அஞ்சலி: கோவை ஞானி

கோவை ஞானி இறந்துவிட்டதாக எழுத்தாளர் அர்வின் குமாரிடமிருந்து தகவல் வந்தபோது இணையத்தில் அதை ஒருதரம் உறுதி செய்துக்கொண்டேன். நீரிழிவு பாதிப்பினால் கண் பார்வை இழந்த நிலையிலும் உதவியாளர்கள் மூலமாக வாசிப்பதையும் எழுதுவதையும் விட்டு விலகாத அவர் தனது 86ஆவது வயதில் அனைத்தையும் முழுமையாக நிறுத்திக்கொண்டுள்ளார் எனத் தோன்றியது.

கி.பழனிச்சாமி அவரது இயற்பெயர். இடதுசாரி அமைப்புகளில் இருந்து உருவாகி வந்த ஆளுமை. 2005இல் சு.யுவராஜன் வழி எனக்கு அவரது எழுத்துகள் அறிமுகமாயின. தன்னிடம் உள்ள சில நூல்களை நகல் எடுத்துவந்து கொடுத்தார். எனவே நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் கோவை ஞானியின் எழுத்துகள் பேசுபொருளாக இருந்தன. ஞானியும் தமிழாசிரியர் என்பது எனக்கு மனரீதியான நெருக்கத்தைக் கொடுத்தது.

அதே காலகட்டத்தில் டாக்டர் சண்முகசிவாவுக்கு என் சிந்தனையை வடிவமைப்பதில் அதிக அக்கறை இருந்தது. அவர் சேமிப்பில் இருந்து கொடுத்த ஞானியின் நூல்களை வாசித்து வார இறுதியில் பல சந்தேகங்களுடன் கிளினிக்கில் காத்திருப்பேன். அப்போதெல்லாம் ரயிலும் பேருந்தும்தான். ஆனால் எனக்கு ஏற்படும் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள எதையும் வாசிக்கவும் யாரையும் சந்திக்கவும் தயாராக இருந்தேன். சண்முகசிவா, நான் கோவை ஞானியை சந்திக்க வேண்டுமென சொல்லிக்கொண்டே இருப்பார். அவரும் சில முறை சந்தித்தித்திருந்தார். கவிதையிலிருந்து மெய்யியலுக்கு, மார்க்சியமும் தமிழ் இலக்கியமும், தமிழில் நவீனத்துவம், பின்நவீனத்துவம், மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் என கோவை ஞானியின் எழுத்துகள் அடிப்படையான என் சிந்தனை வளர்ச்சிக்குக் காரணியாகின. என் முதல் தமிழகப் பயணத்தில் ஞானியை ஓரளவு வாங்கி சேமித்தேன்.

இரு நிலைகளில் கோவை ஞானி எனக்கு ஆசிரியராக இருந்தார்.


முதலாவது, சிற்றிதழ் சூழலை அறிந்து 2006இல் காதல் இதழைத் தொடங்கியபோது கோட்பாடுகளின் பெயர்களே எல்லா இடங்களிலும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அந்த வயதில் அதன் பெயர்களையும் அதற்குறிய கலைச்சொற்களைச் சொல்வதுமே கிளர்ச்சியைக் கொடுத்தது. கோட்பாடுகளை அறிந்தவர்கள் மட்டுமே சிறந்த எழுத்தாளர்களாகவும் அதை புரிந்துகொள்ளாதவர்கள் இலக்கிய உலகில் கால்களை ஊன்ற தகுதியற்ற ஜீவராசிகளாகவும் நம்ம வைக்கப்பட்டனர்.(அல்லது அப்படி நான் நம்பிக்கொண்டேனா என்றும் தெரியவில்லை.) எனக்கு கோட்பாடுகளின் மீதிருந்த பிரமிப்பை குறைத்தவர் கோவை ஞானி. தனது எளிய மொழிநடையால் அவற்றை எனக்கு அறிமுகப்படுத்தி புரியவைத்தார்.

இரண்டாவது மார்க்ஸிய நோக்கில் ஆராயப்பட்ட தமிழ் நவீன இலக்கியங்கள் குறித்த அவரது கட்டுரைகள் என் வாசிப்பை மேலும் தீவிரப்படுத்தின. தமிழ் புனைவுகளில் நுண்மையான பல பகுதிகளைத் தொட்டுக்காட்டிச்செல்லும்போது அப்படைப்புகளைத் தேடிச்சென்று வாசிக்கும் ஆர்வம் பிறந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இலக்கிய உரையாடல்களில் அதை ஒப்புவிப்பது, அவ்வயதில் ஓர் அசாதாரண தோரணையுடன் ஓர் ‘இலக்கிய கௌரவத்தை’ கொடுத்தது.

கோவை ஞானி அவர்கள் திறந்து காட்டும் அறிவுலகம் இளம் வாசகனுக்குப் பிரமிப்பை கொடுக்கக் கூடியது. தெளிந்த எளிய மொழியில் அவர் பிழிந்து கொடுக்கும் சாரம், ஓர் அறிவுத்துறையில் அவரது ஆழமான புரிதலுக்குச் சான்று. எனது முதுகலை பட்டப்படிப்புக்காகச் சேமிப்பில் இருந்த அவரது நூல்களை மறுவாசிப்பு செய்யும்போது அவரது நிதானமான விளக்கிச் சொல்லும் முறை, இலக்கியச் சூழலிலும் அவர் ஓர் ஆசிரியராகவே தன் பணியைச் செய்துள்ளார் என்றே தோன்ற வைத்தது.

கோவை ஞானியை நான் முதலும் கடைசியுமாகச் சந்தித்தது 2017 விஷ்ணுபுரம் விழாவில். மேடையில் பேசும் முன்புதான் அரங்கில் அவரைப் பார்த்தேன். அவருக்கு முதல் வணக்கம் சொல்லிவிட்டே உரையைத் தொடங்கினேன். நிகழ்ச்சி முடிந்தது கோவை ஞானியிடம் ஓடினேன். அதற்கு முன்பே அவர் “யார் நவீன். அவரைச் சந்திக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டிருந்தது தெரிந்ததும் நெகிழ்ச்சியாக இருந்தது. “சார் நான்தான் சார் உங்கள பார்க்க ஓடி வந்தேன்” என்றேன். ஜெயமோகன் அவர் கைகளை என் கைகள் மேல் வைத்தார். அருகில் சண்முகசிவா இருந்தார். அத்தருணம் இப்போது நினைத்தாலும் பூரிக்கச்செய்வது. என் வாழ்க்கையில் நான் எப்போதும் நினைவு வைத்திருக்கக் கூடிய தருணம் அது. நான் அவர் கரங்களைப் பிடித்துக்கொண்டேன்.

“உங்களை வாசித்திருக்கிறேன் சார்” என்றேன். ஓர் ஆளுமையிடம் பேசும் முதல் வாக்கியம் அப்படியா இருக்க வேண்டும் என நொந்துகொண்டேன். எனக்குப் படபடப்பாக இருந்ததால் எதுவும் சரியாக வரவில்லை. “என் புத்தகமெல்லாம் கிடைக்குதா?” என்றார். “யாரிடமாவது இருந்தால் உடனே நகல் எடுத்துக்கொள்வேன்” என்றேன். அடுத்தடுத்து முதிர்ச்சியில்லாத பதில்களாக வந்தன. “வயதென்ன?” என்றார். சொன்னேன். “நல்ல வயது” என்றார்.

எல்லாம் முடிந்து, அனைவரிடமும் விடைபெற்று சென்றபோது கோவை ஞானி கீழே தன் உதவியாளருடன் தனியாக அமர்ந்திருந்தார். காருக்குக் காத்திருந்தார் என நினைக்கிறேன். நான் அவர் அருகில் சென்று அமர்ந்து பேசினேன். கொஞ்சம் நிதானம் திரும்பியிருந்ததால் ஓரளவு தெளிவாக உரையாட முடிந்தது. ‘வல்லினம் 100’ கொடுத்தேன். மீண்டும் “வயதென்ன?” என்றார். சொன்னபோது “நல்ல வயது” என்றார்.

அவருக்கு வயதைக் கேட்டறிவதில் ஏதோ ஆர்வம் இருப்பதாக நினைத்துக்கொண்டேன். காலங்களினுள் முன்னோக்கி மட்டுமே செல்லும் சுழலலையில் தள்ளப்பட்டுக்கொண்டே இருப்பது வயது. ஞானி வயதுகளை அறிவதன் வழி, காலங்களுக்குள் நுழைந்து செல்ல முயன்றிருக்கலாம். எப்படியாயினும் அவர் காலத்தால் அழியாத ஆளுமை.

கோவை ஞானி அவர்களுக்கு என் அஞ்சலி.

(Visited 448 times, 1 visits today)