பெரும் கொந்தளிப்புக்குப் பின் நிகழும் ஒரு பேரமைதி பட்சியை வாசித்து முடித்த கணம் மனம் முழுக்க பரவிப் படர்ந்து இருந்தது. அந்த அமைதியென்பது எண்ணங்களற்றது. இனி சொல்வதற்கும் சொல்லித் திளைப்பதற்கும் அறிவதற்கும் வேறொன்று புதிதாய் இல்லையென்ற சில கண உச்ச நிலையாக அது இருந்திருக்கலாம்.
அருகிலும், தொலைவிலும், மிக தொலைவிலும், அதற்கும் அப்பால் கடல் கடந்தும், கடலுக்குள்ளும், அடர்வனத்திலும் என தூரத்தில் எங்கோ நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் என இந்தப் பிரபஞ்சமெங்கும் நிகழ்ந்து நீண்டு கொண்டே இருக்கும் வாழ்வு குறித்தான கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன இலக்கியங்கள். அப்படி எழும் கேள்விகளுக்கு வரையறுத்துச் சொல்ல முடியாத பதிலை முற்றிலும் புதிதான ஒரு கோணத்திலிருந்து அவதானிக்க மட்டுமே கற்றுத் தருகின்றன படைப்புகள். அதன் செல்திசைகள் வாசக மனத்தால் ஒன்றிலிருந்து இன்னொன்றாக உருபெற்றுக்கொண்டே இருப்பவை. அவை பெரும் வாழ்வில் வாழ்ந்து கடக்க முடியா ஒரு பிரமாண்டத்தின் பிம்பங்களாகிவிடுகின்றன. பட்சி போன்ற நுண்மையான படைப்புகளின் மூலமே இலக்கியத்தின் இதுபோன்ற பல்வேறு முகங்களைக் காண்டடைய முடிகிறது.
‘பட்சி சிறுகதை எனக்குக் காட்டிய உலகம் அப்படியானதுதான். புறவய வாழ்விலிருந்து புறப்பட்டு கண்ணுக்குத் தெரியாத உள்ளுணர்வை தீண்டக்கூடிய இன்னொரு உலகைக் காட்டக்கூடியது. பட்சி எனக்கு வாழ்வின் மிக சூட்சமமான பகுதிகளை நெருங்கிக் செல்லும் மிகத் துரிதமான பயணம். இந்தப் பயணம் அடர்வனத்தின் ஒரு பகுதியால், பறவைகளின் நுண்ணுணர்வால், அதன் அழகியலால் அதன் நெருங்கும் ஒரு அசாத்திய திறனால், இறை சக்தியால், வாழ்வியல் நுகர்வுகளால், அதிகாரத்தின் வன்செயலால், இயற்கையின் கருணையால் கட்டமைக்கப்பட்ட புனைவு. ஒரு சிறுகதைக்குள் இத்தனையும் சாத்தியமா என்ற கேள்வி உள்ளூர எழுந்து அடங்குகிறது. இத்தனைச் சொல்லியும் கதை வாசிப்பில் கனமின்றி மிதக்குவது அதிசயம். பனி மிதக்கும் காற்றின் குளிர்போல படரும் இக்கதை நம் இதயத் துடிப்பை துரிதப்படுத்தும் இடங்களால் தனி இடத்தை அடைந்துள்ளது.
காடு முழுவதும் பேரதிர்வாய் கேட்கும் ஒரு பறவையின் உயிர்த்துடிப்பின் பேரொலியால் ஆன இக்கதை அவ்வொலியிலிருந்து மருவி ஒளியால் முடியும் கணம் கதை ஒன்றிலிருந்து இன்னொன்றாக உருவெடுக்கிறது. மனிதன் அறுதியிட்டுச் சொல்ல முடியாத சூட்சமப் பகுதி அது.
ஆனால் பச்சையம்மன் என்ற இயற்கையின் பேருருவை நம்பாதவர்களுக்கு இக்கதை யதார்த்தவியல் சார்ந்த இன்னொரு வாசலைக் கொண்டிருக்கிறது. முத்துவின் அப்பா சொன்ன மூக்குத்தியின் பேரொளியைப் பார்க்கும் முத்துவின் மனநிலை அதுவரையிலான பொருளியல், திறனியல் சார்ந்த தனது நம்பிக்கையிலிருந்து நகர்ந்து அப்பாவின் நிலையை அடைந்துவிட்டதை உணர்த்தும். உளவியலைசார்ந்த படிமம் எனவும் கொள்ளலாம். இறந்துவிட்ட தன் அப்பாவின் மனநிலையை முத்து பற்றிக்கொண்டிருக்கும் அதே சமயம் பாலு முத்துவின் இடத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறான். இக்கதை ஒன்றிலிருந்து இன்னொன்றாவதை சொல்லிக்கொண்டே இருக்கிறது. மனம் சார்ந்த நகர்ச்சிகளால் இக்கதை உளவியல் சார்ந்த அவதானிப்பை மிக நுண்மையான அரூபமான தருணங்களால் அமைத்துத் தந்துள்ளது. ஆனால், எவ்வளவு முயன்றும் வாசிப்பின் மறுமுனையிலிருந்து பற்றி இழுக்கும் பச்சையம்மனை என்னால் நம்பாமலிருக்க முடியவில்லை. அது அறிவுத்தளத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் உள்ளுணர்வுகளால் ஆன நம்பிக்கை. மலையாகிய பச்சையம்மனை இயற்கையின் பல்வேறு வடிவங்களாகவே தரிசிக்க முடிந்தது. முத்துவின் குரலாக, எதிர்பாரா தருணத்தில் எதிர்படும் மஞ்சனாக, முற்றிலும் வேறுபட்ட அதன் தவிப்பொலியாகப் பச்சையம்மன் அவதரிக்கிறாள். இயற்கையானவள் அவள். அந்த அடர்வனத்தின் ஒரு பகுதியான முத்துவைக் காக்கும் அந்தப் பச்சையம்மன் நிச்சயம் முங்கில் கூண்டுக்குள் அடைபட்டுக் காடே அதிர தவிக்கும் ஒரு பறவையின் தவிப்புக்குச் செவிசாய்ப்பாள் என்ற நம்பிக்கை என்னுள் ஆழப்படர்கிறது.
யதார்த்தத்துக்கும் அருளுக்கும் மனித மனத்துக்குமான இணைப்பாகவும் முரணாகவும் பார்க்கக்கூடிய மூவேறு முகங்களுடையது இக்கதை. அழகியல் சார்ந்த மனிதனின் மனம் கொண்டுள்ள தீராத இச்சையும் அந்த இச்சை மெல்ல நகர்ந்து அதிகாரத்தின் அடையாளமாகியிருப்பதையும் காட்டுகிறது. உலகில் மிக அழகான ஒன்றை முழுக்கவே தனதாக்கிக் கொள்ளும் பொருட்டு மாலிக் அடையும் மனக் கிளர்ச்சி அதன் பொருட்டே செய்யப்படும் கொலைகள் கதையில் அடிப்படையில் மனித மனம் இயங்கும் முறையைக் காட்டுகிறது. பெண்களால் அலங்கரிக்கப்படும் அந்தப் புறத்தைவிட மேலான ஒன்றை நோக்கி அவர் மனம் செயல்படுகிறது. அழகியலை வன்மையாக அணுகும்போது மனித மனதின் அழகின்மை தானறியாமலேயே வெளிப்பட்டுவிடுகிறது.
மாலிக் குரலில் காட்டப்படும் பறவையின் அழகு இக்கதை முழுக்க பரவி வாசக மனதை வானமாக்கிக்கொள்கிறது. பறவையைக் கண்டு பொறாமைக் கொள்ளாத பேராசைக் கொள்ளாத ஒரு மனம் இருக்குமா என்பதில் எனக்கு எப்போதும் சந்தேகம் இருப்பதுண்டு. அதன் இறகுகள், சிறகுகள், வலைந்த அலகு, வண்ணங்கள, அதற்கே உரிய வானம் அதன் ஒவ்வொரு உடல் அசைவுகள், ஒலி என ஒவ்வொன்றுமே பார்க்க இரசிக்க உவப்பானவை. இன்று பல வீடுகளில் ஜோடிப்பறவைகள் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது மாலிக்கின் மனம்தான் அடிப்படையில் எல்லாருக்குமான மனம் என எண்ணம் தோன்றுகிறது. அழகான ஒன்ற தனதாக்கிக் கொள்ள அதன் வானத்தை சுருக்கி சிறகுகளை முடக்கி ஊனமாக்கிவிடுகிறோம். அநேகமான மனிதர்கள் தன்னிலையில் இருந்து மட்டுமே சிந்திக்கப் பழகியிருக்கிறார்கள். ஆனால் அதுவே சற்றுத் தீவிரமாகி அதிகாரத்தின் அடையாளமாகும்போது வன்மங்களால் வாழ்வு சிதைபடுகிறது. அதுவே மாலிக்கின் வடிவம். மாலிக் உண்மையில் பறவைகளை நேசிப்பவர் அல்ல. ஒரு அழகை அல்லது உயிரை நேசிப்பராவல் கொலைகளை ஒரு போதும் செய்ய முடியாது. அவர் தன்னை மட்டும் நேசிப்பவர். அவர் எதையும் செய்யக்கூடியவர். அழகைத் தன் காலடியில் கிடத்தி தன்னை உடையவனாக்கிகொள்கிறார். அடிமைப்படுத்தக்கூடியவனால் அதை ஒரு போது காத்திட முடியாது. அப்படியான ஒரு வன்செயலுக்கு முத்து தானறியாத நிலையில் இன்னொரு அன்பின் பொருட்டே நிர்பந்திக்கப்படுகிறான். அந்த அன்பு தன் மகன் பாலுவுக்கானது.
சில சமயம் புனைவுகளில் வரக்கூடிய எல்லா சூழல்களுக்கும் காரணங்களைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமிருப்பதில்லை. அது எழுதும்போது தனக்கான காரணத்தை கொண்டிருக்கலாம். ஆனால் வாசகனைப் பொருத்தே அதன் தேவை கதைக்குள் மீள உருவாகிறது. அப்படி முத்துவின் தொண்டை புற்றை நம்மால் கடந்துவிட முடியென்றாலும் என் வாசிப்பு மனம் அதற்கான ஒரு காரணத்தை தேடிக்கொண்டே இருக்கிறது. அந்தப் புற்றுக்குப் பின்னால் சமரசமற்ற இயற்கையின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறேன். தன் நுண்மையான ஒலியெழுப்பும் திறனால் மட்டுமே தனக்கும் பறவைக்குமுண்டான அணுக்கத்தை கணக்கிடும் முத்து தன் அப்பா சொல்லியதுபோல உண்மையில் அது தன் திறனால் நிகழ்வதல்ல என்பதை உணர்கின்ற தருணத்தை அதுவே ஏற்படுத்திக் கொடுக்கிறது. உச்சத் தருணத்தில் ஊனப்பட்ட ஒலிக்கு முன் தோன்றும் அந்த மஞ்சன் அது நாள் வரையிலான அவனது தனித்திறனை அர்த்தமற்றதாக்குகிறது. பல ஆயிரம் மயில் தூரம் திசை மாறாமல் பயணிக்கும் ஒரு பறவையின் நுண் உணர்வுக்கு எது பறவையின் ஒலி என பிரித்தறிய தெரியும் என அவன் நம்புவதற்கானது.
இக்கதைக்குள் வாசகன் கூர்ந்து செல்லும்போது மனித மனத்தின் ஒலிகளை, ஒலியற்ற ஒளியை என எல்லாவற்றையும் கேட்டுணர முடியும். இக்கதை ஒலிப்பேலையின் இன்னொரு வடிவம் என எழுதிய ஒரு வாசகர் கடிதத்தை வாசித்தேன். ஆம், சூட்சமமான ஒரு ஒலியைக் கேட்டுணரும் கணம் அந்த ஒலி இறைத்தன்மைமிக்கதொரு கலையின் வடிவமாகிறது. அது எல்லாருக்குமான ஒலியல்ல. அந்த ஒலி எழுப்பும் மனதின் ஆழத்தையும் அதிர்வலையையும் அறிந்தவர்களை மட்டுமே அது சென்றுச் சேரும். மஞ்சனைச் சென்றடைந்த ஒலியை நான் அப்படியே பார்க்கிறேன். காடு முழுக்க எழும் இயற்கையின் சத்தத்தில் உரைந்திருக்கும் இறைத்தன்மை இக்கதை முழுக்க ஒரு குளிர்போல பரவிக்கிடக்கிறது. இனி நான் கடந்து போகும் ஒவ்வொரு வனத்துக்குள்ளுமான அவதானிப்புக் கூர்மைப்படும். உள்ளிருந்து எழும் சத்தங்கள் வாயிலாக நான் இங்கிருந்து கொண்டே அதற்குள்ளான அருள் வடிவை தரிசிக்கக்கூடும். பிரபஞ்சத்தின் தொன்ம வண்ணங்களால், ஒலிகளால் ஆன இக்கதையின் குளிர்நிலை, கதகதப்பான ஒளிநிலையாகி அருள்வடிவாகிறது. என்னளவில் இக்கதை முழுமையான இறைத்தன்மை மிக்க ஒரு கலைவடிவம்.
பவித்திரா
சில கடிதங்களை வாசித்துவிட்டுதான் உங்கள் கதைக்கு வந்தேன். அது சரியான முறையா எனத் தெரியவில்லை. ஆனால் அவற்றை வாசிப்பதில் ஒரு இன்பம். நான் உங்களுக்கு பேய்ச்சி நாவல் குறித்து கடிதம் எழுத நினைத்தேன். அதற்குள் பட்சி இடைவெட்டியது. இரண்டுக்கும் ஒரே வடிவமோ என தோன்றியது. இனிதான் அதை ஆழ்ந்து ஆராய வேண்டும். பேய்ச்சி, சப்த கன்னி, பச்சையம்மன் என தாய் தெய்வங்கள் உங்கள் கதைகளில் வருவது மகிழ்ச்சி. தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்தாலும் அன்னையர் வழி வேர் தொடர்வதில் மேலும் மகிழ்ச்சி.
மதி