இக்கதையில் லட்சுமணனிடமும் நிகழ்ந்துள்ளது. அதிலிருந்து இக்கதை தான் முன் வைக்கும் தரிசனத்தை அல்லது கேள்வியை எழுப்புகிறது. அந்த Innocense தான் வைரமாகிறதா? இல்லை அந்த Innocense ஐ இத்தனை ஆண்டுகள் தக்கவைத்து வரும் போதே வைரமாகிறது. அப்படி தமிழ் இலக்கியத்தில் தரிசனம் அமைந்த கதைகள் மிக சொர்ப்பம். ஆகவே எனக்கு வைரம் கதை முக்கியமானதாக படுகிறது.

இப்படி ஒப்பிடும் போது தான் ஒரு கதை வளரும் என்பது என் புரிதல். இங்கே ராஜா வந்திருக்கிறார் கதையும் இக்கதையும் ஒன்றென நிறுவவில்லை. ஆனால் ராஜா வந்திருக்கிறார் கதையின் தரிசனத்துடன் இக்கதையை ஒப்பிடும் போது இக்கதை வளர்கிறது. முந்தைய கதையை மேலும் ஆழத்திற்கு கொண்டு செல்கிறது. அப்படி ஒப்பிடும் போது நல்ல விவாதங்கள் அமையும்.

இதிலிருந்து நகம் கதைக்கு வருகிறேன். நகம் கதைக்கும் இதே கேள்வியை எழுப்பிப் பார்க்கிறேன். மேலே சொன்ன கதைகளோடு ஒப்பிட்டல்ல. நகம் சிறுகதை எழுப்பும் கேள்வி என்ன? அது இன்னும் அங்கே கேள்வியாகவே நிற்கிறது. அத்தனை நிகழ்வுகளுக்கு பின் கப்பளாவிடம் அந்த ஒரு கணம் என்ன நிகழ்ந்தது. அவன் ஏன் அந்த செயற்கை நகத்தை வளர்மதியிடம் அளிக்க வேண்டும்.

அந்த கேள்வியை அதில் வரும் சீன பேய்களின் சடங்கோ, வளர்மதியின் கனவோ, அந்த சீன அரசியின் வரலாறோ வளர்த்தெடுக்கிறதா என்பதே கேள்வி. அப்படி வளர்த்தெடுக்கிறது என்றால் அது சிறந்த கதை. அங்கணம் இல்லை என்றால் அது நல்ல கதை அவ்வளவு தான். என்னை பொறுத்த வரையில் அந்த வரலாறு கதைக்கு மிக முக்கியமானது அது அந்த கேள்வியை இன்னும் ஆழத்திற்கு இட்டு செல்கிறது. அங்கு நிகழும் சடங்கும். அந்த கனவும் கூட எல்லாம் கூட வரும் போதே ஒரு பெரிய கேள்வியாக வந்து நிற்கறது. அந்த நகத்தை ராணி வேடம் கொண்டவள் தூக்கி வீசும் போது வளர்மதிக்குள் நிகழ்வது என்ன? அங்குள்ளவர்கள் ஏன் ஒரு நாடகத்தில் தங்களை அர்ப்பணிக்கிறார்கள். வெறும் சடங்கு அல்லது பூஜைகள் மனித மனதுடன் தொடர்புடையதா? தொன்றுதொட்டு வரும் பாரம்பரியமும், வரலாறும் ஒன்றிணைந்து நம் மனதை ஆட்கொள்கிறதா? அவ்வாறு என்றால் அது அந்த கணப்பொழுதில் கப்பளாவிடம் நிகழ என்ன காரணம்? இப்படி ஒன்றிணைந்து ஒரு கேள்வியை கதை முன் வைக்கிறது.

ஜெயமோகனுடைய திருமுகப்பில் என்ற கதையின் முடிவு இப்படி அமையும். அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து காளி சரண் கண்டதை நானும் கண்டுக் கொண்டேன் என? கதைசொல்லி அந்த கருஞ்சிலையில் அடைந்தது என்ன? என்பது கேள்வி. அதை ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வோடும், சூழலோடும் பொருத்திப் பார்க்கும் போது அவரவருக்கான தரிசனம் எழுகிறது.

அதே இக்கதைக்கும் பொருத்திப் பார்க்கலாம். இங்கே அந்த சடங்கும், வரலாறும் கப்பளாவிடம் நிகழ்த்துவது என்ன? அதிலிருந்து நாம் நம் கற்பனையை வளர்த்து செல்லலாம்.

ஆகவே இரண்டு கதைகளும் தன்னளவில் தனி தனி கேள்விகளையும், தரிசனத்தையும் முன் வைத்து நகர்கிறது. இரண்டையும் ஒன்றிணைத்து ஒரு வாசிப்பை நிகழ்த்தி ஒரு விவாதத்தை ஏற்படுத்த முடியாது. மேலும் எதுவும் டிரெண்டாக வாய்ப்பில்லை. இலக்கியத்தில் டிரெண்டே இல்லாத ஒன்று தான் புதிய டிரெண்டாக வாய்ப்புள்ளது. அப்படி பார்த்தால் எனக்கு வைரம் கதை அது முன் வைக்கும் தரிசனத்தால் ஒரு புதிய டிரெண்டாக படுகிறது. அது அவரவர் ரசனை மற்றும் வாசிப்பு அளவுகோல் சார்ந்தது. அதனை ஒரு பொதுவில் வைத்து ஆராய்வது ஒன்றிரண்டு கதைகளை வைத்து பேச முடியாதென நினைக்கிறேன். அப்படி பேச  வேண்டுமென்றால் அந்த ஒரு கதையை முன்னிறுத்தி சமிப காலத்தில் எழுதிப்பட்டிருக்கும் மற்ற கதைகளோடு ஒப்பிட்டு ஒரு பொது முடிவுக்கு வருவதே சாத்தியம். அந்த கதையோடு அதனை நிறுத்திவிடுவது கட்டுரையின் பலவீனமே.

அந்த கட்டுரையில் Multiplicity of Reading பேசப்பட்டிருந்தது. இன்றும் அதற்கான சிறந்த வடிவமென்பது ஒரு கதையில் ஒரு பொருளோ, இடமோ படிமமாக வளர்ந்து வருவது. இங்கே வைரம், நகம் ஒரு படிமமாக வளர்ந்து வரும்போது தான் Multiplicity of Reading சாத்தியமாகிறது. அதுவே இன்றும் அதற்கான சிறந்த வடிவமும் என நினைக்கிறேன்.

இறுதியாக ஜெயமோகன் முன் வைத்த புதுமைப்பித்தனின் கபாடபுரம் கதைக்கு வருகிறேன். ஜெயமோகன் அதனை புதுமைப்பித்தனின் தலைசிறந்த கதையாக முன் வைப்பது அதன் தரிசனம் சார்ந்து மட்டுமே தவிர அதன் வடிவம் சார்ந்த அல்ல. அது ஒரு மாய யதார்த்த கதையாக இருக்கலாம், மிகுபுனைவாக இருக்கலாம், கற்பனாவாத கதையாக, யதார்த்த கதையாக இருக்கலாம் ஆனால் அது முன் வைக்கும் தரிசனமே முதன்மையானது. மற்றதெல்லாம் இரண்டாம் பட்சமே.

புதுமைபித்தன் இக்கதையை சிறுகதை பேசும் எந்த வடிவத்திலும் பொருத்தி எழுதவில்லை. இலக்கியத்தில் சிறுகதைக்கு சொல்லப்படும் எந்த வடிவமும் இக்கதையில் இல்லை. ஒரு ஒற்றைப்படை தன்மையோ முடிவில் அமைந்து செல்லும் உச்சமோ இல்லை கதை தன் ஒருமையை மீறி செல்கிறது. ஆனால் கதை இந்த மண்ணின் தொன்மத்தை முன் வைக்கிறது. வரலாற்றை அப்படி எழுதிய கதைகளின் முன்னோடி கதை என்ற அளவுகோலில் அது முக்கியமானது.

எனவே கதைகள் எதுவானாலும், வடிவம் எவ்வாறானலும் அது காட்டும் தரிசனமே முதன்மையானது. அந்த தரிசனத்தை நோக்கி வாசகனுள் இட்டு செல்லும் கற்பனை வீச்சே முதன்மை. அதன் தரிசனத்தை நோக்கி நாம் நம்முள் கேள்விகளை எழுப்பும் போதே கதை நம்முள் மேலும் வளர்கிறது.

நன்றி,

வி.ஜி.சூர்யா.

suriyavgsuriya@gmail.com

(Visited 87 times, 1 visits today)