நவீன்,
தலை முறையாக காட்டை வழிபட்ட முத்துவுக்கு பச்சையம்மன் தந்த பலி இறுதியில் அந்த மஞ்சான் என வாசித்தேன். சற்று மிகைதான் என்றாலும் அங்கு செல்லும் விசை இந்த சிறுகதையில் உள்ளது. மறு புறம் முத்துவுக்கு தொண்டை புற்று என்பதும் ஒரு பலி வாங்கல் தான். பறவைகளை கள்ளக் குரலில் அழைத்ததற்கு.
மாலிக்கின் கட்டுப்பாட்டில் பறவைகள் வதையுடன் இருக்கும் செல் போன் காட்சி கனமானது, அவன் உதவியாளன் ஒரு சிலந்தி போல் வலை நெய்யும் காட்சி சிறப்பு. இது போன்ற இடங்கள் தான் ஒரு நிகர் அனுபவத்தை நமக்கு வழங்குகிறது. ஒலிப் பேழை சிறு கதையில் அண்டிக், இதில் ஆர்நிதாலஜி என வலுவான கதை களங்கள், கூர்மையான நுண் தகவல்கள்.
இக்கதையின் துவக்கமும் எடுப்பும் செலவும் உங்களை முக்கியமான தற்கால தமிழ் எழுத்தாளர் ஆக்குகிறது. இனி விழியற்றவனின் கைப்பொருள் என அபோதமாகவே வடிவம் பிடிபட்டுவிடும்.
பட்சி ஒரு வலுவான தீவிர அனுபவத்தை வழங்கியது.
கிருஷ்ணன், ஈரோடு
பறவைகளுக்காகவே வாழ்ந்து, பறவைகளின் அழிவதைத் தடுக்க எப்படியெல்லாமோ போராடி கடைசியில் தன் உயிரையும் கொடுத்த நல்லவர் பட்சிராஜன். அவர் காப்பாற்றத் துடித்த குருவிகளின் மீதே ஏறி ரஜினி அழித்த அந்த நல்லவரோட வல்லமையை ‘பட்சி’ மூலமாக நீங்கள் மீட்டெடுத்திருக்கிறீர்கள்.
எழுத்தின் கலை மனம் என்பது இதைத்தான். ‘கல்லும் பிராணன் இழுத்து மேலெழுந்து பறந்தது’ (கடல் சிரித்தது) என்ற சுந்தர ராமசாமியின் கவிதை வரிகளைக் கொண்டு சொல்வதென்றால், உள்ளார்ந்த சக்தியால் எழுத்துக்கு உயிர் ஊட்டியிருக்கிறீர்கள்.
இயற்கையின் தன்மைகளையும் அதில் இயங்கும் மனித மனதின் இயல்புகளையும் சித்திரமாகப் படைக்கும் எழுத்து, அதன்வழி வாழ்வின் சாராம்சத்தை சொல்லும்போது உயிர்பெற்று எழுகிறது.
பட்சியில் ஒளிரும் இந்த உயிரம்சம் வாசகரின் மனதை வருடுகிறது.
முத்துவும் அவன் அப்பாவும் அவன் மகனும் தலைமுறை தலைமுறையாக பறவை வல்லுநனர்களாகவும் பறவைகளை நேசிப்பவர்களாவும் இருக்கிறார்கள். தனது வாழ்வாதாரமாக பறவைகள் குறித்த அறிவை லாபம் கொழிக்கும் வணிகமாக்க முத்து நினைத்ததில்லை. ஆனால், வாழ்க்கைச் சுழலில் சிக்கிக்கொண்ட அவன், வேறு வழியின்றி அதைத் தனது தொழிலாக்குகிறது. சாதாரண மனிதனான முத்துவின் பொருள் தேவை, அவனது ஆத்மார்த்தமான விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. என்றாலும், தனக்குள்ளே அவன் வகுத்துள்ள அறத்துக்கு உட்பட்டு அதுவரையிலும் செயல்பட்டு வந்த அவன், கடைசியில் அதை மீறும் நிலை ஏற்படும்போது தவிக்கிறான். அந்த உயிர்த் தவிப்புதான் படிப்பவரையும் தவிக்க வைக்கிறது.
உயிர்ப்புள்ள எழுத்து ஏற்படுத்தும் இத்தவிப்பு இயல்பானது.
ஆனால், நோயினாலும் மன நோவினாலும் துடிக்கும் அவனது மூச்சுக் காற்றின் சிறு ஒலி, எங்கோ காட்டுக்குள் வாழும் ஒரு வெளிநாட்டுப் மஞ்சனைத் தவிக்க வைப்பதுதான் விந்தையானது.
பக்கத்தில் நிற்பவரால் கூட கேக்க முடியாத சிறு ஒலி கேட்டு முத்துவைக் காக்க வருகிறான் மஞ்சன். ஆயிரம் ஆயிரம் கிலோ மீட்டர் செல்திசையை அறிய முடியும் அதனால் அவன் குரலை அறிய முடியாதா? கலைஞனின் மனம் செயல்பட்ட இடம் இது.
பறவை மொழியையும், முத்துவின் குரலையும் தாண்டி, மனித உயிரின் துடிப்பை, ஓர் சிற்றுயிர் உணர்ந்து உதவத் துடிக்கும் இடம் கலையின் உச்சம். தன்னைப் பிடித்துக் கொடுத்தவன் என்று தெரிந்த பிறகும், அவனைக் காப்பாற்ற வலைக்குள் சுற்றி வந்து கதறுகிறது.
துல்லியமான, பதிவு செய்யப்பட்ட ஒலியைக் கண்டறிந்து ஒதுங்கிச் செல்லும் பறவைகளால் குரலிழந்த தொண்டையிலிருந்து எழும் ஒலியை உணர்ந்துகொள்ள முடிவதுதான் இயற்கையின் இயல்பு. அதை முத்துவின் அப்பா பச்சையம்மாளின் கருணை எனலாம்.
பச்சையம்மாள் மலையையும் அதன் உயிர்களையும் காக்கிறாளா, மலையும் அதன் உயிர்ப்பும் பச்சையம்மாளை உயிர்ப்புடன் வைத்திருகிறதா என்று பிரித்துச் சொல்ல முடியாது. புரியாத சக்தி தெய்வமாகிறது. புரியும்போது அது இயற்கையின் அற்புதமாகிறது.
நான் பார்த்து வளர்ந்தது எல்லாம் பூக்காத, காய்க்காத மரங்களும் செடிகளும் நிறைந்த உயரமான கட்டடங்களைத்தான். எந்த மலையையும் முன்பின் பார்த்திருக்காத என் கண்முன்னால், கரடு முரடான, சரிவுகளும் சறுக்கல்களும் நிறைந்த குளவி, தேனீ, பறவைகள் எல்லாம் சுற்றித்திரியும் மனிதரோட கை படாத காட்டை அப்படியே கண்முன்னால் கொண்டு வந்துவிட்டீர்கள். கதையாக அடங்கி நிற்கும் மொழி இதன் கலைத் தன்மையை கூட்டுகிறது.
யதார்த்த வாழ்வின் உண்மைகளை எடுத்துச்சொல்ல, அதற்கு அப்பாற்பட்ட ஒரு கற்பனை தேவை. புனிதங்களை உடைத்துக்கொண்டு எழும் கற்பனை.
பறவைகளுடன் வளர்ந்த முத்து பறவைகளை நேசிப்பவன். அந்த அறிவை மூலதனமாகக் கொண்ட அவன், வாழ்க்கைப்பாட்டுக்காக அதனைப் பயன்படுத்துவதும், அதில் எல்லைக் கோட்டைத்தாண்டும்போது தவிப்பதும் இரண்டுமே ஒரே மனதில் நிகழக்கூடிய சாத்தியங்கள்தான்.
பறவைப் பிரியரான மாலிக்கின் மனநிலையும் மிக இயல்பாக உள்ளது. அதிகாரமும் ஆளுமையுமே சக்தி என நம்புவது அல்லது அவற்றின் மூலம் தனது தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட நினைப்பதும் சாத்தியமானவைதான். பெண் பித்தனான சுல்தானிடம் சேவகம் புரிந்த மாலிக்கிற்கு, தனது அவமானத்தைப் போக்கும் வழியாகவே பறவைகள் இருக்கின்றன. அவனிடம் அவை குறித்த அறிவாற்றல் இருந்தாலும், உளமார்ந்த பிரியம் இல்லை. அவன் செய்யும் இரக்கமற்ற கொலையும் அகங்காரமான அவனது குணமும் அவனை உள்ளன்பு அற்றவனாக நேர்த்தியாக வடித்துள்ளன. மஞ்சனைப் பிடிக்கும் வரையில் அதன் ஒவ்வொரு அசைவும் உற்றுநோக்கியபடி இருந்த அவன், கடைசியில் அது துடிப்பதைக் கண்டுகொள்ளவே இல்லை. அவனின் பிரம்மாண்ட பூங்காவில் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் பறவைகள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றன.
“நாம் குழந்தையாக இருக்கும்போதே இந்த உலகத்தில் ஒன்றைப் பார்த்து பொறாமைப் படுகிறோம் என்றால் அது பறவையாகத்தான் இருக்கும்,” என்பது மிக உண்மையான வரிகள்.
பொறாமை அகங்காரமாகிறது, அடக்கி ஆள வைக்கிறது.
கோடிகோடியாகச் செலவழித்து உருவாக்கப்பட்ட ஒரு படத்தில் கொண்டு வரமுடியாத, உலகப் புகழ்பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் ஆராய்ச்சியாளரும் இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan), சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) போன்ற பிரபல நூல்களை எழுதியவருமான சலீம் மொய்ஜூதீன் அப்துல் அலியை (இவர்தான் பட்சிராஜன் ), அவரின் தவிப்பை, அவரின் கையறு நிலையை ஒரு சிறுகதைக்குள் மிகச் சரியாகக் கொண்டுவந்து உள்ளீர்கள்.
எழுத்தின் மூலம் வாசக மனங்களில் நீங்கள் கடத்தும் மனித குணங்களுடான, இயற்கையுடனான, பறவைகளுடானா இந்த உறவு உங்கள் எழுத்துக்கு உயிர் தந்துள்ளது. இதுவே எழுத்தின் வெற்றி.
வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள்.
அமதுல்லா, துபாய்