தோக்கியோவிலிருந்து வேலை நிமித்தமாக சில நாட்கள் மலேசியா வந்திருந்த நண்பர், எழுத்தாளர் ரா. செந்தில்குமாரிடம் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய இராணுவம் தென்கிழக்காசிய நாடுகள் மீது போர் தொடுத்தது, அவற்றைக் கைப்பற்றியது பற்றி அந்நாட்டு கல்வியாளர்களால் ஆய்வுகளோ அல்லது பதிவுகளோ செய்யப்பட்டுள்ளனவா, அவர்களிடம் அது குறித்த பார்வைகள் என்னவாக உள்ளன என்று கேட்டேன். அவர் பதில் ஆச்சரியமாக இருந்தது. நூல்கள் ஒன்றும் இல்லாதது மட்டுமல்ல எந்த ஜப்பானியரும் அது குறித்து உரையாடவும் மாட்டார்கள் என்றார்.
அது அவர்கள் மறக்க நினைக்கும் வரலாறு; தங்களின் மீது படிந்திருக்கும் அந்தக் கசப்பான அடையாளங்களை அவர்கள் அடுத்தத் தலைமுறைகளுக்கு கடத்தாமல் இருக்கவே முயல்கின்றனர் எனப் புரிந்தது. இதேபோல நூலகர் விஜயலட்சுமி அலுவல் காரணமாக கியோட்டோ சென்றிருந்தபோது அங்கிருந்த நூலகங்களில் அது குறித்த எந்த நூல்களும் இல்லை பூராதன தேசிய நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்படும் புத்தக அடுக்குகளில் இருக்கின்றன. தெளிவான ஆய்வு நோக்கத்தை முன்வைக்காமல் அப்புத்தகங்களை இரவல் பெற முடியாது என்றார். இது அவர்கள் மனநிலையை உறுதிப்படுத்த உதவியது.
1945 ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு; ஆகஸ்டு 9 நாகசாகியில் வீசப்பட்ட இரண்டாவது அணுகுண்டு ஆகியவற்றால் ஜப்பானியர்கள் எதிர்கொண்ட பேரழிவுகளின் தாக்கமே கடந்த எழுபது வருடங்களில் அவர்களின் உளவியலை வடிவமைத்துள்ளதாகத் தோன்றுவதுண்டு. என் பாட்டியிடம் ஜப்பானியர்கள் குறித்த கசப்பான சிந்தனை மட்டுமே இருந்தது. ‘தல வெட்டிக்காரனுங்க’ என்பது மட்டுமே அவர் ஜப்பானியர்கள் குறித்து உருவாக்கிக்கொண்ட சித்திரம். மாறாக, இந்தத் தலைமுறையில் உள்ளவர்கள் ஜப்பானியர்களின் மாண்பான செயல்களைப் புகழ்வதைக் கண்டுள்ளேன். உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் தோற்றபோதும், விளையாட்டரங்கில் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தின் குப்பைகளைச் சுத்தம் செய்தபின்பே ஜப்பானிய ரசிகர்கள் வெளியேறியது, சுனாமி பேரிடருக்குப் பின்னரும் பொறுமையாக வரிசையில் நின்று உணவுகளை வாங்கியது, காத்திருந்து உணவு தீர்ந்த பின்பும் அதே நிதானத்துடன் வெளியேறியது என ஜப்பான் மக்களின் பண்பாடு குறித்த அறிமுகங்கள் இன்று மிகவும் நேர்மறையானவை.
வரலாறு எப்போதும் இந்த நிகழ்கால உண்மையில் இருந்து கடந்த காலங்களுக்குக் கோடுகளைக் கிழித்துக்கொண்டே இருக்கிறது. விமானம் ஒரு நாட்டிலிருந்து மற்றுமொரு நாட்டுக்கு பறந்து சென்ற தடத்தைக் காட்டும் கணினியின் புள்ளித்தொடர்கள் போல அது கால வெளியில் அழித்தும் நீட்டியும் புள்ளிக்கோலங்களைப் போட்டு வைக்கிறது. நூலகங்களில் இல்லாவிட்டாலும் சொற்களில் திரளாவிட்டாலும் அந்த வரலாறு நீங்காமல் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. அதன் இருப்பை எந்தத் திசையிலிருந்து யார் பார்க்கிறார்கள் என்பதைப் பொருத்தே அதன் மீள் உருவாக்கம் புதுமை அடைகிறது. அப்படி இரண்டாம் உலகப்போர் எனும் பெருநிகழ்வில் ஜப்பானியர்கள் சிங்கப்பூரைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திய வரலாற்றை ஹேமா ‘வாழைமர நோட்டு’ எனும் நூலாகக் கொடுத்துள்ளார்.
இரண்டாம் உலகப்போரில் ஜரோப்பியப் படைகளின் கவனம் மேற்கில் குவிந்திருக்க, தென்கிழக்காசியாவில் அதன் பலம் குறைந்த நிலையில் ஜப்பானின் ஆக்கிரமிப்பு துவங்குகிறது. இப்படித் துவங்க சீனாவுடனான பகைமை, அதனால் அமெரிக்காவுடன் ஏற்பட்ட முரண்நிலை, இந்த சாதகமற்ற சூழலை எதிர்கொள்ள ஜப்பானுக்கு தேவையாக இருந்த உலோகம் மற்றும் எண்ணெய் ஆகிய காரணங்கள் என விரிவான வரலாற்றுப் பின்னணி விவரிப்புடன் தொடங்குகிறது நூல்.
நூலை இருபகுதிகளாகப் பிரித்துள்ளார் ஹேமா. முதல் பகுதியில் ஜப்பானியர்கள் சிங்கப்பூரை கைப்பற்றும் வரை நடந்த போர் முறைகளையும், இருதரப்பின் தந்திரங்களையும், அவரவர் வெற்றி தோல்விக்கான சாதக பாதகங்களையும், உள்ளூரில் நடந்த சிக்கல்களையும் துல்லியமாகப் பதிவாக்கியுள்ளார். குறிப்பாக, சிங்கையில் வேலை செய்த சீன நாட்டு மக்கள் அக்காலக்கட்டத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த ஜப்பானியர்கள் மீது நிகழ்த்திய வன்முறைகள், ஜப்பானியர்கள் குண்டு வெடிக்கும்போது மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை பிரிட்டிஷ் இராணுவம் போதிப்பதெல்லாம் இந்தச் சூழலை ஒட்டி எழுதப்பட்ட நாவல்களில் காணாத அம்சங்கள். அதுபோல நேச நாட்டு படைகளின் அரைக்கால் சட்டை மலாயா காடுகளில் புகுந்து செல்ல சிக்கலாக இருந்தது, ஜப்பானியர் கட்டைவிரல் பிரித்த காலணி வகை வழுக்கலான காட்டுப்பாதைகளில் ஊன்றி செல்ல ஏற்றதாக அமைந்தது போன்ற தகவல்கள் இந்நூலை வாசிக்கும் ஆர்வத்தை முதலிலேயே ஏற்படுத்திவிடுகின்றன.
ஹேமாவின் மொழிநடை புனைவெழுத்தாளனுக்குரியது. ஜப்பானியர்கள் நெருங்கி வரும் ஒவ்வொரு இடத்தையும் அதன் பரபரப்புடன் வர்ணிக்கிறார். கிராஞ்சி கடற்கரையில் கடலில் எரியும் எண்ணெய்யை எதிர்த்து உள்நுழையும் ஜப்பானிய வீரர்களின் போர் வெறி, சாகச கதைகளை வாசிக்கும் உளவெழுச்சியைக் கொடுக்கிறது. ஜப்பானியர்களின் சேற்று வழியான பயணத்தை இப்படிச் சொல்கிறார், ‘மின்மினிப்பூச்சிகள் தலைகளுக்கு மேல் பறந்தபோது எழுந்த வெளிச்சத்தைத் தவிர வேறு எந்த ஒளியுமற்றிருந்த இருளில் ஏறக்குறைய 150 படகுகள் ஸ்கூடாய் ஆற்றின் வழியாக ஜொகூர் கடலுக்குள் நுழைந்தன. இத்தனை நாட்கள் இன்னல் பட்டதெல்லாம் கருநிழல்களாய் தெரியும் அந்த எதிர்க்கரையை அடையத்தான் என்பதால் கவனம் முழுக்க தங்களை நெருங்கி வந்து கொண்டிருந்த நிலத்தில் பதிந்திருந்தது.’
வரலாற்று நூல்களுடன் லீ குவான் யூ போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களால் அச்சூழலைக் காட்சிகளாகவும் சில சமயம் உணர்வுகளாகவும் இந்நூலை ஹேமாவினால் முழுமை செய்ய முடிந்துள்ளது.
நூலின் இரண்டாம் பகுதி ஜப்பானியர்கள் சிங்கப்பூரை பிரிட்டிஷாரிடம் இருந்து கைப்பற்றியதில் இருந்து தொடங்குகிறது. மக்கள் தங்கள் புதிய ஆட்சியாளர்களை ஜப்பானியக் கொடி தைத்து வரவேற்பதிலிருந்தும் சீனர்கள் தங்களை ஜப்பானியர் பார்வையில் இருந்து மறைத்துக்கொள்வதிலிருந்தும் அந்தக் கோரமான தினங்கள் ஆரம்பமாகின்றன. அலெக்சாண்டிரா மருத்துவமனையில் போரினால் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த 900 நோயாளிகளையும் மருத்துவர்களையும் சமாதானப் பேச்சுக்கு இடமே இல்லாமல் கொல்கின்றனர். செஞ்சிலுவைச் சங்கத்தின் கீழ் இயங்கிய அம்மருத்துவமனை ஊழியர்களின் போர் விதிமுறை நம்பிக்கைகள் சின்னாபின்னமாகின்றன. அது போர்க்குற்றம் எனக் கருதப்பட்டாலும் மன்னிப்புடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.
அதுபோல, சிங்கப்பூரை கைப்பற்றிய பின்னர் சீனர்கள் குடும்பம் குடும்பமாகச் சோதனைக்கு அழைக்கப்படுகின்றனர். சந்தேகத்துக்கு இடமானவர்கள் உடனடியாக கடலோரம் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டு வீழ்த்தப்படுகின்றனர். இதில் ஜப்பானியர்கள் சந்தேகம்கொள்ளும் அறிகுறிகளுக்கு எந்த ஒழுங்கும் இல்லை. ஆங்கில எழுத்து எழுதினால் பிரிட்டிஷ் கைக்கூலி, சீன மொழி மட்டும் தெரிந்தால் கம்யூனிஸ்ட், இப்படி உள்ளுணர்வு சொல்லும் எச்சரிக்கையின்படி கொலைகள் நிகழ்கின்றன.
இந்த நூலின் முக்கிய சிறப்பே அச்சூழலின் பல்வேறு சமூகத்தின் நிலையையும் காட்டுவதுதான். பரிவு காட்டிய ஷினோசாகி போன்றவர்களுக்கு ஜப்பானியர்கள் எதிரியாகிறார்கள், காலணியுடன் மசூதிக்குள் நுழையும் ஜப்பானியர்கள் மெக்கா இருக்கும் திசையில் மட்டும் இல்லாமல் ஜப்பானிய மாமன்னர் இருக்கும் திசையிலும் வணங்க முஸ்லிம்களை வற்புறுத்துகிறார்கள், ஐ.என்.ஏவில் சேராத இந்தியர்களை எதிரிகளாகப் பாவிக்கிறார்கள். தங்கள் நேரடி எதிரிகளான பிரிட்டிஷ் மக்கள் பிரிட்டிஷ் இராணுவம் ஆகியவற்றை இவர்கள் வதைக்கும் விதம் மேலும் கொடுமையானது. தப்ப முயலமாட்டோம் எனக் கையெழுத்திட மறுத்த போர்க்கைதிகள் 1,200 பேர் தங்கக்கூடிய இடத்தில் 1,5000 பேர் அடைக்கப்படுகின்றனர். தண்ணீர் துண்டிக்கப்படுகிறது. அதே நேரத்தில், தங்கள் கேளிக்கைகளுக்கும் குறைவில்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். பாலியல் அடிமைகள் வீட்டின் முன் நீண்ட வரிசையில் வீரர்கள் நின்றபடியே இருக்கின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மூலங்களில் இருந்து பெற்ற தகவல்களைக்கொண்டு எழுதப்பட்ட இந்நூல் சிங்கப்பூரில் ஜப்பானியரின் நுழைவு தொடங்கி சரணடைவு வரை மூன்றரை ஆண்டு காலத்தை விரிவாகவே பேசுகிறது. கட்டுரையினூடே சில முக்கிய தகவல்களைப் பெற்ற மூல நூலையும் குறிப்பிட்டுச் செல்கிறார் ஹேமா. பேட்டரி பீரங்கி எச்சங்கள் 1991இல் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற சமகால மாற்றங்களை கட்டுரையில் சொல்லாமல் அடிக்குறிப்புகளாகச் சொல்லியிருக்கலாம் எனத் தோன்றியது. ஆஸ்திரேலிய போர் நிறுத்தத்தின் மேசை இன்று கட்டுரையாளருக்கு (ஹேமாவுக்கு) என்ன உணர்வைக் கொடுத்தது போன்ற தகவல்கள் இந்நூலில் அவசியம் இல்லாதவை.
வாழைமர நோட்டு வரலாற்று ஆய்வு நூல் அல்ல. அவர் வரலாற்றில் புதிதாக ஒன்றை இந்நூலில் கண்டடைந்து சொல்லவில்லை. மாறாக, வரலாற்றைத் தொகுத்து அதைப் புரிந்துகொள்ள முயல்கிறார். ஜப்பான் மலாயாவை ஆண்டபோது வாழைமர நோட்டுதான் புழக்கத்தில் இருந்தது. அவர்கள் ஆட்சி காலத்திலேயே அது தனது மதிப்பை பெரும்பாலும் இழந்தது. ஜப்பானியர்களுக்கு வேலை செய்தவர்கள் கட்டுக்கட்டாக வைத்திருந்த அந்த நோட்டுகள் குண்டு வெடித்த சில நாட்களில் மதிப்பிழந்த காகிதமாகி தெருக்களில் வீசியெறியப்பட்டதை என் பாட்டி வருத்தத்துடன் நினைவு கூர்ந்துள்ளார். அந்நோட்டின் பெயரையே நூலுக்குத் தலைப்பாக வைத்துள்ளது மிகப்பொருத்தமானது. இப்போது அந்நோட்டு வரலாற்றை தனக்குள் சுருட்டி வைத்துள்ள ஒரு படிமம்.
தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து தான் வாழும் நிலத்தில் நடந்த மிக முக்கியமான ஒரு காலகட்டத்தை அதன் நம்பகமான தகவலோடு பதிவு செய்கிறார் ஹேமா. ஓர் எழுத்தாளனாக எனக்கு இப்பதிவு முக்கியமாகப் படுகிறது. வரலாற்றின் உக்கிரமான ஒரு தருணத்தை மனதில் மறுநிகழ்வு செய்துபார்க்க இந்நூல் போதுமான விரிவையும் கூடவே நுட்பத்தையும் ஒருங்கே பெற்றுள்ளது. இந்த வரலாற்றை உள்வாங்கிகொண்டு இன்றைய ஜப்பானியர்களைக் காண்பது புதிய அனுபவத்தைக் கொடுக்கலாம்.
அவர்கள் அணுகுண்டின் கரும்புகையில் தங்களின் ஆன்மாவை கழுவிக்கொண்டனர் என்றும் வதையின் பேரோலங்களில் மானுட மார்க்கத்தை அறிந்துகொண்டனர் என்றும் நீடித்து நெடித்துள்ள அவர்கள் மௌனம் உலகத்துக்கான அஞ்சலி என்றும் உணரலாம்.
நூலை வாங்க:
சிங்கப்பூர் / மலேசியா – வாட்சப் : 6581172415
தமிழகம்: 9194442442372
முகநூல்: https://www.facebook.com/hema.vl/