அப்சரா: கடிதம் 5

சிறுகதை : அப்சரா

அன்புள்ள நவீன்,  வரலாற்றுக்குள் இருக்கும் வரலாறு இயல்பாகவே சுவாரசியத்தையும் மர்மத்தையும் கொண்டுள்ளது. அது புனைவு வடிவில் எழுதப்படுகையில்அதன் மர்மம் இன்னும் கூடுகிறது. அவ்வகையில் அப்சரா சிறுகதையை சுவாரசியமான புனைவாக வாசிக்க முடிந்தது.

வரலாறு ஏடுகளாலேயே கட்டப்படுகிறது. ஆனால் அவை சடங்கையோ பண்பாட்டையோ ஆதாரமாகக் கொள்வதில்லை. புதிய வரலாற்று எழுத்துமுறை பண்பாட்டையும் சடங்கையும் வாய்மொழிப் பாடல்களையும் கணக்கில் கொள்ளும். அதை நாம் நாட்டுப்புறவியல் என்கிறோம். அவ்வகையில் ஜெயமோகனின் “நச்சரவம்” முக்கியமான சிறுகதை என நான் நினைக்கிறேன். அங்கோர்வாட் ஏடுகள் குறித்த பவுத்த இந்து கதைகள் தான் நமக்கு தெரிகிறது. ஆனால் அங்குள்ள அப்ஸரா குறித்து தெரிவதில்லை. 


“ஆம். தேவர்களும் அசுரர்களும் கடைந்த பாற்கடலில் இருந்து அறுபதாயிரம் அப்சராக்கள் வெளிவந்தார்கள். அறுபதாயிரம் பேர் வசிக்க தனி உலகம் தேவைப்பட்டது. மேலும் அவர்கள் என்றுமே இளமை குன்றாமல் இருக்க விரும்பினார்கள். அதற்காக சிவபெருமானை நோக்கி அறுபதாயிரம் அப்சராக்களும் தவமிருந்தார்கள்.”


உங்கள் கதைகளில் எனக்கு பிடித்தமானது நீங்கள் சிறுகதைக்குரிய முக்கியமான சவாலான “புதிய களம்” என்பதை நேரடியாக எதிர்கொள்கிறீர்கள் என்பது தான். உங்கள் பெரும்பாலான கதை துவக்கமும் ஒரு தூண்டில் போல வீசப்படும். “உண்மையாகவே ரத்தினக்கல்லை எடுக்கதான் அமிர்கான் ராஜநாகத்தை வளர்த்தார் துவான்” என்று துவங்கப்பட்ட கதையை எப்படி வாசிக்காமல் விடுவது.


அப்சரா குறித்த மேலதிக தகவல்களுக்காக இணையத்தில் தேடியபோது கோகிலாவாணி கிருஷ்ணமூர்த்தி கட்டுரையை வாசிக்க கிடைத்தது. அக்கட்டுரையே தன்னளவில் சில புனைவம்சங்களைக் கொண்டிருந்தது. கட்டுரையின் நடுப்பகுதியில் கட்டுரையாளர் ஒரு நர்த்தகி என்று அறிந்து கொண்டபோது வியப்பாகவும் அத்தனை நெகிழ்வானதாகவும் இருந்தது.


அக்கட்டுரை வல்லினத்தில் வெளியாகி இருக்கிறது என அறிந்து கொண்டபோது உங்களுடைய அப்சரா சிறுகதைக்கான கச்சா இக்கட்டுரையாக இருக்க முடியும் என ஊகித்தேன். அதற்கு மேலும் தகவல் திரட்டி இருப்பீர்கள். அல்லது என் ஊகம் தவறாகக் கூட இருக்கலாம். ஒரு அபுனைவு புனைவாகும் போது எப்படியெல்லாம் நெகிழ்ந்து கொடுக்கிறது எது சேர்த்துக்கொள்ளப்படுகிறது. எது நீக்கப்படுகிறது என்பதை கற்றுக்கொள்ள உதவியது.  உங்களிடமிருந்து தொடர்ந்து புதிய களத்தை எதிர்கொள்ளும் கதைகள் வெளிவருவது உற்சாகமாக உள்ளது. Thank you to inspiring me.

மனோஜ் பால்சுப்பிரமணியன்

(Visited 82 times, 1 visits today)