அன்புள்ள நவீனுக்கு,
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
மதுரைக்கு மேற்கில் தேனி செல்லும் சாலையின் நேரிணையாக உள்ள மலைத்தொடர் நாகமலை எனப்படுகிறது. வறண்ட தாவரங்களால் அடர்ந்து, பெரும்பாலும் செங்குறுங்கற்களாலான மர்மத் தனிமை கொண்ட குட்டி மலைத்தொடர் அது. எதிர்க்காற்றின் செம்மண் தூசு கண்களை நீர்க்க வைக்க வைக்கும் அந்தப் பகுதிதான், வடிவேலுவிடம் பஞ்சாயத்து பேசிய சங்கிலி முருகன் தயாரித்த பெரும்பாலான திரைப்படங்களின் பின்புலம்.
சின்ன கைனடிக் ஹோண்டாவில், வழிமாற்ற ஒத்திசைவாக இயங்கும் நான்கு கைகள், வண்டியின் பின்னால் காற்றேற்றப்பட்ட மாற்றுசக்கரத்தின் மேலே ஒருவன், என நால்வராக தொற்றிக் கொண்டு நண்பர்களுடன் சென்று அரட்டை அடித்து குளித்துக்களிக்க ஏற்ற சில இயற்கை நீரூற்றுகள் அங்கு உண்டு. மதுரை உருவாக அழிந்த மரங்கள்போக எஞ்சிய கடம்பமரங்கள், அத்தகைய இயற்கை ஊற்றுகளில் ஒன்றான புல்லூத்துப் பகுதியில் உண்டு. ஒரு நாள் அரட்டை வேளையில், மாபெரும் பச்சை வலை என விரிந்து, பெருந்தொகுதியான கிளிக்கூட்டம் என் தலைக்கு மேலே நிறைத்து, சுற்றமைந்த மரங்களை ஒன்றன்பின் ஒன்றாக அள்ளி எடுக்கப் பார்த்தபடி பறந்து சென்றது. பச்சை மீனாட்சியின் கைச்செண்டாகவும், மங்கம்மாவின் தோள்களிலும் மங்கையர்க்கரசியின் அருகாமையிலும் உணர்வுகளைப் பரிமாறிய கிளிகளின் சந்ததிக் கூட்டம் என எண்ணிக் கொண்டேன்.
ஒலிப்பேழை முதல் வாசிப்பில் சமத்காரமான மூளைக்குரிய கதை என்று தோன்றியது. அரிய பழங்காலப் பொருட்களின் மீது பூசியிருக்கும் கற்பனைகளை இடது கையில் தட்டிவிட்டு, அதே பொருளை தன் கற்பனையைப் பூசி பெரு விலைக்கு விற்கும் முதலாளியை, அவனை விடப் பெரிய மூளைக்காரனான கொஞ்சம் மாயதந்திரம் தெரிந்த ஒரு வாடிக்கையாளன், படிப்படியாக வெல்லும் கதை என வாசித்தேன். மலேசிய கால்பந்து கீப்பர் ஆறுமுகம், போயோனிஸ் மலர்கள், போமோ நாட்டு மருத்துவம், சேவல் சின்னம் கொண்ட இஸ்திரிப் பெட்டி என அறியாத பல தகவல்களை முதல் முறையாகப் பெற்றேன்.
மோனா ஃபாண்டேயின் பின்புலம் தெரிந்தபின் வாசித்த மறுமுறையில் கதை வேறு ஒரு பரிணாமம் கொள்கிறது. மோனா இஸ்மாயில் என்கிற இயற்பெயர் கொண்ட அந்தப் பெண்மணி. ஒரே வாழ்வில் பாடகி, போமா வைத்தியர், மந்திரவாதி, கொலைகாரி எனப் பல அவதாரங்களை எடுத்த அலகிலா ஆற்றல் கொண்டவர். அந்தந்ததுறையில் உச்சத்தை தொட்ட பிறகு அடையும் வெறுமையை வெல்ல மாய மந்திர சாகசத்தில் இன்பம் கொள்ளப் பார்த்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. கைதுக்கு பின் அவர் அணிந்த உடைகளும், அலங்காரமும், அவரது கூர்மையான சிரிப்பேந்திய முகமும், சமூகத்தின் சராசரிக்கு மேலே நின்று கொண்டு எக்களித்த இன்னொரு ஜோக்கர் என்கிறது.
மனிதர்களோடு தனிமையில் உரையாடும் கூண்டுப் பறவைகள், தாழப் பறந்து நம் மனவட்டத்தை தொட்டு செல்லும் பறவைகள், சரியாக கடத்தும் ஊடகம் அமையாமல் மனித மனங்களிலிருந்து பீறிடும் உணர்வுகளைப் பெற்று காற்றில் சுமந்து செல்லும் வாகனங்கள் போலும். இஸ்மாயில் போன்ற மனதைத் திறந்து வைத்திருக்கும், நுண்ணுணர்வு கொண்டவர்களே பறவைகளின் மறைமொழியை உணரும் தன்மை பெற்றவர்கள். பாதி கறுப்பு மனம் கொண்ட, மோனா ஃபாண்டேயின் அடக்கப்பட்ட உள்ளுணர்வுகளின் சில துணுக்குகளை பெற்று, தன் சமநிலையை இழந்து அதன் எடை தாங்கமுடியாமல் எங்கும் இறக்கி வைக்கமுடியாமல் வாழ்நாள் முழுவதும் உழல்கிறார். அவரின் உணர்வை மூளைக்குரிய வியாபார உலகில் எவராலும் பகிர முடியாது, மனிதவாழ்வை விடுத்து சிறகு கொண்ட பறவைத் தொகுதியில் ஒன்றானால் மட்டுமே அவருக்கான விடுதலை.
அன்புடன்
சிவமணியன்