“புனைவின் வழி மட்டுமே நான் நிறைவை அடைகிறேன்” – ம.நவீன்

கேள்வி: பேய்ச்சிக்கான முதல் விதை விழுந்த நிகழ்வென்று ஏதாவது உள்ளதா? அதை எத்தனை காலம் மனதிற்குள் காத்து வைத்திருந்தீர்கள்?

ம.நவீன்: பேய்ச்சிக்கு முன்பே அதில் பின்னிக்கிடக்கும் இரு சரடுகளை ஒட்டி நான் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். முதல் கதை ‘ஒலி’. 2014இல் எழுதப்பட்ட இக்கதை, 1981இல் லுனாஸில் நடந்த சாராயச் சாவு அடிப்படையிலானது. மற்றது 2018இல் எழுதப்பட்ட ‘பேச்சி’. குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகிவிட்டதாக நம்பும் இளைஞனின் கதை.  இந்த இரண்டுமே எனக்கு நேரடி அனுபவம் இல்லாதவை. லுனாஸில் விஷ சாராயம் குடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்த காலத்தில் நான் பிறந்திருக்கவில்லை. அதுபோல என் குடும்பத்தில் குல தெய்வ வழிபாடு விடுபட்டு போனாதால் அதை ஒட்டிய வழிபாட்டு முறைகள் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் இவை இரண்டும் என்னை வெவ்வேறு வகையில் பின்தொடர்ந்து வந்தன.

லுனாஸிலிருந்து நான் கோலாலம்பூருக்கு மாற்றலாகி வந்தபோது சந்தித்த முதல் நபர், ஒரு வாடகை வண்டி ஓட்டுனர். எங்கிருந்து வருகிறேன் என விசாரித்துவிட்டு, சாராயம் குடித்துச் செத்தவர்கள் ஊரிலிருந்தா என்றுகேட்டார். அதற்கு முன்பும் அந்த வார்த்தையை நான் கேள்விப் பட்டிருந்தாலும் நானூறு கிலோ மீட்டர் தூரம் கடந்து வேறு மாநிலத்துக்குச் சென்றபோதும் என் அடையாளம் விஷ சாராயத்தால் செத்தவர்கள் வாழ்ந்த ஊர்க்காரன் என்றே இருந்தது. அடுத்தது, என் அம்மாவின் பெயர் பேச்சாயி. பள்ளியில் படித்த காலங்களில் அந்தப் பெயரைச் சொல்லவே கூச்சப்படுவேன். வினோதமாக என்னவோபோல இருக்கும். ஆனால் என் தாத்தா தன் குலதெய்வத்தினை எத்தனை நாசுக்காக பதிவு செய்து வைத்துள்ளார் எனத் தெரிந்தபோது நான் அந்தப் பெயரை நேசிக்கத் தொடங்கினேன். கோலாலம்பூரில் குடியேறிய பிறகுதான் லுனாஸுக்கு மறுபடியும் சென்று சாராயச் சாவில் தப்பிப் பிழைத்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன். ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று கற்பனையில் நிகழ்த்திப்பார்த்தேன். பேச்சியம்மன் குறித்து அறிந்துகொள்ளத் தொடங்கினேன்.

மறுபடியும் லுனாஸுக்குத் தகவல் சேகரிக்கச் சென்றபோது எத்தனை பெரிய வரலாற்று நிகழ்வின் சாட்சிகளை நான் அங்கே வாழ்ந்த காலத்தில் கவனிக்காமல் இருந்திருக்கிறேன் என வருத்தமாக இருந்தது. அப்போது எனக்கு நாவலோ, சிறுகதையோ எழுதும் திட்டமெல்லாம் இல்லை. ஒரு கட்டுரை எழுதும் எண்ணம்கூட இல்லை. காரணம், அது குறித்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எனும் அமைப்பு குறுநூல் ஒன்றையே வெளியிட்டிருந்தது. ஓர் எழுத்தாளனாக என்னைச் சார்ந்த வரலாறுகளை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என மட்டும் விரும்பினேன். அவ்வளவுதான். எனக்குத் தகவல்கள் கொடுத்த பலரும் இப்போது உயிருடன் இல்லை. சாராயத்தினால் செத்துப் போனவர்களின் உடல்கள் கிடந்த பாழடைந்த வீடுகளில் நான் சிறுவனாக கண்ணாமூச்சி விளையாடியிருக்கிறேன். அவையெல்லாம் முழுதாக இப்போது அழிக்கப்பட்டுவிட்டன. நாவலில் வரும் குட்டைக்கார முனியாண்டியின் சிலையைக் காணவில்லை. முனீஸ்வரர் கோயிலாக மாறிவிட்ட அக்கோயிலில் அத்தனை காலம் இருந்தவர் கருப்பண்ணசாமி என்றும்; அதை ஆராய்ந்து கண்டுபிடித்த தமிழகத்து ஐயரின் துணையோடு கோயிலின் பின்புறம் சிலையைக் குழிதோண்டி புதைத்து சடங்குகளைச் செய்து முடித்தார்கள் என்றும் தெரியவந்தது. அந்தச் சிலையின் கம்பீரம் என் கண்ணுக்குள்ளேயே உள்ளது. முனியாண்டியோ கருப்பண்ணனோ அறுபது எழுபது ஆண்டுகாலம் அனைத்துக்கும் சாட்சியாக இருந்த ஒரு கடவுளை மண்ணுக்குள் புதைத்துவிட்டார்கள். இப்படிக் கடந்த பத்து ஆண்டுகளில் எல்லாமே மாறியும், மரணித்தும்விட்டன. ஆனால் நான் எனக்குள் சேமித்து வைத்திருந்த உரையாடல்கள் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் புனைவுகளாக உயிர்பெற்றன.

கேள்வி : எது உங்களை பேய்ச்சியை நாவலாக எழுதத்தூண்டியது?

.நவீன் : 2019 மே மாதம் எழுத்தாளர் ஜெயமோகன் முன்னின்று நடத்தும் ஊட்டி முகாமுக்குச் சென்றிருந்தேன். எனக்கு பலவகையிலும் அது முக்கியமான ஒரு பயணம். முகாமில் கலந்துகொள்வது ஒரு பக்கம் என்றால் எழுத்தாளர்களுடன் பேசுவது மற்றுமொரு வகையில் முக்கியமானது. அப்போதுதான் எழுத்தாளர் அருண்மொழி நங்கை அவர்களிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்கு முன் பலமுறை பேசியிருந்தாலும் அந்தப் பயணத்தில்தான் அதிகம் பேசினேன். உரையாடலில் அவர் பங்குபெற்ற விதம் கருத்துகளை முன் வைத்த பாங்கு அவர் மேல் பிரமிப்பை உண்டாக்கியது. அவர் என்னிடம் நாவல் ஒன்றை எழுதும்படி கூறினார். அவரின் அந்தச் சொற்கள் மீண்டும் மலையிலிருந்து இறங்கும்போது எதிரொலித்துக்கொண்டே இருந்தது. அந்த மலையில், அந்தச் சூழலில் அவரிடமிருந்து வெளிப்பட்ட அழுத்தமான கட்டளையாகவே எனக்குள் அது உருமாறியிருந்தது. அது அன்னையின் கட்டளை. என்னால் அதை மீற முடியாது என நினைத்தேன்.  மலேசியா வந்த மறுநாளே நாவலை எழுத ஆரம்பித்தேன். நான் எழுத நினைத்தது என் கம்பம் அழிக்கப்பட்ட கதையை. அந்தக் கம்பத்தில் இருந்த முதியவர்கள் பட்டணங்களுக்குச் சென்று என்ன ஆகிறார்கள் என்பதை. அப்படித்தான் ஓலம்மாவையும் ராமசாமியையும் வைத்து நாவலைத் தொடங்கினேன். அது என்னை வேறு எங்கோ இழுத்துச்செல்வதை தாமதமாகத்தான் நானே புரிந்துகொண்டேன்.

கேள்வி: ராமசாமி போன்ற தாயுமானவரை எழுதும்போது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது? அத்தகைய சாயல் உள்ள ஒருவரை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

.நவீன் : ராமசாமி என்பவர் எங்கள் கம்பத்தில் இருந்தார். அவரை ‘பொட்டை ராமசாமி’ என்று கேலி செய்வார்கள். பெண் தன்மைகொண்ட முதியவர். நான் பதினெட்டு வயதுவரை கம்பத்தில் வாழ்ந்தேன். அப்போது என்னிடம் பெரிதாக அறிவு வளர்ச்சியோ, மன முதிர்ச்சியோ இல்லை. துடுக்குத்தனமும் வன்முறையும்தான் என் குணமாக இருந்தது. என் எழுத்துலக நண்பர்களை இடைநிலைப்பள்ளி ஆசிரியர் வாசுகி அவர்களிடம் அறிமுகப்படுத்தியபோது “படிச்சிக்கிட்டு இருக்கும்போதே கிளாசில காணாம போயிருவான். திரும்பிப் பாத்தா வெளிய எவனையாச்சும் குத்திக்கிட்டு இருப்பான்,” என்றுதான் என்னை நினைவுகூர்ந்தார். இப்படிப்பட்ட ஒருவனிடம் என்ன நேர்மறையான மனநிலை இருந்துவிடப் போகிறது? ராமசாமி எங்கள் கம்பத்தில் மாந்திரீகம் செய்வார். நாவலில் நான் வர்ணித்துள்ளதுபோலதான் அவரது வீடு இருண்டு கிடக்கும். சின்ன வயதிலிருந்தே காடுகளில் சுற்றுவதை இயல்பாகக்கொண்ட எனக்கு மூத்திரம் அடைத்துக்கொண்டால் அவர்தான் மந்திரித்துவிடுவார். அவர் வழி எனக்கு மூலிகைகளைப் பற்றி அறியும் ஆர்வம் வந்தபோதுதான் தன்மையாகப் பேசத் தொடங்கியிருந்தேன். ‘ஒன்னு, ரெண்ட மட்டும் காட்டுறேன்’ என கம்பத்தில் முளைந்துள்ள கரிசலாங்கண்ணி புதரை ரகசியமாகக்காட்டினார். அதில் மூக்குத்திபோல சிறிய வெள்ளைப் பூக்கள் பூத்திருந்தன. நான் பார்த்த மறுநாளே அவை கருக்கிப்போகவும் என்னை சீடனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். உண்மையில் அவருக்குத் தெரியாமல் நான் அவற்றின் இலைகளைப் பறித்துச்செல்லத் திட்டமிட்டிருந்தேன். அது செடிகளுக்கு எப்படியோ தெரிந்திருந்தது. அதுபோல கொய்த்தியோ மணியம். அவர் நாடு கடத்தப்பட்டவர். ஒருகாலத்தில் பெரிய ரௌடி. கொலைகளுக்கு அஞ்சாதவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன். குடிபோதையில் இருக்கும்போது மட்டும் என்னை அருகில் வைத்துக்கொண்டு வேகமாக பாய்ந்து வரும் கத்தியை எப்படி மடக்கிப்பிடிக்க வேண்டும் என்று காட்டுவார். யாரும் நெருங்கிச் செல்லத் துணியாத மலாய் நாகத்தை ஒரு முறை தனி ஆளாக நின்று சாகடித்தார். நாகம் அருகில் வராமல் இருக்க தான் சாப்பிடும் மூலிகளைக் காட்டினார். அவரது மனைவிதான் ஓலம்மா. இவர்களுக்கும் நாவலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாவலுக்குள் வரும் கதாபாத்திரங்களைக் கட்டமைக்க இவர்களின் ஆதாரமான குணங்கள் தேவைப்படுகின்றன. பின்னர் நாவல் தன்னியல்பாக இவர்களுக்கு வெவ்வேறு வண்ணங்களைப் பூசி விட்டது.

கேள்வி: நாவலில் உள்ள நிகழ்வுகளை உங்கள் முன்னோர்களின் வாய்மொழி நினைவுகளாக சிறுவயதில் கேட்டிருக்கிறீர்களா? உதாரணமாக கொப்பேரனின் குழந்தைகள் வரிசையாக இறந்துபோனதும், கணவனை இழந்த பெண்ணிற்கு வெள்ளி வளையல் போடுவது போன்ற பழக்கங்கள்.

.நவீன்: நாவலில் தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான சம்பவங்கள் என் கற்பனைதான். எனக்கு நாட்டார் தெய்வங்கள் குறித்து அறிவதில் ஆர்வம் உண்டு. அப்படி வெள்ளி வளையல் போடும் மரபு குறித்து வாசித்துள்ளேன். நாற்பதுகளில் உள்ள மதுரையைப் பற்றி அறிய எனக்கிருந்த ஒரே வாய்ப்பு ‘புயலிலே ஒரு தோணி’ நாவல்தான். அதுபோல குழந்தைகள் மரிப்பதெல்லாம் நாவல் ஓட்டத்தில் உருவானது. தமிழகத்தில் உள்ள என் முன்னோர்கள் யாருடனும் நாங்கள் தொடர்பில் இல்லை. தொடர்பு அறுபட்டுவிட்டது. என் அப்பாவின் தாத்தா, பாட்டி இருவருமே மலேசியாவில் பிறந்தவர்கள். அம்மாவின் அப்பா தஞ்சையில் பட்டுக்கோட்டை தாலுக்கா எனச் சொன்னது மட்டும் நினைவுண்டு. அம்மாவின் அம்மா திருநெல்வெளி. இவைதவிர வேறு விவரங்கள் தெரியாது. எனவே தமிழகத்தும் எனக்குமான உறவு இலக்கியம் வழி நானே உருவாக்கிக்கொண்டதுதான்.

கேள்வி: நாவலின் பேச்சு வழக்கை எவ்வாறு அகவயப்படுத்தினீர்கள்? நீங்கள் வாழ்ந்த சூழலில் புழக்கத்தில் இருந்ததா?

.நவீன் : நாவல் இரண்டு காலங்களில் நடக்கும். முதலாவது எண்பதுகளில் நடப்பது மற்றது தொண்ணூறுகளில். இந்த இரண்டு காலங்களிலும் வாழ்ந்தவர்கள் நினைவில் வழியாக, காலம் இன்னும் பின்னால் நகர்ந்து செல்லும். நான் தொண்ணூறுகளில் உள்ள மொழியை மட்டுமே நேரில் அறிவேன். உண்மையில் எங்கள் கம்பத்தில் நிறைய முதியவர்கள் இருந்தனர். ஒவ்வொருவரிடமும் நான் அணுக்கமாக இருந்துள்ளேன். அவர்களிடம் நிறையவே உரையாடுவேன். அந்த உரையாடல்களின் மொழிதான் நாவலில் விரவிக்கிடக்கின்றன. சில மொழிகள் நான் புனைவுகளை வாசித்ததன் வழி உள்வாங்கியது. உதாரணமாக நகரத்தார் மொழியை வையாசி என்ற நாவலை வாசித்து உள்வாங்கிக்கொண்டேன்.

கேள்வி: உங்கள் ஊர் முதியவர்கள் பற்றியும் அவர்களுடனான உரையாடலைப் பற்றி சொல்லுங்கள்

நீங்கள் உங்களுக்குள் ஒரு பேரனுபவங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது அது நிகழும் கனத்தில் அறியமாட்டீர்கள். நானும் அப்படித்தான். ஆரம்பப்பள்ளி மாணவனாக இருந்தவரை ஊரில் இருந்த எல்லா தாத்தா, பாட்டிகளிடமும் கதை கேட்பேன். நான் சிலம்பம் பழகிய காலங்களில் மாரியம்மன் கோயில் வளாகத்தில் பிளாக்காயன் கிழவன் என ஒருவர் ஒடிந்துபோய் இருப்பார். அவர் பட்டர்வர்த்தில் பிரபலமாக இருந்த எங்கள் மாஸ்டரின் கம்பு சுத்தலைக் கேலி செய்வார். நான் அவரிடம் பேச்சுக் கொடுப்பேன். “ஒங்க வாத்தியான் ஒழுங்கா சொல்லித்தரலடா” என அவர் ஒரு காலத்தில் எப்படி சிலம்பம் ஆடினார் என விவரிப்பார். அதுபோல எங்கள் கம்பத்திலேயே குருவிக்கார தாத்தா ஒருவர் இருந்தார். ஜோதிடம் பார்க்க அவரிடம் கிளி இல்லை. புறா ஒன்றை பழக்கி வைத்திருந்தார். அவரிடம் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருப்பேன். இப்படிக் கோயில் தலைவராக இருந்த காசி, கம்பத்தில் வசித்த புதம்மா என எல்லோரிடமும் ஓரளவு பேசிப் பழகியிருக்கிறேன். தமிழ்ப் பள்ளியில் பயின்றவரை ஊர் சுற்ற என் குடும்பத்தில் சுதந்திரம் கொடுக்கவில்லை. எனவே கம்பத்தைத்தான் சுற்றிச் சுற்றி வருவேன்.

என் ஆத்தாவும் நல்ல கதைசொல்லி. ஆத்தா என்பது அம்மாவின் அம்மா. பெயர் காளியம்மாள். என் முதல் சிறுகதை தொகுப்பை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன். ஆத்தா கதையை நடிப்பாக நிகழ்த்திக்காட்டுவார். தான் திரைப்படமாகப் பார்த்த நல்லதங்காள் கதையை உணர்ச்சியோடு சொல்வார். ஆத்தாவின் இரு தம்பிகளும் ஆசிரியர்கள். தான் படிக்கவில்லை என்ற ஏக்கம் அவரிடம் உண்டு. ஆனால் அவரின் நுண்ணுணர்வும் நிகழ்த்துத் திறனும் அசாதாரணமானவை. சில சமயம் தான் ஏற்ற வேடத்தில் இருந்து நெடுநேரம் விடுபடாமல் பயமுறுத்திவிடுவார். அவரிடம் நிறைய சோகக் கதைகள் இருந்தன. சின்னப்பிள்ளைகளிடம் பெரியவர்களின் கதையைச் சொன்னால் அம்மா திட்டுவார் என்பதால் அவற்றை ரகசியமாகச் சொல்வார். அவரது மூத்த மகன் சுப்ரமணியம் பாக்கு மரத்தடியில் காரணம் தெரியாமல் செத்துக்கிடந்த கதையைச் சொல்லும்போதெல்லாம் தன் பாதுகாப்பில் இருந்த அவர் மகன் படத்தை எடுத்துப்பார்த்து கண்கலங்குவார். நான் எல்லா கதைகளையும் சிரித்துக்கொண்டுதான் கேட்டிருக்கிறேன். அந்தத் துக்கம் என்னை வந்தடைய இருபத்து ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.

கேள்வி : அழிவைக்காணும் பதற்றநிலையின் உச்சத்தில் அழித்தல் என்பது பூரணவிசை கொள்வதை நம் புராணங்களில் காண்கிறோம். இறுதியில் தூய அழிவுசக்தியாக மட்டும் நிற்கும் ஓலம்மா பேய்ச்சியின் மானிட வடிவாகிறாள். அது அவள் உணர்ந்த அறத்திலிருந்து எழுவதாகக்கொண்டால், தீயசக்திகளை அழிக்கும் பேய்ச்சி, தான் வளர்த்த உயிர்களைத் தானே அழித்தல் என்பது எவ்வகையில் சேரும்? இது அறமின்மை ஏற்படுத்தும் வெடிப்பு சூழலில் நன்மை, தீமை பேதமின்றி எல்லாமே அழியும் என்பதைக் குறிக்கிறதா?

பதில்: பேய்ச்சி என்ற குறியீடு ஓலம்மாவை மட்டும் சார்ந்ததில்லை. அதில் உள்ள எல்லா பெண்களும் பேய்ச்சிகள்தான். சின்னி, மாலதி, காத்தாயி எல்லாருமே பேய்ச்சிகள்தான். இவர்களில் பெரிய பேய்ச்சி ராமசாமி. பெண்தன்மை அவரைவிட்டு அகன்றபிறகு அவர் யாரையும் கொல்லவில்லை. தாய்மை என்பதை ஒட்டிய ஆதாரமான கேள்வியைத்தான் பேய்ச்சி நாவல் முன் வைத்துள்ளதாக நான் அதை தள்ளி நின்று வாசிக்கும்போது உணர்கிறேன். இப்படி பேய்ச்சியை ஒட்டி ஏராளமான வாசிப்புகள் வந்துள்ளன. எழுத்தாளனாக நான் அப்படி எதையும் திட்டமிட்டு உருவாக்கவில்லை.

கேள்வி : பெற்ற பிள்ளையைவிட பேரப்பிள்ளை பெரிது என்ற பழமொழி நம் வழக்கில் உண்டு. நாவலில் ஓலம்மாவிற்கும் அப்போய்க்குமான பந்தம் நெகிழ்ச்சியானது. தாயாக தன் மகளிடம் பொறுமை காக்கும் ஓலம்மா. மணியத்தின் ஓலம்மா. அப்போயின் ஓலம்மா என்று அவள் அடைகாத்த பொறுமை வெடித்து சிதறும் ஒலம்மா என்று நாவல் முழுதும் விரிந்து நிற்கும் ஓலம்மாவின் கதாபாத்திரம் தமிழ் நாவல்களின் பெண்பாத்திரங்களில் முக்கியமானது. அந்தக் கதாபாத்திரத்தை வடிக்கும்போது இயல்பாக இத்தனை நிறங்களுடன் திரண்டு வந்ததா? முன்பே இத்தனை ஆகிருதியுடன் மனதில் இருந்ததா?

.நவீன் : நாவலை நான் ஒன்பது நாட்களில் எழுதி முடித்தேன். ஒவ்வொருநாளும் நாவலுக்குள் என்ன நிகழ்கிறது எனப் பார்ப்பதுதான் என் வேலையாக இருந்தது. அந்தக் காலங்களில் நான் பெரும்பாலும் மாடியில்தான் இருந்தேன். சாப்பிட மட்டுமே கீழே இறங்கினேன். ஏன் இந்தப் பாத்திரங்கள் இப்படி மாறுகிறார்கள்? ஏன் இத்தனைக் கோரமாகக் கொலை செய்கிறார்கள்? என்பது எனக்கும் கேள்வியாக இருந்தது. நாவலுக்குள் கதாபாத்திரம் அடையும் உணர்ச்சிகளையெல்லாம் நானும் அடைந்தேன். என் உடல்நிலை கொஞ்சம் பாதித்தது. ஆனால் என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை. புனைவின் பைத்தியக்காரநிலை அதுதான் என அப்போதுதான் உணர்ந்தேன். எனவே எழுதும்போது எதுவுமே என் மனதில் திட்டவட்டமாக இல்லை.

கேள்வி: நாவலின் நிலக்காட்சிகள், மரங்கள், பறவைகள் குறிப்பாக நாய்கள் நாவல் முழுக்க நிறைந்துள்ளன. இது நாவலை உயிர்ப்பு கொள்ளச்செய்கிறது. இவையெல்லாம் நீங்கள் சிறுவயதிலிருந்து கவனித்து உள்வாங்கிக்கொண்டவையா?

.நவீன் : திட்டமிட்டெல்லாம் அப்படி எதையும் உள்வாங்க முடியாது. நமக்கு தேவையானவை மட்டுமே ஆழ்மனதில் பதிகின்றன. அப்படி பதிந்துள்ளது எதுவென எழுதும்போதே நமக்கே புரிகிறது. என் இளமைக் காலம் மிகவும் சுவாரசியமானது. பெரும் மரங்களும் புதர்களும் சூழ்ந்துள்ள சிறு காட்டுக்கு மத்தியில் எங்கள் வீடு. ஓங்கிக் குரல் எடுத்துக் கத்தினாலும் கேட்காத தொலைவில் பக்கத்து வீடுகள் இருக்கும். எனவே பறவைகள், பாம்புகள், உடும்புகள், விஷப் பூச்சிகள், தவளைகள், வண்டுகள், புனுகுப் பூனைகள், அணில்கள் என ஒவ்வொருநாளும் ஏராளமான உயிர்களைப் பார்த்துவிடுவேன். பாம்புகளிடம் இருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ள மூன்று நாய்களும் பூனைகளும் ஆங்சாக்களும் வளர்தோம். பின்னர் அப்படியே அது வளர்ந்து வான்கோழிகள், ஆடுகள், பண்ணைக் கோழிகள் என பெருகின. சில சமயம் எங்கிருந்தாவது வரும் பாம்புகள், தேள்கள், பெரிய மரவட்டைகள், ஆமைகள் போன்றவற்றையும் பிடித்து ஏதாவது ஒரு குடுவையில் போட்டு வளர்ப்பதுண்டு. முறையாக வளர்க்கத் தெரியாததால் கொஞ்ச நாட்களிலேயே அவை இறந்துவிடும். அப்படி புதர்களில் இருந்து எடுத்து வளர்த்த இரு குருவிக்குஞ்சுகளை வாழைப்பழம் கொடுத்தே கொன்றுள்ளேன். அறியாமைதான்.

நாய்கள் இல்லாமல் நான் இருந்ததில்லை. எனது எட்டு வயதில் வீட்டில் மூன்று நாய்கள் இருந்தன. மூன்று நாய்களும் பல்வேறு நோய்களாலும் பாம்புகளின் விஷத் தாக்குதாலும் இறந்தபிறகு எனக்குக் கிடைத்தவந்தான் கருப்பன். அவனைக் கட்டிப்போட வேண்டிய அவசியமே இல்லை. என்னை நன்கு அறிந்தவன். உண்மையான பெயர் போப்பி. நான் வளர்த்த எல்லா நாய்களின் பெயர்களும் போப்பிதான். அவை கருப்பாகத்தான் இருக்கும். அவனுடன் காடுகளில் சுற்றுவதுதான் பள்ளி முடிந்து என் வேலையாக இருந்தது. காட்டை அவன்தான் எனக்கு அறிமுகப்படுத்தினான். அது தவிர, கொய்தியோ மணியம் உடும்பு வேட்டைக்காரர் என்பதால் நான்கைந்து நாய்களை வளர்த்தார். என்னிடம் எல்லா நாய்களும் நெருக்கமாகிவிடும். ஒரு மழைநாளில் அவர் பிடித்து வைத்திருந்த உடும்பு, கட்டில் இருந்து விடுபட்டு அவர் கட்டை விரலைப் பிடித்துவிட்டது. உடும்பிடம் இருந்து தப்பிக்க வழியில்லாமல் கட்டை விரலை கத்தியால் வெட்டி எடுத்தார். கம்பத்தில் விலங்குகளும் மனிதர்களும் ஒரு வகையாக சேர்ந்துதான் வாழ்ந்தார்கள். 

கேள்வி: ஓர் ஆசிரியராக நீங்கள் குழந்தைகளுடனே இருக்கும் வாய்ப்பைப் பெற்றவர். அப்போய் போன்ற சிறுவனை எழுத்தில் கொண்டு வரும்போது உங்கள் தொழில் சூழலில் உள்ள சிறுவர்களின் சாயல் விழுந்ததா?

.நவீன்: முன்பே சொன்னதுபோல எனக்கு நான் சிறுவனாக இருந்த பருவமே மனநிறைவானது. அந்த அனுபவம் என் மாணவர்களுக்குக் கிடைத்திருக்குமா எனத் தெரியவில்லை. என் மாலை நேரங்களில் கொய்யா மரக்கிளைகளில்தான் நான் கழிப்பேன். பாடநூல்களை மரத்தில் அமர்ந்தபடியே வாசிப்பேன். வீட்டைச் சுற்றி நிறைய மரங்கள் இருந்தன. பப்பாளி, நார்த்தங்காய், புளிச்சக்காய், அமரங்காய், வாழை, ரம்புத்தான், கொய்யா, ஜம்பு என ஏராளம். காய்த்துக்கிடக்கும் நார்த்தங்காய்களையும் ஜம்புக்காய்களையும் பறித்து விற்றால் நல்ல பணம் கிடைக்கும். காடும் மரங்களும் எனக்கு நண்பர்களாக இருந்தன. எங்கள் ஊரில் ஆற்றோரம் ஒரு சுடுகாடும் புத்தர் ஆலயமும் இருக்கும். நான் அதிகம் செல்லும் இடம் அதுதான். அவ்விடத்தை என் எழுத்துலக நண்பர்கள் பலருக்கும் காட்டியிருக்கிறேன். லுனாஸ் நதி புத்தர் கோயிலுக்குள் புகுந்து மீண்டும் அடுத்தபக்க நதி தொடர்ச்சியுடன் இணைவதை பல காலம் அமர்ந்து ரசித்துள்ளேன்.

திடீரென எனக்கு புத்தபிக்குவாக ஆசை எழுந்தபோது அரைகுறை ஆங்கிலத்தில் அங்குள்ள தாய்லாந்து புத்த குருவிடம் உரையாடி இருக்கிறேன். அவருக்கு என்னைப் பிடித்திருந்தது. மற்ற புத்தபிக்குகளுடன் சேர்ந்து நடை தியானம் செய்ய முயன்றுள்ளேன். அங்கு அது மிகப்பிரபலம். அதில் பயிற்சி பெற வெளிநாட்டில் இருந்தெல்லாம் பலரும் வருவார்கள். மொட்டை போடுவது கட்டாயம் இல்லையென்றால் நான் புத்தபிக்குவாக மாறியிருப்பேன். என் உலகம் மிகச் சிறியது. இடைநிலைப்பள்ளியில் இருந்த மற்ற நண்பர்களைப்போல நேரம், காலம் இல்லாமல் வெளியில் சுற்றும் சுதந்திரம் எனக்கு பதினாறு வயதுவரை கிடைக்கவில்லை. அதனால் அறிமுகமான உலகை ஆழமாக அறிந்துகொண்டேன். இதைப் பற்றியெல்லாம் விரிவாகவே கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.

கேள்வி : தோக் குரு ராமசாமியிடம் பற்று பேரன்பை அழிக்கும். எதற்கு பயந்தாயோ அதன்மேல் பேரன்பு வை…’என்கிறார். இந்த வாக்கியத்தை நாவல் காட்டும் மனிதர்களின் வாழ்வுடன் இணைத்துப் பார்க்கும்போது நாவல் அன்பின் எதிர்திசையில் நின்று பேரன்பைச் சுட்டுகிறது எனக்கொள்ளலாமா?

.நவீன் : தோக் குரு மட்டுமல்ல; நாவலில் வந்து யார் சொல்லும் தத்துவங்களுக்கும் வாழ்வு குறித்த விளக்கங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த மனிதர்கள் அவ்வாறு சிந்தித்தனர். நான் அவர்கள் வழியாக வாழ்வைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். புனைவாசிரியன் தன் புனைவில் தன் ஆன்மாவை பலநூறாக உடைத்து இன்னொரு கதாபாத்திரத்தின் உள் தற்காலிகமாக நுழைகிறான். அந்தப் பாத்திரங்கள் அதனதன் தன்மையில் தங்கள் விருப்பப்படி இயங்க அனுமதி கொடுக்கிறான். அவர்கள் வழியாகவே அவன் தன்னை அறிகிறான். அல்லது வாழ்க்கையை மேலும் கூடுதலாகப் புரிந்துகொள்கிறான். மற்றபடி அவனும் உங்களைப் போன்ற ஒரு பார்வையாளனே. அதில் உள்ள சொற்கள் அவன் வழியாக வந்ததே அன்றி அவன் சொன்னதல்ல.

கேள்வி : இலக்கியத்தின் இயன்ற திசைகளில் எல்லாம் முட்டிமோதும் ஆற்றலை எங்கிருந்து பெறுகிறீர்கள்?

.நவீன் : நான் எழுத்தாளன் மட்டும்தான் என்று அழுத்தமாகத் தெரிந்தபோது. அதை நான் பேய்ச்சியை எழுதி முடித்தபோதுதான் ஆழமாக உணர்ந்தேன். என் முதுகலைப் படிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே காலத்தில்தான் பேய்ச்சி நாவலை எழுதினேன். இரு வெவ்வேறு தன்மை கொண்ட பணிகளை ஒரே காலத்தில் செய்தேன். முதுகலை படிப்பில் பட்டம் பெற்றபோது எனக்கு எவ்வகையிலும் அது சந்தோசத்தைக் கொடுக்கவில்லை. என் முதுகலையை முடித்தபிறகு முனைவர் பட்டத்துக்காக மேற்கொண்டு படிக்கச் சொன்ன அனைவரிடமும் அதை மட்டும்தான் சொன்னேன். அதற்கு முன் எனது இளங்கலை பட்டமளிப்பு விழாவிலும் நான் கலந்துகொள்ளவில்லை. முதுகலையிலும் கலந்துகொள்ள மாட்டேன் எனச் சொல்லிவிட்டேன். புனைவின் வழி மட்டுமே நான் நிறைவை அடைகிறேன். என் நாவலை ஒருவர்கூட வாசிக்காமல் போகட்டுமே. அந்த நிறைவுக்கு ஈடில்லை. ஒரு துறவி தவத்தில் அடையும் நிறைவை போன்றது அது. புனைவில் இயங்குவது புகழ், பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. நான் மிக இளமையிலேயே அவற்றைக் கடந்து வந்தவன். நான் என்னை முழுமையாக உணர்வது இலக்கியத்தில்தான். அதன் வழியாகத்தான்  நான் என்னை அறிந்துகொள்கிறேன். எனவே நான் வேறு எப்படியாகவும் இருக்கமுடியாது.

கேள்வி: உங்களின் வளரிளம் பருவத்தின் ஆளுமைகள், கனவுகள் பற்றி

.நவீன் : விடலைப்பருவத்தைக் குறிப்பிடுகிறீர்கள் அல்லவா? கோலாலம்பூருக்கு வந்த புதிது அது. எனது பத்தொன்பதாவது வயதில் ஓவியர் ராஜா என்பவர் என்னை மனநலப் பயிற்சி மையத்தில் சேர்த்தார். அது ஒருவகையான ஆன்மிக முகாம். ஐந்து நாட்களுக்கு நடக்கும். ஓவியர் ராஜா என் அப்பாவின் தாய் மாமா. நான் அதிகமாகக் கோபப்படுவதாலும் வன்மமாகச் சிந்திப்பதாலும் என்னை அதில் சேர்த்து நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல குடிமகனாக்க குடும்பத்தில் எல்லாரும் முடிவு செய்தனர். ஐந்து நாட்கள் கழிந்த பிறகு நமக்கு வேண்டிய ஒரு வரத்தை தாளில் எழுத வேண்டும். என் வயது பையன்கள் பலரும் அதில் கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் கேட்ட வரங்களை பின்னர் பேசிக்கொண்டோம். பெரும்பாலும் அவர்களது வரங்களெல்லாம் அன்றைய நவீனப் பொருள்கள் அல்லது வாகனங்களை வாங்குவதாக இருந்தது. ஐந்து நாள் பயிற்சியில் நான் அமைதியடைந்த மனநிலையில் இருந்தேன். எனக்கு அப்போது ஒன்றுமட்டுமே தோன்றியது. நான் தமிழில் சிறந்த எழுத்தாளனாக இருக்க வேண்டுமென எழுதினேன். அதை வாசித்த பயிற்சியாளர் குமரனுக்கு என் மீது நெருக்கம் ஏற்பட்டது. நான் இளமையிலேயே என்னை எழுத்தாளனாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கிறேன். ஆனால் மெல்ல மெல்ல அது மாறியது. உலகியல் மீதான பற்றுதல் கூடியது.

கேள்வி : எவ்வாறான பற்றுதல்?

.நவீன்: ஜனரஞ்சக இதழ்களில் அதிகமாக எழுத ஆரம்பித்தேன். அப்போது ‘மன்னன்’ என்ற மாத இதழ் பத்தாயிரம் பிரதிகளுக்கு அதிகமாக விற்றன. அதில் துணை ஆசிரியராக இருந்தேன். மாதம் தோறும் என் பெயருக்கு வரும் கடிதங்கள் எனக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். வாசகர் விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டு மழையில் நனைவதுண்டு. வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் என் எழுத்துகளை வடிவமைத்துக்கொண்டேன். இருபதாயிரத்துக்கும் அதிகமாக விற்பனையான நயனம் இதழில் என் கவிதைகள் வாரம்தோறும் வந்தன. அதன் பின்னர் மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்திய புதுக்கவிதைப் போட்டிகளில் கலந்துகொள்வது பரிசு பெறுவது எனத் தொடர்ந்தது. சுமாராக எழுதினாலும் பாராட்டுக்கும் விருதுக்கும் மலேசிய எழுத்தாளர் சங்கத்தில் பஞ்சம் இருக்காது. சும்மா கை நீட்டினால் கூட இரண்டு விருதுகளைக் கொடுத்துவிட்டுதான் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள். இப்படி வளர்ந்து வந்த காலத்தில் எனக்கு சற்று அதிகமான வெளிச்சமே கிடைத்தது. ஆனால் அந்த வெளிச்சம் இலக்கியம் அல்ல என உணர்த்தியவர் சண்முகசிவா. என் வாழ்வில் எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் நுழைவு முக்கியமானது. அவர்தான் சுந்தர ராமசாமியை எனக்கு அறிமுகப்படுத்தினார். சுந்தர ராமசாமியின் வழியாக நான் தீவிர இலக்கியம் என்ன என்பதை அறிந்தேன். அவ்வயதில் அந்த வெளிச்சங்களை விட்டு வருவது சிரமம்தான். ஆனால் என் வாசிப்பு பலவித குழப்பங்களுடன் என்னை அதற்கு தயார்ப்படுத்தியது. 2005இல் மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றேன். அதே ஆண்டு பேரவை கதைகளிலும் இரண்டாவது பரிசு. அதோடு இனி எந்தப் போட்டியிலும் கலந்துகொள்வதில்லை என முடிவெடுத்து அறிவித்தேன். வெகுசன இதழ்களில் எழுதுவதை முழுமையாக நிறுத்தினேன். இப்போதுவரை என் நூல்களை எந்த விருதுக்கும் போட்டிகளுக்கும் அனுப்பி வைப்பதில்லை. 2006இல் ‘காதல்’ எனும் சிற்றிதழை நண்பர்கள் துணையுடன் உருவாக்கினேன். 2007இல் வல்லினம் வந்தது. என் படைப்புச் சுதந்திரத்திற்கான களங்களை நானே உருவாக்கிக்கொண்டேன். அதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கவோ, மடக்கிக்கொள்ளவோ நான் தயாராக இல்லை. இப்போது இதழ்களின் பின்புலம் குறித்த தயக்கங்கள் இல்லை. களம் எதுவாக இருந்தாலும் நான் எழுதுவதை இதழ்கள் பிரசுரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே படைப்புகளைத் தருகிறேன். இலக்கியம் என்பது நூல்களின் விற்பனை எண்ணிக்கை, வாசகர்களின் எண்ணிக்கை எனும் எண்ணத்தைக் கடந்துவர சண்முகசிவாவும் அவர் வழியாக சுந்தர ராமசாமியுமே ஆசிரியர்களாக இருந்தனர்.

கேள்வி : ஓர் எழுத்தாளர் தன் எழுத்தைப் பற்றி வரையறுத்து, குறுக்கி எதையும் கூறிவிட முடியாது. என்றாலும் உங்களை எழுத வைக்கும் விசை மற்றும் உங்கள் எழுத்தின் ஆதார கேள்விகளாக எவற்றை கூறுவீர்கள்?

.நவீன் : ஒன்றும் இல்லை. எனக்கு பல விடயங்கள் தெரியாது. தமிழைத் தவிர பிற மொழிகளில் பெரிய புலமை இல்லை. கணிதம் அவ்வளவாக வராது. பாதைகளை நினைவில் வைத்திருக்க முடியாததால் பலவித சிக்கல்களுக்கு ஆளாகியிருக்கிறேன். ஆசிரியராகப் பள்ளியில் வழங்கப்படும் கோப்பு வேலைகளை நான்தான் கடைசியாகச் செய்து முடிப்பேன். கடந்த ஆண்டு வழக்கமான பதவி உயர்வு விண்ணப்பத்தைக்கூட செய்யாமல் விட்டதால் தாமதமாகவே எனக்கு அது வழங்கப்பட்டது. வங்கிகளில் கொடுக்கும் பாரங்களைப் பார்த்தவுடன் எனக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டுவிடும். என் கார் எண்களை யாராவது கேட்டால் கைபேசியில் உள்ள பதிவைப் பார்த்த பிறகுதான் சொல்வேன். எனக்கு எதுவும் நினைவில் இருப்பதில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் இலக்கியமும் எழுத்தும் மட்டும்தான். அதனால் அதைச் செய்கிறேன். அதுவும் என்றாவது எனக்குச் சரியாக தெரியவில்லை என்று தோன்றினால் முழுநேர பதிப்பாளராகி விடுவேன்.

கேள்வி : யாழ், தமிழாசியா போன்ற நிறுவனங்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

பதில் : எல்லா பணிகளிலும் புத்தாக்க சிந்தனை (கிரேயிட்டிவிட்டி) சார்ந்த தேவைகள் உள்ளன. நான் அதில் மட்டுமே என்னை சம்பந்தப்படுத்திக்கொள்கிறேன். உதாரணமாக பள்ளியில் மாணவர்களுடன் இருப்பது எனக்கு உவப்பானது. கோப்புப் பணிகளே காலை வாரிவிடும். யாழ், மாணவர்களுக்காக நடத்தப்படும் நிறுவனம். அதில் நூல் தயாரிப்பில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன். இதுவரை மலேசியாவில் இல்லாத வகையில் பயிற்சி நூல்களை உருவாக்குகிறேன். ஒரு நூல் தயாரிப்புக்கு ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறேன். அதுபோல தமிழாசியாவில் என்ன வகையான நூல்களை கொண்டு வர வேண்டுமென்று நானே முடிவு செய்கிறேன். அதை தகுந்த வாசகர்களிடம் சேர்க்கிறேன். நான் மலேசிய இலக்கியத்தின் ஒரு காலகட்டத்தை முன்நோக்கி நகர்த்த முடியும் என்ற உறுதி கொண்டவன். அதற்கு பொருளாதார பலமும் முக்கியம். எனவே அந்த முயற்சிகளுக்கான பொருளியல் பலத்தையும் நானே உருவாக்கிக்கொள்கிறேன்.

கேள்வி: அடுத்து என்ன எழுதுகிறீர்கள்?

.நவீன் : சிகண்டி என்ற நாவல். உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்  மெய்ப்பு பார்க்கும் பணி நடக்கிறது. மிக விரைவில் வெளியீடு காணும்.

(Visited 385 times, 1 visits today)