பட்சி: கடிதம் 2

சிறுகதை: பட்சி

நவின், பட்சி கதையை வாசித்தவுடன் எனக்கு தோன்றிய முதல் எண்ணம் அது ஒலிப்பேழை சிறுகதையில் இன்னொரு வடிவம் என்பதே. வணிகம் x கலை, பொருள் x அருள், பணம் x மனம் என இரண்டு வகையான மனநிலைகள் இரு வேறு தலைமுறையில் பிளவுபட்டு இருக்கையில் மூன்றாவதாக இன்னொன்றை நோக்கிச் செல்லும் கதை அமைப்பு.

அந்த மூன்றாவதை மானுட மனம் என்றுமே அறியாத – அறிய முடியாத சூட்சும வெளியில் நிறுவி பார்க்கிறீர்கள். முத்துவின் அப்பா மலையை இறைத்தன்மையாகப் பார்க்கிறார். மலையில் உள்ள பறவை அவருக்கு இறைவனின் பிரதிநிதி. முத்துவுக்கு அது வணிக பொருள். அப்பா அறியாத நுகர்பொருள். ஆனால் பறவைகள் இறைவனாகவும் இல்லை நுகர்பொருளாகவும் இல்லை. பல ஆயிரம் கிலோ மீட்டர் பயண வழிகளை அறிந்த அது மனித மனதையும் அறிந்திருக்கலாம். சிக்கலான வழிகளை உணர்வதுபோல மனித மனங்களையும் உணர்ந்திருக்கலாம். ஒலிப்பேழையில் இல்லாதது பாலுவின் பாத்திரம். முத்துவின் மனம் தன் நிலையில் இருந்து அப்பாவின் நிலைக்குத் தாவுகிறது என்றால் பாலுவின் மனம் அடுத்த அடுக்குக்குச் செல்கிறது. அந்த மனத்தில் பச்சையம்மன் இல்லை, மாலிக் இல்லை, பட்சி மட்டுமே இருக்கும்.


ராம்


அன்பான ஆசிரியர் அவர்களுக்கு.

தங்கள் சிறுகதையை வாசித்தவுடன் எனக்கும் சக தோழிகளுக்கும் பிரேசர் மலைக்குப் பயணமாகும் எண்ணம் நெஞ்சில் ஆழமாக விதைந்தது. என் தோழி சுந்தரி தன் வீட்டின் வளர்ப்பில் உள்ள காதல் பறவைகளைத் திறந்துவிடப்போவதாகக் கூறினாள். நாங்கள் இதற்கு முன்பு மலேசிய கதைகளை வாசித்துள்ளோம். ஆனால் உங்கள் சிறுகதையைப் படித்தபோது குளிர் எடுப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டோம். நாங்களே அந்த மலையில் இருப்பது போலவும் எங்களைச் சுற்றி பனி இருப்பது போலவும் உணர்ந்தோம். சாமி மேடையில் இருந்து வந்த புகை பனி போல குளிர்ந்தது. தங்கள் சிறுகதைக்காக எங்கள் நன்றி ஐயா.


சித்திரமொழி, சுந்தரி – ஈப்போ

(Visited 57 times, 1 visits today)