முகநூலுக்குள் வரும்போதெல்லாம்
எல்லோரும்
ஏதோ ஒரு சாதனை செய்திருக்கிறார்கள்
எல்லோரும்
யாருக்கோ உதவி செய்திருக்கிறார்கள்
பிறரின் மகிழ்ச்சிக்காக சில பொழுதையேனும் கழித்திருக்கிறார்கள்
தங்கள் மேல் அன்பு சிந்தும் நண்பர்களுக்காக
கருணையுடன் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்
ரசிகர்களுக்காக
நாளுக்கு மூன்று புகைப்படமாவது பதிவேற்றியிருக்கிறார்கள்
ஒவ்வொருவரும் தங்களுக்கு தாழ்வுணர்ச்சி இல்லை என்பதை
ஆயிரம் முறையாவது நிரூபித்திருக்கிறார்கள்
எல்லாமே சந்தோசத்தை கொடுக்கிறது
நானும் அதில் சின்னதாக ஓர் அன்பை குறியிட்டுக்கொள்கிறேன்
சுற்றிலும் கைவிடப்பட்டவர்களின்
அழுகையிலிருந்து
அது இன்றெனை மீட்கக்கூடும்.
உலகம் அழகானது என நம்ப வைக்கக்கூடும்.
***
கோவிட் வார்டில் இருந்து
மீண்ட நண்பனிடம் பேசினேன்
கம்மிய குரலில்
‘இப்போது பரவாயில்லை’ என்றான்
துணைக்கருவிகள் இன்றி
மூச்சு விட முடிவதாகவும்
பேசும்போது திணரல் இல்லை என்றும்
முக்கியமாக
உணவின் ருசி தெரிவதாகவும் கூறி சந்தோசப்பட்டான்
ஆனால் அவனுக்குள் ஒரு குறை இருந்தது
தனக்கு ஊசி போட்ட தாதிகள்
உணவு கொடுத்த உதவியாளர்கள்
குணப்படுத்திய மருத்துவர்கள்
என யாரையும்
அடையாளம் காணமுடியாதது
அவனை வருத்தியது
அவர்கள் பலமணி நேரம்
பல்லடுக்கு கவசங்களுடன்
தன்னருகில் இருந்ததைச் சொன்னான்
ஒரு விண்வெளி வீரர்களைப்போல
வழுக்கும் தரைகளில்
மிதந்து நடந்ததை சொன்னான்
நோயாளிகளின் அழைப்புக்காக
வசதி குறைந்த தனி அறைகளில் தங்களுக்குள் சிரித்துப் பேசி காத்திருந்ததைச் சொன்னான்
அவர்கள் அங்கு இருந்தும் இல்லாததைச் சொன்னான்
அவர்கள்…
தங்கள் கருணை மிக்க கண்களை மட்டுமே
ஒவ்வொருமுறையும் அவனிடம் கடத்திச்சென்றனர்
தங்கள் எஞ்சிய வாழ்வை ஒரு மெல்லிய துணித்திரைக்கு அப்பால் நின்று விளையாட்டு போல கையாண்டனர்
தங்கள் வீடுகளுக்கு மெல்லிய அச்சங்களையும் பதற்றத்தையும்
கையுடன் சுமந்து சென்றனர்
ஓடிச்சென்று உடனே தூக்க முடியாத
தங்கள் குழந்தைகளுக்காக
பலவித பாடல்களை மனப்பாடம் செய்துக்கொண்டனர்
கற்பனையில் கழுவிக்கொண்டே இருக்கும்
தங்கள் கைகளின் ஈரத்தை உதறிக்கொண்டனர்
கண்ணீரை துடைத்துக்கொண்ட நண்பன்
அவர்களை
வேறுவகையில் தன்னால்
அடையாளம் காண முடியும் என்றான்
உலகத்தில்
இன்னொருவர் துன்பம் கண்டு
ஈரமாகும் விழிகளைக் காணும்போது
அவர்களிடம் தனக்கு முன்னமே அறிமுகம் உள்ளதை
ஓடிச்சென்று சொல்வேன் என்றான்
***
முன்பு ஒருமுறை
எனக்கு
மூச்சடைப்பு நிகழ்ந்துள்ளது
இழுக்க இழுக்க
விரியாத நுரையீரலை
நான் அப்போது
ஒரு கல்லாக கற்பனை செய்துகொண்டேன்
தொண்டையுடன் நின்றுவிட்ட
உயிர்வளி
மெல்ல மெல்ல
தலைக்குச் சென்று
கடல்பாசிகளை மலர வைத்தது
நான் அப்போது நிதானமாக
அதன் பூக்களுக்கு நீர் தெளித்துக்கொண்டிருந்தேன்
அது முன்பு ஒருமுறை
இன்று நான் காணும்
குழந்தைகள்
முதியவர்கள்
வேறொரு நோயால் ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் நோயாளிகள்
தங்களுக்கு நிகழ்வதை தகுந்த மொழியால் சொல்ல முடியாதவர்கள்
இறுதி நம்பிக்கையைக் கைவிட்டவர்கள்
என
பலரது வலுசுவாசத்தை திரும்ப திரும்ப
உற்றுக்கேட்கிறேன்
நான் அவர்களிடம்
நுரையீரலை ஒரு வழலைக்கட்டி குமிழாய் மட்டும்
கற்பனை செய்யச் சொல்கிறேன்
ஒன்றை தொட்டு இன்னொன்றை உருவாக்கவும்
பறக்கவிட்டு உடலெங்கும் காற்றை கடத்தவும்
வண்ண தீற்றல்களால் நகர்வுகளை அழகாக்கவும்
அதனால் மட்டுமே முடியும்
மேலும்
எவ்வளவு பெரிய வழலை நுரை வெடித்தாலும்
அது பெரிய பாதிப்புகளை உருவாக்குவதில்லை
அது துன்பத்தால் சத்தமிடுவதுமில்லை
நாம் அதை மறந்துவிட்டாலும்
கோடான கோடி சிறு நுரைகளாக
அவை காற்றில் பறந்து மகிழ்ந்திருக்கும்.
***
உயிர்வளி, முதலுதவி, கருணை,
உள்ளே நுழையும் ஒரு வாய்ப்பு
என ஏராளமான இரைஞ்சல்களோடு
தனியார் மருத்துவமனையின் முன்
நீண்டிருந்த வரிசையில்
மூதாட்டி ஒருவர்
தாதிகள் அணியும்
கவச உடைகள் வேண்டி
நெடுநேரம் நின்றுக்கொண்டிருந்தார்
எல்லோரும் அவரை வினோதமாகப் பார்த்தனர்
குணமாகி வீடு திரும்புபவர்கள்…
நோயாளிகளாக உள்ளே செல்பவர்கள்…
முற்றிய நிலையால் பொதுமருத்துவமனைக்கு துரத்தப்பட்டவர்கள்…
முன் பணம் செலுத்த முடியாமல் யாருடைய உதவிக்கோ காத்திருந்தவர்கள்…
நிர்வாக விசாரணைக்கு இறுதி மூச்சை ‘தம்’பிடித்து பதில் சொன்னவர்கள்…
என எல்லோருமே
நண்பனை அழைத்துவர
சென்ற நான்
அவர் வேண்டுவதை
சரியாகத்தான் புரிந்துகொண்டேனா
என
மறுபடி மறுபடி விசாரித்தேன்
தோல் சுருங்கிய முகத்தில்
உணர்ச்சிகள் எதுவும் தெரியவில்லை
“டாக்டரு உடுப்பு தம்பி”
என
தாதிகளைக் கைக்காட்டினார்
நான் கொஞ்சம் குழப்பமாகி
சில முகக்கவசங்களை மட்டும்
அவரிடம் நீட்டினேன்
ஏமாற்றத்துடன் நெடுநேரம் பார்த்தவரின் கைகள்
பெற்றுக்கொள்ள நீண்டபோது
முறியப்போகும் கிளைகளைப்போல
வேகமாக நடுங்கின
அடுத்த சில வாரங்களில்
உதவி வேண்டி
வெள்ளை கொடி ஏற்றியிருந்த
வீடு ஒன்றில்
இலவச உணவு கொடுக்கும் காணொலியில்
முழு கவசத்தால் தன்னை மூடிய ஒருவர்
உணவு பெற்றுக்கொள்ளும் காட்சி வைரலானது
முகத்தைக் காட்டச்சொல்லும்
குரல் பதிவு
சன்னமாக பின்னணியில் ஒலிப்பதிவாகியிருந்தது
நான் அதற்குள் இருப்பது
அந்த மூதாட்டி என விரைவாகவே கண்டுப்பிடித்தேன்
புகைப்பட ஒளி பளிச்சிடும் தோறும்
அவர் உடல் மேலும் சுருங்கியது
உதவி பொருளை வாங்கும்போது
அவர் கரங்கள் நடுங்கின
பசியைக் கடந்து
கண்களில் கூச்சம்
கண்ணீராகக் கசிந்துகொண்டிருந்தது
***
கடந்தவாரம் சுகப்பிரசவமான
தன் மனைவியை
கண்ணாடிக்கு அப்பாலிருந்து பார்க்க
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தை ஒருவர்
முதன்முறையாக அனுமதிக்கப்பட்டார்
அவர்
தன் கையுரையை நீக்கி
சுண்டு விரலால் குழந்தையைத் தடவினார்
மென்பாதங்களுக்கு முத்தமிட்டபோது
முகக்கவசத்தைத் தளர்த்திக்கொண்டார்
கண்ணாடியில் மூக்கை அழுத்தி
வாசனை முகர்ந்தார்
இருமலை அடக்கியபடி
‘அழாதே’ என தன் குழந்தைக்கு சமாதானம் சொன்னார்
களைத்திருந்த மனைவிக்கு கையை ஆட்டினார்
அப்போது அவருக்கு அதிகமாக மூச்சு வாங்கியது
தூய்மியுடன் காத்திருந்த
வெளிநாட்டு ஊழியரிடம்
மன்னிப்புக்கோரியபடி
பரவசத்துடன் நகர்ந்தார்
துடைக்கும் முன்பாக
கண்ணாடி கோடுகளில்
அசைந்து சிணுங்கும்
தன் குழந்தையினை கண்டுகொண்ட
ஊழியர்
நெடுநேரமாக கைநடுங்கி அழுவதை மட்டும்
அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை