24.1.2022 – சன்வே வெலோசிட்டி பேரங்காடியில் ‘பூச்சாண்டி’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டது. நண்பர் செல்வம் அழைத்ததால் திரையரங்கம் சென்றேன். அவர் அப்படத்தில் பணியாற்றியிருந்தார். இப்படத்தை ஜே. கே. விக்கி (விக்னேஸ்வரன் கலியபெருமாள்) இயக்கியுள்ளார். ஜே. கே. விக்கி திரை உலகில் மட்டுமல்லாமல் பொதுத்தளத்திலும் நன்கு அறியப்பட்டவர். பூஜாங் பள்ளத்தாக்கு, மலாயாவுக்குச் சோழர்கள் வருகை என தொடர்ந்து மேடைகளில் பேசி வருபவர்.
பொதுவாகவே மலேசியக் கலை உலகத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டுமென்பது பலரது லட்சியம். ஆனால் வளர்ச்சி என்பது வசூல் ரீதியில் வெற்றி அடைவது மட்டுமா என்ற கேள்வியை நாம் அழுத்தமாக முன்வைக்க வேண்டியுள்ளது. மலேசியத் தமிழ் ரசிகர்களைத் திருப்திப்படுத்துதல், முதலீடு செய்த பணத்தை மீட்டல் என்பது மட்டும்தான் வளர்ச்சி என்றால் அது மிகக் குறுகிய பார்வையாகவே இருக்கும். அதற்காக பொருளியல் சூழலில் நட்டம் ஏற்படுத்தும் வகையில் ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதாகவும் பொருள் கொள்ள வேண்டியதில்லை. சிறந்த கதை அமைப்பில் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்த சில உள்நாட்டுப் படங்கள் நம் முன் உதாரணங்களாக உள்ளன.
இந்நிலையில் ஒரு மலேசியப் படைப்பு என்பது (அது சினிமாவாக இருந்தாலும் இலக்கியமாக இருந்தாலும்) இந்நாட்டின் எளிய ரசிகர்களை / வாசகர்களை சென்று சேரும் வகையிலும் வெற்று நுகர்பொருளாக, வெகுசனத் தேவைக்கான தீனியை மட்டும் உற்பத்தி செய்யும் பண்டமாகவும் இருந்தால் போதுமானது என்ற மனநிலையில் மட்டுமே பலரும் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இது தவறா எனக் கேட்டால் இல்லை என்பதே என் பதில். இலக்கியத்திலும் நான் அதைத்தான் சொல்வேன். இதைப் பலமுறை இலக்கிய விமர்சனங்களில் பதிவு செய்தும் உள்ளேன்.
அடிப்படையில் ஒரு படைப்பைக் கொடுப்பவருக்கு, தான் எதை இயக்க வேண்டும் / எழுத வேண்டும் என முடிவெடுக்க முழுச் சுதந்திரம் உண்டு. ஒரு சமையல் நிபுணருக்கு தனது தனித்துவமான கற்பனையில் உணவுப் பண்டங்களை உருவாக்குவதற்கும்; ஏற்கெனவே பிரபலமாக உள்ள உணவைச் சமைத்து விநியோகிப்பதற்கும்; நா சுவைக்காக மட்டும் நொறுக்குத் தீனிகளை உருவாக்குவதற்குமான வித்தியாசம் அது. இந்த மூன்றில் எது தனக்குத் தேவையெனத் தேர்ந்தெடுப்பது வாடிக்கையாளன்தான். ஆனால் இந்த உணவுகள் குறித்த விமர்சனம் எப்போது எழுகிறது என்றால் ஒரு நொறுக்குத் தீனியை உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகக் காட்ட முயற்சிக்கும்போதுதான். விளம்பரங்களின் பலத்தால் அதன் மலினங்களை மறைக்கும்போதுதான்.
இப்படிக் கலைஞனின் சுதந்திரம் எதுவாக இருந்தாலும் ரசனை விமர்சகனின் நோக்கம் கலைஞனிடம் உரையாடுவதோ அறிவுறுத்துவதோ அல்ல; அவன் ஒரு ரசிகனாக சக ரசிகனிடமே உரையாடுகிறான். தனது தரப்புக் கருத்தை முன் வைக்கிறான். அது ஒரு தரப்பு. அது சிலரால் ஏற்றுக்கொள்ளப்படலாம் சிலரால் நிராகரிக்கப்படலாம். இதில் எண்ணிக்கை முக்கியமல்ல. ஆனால் நாம் அறிவுச் சூழலில் இயங்குகிறோம் என்றால் அல்லது கலை இலக்கிய உலகத்தில் குறைந்தபட்ச அறிவுச் சூழலை உருவாக்க முயல்கிறோம் என்றால் இத்தகைய உரையாடல்கள் அவசியமானவை.
பூச்சாண்டி திரைக்கதை
பூச்சாண்டி ஒரு வெகுசன சினிமா. அது பேய்ப்பட ரசிகர்களைத் திருப்திப்படுத்த எடுக்கப்பட்டுள்ள படம். எனக்குத் தெரிந்து மலேசியத் தமிழ் திரையுலகில் தயாரிக்கப்படும் படங்களில் பேய்க்கதைகள் அதிகம். நெட்ஃபிலிக்ஸ், அமேசான் போன்ற சேனல்களிலும் ஏராளமான பேய்ப்படங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உலக சினிமாவுக்கெல்லாம் போகவேண்டாம். தமிழ்ப் படங்களிலேயே பேய்ப்படங்களின் கதை அமைப்பு நிறையவே மாற்றம் கண்டுவிட்டது. பிசாசு, ஆனந்தபுரத்து வீடு போன்றவை உடனடியாக நினைவுக்கு வருபவை. பூச்சாண்டி அப்படி எந்தப் புதுமைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் ஏற்கெனவே போடப்பட்ட பழைய பாதையில் பயணிக்கிறது.
முருகன் என்ற இளைஞன் மலேசியாவில் உள்ள பேய்கள் தொடர்பாக தெரிந்துகொள்ள மதுரையில் இருந்து வருகிறான். அவனுக்கு யாரோ ஒருவர் மூலம் சங்கருக்கு நிகழ்ந்த அமானுஷ்ய அனுபவம் குறித்துத் தெரியவர, சங்கருக்கு நடந்தவற்றை விசாரித்து பதிவு செய்கிறான் முருகன். சங்கர் தன் நண்பர்களோடு நாணய விளையாட்டின் மூலம் மல்லிகா என்ற பேயை அழைத்து அதனால் ஒரு நண்பனுக்கு மரணம் நிகழ பயத்தில் ஒடுங்கி இருக்கிறான். முருகனின் உந்துதலால் நாணயம் யாரிடமிருந்து வாங்கப்பட்டது என ஆராய்ந்து தீபக்கை சந்திக்க சங்கர், முருகன், அன்பு ஆகியோர் பினாங்கு செல்கின்றனர். அங்கு அவர்கள், இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த தீபக்கின் காதலி மல்லிகா உயிருடன் இருக்க, அப்படியென்றால் அவர்களிடம் நாணயம் வழி பேசிய ஆன்மா யாருடையது என்பதுதான் மீதிக்கதை.
ஒரு திரைப்படத்தின் கரு என்னவாக இருந்தாலும் திரைக்கதையே இயக்குனரின் கைரேகையாக உள்ளது. படைப்பூக்கம்கொண்ட இயக்குனர் எந்தக் கருவையும் தனித்துவமான அடையாளங்களோடு வடிவமைப்பவராக இருப்பார். ‘ஜகாட்’ போன்ற திரைப்படங்கள் தனித்து இருக்கக் காரணம் அதுதான். அந்தப் படத்தின் கரு குண்டர் கும்பலின் இருளுலகம் என எடுத்துக்கொண்டால் அந்த இருளுலகம் உருவாகும் பின்னணியை, அதனுள் பயணிக்கும் ஒரு சிறுவனின் பார்வையில் கதை நகர்த்தப்பட்டுள்ளது. இதுதான் ஒரு இயக்குனரின் பணி. குண்டர் கும்பல் சண்டைகளை நேரடியாக யூடியூப்பிலேயே நாம் பார்த்துவிடலாம். அதைத் தாண்டி, ஒரு இயக்குனரின் பார்வை என்னவாக உள்ளது என்பதே அங்கு ஒரு கலைஞன் உயிர்த்திருப்பதற்கான அடையாளம்.
‘பூச்சாண்டி’ திரைப்படத்தில் அப்படி இயக்குனரின் தனித்த படைப்பூக்கப் பங்களிப்பு என எங்கும் இல்லாததே முதல் ஏமாற்றமாக இருந்தது.
நாணயத்தை வைத்து பேய்களை அழைத்தல், ஹாஸ்டலில் பேய் நடமாட்டத்திற்கான அறிகுறி, மூடிய கதவு சொந்தமாகத் திறப்பது, விளக்குகள் படபடத்து அணைவது, காட்டுக் கோயிலில் சாமியார் ஒருவர் பேய்க்கான அடையாளம் சொல்வது என ஏற்கெனவே பலமுறை பல படங்களில் பார்த்து பார்த்துச் சலித்துப்போன காட்சிகள்தான் வந்து போகின்றன.
இதுபோன்ற காட்சிகளை வெகுசன ரசிகர்கள் எளிதாகக் கடக்கவும் செய்வர். அவர்களை அது கவரவும் கூடும். அதுதான் மனித இயல்பு. ‘ரோலர் காஸ்டர்’ போன்ற கேளிக்கை விளையாட்டுகள் முன் நீண்ட வரிசை நிற்பதும் அதனால்தான். எத்தனை முறை நாம் அதில் ஏறி பயந்திருந்தாலும் இன்னொரு முறை அதில் ஏறிப் பயணம் செய்ய ஆர்வமாக நிற்போம். அதன் ஒவ்வொரு திடுக்கிடல் வளைவுகளை அறிந்திருந்தாலும் கூச்சலிட்டுக் கத்துவோம். உண்மையில் நாம் அந்தத் திரும்பங்களுக்கு முன்னமே தயாராகி விடுகிறோம். அதற்கான மனத் தயாரிப்புகளுடன்தான் காத்திருக்கிறோம். நம் எதிர்ப்பார்ப்பின் நிறைவுகளில் குதூகளிக்கிறோம்.
ஜே. கே. விக்கி இந்தத் திரைப்படத்தில் உருவாக்க முயன்றிருப்பது பாதை விலகாத, புதிய அனுபவங்களை ஒருபோதும் கொடுக்காமல் மீண்டும் மீண்டும் ஒரே தடத்தில் ஓடும் ரோலர் காஸ்டர் வண்டியின் வழித்தடத்தைதான். அதை அவரே உணர்ந்துள்ளதால்தான் வழக்கம்போல நாணய விளையாட்டில் பேய் வராமல் பாண்டியர் காலத்து சிவனடியார் ஒருவரை வரவழைக்கிறார். அந்த சிவனடியார் மதுரையில் இருந்து பேய்கள் குறித்து அறிய வந்த இளைஞன் உடலில் ஆவியாகப் புகுந்து மதுரைக்கே செல்வதுடன் முடிக்கிறார்.
இந்த எளிய கதையில் சிறிதும் பெரிதுமாக நிறையவே குழப்பங்கள் உள்ளன. நான் இங்கு குறிப்பிடுவது நம்பகத்தன்மையை அல்ல; பேய்க்கதை போன்ற புனைவுகளில் அது அவசியமும் இல்லை. ஆனால் திரைக்கதைக்கான உண்மை என்று உள்ளது. அந்த உண்மை ஆட்டங்காணும்போது மொத்த திரைப்படமும் அசட்டு முயற்சியாகிறது.
உதாரணமாக சில:
அ. நாணயம் வழி வெளிப்படுவது பேயா? அல்லது சிவனடியாரா? இந்தக் குழப்பம் கடைசி வரை நீடிக்கிறது. படத்தின் வழி சிவனடியாராகவே இயக்குனர் காட்டுகிறார். மல்லிகா முன்பு தோன்றும் ‘சிவனடியார் பேய்’, அவள் வைத்திருக்கும் விபூதியை எல்லாம் எடுத்து அணிந்துகொள்கிறது. கடவுளின் அம்சமாகக் காட்டப்படும் ‘சிவனடியார் பேய்’ மல்லிகாவை பயமுறுத்த வேண்டிய அவசியம் என்ன? சிவனடியார் ஏன் கோரமாக அவளது ரத்தத்தை நக்கி குடிக்கிறார்? (சிவனடியார் சைவம் இல்லையா?!) ஏன் அவளையும் குமரனையும் கொலை செய்வதுபோல கழுத்தை நெரித்து மிரட்டுகிறார்? “அந்த காய்ந்த வயலோரம் எடுத்த பழைய நாணயத்த அங்கயே வச்சிருமா” என அன்பாகச் சொல்வதற்கு என்ன?
ஆ. வந்திருப்பது சிவனடியாரின் ஆன்மா என்பதை இயக்குனர் படத்தின் இறுதியில் நிறுவுகிறார். குழியில் இருந்து வெளிப்படும் சிவனடியார் “தென்னானுடைய சிவனே” போற்றி என்றெல்லாம் கையெடுத்து வணங்குகிறார். அவர் கையில் வைத்திருக்கும் ஆயுதமும் சூல வடிவில் உள்ளது. ஆனால் ‘சிவனடியார் பேய்’ மல்லிகாவுக்கு love bites (காதல் கடி?!) கொடுத்தெல்லாம் மிரட்டுவது எதனால் என்பதுதான் புரியவில்லை.
இ. பத்து வருடங்களுக்கு முன்னரே (2010) அந்த நாணயம் பழைய நாணயங்களை வாங்கி விற்கும் அன்பிடம் சென்று சேர்ந்தது என்றால், ஏன் அதை வைத்து விளையாடும்வரை அவரை ‘சிவனடியார் பேய்’ தொந்தரவு செய்யவில்லை. நாணயம் கையில் கிடைத்த மறுநாளே மல்லிகாவுக்கு நிகழ்ந்த மிரட்டல்கள் ஏன் அன்பிற்கு நிகழவில்லை? பணத்தைக் கையில் வைத்திருக்கும் கல்பனாவுக்கு உயிர் பயம் காட்டியதுபோல அன்பிடம் ஏன் காட்டாமல் பத்து வருடமாக பதுசாக இருந்தது? அது ஆணாதிக்க சிவனடியார் ஆவியா என்ன?
ஈ. அந்தப் பழைய நாணயம் அன்பிடம் இருந்தவரை எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. பத்து வருடங்களுக்குப் பிறகு விளையாடத் தொடங்கிய பிறகுதான் சிக்கல் வருகிறது. விளையாட அழைப்பது சங்கர். அப்படியென்றால் அந்த நாணயத்தை அன்பிடம் விற்றது குற்றம் என தீபக்கை ஏன் சங்கர் அடிக்க வேண்டும்? எல்லா பிரச்சினைக்கும் காரணம் சங்கர்தானே!
உ. சிவனடியார் ஆவி இரண்டு கால் விலங்கைப் பலி கேட்கிறது. (அதாவது மனிதன்) ஆனால் அப்படிப் பலி கேட்ட தருணத்தில் மதுரை இளைஞனான முருகன் இன்னும் மலேசியா வந்திருக்கவில்லை. அப்படியே அன்பு, சங்கர் அல்லது அவன் நண்பன் குருவைப் பலி கொடுத்திருந்தாலும் அவன் உடலில் சென்று எப்படி மதுரைக்குப் போயிருக்கும். சங்கரே சுற்றி கடனுடன் இருக்கிறான். அவன் எப்படிக் கடப்பிதழ் எடுத்து, நாடு தாண்டுவான்? உண்மையில் இந்த ஆவியின் நோக்கம் மதுரைக்குச் செல்வதா மனித உடலில் புகுவதா என்பதே கதையில் தெளிவில்லாமல் உள்ளது.
ஊ. புதிதாக மலேசியாவுக்கு வரும் முருகன் அவ்வப்போது தன் காதில் கேட்கும் மலாய் சொற்களுக்குப் பொருள் கேட்கிறான். ஆனால் மலேசியத் தமிழ் இளைஞர்களிடம் மட்டுமே புழங்கும் ‘ஜொக்கோ’ என்ற வார்த்தையின் பொருளை எப்படிப் புரிந்துகொள்கிறான்? பெண்ணை எப்படி அழைத்தாலும் உலகம் முழுவதும் உள்ள ஆண்களுக்குப் புரிந்துவிடுமா?
இப்படிப் படத்தைக் கடைசிவரை பலவித குழப்பத்தோடும் கேள்விகளோடும்தான் பார்த்து முடித்தேன். ஆனால் பொறுமையாக அமர்ந்திருக்க எனக்குச் சங்கடம் இல்லை. அதற்கு முதன்மைக் காரணம் காட்சியமைப்பு மற்றும் லோகன், கணேசன் மனோகரன், தினேஷ் சாரதி கிருஷ்ணன், ஹம்சினி பெருமாள் போன்றவர்களின் நடிப்பாற்றல். லோகன் அவர்களின் நடிப்பை நான் பலமுறை வியந்துள்ளேன். ‘சுவீட் ட்ரீம்ஸ்’ திரைப்படத்தை பார்த்தபோதே அவர் மலேசியாவின் அசாதாரண நடிகர் எனப் புரிந்தது. இப்படத்தை நிமிர்த்துவதும் அவர்தான். தினேஷ் அவர்களின் திறனை இப்படம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வகையில் ஜே. கே. விக்கியால் புனைவுக்திகளை (Crafting skills) சிறப்பாகவே கையாள முடிகிறது. ஆனால் சிறந்த புனைவு என்பது உக்திகளால் (Crafting skills) மட்டும் ஆனதல்ல. அது படைப்பாற்றலையும் (Creativity) கோருவது. இந்த வித்தியாசம் தெரியாமல்தான் நமது கலை இலக்கிய உலகமும் படைப்புத்திறன் எனச் சொல்லிக்கொண்டு இயங்குகிறது. காமிரா நகர்ச்சியை, ஒலி பயன்பாட்டை, கதையின் திருப்பங்களை, வசனங்களை, வினோத காட்சிகளை கலை என நம்புகிறது. இவை அனைத்தும் பயிற்சிகளால் கிடைப்பவை. யாரும் சில ஆண்டுகள் தொடர் பயிற்சி செய்தால் இதனை செய்துவிடலாம். ஆனால் படைப்பாற்றல் அந்த கலைஞனின் கைரேகை போன்றது. அது அவனுக்கானது மட்டுமே. ஒரு படைப்பு தனித்துத் தெரிவது அந்தக் கைரேகையால்தான்.
ஜே. கே. விக்கியின் நோக்கம் தன் முன் இருக்கும் ரசிகனின் மிகை உணர்ச்சியைத் தூண்டுவது. காட்சிகள், இசை, ஒளி ஆகியவற்றால் எளிய ரசிகனை திருப்திப்படுத்த நினைக்கிறார். அதில் வெற்றியும் அடைந்துள்ளார். நாளை ஏதாவது ஓர் இயக்கம் அந்தப் படத்துக்குச் சிறந்த திரைப்படமாக விருதெல்லாம் வழங்கும். அதில் நமக்கொன்றும் சிக்கல் இல்லை. ஆனால் படம் முடிந்தபிறகு இடம்பெற்ற ஒரு காட்சிதான் என்னை கொஞ்சம் சங்கடமாக்கியது.
இறுதியில் ஒரு முதியவர், ‘பூச்சாண்டி’ என்ற சொல்லுக்குப் பொருள் சொல்கிறார். அதாவது சிவ பக்தர்கள் ஒரு காலத்தில் மன்னர்களால் திருநீறு பூசத் தடைவிதிக்கப்பட்டதாகவும் அதனால் அந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் உடல் முழுவதும் விபூதியைப் பூசிக்கொண்டதாகவும், இவர்களையே பூச்சாண்டிகள் அதாவது விபூதியைப் பூசிக்கொண்ட ஆண்டிகள் எனச் சொன்னதாகவும் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்து திரைப்படத்தினுள்ளும் சன்னமாகச் சொல்லப்பட்டது. ஒரு கலை முயற்சியினுள் இதுபோன்ற கருதுகோள்களை (Hypotheses) வார்த்தெடுத்துக் கதையாகச் சொல்வதில் சிக்கல் ஒன்றும் இல்லை. அது அந்தப் படத்தினுள் வரும் கதாபாத்திரங்களின் மனமும் அறிவும் சார்ந்த வெளிப்பாடு. உதாரணமாக ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் போதி தர்மரின் மரபணுவை உசுப்பி அவர் பரம்பரையில் வந்த ஒருவரிடம் உள்ள திறன்களை மீட்க முடியும் என திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அதை யாரும் கேள்விகேட்க முடியாது. காரணம், அது கற்பனை. ஆனால் அந்தத் திரைப்படத்தின் தொடக்கத்தில் போதி தர்மர் யார் எனத் தகவலாகச் சொல்லப்பட்டிருக்கும். அதில் ஒருவர் கற்பனையைக் கலக்க முடியாது. சான்றுகள் இல்லாமல் ஒரு கூற்றை உண்மையென வலியுறுத்த முடியாது. அப்படிச் செய்யும்போது அது தவறான ஒரு கருத்தை பரப்புவது ஆகும். அப்படியான விடயங்கள் நிகழும்போதுதான் அறிவுச்சூழலில் இருந்து எதிர்ப்புகளும் மறுப்புகளும் வருகின்றன.
திரைப்படம் முடிந்தபிறகு கேள்வி நேரம் வந்தது. வழக்கம்போல எல்லாரும் பாராட்டி மகிழ்ந்தனர். ‘பூச்சாண்டி’ என்ற சொல் குறித்து எனக்கு மாற்று அபிப்பிராயங்கள் இருந்தன. முக்கியமாக ச. வையாபுரிப்பிள்ளை ‘பூச்சாண்டி’ என்பதற்கு பூச்சி + ஆண்டி என்றே தமிழ் லெக்சிகன் பேரகராதியில் பதங்களைப் பிரிக்கிறார். வையாபுரிப்பிள்ளையை தமிழ் உலகம் அறியும். உ.வே.சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்டவர். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். அவர் கூற்றுப்படி பூச்சி என்பது பயம் காட்டுவதைக் குறிக்கிறது. இன்றுகூட வழக்கில் ‘பூச்சி’ காட்டாதே எனச் சொல்வதுண்டு.
நான் இதை அந்த அரங்கில் கேள்வியாக முன்வைத்தேன். “இலக்கண அடிப்படையில் பூச்சாண்டியை பூச +ஆண்டி எனப் பிரிக்க முடியாது என்பதை ச.வையாபுரிப்பிள்ளை மூலம் அறிகிறேன். உங்களுக்கு எங்கிருந்து இந்தத் தரவு கிடைத்தது?” என்றேன்.
“உங்களுக்கு சொல்ல அறிஞர் இருக்கும்போது எங்களுக்கு இருக்கமாட்டார்களா?” என இயக்குனரான விக்கி மறுகேள்வி கேட்டார். ஆனால் அந்த அறிஞர்கள் யார் எனச் சொல்லவில்லை.
“புனைவுக்குள் நீங்கள் இதைச் சொல்வது உங்கள் சுதந்திரம். ஆனால் கருத்தாக அதை அழுத்தம் கொடுத்து பொழிப்புரை வழங்குவது தரவற்ற ஒன்றை பகிர்தல் ஆகாதா?” என்றேன்.
“நீங்கள் படத்தைக் குறித்து கேள்வி கேளுங்கள். இதுபோன்ற விளக்கத்தை என்னிடம் பக்கத்தில் வந்து சொல்லலாம்,” என்றார். பொதுவாக தான் செய்வதில் உள்ள தவற்றை ஏற்கனவே அறிந்துள்ள ஒருவரின் படபடப்பு விக்கியிடம் தொற்றியிருந்தது. என்னைப் பேசவிடாமல் பேசிக்கொண்டே சென்றார்.
பூச்சாண்டி குறித்த பொழிப்புரைக் காட்சி அந்தத் திரைப்படத்தில்தான் இருந்தது. எனவே நான் திரைப்படத்தை ஒட்டியே கேள்வி எழுப்புகிறேன் என்பதில் தெளிவாக இருந்தேன். இப்படி ஆவணங்கள், ஆதாரங்கள், தரவுகள் அற்ற வரலாற்றுக் கதைகள் ஏராளம் உலாவுகின்றன. விக்கினேஸ்வரன் போன்ற பொறுப்பான இளைஞர்கள் அவற்றைக் கையாளும்போது இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்ற கவலையே எனக்கு இருந்தது. திரைப்படம் முடிந்த பின்னரும் “பூச்சாண்டிக்கு பொருள் இப்போதுதான் எனக்கே புரிகிறது” எனப் பலரும் வெளியில் பேசிக்கொண்டிருந்தனர். இவர்கள் உண்மையைத் தேடப்போவதில்லை. யாராவது ஒருவர், “நான் தமிழகத்தில் இரண்டு மாதம் ஆராய்ச்சி செய்து சொல்கிறேன்,” என்றால் அப்படியே நம்பிவிடுவார்கள்.
அவர்கள் ஆராய்ச்சி செய்த மூலம் எது? ஆராய்ந்த வழிமுறை என்ன? அதன் நம்பகத்தன்மை என்ன என்பது குறித்து யாருக்கும் கவலை இருக்காது.
வீட்டிற்கு வந்தபிறகு சில தமிழ்ப் பண்டிதர்களிடம், பண்பாட்டு ஆய்வாளர்களிடம் பூச்சாண்டி எனும் சொல் குறித்து வினவினேன். நாலடியார், திருக்குறள், கம்பன், திருவாசகம், பெரியபுராணம் என எதிலுமே பூச்சாண்டி என்ற சொல் இல்லை என்பது உறுதியானது. பாரதி வரைகூட அச்சொல் பயன்பாட்டில் இல்லை. ஆனால் எவ்வித ஆய்வுகளும் அற்ற சில அரைகுறை வலைத்தளங்களில் இப்படியான கதைகள் உலாவி வருகின்றன. அதைத்தான் இப்படமும் இதன் இயக்குனரும் தரவாக நம்புகிறார்களா எனத் தெரியவில்லை. பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம் மட்டும் ‘மூணு கண்ணு பூச்சாண்டி’ எனும் சொல்லை வழக்கொழிந்துபோன சிவ வழிபாட்டின் உட்பிரிவுகளான காளமுக, பாசுபத, மாவிரத துறவிகளின் தோற்றத்தை வைத்து உருவான சொல் என்கிறார். அதாவது அச்சமூட்டக்கூடிய பண்டாரங்கள் எனப் பொருள் கொள்ளலாம்.
நான் இயக்குனரைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஒருவேளை அவருக்கு இன்னும் வலுவான தரவுகள் இருக்கலாம். எனக்கு அது எட்டாமலும் இருக்கலாம். அரங்கில் சொன்னதுபோல அவர் குறிப்பிடும் அந்த அறிஞர்கள் யார் என்பது தெரிந்தாலும், அது எந்த நூல் என அறியத் தந்தாலும் நானும் அவர்களை வாசித்துப் பார்க்க முடியும். புதிதாக ஒன்றை அறிவது அறிவின் தேவைதானே. ஆனால், போலி அறிவுஜீவிகள் செய்யும் அதே தவற்றை விக்கியும் செய்வாரேயானால் வருங்காலத்தில் அவர் பேசும் வரலாற்றுத் தகவல்கள் எல்லாம் அறிவுலகத்தால் சந்தேகிக்கப்படும். அசைவற்றுத் தேங்கிய குட்டைக்குள் சலிப்பேற்படுத்தும் திரைக்கதையில் சாகசம் செய்வது அவரது விருப்பம். ஆனால் வரலாறு என்ற பெயரில் தரவற்ற நஞ்சின் துளியைக் கலக்கும்போது அதற்கு குறைந்தபட்சம் எதிர்வினையாவது அவசியமாகிறது.
எத்தனை முறை உதாசினம் செய்யப்பட்டாலும் அக்குரலை எழுப்பியே தீர வேண்டியுள்ளது .
குறிப்பு: இப்படம் நாளை (27.1.2022) நாட்டில் உள்ள பல திரையரங்குகளில் ஒளிபரப்பப்படுகிறது.