சிறுகதை: பட்சி

“சிறுவனை நீங்கள் உடன் அழைத்து வருவது, எனக்கு அவ்வளவு பாதுகாப்பாகத் தோன்றவில்லை,” என்றார் மாலிக். மேடு ஏறி வந்ததில் அவருக்கு மூச்சிரைத்தது. வாய்வழியாக நீராவிப் புகை குபுக் குபுக்கென வெளியேறிக்கொண்டிருந்தது. அவரது உதவியாளன் எங்களைப்போல் குளிருடை அணியாமல் பழுப்பு நிற டீசட்டையுடன் கனத்துத் தொங்கும் பையைத் தோள்களில் சுமந்தபடி இயல்பாக நின்றுகொண்டிருந்தான். 

நோய் கண்டதிலிருந்து என்னாலும் குளிரைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. எலும்பு வரை நுழைந்து வலிகொடுத்தது. நான் பாலுவின் தலையைத் தடவினேன். பனியின் ஈரம் படிந்திருந்தது. பள்ளி தொடங்கும் முன்பாகக் குளிர் தொப்பி வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தேன். அவன் விழிகளைத் தூக்கிப் பார்த்தான். அடர்வனத்தினுள் இருந்து பறந்துவரும் மஞ்சனைக் காணப்போவதில் ஏகப்பட்ட ஆர்வம் தெரிந்தது.

“இவன் யாரிடமும் சொல்லமாட்டான் டத்தோ,” என்றேன். மலாயில் மூன்றே சொல்தான். குரலில் ஏற்பட்டுள்ள மாறுதல் வெளிப்படாமல் சிரமப்பட்டுக் கூறினேன்.

எங்கும் படர்ந்திருந்த பனி மேலெழும்பிக்கொண்டிருந்தது. அதன் அடர்த்தியில் நாங்கள் எல்லோரும் மூழ்கியிருந்தோம். வெண்படலத்தின் இடைவெளிகளில் மென்பச்சைத் தீற்றல்கள் ஆங்காங்கு தெரிந்தன. சாலை விளக்குகள் இன்னும் அணைக்கப்படாததால் சூம்பிய ஒளிப்புள்ளிகள் மந்தமாகிக் கிடந்தன. மாலிக்கின் உருவம் மங்கித் தெரிவது அப்போதைக்குக் கொஞ்சம் நிம்மதியாகக்கூட இருந்தது.

“சொன்னாலும் ஆபத்து எனக்கில்லை. நான் புருணைக்குள் நுழைந்துவிட்டால் என்னைக் கேள்வி கேட்க ஒருவருமில்லை,” என்றார். அவர் தன் கண்ணாடியில் படிந்திருந்த பனிப்படலத்தைத் துடைப்பது தெரிந்தது. பனி, மேடைத்திரை போல எங்களுக்கிடையில் மூடியும் விலகியும் அலைந்துகொண்டிருந்தது.

நான் தொடர்ந்து பேச விரும்பவில்லை. அது என் குரல் உடைவைக் காட்டிக்கொடுக்கலாம். அதோடு எல்லாக் காரியமும் கெட்டுவிடும். பின் தொடரும்படி சைகை செய்து, இடதுபக்க ஒற்றையடிப் பாதையில் நுழைந்தேன். வழித்தடம் சிறிது தூரம் வரையே உடன்வந்தது. அதன்பிறகு சவுக்கு மரங்களைக் கடந்து, கனத்த புதர்களை எதிர்கொண்டோம்.

அன்று வேலை நாள் என்பதால் எப்படியும் வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரி அபு என் கடிதத்தை வாசித்திருப்பார்; எனக்கு முன்பாகவே காட்டுக்குள் நுழைந்து தன் குழுவுடன் காத்திருப்பார் என ஆழ்மனம் சொன்னது. எனக்கு எந்த ஆபத்தும் துன்பமும் வராது. இதை அதிகாலையிலிருந்து காட்சியாக மனதில் நிகழ்த்திப் பார்த்தபடி இருந்தேன். ஒவ்வொருமுறையும் கனம் குறைந்து மனம் இலகுவானது. பின்னர் குழப்பங்களால்  தன்னிச்சையாகப் பாரத்தை நிரப்பிக்கொண்டது. எல்லாம் நல்லபடியாக முடிந்தால் ஆடி மாதம் பச்சையம்மனுக்குப் பொங்கல் செய்து படையல் வைப்பதாக வேண்டியிருந்தேன். அவள் குலதெய்வம். மலையைக் காப்பவள். மலையில் நானும் ஒரு பகுதி என்பதால் என்னையும் காப்பாள் என நம்பினேன்.

புதர்களை ஒதுக்கியபடி நடந்தபோது வெள்ளை வால் ரோபின் பறவையின் சத்தம் கேட்டு எல்லோருமே வடக்காகத் திரும்பினோம். நுனி உதட்டில் விசிலை ஊதுவதுபோல அது சத்தம் எழுப்பக்கூடியது. பனி ஒரு வினாடி விலகியபோது கருப்புரு ஒன்று தாவி கிளை இருளுக்கு மத்தியில் மறைவதைப் பார்த்தேன். அதுதான். ஜோடி எங்காவது இருக்கும். அவ்வதிகாலை சாம்பலில் அதைத் தேடுவது எளிதல்ல.

“அப்பறவை என் சேகரிப்பில் உண்டு,” என்றார் மாலிக்.

மனம் ஓயாமல் மஞ்சனின் குரலை ஒலிக்கவிட்டபடி இருந்தது. உதடுகளில் அதன் அறிகுறி எதுவும் கூடி வரவில்லை.  குளிரில் தொண்டை கடுப்பதை உணர்ந்தேன். புற்றின் தீவிரம் இந்த ஒரு வாரத்தில் அதிகமாகிவிட்டிருந்தது. நிச்சயமாக என்னால் சத்தம் எழுப்பமுடியாது என நினைத்துக்கொண்டேன். அன்னாசிப் பிஞ்சு ஒன்று தொண்டையில் சிக்கியுள்ளது போலவும் அது அவ்வப்போது தொண்டைக்குள் புரள்வது போலவும் கற்பனை வந்தது. எச்சிலை விழுங்கினால் தொண்டை செதில் செதிலாக உரிந்து உதிர்வதைப்போல வலித்தது. பறவையின் சத்தமல்ல; சிறிய விசிலொலியைக்கூட எழுப்பமுடியாது என்ற உணர்வு கடும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

பாலு உற்சாகமாக முன்னோக்கிப் பாய்ந்து நடந்தான். அவனுக்கு எல்லாப் பாதைகளும் அத்துப்படி. குழந்தையாக இருந்த போதிலிருந்தே அவனுக்குக் காட்டுக்குள்ளிருக்கும் பறவைகளை அழைத்து வேடிக்கைக் காட்டிக்கொண்டிருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் இருளுக்குள்ளிருந்து தாவிவரும் வண்ணப்பறவைகளைக் காணும்  ஆசை அவனுக்கு ஓய்ந்ததில்லை.

மேலும் சில மீட்டர்கள் நடந்து சென்றபோது எதிர்ப்பட்ட சரிவைக் காட்டினேன்.

மாலிக் எட்டிப் பார்த்து, “நீ இங்கு நின்றே அந்த அங்கரி பேர்ட்டை அழைக்க முடியாதா?” என்றார்.

நான் ‘முடியாது’ என தலையை மட்டும் அசைத்தேன். அதிகாலையில் மஞ்சன் மலையின் உட்பகுதியில்தான் இருக்கும். வெயில் ஏறிய பிறகு ஏரியோரம் இருக்கும் காட்டில் பார்க்கலாம். ஆனால் திறந்தவெளியில் என்னிடம் இருக்கும் மிச்ச சொச்ச ஒலிக்காற்றும் மஞ்சனை எட்டும் முன்பே கரைந்துவிடும் ஆபத்துண்டு.

“அத்தனை சிறிய பறவையைப் பிடிக்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா?” என்றவர் தனது உதவியாளனை ஓரக்கண்ணால் பார்த்தார். அவன் குறிப்பைப் புரிந்துகொண்டவனாகக் கையுறையை எடுத்து அவருக்கு அணிவித்தான்.

நான் பள்ளத்தில் சரிந்து செல்லும் வலுவான ஒரு வேரை இழுத்துச் சோதித்தப்பின் இறங்கினேன். கைகள் பலமின்றி நடுங்கின. மெல்ல மெல்ல கால்களைச் சரிவில் ஊன்றி ஒவ்வொரு அடியாக வைத்தேன். பாலு இதிலெல்லாம் தேர்ந்தவன். அவனுக்குத் தோதான சிறிய வேரைப் பிடித்துச் சடசடவென எனக்கு முன்பே இறங்கிவிட்டிருந்தான்.

உண்மையில் இந்தப் பகுதிக்கு வர வேறு பாதைகள் உள்ளன. ஆனால் நான் இந்தப் பணியைத் தாமதப்படுத்தியாக வேண்டும். என்னிடமிருந்து குரல் எழாமல் போனால் மாலிக் தான் ஏமாற்றப்பட்டதாகக் கோபமடைவார். கொடுத்த பணத்தைத் திரும்ப கேட்டால் மருத்துவமனையில் இருந்து எப்படி மீட்பது? என் சிகிச்சை செலவுக்காக நான் திட்டமிட்டே ஏமாற்றியதாக அவர் கோபப்படுவார். அவரிடம் சிறிய கைத்துப்பாக்கியும் உண்டு. கையகலத்துக்கு இருந்த அதை நான் முன்பு பார்த்திருக்கிறேன்.

பச்சையம்மனை நினைத்துக்கொண்டேன்.

சேற்றில் எந்தக் கால்தடமும் இல்லாததால் இன்னும் அதிகாரிகள் யாரும் இப்பகுதிக்கு வரவில்லை எனத் தெரிந்தது. ஒருவேளை வலையை விரித்தபிறகு கையும் களவுமாகப் பிடிப்பார்களா? அவ்வெண்ணம் மனதில் மிகத்தீவிரமாக வளர்ந்து பரபரப்பைக் கொடுத்தது. பிரேசர் மலையைக் கண்காணிக்க நிறையக் கண்கள் உள்ளன. அதில் ஏதாவதொரு சந்தேகப் பார்வை எங்கள் மீது பட்டாலும் போதுமென்றிருந்தது.

மாலிக் இறங்க அவரின் உதவியாளன் காத்திருந்தான். வேரை இழுத்து, அவர் கைகளில் லாவகமாகக் கொடுத்தான். அதைப் பிடித்து உடலைச் சாய்த்தபடி கால்களை ஊன்றியபோது  “இதென்ன ஏதோ கடிக்கிறது!” என்றார் மாலிக்.

மாலிக் ஒரு கையால் விசிறியபடி அந்தரத்தில் போராடுவதைப் பார்த்து, “கொளவிங்க அந்தாளோட வேர்வைய குடிக்க மொக்கிதுங்கப்பா,” என்றான் பாலு. நான் அவன்  தலையைத் தடவிக்கொடுத்தேன். மாலிக் கால்களைச் சரிவில் ஊன்றாமல் கைகளால் பிடித்துத் தொங்கியபடியே சரசரவென இறங்கி, சக்தி தீர்ந்ததும் தரையில் வந்து விழுந்தார். ஒரு பெரும் செல்வந்தன் சிறிய மஞ்சள் பறவைக்காக இப்படிக் கஷ்டப்படுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் உதவியாளன் ஒரு குரங்கைப்போல பல வேர்களைக் கைமாற்றி லாவகமாகத் தாவி வந்து எங்கள் அருகில் நின்றான். அவன் புருணையின் பூர்வகுடியாக இருக்கலாம். சுருள் முடியும் பழுப்பு தோலும் சப்பையான மூக்கும் அவனை முரடனாகக் காட்டின.

இனி உள்ளே கொஞ்ச தூரம் நடந்தால் மஞ்சன் இருக்கும் பகுதி வந்துவிடும். அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கத் தொடங்கினேன்.

“உன் கண்களில் பயம் தெரிகிறது. கவலைப்படாதே! யாரும் வரமாட்டார்கள். கொடுக்க வேண்டியதை கொடுத்து எல்லாரையும் சரிக்கட்டிவிட்டேன். நேற்று வோட்கா உஷ்ணத்தில் அவரவர் மனைவியுடன் புணர்ந்த களைப்பில் போர்வைக்கு அடியில் தூங்கிக்கொண்டிருப்பார்கள்,” என்றார் மாலிக்.

எனக்கு பகீர் என்றது. மாலிக் இவ்வளவு திட்டமிட்டுச் செய்வார் என நான் நினைத்திருக்கவில்லை. இப்படி ஒரு சதித்திட்டம் நடக்கிறது என மொட்டைக் கடுதாசி ஒன்றை எழுதி பிரேசர் வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரியின் வீட்டுக் கடிதப் பெட்டியில் நேற்று இரவு பல சிரமத்துக்கு இடையில் போட்டுவிட்டு வந்தேன். எல்லாம் வீண். இனி எப்படித் தப்பிப்பது என யோசித்தேன். பாலுவை அழைத்து வந்திருக்கக் கூடாது எனத்தோன்றியது.

இவ்வளவு தூரம் வந்த பிறகு, மஞ்சனை என்னால் பிடித்துக்கொடுக்க முடியாது எனத்தெரிந்தால் மாலிக் என்னவும் செய்வார். அவர் உதவியாளனின் கைகள் கனத்த மரக்கட்டைபோல முறுக்கேறிக் கிடந்தன. மாலிக் தோளில் குறுக்காகத் தொங்கிக்கொண்டிருந்த தோல் பையைப் பார்த்தேன். அவர் எந்த நிலையிலும் அதை நீங்காதிருந்தார். அதில்தான் துப்பாக்கி இருக்கக்கூடும். மாலிக்கை நான் குறைத்து எடைபோட்டிருக்கக்கூடாது என்ற எண்ணம் தொடர்ந்து நடக்க நடக்க அச்சமாக மாறியது.

***

எட்டு மாதங்களுக்கு முன்பு உலக வனவிலங்கு அறவாரியம் பிரேசர் மலையில் ஏற்பாடு செய்திருந்த பறவைகளைக் கண்டடையும் போட்டியில்தான் மாலிக்கை முதன் முறையாகச் சந்தித்தேன். ஒவ்வொரு வருடமும் இந்தப் போட்டி நடக்கும்போதெல்லாம் இப்படி யாராவது வந்து என்னைச் சந்திப்பதுண்டு. பறவைகளின் பட்டியலைக் கைகளில் பார்த்தவுடனேயே என்னை ஒருவர் தேடிவரும் நோக்கம் புரிந்துவிடும். பிரேசரில் உள்ள 175 ரக பறவைகளில் யார் அதிக இனங்களைப் பார்க்கிறார்கள் என்பதுதான் போட்டி. பறவைகளைப் பார்த்ததற்குச் சான்றாக அவற்றைப் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும்.

அறவாரியம் கொடுக்கும் வரைபடத்தின் துணைகொண்டு ஒருவர் பிரேசர் மலைக்காட்டில் பறவைகளைத் தேடிச்செல்வது அத்தனை சுலபமல்ல. புதிதாக இந்தப் போட்டியில் இணையும் நபர், மூன்று நாட்களில் இருபது பறவைகள் வரை தேடிக்கண்டடைவதே சிரமமானதுதான். ஆனால் நான் நினைத்தால் அது சாத்தியம்.

“உனக்கு வேண்டிய பணத்தைக் கேள். ஆனால் அடுத்த மூன்று நாட்களும் நீ என்னுடன்தான் இருக்க வேண்டும்.” மாலிக் சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாக விசயத்துக்கு வந்தது எனக்குப் பிடித்திருந்தது. சிலர் இரண்டு மூன்று நாட்கள் பிரேசர் மலை முழுவதும் பறவைகளைத் தேடிக் களைத்தபின் வேறு வழியில்லாமல் என்னை நாடி வருவதுண்டு. சிலர் குறிப்பிட்ட பறவைகளை அழைக்க என்னை அணுகுவர். தொடங்கும் முன்பே இப்படி பேரம் பேசுபவர்களைக் காண்பது அரிது. அவரது எஸ் 600 சீரிஸ் பென்ஸ் ரக காரைக் கண்டு நான் எனக்கான கட்டணத்தைத் தீர்மானிப்பதற்குள் அவர் “ஐயாயிரம்” என்றார். அது நான் வழக்கமாகப் பெறுவதைவிட பத்துமடங்கு அதிகம் என்பதால் உற்சாகமாகச் சம்மதித்தேன்.

மாலிக்குடன் இருந்த மூன்று நாட்களும் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். அவர் காரினுள் எப்போதும் இருக்கும் கதகதப்பும் தோல் இருக்கையின் மணமும் கிரங்கடிப்பவை. அவர் தன் உதவியாளருடன் சினி பங்களாவில் தங்கியிருந்தார். எனக்கு அந்தப் பங்களாவில் இருந்த பின்அறை ஒன்றைக் கொடுத்தார். பிறந்தது முதல் பிரேசரில் வாழ்ந்து வந்தாலும் அந்தப் பங்களாவில் நுழைவது அதுவே முதன்முறை. பிரேசர் முழுவதும் அப்படி பல வசதியான பங்களாக்கள் இருந்தன. வெள்ளைக்காரர்கள் ஓய்வெடுக்கவென்றே ஒரு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மலை என்பதால், சுதந்திரத்திற்குப் பிறகு காப்ரெட் நிறுவனங்களால் வாங்கப்பட்டு அதற்கேற்ற சகல சௌகரியங்களுடனும் பராமரிக்கப்பட்டன. முதல் நாள் இரவில் புளூ லேபல் விஸ்கி பாட்டில் ஒன்றை அவர் உதவியாளன் வந்து அறையின் வெளியே வைத்துவிட்டுச் சென்றான். வெண்தோலுடன் இருந்த அவன் மூருட் பழங்குடியாக இருக்க வேண்டும் நினைத்துக்கொண்டேன். நான் அந்தப் பாட்டிலை கன்னத்தில் ஒற்றிக்கொண்டேன். வைத்து மெதுமெதுவாக முடிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போதே மறுநாள் இரவு ரெமி மார்ட்டின் வந்தது.

மூன்று நாட்களும் நான் அவர்களைப் பல்வேறு உள்வனப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்றேன். அனைத்தும் ரகசியமாகவே நடந்தன. விடிவதற்கு முன்பாகவே காட்டினுள் நுழைந்து இரவு நெருங்கியபின் வெளிவருவோம். ஒவ்வொருமுறையும் சில போட்டியாளர்களின் கண்களில் பட்டு புகார்கள் செல்வதுண்டு. முன்பு சிலமுறை நான் செய்யும் இந்த உதவிக்காக அறவாரியத்தால் கண்டிக்கப்பட்டுள்ளேன். ஆனால் அவர்களால் என்னைத் தடுக்க முடியவில்லை. சமாதானமாக அமர வைத்து ஆலோசனையெல்லாம் கூறினார்கள். என்னால் தகுதியானவர்கள் வெற்றி பெறுவதில் இடையூறு ஏற்படுவதாகப் புலம்பினார்கள். பணம் கொடுப்பதாகக்கூடச் சொல்லிப் பார்த்தனர். அவர்கள் சொன்ன தொகை வீட்டு வாடகைக்குக்கூட போதாது என்பதால் நான் எந்த ஒப்பந்தத்திலும் கையொப்பம் வைக்கவில்லை.

என் பணி மிகச் சுலபமானது.

வருபவரின் முன்னனுபவத்தை அவர்கள் உடையை வைத்தே முதலில் கண்டுபிடித்து விடுவேன். பிரகாசமான வண்ண உடைகளுடன் வந்தார்கள் என்றால் பறவைகளைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை எனப்பொருள். கண்டிப்புடன் மங்கிய வண்ணங்களால் ஆன உடை அணியச் சொல்லும்போதே ஒருவர் என் பிடிக்குள் வந்துவிடுவார். தனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது என்பதை அவரே நம்பத் தொடங்கும் நிமிடம்தான் பேரம் பேச சரியான தருணம். அதன்பின் பட்டியலில் உள்ள வரிசையின் அடிப்படையில் பயணத்தை அமைக்க மாட்டேன். அது அடுத்தமுறை அவர் தன் பயணத்தை தானே அமைத்துக்கொள்ள நான் வரைபடம் போட்டுக்கொடுத்ததாகி விடும். அருகே  உள்ள இடத்துக்கே கழுத்தை வளைத்து வாய்க்கு வருவதுபோல சுற்றி அடிப்பேன். ஒவ்வொரு பறவையும் எப்போது எங்கே இருக்கும் என்ற பட்டியல் என் நினைவில் தெளிவாக இருக்கும். நான் அத்தருணத்தை வேண்டுமென்றே தவற விடுவேன். அவர்கள் குறிப்புகளைக் குழப்புவேன். ஒருநாளில் முடிக்க வேண்டிய வேலையை மூன்று நாட்களுக்கு இழுத்தடிப்பேன். என்னைப்போல பறவைகள் குடியிருப்பைக் காட்டும் வேறு சிலர் பிரேசரில் இருந்தனர். ஆனால் என்னிடம் உள்ள சிறப்பே பறவைகளின் ஒலியை எழுப்பி அவற்றை அழைப்பதுதான். சத்தத்தைக் கேட்டு மரங்களின் மறைவில் உள்ள பறவைகள் கிளைக்குக் கிளை பறந்து அருகில் வரும். போட்டியாளர் அதைப் படம் பிடித்துக்கொள்ளலாம்.

மாலிக் என்னைப் பற்றி யார் மூலமோ கேள்விப்பட்டிருந்தார். முதன்முறை சிவப்புத்தொண்டை குக்குறுவான் என்னைத் தேடி வந்து தலையைச் சுழற்றி சத்தம் வந்த திசையைத் தேடியபோது புகைப்படம் எடுப்பதையும் மறந்து ஒரு குழந்தைபோல கைத்தட்டி மகிழ்ந்தார். அது வாயைத் திறக்காமல் தொண்டையை உப்பி விரித்து குகுகுகு என இடைவிடாமல் ஓசை எழுப்பக்கூடியது. நான் வயிற்றில் உள்ள காற்றையும் தொண்டையையும் ஒன்றிசைத்து அதன் ஒலியை உருவாக்கவும் எங்களைச் சுற்றி பறந்து ஆச்சரியமாகப் பார்த்தது.

“இதெப்படி சாத்தியம்… இதெப்படி சாத்தியம்… எப்படி உன்னால் இது முடிகிறது…” என வியந்தார் மாலிக். காட்டுக்குள் செல்லச் செல்ல பறவைகள் என் குரலைக் கேட்டு மறைவிலிருந்து வருவதைக் காணக்காண அவருக்கு ஆச்சரியம் குறையவில்லை. சில பறவைகளின் ஒலியை அரசமர இலைக்கொழுந்துகளால் காதுகளைத் துளைக்கும் படி கூர்மையாகவும் சில பறவைகளின் ஒலியை மார்பு காற்றின் வழி அழுத்தமாகவும் பெரும்பாலான ஒலிகளைத் தொண்டை மற்றும் உதடுகளின் சூட்சும அசைவுகள் மூலமாகவும் எழுப்பினேன்.

என்னால் முப்பது வித பறவைகளின் ஒலிகளை உருவாக்கமுடியும் என்பது அவருக்கு வியப்பாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு தாய்லாந்தில் நடந்த பறவைகளைக் கண்டடையும் போட்டியில் அவர் கலந்துகொண்டதாகவும் கைப்பேசியில் பறவைகளின் குரல்களை ஒலிப்பதிவு செய்து எடுத்துச் சென்றபோதுகூட எதுவும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை என்றும் கூறி வருத்தப்பட்டார்.

உண்மையில் என்னைப் பார்த்து ஒருவர் ஆச்சரியப்படுவது எனக்குப் புதிதல்ல. பாராட்டுகளால் சந்தோஷப்பட்ட காலமெல்லாம் என் அப்பாவுடன் முடிந்துவிட்டது. அந்த ஆச்சரியத்துக்குப் பண மதிப்பை ஏற்படுத்துவதுதான் என் முன் இருந்த சவால். ஆனால் உயிரோடு இருந்த வரை அப்பா அதில் தன் விருப்பமின்மையைச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

நான் சிறுவனாக இருக்கும்போதே அப்பாவைப் பார்த்துப் பறவைகளின் ஒலியை எழுப்ப ஆரம்பித்துவிட்டேன். விடுமுறை தினங்களில் ஒவ்வொரு பறவையும் இருக்கும் இடத்தைச் தேடிச்சென்று பல மணி நேரம் அமர்ந்திருப்போம். அப்பா வேடந்தாங்கல் பறவைகள் வரும் காலங்களை அறிவார். அவற்றின் இருப்பிடங்களை உள்ளூர் பறவைகளின் சமிக்ஞை ஒலியைக்கொண்டே கண்டடைவார். எல்லா நேரமும் பறவைகள் ஒரே தொனியில் கத்துவதில்லை. இரை தேடும்போதும் இணையைத் தேடும்போதும் அதில் மாறுதல்கள் இருந்தன. அச்சம் கொள்ளும்போதும் எதிரியை ஏமாற்றும்போதும் குரலில் மாறுதல்களைச் செய்தன. பாதுகாப்புக்காகக் கூட்டமாக வசிப்பதைப் போல ஜோடிப் பறவைகள் ஒரே மரத்தில் கிளைகள் மாறி மாறி அமர்ந்து பலவித ஒலி எழுப்புவதும் வேறு பறவைகளின் ஒலிபோல பாவனை செய்வதும் எனக்கு ஆச்சரியமூட்டின. முட்டையிட்ட பிறகு ஆணும் பெண்ணுமாக மாறி மாறி அவற்றைப் பாதுகாப்பதையும் குஞ்சு பொரித்தவுடன் ஒன்றன் பின் ஒன்றாக உணவு தேடி வருவதையும் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். எஸ்.பி.எம்மில் தேர்ச்சி பெறாததால் அப்பா அங்குள்ள பள்ளியில் தோட்ட வேலை வாங்கிக்கொடுத்ததால் காட்டில் சுற்ற அதிக நேரம் கிடைத்தது.

அப்பா தபால் அலுவலகராக இருந்தபோது கிடைக்காத மரியாதை காமன்வெல்த் போட்டியைக் காண லண்டனிலிருந்து வந்த இரண்டாம் எலிசபத் ராணியின் கணவர் பிலிப்ஸை காட்டுக்குள் அழைத்துச் சென்றபோது கிடைத்தது. அவர் பறவை ஆர்வலர். அப்பா அழைத்தவுடன் பறவைகள் அருகில் வருவதை அறிந்தவர், அவர் வண்டியிலேயே பிரேசர் முழுவதும் அப்பாவை அழைத்துச் சென்று பறவைகளை அருகில் கண்டார். மறுநாளே அப்பாவின் நேர்காணல் பிபிசியில் வந்தது. அப்பா எல்லாவற்றுக்கும் பச்சையம்மனைக் காரணமாகச் சொன்னது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

அவர் பச்சையம்மனை வணங்காமல் எதையும் தொடங்கியதில்லை. திங்கட்கிழமைகளில் சூரிய அஸ்தமனம் வரை விரதமிருப்பார்.

“முத்து, நாம கூப்புடுறதால குருவிங்க வருதுன்னு நெனச்சியா? அத்தனாயிரம் மைலு தெச மாறாம பறந்து வந்து இங்க சேருதுங்க. திரும்ப பொறப்படுறப்போ எல்லா மூலையிலேருந்து ஒன்னா வானத்துல சேந்து குமிஞ்சி பறக்குதுங்க. கேவலம், எது மனுசாலு போடுற சத்தம் எது குருவிங்க சத்தமுன்னு அவங்களுக்கு வித்தியாசம் தெரியாதா. அவங்களுக்கு நாம பச்சையம்மா புள்ளைங்கன்னு தெரியும். அதனால கூப்புட்ட கொரலுக்கு வறாங்க.” என்பார்.  அவருக்குப் பறவைகளை அழைப்பது வனத்தின் ஒரு பகுதியை அழைப்பதுபோல. “பட்சிங்க வந்தா பச்சையம்மா வந்தாப்புலடா,” என்பார்.

அவரது பக்தியைப் பார்த்துப் ஏன் பச்சையம்மனுக்கு இந்த மலையில் சிறிய கோயில் வைக்கக்கூடாது எனக்கேட்டுள்ளேன். முனியாண்டிக்கும் மதுரை வீரனுக்கும் மலையில் சின்னச் சின்ன தகரக்கொட்டகையில் கோயில்கள் இருந்தன. “அம்மாதானடா இந்த மலையாவே படுத்திருக்கா.  அவ்வளோ பெரியவ இந்த கொட்டாக்குள்ள அடங்குவாளா? மனசார நல்லா கூம்புட்டு கண்ண தொறந்து பாரு மக்கா. அதிஸ்டம் இருந்தா அவளோட மூக்குத்தி இல்ல… அதோட இத்தனூண்டு வெளிச்சத்தயாவது பாக்குற பாக்கியம் கெடைக்கும். எங்க அப்பா பாத்துருக்காரு. எனக்கு எப்ப கொடுப்பினையோ” எனக் கண்கலங்குவார்.

வேலூர் வாழைப்பந்தல் கிராமத்தில் இருந்து வந்த அவர் அப்பா ஏற்றிவிட்டு போன பக்தி அவரைவிட்டு சாகும்வரை விலகாமல் இருந்தது. உயிருடன் இருந்தவரை அதிகாலை பனி அகலும் பொழுதுகளை வணங்கிவிட்டே நாளைத் தொடங்கினார்.

“சின்னதா செல இருந்தா மனுஷாலுதான் அபிஷேகம் செய்வான். இப்ப பாத்தியா? பெருசையெல்லாம் பெருசாலதான் பெருமபடுத்தனும்“ என்பார். 

அப்பா இறந்த பிறகுதான் நளினி ஓடிப்போன வெறுமை இன்னும் வதைத்தது. பாலுவை வளர்க்க மிகவும் சிரமப்பட்டேன். அவள் கேட்டுக்கொண்டதுபோலவே கீழே ரவுப் நகரத்தில் உள்ள ஏதாவது தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து வசதியான குடியிருப்பில் வாழ சம்மதிப்பதாகச் சொல்ல ஆசைப்பட்டேன். ஆனால் அதை அவளிடம் எங்கே எப்படித் தேடிச் சொல்வது என்று தெரியவில்லை. கொஞ்ச நாளிலேயே அவள் வந்தாலும் அப்படிச் சொல்ல முடியாது எனத் தோன்றியது. என்னால் இந்தக் குளிரையும் பனியையும் பறவைகளின் ஒலியையும் விட்டுவிட்டு எங்கும் போக முடியாது. அவளுக்கும் அது தெரிந்திருக்கும். பொதுவாகப் பெண்களுக்கு ஆண்கள் சொல்லாமலேயே எல்லாமே தெரிந்திருந்தது. அவர்கள் பறவைகள்போலவே எதையும் கவனிக்காதபடி அனைத்தையும் கவனிக்கின்றனர் என்பதைத் தாமதமாகவே அறிந்தேன்.

அவ்வருடம் மாலிக்தான் அதிகமான பறவைகளைப் புகைப்படம் எடுத்திருந்தார். மொத்தம் 42 என்ற நினைவு. அது பெரும் சர்ச்சையானது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஏற்பாட்டுக் குழுவினரைக் கடுமையாக வசைபாடினர். மாலிக் எதையும் கண்டுகொள்ளவில்லை. தான் வென்ற தொகையை அப்படியே என் கையில் வைத்துவிட்டு கிரிஸ்டலில் செய்யப்பட்ட மெடலை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார். எனக்கு அவரைப் பார்க்கக் கோமாளியாகத் தெரிந்தது. இவ்வளவு பெரிய கோடிஸ்வரருக்கு ஒரு எளிய மெடலின் மேலுள்ள ஆசையை எவ்வாறு அர்த்தப்படுத்துவது எனத் தெரியவில்லை. ஆனால் சில மாதங்களில் மலைச் சரிவிலிருந்து அழுகி, எலும்புகள் மட்டும் மிச்சமிருந்த ஒரு சடலத்தை அஸ்லிகாரர்கள் பார்த்ததாகக் கூறவும் நான் அவர்களுடன் ஆபத்தான அப்பள்ளத்தாக்கு நோக்கிச் சென்றேன். எஞ்சிய உடைத்துண்டுகளை வைத்து அது மாலிக் உதவியாளன் எனப் புரிந்தது. இதை நான் யாரிடமும் சொல்லவில்லை. அது மாலிக்குடனான எனது தொடர்பை நானே உறுதிப்படுத்துவதாகும். எனக்கு ஏதும் சிக்கல்கள் வரலாம் என பயந்தேன்.  பொதுவாக இதுபோன்ற சடலங்களைக் கண்டால் பூர்வகுடிகள் காவல் நிலையத்தில் சொல்ல வேண்டும் எனக் கட்டளை இடப்பட்டிருந்தது. அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. தற்கொலைகளும் விபத்துகளும் பிரேசர் மலைபாதையை நோக்கி வரும் ஆபத்தான சரிவுகளில் மிகச் சாதாரணம் என்பதால் அதை அப்படியே மறைத்துவிட்டோம்.

அதன் பின்னர் வந்த நோய் தாக்கத்தில் நான் மாலிக்கை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தேன். அனேகமாக நான் என் மகனையும் என் தொண்டையையும் தவிர உலகில் மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டிருந்த ஒரு தினத்தில்தான் அவர் மீண்டும் என்னைத் தேடி வந்தார். இம்முறை ரோல்ஸ் ரோய்ஸ். தலை மயிருக்கு செம்பட்டை நிறம் பூசியிருந்தார். மீசையை ஒட்ட வெட்டி சற்று இளமையாகத் தெரிந்தார். புதிய உதவியாளன் அருகில் பணிவோடு இருந்தான். அது போட்டி நடக்கும் காலம் இல்லாததால் அவர் வருகையை ஆச்சரியமாகப் பார்த்தேன்.

மாலிக் சுற்றி வளைத்துப் பேசுபவர் இல்லை. நேராக அருகில் வந்து தன் டிஜிட்டல் கேமராவைத் திறந்து “இந்த அங்கரி பெர்ட் பெயர் என்ன?” என்றார்.

நான் யோசிக்காமல் “யெல்லோ ரம்பட் ” என்றேன்.

“இதைப் பற்றி நீ சொல்லியது நினைவுண்டா?” என்றார்.

எனக்கு நினைவிருந்தது. அது கொரியாவிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புலம்பெயர்ந்து வந்த பறவை. அதனுடன் இன்னும் ஆறு யெல்லோ ரம்பட் இருந்தன. அவற்றில் மூன்று பெண் பறவைகள். டிசம்பரில் மீண்டும் அவை புறப்பட்டபோது ஒன்று மட்டும் இங்கேயே தங்கிவிட்டது. அப்படி சில பறவைகள் செய்வதுண்டு. அடுத்த வருடம் வரக்கூடிய அதன் குழுவுடன் இணைந்து செல்லக்கூடும். அல்லது ஒரு ஜோடியுடன் இங்கேயே வாழ சாத்தியமும் உண்டு. அதன் கண்களுக்கு மேல் முறைத்துப் பார்ப்பதுபோல் இருக்கும் வெள்ளை உரோம வடிவம் என்னை அதிகம் வசீகரித்தது. அதை மஞ்சன் என்றே அழைத்து வந்தேன். கொஞ்ச நாளிலேயே அதன் ஒலியைப் பழகியிருந்தேன்.

அது மற்றப் பறவைகள் போலில்லை. அதன் குரலில் விசில் அதிர்வு கலந்திருக்கும். ஒரே நேரத்தில் பல்வேறு சுருதியில் ஒலியெழுப்பும். பழக்கம் இல்லாதவர்கள் வெவ்வேறு பறவைகளின் ஒலி எனக் குழம்பிவிடுவர். அல்லது இரு பறவைகள் தீவிரமாக உரையாடுகின்றன எனவும் ஏமாறக்கூடும். எப்படியாயினும் மஞ்சனின் ஒலியை எழுப்ப தொண்டை அதிர்வது அவசியமானது. அந்தத் திறனை நான் சின்ன வயதிலேயே பயிற்சி செய்து பெற்றிருந்தேன்.

ஓர் அந்நிய நாட்டுப்பறவை அவ்வளவு அருகில் வந்ததில் மாலிக் உற்சாகத்துடன் இருந்தார். உண்மையில் நானும் மஞ்சன் அவ்வளவு அருகில் வரும் என நினைத்துப் பார்க்கவில்லை. பிரகாசமான மஞ்சள் உடல். கரும் வண்ணத்தைத் தலையில் அழுத்தி, அங்கிருந்து தூரிகையை இழுத்து வந்ததுபோல கொஞ்சம் கொஞ்சமாகச் சாம்பலாகியிருந்த இறக்கைகள். அவசரமாகக் கிழித்ததுபோல புருவத்திலும் இறக்கையிலும் வெண்கோடுகள். தனது சிறிய அலகால் என்னைப் பார்த்து வெவ்வேறு தொனியில் ஒலியெழுப்பியபோது சிலிர்த்தது.

மாலிக் டிஜிட்டல் கேமரா திரையில் தெரிந்த பறவையின் உருவத்தைப் பெரிதாக்கினார்.  “எங்கள் நாட்டு கொடியின் வண்ணம்போல இருக்கிறதல்லவா?” என்றார்.

நான் புருணை நாட்டுக் கொடியை ஒருதரம் யோசித்துப் பார்த்து “ஆம்” என்றேன்.

“எனக்கு அது வேண்டும்!” என்றார்.

அவர் என்ன சொல்கிறார் என யோசிக்கவே எனக்கு அவகாசம் தேவைப்பட்டது. “படம் பிடிக்க வேண்டுமா?” என்றேன்.

“அப்பறவை உயிருடன் எனக்கு வேண்டும். என் நாட்டுக்கு அதை எடுத்துச் செல்ல!” என்றார்.

“அது வேடந்தாங்கல் பறவை. பிடித்துச் செல்வது பெருங்குற்றம்!” என்றேன். அதிர்ச்சியில் அரண்டு பேசியதால் தொண்டை வலித்தது. குரல் உடைந்து இறுதிச்சொல் காற்றாக வந்தது.

“கொஞ்சம் இரு” என்றவர் தன் கைப்பேசியைத் திறந்து ஒரு வீடியோவை ஓடவிட்டார். ஒரு பிரம்மாண்டமான வீட்டின் பின்னணியில் செயற்கையான காடும் அதில் சிறிய வலைக் கம்பிகளால் ஆன பெரிய அளவு கூண்டுகளும் இருந்தன. ஒவ்வொரு கூண்டிலும் ஏராளமான பறவைகள். என்னால் அவற்றை அடையாளம் காண முடியாதபடிக்குத் திரை சிறியதாக இருந்தது. ஆனால் அவற்றின் ஓசை ஒன்றுடன் ஒன்று கலந்து கோரமாக ஒலித்தது. அப்பறவைகள் பெரும் துக்கத்தில் இருக்கின்றன என என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

“இது என் தனி பறவைகள் பூங்கா” என்றார்.

“ஓ!” என்றேன்.

“இங்கு உலகில் உள்ள பல அரிய வகை பறவைகள் உள்ளன. அதில் யெல்லோ ரம்பட்டும் இணைய வேண்டுமென விரும்புகிறேன். எங்கள் நாட்டுக்கொடியைப்போல ஒரு பறவை அதில் இருப்பது எனக்கு எவ்வளவு பெருமை. அது நீ உதவினால் சாத்தியமாகும்” என்றார்.

எனக்குக் குளிரிலும் வியர்த்தது. அது அவ்வளவு எளிதான காரியமல்ல. பிரேசர் பறவைகள் உலக வனவிலங்கு அறவாரியத்தின் உறுப்பினர்கள் சிலரால் பாதுகாக்கப்படுகின்றன. வருடத்திற்கு ஒருமுறை அவர்கள் புகைப்பட போட்டி நடத்துவதே புதிதாக மலைக்கு வந்துள்ள பறவைகளை அடையாளம் காணவும் அடையாளத்துக்காகக் கால்களில் கம்பி மாட்டிவிடப்பட்ட பறவைகள் உயிருடன் உள்ளனவா எனத் தெரிந்துகொள்ளவும்தான். பறவைகளைத் திருடவும் வேட்டையாடவும் முயன்ற எத்தனையோ பேர் பிடிப்பட்டுள்ளனர். தண்டனைகள் கடுமையானவை. ஆனால் எனக்கு அது எதுவும் பொருட்டல்ல. என்னால் கடந்த நான்கு மாதங்களாகப் பறவைகளின் குரல்களை எழுப்ப முடியாதபடி தொண்டையில் புற்றின் பாதிப்புகள் இருந்தன. நான் தயங்கினேன்.

“நான் முன்பு இளவரசர் ஜெஃப்ரிக்கு அந்தரங்க மெய்க்காப்பாளனாக இருந்தவன். அவரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளாயா?” என்றார்.

நான் ‘இல்லை’ எனத் தலையாட்டினேன்.

“புருணை இளவரசர். வரலாற்றில் கடைசி பிரம்மாண்டமான அந்தப்புரம் அவருடையதுதான். உலகின் பல அழகிய பெண்கள் அந்த அந்தப்புரத்தை அலங்கரித்துள்ளனர். அவர் பெண்களைத் தேர்ந்தெடுக்கும் விதமே மிக அற்புதமானது. சில தரகர்கள் மூலம் உலகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு அழைப்பு வரும். அப்பெண்கள் நிர்வாணமான தங்கள் படங்களை அனுப்பி வைக்க வேண்டும். ஜெஃப்ரிக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தால் சில காலம் அவர் அந்தப்புரத்தை அலங்கரிக்கலாம். நினைத்துப்பார்க்க முடியாத செல்வம் கிடைக்கும். அதற்குப் பிறகு ஒரு பெண் தன் வாழ்நாளில் வேலை செய்ய வேண்டிய அவசியமே வராது,” என்றார்.

பாலு உள்ளிருந்து ஓடிவந்து பிரம்மாண்டமான காரை வியப்புடன் பார்த்தான்.

“அவருக்கு ஏன் அவ்வாறான ஆசை இருந்தது தெரியுமா?” என்றார்.

நான் பாலு அதையெல்லாம் கேட்கக்கூடாது என்று வீட்டினுள் போகச் சொன்னேன்.

“அவர் புருணையின் பொருளாதார அமைச்சர். பெரும் சக்திமிக்க மனிதர். ஆனால் பெண்களின் அழகு அவரது அகங்காரத்தை சதா சீண்டிக்கொண்டே இருந்தது. அதைத் தனக்குக் கீழ் கொண்டுவர நினைத்தார். அதை ஒரு விளையாட்டாகத் தொடங்கினார். அது அவருக்கான மாபெரும் அந்தரப்புரம் உருவாகும் அளவுக்கு வளர்ந்தது.”

மாலிக் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தபோது உதவியாளன் பற்ற வைத்தான்.

“இளவரசர் ஜெஃப்ரிக்கு அந்தரங்க மெய்க்காவலனாக வேலை செய்த காலத்தில் பல கொலைகள் செய்ததுண்டு. பாதுகாப்பு என்பது இனி வரக்கூடிய ஆபத்துகளைத் தடுப்பதும்தானே” என்றவர் வான் நோக்கி புகையை விட்டார்.

நான் விதிர்த்து நின்றேன்.

“உலகில் பெண்களைவிட அழகான வேறொன்று உள்ளதா எனத் தேடியபோதுதான் நான் பறவைகளைக் கண்டடைந்தேன். எந்தப் பெண்ணையும்விட பறவைகள் அழகானவை எனத் தோன்றியது, குறிப்பாக ஆண் பறவைகள். அவை பெண்களைக் கவர சாகசங்கள் செய்பவை. பறவைகள்தான் இந்த உலகை சொர்க்கமாக்குகின்றன எனத் தோன்றியது. நாம் குழந்தையாக இருக்கும்போதே இந்த உலகத்தில் ஒன்றைப் பார்த்து பொறாமைப் படுகிறோம் என்றால் அது பறவையாகத்தான் இருக்கும். நான் அவற்றைச் சேகரிக்க ஆரம்பித்தேன். வேலையை விட்டேன். அதன் பிறகு நான் எந்தப் பெண்ணையும் நெருங்கிச் செல்வதில்லை. மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன்.”

எனக்கு அவரிடம் என்ன விளக்கம் சொல்வதென்று தெரியவில்லை. பலவாறான குழப்பத்தில் இருந்தேன்.

“இதைப் பிடி” என மாலிக் என் கையில் பத்தாயிரம் ரிங்கிட்டை வைக்கவும் நான் திகைத்துப் போனேன். “இந்தப் பறவையை எடுத்துவர நான் கொரியா சென்றால் என்ன செலவாகுமோ அதைக் கொடுத்துள்ளேன். கச்சிதமாக செய்துகொடுத்தால் கூடுதலாகவே தருவேன்,” என்றார்.

என்னால் எதையும் மறுக்க முடியவில்லை. நான் தொண்டையில் உள்ள புற்று அறுவை சிகிச்சைக்காகப் பணம் தேடி போராடிக் கொண்டிருந்தேன். பாலுவை அனாதையாக விட்டுப் போய்விடுவேனோ என்ற பயம் என்னை தினம் தினம் வதைத்தது. என்னால் பறவைகளின் குரலை எழுப்பமுடியாது எனச் சொல்லிவிடலாமா எனத் தோன்றியது. ஒரு பத்தாயிரம் ரிங்கிட் இவ்வளவு கனக்குமா? என்னால் அதைச் சுமந்துகொண்டு ஓடமுடியவில்லை. மெல்ல ஓரிரு அடி எடுத்து வைத்தேன். மனம் அவர் காரினுள் விரைந்து ஏறிவிட வேண்டும் என ரகசியமாகத் துடித்தது. மாலிக் கார் செல்வதைக் கண்ணீர் துளிர்க்க பார்த்துக்கொண்டிருந்தேன்.

***

“இங்குதானே” என்றார் மாலிக்.

நான் ‘ஆம்’ என தலையாட்டினேன்.

“இங்குதான். எனக்கும் நினைவுண்டு,” என்றவர் உதவியாளனிடம் கைகாட்டினார். அவன் கொண்டு வந்திருந்த பையை எடுத்துக்கொண்டு கிடுகிடுவென அருகில் இருந்த மரத்தில் ஏறி வலையின் ஒரு பக்க முனையைக் கட்டினான். அதன் மறு முனையை மற்றுமொரு மரத்தில் கட்டினான். நான் அங்கு நடப்பதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். நன்கு உற்றுப் பார்த்தால் மட்டுமே வலையின் மென் நரம்புகள் கண்களுக்குத் தெரிந்தன.

“இவன் பறவைகளை வலை விரித்துப் பிடிப்பதில் கெட்டிக்காரன். டூசுன் இனத்தவன்,” என்றார் மாலிக்.

அது தெரிந்தது. அவன் நீண்ட விரல்கள் சிலந்தியின் கால்களைப்போல அசைந்து கொண்டிருந்தன. எனக்கு முன்பு தொங்கிக்கொண்டிருந்த வலை அவனே தன் எச்சிலால் பின்னியதோ என்று ஒரு கணம் தோன்றும் அளவுக்கு அவனது விரல்களில் வேகமும் நுணுக்கமும் தெரிந்தது. கால் விரல்களும் கை விரல்கள் போலவே நீளமாக இருந்ததால் மிக எளிதாக மரப்பட்டைகளில் அழுத்திப் பிடித்துக்கொண்டான். பெரும்பாலும் பாதி வரை இறங்கி பின் தரையில் அசாதாரணமாகத் தாவி குதித்தான். அவ்வப்போது அவன் என்னைப் பார்க்கும்போதெல்லாம் பார்வையைத் தவிர்த்தேன்.

“முன்பிருந்த என் உதவியாளனை எங்கேனும் பார்த்தாயா?” எனக்கேட்ட மாலிக்கை அதிர்ச்சியுடன் பார்த்தேன். உதட்டில் அசட்டையான புன்னகை.

“அவனுக்கும் என்னைப்போல பறவைப் பூங்கா ஒன்று அமைக்க ஆசை வருகிறது என்றான். சரி பிடித்து வா என மலைகளுக்கிடையில் அனுப்பிவைத்தேன். எங்காவது பார்த்தாயா அவனை?” என்றார்.

நான் மௌனமாக இருந்தேன். ஒரு கொலையைக் குரூரமான அடக்கத்துடன் சொல்லும் அவர் பாணி அச்சம் கொடுத்தது. வலை மாட்டுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பாலுவின் தலையைத் தடவினேன்.

அவர் உதவியாளன் ‘ப’ வடிவில் வலையை அமைத்திருந்தான். கூர்ந்து பார்த்தால் மட்டுமே அங்கு அது விரிந்து கிடப்பது தெரிந்தது.

“கவலைப்படாதே. நான் உருவாக்க விரும்புவது பறவைகளுக்கான அந்தப்புரம்தான். அங்கு அவை மகிழ்ச்சியாக இருக்கும்; என் கால்களுக்கு அடியில்,” என்றார்.

உதவியாளன் அருகில் வந்து பணிந்து நிற்கவும் நான் வான் நோக்கிப் பார்த்தேன். ஏன் அப்படிப் பார்த்தேன் என என்னால் சரியாக ஊகிக்க முடியவில்லை. வானிலிருந்து யாரேனும் வந்து என்னைக் காப்பாற்றக்கூடும் என நம்பியிருக்கலாம். சூரியன் எழத் தொடங்கியதால் பனியின் அடர்வு குறைந்துகொண்டிருந்தது. காட்டில் இருந்த திரைகள் அடுக்கடுக்காக அகன்றன.

“இனி நீ அந்த அங்கரி பெர்ட்டை அழைக்கலாம்,” என்றவர் ஒதுங்கி சென்று ஒரு மரத்தின் ஓரம் நின்றுகொண்டார். நாற்புறமும் மரங்கள் சூழ்ந்த வனத்தின் மத்தியில் நான் பாலுவுடன் நின்றேன்.

“மஞ்சன புடிக்கப் போறியாப்பா?” என்றான் பாலு. நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு இப்போதுதான் அது புரிந்திருந்தது. எனக்கும் இதெல்லாம் இப்போதுதான் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமெனத் தோன்றியது.

மரங்களுக்கு கால் முளைத்து என்னைச் சுற்றி சூழ்வதாகக் கற்பனை வந்தது. கண்களை மூடித் தொண்டையைக் கவனித்தேன். என்னால் முடியும் முடியும் என பலமுறை கூறிக்கொண்டேன். தொண்டையைக் கமறிக் காற்றை இழுத்து ஊதினேன். சிறிய விசில் எழுந்து அடங்கியது.

பாலு விழிகளை உயர்த்தி என்னைப் பார்ப்பதை உணர்ந்தேன். எனக்கு அவனைப் பார்க்கக் கூச்சமாக இருந்தது.

“வேணாம்பா!”

நான் மீண்டும் மனதை நிதானமாக்கி முயன்றேன். கூக் என ஓசை எழுந்து பின்னர் காற்று மட்டும் வந்தது.

என் கால்கள் நடுங்கத்தொடங்கின. எனக்குப் பின்புறம் மாலிக் துப்பாக்கியை எடுத்து தன் கையில் வைத்துள்ளதுபோலவும் அது பின் மண்டையைக் குறி பார்ப்பதாகவும் கற்பனை எழுந்தது. நான் திரும்பிப் பார்த்தால் அவருக்குத் தெரிந்துவிடும். என்னால் எதுவும் முடியாது என என் உடலின் ஒவ்வொரு பாகமும் அவருக்குக் காட்டிக்கொடுத்துவிடும்.

நான் மறுபடி மறுபடி முயன்றேன். என் நிதானம் தவறிக்கொண்டே வந்தது. தொண்டை வலிக்கத் தொடங்கியது. குறைந்தபட்ச ஒலி எழுப்பவாவது நான் முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன். என் தோல்வி என்னைப் பதற்றமாக்கியது. மென்மை இறுகி அழுத்தமாகி உதடுகளைக் குவித்து ஊதினேன். ஏதாவது ஒரு ஓசை வருமா என பலவாறு முயன்றேன். தொண்டை வலித்தது. கிழிந்த தசையில் உப்புப் பட்டதுபோல எரிந்தது. மூச்சை இழுக்கும்போது ஒன்றாகவும் விடும்போது வேறொன்றாகவும் வலி மாறி மாறித் துன்புறுத்தியது.

“பாவம்ப்பா” பாலுவுக்கு நான் பதில் எதுவும் சொல்லவில்லை.

“என்ன ஆனது?” மாலிக் கேட்டதற்கும் நான் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

நான் முயன்றுகொண்டே இருந்தேன். அப்போதுதான் அந்த ஒலி வெளிப்பட்டது. நான் கண்களைத் திறந்தேன். அது நிஜமா? அந்தக் குரல் வெளிப்பட்டதா? மீண்டும் விசிலின் அதிர்வு கேட்டபோது நான் பாலுவைப் பார்த்தேன். அவன் கண்கள் வியக்க மரக்கிளையைப் பார்த்துக்கொண்டிருந்தான். பார்வையில் அசைவில்லை.

நான் மெல்ல  அந்தத் திசையை நோக்கினேன். மஞ்சன் நின்றுகொண்டிருந்தான்.

என்னால் அச்சூழலை நம்ப முடியவில்லை. அது எப்படி நடந்தது. நான் மீண்டும் உதடுகளைக் குவித்தபோது அதில் நடுக்கத்தை உணர்ந்தேன். பாலு என் கைகளை அழுத்தப் பிடித்துக்கொண்டான். அவன் நகங்கள் கீறுவதை உணர்ந்தேன்.

மஞ்சன் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். ஒரு உரையாடலைப்போல வெவ்வேறு விதமாக விசிலதிர்வு குரலை எழுப்பினான். ஏதோ நினைத்தவன் என்னை நோக்கித் தாவி வந்தபோது வலையில் சிக்கிக்கொண்டான்.

மாலிக் உற்சாகமாகக் கைதட்டுவது கேட்டது. நான் மஞ்சன் வலையில் துடிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சில மஞ்சள் இறகுகள் காற்றில் அலைந்து பறந்தன. என் தோள்களில் கை வைத்த மாலிக் “நீ அற்புதமானவன். சிறிய சத்தத்திலேயே அதை வரவழைத்துவிட்டாய். என்னால் நம்ப முடியவில்லை” என்றார்.

மாலிக்கின் உதவியாளன் துடித்துக்கொண்டிருக்கும் மஞ்சனை வலையிலிருந்து பிரித்தெடுத்துக் கையுடன் கொண்டு வந்திருந்த மூங்கில் கூடையில் போட்டான். மஞ்சன் என்னைப் பார்த்துக்கொண்டே வேகமாகக் கத்தியது. அப்படியான குரலை நான் அதுவரை கேட்டதில்லை. ஒரு பறவை தவிக்கும்போது அதன் குரல் முற்றிலும் வேறாக உள்ளதை அன்று நான் கேட்டேன்.

மாலிக் மேலும் பத்தாயிரம் ரிங்கிட்டை என் கைகளில் திணித்தார். “வைத்துக்கொள். இனி இங்கு நிற்காதே. நான் வன அதிகாரிகளிடம் கேட்டிருந்த அவகாசம் முடிந்துவிட்டது. நீ போய்விடு. மற்றவற்றை நான் பார்த்துக்கொள்வேன்.”

என்னால் நகர முடியவில்லை. கண்கள் இருண்டு கொண்டு வந்தன. சிறிய மூங்கில் பெட்டிக்குள் படபடக்கும் உயிர்த்துடிப்புக் காடு முழுவதுமிருந்தும் பேரதிர்வாகக் கேட்டது. கிளைகளுக்கிடையில் தங்கக் கீற்றாகப் பாய்ந்த ஒளி அதிகாலைச் சூரியனுடையது அல்ல எனத் தெரிந்தபோது நான் மயங்கி விழுந்தேன். 

புதிய சிறுகதைகள்:

கழுகு

உச்சை

சியர்ஸ்

ராசன்

கன்னி

பூனியான்

டிராகன்

ஒலிப்பேழை

(Visited 780 times, 1 visits today)