நவீன்,
அப்சரா வாசித்து விட்டேன். ஒரு வண்ணமிக்க கனவை இன்னொருவருக்கு அளிக்கும் கதை. வரலாறு ஒரு நினைவை நமக்கு அளிக்கும் அது பகல் போல. தொன்மம் ஒரு கனவை நமக்கு அளிக்கும் அது இரவின் இருள் போல. தொன்மம் நம்மிடம் கோருவது நிபந்தனையற்ற முழுதளிப்பை. அப்போது தான் அது கண் திறக்கும்.
மரியா அக்கனவுள் புதைந்து போகிறாள், பெற்றுக் கொண்ட ஷாமா இப்போது புதைத்தாள், அடுத்தது அபிராமி. இது ஒரு தொன்ம உருவாக்கத்தின் கதையும் கூட.
அங்கோர்வாட் சென்றபோது இது இரவில் எப்படி இருக்கும் என எண்ணியதுண்டு. அடுக்கடுக்காக இருக்கும் கோட்டங்களில் நீர் நிரப்பி அங்கு மலர்கள் மலர்ந்ததை கற்பனையில் பார்த்துக் கொண்டேன். ஜெயமோகனின் ஆயிரம் கால் மண்டபமும் நினைவுக்கு வருகிறது.
இதில் ஒரு மர்மம் உள்ளது, மர்மத்தை ஒட்டின் ஒரு அரூபமான விவரணை உள்ளது, கச்சிதமான வடிவம் உள்ளது ஆகவே இது நல்ல கதையே. ஆனால் இவ்வளவு வலுவான கட்டமைப்பை கொண்ட கதை வாசகனை சுழற்றி அடிதிருக்க வேண்டும், அது நிகழவில்லை. இறுதியில் ஒரு எழுச்சி நிகழ்ந்திருக்க வேண்டும், அதுவும் நிகழவில்லை, அங்கோர் வாட் பேராலயமே ஒரு மர்மத் தொகுப்பு என விரியவில்லை. முத்தாய்ப்பு சற்று கம்மிய விஸ்தாரமான ஒரு இசைக் கச்சேரி போல இருந்தது.
ஆகவே இது வாசிக்கத் தக்க கதை என்கிற அளவில் நிற்கிறது.
கிருஷ்ணன், ஈரோடு
நவீன் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஒருவேளை இரண்டாவது முறை வாசித்து எனக்கு வேறெதுவும் தோன்றலாம். முதல் வாசிப்பில் எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன். முதலில் கதையின் வடிவம் கச்சிதம். எனக்கு உங்களின் ‘கன்னி’ சிறுகதை நினைவுக்கு வந்தது. ஒரு ரகசியத்தை கொண்டுச்செல்லும் கதை. என் நினைவு சரியாக இருந்தால் உங்கள் ‘நாகம்’ சிறுகதையும் அவ்வாறே. எனவே, ரகசியத்தை கடத்திச்செல்லும் கதை வடிவம் உங்களுக்கு நன்கு கைக்கூடி வந்துள்ளது. அதை ரகசியத்துக்கான மொழியில் கடத்துகிறீர்கள்.
நான்கு தலைமுறை பெண்கள். இதில் தன் கதையை அபிராமிக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் ஷாமா 40 ஆண்டுகளாக அந்த ரகசியத்தை வெளிபடுத்த ஒருத்திக்கு காத்திருக்கிறாள். அவளுக்கு ரகசியத்தைச் சொன்ன மரியாவின் தன் முதுமையான வயதிலேயே ரகசியத்தைச் சொல்லியிருக்கிறாள். எனவே இது நூற்றாண்டு காலமாய் தொடரும் ரகசியம். அதில் அகப்படும் பெண்கள் அப்சரஸ்களாகிறார்கள். (அப்சரஸ் என்பது சரியா அப்சரா என்பது சரியா?)
ஆனால் இந்த எல்லா பெண்களும் கல்லாகும் முன் கற்றுச்செல்வது ஒன்றைதான். அறிந்ததில் இருந்து அறியாமையை, இருப்பதில் இருந்து இல்லாமையை. பரதம் இருப்பதென்றால் அப்சரா நடனம் இல்லாமையின் குறியீடு. சிலைகள் அறியமுடிந்தவை என்றால் யாரும் பார்க்காத நடனம் அறிய முடியாமையின் குறியீடு. விலங்குகள் வருமென எச்சரிக்கப்படுகிறது. ஆனால் அவற்றிடமிருந்து வெளிபடும் இசை இல்லாமையின் குறியீடு. கதையின் துவத்திலேயே அவள் அறிந்ததில் இருந்து அறியாத ஒன்றை பற்றி மட்டுமே சொல்கிறாள். கடைசியிலும் அறிய முடியாத ஒன்றையே நம்ப சொல்கிறாள்.
நல்ல கதை. அடுத்தடுத்த கதைகளுக்குக் காத்திருக்கிறேன்.
ராம்
அன்புள்ள நவீன்
அப்சரா கதையை வாசித்தேன். கலையை உணர்வதில் இருக்கும் இருவேறு முரண்கள் (தருக்கம்xகற்பனை) காட்டப்பட்டிருக்கிறது.
சிலையின் மீதான தகவல்கள் மிகுகின்ற போது அவை பிரம்மாண்டமான கல் தொகையாகவே ஷாமாவுக்குக் கடத்தப்படுகிறது. அதன் வடிவமைப்பில் இருக்கும் நேர்த்தியின்மையே நெருடுகிறது. காலத்தை உறையவைக்கும் பிஷ்மரின் அம்பு படுக்கை சிற்பம் அவளைக் கவர்கிறது. ஆனால், கலையை உணர்வதற்கு மேலதிகமான ஒன்றைக் கோருகிறது. நம்பிக்கையின் வழியைத் தேர்கிற போது கலையை உணர முடிகிறது. அந்தக் காலத்துக்குள்ளே பயணம் செய்வதைச் சாத்தியப்படுத்துகிறது. நிசப் நிசப்தத்திலிருந்து பூச்சிகளின் ஒலி, நீரின் சலம்பல், இரவு வெளிச்சம் ஆகியவை துலங்கி வரும் கணம் ஷாமா தன்னையும் அப்ஸ்ரஸாக அடையாளம் காண்கிறாள். அவளும் அப்சரஸாக காலதீதமாக நீடிப்பாள்.
அரவின் குமார்