வணக்கம் நவீன்,
எனது முகநூல் நண்பர் மனோஜ் உங்களின் ‘பட்சி‘ கதையின் இணையச் சுட்டியினை அனுப்பியிருந்தார். அதை வாசித்ததன் ஊடாக உங்களது எழுத்துக்களின் மீதான அபிமானியாக மாறியிருந்ததை உணர்ந்தேன். அதன் தொடர்ச்சியாக ‘நகம்‘ சிறுகதையை வாசித்தேன் என்று சொல்வதை விட கதையில் வாழ்ந்தேன் என்று திடமாக என்னால் சொல்ல முடியும்.
ஒரு வரலாற்று நிகழ்விலிருந்து மலேசியா தமிழ் பேசும் மக்களுக்களின் அவல நிலையினை கூறியிருப்பதாகவே புரிந்து கொண்டேன். அந்த விடயத்தை கதையில் ஆழமாகத் தொடா விட்டாலும், கதை அடக்குமுறையும், அங்கு வாழும் மக்கள் பிரிவுகளுக்கு இடையிலான சமூகநிலை அந்தஸ்து பற்றியும் பேசுவதாகவே எனது புரிதல் இருக்கின்றது. கதையாசிரியர் எல்லா விடயத்தையும் விபரிக்க வேண்டுமென்ற என்ற அவசியமும் இல்லை. சில விடயங்கள் வாசகர்களின் புரிதலுக்கும் விடலாம்.
நகம் வளர்த்து நிறச்சாயம் பூசி பாராமரிப்பது எந்ளவிற்கு பெண்மைத் தன்மை கொண்டதோ அந்தளவிற்கு அது அதிகாரத்தின் குறியீடு என்பதை கதையின் சம்பவங்கள் உணர்த்துகின்றன. கதையின் துவக்கமும், நகர்வும் எதை நோக்கி வாசகரை உந்துகிறது என்று முன்கூட்டியே ஊகிக்க முடியாமல் சம்பவங்கள் வடிவமைக்கப் பட்டிருப்பது இச்சிறுகதைக்கான சிறப்பம்சமாக இருக்கின்றது. அதே போன்று கப்பளா எனும் சீனனும் ஒரு அதிகாரத்தின் குறியீடாகவே இருக்கின்றான். நிலக்கிழாரான அவன், அப்பகுதியில் அதிகாரம் செலுத்துவனாகவும், முடிவுகளுக்கு உரியவனாக வடிவமைத்திருக்கின்றீர்கள்.
கப்பளா, ராணி வீசியெறிந்த நகக்கவசத்தை எடுத்துக் கொண்டு வளர்மதியின் முன்னால் வந்து நிற்கும் போது “மனிதன் அடிப்படையில் இரக்கமுடையவன்.” என்று எங்கயோ படித்தது ஞாபகத்தில் வந்தது. கடைசியில் என்னுள் வளர்ந்த அத்தனை கப்பளா மீதான கோபத்தை இந்தக் காட்சியால் அப்புறப்படுத்தி விட்டிர்கள்.
நகமும் சதையுமாக என்பது போல வளர்மதியின் நிலையும் நரகலோக சீனாப்பண்டிகையும் பினைந்ததாக கதை முன்னேறுகிறது. இறுதியில் கதையின் முடிவானது வழமையான சினிமாத் தன்மையோடு இல்லாமல், சோகத்தில் ஆழ்த்தி வாசகர்களை மனதை கசக்கி அதனூடாக வாசகர் மனதில் கதையை உட்காரச் செய்யும் யுக்தியை கையாளமல், வாசிக்கும்போது ஏறிய சுமையை கதை முடிவோடு இறக்கிவைத்து வாசகர்களை தணித்து வெளியேறச் செய்திருப்பது ஒரு புதிய விடயம்தான்.
மனநிறைவு.
இலங்கையிலிருந்து…
ஹனீஸ்.