மலேசியாவில் மு.வரதராசனின் நாவல்கள் ஏற்படுத்திய தாக்கம்போலவே ஜெயகாந்தனின் நாவல்களும் பரந்த வாசகர் பரப்பை அடைந்த காலம் ஒன்றுண்டு. இவ்விரு எழுத்தாளர்களுடைய படைப்பின் தளமும் தரமும் முற்றிலும் மாறுபட்டிருக்கும் சூழலில் வாசகர்களை இவர்கள் ஒருங்கே பாதித்தது கொஞ்சம் ஆச்சரியமானதுதான்.
மு.வரதராசன் நாவல்கள் பாரம்பரிய ஒழுக்கவியல், அறநெறிக் கருத்துநிலையைச் சார்ந்தவை. கற்பனாவாதத்துடன் கூடிய (romanticism) இலட்சியவாதச் சிந்தனைகளை வலியுறுத்துபவை. ஜெயகாந்தன் மனிதனின் கூட்டுச்சிந்தனைக்கு எதிராகத் தனிமனித சிந்தனையை முன்வைத்த படைப்பாளி. முற்போக்கு அழகியல் வழி தனது படைப்புகளில் விழுமியங்களை உடைந்து ஆராய்ந்தவர்.
இவர்கள் இருவரும் மலேசியாவில் பெரும் வாசகர் பரப்பால் ஈர்க்கப்பட்ட முரணை ஒரு கருதுகோளாக இப்படிச் சிந்தித்துப் பார்க்கிறேன். இருவருமே தங்களின் புனைவுகளில் கருத்துநிலை அரசியலை மையப்படுத்தி புனைவுகளைப் படைத்தவர்கள். தாங்கள் கூறும் கருத்துநிலையை வாசகர்களிடம் சேர்ப்பிக்க புனைவுகளில் மேற்கோள்கள் வாக்கியங்களைச் சேர்த்தவர்கள். விளைவாக, இலக்கிய வாசிப்பில் போதிய பயிற்சியற்ற மலேசிய இலக்கியச் சூழலில் மு.வவின் நாவல்கள் போலவே ஜெயகாந்தன் நாவல்களிலும் போதனைகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டன. புனைவுகளில் அவர் முன்வைக்கும் விமர்சனங்கள் ‘விசயங்களாக’ மட்டுமே அறியப்பட்டன. இலக்கியம் என்பது கருத்துகளைச் சொல்வது எனும் புரிதலோடு முற்போக்கு கருத்துகளைப் புனைவுகளில் சொல்லும் எழுத்தாளராக ஜெயகாந்தன் சுருக்கப்பட்டார்.
மு.வரதராசனை பின்பற்றி திருக்குறளின் அறநெறி கருத்துகளைப் புனைவாக்கும் எழுத்தாளர் வரிசை மலேசியாவில் உருவானதுபோல ஜெயகாந்தனின் முற்போக்கு அழகியல் தாக்கம் பெற்ற சில எழுத்தாளர்களும் தங்கள் முற்போக்குக் கருத்துகளை புனைவுகளாக்கத் தொடங்கினர். இரண்டும் வெவ்வேறு தரப்புகள் எனச் சொல்லப்பட்டது. மு.வ.வின் நாவல்களுக்கு நவீன இலக்கிய உலகில் மதிப்பில்லை என்பதும் ஜெயகாந்தன் படைப்புகள் இலக்கிய மதிப்புமிக்கவை என்பதும் மலேசியாவில் விவாதிக்கப்பட்டதில்லை.
மு.வ.வின் கற்பனாவாத தருணங்களும் வாசகனை அமைதியழக்கச் செய்யும் ஜெயகாந்தனின் வாழ்வை நோக்கிய தர்க்கங்களும் புனைவு வெளியில் வெவ்வேறு பாதைகள் கொண்டவை என போதிக்கப்பட்டன. ஆசிரியரால் புனைவில் அழுத்தம் கொடுக்கப்பட்ட பகுதியே இலக்கியப் புரிதலாகி, அது கல்லுருண்டைபோல இறுக்கிப்பிடிக்கப்பட்டது. அதேபோல சில சிறிய நகல் உருண்டைகள் உருவாக்கப்பட்டு அவற்றின் மேல் எழுப்பப்பட்ட புனைவுகள் மலேசிய இலக்கியத்தின் முற்போக்கு முகமெனக் கொண்டாடப்பட்டன.
இப்படிக் கருத்துருண்டைகளாக மாற்றப்பட்ட ஜெயகாந்தன் வழி உருவாகி தங்களை ஜெயகாந்தன் சாயல்கொண்ட படைப்பாளிகளாகக் கருதும் எழுத்தாளர் வரிசை மலேசியாவில் உண்டு. அவர்களில் ஒருவர் சை.பீர்முகம்மது.
திராவிட இலக்கியங்களினால் ஈர்க்கப்பட்டு, ஜெயகாந்தன் புனைவுகள் வழி சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர் சை.பீர்முகம்மது. பொருளியல் அடிப்படையில் சமூகத்தில் நிகழும் மாற்றங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் சொல்லும் படைப்புகள், சிந்தனையை முதன்மைக் கருவியாகப் பயன்படுத்தும் கதாமாந்தர்கள், எந்தப் புதுமையையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் பண்புகொண்ட மனிதர்கள் என ஜெயகாந்தன் புனைவுகளின் கூறுகள் இவர்கள் சிறுகதைகளில் எளிதாகக் காணக்கிடைக்கின்றன. தொடக்கத்தில் உற்சாகமாகச் சிறுகதைகளை எழுதியவர், பிறகு பதினான்கு ஆண்டுகள் தனது தொழிலில் கவனம் செலுத்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1996இல் மறு நுழைவில் இவர் எழுதிய நாவல் ‘பெண் குதிரை.’
பெண் குதிரை
உடலுறவில் தன்னைத் திருப்தி செய்ய முடியாத ஆண் வர்க்கத்திற்கு எதிராக கமலவேணி எனும் பெண், ‘லெஸ்பியன்’ ஆவதுதான் கதை. அவள் அந்த முடிவுக்கு வர கடந்து வரும் அனுபவங்களின் கோர்வைதான் கதைப் பின்னல்.
ஏழு மாத கர்ப்பவதியாக இருக்கும் நாகலெட்சுமியின் வீட்டுக்கு அனாதையாக வருகிறாள் கமலவேணி. இருவரும் ஒன்றாகப் பள்ளியில் படித்து ஒரே இடத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். எனவே நாகலெட்சுமி மனதில் கமலவேணியின் கடந்தகாலம் ஓடுகிறது. கமலவேணி, அக்காவின் கணவனுடன் உறவுகொண்டு அந்த இன்பத்தை மறக்க முடியாமல் அக்காவின் மரணத்துக்குப் பின் அத்தானை மணக்கவும் முடியாமல் மூர்த்தி எனும் பணக்காரனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். அவனால் தாம்பத்தியில் திருப்தி கொடுக்க முடியாததால் அவனை விவாகரத்து செய்து, மறுபடியும் வேலையில் இணைகிறாள். அலுவலக மானேஜர் மணியத்தின் செயலாளர் ஆகி, ஏற்கனவே திருமணமான அவருடன் உறவில் இருக்கிறாள். அவருக்குப் பண நெருக்கடி வருவதால் அவரை விட்டு விலகி நாகலெட்சுமியைப் பார்க்க வருகிறாள். அங்கு நாகலெட்சுமியின் கணவனின் நண்பனுடன் காதலாகி உறவுகொள்ள அவனாலும் தன்னைத் திருப்தி செய்ய முடியவில்லையென்று லெஸ்பியன் ஆகிறாள்.
ஒரு நாவலாக மட்டுமல்ல, குறுநாவலாகவோ நெடுங்கதையாகவோ வேறு எந்த வடிவமாகவும் ஏற்கமுடியாத நூல் இது. ஆதி.குமணன் பொறுப்பில் இருந்த மலேசிய நண்பன் நாளிதழில் இந்த நாவல் தொடராக முதலில் வெளிவந்தது என்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே ‘பசித்திருக்கும் இளங்கொசுக்கள்’ தொடரை வானம்பாடியில் பிரசுரித்த முன்னோடி அல்லவா அவர்.
சை.பீர்முகம்மது இந்தத் தொடரை எழுதும்போது அதுவரை தான் வாசித்த நூல்களின் சாரங்கள் அனைத்தையும் வாசகர்களிடம் திணித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருந்திருக்க வேண்டும். விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு மட்டும் இரண்டு முழுப் பக்கங்கள் வருகிறது. தொடர்ந்து ராமாயணத்தில் தசரதனுக்கு இருக்கும் மனைவியர், நாளிதழின் மகளிர் அங்கங்கள், பரமஹம்சரின் பால்ய விவாகம், பாரதியாரின் மரணம் என்று தகவல்களுக்குப் பஞ்சமில்லை. தகவலைச் சொல்ல உரையாடலை ஏற்படுத்தி கருத்துப்பிரதிநிதிகளாக கதாமாந்தர்களை உருவாக்கியுள்ளார்.
பெண்ணின் உடல் தேவை குறித்தும் ஆணின் இயலாமை குறித்தும் தமிழில் புனைவுகள் ஏற்கனவே செறிவாக எழுதப்பட்டுள்ளன. எஸ்.பொவின் சடங்கு, தி.ஜானகிராமனின் மரப்பசு, ஜெயமோகனின் கன்யாகுமரி, சு.வேணுகோபாலின் கூந்தப்பனை என்பன முக்கியமான உதாரணங்கள். வழக்கம்போல ‘விபரீத ஆசை’ சிறுகதையின் வழி புதுமைப்பித்தன் இதற்கும் முன்னோடியாகிறார். இவை முக்கியமான படைப்பிலக்கியமாக உருவாகக் காரணம் உடல் சிக்கலை வாசகன் வாசிக்கும்போதே அதற்கிணையாக மனச்சிக்கலையும் அறிவதற்கான சாத்தியங்களை அவை கொண்டுள்ளதுதான். நாவலை வாசிக்கும்போது கதாமாந்தர்களின் உளவியல் அழுத்தமே வாசகனைப் பற்றுகிறது. அவர்களின் மன அலைக்கழிப்புகளை தனக்குள் நிகழ்த்துகிறான். அதன் வழி தனது அந்தரங்க உணர்வுகளுக்குள் சென்று தன்னைத்தானே அறிய விளைகிறான்.
சை.பீர்முகம்மது இந்த நாவலில் உருவாக்க முனைவது பாலியல் கிளர்ச்சியை மட்டுமே. ஆனால் அதை பெண்ணியம் என மலுப்புவதுதான் இந்த நாவல் கொண்டுள்ள அபத்தத்தின் உச்சம். பெண்ணியத்தை நிலைநிறுத்துவதாகப் புறப்படும் கமலவேணி தன் அக்காவின் கணவருடனும் திருமணமான முதலாளியுடனும் கேள்விகளற்று உறவுகொள்கிறாள். இது வழக்கமாக ஜனரஞ்சக திரைப்படங்களில் வருவதுதான். உதாரணமாகப் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில் குழந்தைகள் மீது செலுத்தப்படும் பாலியல் வன்முறைக்கு எதிரான குரல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் படத்தில் குள்ளமான பெண்களையும் பிராமணப்பெண்களையும் கேலி செய்யும் வசனங்களும் காட்சிகளும் இருக்கும். கலை குறித்த தீவிர பார்வையற்றவர்களுக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவர்களை அமைதியழக்கச் செய்வது படத்தில் தெளிவாகப் பிரச்சாரம் செய்யப்படும் கருத்தும் அதையொத்த காட்சிகள் மட்டும்தான். வணிக சினிமாவும் இலக்கியமும் ஜீவிக்கப் பயன்படுத்தும் உத்தியிது. பல பெண்களின் வாழ்வை அழித்த கமலவேணியைத்தான் சை.பீர் பெண்ணியம் பேச விட்டுள்ளார். போதாக்குறைக்கு தன் கணவனை “தேவடியா பெத்த மவனே” என வேறு ஏசுகிறாள்.
சை.பீர்முகம்மதுவின் நோக்கம் வாசகர்களை அதிர்ச்சியடைய வைப்பதே. அதற்கு அவருக்குத் தேவைப்படுவது ஒரு பெண்ணின் கட்டற்ற உடல் சுதந்திரம். அதன் வழி அவர் சொல்லக்கூடிய அசட்டுத்தனமான பெண்ணியம். அதன் உச்சமாக அவர் முற்போக்கு என நம்பும் லெஸ்பியன் கலாச்சாரம். இதனால் அவரிடம் தமிழிலக்கியத்தில் லெஸ்பியன் சுதந்திரத்தை எழுதியவர் எனும் கல்லுருண்டை கிடைத்துவிடும். அதைக்கொண்டு மழுங்கிய இலக்கியச் சூழலில் பெயர் பதிக்க முடியும். நடந்ததும் அதுதான். ஆனால் லெஸ்பியனின் மனநிலை குறித்து அவருக்குப் புரிதலில்லை என்பதைதான் நாவலின் முடிவு காட்டுகிறது. ஆணிடம் பாலியல் உச்சம் கிடைக்கவில்லையென ஒரு பெண் ஓரினச் சேர்க்கையாளாராக மாறினாள் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தம்.
இந்நாவல் வெளிவந்த காலத்தில் இதற்குக் கிடைத்த வரவேற்பை நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. மறுபதிப்பும் மொழிபெயர்ப்பும் இந்நாவலுக்குக் கிடைத்த அங்கீகாரமெனச் சொல்லப்படுவதை பேத்தல் என்றே கூறவேண்டும். ஓர் இலக்கியவாசகன் இந்நாவலை வாசிக்கையில் அடையக்கூடியது கோபம் மட்டுமே. ஒரு பெண்ணை எவ்வளவு மோசமாக வசைபாட முடியுமோ அவ்வளவு மோசமாகக் கமலவேணியை ஏசிவிட்ட நாகலெட்சுமி தன் வீட்டிலேயே அவளுக்குத் தங்க இடமும் அளிக்கிறாள். தான் பிரசவத்துக்குப் போன பின்னர் தன் கணவனை கவனித்துக்கொள்ள அவளை சிபாரிசு வேறு செய்கிறாள். மனித மனம் எவ்வாறு செயல்படும் என்பது பற்றி சை.பீர்முகம்மதுவுக்குத் துளியும் அக்கறையில்லை. அவருக்குத் தேவை வாசகர்களை கிரங்க வைக்கும் அடுத்தடுத்த காட்சிகள். அதற்கேற்ற சூழலை அமைத்துக்கொடுப்பதுதான் நாவலில் அவர் பணி.
ஜெயகாந்தனை தவறாக வாசித்தவர்கள் இலக்கியத்தில் அடைந்த இடம் இதுதான். மரபெதிர்ப்பு மனநிலையுடன் தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்திய ஜெயகாந்தன், உடலும் உயிருமாக வாழ்வை புனைவுக்குள் நிகழ்த்திக்காட்டி அதில் தான் உருவாக்கும் வலுவான கதாபாத்திரங்கள் வழி உரத்துப் பேசினார். அப்போது அவர் புனைவுகள் கொடுத்த அதிர்ச்சியலையால் மட்டுமே ஈர்க்கப்பட்டு எழுதத் தொடங்கியவர்களின் புனைவுகள், பல்லியின் வால்போல திணறத் திணற தனித்துச் சுழன்றுகொண்டே இருக்கின்றன.
சை.பீர்முகம்மதுவிடம் அற்புதமான கதைசொல்லல் மொழி உள்ளது என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் இலக்கியச் சூழலில் அவ்வப்போது நடக்கும் மாற்றங்களைத் தன் புனைவுக்குள் நிகழ்த்த முயலும்போதுதான் அது தட்டையான புனைவாகிறது. பெண்ணியம், மாய எதார்த்தம், பின் நவீனத்துவம் போன்றவை தமிழகத்தில் பேசப்பட்டபோது அதனால் அதிகம் ஈர்க்கப்பட்டவர் சை.பீர்முகம்மது. அவரது உரைகளில் அவை வெளிப்பட்டன. 1990களுக்குப் பிறகு எழுதிய சிறுகதைகளிலும் அவற்றை முயன்று பார்த்தார். ஆனால் அதற்குள் சிக்காத சிறுகதைகளே இன்று அவரது பங்களிப்பாக உள்ளன.
இந்நூல் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த சை.பீர்முகம்மதுவுடைய ‘அக்கினி வளையங்கள்’ பலவகையிலும் மேம்பட்ட நாவல்.
அக்கினி வளையங்கள்
அடிமைபோல முதலாளியிடம் அடிபணிந்து வாழும் முத்து கம்யூனிஸ தோழர்கள் மூலம் சுய விடுதலையை நோக்கி நகர்கிறான். தன் அடிமை தன்னைவிட்டு நீங்கியபின் தனக்கான அதிகாரம் கேள்விக்குள்ளானதால் சண்முகம்பிள்ளை எனும் நிலக்கிழார் வன்மத்துடன் அவன் அழிவை நோக்கி பின்தொடர்கிறார். இந்த இரு கதாபாத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று முறுக்கிக்கொண்டு நகரும் இடம் கம்யூனிஸ்ட் போராளிகள் சூழ்ந்துள்ள தோட்டக்காடு.
கம்யூனிஸ்டுகளின் தாக்குதல், கோவில் கும்பாபிஷேகம், தோட்ட வாழ்க்கை, கம்பங்களின் சூழல் என சை.பீர்முகம்மது துல்லியமான வர்ணனையுடன் நாவலை நகர்த்தியுள்ளார். நாவலின் பிரதான பலமே சண்முகம்பிள்ளை – முத்துவுடனான மோதல்தான். ஓர் அடிமை எவ்வளவு பலவீனமாக தன் எதிர்ப்பைக் காட்டமுடியுமோ அவ்வளவு மட்டுமே அவன் காட்டுகிறான். ஒரு யானை, தன் எஜமானனிடம் அடியை வாங்கிக்கொண்டு நீ என் முன் ஒன்றுமில்லை என கரும்பை மெல்வதுபோல தன் செயல்களால் அவமதிக்கிறான். ஒரு முதலாளிக்கு அவ்வகை எளிய சீண்டல் எவ்வளவு கொதிப்பை உண்டாக்குமோ அவ்வளவு காத்திரத்துடன் சண்முகம்பிள்ளை வடிக்கப்பட்டுள்ளார். அவன் கண்களில் அச்சத்தை, அடிமையின் பணிவை, முதலாளியின் கண்கள் மட்டுமே அறியும் புலன்களின் தளர்வை தேடிக்கொண்டே இருக்கிறார். அவனிடம் போலியாக அன்பு செலுத்தியாவது அதைக் கண்டுவிட முனைகிறார். அது கிடைக்காதபோது அவர் புகுந்துகொள்ளும் அமைதி முழுக்க வன்மத்தால் கொதிக்கிறது. ஓர் ஓநாய்போல சிறு அசைவும் இல்லாமல் தன் வேட்டைக்குக் காத்திருக்கிறார்.
‘அக்கினி வளையங்கள்’ அடிப்படையில் மலேசிய கம்யூனிஸ வரலாற்றைச் சொல்லும் நாவலல்ல. ஆனால் அவ்வரலாற்றில் முக்கியமான பகுதிக்கு இந்நாவல் அழுத்தம் கொடுத்துள்ளது. காலனித்துவ ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் நடக்கும் இக்கதை ஜப்பானுக்கு எதிராகப் போராட பிரிட்டனின் ஆதரவால் ராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் பெற்ற கம்யூனிஸ்ட்டுகள், உலகப் போர் முடிந்து மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டதும், மலாயா தேசிய விடுதலைப் படை (Malayan National Liberation Army (MNLA) என்ற பெயரில் பிரிட்டிஷுக்கு எதிராகத் திரும்பினர். மலாயாவை கம்யூனிஸ நாடாக்கும் முயற்சியில் இருந்த அவர்களில் குறிப்பிடத்தக்க விகிதத்தில் இந்தியர்களும் இருந்தனர். அந்தப் போராட்ட இயக்கத்துக்குள் இந்தியர்களின் பங்களிப்பைச் சொல்லும் முயற்சியாக இந்நாவல் முக்கியமானது. ஆனால் அவையெல்லாம் தகவல்களாக உள்ளன. இந்த நாவலை கம்யூனிஸ் போராட்டத்தைச் சொல்லும் நாவலாக வர்ணிக்க முடியாததற்கு, கம்யூனிஸ வாழ்வை ஒட்டிய எந்த நுண்தகவலும் இல்லை என்பதுதான் காரணம்.
காட்டுக்குள் உணவின்றிப் பசியில் வாடுகின்றனர் எனும் பரிதாப நிலைதான் கம்யூனிஸ்டுகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது. காடுகளில் அலைவதும் துப்பாக்கித் தாக்குதல்களும் அவ்வப்போது வந்துபோகின்றன. சொல்லப்போனால் கம்யூனிஸ்டுகள் உலாவும் அடர்ந்த காடென நாவலில் எங்குமே காண முடியவில்லை. பல்வேறு தருணங்கள் உரையாடல்களால் விளக்கப்படுகின்றன. பல சமயங்கள் முத்து காட்டுக்குள் எதற்காக நடந்துகொண்டிருக்கிறான் என்ற கேள்வியே எழுகிறது. அழுத்தமற்று அவனை உலாவ விட்டு அவன் பார்வை வழி சூழலை விளக்க மட்டுமே ஆசிரியர் பயன்படுத்திக்கொள்கிறார்.
ஆனால் நாவல் வலுப்பெறும் இடம் சண்முகப்பிள்ளையினால் நிகழ்கிறது. இராமசாமி செட்டியார் வழியாக மலேசிய வட்டிக்கடைக்கு வந்து ஒரு சீனரின் உதவியால் பெரு முதலாளியாக உயர்வது மிகச்சிறந்த காட்சியாக்கப்பட்டுள்ளது. வசதி உயர உயர அவர் பண்பில் காணப்படும் மாற்றங்களும் ஜெயாவை அவர் துணையாக்கிக்கொள்ளும் விதமும் சை.பீருடைய தேர்ந்த கதைசொல்லலால் விரிவான சித்திரங்களாகின்றன. ஜெயா அவரின் செல்வாக்கைக் காட்டும் ஒரு குறியீடு. அந்தக் குறியீட்டை அவர் இழப்பதும் அழிப்பதும் என சண்முகம்பிள்ளையின் உளவியல் நுண்மையாக அணுகப்பட்டுள்ளது. அவரது மோகமும், கோபமும், தத்தளிப்பும், குரூரமும் தனது செல்வாக்கின் அடையாளத்தைத் தக்க வைக்கும் முயற்சியின் வெவ்வேறு வண்ணங்களாகவே வந்துபோகின்றன. அதற்காக தன் மகன் உட்பட எதையும் பணயம் வைக்கிறார். ஒரு கதாபாத்திரத்தை இத்தனை அழுத்தமான வார்ப்புடன் மலேசிய நாவல்களில் காண்பது மிக அரிது. அவ்வகையில் சண்முகம்பிள்ளைக்கு என்றும் தனித்துவமான இடமுண்டு.
ஆனால் அதற்கு ஈடாக உருவாகியிருக்க வேண்டிய முத்து, தேசிங்கு கதாபாத்திரங்கள் மழுங்கடிப்பட்டுள்ளன. குறிப்பாக முத்து தன்னை வெறும் கருவியாக உணரும் இடமெல்லாம் அபாரமாக வெளிப்பட்டிருந்தாலும் கம்யூனிஸ தலைவர் சின்பெங் பாதுகாப்புக் குழுவில் அவனும் ஒருவனாக வருவதெல்லாம் சை.பீர்முகம்மதுவின் லட்சியவாத மனநிலையின் அபத்தச் சித்தரிப்பு மட்டுமே. உண்மையில் இந்நாவலின் பலவீனமான பகுதியென்பது சை.பீர் வலிந்து திணிக்கும் லட்சியவாதக் குரல்கள்தான். பாலியல் தொழிலாளியாக வரும் ஜெயாவையும் அவளுக்குத் துணையாக இருக்கும் ராஜலெட்சுமி என்ற திருநங்கையையும் புரட்சியாளர்களாக மாற்றத் துடியாய் துடிக்கிறார். அதுவரை ஆயுதம் ஏந்தாமல் எவ்வித பயிற்சியும் இல்லாமல் இருக்கும் முத்துவுக்கு இயக்கத்தில் முக்கிய இடம் கொடுக்கிறார். ஜாதிய அடையாளத்தால், தொழிலால் சமூகத்தில் இளக்காரமாகப் பார்க்கப்பட்டவர்களும் லட்சியப் போராட்டங்களை நிகழ்த்த முடியும் என்பதை நிறுவ முயலும் தருணங்கள் தோறும் நாவல் சறுக்குகிறது. அப்படி முடியாது அல்லது கூடாது என்பதல்ல. நாவலில் அதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகி வரவில்லை. எல்லாமே ஒரு நிமிட மனமாற்றத்தில் நிகழ்கின்றன. சண்முகம்பிள்ளைக்கு ஆசைநாயகியாக இருக்கும் ஜெயா திடீரென முத்துவின் பக்கம் சாய்கிறாள். ஜெயாவின் நிழலில் வாழும் ராஜலெட்சுமி போராட்டக் குழுவுடன் எளிதாக இணைகிறாள். சந்தர்ப்பங்களை சாதகமாக்கி வாழும் இவர்கள் இருவரும் உயிர் போகக்கூடிய சூழலிலும் லட்சியத்தைக் கைவிடாமல் இருக்கின்றனர். இந்த கற்பனாவாதம்தான் நாவலை பலவீனமாக்குகிறது.
மலேசிய நாவல் இலக்கியத்தில் ‘அக்கினி வளையத்திற்கு’ எப்போதும் ஓர் இடம் உண்டு என தாராளமாகச் சொல்லலாம். அதன் அத்தனை பலவீனங்களுக்கு மத்தியிலும் சண்முகம்பிள்ளையின் பார்வையில் வாழ்வு குறித்து முன்வைக்கும் தரிசனம் இந்நாவலை முக்கியமானதாக மாற்றுகிறது. கடலின் தழும்பும் கப்பலில் நின்றுகொண்டு அவர் கரையைப் பார்ப்பது அதுவரை அவர் வாழ்ந்த வாழ்வையும் பார்ப்பதுதான். அதில் அவருக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை. அவரது அந்திமக் காலத்தில் வாழ்க்கையில் அவர் ஆடியது மாபெரும் சூதாட்டமென உணர்கிறார். நாவலின் தொடக்கம் முதலே தனது நுண்ணுணர்வுகளை அவர் விசாரணைக்கு உட்படுத்துவதும் மனதின் நிகழ்வுகளுக்கு முரணான பாவனைகளை நிகழ்த்திக்காட்டுவதும் என்றே தனதுக்குத் தேவையானதை சாதித்துக்கொள்கிறார். தான் ஓய்ந்துவிட்டதாக அனைவரையும் நம்ப வைத்த அடங்கிய குரலுக்குப் பின் உள்ள ஓயாத வன்மத்தால் ஜெயாவைப் பலிவாங்கும்போது அவருக்கு வாழ்வு பற்றிய புதிய அபிப்பிராயம் வருகிறது. அக்கினி வளையத்தைத் தாண்டும் புலிக்கு அந்தச் சாகசம் சலிக்கும்போது அது எவரையும் தாக்குமென உணர்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் செய்த சாகசங்களுக்கு அர்த்தம் என்ன என அவர் இனி எப்போதும் திரும்பமுடியாத நிலத்தைப் பார்த்துக்கொண்டே சிந்திப்பது அற்புதமான காட்சி.
சை.பீர்முகம்மது மலேசிய இலக்கியத்திற்குச் செய்த கொடை என்றும் போற்றத்தக்கது. ‘வேரும் வாழ்வும்’ என்ற மலேசிய சிறுகதைகளின் பெருந்தொகுப்பு, பிற எழுத்தாளர்களின் நூல் பதிப்பு, தமிழக இலக்கிய ஆளுமைகளின் வழி தரமான இலக்கிய அறிமுகம் என தனிமனிதனாக ஓயாமல் உழைத்தவர். மலேசிய நவீனத் தமிழ் இலக்கியம் பிற நாடுகளில் அறிமுகமாக அவர் பங்களிப்பு முக்கியமானது. அரை நூற்றாண்டுக்கும் மேலான அவர் இலக்கியச் செயல்பாடுகளில் புனைவிலக்கிய ரீதியாக அவரது பங்களிப்பு என சில சிறுகதைகளையே சொல்ல முடிவது துரதிஷ்டம். 2019இல் வெளிவந்த அக்கினி வளையங்கள் ஒன்றே அக்குறையைப் போக்கும் பெருமுயற்சி எனலாம்.
மலேசிய நாவல்கள் குறித்த கட்டுரை:
செலாஞ்சார் அம்பாட்: புனைவின் துற்கனவு
ரெ.கார்த்திகேசு நாவல்கள்: மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்
எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள் : பாலுணர்வின் கிளர்ச்சி
துயரப்பாதை: நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ
இலட்சியப்பயணம்: சென்று சேராத முன்னோடி
ஆர்.சண்முகம், ஆ.ரெங்கசாமி மற்றும் சயாம் மரண இரயில்