பட்சி: கடிதங்கள் 4

சிறுகதை: பட்சி

அன்புள்ள நவீனுக்கு,

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். 

மனித மைய நோக்கில், உயிரினங்களின் பரிணாமப் பிரமிடின் உச்சியில் மனிதன் தன்னை வளர்த்துக் கொண்டு பொருத்தியிருக்கின்றான்  எனலாம்.  

மாற்றாக, ஒட்டுமொத்த இயற்கை வளர்ச்சியின்  நோக்கில் மனிதன் தனித்தவனல்ல. மனிதன் தன்  அடிப்படை வாழ்வியல் தேவைகளுக்காகவும், ஆன்ம  தேடல்களுக்காகவும் இயற்கையையும், அதன் மற்ற முகங்களான இன்றியமையாத விலங்குகள், பறவைகளையும்  சார்ந்திருக்கின்றான்.   தன் வளர்ச்சியின் பாதையில் மனிதன் காலந்தோறும், இயற்கையையும் அதன் உறுப்புக்களான உயிரினங்களையும்  தன் தேவைக்காக  மீள முடியாத வகையில்  சிதைத்து அழித்து வருகிறான். பறவைகளையும், விலங்குகளையும் தன் உயிருள்ள சக பயணிகள் எனக் கருதாமல்,  தன் தனித்த கிளர்ச்சிக்காக உற்பத்தியாகும்  வெற்றுக் கருவிகள் எனக் கருதிய தருணத்தில்தான் முதல் சிக்கல் எழுகிறது.   விலங்குகள், பறவைகள், இயற்கை என  ஒவ்வொன்றாக வென்றடக்கியதாக எண்ணியபடி,  அதுவும் போதாமல் அடுத்த  படியில்  சக மனிதர்களையே அவன் கருவியாக்க முயலும்போது மேலும் இயற்கையை ஆழமான சிக்கலுள்ளாகிறான். இந்த அழிவின் முடிவில் அவன் அடையும் தன் தனித்த வெற்றியி்ல் மட்டுமல்லாமல் அந்த முயற்சியின் படிகளில் சக ஜீவன்களை  அடக்குவதால் அவன் ஏற்படுத்தும் பாதிப்பினில் இன்பம் அடையும் குரூரியாகிறான் மனிதன். 

‘பட்சி’ கதையின் முதன்மை பாத்திரமான மாலிக் பிரேசர் காட்டில்  ஒரு அரிய வகை மஞ்சள் பறவையை பிடிக்க முயல்கிறான்.  பறவைகளை பிடித்து, அந்தரங்கக் கூட்டில் அடைப்பதென்பது  அவன் தன் தனித்த உளக்கிளர்ச்சிக்காக  மீண்டும் மீண்டும் விளையாடி  சுயஇன்பம் பெறும் விளையாட்டு. அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தாலும்  பறவையைக் கவரும் திறனில்லாத மாலிக், அந்த கவர்ந்திழுக்கும் திறன் இயல்பாகப் பெற்ற சக மனிதனான முத்துவை எவ்வாறு கருவியாக்குகிறான் என்பதை நுட்பமாக விவரிக்கிறது ‘பட்சி’ கதை.  தன்னை அணுகும் பறவை நோக்குனர்களை அனுபமில்லாதவர்கள், அனுபவமுள்ளவர்கள் எனத் தரம்பிரித்து,  வலை விரித்துப் பணத்தினை சுரண்டும் முத்துவை, முதல் பார்வையிலேயே பணத்தேவையுள்ள நோயாளி என மாலிக் புரிந்து கொள்கிறான்.   அவன் எதிர்பார்த்ததை விட பத்துமடங்கு பணத்தினை தந்து முதலடியிலேயே அவனை கைப்பற்றுகிறான். அந்த பறவைகளை கணக்கெடுக்கும் புகைப்பட போட்டி முத்துவிற்கான ஒரு சோதனை ஓட்டம்தான் எனத் தோன்றுகிறது.  மஞ்சனை பிடித்து கூண்டிலடைக்கும்  முதன்மை நோக்கத்தினை மாலிக் ஆரம்பத்தில் பகிரவில்லை. கையடக்க துப்பாக்கி, தான் கொன்ற உதவியாளன், குழந்தையின் பாதுகாப்பு என நுட்பமாக பயம் காட்டி, முத்துவின் பலவீனத்தை கொண்டு தன் தேவைக்காக அவனை தன்வசப்படுத்துகிறான்.   இறுதியில் மாலிக்கினால் தன் தந்தை பக்தியுடன் தொழுது அவனுள் புகுத்திய பச்சையம்மனின் ஆன்மீக சாரத்தினை முற்றிலுமாக இழந்து கையறு நிலையில் சாய்கிறான் முத்து. 


மனிதர்கள்,   தங்கள் வாழ்வில், இயற்கையுடனும், சக ஜீவன்களிடமும் முரண்பட்டு  உரையாட நேரும் தருணம் தவிர்க்க முடியாமல் மீள மீள வரும். அப்படி முரண்படும், ஒரு சாராரின் இலக்கு, படைப்பூக்கம் கொண்ட அற நோக்கு உடையதென்றால்,  சக மனிதர்களிடம், இயற்கையிடம் முட்டி மோதி விவாதித்து  இழக்ககூடியவற்றை சில இழந்து, பெறக் கூடியவற்றை என சில வற்றைப் பெற்றும், தன்னிடமிருக்கும் குறைகளைக் களைந்தும், புதிய வார்ப்பு கொள்கிறார்கள். இவர்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் இடர் இருந்தாலும்  சற்று பெரிய நேர் வழியில் முடிக்க எத்தனிக்கிறார்கள்.  வேறோரு சாராரின் நோக்கம்,  உள்ளீடற்ற வெற்று  சுய மகிழ்ச்சி  என்றால், இயற்கையை இரக்கமின்றி சிதைத்தும்,  உதவிதர குறுக்கிடும் படைப்பூக்கம் கொண்ட மனிதனுடன்  பேரம் பேசி,  படியாவிட்டால் அதிகாரம் மற்றும் பலத்தின் துணை கொண்டு தன் வயப்படுத்திக் கொண்டு குறுகிய வழியில் அளவிலா பாதிப்பினை ஏற்படுத்தி இலக்கினை அடைகிறார்கள். பொதுப்பார்வைக்கு இந்த இரண்டு வகையான அணுகுமுறைகளும்  மங்கியபடி ஓன்றோடோன்று பின்னி கலந்த படி ஒரே வண்ணத்தில் இருப்பதாக தோன்றும். கலைத்தன்மை குறையாமல்  இவையிரண்டின் வேறுபாடுகளின் வண்ணங்களை அடிக்கோடிட்டு காட்டுவது எந்தவொரு இலக்கிய எழுத்தாளருக்கும் ஒரு அறைகூவல். அந்த வகையில்  கதையின் போக்கில் இயல்பாகவே மலைவாழ்வின் பின்புலத்தில் மாலிக் மற்றும்  முத்துவின் அப்பா பாத்திரப்படைப்பின் வேற்றுமைகளை தெளிவாக வந்திருப்பதால் இலக்கிய மதிப்பேற்றம் பெறுகிறது.


நான் மீள மீள வாசித்த சிறுகதை வரிகள் 


அன்னாசிப் பிஞ்சு ஒன்று தொண்டையில் சிக்கியுள்ளது போலவும் அது அவ்வப்போது தொண்டைக்குள் புரள்வது போலவும் கற்பனை வந்தது. எச்சிலை விழுங்கினால் தொண்டை செதில் செதிலாக உரிந்து உதிர்வதைப்போல வலித்தது.

***

எத்தனை முறை பார்த்தாலும் இருளுக்குள்ளிருந்து தாவிவரும் வண்ணப்பறவைகளைக் காணும் ஆசை அவனுக்கு ஓய்ந்ததில்லை.

***

சில பறவைகளின் ஒலியை அரசமர இலைக்கொழுந்துகளால் காதுகளைத் துளைக்கும் படி கூர்மையாகவும் சில பறவைகளின் ஒலியை மார்பு காற்றின் வழி அழுத்தமாகவும் பெரும்பாலான ஒலிகளைத் தொண்டை மற்றும் உதடுகளின் சூட்சும அசைவுகள் மூலமாகவும் எழுப்பினேன்.

***

பிரேசர் மலையைக் காக்க பல கண்கள் இருக்கின்றன

***

எல்லா நேரங்களிலும் பறவைகள் ஒரே தொனியில் கத்துவதில்லை. இரை தேடும் போதும், இணையைத் தேடும் போதும் அதில் மாறுதல்கள் இருந்தன.   அச்சம் கொள்ளும்போது, எதிரிகளை ஏமாற்றும் போதும் அதில் மாறுதல்களை செய்தன. 

***

பொதுவாக பெண்களுக்கு ஆண்கள் சொல்லாமலே எல்லாமே தெரிந்திருந்தது.  அவர்கள் பறவைகள் போல எதனையும் கவனிக்காமல் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள் என்பதை தாமதமாகத்தான் அறிந்தேன்.  

வாழ்த்துக்கள் நவீன்

அன்புடன் , சிவமணியன்

அபிநயத்தில் குறிப்பிடும் ஒன்பது பாவனையை உடலுறுப்புகளாலும், முகத்தாலும், வாக்கினாலும் நன்கு வெளிப்படுத்த கற்று கொண்ட ஒரு பரதநாட்டிய நடன கலைஞனுக்குத் தன் ஆட்டத்தை வெளிக்காட்ட தேவைப்படுவது ஒரு மேடை. அதே போல, பறவையின் ஆனந்த தாண்டவத்தை வெளிப்படுத்த இறைவனால் உருவாக்கப்பட்ட மேடைதான் வானம். அதன் இறக்கையின் துணையோடு, புள்ளி இல்லா கோலங்களையும் கோடுகளையும் பலவிதமான வடிவங்களையும் எந்தவொரு மாசு இல்லாமல், மாய ஜால வித்தைப்போல் உறவாடி செல்லும் அழகே ஒரு தனி அதிசயம்தான். வானிற்கு இறைவனால் படைக்கப்பட்ட உயிர் உள்ள வானுர்தி பறவைகள் என்றுகூட சொல்லலாம். பறவைகள் வானத்தோடு மட்டுமில்லாமல், மனிதரோடும் உறவாடியுள்ளது.

எழுத்தாளர், முத்து எனும் கதாபாத்திரம் வழி ஒரு சுற்றுலா வழிகாட்டி போல Fraser Hill-ன் இயற்கையையும் காற்றையும் வர்ணித்தது, அமர்ந்து இருக்கும் இடத்தில் அவ்வூருக்கு ஒரு உலா போனது போல் இருந்ததது. அவ்விடத்துக்குச் சென்று, காற்றின் அசைவுக்கு ஏற்றார் போல் நடனமாடும் வனத்தின் ரம்மியமான அழகை ஒரு கப்புசினோ அருந்தி கொண்டே ரசிக்க வேண்டும் என்று என் பேராசிரியர் காமல் காமருடீன் சொன்னது இக்கதையை வாசிக்கும்போது நினைவுக்கு வந்ததது. மேலும், ஒரு கவிஞர் பெண்ணின் அழகையும் வாழ்வியலையும் வர்ணிப்பதைப் போல மஞ்சன்- யெல்லோ ரம்பட் விமர்சித்தது, கதையில் ஒரு பறவையின் ஆவணப்படத்தைப் பார்த்தது போல இருந்தது.

எழுத்தாளர் கதையைப் புனைந்த விதம் மெளனமாக ஒரு குட்டி பாரத போர் முத்துவுக்கும் ஐம்புலனை அடக்க தவறிய மாலிக்கும் பிரேசர் மலையில் நடந்தெறியதுபோல் தோன்றியது. அதற்கு சாட்சியாக தெய்வத்தின் தூதவராக பாலுவும் மஞ்சனும் இருந்தனர். இறுதியில் தெய்வ தரிசனமும் நடந்தெறியது. பறவையிடம் கண்டு கொண்ட சுதந்திரத்தையும் நேயத்தையும் முத்துவால் கடைசி வரைக்கும் வாழ்வியலில் கடைப்பிடிக்க முடிந்ததா என ஒரு குரூர அரக்கனையும் அதற்கு தோதாக வரலாறும் வைத்து ஆடிய ஆட்டம் வாசிக்கும் அனைவரின் மனதையும் கதி கலங்க வைக்கும். இனிமேல், என் வாழ்வில் சுயநலத்துக்காகவும் ‘தான்’ என்ற ஆதிகாரத் தோரணையோடும் தற்பெருமைக்காகவும் ஒரு செயலையும் செய்யக் கூடாது என மஞ்சனின் ஓலம்  எப்போதும் நினைவூட்டும்.

பாரதி, ஜொகூர்

(Visited 84 times, 1 visits today)