தருமசங்கட நிலைக்குத் தள்ளப்பட்ட முத்துவை பச்சையம்மன் மன்னிக்க வேண்டும் என வேண்டிடத் தோன்றுகிறது. கதையின் பின்னனி என்னவாக இருக்கும் என ஊகிக்க முடிகிறது. அது தவறாகவும் இருக்கலாம். எந்திரன் 2.0 திரைப்படதின் வில்லன் கதாப்பாத்திரம் பட்சிராஜன் உண்மையின் ORNITHOLOGY எனப்படும் பறவைகள் ஆராய்ச்சித் துறை அறிஞர் சலீம் அலி என்பாரின் நீட்சி ஆகும்.
படம் வந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, சாரு நிவேதிதா எழுதிய ‘திசை அறியும் பறவைகள்’ என்ற நூலில் சலீம் அலியைப் பற்றி வாசிக்க நேர்ந்தது, அவரை இணையத்தில் தேடிப்பார்த்தேன். அவரைப் போன்றே நம் நாட்டு பிரேசர் மலையில் ‘பறவை மனிதன்’ என அறியப்படும் திரு. துரை என்பவர் இருக்கிறார் என்பது ம. நவீன் சொல்லத் தெரிந்துக்கொண்டேன். அவரைப் நேர்க்காணல் செய்து, அதனை வல்லினம் இணைய இதழில் பதிவேற்றமும் செய்திருக்கிறார் ம.நவீன்.
(http:/www.vallinam.com.my/issue47/interview.html) முத்து, திரு. துரையின் தாக்கமாக இருக்கலாம். அல்லது அவராகவே கூட இருக்கலாம். ஓர் ஓட்டப் பந்தய வீரன் முடமாகக்கூடிய நிலையில் இருப்பதுப் போல் தொண்டைப் புற்று நோய் தரும் அச்சதில், அதனால் மரணம் நேர்ந்தால் அனாதை ஆகக்கூடிய பாலுவின் நிலையை எண்ணி தகாததற்கு உந்தப்படுகிறார் முத்து. மாலிக் ஓரு பயம் தரும் சித்தரிப்பு. தன்னை இரசனைப் பூர்வமாக அடிமைப் படுத்தியப் பறவைகளை பின்னர் தனக்கு அடிமையாக்கிக்கொள்ளும் நோக்கத்தில் துவங்குகிறது பறவைகளின்பால் மாலிக்கின் தேடல். தன்னைப் போலவே ஒத்த ஆசைக் கொண்டிருந்த உதவியாளனை கொன்றுவிடுகிறார். பறவைகள் சேகரிப்பு மாலிக்கிற்கு அதிகாரத்தின் அடையாளம். அன்னை ஆக்கிரமிப்பு செய்ய எண்ணும் ஒன்றினை ஆக்கிரமிப்பிச் செய்யும் வெறி அல்லது போதை. புற்று நோய்க்கும் உளவியல் நோய்க்கும் காட்டுக்குள் நிகழ்கிறது போராட்டம்.
சுயநலத்தின் உச்சம் தாய்மை. தனக்கேயான ஒன்றினைப் பேணும் பொறுட்டு, தனக்கான எதையும் பனையம் தரும் தாய்மை. பறவைகளை உச்சத்தில் நேசிக்கும் முத்து, தன் மகன் என்று வரும் போது மஞ்சனை பிடித்துத்தர முனைகிறார். தாய்மை என்பது ஒரு குணநலம். முத்து ஆண் என்பதால் அவர் கொண்டுள்ளது ‘தந்தைமை’ என்றுக் கூறிக்கொண்டு யாரும் என்னிடம் சண்டைக்கு வர வேண்டாம்.ஒரு வீட்டின் திருடி முடித்தப் பின் வீட்டுச் சொந்தக்காரனின் கைக்கட்டை அவிழ்த்துவிட்டுத் தப்பும் திருடனின் மனப்போரட்டம் முத்துவிற்குச் சாத்தியப்படுகிறது. முத்துவின் கடிதம் வெறும் காகிதமாய் ஆனது மஞ்சனின் விதி.
எலிசபத் இராணியின் கணவர் பறவைகளைக் காண காட்டுக்குள் அழைத்துப் போகப்பட்டது உண்மை நிகழ்ச்சியா என நான் தேடிப் பார்க்கவில்லை. அன்னல் ‘யெல்லோ ரம்பட்’ பற்றி என்னால் இணையத்தில் கண்டடைய இயலவில்லை. இசுலாமிய ஷரியா விதிமுறைகளை அமுல்படுத்துவதில் புருணை இளவரசருக்கும் குடிமக்களுக்கும் பாரபச்சம் உள்ளது பரவலாக அறிந்த ஒன்றே. ஆயினும் அவரின் அந்தப்புரம் ஆக்கப்பட்ட விடயங்களை பதிவு செய்வதென்பது தனிமனிதத் துணிச்சலைப் பொறுத்தது.
மலேசியாவில் சிறந்தச் சிறுகதை எழுத்தாளர் என்று நான் வடிகட்டு வைத்துள்ள ஒருவரை, தொடர்ந்து நான் தக்கவைத்துக்கொள்ள ம.நவீன் தடையாக இருந்து வருகிறார்.
“ஒரு பத்தாயிரம் ரிங்கிட் இவ்வளவு கனக்குமா? என்னால் அதைச் சுமந்துகொண்டு ஓடமுடியவில்லை.”
“நாம் குழந்தையாக இருக்கும்போதே இந்த உலகத்தில் ஒன்றைப் பார்த்து பொறாமைப் படுகிறோம் என்றால் அது பறவையாகத்தான் இருக்கும்.”
இவ்விரு இடங்களிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. சமீபகாலமாக என் மகள் அவள் சிப்சிப் குருவி (சிட்டிக்குருவி) வளர்க்க விரும்புவதாகவும், அதனைப் பிடித்தோ வாங்கியோ தரும்படிக் கேட்டுக்கொண்டே இருந்தாள். பச்சையம்மனைப் பற்றிச் சொல்லி அவளுக்கு எப்படிப் புரிய வைக்க?
த.குமரன், ஜொகூர்
பட்சி சிறுகதையை வாசித்தேன். மஞ்சனுக்கு விரித்தக் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய நரம்புகள் உடைய வலையைப் போன்றே கதையின் கட்டுமானமும் அமைந்திருந்தது. பச்சையம்மன், பறவையின் ஒலிகள், புற்றின் தீவிரம், பாலுவின் இயல்பு, மாலிக்கின் ஆணவம், குற்றவுணர்வு என அனைத்தும் நுண்ணிய இழைகளாகக் கொண்டு கதையமைந்திருந்தது. ‘படபடக்கும் உயிர்த்துடிப்புக் காடு முழுவதுமிருந்தும் பேரதிர்வாகக் கேட்டது’ என்ற வரி மிக முக்கியமான படிமமாகவே தெரிந்தது. அந்தப் பறவையும் சேர்ந்தது அக்காடு. அந்தக் காட்டின் ஒருதுளிதான் பறவை. அந்தப் பறவையின் படபடப்ப்பு காட்டின் படபடப்பாகவே தெரியச் செய்யும் வரி. பறவையும்,காடும்,அவனும்,வாசிக்கின்ற நம்மையும் படபடக்கச் செய்தது. நோயினால் வரக்கூடிய இறப்புக்கு முந்தைய நிகர் இறப்பாகவே அவனுக்கு அமைந்திருக்கும். மிகச் சிறப்பான கதை.
அரவின் குமார்
சிறு தெய்வங்களுடன் கதை பவனி வரும் தோற்றம் ஒரு விதமாக இருந்தாலும், பறவையைப் பற்றிய நுணுக்கங்களை அறிந்து மாலிக்கு உதவும் விதத்தில் அறுவை சிகிச்சைக்குப் பணத்தைச் சேர்த்து தன் மகனை வளர்க பாடுபடும் முத்துவின் கதாபாத்திரம் கதையில் அருமை. மஞ்சையைப் பிடிக்க பூர்வகுடி ஒருவர் கையாண்ட விதம் சற்று வித்தியாசமாகவே இருந்தது. மஞ்சன் மற்றும் மற்ற பறவைகளின் கத்தும் சத்தம் மனதைச் சற்று நெகிழ வைக்கிறது. கதாசிரியர் பறவைகளின் தகவல்களைக் கதையில் வெளிப்படுத்திய முறை சிறப்பு.
புஷ்பவள்ளி