அப்சரா

“இது அப்சராக்களின் உலகம். மற்ற வழிகாட்டிகள் இந்து, பௌத்த ஆலயம் எனச் சொல்வதெல்லாம் ஏடுகளில் தவறாக எழுதப்பட்ட தகவல்கள் மட்டுமே. நீ விரும்பினால் உன்னிடம் அதை நிரூபிப்பேன்” என்று  காதருகில் கிசுகிசுத்தவளின் முகத்தைப் பார்த்தேன்.

மணலில் புரண்டு எழுந்தவள்போல அழுக்கேறிய தோற்றத்தில் நின்றுகொண்டிருந்தாள். கண்கள் குழிகளுக்குள் கிடந்தாலும் ஒளி கொண்டிருந்தன. வெளுத்திருந்த அவள் நீளக்கை டீ-சட்டை ஒரு காலத்தில் கறுநீலத்தில் இருந்திருக்கலாம் என கணித்துக்கொண்டேன். தொப்பி அணிந்திருந்தாள். வெளியில் தெரிந்த முகத்தையும் கைகளையும் மட்டும் வைத்து அவள் வயதைக் கணிக்க முடியாவிட்டாலும் முதியவள் எனப் புரிந்தது. 

என்னுடன் வந்த சுற்றுப்பயணிகள், கிழக்கு திசை நுழைவு கோபுரத்தின் ஒரு புறம் 54 தேவர்களும் மறுபுறம் 54 அசுரர்களும் பாற்கடலைக் கடையும் சிற்பங்களை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அவர்கள் ஆச்சரியப்படுவது சிற்பங்களைப் பார்த்து அல்ல. அவர்கள் கேட்டுக்கேட்டு சலிப்பேறிப்போன ஒரு புராணக் கதையின் நிகர் காட்சியைக் கண்டுதான்,” எனக் கேலியாகச் சிரித்தாள் கிழவி. கரைபடிந்த பற்களைக்கொண்ட அவள் வாயிலிருந்து அபூர்வ மணம் ஒன்று வீசுவதை  உணர்ந்தேன்.

“அறிந்த ஒன்றிலிருந்து அறியாத ஒன்றைச் சென்று அடைவதுதான் கலை,” என்றாள். அவள் ஆங்கிலம் துல்லியமாக இருந்தது. பொதுவாக எனக்கு அப்படித் தெளிவாக ஆங்கிலம் பேசுபவர்களைப் பிடித்துவிடும். அந்தத் தெளிவினாலேயே அவள் சொன்னதை நான் மறுக்க முடியாமல் நின்றேன்.

“நீங்கள் யார்?” என்றேன்.

“என் பெயர் மரியா. நானும் அங்கோர் வாட்டின் வழிகாட்டிதான். ஆனால் நான் இந்த அமுதம் கடையும் சிற்பங்களைக் காட்டுபவளல்ல. அமுதின் சுவையை உணர வைப்பவள்!” என்றாள்.

நான் என்னை ஷாமா என அறிமுகம் செய்துகொண்டேன்.

எனக்கு 1970இல் மெக்ஸிகோவில் நடந்த உலகக் கிண்ண காற்பந்தாட்டப் போட்டியில் புகைப்படம் பிடிக்கச் சென்ற அனுபவம் உள்ளதால் மரியா, பிரேசில் தேசத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என ஊகிப்பது எளிதாக இருந்தது. முகத்தில் பழுப்பு நிறக்கலவை கூடுதலாகவும் கழுத்தில் சரிந்திருந்த சிகை கறுத்தும் இருந்தன. நடுத்தர உயரமே இருந்தாள்.

தொழில் நிமித்தமாகவே நான் அங்கோர் வாட் வந்திருந்தேன். பயணிகள் குழுவுடன் இணைந்திருந்தாலும் நான் அவர்களில் ஒருத்தியல்ல. ‘டீன்’ பயண நிறுவனமே எனக்கு இலவசமாக டிக்கெட் போட்டு அழைத்திருந்தனர். என்னைப்போல இன்னும் மூன்று நாளிதழ் நிருபர்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருந்தது. புதிதாகத் தொடங்கப்பட்ட ‘டீன்’ பயண நிறுவனம் எவ்வளவு சிறப்பாக அங்கோர் வாட் பயணத்தை வழிநடத்துகிறார்கள் எனப் புகழ்ந்து நாளிதழில் கட்டுரையாக எழுத வேண்டியது எனக்கிடப்பட்ட பணி. கூடவே அங்கோர் வாட் சிறப்புகளைச் சொல்லவேண்டும். தலைமை நிருபரின் மனைவிக்குத் தலைப்பிரசவம் என்பதால் என்னை வேறு வழியில்லாமல் அனுப்பிவைத்தார்.

நான் முதல் நாள் இரவே அகழிக்கு அப்பால் நின்று அங்கோர் வாட்டைப் படம் பிடித்தேன். செவ்வகக் கரித்துண்டுகளை நேர்த்தியில்லாமல் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்ததுபோல இருந்தது. மறுநாள் காலையில் கொசுமருந்தின் சாம்பல் துண்டுகள் பிட்டுப் பிட்டு விழுந்ததுபோல வேறொரு தோற்றம். அங்கோர் வாட்டின் கட்டுமானம் செவ்வகக் கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கும் முறையைக்கொண்டது என்பதால் சில இடத்தில் உடலுக்குப் பொருந்தா தலைகள் சேர்க்கப்பட்டிருந்தன. பருத்த உடலுக்குச் சிறுத்த தலைகளும் கருத்த தலைக்கு சாம்பல் உடலுமென வினோதமாகக் காட்சியளித்தன. என்றாவது பெரும் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்து மறுபடியும் அடுக்கப்படும்போது இன்னொரு உடல் வேறொரு தலையுடன் சேர்க்கப்படலாம். அங்கோர் வாட் நேர்த்தியின்மையின் கலைக்கூடம் என எனக்குள் சொல்லிக்கொண்டேன். என் கட்டுரைக்கு அதையே தலைப்பாக வைக்கவும் முடிவெடுத்திருந்தேன். அதன் பிரமாண்டத்தை முடிந்த வரை காமிராவில் பதிவு செய்தேன். என் சொந்த சேமிப்புக்காக மேலும் இரண்டு பிலிம் ரோல்களையும் வாங்கி வைத்துக்கொண்டேன்.

“தேவர்களின் சாந்தமான சிரிப்பைப் பாருங்கள்; அசுரர்களின் திணறும் முகத்தைப் பாருங்கள்!” எனச் சொல்லிக்கொண்டிருந்த என் வழிகாட்டியைப் பார்க்கையில் இப்போது சிரிப்பு வந்தது. நான் மரியாவைப் பார்த்து சிரிக்கவும் ‘பின் தொடர்ந்து வா’ எனக் கண்ணசைவால் கூறினாள். நான் வசியத்துக்குக் கட்டுப்பட்டவள்போல அவள் பின்னால் நடக்கத் தொடங்கினேன்.

உள்ளே செல்லச் செல்ல காலம் பின்நோக்கி நகர்ந்தபடியிருந்தது. கடுமையான மண் பாறைகளுக்கு நடுவில் சிறுதளிர்கள் வேர்பிடித்திருந்தன. இடை வரை ஒரு கல்லும் மார்பு மற்றுமொரு கல்லும் தலை இன்னொரு கல்லாக பார்க்கும் இடமெல்லாம் உடல் பாகங்கள் இணைக்கப்பட்டிருந்தன. 

“இது விஷ்ணு ஆலயமாக இருந்து பௌத்த ஆலயமாக மாற்றப்பட்டது இல்லையா?” என்றேன். நான் அங்கோர் வாட் புறப்படுவதற்கு முன்பே அதன் வரலாற்றைத் தரவாக வாசித்திருந்தேன். எதற்கும் சொல்லி வைப்பது மரியாவுக்கு என் பெயரில் ஒரு மதிப்பை உண்டாக்கும் என நம்பினேன். மேலும் நான் ஒரு பிரபல நாளிதழின் புகைப்பட நிபுணர் எனச் சொல்வதற்கு ஆயத்தமாக இருந்தேன். அது அந்தரங்கமாக எனக்குள் எழும் அச்சத்தைக் குறைக்கக்கூடும்.

“நீ மறுபடி மறுபடி தெரிந்தவற்றையே நெருங்க விரும்புகிறாய். இதைச் சொல்ல ஏராளமான நூல்கள் உள்ளன,” என்றாள் மரியா.

நான் ஒன்றும் சொல்லாமல் சூரியவர்மனின் படை சாம்களை எதிர்த்து நடத்தும் போர்க்காட்சியின் புடைப்புச் சிற்பங்களைத் தடவிப் பார்த்தேன். வெய்யில் சுட்டெரிக்கும் கம்போடியாவில் அப்போதுதான் மழையில் நனைந்ததுபோல சுவர் சில்லிட்டிருந்தது.

“ஷாமா, உன் கையை முகர்ந்து பார். பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்த வாசனையை உணர்வாய். கூடவே போரில் சிந்திய குருதியின் மணமும் கலந்திருக்கும்,” என்றாள் மரியா.

நான் சட்டெனக் கையை இழுத்துக்கொண்டேன். என் பெயரை அவள் அவ்வளவு அழுத்தமாக உச்சரித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.

காலையிலிருந்தே இப்படி ஏராளமான போர்க் காட்சிகளைப் படம் பிடித்திருந்தேன். மேற்கு வாயிலில் பிரமாண்டமாகக் காட்சியளித்த பாரதப் போரின் காட்சிகளை அகலா கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு போரின் உச்சமான கணம் அதில் பதிவாகியிருந்தது. பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்திருப்பதும் பாண்டவர்கள் பல்வேறு ஆயுதங்களுடன் காத்திருப்பதும் என ஒரு வரலாற்றுத் தருணத்தை கண்முன் கொண்டு வந்தன சிற்பங்கள். ஒரு காலத்தை அப்படியே பிடித்து வைப்பதென்பது சாதாரணமல்ல. என்னைப் போன்ற ஒரு புகைப்படக் கலைஞருக்குதான் அதன் மகத்துவம் புரியும் என நினைத்துக்கொண்டேன்.

“இந்த பிரமாண்டங்கள் எல்லாம் அப்சராக்களை மறக்கடிக்கத்தான். கதிரவனை காட்டி நட்சத்திரங்களை மறைப்பதுபோல. இது அப்சராக்களின் உலகம்,” என்றாள் மரியா.

எனக்கு அந்த உவமையே கிளிஷேவாக இருந்தது. தவறான ஒருத்தியிடம் சிக்கிக்கொண்டதாகவே தோன்றியது. திரும்பிப் பார்த்தேன். என்னுடன் வந்த குழுவினரைக் காணவில்லை. நானூறு ஏக்கர் நிலபரப்பில் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் திரிந்துகொண்டிருக்கலாம். காலையில் இருந்தே அவர்களிடம் அடுத்து அடுத்து என்ற அவசரம் மட்டுமே இருந்தது. ஆனால் சரியாக மாலை ஐந்துக்கு பேருந்து நிறுத்தியுள்ள வளாகத்தில் கூடிவிட வேண்டும் என்ற கட்டளை இருந்ததால் தொலைந்துவிடும் பயமில்லை.

“இது அப்சராக்களின் கோயில் என்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டபடி நான்கு முனைகளிலும் முகங்களைக்கொண்ட கோபுரங்களைப் பார்த்தேன். கல்முகங்களை இப்படி திரும்பும் திசையெல்லாம் பார்ப்பது தன்னுணர்வை கூர்மையாக்கியது. அவ்வப்போது என் சேலையைச் சரி செய்தபடியே இருந்தேன். கல் மனிதர்களின் கண்கள் ஏதோ ஓர் ரகசியத்தை பல ஆண்டுகளாக பதுக்கி பழக்கமாகிவிட்டதைப்போல சலனமற்றிருந்தன. 

“கோயிலல்ல… உலகம்!” என்றாள் மரியா.

நான் அப்சராக்களை அறிவேன். ரம்பை, ஊர்வசி, மேனகை என பலரும் தமிழ்ப் படங்களிலேயே எனக்கு அறிமுகமாகியிருந்தனர். பெருத்த மார்பும் சிறுத்த இடையுமாக அப்சராக்களின் சிற்பங்கள் சிலவற்றை மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் நடத்திய கண்காட்சியில் பார்த்திருக்கிறேன். உடன் வந்திருந்த பத்திரிகை ஆசிரியர்தான் திரண்ட மார்புக்கு இடையில் சிக்கியிருந்த கல்நகையை ஆராய்வதுபோல நெடுநேரம் அப்சராக்களின் முலைகளையே பார்த்துக்கொண்டிருந்தார். சிவப்பு நிறச் சட்டைக்கு சிவப்பு நிற பேண்டை தைத்துப் போடும் அவரது அழகுணர்ச்சியின் லட்சணம் எனக்குத் தெரியும் என்பதால் அருவருப்பாக முகத்தை வைத்துக்கொண்டேன்.

“ஆம். தேவர்களும் அசுரர்களும் கடைந்த பாற்கடலில் இருந்து அறுபதாயிரம் அப்சராக்கள் வெளிவந்தார்கள். அறுபதாயிரம் பேர் வசிக்க தனி உலகம் தேவைப்பட்டது. மேலும் அவர்கள் என்றுமே இளமை குன்றாமல் இருக்க விரும்பினார்கள். அதற்காக சிவபெருமானை நோக்கி அறுபதாயிரம் அப்சராக்களும் தவமிருந்தார்கள்.”

“ஓர் அழகான பெண் கேட்டாளே சிவனிடம் வரம் கிடைத்துவிடும் இல்லையா?” என்று கூறிவிட்டு நான் மட்டும் அபத்தமாகச் சிரித்தேன்.

“சிவன் அவர்களுக்கான உலகம் ஒன்றை உருவாக்கினார். அது அப்சரஸ் உலகம்,” என்றாள் மரியா.

“தெரியும்,” என்றேன் அலட்சியமாக.

“ஷாமா… அதுதான் இது!” என்றாள் மரியா.

“ஓ” எனச் சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை. மரியாவின் இருப்பையும் அச்சூழலையும் சாதாரணப்படுத்த விரும்பினேன்.

“இங்கே பார்!” என்று காட்டினாள் மரியா.

அங்கு சுவர் முழுவதும் பல்வேறு நடன அபிநயங்கள் கொண்ட பெண்களின் சிற்பங்கள் இருந்தன. அமர்ந்த நிலையில் ஒரு காலைத் தூக்கியபடியும், ஒரு காலில் நின்ற நிலையில் மறு காலை ஏந்தியபடியும், மலர்களை இரு கைகளில் சுமந்தபடியும், கைகளை நளினமாகச் சுழற்றியபடியும் பல்வேறு அசைவுகளுடன் கூடிய பெண்கள் அவர்கள்.

“இது குட்டணம்” நுனி பாதத்தை மட்டும் பூமியில் அழுத்தியிருக்கும் அடவு ஒன்றைக் கண்டவுடன் கூறினேன்.

“நீ இன்னமும் உனக்குத் தெரிந்ததை மட்டும் தேடுகிறாய் அல்லவா?” என்றவள் “இவை பரதமல்ல. பரதம் அழுத்தமான அசைவு கொண்ட திடமான தீபம் போன்றது. அப்சராக்களின் நடனம் அந்த தீபத்திலிருந்து எழும் புகையைப் போன்றது,” என்றாள்.

“இவர்கள் அப்சராக்களா?” என்றேன்.

“ஏன் சந்தேகமா உள்ளதா?” என மரியா சிரித்தாள்.

என்னால் அந்தப் பெண்களை ரசிக்க முடியவில்லை. இந்திய சிற்பங்களில் இருக்கும் சாமுத்திரிகா லட்சணம் சற்றும் இல்லாத நீள் முகங்கள். சிறிய விழிகள். தடித்த உதடுகள். சிறிய மார்புகள். குறுகிய இடைகள். முத்திரைகள் பிடிக்கும் நீளமான கைகள். தலைக்கு மேலே நாகங்களைப்போல சுருண்டும் நீண்டும் வினோதமான சிகை அலங்காரங்கள்.

“அங்கோர் வாட்டை அறிய இரண்டு பாதைகள் உண்டு ஷாமா. ஒன்று அறிந்ததை மட்டுமே பார்த்துக்கொண்டு செல்லும் பிரமாண்டங்களின் பாதை; மற்றது அறியாததைத் தேடிச்செல்லும் நுட்பங்களின் பாதை,” என்றவள் என் கையைப் பிடித்துக்கொண்டு இருண்ட பாதை ஒன்றில் நுழைந்தாள்.

அதை இருள் எனச் சொல்லிவிட முடியாது. ஆங்காங்கு சூரிய வெளிச்சத்தின் ஒளி கவிந்திருந்தது. அங்கெல்லாம் அப்சராக்களின் நடன அசைவுகளை என்னால் பார்க்க முடிந்தது.

ஒரு கட்டத்தில் என் கையை மரியாவிடமிருந்து விடுவித்துக்கொண்டேன். அப்சராக்கள் நடனம் ஆடியபடியே என்னை வரவேற்று எங்கோ அழைத்துச் செல்வதுபோல தோன்றியது.

சில அப்சராக்கள் இருவராகவும் மூவராகவும் ஐவராகவும் ஒருவரை ஒருவர் அனைத்தபடி இருந்தனர். மணல் கல்லில் கச்சற்ற அவர்கள் மார்புகள் மின்னுவதை ஆச்சரியமாகப் பார்த்தேன். நுனி விரல்களில் மலர் காம்புகளைப் பிடித்தபடியும், தோழியில் அக்குளில் கைவிட்டபடியும், மலராத நீர்த்தாவரங்களை பதுசாகச் சுமந்தபடியும் தங்கள் சிகையில் உள்ள ஒரு மணியைப் பிடித்தபடியும் அவர்களின் கரங்கள் ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டிருந்தன.

தொப்புள் துளைகள் எல்லாச் சிற்பங்களிலும் துல்லியமாக வெளிப்பட்டிருந்தன. புருவங்கள் நெற்றி மையத்தில் பெரும்பாலும் இணைந்திருந்தன. கீழாடை வலைபோல தொடைகளில் படர்ந்து கால்களின் வனப்பைக் காட்டின. வலைகளில் மலர் வடிவங்களின் மெல்லிய செதுக்கல்கள் தெரிந்தன. இடையில் கட்டிய மணிச்சரங்கள் காற்றில் அலைவதுபோல் செதுக்கப்பட்டிருந்தன.

காற்றில் அலையும் தீபத்தின் புகைதான் அப்சரா நடனம் என நடக்க நடக்க புரிந்தது. பூமியிலிருந்து வானுக்குத் தாவுவதைப்போல பெரும்பாலும் ஒற்றை நுனிக்கால்களாலான நடன அசைவில் இருந்தனர். கைகள் வளைந்து வான் நோக்கிச் சென்றன. மரியா சொன்னது சரிதான் என்று தோன்றியது.

பரதத்தில் தோள்களும் இடையும் அசையாது. அப்சராக்களுடையவை அதற்கு நேர் எதிரான நடனம்.

நடந்து நடந்து கால்கள் வலித்தன. மேலும் அங்கு பிரம்மாண்டமான சிற்பங்களும் அடுக்கப்பட்ட கற்களில் தெரியும் காட்சிகளும் ஏராளமாக இருக்க, நூற்றுக்கணக்கான நடன அசைவுகளை மட்டுமே பார்த்தபடி நான் கடந்து வந்த தூரம் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

தொண்டை வரண்டபோது, நிழல் கொடுத்த கற்குடை அருகில் நின்றேன்.

“எதன் அடிப்படையில் இதை அப்சராக்களின் உலகம் என்கிறீர்கள்?” என்றேன்.

“நான் சொல்லவில்லை. அப்சராவே வந்து சொன்னாள்” என்றாள் மரியா. அவள் முதலில் இருந்தவள் போலில்லை. இப்போது அவளது பேச்சில் கம்பீரம் கூடியிருப்பதாகப்பட்டது.

“யாரிடம்?” என்றேன் ஆச்சரியமாக.

பாசி படிந்து கிடந்த சுவரோரம் என்னை அமரச் சொன்ன மரியா, தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள். எதற்கும் இருக்கட்டும் என்று நான் அவற்றை குறிப்புகளாக எழுதிக்கொண்டேன்.

மரியா இவ்வூருக்கு தன் இளமைக் காலத்தில் வந்தவள். அங்கோர் வாட்டை ஓவியமாக வரைவதுதான் அவள் நோக்கம். தற்செயலாக அவள் சந்தவி என்ற உள்ளூர் பெண் ஒருத்தியைச் சந்தித்தாள். அவள் அப்சரா நடனத் தாரகை என அறிந்தவுடன் அங்கோர் வாட் பிரம்மாண்டத்தினுள் அவள் ஆடும் அழகை வரைய விரும்பினாள். ஆனால் சந்தவி அதற்கு ஒரு விதிமுறையை வைத்தாள். முதலில் அங்கோர் வாட் அப்சராக்களின் உலகம் என மரியா முழுமையாக நம்ப வேண்டும். மரியா அதை நம்பினாள்; ஏற்றுக்கொண்டாள். பின்னர் இருளில் மட்டுமே ஒலிக்கும் அப்சராக்களின் இசையில் மட்டுமே தன்னால் ஆட முடியும் என்று சொன்னாள். அன்று மாலை, கோபுரத்தின் உச்சியில் ஏறி இருவரும் தங்களை மறைத்துக்கொண்டவர்கள் யாருமற்ற இரவில் வெளி வந்தார்கள். இரவு நெருங்க நெருங்க மரியாவுக்கு அந்த இசை கேட்டது.

“அது அப்சராக்களை ஆட வைக்கும் இசை. அந்த இரவில் அவள் மட்டும் ஆடவில்லை. சிற்பங்களில் இருந்து வெளிபட்ட ஆயிரக்கணக்கான அப்சராக்கள் அங்கோர் வாட் முழுவதும் ஆடினர்.” என்றாள் மரியா.

நான் அதை மனதால் காட்சிபடுத்தினேன். அப்படி ஒரு புகைப்படம் எடுக்க முடிந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை முதன் முறையாகத் தோன்றியது.

“சந்தவியும் அவர்கள் மத்தியில் ஆடினாள். ஆனால் அவள் அப்போது ஒளி கொண்டிருந்தாள். அவர்களில் ஒருத்தியாகக் கலந்தாள். பின்னர் அவளொரு சிற்பமாக மாறினாள். உன் தலைக்கு மேலிருப்பவள் அவள்தான்,” என்றாள்.

நான் திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன். அங்கே ஓர் அப்சரா இருந்தாள். வலது காலை பூமியில் ஊன்றி அமர்ந்தபடி இடது காலை பின் வளைத்து தலையை நோக்கி செலுத்திக்கொண்டிருந்தாள். இடது கையில் மொட்டு. அது ஒரு யோகா ஆசனம்போல இருந்தது.

நான் அதைப் படம் பிடித்துக்கொண்டேன். இதுபோன்ற ஒரு தினுசான செய்திகளை ஞாயிறு பத்திரிகையில் போட்டால் விரும்பிப்படிப்பார்கள் என மனம் கணித்ததை எண்ணி வெட்கியபடி “அவள் உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா?” என்றேன்.

“சொன்னாள். அங்கோர் வாட் அப்சராக்களின் உலகம் என்ற ரகசியத்தை கொண்டு செல்,” என்றாள்.

எனக்கு அங்கு அமர்ந்திருக்கவே என்னவோபோல் இருந்தது. அங்கோர் வாட் முழுவதும் சுற்றும் பாதுகாவலர்கள் யாரையும் அங்கு காணவில்லை. அவ்விடம் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் சூனியத்தில் நிறைந்திருந்தது.

“நீங்கள் அதையெல்லாம் நம்புகிறீர்களா?” என்றேன். கேட்டவுடனேயே அது அபத்தமான கேள்வி என்று உரைத்தது. உண்மையில் அது நான் என்னை நோக்கி கேட்டுக்கொள்ள விரும்பியதாக இருக்கலாம்.

“நம்பாமல்?” எனச் சிரித்தாள் மரியா. அச்சிரிப்பு என் முதுகெலும்பைச் சில்லிட வைத்தது.

சிறிய இடைவேளைக்குப் பிறகு “ இப்போது நீ நம்புகிறாயா ஷாமா?” என்றாள்.

எனக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான அப்சராக்களின் நடனத்தை என்னால் பார்க்க முடிந்தால் நான் நிச்சயம் அதிர்ஷ்டம் செய்தவள். அவற்றைப் புகைப்படமும்  எடுத்துவிட்டால் நாளிதழில் நான்தான் தலைமை நிருபர். தமிழ் நாளிதழ் என்ன, ஆங்கில நாளிதழுக்குக்கூட என்னைச் சிவப்பு கம்பளம் விரித்து அழைப்பார்கள் என்று தோன்றியது.

“நான் அந்த நடனத்தைப் பார்க்க முடியுமா?” என்றேன்.

“அதற்கு நீ அங்கோர் வாட் அப்சராக்களின் தேசம் என நம்ப வேண்டும்!” என்றாள் மரியா.

“நான் நம்புகிறேன்… அதை நான் காண முடியுமா?” என்றேன்.

“அதிலென்ன சந்தேகம்?” என்றாள். உதட்டில் மந்தகாசப் புன்னகை.

எனக்கு உடல் சிலிர்த்தது. அப்படி அதை பார்க்க முடிந்தால் எப்படிப்பட்ட அனுபவம் என நினைத்துக்கொண்டேன்.

சரியாக ஐந்து மணிக்கு பாதுகாவலர்கள் எல்லோரையும் வெளியேறுபடி அறிவிக்கத் தொடங்கினர். ஆங்காங்கு பொறுத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில் எச்சரிக்கை கேட்டது. ஐந்தரைக்கு மேல் அங்கு இருப்பதால் வனவிலங்குகளினால் ஆபத்து வரலாம் என மறுபடி மறுபடி கூறப்பட்டது. மரியா, என் கைகளைப் பிடித்து, இடிந்து கிடந்த கற்குவியல்களுக்கு இடையில் அழைத்துச் சென்றாள். அங்கே பெரும்பாலும் மக்கியிருந்த குறுகலான மரப்படிகள் வழியாக என்னை ஏற வைத்து மேற்புறம் திறந்திருந்த கோபுரம் ஒன்றினுள் நுழையச் சொன்னாள். அவ்விடம் குளிர்ச்சியாக இருந்தது. கடும் இருள். தொட்ட இடத்திலெல்லாம் ஈரம். எங்கும் பாசியின் மணம்.

“எப்படி இருக்கிறது ஷாமா?” என்றாள் மரியா.

“பயமாக” என் குரலில் உதறல் இருந்தது.

எவ்வளவு ரகசியமாகப் பேசியும் என் குரலின் எதிரொலி பயத்தை மூட்டியது. அவள் சொற்கள் புகைபோல அந்தச் சிறிய கோபுரத்தினுள் சுழன்று அடங்கியதை ஆச்சரியமாக உணர்ந்தேன். மெல்ல மெல்ல வெளியே மனிதப் புழக்கம் குறைவதை உணர முடிந்தது. எனக்கு அச்சம் அதிகரிக்கத் தொடங்கியது. மரியா சொல்வதெல்லாம் கற்பனையாக இருந்தால் இரவு எவ்வளவு கொடூரமானதாக மாறும் என நினைக்கவே மனம் நடுங்கியது.

“கொஞ்சம் அமைதியாக இரு. மனதினுள்ளும். அப்போதுதான் இசை கேட்கும்,” என்றாள் மரியா.

நான் அமைதியாக இருந்தேன். அமைதி என்றால் என் வாழ்நாளில் அப்படி ஒரு நிசப்தத்தை நான் அதுவரை அனுமதித்ததில்லை. அது நீடித்துக்கொண்டே சென்றது. ஒரு நிமிடம் மரியா அங்குதான் இருக்கிறாளா என்றுகூட சந்தேகம் வந்தது. அமைதி என்பது அசைவற்றிருப்பதிலும் உள்ளது என அன்றுதான் எனக்குத் தெரிந்தது. கண் இருளுக்கு மெல்ல மெல்லப் பழகவும் மரியா மெல்லிய சிரிப்புடன் தாளமிட்டு எதையோ ரசிக்கத் தொடங்கியிருப்பது தெரிந்தது. நான் கூர்ந்துகேட்டேன். இசை எதுவும் ஒலிக்கவில்லை. மரியா என்னை முட்டாளாக்குவதாக உணர்ந்தேன். மீண்டும் உற்றுக்கேட்டபோது அங்கோர் வாட்டைச் சுற்றிலும் உள்ள காடுகளில் இருந்து வெளிபடும் பூச்சிகளின் சத்தமே கேட்டது. மரியா விரல்களின் தாளத்தோடு அச்சத்தம் ஒத்திசைவதை அறிந்தபோது எச்சிலை விழுங்கிக்கொண்டேன். நடுக்கம் வந்தது.

அடுத்து சில பறவைகளின் ஒலிகள். தொலைவில் குரங்குகளில் கூச்சல்கள்.

“அது காட்டின் ஒலி,” என்றேன்.

“பேசாதே!” என்றவள் என்னை வெளியே அழைத்துச் சென்றாள்.

இப்போது வானம் வேறு மாதிரி இருந்தது. அடர் நீலம். அதைக் கறுமை என்றும் சொல்லலாம். ஆழ் கடலின் நிறமது. நீலமாகவும் கறுமையாகவும் குழப்பும் நிறம். மாலையில் பிரகாசித்த மணல் சுவர்கள் எல்லாமே கருமையடைந்து வேறொரு அழகில் மினுங்கின.

“சுவர்களைக் கவனி,” என்றாள் ரகசியக் குரலில்.

“அப்சராக்களின் நடன இசை இயற்கையிலிருந்துதான் புறப்பட்டு வருகிறது. பூச்சிகள், பறவைங்கள், மிருகங்கள், மரத்தின் அசைவுகள் எல்லாம் கலந்த ஓர் இசை நம் காதுக்கு கேட்டுக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றார்போல இந்தச் சிற்பங்களின் அசைவுகள் சுவருக்குச் சுவர் மாறுவதை பார். மெல்லிய மாற்றம்தான். நன்கு கவனித்தால் மட்டுமே புலப்படும்.”

நான் உற்றுக் கவனித்தேன். நட்சத்திரங்களின் ஒளியில் சுவர்களின் சிற்பம் அசைவது போலத்தான் இருந்தது.

“அங்கோர் வாட்டை சுற்றி ஓடுகிற அகழியின் சலம்பல் கேட்கிறதா? அதுவும் அந்த இசையோடு இணைவதைக் கேள்” என்றாள் மரியா. அவள் கண்கள் கலங்கியிருப்பதை விழியில் இருந்த நீர்ப்படலம் மின்னுவதில் அறிந்தேன்.

“எல்லா கலைகளையும்போல இசையும் இரவுக்காகத்தான் காத்திருக்கிறது. இரவு அழுத்தமாகப் படர்கையில் இசை இன்னும் தீவிரமாகும். இரவுதான் இசையின் உண்மையான மகத்துவத்தைக் காட்டும். உச்ச இசையில் சிலைகளில் உயிரசைவுகள் எழும். பின் அவை எழுந்து வந்து நடனம் ஆடும். ஆயிரக்கணக்கான அப்சராக்களின் நடனத்தை நீ காண்பாய்,” என்றாள்.

“அது உண்மையா? நீங்கள் அதைப் பார்த்தீர்களா?”

அவ்வளவு நேரம் தன் கதையைச் சொல்லிக்கொண்டிருந்த ஷாமா அபிராமியின் கண்களைக் கூர்ந்து பார்த்தாள். காற்றில் பறக்கும் நரைகளை கைகளால் ஒடுக்கியபடி ரகசியமான குரலில் “பார்த்தேன்” என்றாள்.

தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன் எழுதி வைத்த குறிப்பு புத்தகத்தை அபிராமியிடம் கொடுத்தாள். அபிராமி கடல் கடந்து இந்தியத் தொன்மங்களை தன் நாவலில் இணைப்பதற்காக அங்கோர் வாட் வந்திருந்தாள். ஷாமா கொடுத்த குறிப்புப் புத்தகம் பல ஆண்டுகளாக வெய்யிலில் வாடி அவள் கை வியர்வையில் நனைந்து எளிதில் வாசிக்க முடியாதபடி மங்கியிருந்தது. ஆங்காங்கு பழுப்பு ரேகைகள். அவளிடம் இருந்த புகைப்பட பிலிம்களை வினோதமாகப் பார்த்த அபிராமி “யூஸ் ஆகுமா தெரியல” என்றாள்.

“மரியா எங்க போனாங்க… கடைசியா என்ன சொன்னாங்க?” என்றாள்.

ஷாமா அதற்கு பதில் சொல்லாமல் “குறிப்புப் புத்தகம் உன் நாவலுக்கு உதவக்கூடும்,” என்றாள்.

“எனக்கு அதைக் காட்டுவீங்களா?” என அபிராமி கேட்டாள்.

“எதை?”

“அப்சராக்களின் நடனத்தை… ஆயிரக்கணக்கான அப்சராக்கள் நடனத்தை”

“அதற்கு நீ, அங்கோர் வாட் அப்சராக்களின் உலகம் என முழுமையாக நம்ப வேண்டும்” என்றாள் ஷாமா.

“நம்புகிறேன்” என்றாள் அபிராமி. அவள் கண்ணில் இன்னும் குழந்தமை இருந்தது.

ஷாமா அவள் கைகளைப் பற்றி இருள் சூழ்ந்த இடிந்த சுவர்கள் பக்கம் அழைத்துச் சென்றபோது அறிவிப்பு கேட்கத் தொடங்கியது. வனவிலங்குகளைப் பற்றிய எச்சரிக்கை மறுபடி மறுபடி கேட்டது. ஷாமா அவளைக் குறுகலான மரப்படியில் ஏற்றினாள். அபிராமி கால்வைக்கும் இடமெல்லாம் வழுக்கியது. சில பலகைகள் தடக்கென உடைந்தன. ஆனாலும் அவள் தளராமல் ஏறினாள். அவளது ஆர்வம் உடலின் எல்லா பாகத்திலும் வெளிபட்டது.

“மரியா என்ன ஆனாங்க?” கடைசியா அவங்க என்ன சொன்னாங்க?“ குறுகலான மரப்படிகளில் மூச்சிரைக்க ஏறிக்கொண்டே மீண்டும் அதைக்கேட்டாள்.

“அபிராமி, இது அப்சராக்களோட உலகம். அத மட்டும் முழுசா நம்பு”

ஷாமாவைத் திரும்பிப் பார்க்க முயன்றாள் அபிராமி. குறுகிய இருள் சந்தில் எதுவும் தெரியவில்லை.  இன்னொரு அடி வைத்து மேலே ஏறினாள்.

(Visited 1,556 times, 1 visits today)