சிறுகதை: ஒலிப்பேழை

“என்ன எடுத்து வந்திருக்கிறீர்கள்?” என்றேன்.  

சுற்றும் முற்றும் பார்த்தவர் ஒலிப்பேழை ஒன்றை தனது பச்சை நிறத் துணிப்பையிலிருந்து எடுத்துக் காட்டிவிட்டு மீண்டும் அதைப் பைக்குள் வைத்துக்கொண்டார்.

அளவில் பெரிதென்பதால் வர்த்தக ரீதியில் தோல்வியுற்ற ஆர்.சி.ஏ நிறுவனத்தின் ஒலிப்பேழை ஒன்று என்னிடம் இருந்தது. அது 1958இல் தயாரிக்கப்பட்டதாக நினைவு. அது தவிர ஃபிலிப்ஸ் நிறுவனம் 1962இல் வெளியிட்ட ஒன்றும் என்னிடம் விலைபோகாமல் இருந்தன. கையை உயர்த்தி ‘வேண்டாம்’ என சைகை காட்டினேன்.

நான் புதியவர்களிடம் எதையும் நேரடியாக வாங்குவதில்லை. அப்பா அளவுக்கு நுணுக்கம் இல்லாததால் ஏஜண்டுகள் மூலமே அதைச் செய்து வந்தேன். பொருள்களை வாங்க வருபவர்கள் பெரும்பாலும் தேவையான தகவல்களைத் தொலைபேசியில் முழுமையாக விசாரித்துவிட்டுத்தான் வருவார்கள். வந்திருந்தவர் வயதானவராகத் தெரிந்ததால் குறைந்தபட்ச மரியாதையாக சன்னலைத் திறந்திருந்தேன்.

“இது அபூர்வமானது. இதுபோல வேறொன்று உலகில் இல்லை,” என்றார்.

வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வந்திருக்க வேண்டும். தலையில் சொங்கோக் அணிந்திருந்தார். குறுகி நீண்ட வெண்கம்பித் தாடி. நான் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி சைகை செய்துவிட்டு ‘எமி’ நிறுவனத்தின் மலாய் பாடல் இசைத்தட்டு ஒன்றைக் காட்டினேன்.

“சலோமா…” என உற்சாகமானார். “நான் அவளது தீவிர ரசிகன், ஆனால் இந்த ஒலிப்பேழை அதைவிட அரியது,” என்றார்.  

கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் இவரைப் போல் ஏராளமானவர்களைப் பார்த்துவிட்டேன். இந்த வியாபாரத்தில் விற்பனையாளர்கள் ஒரு பொருளின் மீது பூசி வைத்திருக்கும் கற்பனையை அலட்சியப்படுத்தவும் அதே பொருளின் மீது கூடுதலாக நமது கற்பனையைப் பூசி வாடிக்கையாளர்களை நம்பவைக்கவும் முடிந்தால் பிழைத்துக்கொள்ளலாம். என்ன சொன்னாலும் போகமாட்டார் எனத் தெரிந்ததால் கதவைத் திறந்தேன். தன்  இரண்டு கைகளாலும் என் கையை அணைத்து சலாம் செய்தபடி தன்னை “இஸ்மாயில்” என அறிமுகம் செய்துகொண்டார்.

அவர் தாராளமாக உள்ளே நுழைந்ததும் மீனாட்சி கொஞ்சம் பதற்றமடைந்து அழுத்தமாக ‘க்கீ’ என்றது.

“சாம்பல் கிளி,” என்றார் இஸ்மாயில்.

“அப்பாவுடையது!” என்றேன்.

“ஆப்பிரிக்காவில் அதிகம் உண்டு. நிரம்பிய அறிவு கொண்டவை,” என்றார்.

முன்னறையில் நான் அடுக்கி வைத்திருந்த பொருள்களின் மீது பார்வையை வீசியவர் “மணிராம் இங்கு பிரபலமாக இருந்த காலத்தில் வந்தது. அவர் இருக்கிறாரா?” என்றார்.

அவருக்கு என் அப்பாவை அறிமுகம் இருந்தது சட்டென கடுப்பை மூட்டியது. அதையெல்லாம் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதால் “இறந்து சில வருடங்கள் ஆகின்றன,” என்றேன்.

“என்னைவிட மூத்தவர்.”

அவர் பெரிதாக அதிர்ச்சியோ வருத்தமோ காட்டவில்லை. வயதாகிவிட்டால் மரணம் ஒரு செய்தியாக மட்டும் இருக்குமென நினைத்துக்கொண்டேன்.

“அவர் இருந்த காலத்தில் பார்த்த பல பொருள்களைக் காணவில்லை. வாசலில் நுழையும்போதே இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் பயன்படுத்திய கத்திகளை அடுக்கி வைத்திருப்பார். இதோ இங்கு 600 வருட பழமையான பீரங்கி குண்டு ஒன்றை கூடையில் போட்டு வைத்திருப்பார். பழமையான பொருள்களைத் துடைத்தால் மதிப்புப் போய்விடுமென்பதால் அவை துரு ஏறியும் மண் ஒட்டியுமே இருக்கும். பழமைக்கு பளபளப்பு எதிரி.” என சுற்றும் முற்றும் பார்வையை அலையவிட்டார்.

“பெரும்பாலானவற்றை வந்த விலைக்கு விற்றுவிட்டேன். சில அமைப்புகள் கண்காட்சி நடத்துவதாக வாடகைக்கு வாங்கிச் சென்ற பொருட்களைத் திரும்ப தரவில்லை. இங்கு தூசு படிந்து கிடப்பதற்கு எங்கோ பயன்படுவது நல்லது என அப்படியே விட்டுவிட்டேன்,” என்றேன். அவரிடம் அவ்வளவு பேசுவதே சலிப்பாக இருந்தது. மதிய உணவு உண்டால் மயக்கம்போல ஒரு தூக்கம் வரும். அதை ஒழுங்காக அங்கீகரிக்காவிட்டால் இரவெல்லாம் தலை வலிக்கும்.

“இப்படி அடைத்துப்போட்டு வைத்தால் யாரும் வரமாட்டார்களே,” என்றார்.

“உண்மையில் இப்போது இது என் வீடு மட்டும்தான். நான் யாரையும் பொருட்களைப் பார்க்க அனுமதிப்பதில்லை. இந்த ஜெராந்துட் காட்டில் யாரிடம் நான் வணிகம் செய்வது. முன்பு தேசிய பூங்காவுக்கு வந்த வெள்ளைக்காரர்கள் அப்பாவுக்கு வாடிக்கையாளர்களாக இருந்தனர். அவர் இறந்தபிறகு யாரும் அதிகம் வருவதில்லை. வீட்டையும் விலைபேசி விட்டேன். இன்னும் சில மாதங்கள்தான்,” என்றேன்.

“நல்ல வீடு.” என கூரையைப் பார்த்தார். “உன் அப்பாவுக்கு மரச் சட்டங்களால் ஆன வீட்டின் மீது ஈர்ப்பு இருந்தது. அதற்காகவே இந்த மேட்டில் நிலம் வாங்கி தனியாக வீடு கட்டினார். அப்போது இது கண்காட்சிக் கூடம்போல எப்போதும் திறந்தே இருக்கும். எப்போதுமே ஜில்லென காற்று வீசும்.”

நான் பதில் ஒன்றும் பேசவில்லை. உண்மையில் என் அப்பாவைப் பற்றி பேசும் எவரையும் நான் விரும்புவதில்லை. பெரும்பாலான முதியவர்களிடம் உள்ள வழவழப் பேச்சு இவரிடமும் வெளிப்பட்டதால் அதில் ஆர்வம் செலுத்தாததுபோல முகத்தை வைத்துக்கொண்டேன்.

“முழுமையாக இந்த தொழிலை விடப்போகிறாயா?” என்றார்.

“இல்லை. நல்ல விலை போகக்கூடிய பொருட்களை மட்டும் ஆன்லைன் மூலமாகவே விற்பனை செய்யலாம் என்றிருக்கிறேன். மேலும் எனக்கு வேறு தொழிலும் உண்டு,” அவரிடம் நான் இணையத்தள மேம்பாட்டு வல்லுனராக இருப்பதையெல்லாம் கூறவில்லை. அவருக்கு அது புரியவும் செய்யாது.

அவர் கொண்டு வந்துள்ள பொருள் குறித்து பேச்சை எடுப்பார் என அந்த பச்சை நிறப் பையையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” என்றார். நான் எடுத்து வரும்போது அவர் பழங்கால இஸ்திரிப் பெட்டி ஒன்றை எடுத்து ஆராய்ந்துகொண்டிருந்தார். எனக்கு இதெல்லாம் பிடிக்காதது. இதனாலேயே யாரையும் நான் உள்ளே அனுமதிப்பதில்லை.

“அதை விலை பேசிவிட்டேன். நாளை வந்து எடுத்துச் செல்வார்கள்,” என்று நாசுக்காக கையில் இருந்து இஸ்திரிப் பெட்டியைப் பிடுங்கி தண்ணீரைக் கொடுத்தேன்.

“எவ்வளவு?” என்றார்.

“என்னிடம் ஆறு உள்ளன. ஒன்று நூறு வெள்ளியெனப் பேசி முடித்தேன்,” என்றேன்.

நெற்றியைச் சுருக்கிய அவர் “எல்லாம் ஒரே விலை அல்ல. எதில் சேவல் செதுக்கப்பட்ட உருவம் உள்ளதோ அதன் மவுசு தனி. மலேசிய இஸ்திரி பெட்டிகளின் தனித்துவம் சேவல் சின்னம்தான்,” என்றார்.

எனக்கு ஏஜண்டின் மேல் எரிச்சலாக வந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. “என்ன சிறப்பு அந்த ஒலிப்பேழையில்?” என்றேன்.

“சொல்கிறேன்!” என்றவர் நேராக டிஃபன் கேரியர்கள் அடுக்கப்பட்ட இடத்துக்குச் சென்றார். “இவை உன் அப்பா காலத்திலிருந்து இருக்கின்றன. நல்ல விலை போகும் சேகரிப்பு.”

“இரண்டாயிரம் ரிங்கிட்!” என்றேன்.

“இல்லை. பத்தாயிரம் வரை போகும்,” என்றார்.

“நீங்கள் அதிகப்படுத்துகிறீர்கள். இணையத்தில் இதன் பேரம் இவ்வளவுதான்,” என்றேன்.

“உண்மைதான். ஆனால் அந்த நான்கடுக்கு கேரியரில் மட்டும் உள்ள இளஞ்சிவப்பு மலர்களைப் பார்த்தாயா?”

“ரோஜா.”

“இல்லை. அவை பியோனிஸ் மலர்கள். பார்க்க ரோஜா போலத்தான் தோற்றம் கொடுக்கும். பியோனிஸ் மலர்கள் இருந்தால் சீனர்கள் பல மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவார்கள்.”

எனக்கு இதற்கெல்லாம் விளக்கம் பெறப் பொறுமையில்லை. கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளாக அப்பா இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தார். தொலைக்காட்சி, நாளிதழ் என ஏராளமான நேர்காணல்களில் புகைப்படங்களுடன் சிரித்துக்கொண்டிருப்பார். அம்மாவுக்குப் புற்றுநோய் முற்றி மருத்துவம் பார்க்க பணமில்லாதபோதும் எதையும் விற்க விடவில்லை. எல்லாவற்றும் ஒரு காலம் உண்டு என்றார். இந்தத் தொழிலில் உள்ளவர்களின் மூடப்பழக்கம் காலம்தான்.

“பொருளைவிட அதில் கிடைத்தற்கரிய கலைத்தன்மை இருந்தால் அதற்கு தனித்த மதிப்புள்ளது அல்லவா?” என்றவர் என்னை வினோதமாகப் பார்த்தார். எனக்கு அவர் எங்கு வருகிறார் எனப் புரிந்தது. நல்ல வியாபாரிதான் என நினைத்துக்கொண்டேன்.

“உங்களுக்கு மோனாவை தெரியுமா?” என்றார்.

நான் புரியாமல் விழிக்கவும் “மோனா ஃபென்டி,” என்றார்.

“பிரபலமான மந்திரவாதி,” என்றேன்.

“அவ்வளவுதான் தெரியுமா?”

“கொலைக்காரி!” என்றேன்.

“அவள் ஒரு பாடகியும்கூட,” என்றார்.

“தெரியும். எண்பதுகளில் வாழ்க்கையை அப்படித்தான் தொடங்கினார் இல்லையா?” என்றேன்.

“டியானா ஆல்பம் வழி,” என்றார்.

எனக்கு இப்போது தெளிவாகப் புரிந்துவிட்டது. மணியைப் பார்த்தேன். மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. ஐந்து மணிக்கு மாரான் ஆலயத்தில் ஒருவரைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். மதியம் தூங்காமல் இரவு காட்டுப்பாதையில் காரை ஓட்டுவதை நினைத்தாலே பயமாக இருந்தது. யானைகளின் நடமாட்டம் உள்ளதாகப் பேசிக்கொண்டார்கள்.

“அவரது பாடல்களெல்லாம் இப்போது இணையத்திலேயே கிடைக்கின்றன. இதை நீங்கள் சும்மா கொடுத்துவிட்டு போனாலும் என்னால் விற்க முடியாது,” என்றபடி நேராக வாசலருகில் போய் நின்றேன். அது அவரை வெளியேறச் சொல்கிறேன் எனப் பொருள்.

“அவசரப்படாதீர்கள். இது டியானா ஆல்பம் இல்லை,” என்றவர் “கொஞ்சம் அமர்ந்து பேசலாமா?” என என் அனுமதிக்குக் காத்திருக்காமல் ஒரு நாற்காலியை இழுக்க முயன்றார். “நல்ல கனம்,” என்றவர் அதைக் கூர்ந்து பார்த்தார்.

“ஆணிகளைப் பயன்படுத்தாமல் கோலா கங்சார் அரண்மனையை அமைத்த ஹஜி சுஹ்வியான் எஞ்சிய மரச்சட்டங்களைக் கொண்டு தயாரித்த நாற்காலியல்லவா? அவர் மஹா தச்சன். இதுவும் ஆணிகள் இல்லாதவைதான்,” என்றவர்  நாற்காலி இருக்கும் பாங்கிலேயே அமர்ந்துகொண்டார். நான் தகர நாற்காலி ஒன்றை இழுத்துப்போட்டு அவர் அருகில் அமர்ந்தேன்.

கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். தொழுகை செய்கிறாரோ என சந்தேகம் வந்தபோது தலையை மெல்லத் தூக்கினார்.

“யாரிடமும் சொல்லமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இதை உங்களிடம் பகிர்கிறேன்,” என்றார். அவர் கண்களில் பூ விழுந்திருக்கக்கூடும். விழிகளில் வெண்மை கலந்திருந்தது.

“சொல்லுங்கள்,” என்றேன்.

“மோனா வழக்கை நீங்கள் கவனித்தீர்களா?”

“ஆம். யார்தான் கவனிக்கவில்லை. அப்போது நான் சிறுவன். ஆனால் இந்த மாநில சட்ட மன்ற உறுப்பினரை மோனா கொன்றுவிட்டாள் எனப் பரவலாகப் பேசிக்கொண்டனர். அவரை பதினெட்டுத் துண்டுகளாக வெட்டி வீட்டைச்சுற்றி புதைத்து வைத்தாள் அல்லவா? நீதிமன்றத்துக்கு வரும்போதெல்லாம் அவள் சிரித்துக்கொண்டே இருந்தது எனக்கு கடும் அச்சத்தை மூட்டியது.”

“சிரிப்பது ஏன் பயத்தை மூட்ட வேண்டும்?”

“ஒரு கொடூரத்தைச் செய்துவிட்டு யாராவது சிரித்துக்கொண்டிருப்பார்களா? கைது செய்யப்பட்ட நாளில் இருந்து அவள் முகத்தில் சிரிப்பு கொஞ்சம் கூட குறையவில்லை. கோடரியால் ஒரே வெட்டில் மஸ்லான் தலையைத் துண்டாக்கினாள்.”

“ஆம். அதற்கு முன் அவரை தங்க நாணயங்கள் தலையில் விழுவதாகக் கற்பனை செய்தபடி தரையில் படுக்கச்சொன்னாள்.”

“கொடூரமானவள். கொலை செய்வதற்கு முன்பு அவள் தோட்டத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாளாம்”

“நல்ல நினைவாற்றல் உனக்கு. அப்போது நான் உத்தாமா மலேசியாவில்தான் பணியாற்றினேன் புகைப்படக்காரனாக.”

“ஓ… நீங்கள் புகைப்படக் கலைஞரா? அப்போதெல்லாம் சோனி மாவிக்கா வந்துவிட்டதில்லையா?” என்றேன்.

“அதெல்லாம் எங்களுக்குத் தாமதமாகத்தான் வந்தது. எங்கள் அலுவலகத்தில் எஸ்.எல்.ஆர் தான். ஆனால் அதுகூட அப்போது பல நாளிதழ்களில் இல்லை,” என்றார்.

“என்னிடம் அந்த மாடல் உண்டு. உண்மையில் பழைய தொழில்நுட்பக் கருவிகளைதான் நான் அதிகம் வாங்கி விற்க விரும்புகிறேன். அது மிகச் சுலபமானது” என்றேன்.

“அதில்தான் நான் படம் எடுத்தேன். கோடரி, நீண்ட அரிவாள், கூர்மையான கத்தி ஆகியவற்றால் அவரை மிக நேர்த்தியாக மோனாவும் அவள் கணவனும் துண்டு போட்டிருந்தார்கள். அது அவசரமாக நிகழ்ந்த கொலையல்ல. வலது கரமும் இடது கரமும் ஒரே அளவில் வெட்டப்பட்டிருந்தது. வலது கரம் மூன்று துண்டுகளாகவும் இடது கரம் இரண்டு துண்டுகளாவும் கிடைத்தன. அதுபோல கால்களையும். மண்டை பிளக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றாகப் படம் எடுத்தேன்.”

“அழுகிவிட்டதல்லவா?”

“கொஞ்சம். அதன் பின்னர் வீட்டில் அவர் போமோவுக்குப் பயன்படுத்தும் பொருள்களையெல்லாம் படம் எடுக்க அனுமதி பெற்று உள்ளே சென்றேன். ஒரு காவல் அதிகாரியும் உடன் வந்தார். அது மிகப்பெரிய வீடு. முடிந்தவரை கண்ணில் படும் அனைத்தையும் படம் எடுத்தேன். அப்போதுதான்…” என நிறுத்தினார். அவருக்கு வியர்த்தது. நான் காற்றாடியை முடுக்கிவிட்டு கதவைத் திறக்கச் சென்றேன்.

“வேண்டாம் இருட்டாகவே இருக்கட்டும்,” எனத் தடுத்தார்.

“மோனாவின் அறையில் நுழைய முழுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்னும் போலிஸார் செய்ய வேண்டிய பரிசோதனைகள் மிச்சம் இருந்தன. போலிஸ்காரர் மேலே என்னுடன் வராததால் நான் ரகசியமாக மோனா அறைக்குள் நுழைந்தேன். அந்த அறை முழுக்க மோனா தன்னை ஒரு பாடகியாக மட்டுமே நினைவுகூர்ந்திருந்தாள்.”

“அவள் சிறந்த பாடகிதான் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த கீதத்தை நான் பாடுகிறேன் எனும் பாடல் அவள் தூக்கிலிடப்பட்ட காலக்கட்டத்தில் ஒலிக்காத நாள் இல்லை,” என்றேன்.

“நீ மலாய் பாடல்களைக் கேட்பதில் எனக்கு சந்தோசம்!” என்றவர் சொங்கோக்கை கழட்டியபோது சட்டென வேறொருவராகத் தெரிந்தார். தலையின் மையப் பகுதி முழுக்க வழுக்கையாக இருந்தது. அதில் ஆங்காங்கு கருப்பு நிற மருக்கள் இருந்தன. அவருக்கு வியர்ப்பதைப் பார்த்து எனக்கு பயமாக இருந்தது. மறுபடியும் குடிக்க ஏதாவது வேண்டுமா எனக்கேட்டேன்.

“இல்லை. நான் சொல்லி முடிக்க வேண்டும். அந்த அறையில் எனக்கிருந்த குறுகிய நேரத்தில் முழுவதுமாகத் துழாவினேன். இரண்டாவது முறை ஏதும் சோதனை நடக்குமென்பதால் என் கைரேகை எங்கும் படாமல் ஒரு துணியைக் கையில் சுற்றிக்கொண்டு அலசினேன். அப்போது ஒரு அழகிய கண்ணாடிப் பெட்டி என் கண்ணில்பட்டது. விரல்களைப் பதிக்காமல் அதை திறக்க மிகவும் சிரமப்பட்டேன். அதன் உள்ளே மற்றுமொரு கச்சிதமான மரப்பெட்டி. அதை என் பையில் போட்டுக்கொண்டு கீழே இறங்கி வந்தேன்.”

“போலிஸ் உங்களை சந்தேகிக்கவில்லையா?”

“நான் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையின் புகைப்படக்காரன். அது முதல் பக்கச் செய்தி. யாருடைய படங்களெல்லாம் முன் பக்கத்தில் வரப்போகிறது என முடிவு செய்யப்போகிறவன் நான்தான். அலுவலகத்தில் உள்ள இருட்டறையில் படங்களை டெவலப் செய்துவிட்டு கிழித்துப்போட்டால்கூட என்னைக் கேள்வி கேட்க ஆள் இல்லை. அதனால் என் மீது எல்லோருக்கும் ஒரு மரியாதை இருந்தது.”

“அந்த மரப்பெட்டியில் என்ன?” என்றேன்.

“மோனா ஃபென்டி முதல் பாடல் ஆல்பத்தை வெளியிடும் முன்பு பல பாடல்களை பாடிப் பார்த்தாள். அவற்றைப் பதிவு செய்தும் வைத்திருந்தாள்,” என்றவர் என் கண்களைக் கூர்ந்து பார்த்தார். “அப்படிப் பாடித் தொகுத்த பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழைதான் அது” என்றார்.

என் மனம் ஒரு கணக்குப்போட்டது. உண்மையில் அதுபோன்ற ஒலிப்பேழைக்கு கறுப்புச்சந்தையில் நல்ல விலை உண்டு. வாங்குபவர் யாரென்றே தெரியாது. விற்பவரும் தன்னை அடையாளம் காட்ட வேண்டியதில்லை. பணம் மட்டும் சரியாக வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். நான் என் ஆர்வத்தைக் காட்டிக்கொள்ளவில்லை. அவரைப் பேச அனுமதித்தேன்.

” கூடவே ஒரு கடிதமும் இருந்தது,” என்றார்.

“யாருக்கு எழுதப்பட்டது?”

“அது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவளுடன் கைது செய்யப்பட்டவன் அவளது மூன்றாவது கணவன் அஃபன்டி.”

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அவளுக்கு வேறு யாருடனாவது…”

“தெரியவில்லை. ஆனால் அது அவள் யாரையோ அதிகம் நம்பி எழுதிய அந்தரங்கமான கடிதம். பல சமயம் அவள், தானே அதுவரை அறியாத ஒருவருக்கு எழுதியிருக்கிறாளோ என்றும் தோன்றியதுண்டு. ஆனால் தன் வாழ்நாளில் நம்பும் ஒரே நபராக அவரை வர்ணித்திருந்தாள்”

“என்ன எழுதப்பட்டிருந்தது?” என்றேன். எனக்கு உண்மையில் அதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. ஒரு பொருளுடன் கிடைக்கும் உத்திரவாதக் கடிதத்துக்கு மதிப்பு அதிகம். சில சமயம் பொருளைவிட அதில் உள்ள கையெழுத்து விலையைப் பன்மடங்காக்கும். ஒரு கிழிந்த பந்தில் கீப்பர் ஆறுமுகத்தின் கையெழுத்து இருந்ததாலேயே அது சில ஆயிரங்கள் விலை போனது.

“அதன் ஒவ்வொரு வரியும் எனக்கு மனப்பாடம். ஆயிரம் முறை படித்திருப்பேன். தன் உயிரைக் கரைத்து அவள் அப்பாடல்களைப் பாடியுள்ளதாகவும் அதன் வரிகளை அவளே தன்னிலை மறந்து புனைந்ததாகவும் எழுதப்பட்டிருந்தது. அதுவே தனது முதல் ஆல்பமாக வந்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தாள். ஆனால் அதைக் கேட்கும் ரசனையுள்ளவர்கள் அப்போது இல்லாததால் எல்லோரும் ரசிக்கும் வகையில் ‘டியானா’ பாப் ஆல்பத்தை வெளியிட்டதாக எழுதியிருந்தாள். தான் மிக விரைவில் இறப்பேன் என்றும் அப்படி இறந்தபிறகு இந்தப் பாடலை ரசிக்கும் மக்கள் உருவாகியிருந்தால் இதனை ஆல்பமாக்கி உலகுக்குக் கொடுக்க வேண்டுமென்றும் கூறியிருந்தாள்.”

அவர் கண்களில் பயம் தெரிந்தது.

“அவளுக்குத் தான் இறப்போம் எனத் தெரிந்திருக்கிறது. கொலை செய்தால் தூக்கு நிச்சயம் எனத் தெரிந்தே செய்திருக்கிறாள்” என்றேன்.

“எதிர்காலம் தெரிந்தவளாகவும் இருக்கலாம்”

“நீங்கள் அந்தப் பாடலைக் கேட்டீர்களா?”

“இல்லை. நான் அப்போது என் நண்பர்களுடன் ஓர் அறையில் தங்கியிருந்தேன். அவர்களுக்குத் தெரிந்தால் அதை வெளியில் பரப்ப ஆரம்பித்துவிடுவார்கள். போலிஸ் என்னைக் கைது செய்யலாம் எனப் பயந்தேன். வானொலியில் மறுபடி மறுபடி அவள் பாடிய பாடல்கள் ஒலிபரப்பாயின. எனவே அவள் குரலை எளிதில் யாரும் அடையாளம் கண்டுகொள்வார்கள். மேலும்… மேலும் எனக்கு அவள் குரலை கேட்கப் பயமாக இருந்தது.”

“இத்தனை ஆண்டுகளாக நீங்கள் கேட்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது,” என்றேன். எனக்கு இஸ்மாயில் மீது சின்ன சந்தேகம் ஏற்பட்டது. இப்படி ஏதாவது கதைகளை ஊதி ஊதி பெரிதாக்கும்போதுதான் பொருளின் விலையும்கூடும். நான் நிதானமாக அவர் பேசுவதைக் கவனித்தேன். எங்கும் ஏமாந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

“நான் கேசட்டுடன் அறைக்கே செல்லவில்லை. காமிராவை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு கம்பத்தில் இருந்த என் அம்மா வீட்டுக்குச் சென்றேன். அந்தப் பெட்டியை என் அலமாரியில் மறைத்து வைத்தேன். கடிதத்தை மட்டும் சட்டைப் பையில் வைத்திருந்தேன். அதை எப்போதும் எடுத்துப் படித்துப் பார்ப்பேன். எப்போதுமே அது என்னுடன் இருந்தது.”

“இப்போது அந்தக் கடிதம் எங்கே? நான் பார்க்கலாமா? ஒருவேளை அவள் கையெழுத்துக்கு ஏதும் மதிப்பு இருக்கலாம்,” என்றேன்.

“இல்லை. அந்தக் கடிதம் என்னை அதிகம் தொந்தரவு செய்துகொண்டிருந்தது. நடுநிசிகளில்கூட அதை எடுத்து வாசிப்பேன். ஏதாவது ஒருவரியை விட்டுவிட்டேனா? ஏதாவது ஒரு சொல்லில் புதிய அர்த்தம் கிடைக்குமா? என ஒவ்வொருநாளும் பலமுறை எடுத்து வாசிப்பேன். அதனாலேயே அக்கடிதம் நைந்து கிழிந்தது. மையப்பகுதியில் துளைவிழுந்தது.  மன உளைச்சல் தாங்காத ஒரு நாளில் அதை எரித்தேன். அப்போதுதான் அந்தக் கடிதத்தைப் படிக்காமலேயே என்னால் அதன் ஒவ்வொரு வரிகளையும் நினைவுகூர முடிவதை உணர்ந்தேன். ஆம்! அந்தக் கடிதம் என்னுள் புகுந்திருந்தது.”

நான் எவ்வளவு முயன்றும் அவரைச் சந்தேகமாகப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கண்கள் சுருங்கி புருவங்கள் தன்னிச்சையாக இணைந்தன.

“அது உண்மையில் ஒரு அற்புதமான கடிதம். என் வாழ்வில் அத்தனை ரசித்து எழுதப்பட்ட கடிதத்தை நான் கண்டதே இல்லை. என் புகைப்படங்களைப் பாராட்டி பத்திரிகை அலுவலகத்துக்கு வரும் ஆயிரமாயிரம் கடிதங்களை நான் வாசித்ததுண்டு. எதுவுமே என் மனதில் நின்றதில்லை. மோனா எவ்வளவு அழகுணர்ச்சி உள்ளவள் என அந்தக் கடிதமே சொல்லும். அவள் கலிகிராஃபி எழுத்து முறையைப் பயின்றிருக்க வேண்டும். ரோமன் எழுத்துகளை அரேபிய வடிவில் எழுதியிருந்தாள். அது கோடுகள் இல்லாத வெண்ணிறக் காகிதம். கடிதத்தைச் சுற்றி ஏராளமான இசை சங்கேதங்கள். முதலில் கடிதம் எனக்குப் புரியவில்லை. சொற்கள் அறுந்தறுந்து இருந்தன. இறுதியாக மியான் கி தோடி என அவள் சிறிய எழுத்தில் குறிப்பிட்டிருந்தது ஒரு இந்துஸ்தானி சங்கீதம் என அறிந்து அந்த ராகத்தில் வாசித்துப்பார்த்தேன்”

“உங்களுக்கு இசை தெரியுமா?”

“தெரியாது. பெரும்பாலான மலாய்க்காரர்களைப்போல அவளுக்கும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் நாட்டம் இருந்திருக்க வேண்டும். நான் அக்கடிதத்தை வாசிக்க அந்த ராகத்தைத் தேடிக் கண்டடைந்தேன். அப்போதாவது அக்கடிதம் எனக்கு புதிய அர்த்தத்தைக் கொடுத்து என்னை விடுவிக்காதா என ஏங்கினேன். ஆனால் ராகத்துடன் அமைந்த கடிதம் மனதை விட்டு என்றுமே அகலாது என தாமதமாகத்தான் புரிந்தது.”

எனக்கு உறக்கம் களைந்திருந்தது. உண்மையில் அந்தக் கடிதம் கிடைத்தால் அதை ‘தோர்’ போன்ற இணையத் தளம் வழி எளிதாகக் கைமாற்றிவிட முடியும். சில ஆயிரங்கள் பறிபோனதை எண்ணி வருத்தமாக இருந்தது.

“நான் அந்தக் கடிதத்தை மறுபடி மறுபடி எழுதிப் பார்த்தேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள். அந்த வரிகள் மட்டுமல்ல, அவளது எழுத்துருவும் எனக்கு அப்படியே வந்தது. மோனா ஒரு தேர்ந்த போமோ. அவள் என்னை பழி வாங்குவதாக உணர்ந்தேன். எந்த நேரமும் நான் அக்கடிதத்தின் வரிகளை மனதுக்குள் உச்சரித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு கவிதையாகி ஒரு பாடலாகி இறுதியில் ஒரு இசையாகவே உருமாறி என்னுள்ளே சுழலத்தொடங்கியது. அது என்னுள்ளே எப்போது ஒலித்துக்கொண்டிருந்தது. நான் யாரிடமாவது பேசும்போது அந்த இசையை வெளிப்படுத்திவிடுவேன் என பயந்து தனியனானேன். பத்திரிகையில் வேலை செய்யப் பிடிக்கவில்லை. கொஞ்ச நாளிலேயே வேலையை விட்டு நின்று கம்பத்திலேயே விவசாயம் பார்க்கத் தொடங்கினேன்.”

“அந்த ஒலிப்பேழை?”

“கடிதம் கொடுத்த பாதிப்பால் எனக்கு அதைக் கேட்க தைரியம் வரவில்லை. ஈராயிரத்து ஒன்றில் அவளைத் தூக்கில் போட்ட பிறகு நான் முற்றிலும் தைரியம் இழந்தவன் ஆனேன். அவளுடைய ஆன்மா இந்த ஒலிப்பேழைக்காகக் காத்திருக்கக் கூடுமென நம்பினேன்.”

“அப்படியானால் நீங்கள் இதில் உள்ள பாடல்களை ஒருமுறை கூடக் கேட்டதில்லை அப்படித்தானே,” என்றேன்.

“கேட்டதில்லை.”

நான் சாய்ந்து அமர்ந்தேன். கண்களை மூடி யோசித்தேன்.

“இது மோனாவின் குரல்தான் என்பதற்கான அடிப்படை ஆதாரத்தையும் எரித்துவிட்டீர்கள். இது அவள் பாடியதுதான் என எப்படி நிரூபிக்க முடியும்?”

“நான் அவள் வீட்டில், அவள் அறையிலிருந்துதானே எடுத்தேன்.”

“அதை நான் ஏன் நம்ப வேண்டும்?”

அவர் ஒன்றும் பேசவில்லை. “நீங்கள் சொல்வதும் நியாயம்தான்” என்று அமைதியானார். சிவந்த கண்களுடன் ஏறிட்டு “நீங்கள் நம்ப முடியாதுதான். ஆனால் அதுதான் உண்மை. இல்லாமல் இவ்வளவு ஆபத்தான தகவலை நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உண்மை மட்டும்தான் இந்த பொருளுக்கான விலை,” என்றார் அழுத்தமாக.

“அப்படியானால் நீங்க வந்த நோக்கம் அதை விற்பது மட்டும்தானே?”

“ஆமாம். என் மகளுக்குத் திருமணம் வைத்துள்ளேன். இதை இனியும் என்னுடன் வைத்திருக்க வேண்டாமெனத் தோன்றியது. அவள் கணவன் காவல்துறையில் உயர் அதிகாரி. எனவே இதை விற்றால் என் மகள் திருமணத்திற்கு உதவக்கூடுமென நம்பினேன். அதோடு நான் பயமின்றி தூங்கலாம்.”

“இதற்கு அதிகமான விலை தரமுடியாது. அதற்குமுன் இது நல்ல நிலையில் இருக்கிறதா என்றும் சோதிக்க வேண்டும். அது மோனாவின் பாடலா என உறுதிசெய்ய வேண்டும்.”

“இது உண்மையில் மோனாவின் பாடல்கள்தான். இதுவரை அவள் எங்குமே பாடாத பாடல்கள். நிச்சயம் இதற்கு விலை இருக்கும். ஆனால் அதை எடுத்துச்செல்லும் வழி எனக்குத் தெரியவில்லை. அப்போதுதான் உங்கள் அப்பா என் நினைவுக்கு வந்தார். முன்பு அவரை நாளிதழுக்காக நேர்காணல் செய்திருக்கிறேன். உங்கள் வீட்டிலேயே இரண்டு நாட்கள் தங்கி அவருடன் உரையாடியிருக்கிறேன். அப்போது நீங்கள் குழந்தை. அவருக்கு இசையில் ஆர்வம் இருந்தது. அவர் பொருத்தமானவர் என முடிவெடுத்துதான் இவ்வளவு தூரம் வந்தேன்,” என்றார்.

“உண்மைதான். ஒருவேளை அவர் இருந்திருந்தால் இதை நீங்கள் சொன்ன விலைக்கு வாங்கியிருப்பார். அவர் ஏமாளி. பின்னர் சோற்றுக்குப் பணமில்லாமல் கிளியுடன் பேசிக்கொண்டிருப்பார்,” என்றேன். அது கடுமையாக இருந்தாலும் அப்பாவைப் பற்றி பேசும்போதெல்லாம் எனக்கு இவ்வாறான சொற்கள்தான் வந்தன.

“எவ்வளவுதான் கொடுப்பீர்கள்? நான் புறப்பட வேண்டும்,” என்றார். நான் மனதில் ஒரு கணக்குப் போட்டேன். இதில் உள்ள பாடல்களின் தரத்தை நல்ல இசை வல்லுநரிடம் கொடுத்து ஆராய்ந்து இன்று பிரபலமாக இருக்கும் மலாய் இசைக் கலைஞரிடம் கைமாற்றினால் சில லட்சங்கள் கிடைக்கக்கூட வாய்ப்புண்டு. இன்று அந்தத் துறையில் போட்டிகள் அதிகம். புதிதாக எதையாவது உருவாக்க ஒவ்வொருநாளும் திணறுகின்றனர். இவர் சொல்வது உண்மையானால் பெரும் பணம் பார்க்கலாம்.

“அதிக பட்சம் ஐநூறு ரிங்கிட். அதுவும் பாடலில் ஒலி தெளிவாக இருந்தால்!” என்றேன்.

“இது நியாயமில்லை,” என்றார் இஸ்மாயில். அவருக்கு மூச்சு வாங்கியது. அது கோபத்தின் அடையாளம்தான். ஆனால் அதற்காக நான் செய்ய ஒன்றுமில்லை.

“நான் என் வாழ்க்கை முழுவதும் பாதுகாத்த பொக்கிஷம் இது. இதுபோல வேறொன்று கிடைக்காது. சாதாரண விலை சொல்கிறீர்கள். என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்” என்றார்.

நான் அவருக்குப் பிடித்த சலோமா இசைத்தட்டைக் கையில் எடுத்தேன். “இது விலை போகாத காரணம் தெரியுமா?” என்றேன். அவர் என்னை முறைத்தபடியே இருக்கவும் தகட்டின் மையத்தில் இருந்த எழுத்துகளைக் காட்டினேன்.

“இதை நான் இரண்டாயிரம் ரிங்கிட் கொடுத்து வாங்கினேன். ஆனால் தகட்டின் நடுவில் உள்ள தகவல்கள் டைப் செய்யப்பட்டுள்ளதால் இதன் உண்மையான விலை இருநூறு ரிங்கிட்டைத் தாண்டாது. ஆனால் இதற்கு முன்னர் வந்த நூறு தகடுகளின் தகவல்கள் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தன. அதன் விலை இப்போது ஐயாயிரத்துக்கு மேல். ஒரு பொருளின் மவுசு தெரியாமல் அதை விலை கொடுத்து வாங்க முடியாது,” என்றேன். அவர் கண்கள் கலங்குவதைப் பார்க்க முடிந்தது.

“ஆனால் இது ஒன்று மட்டும்தான் உள்ளது,” என்றார்.

“அதை நாம் எப்படி ஊர்ஜிதப்படுத்த முடியும். இப்பாடல்களின் வேறு பிரதி யாரிடமாவது இருந்து அது எங்காவது விற்கப்பட்டுள்ளதா என ஆராய வேண்டும். நிறைய படிநிலைகளுக்குப் பிறகுதான் இது விலை போகும்.”

“அப்படியானால் நீங்கள் ஆராயும் வரை நான் காத்திருக்கிறேன். எல்லாம் உறுதியான பின் நீங்கள் விற்கும் விலையில் ஒரு தொகை கொடுங்கள்,” என்றார்.

“அதற்கு எத்தனை வருடங்களாகும் என எனக்கே தெரியாது. மேலும் நான் கோலாலம்பூருக்கு இடம்மாறப் போகிறேன். உங்களுக்கு திருப்தியில்லையென்றால் வேறு ஆளை பாருங்கள்,” என்றேன்.

அவர் போகமாட்டார் என உள்ளூர அறிவேன். அவர் யாரிடமும் சொல்லாத ரகசியம் ஒன்றை என்னிடம் சொல்லியுள்ளார். எப்போதுமே தவறுகளுக்குத் தண்டனைகள் தாமதமாகக்கூட கிடைக்கலாம் என பத்திரிகையாளராக அவர் அறிந்திருப்பார். போலிஸ் பாதுகாப்பில் இருந்த ஒரு வீட்டில் திருடியதென்பது பெரும் குற்றம். அதுவும் இது ஒலிப்பேழை. இது ஓர் ஆதாரமாகி மோனா குற்றவாளியில்லை என்றுகூட தீர்ப்பு மாறியிருக்கலாம். அந்தக் கடிதத்தில் மேலும் பல குற்றவாளிகள் பற்றிய குறிப்புகள் இருந்திருக்கலாம். என்னைவிட்டு போனால் ஒவ்வொரு நொடியும் அவர் அச்சத்தால் நடுங்க வேண்டும். அது கடிதம் கொடுத்த அச்சத்தைவிட பல மடங்கு அதிகம். அவர் அதை விரும்பமாட்டார். நான் பரபரப்பாக முகத்தை வைத்துக்கொண்டு கடிகாரத்தைப் பார்த்தேன்.

இஸ்மாயில் தலையைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார். அவர் கைகள் நடுங்கிக்கொண்டிருப்பதை ரகசியமாகக் கண்டேன். இதில் எனக்கு நல்ல லாபம் கிடைக்கக் கூடும் என அந்தரங்கமாக சந்தோசப்பட்டுக்கொண்டேன். மேலும் என்னால் இன்னும் வலுவான கதைகளை இந்தக் கேசட்டைச் சுற்றி உருவாக்க முடியும். மோனா குற்றம் சுமத்தப்பட்ட நாளில் இருந்து அனைவருக்கும் ஆச்சரியமும் அச்சமும் கொடுத்தது ஏன் அவள் சிரித்துக்கொண்டே இருக்கிறாள் என்பதுதான். அவள் தன் குற்றத்தையும் மரணத்தையும் நினைத்தும் ஒருபோதும் கலங்கவில்லை. அதற்கான காரணங்கள் அந்தப் பாடல்களின் வரிகளில் உள்ளதென்றால் விலை பல மடங்கு கூடும். கதைகள்தான் பொருளின் விலையைக் கூட்டுகின்றன. இஸ்மாயில் செய்வதும் அதைத்தான். எனவே நட்டம் அடைய வாய்ப்பே இல்லை எனத்தோன்றியது.

“சரி. நீங்கள் சொன்ன விலைக்கு ஒப்புக்கொள்கிறேன்,” என்றார். அதைச் சொல்லும்போது அவர் குரல் கரகரத்தது.

“நல்லது. பாடலைக் கேட்டபின் முடிவெடுக்கலாம்,” என்றேன். என்னிடம் பழங்காலத்து டேப் ரெக்காடர் ஒன்று நல்ல நிலையில் இருந்தது.

“வேண்டாம். நான் என் முகவரியைக் கொடுத்துவிட்டு போகிறேன். நல்ல நிலையில் இல்லையென்றால் நீங்கள் என்னிடம் வந்து பணத்தைத் திரும்ப வாங்கி கொள்ளலாம்,” என்றார்.

“நான் வணிகன். தபால் ஊழியன் அல்ல,” என்றேன். பாடலில் சிறு கோளாறு இருந்தாலும் விலையைக் குறைக்கலாம் எனத் திட்டமிருந்தது,

“இல்லை. நான் அவள் குரலைக் கேட்க விரும்பவில்லை. நான் ஒரு கடிதத்தால் பட்டபாடு போதும். எனக்கு நடுக்கமாக இருக்கிறது,” அவர் உண்மையில் பயப்படுவது எனக்குப் புரிந்தது. சொற்கள் குளறின. அது அவசியமில்லை என நினைத்தேன்.

“ஒன்றும் ஆகாது. நான் உங்களுடன்தான் இருக்கிறேன். நீங்கள் மோனா செய்த கொலையுடலை நேரில் கண்டதால் அதிகம் பயப்படுகிறீர்கள்,” என்றேன்.

“இல்லை அப்படியில்லை,” என்றவர் “பணம் ஒன்றும் இப்போது கொடுக்க வேண்டாம். உங்களுக்குப் பிடித்தால் அழையுங்கள். நானே வந்து வாங்கிக்கொள்கிறேன்,” என்றார்.

“வேண்டாம். ஏதும் கோளாறு இருந்தால் பின்னர் நான் இதனைக் கெடுத்ததாக பழி வரலாம். இப்போதே இங்கேயே கேட்போம்,” எனச் சொல்லிவிட்டு கேசட்டை புகுத்தி பிளே விசையை அழுத்தினேன்.

ஒலிப்பேழை சுழன்றது. உஸ் என இரைச்சல் முதலில் தொடங்கியது. அவர் வானொலியைப் பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பியிருந்தார். எந்தச் சத்தமும் கேட்காததால் நான் அதை கொஞ்சம் முன்னோக்கி ஓட விட்டு மீண்டும் பிளே-ஐ அழுத்தினேன். மீண்டும் உஸ் சத்தத்திற்குப் பின் அமைதி. நான் ஒலிப்பேழையை திருப்பிப் போடலாம் எனக் கையை எடுத்துச் சென்றபோது இஸ்மாயில் என் கரங்களைப் பிடித்தார்.

மீனாட்சி பெரும் கூச்சலுடன் கூச்சலிடத் தொடங்கியது. கூண்டின் நாற்புறமும் ஓடி ஓடி தன்னை மோதிக்கொண்டது. நான் இஸ்மாயிலின் கண்களைப் பார்த்தேன். அவர் ஒலிப்பேழையை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அவர் கரங்களில் அத்தனை பலமிருக்குமென நான் நினைத்துப் பார்க்கவில்லை. என் மணிக்கட்டு வலித்தது. முறுக்கி அசைக்க முயன்றேன். முடியவில்லை. இஸ்மாயிலின் கண்களின் கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. பொசுக்குவதுபோல் கைகளில் சூடேறியது. கூண்டில் வேகமாக அறைந்துகொண்டதில் மீனாட்சியின் இறகுகள் உதிரத் தொடங்கின. அது தன் தலையை கூண்டில் முட்டத் தொடங்கியது. அலகால் கூண்டின் கம்பியை ஆக்ரோஷமாக நெம்பியது.

நான் பலம்கொண்ட மட்டும் அவரிடமிருந்து கையை விடுவித்து ஒலிப்பேழையை நிறுத்தினேன். இஸ்மாயிலைக் குலுக்கியபோது கனவிலிருந்தவர்போல மீண்டு வந்தார். கிளி சோர்ந்துபோய் முடங்கியது.

“கேட்டீர்களா?” என்றார்.

எனக்குக் கடும் கோபம் வந்தது. “எதை?” என்றேன்.

“அவள் பாடியதை!” என்றார்.

எனக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததென தெரியவில்லை. “கிழவனே… என்னை முட்டாள் என நினைத்தாயா?” என அவர் சட்டையைப் பிடித்தேன். உண்மையில் அவர் செலவுக்குப் பணம் வேண்டுமென கேட்டிருந்தால்கூட கையில் இருப்பதில் கொஞ்சம் கொடுத்திருப்பேன். என்னை அவர் முட்டாளாக்குவது வெறுப்பை ஏற்படுத்தியது.

“நீங்கள் கேட்கவில்லையா? என்ன சொல்கிறீர்கள் நீங்கள் கேட்கவில்லையா?” எனப் பதறினார்.

“நடிக்காதே” எனக் கையை ஓங்கியபோது ஒடுங்கினார். அது என் அப்பாவைப் பார்த்து ஓங்குவதுபோல இருந்ததால் அறைய மனம் வரவில்லை. “வெளியே போ!” என அவரைப் பிடித்துத் தள்ளினேன்.

“உண்மையாகவே உங்களுக்குக் கேட்கவில்லை? உங்கள் கிளி பதறியதைப் பார்த்தீர்களா? கிளிகளுக்கு இசை தெரியும். உங்கள் கிளி அந்த இசையைக் கேட்டது. உங்களுக்குக் கேட்கவில்லையா?” அவர் என் அருகில் வந்தால் நான் அடித்துவிடக்கூடும் எனத் தோன்றியது. ரெகாடரில் இருந்த ஒலிப்பேழையை எடுத்து அவர் முகத்தில் வீசினேன்.

“நீ என் கையைப் பிடித்து முறுக்கியதால் அது கத்தியது மூடனே!” என வாசல் கதவைத் திறந்தேன்.

“என்ன சொல்கிறீர்கள். நான் மிகவும் பண நெருக்கடியில் இருக்கிறேன். நானூறு ரிங்கிட்டாவது தாருங்கள். இந்த இசைக்கு நீங்கள் எவ்வளவும் கொடுக்கலாம். இதை எடுத்துக்கொண்டு கொஞ்சமாவது பணம் தாருங்கள்,” மீண்டும் அவர் பிரசாதம் வழங்குவதுபோல ஒலிப்பேழையை என்னிடம் நீட்டினார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் கதவை அடைத்தேன். என்னுடைய ஒரு மதியம் நாசமாகப் போனதை எண்ணி எரிச்சலாக வந்தது. மீண்டும் கதவைத் திறந்து அவர் கழுத்தை நெரித்தால் என்ன என்று தோன்றியது. கிளியின் அருகில் சென்றேன். அது மிகவும் தளர்ந்திருந்தது. மூக்கில் ரத்தக் கோடு. நகங்களில் ஒன்று பிய்ந்திருந்தது. தரையெங்கும் அதன் சாம்பல் இறகுகள் பஞ்சுபோல அலைந்துகொண்டிருந்தன. எனக்கு அதன் நிலையைப் பார்த்து பரிதாபமாக இருந்தது. முற்றிலும் சக்தியற்று பிணம்போல முடங்கியிருந்த அதை கைகளில் ஏந்தினேன். சட்டென மிரட்சியுடன் கண்களைத்  திறந்தது. நான் அதன் கண்களை அத்தனை உக்கிரமாகப் பார்த்ததில்லை. அடித்தொண்டையில் ‘க்கீ’ எனக் கத்தவும் வெலவெலத்துப் போனேன். ஓர் இராட்சத பறவையின் உடல்போல அது உலுங்கியது. என் கைகளுக்கு அடங்காத வேறொரு பறவையாக மூர்க்கமாகிக் கொண்டிருந்தது. மீண்டும் கூண்டுக்குள் நுழைக்க முயல்கையில் என் விரலைக் கடித்தது. நான் கைகளை உதறவும் பறந்து சென்று வாசல் கதவில் மோதியது. அது வெளியில் செல்ல துடிப்பதை உணர்ந்து வாசல் கதவைத் திறந்தேன்.

வெளியில் இஸ்மாயில் இன்னும் நின்றுகொண்டிருந்தார். அவர் தலைக்கு மேல் ஏராளமான கிளிகள் கூட்டமாகப் பறந்து கொண்டிருந்தன. அவை எங்கிருந்து வந்தன எனப் புரியவில்லை. நான் இஸ்மாயிலை உற்றுக் கவனித்தேன். அவரது வாய், ஈறு தெரிய அசைந்து கொண்டிருந்தது. கால்களில் சிறு தாளம். வலது கரம் காற்றில் நூதனமாக அலைந்துகொண்டிருந்தது. மூடிய கண்கள் இடுங்கி புருவங்கள் துடித்துக்கொண்டிருந்தன. அவர் தொண்டை ஒடுங்கியும் புடைத்தும் அசைந்துகொண்டிருந்தது. நாசி விரிந்து விரிந்து அடங்கியது.

அவர் பாடுகிறார் என உணரமுடிந்தது. ஆனால் என் காதுகளில் எதுவும் விழவில்லை. ஆயிரக்கணக்கான கிளிகள் எங்கிருந்தோ பறந்து வந்து சேர்ந்து வானத்தை மூடி இருள வைத்தன. அவற்றின் கீச்சல்கள் ஒன்றாக இணைந்து என் காதுகளை நசுக்கியது. இறக்கையில் காயம்பட்ட என் சாம்பல் கிளி மெல்ல மெல்ல பறந்து அந்தக் கிளிகள் கூட்டத்தில் கலப்பதை நான் அசைவற்றுக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

புதிய சிறுகதைகள்:

கழுகு

உச்சை

சியர்ஸ்

ராசன்

கன்னி

பூனியான்

டிராகன்

(Visited 805 times, 1 visits today)