அ.ரெங்கசாமி நாவல்கள்

‘சிவகங்கை தொடங்கி சிசங்காங்’ வரை என்ற தனது சுயவரலாற்று நூலில், நாவல் எழுதுவதற்கான உந்துதலை மலேசியத் தமிழர்களின் இக்கட்டான வாழ்வை வரலாற்றுப் பின்புலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து பெற்றதாகச் சொல்கிறார் எழுத்தாளர் அ.ரெங்கசாமி. இயல்பிலேயே இருந்த கலையார்வம் அவரை புனைவை நோக்கி தள்ளியது. தனது இளமைக் காலத்தில் தொடர்கதைகள், சிறுகதைகள் எழுதியதோடு வில்லுப்பாட்டு, மேடை நாடகம் என ஆர்வமாக இயங்கினார். கலை என்பது மனிதனுக்குப் படிப்பினையைக் கொடுக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் ரெங்கசாமி. ‘பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகனும்’ என இமயத் தியாகம் நாவல் முன்னுரையில் ரெங்கசாமி எழுதியுள்ளது கவனிக்கத்தக்கது.

அதன் அடிப்படையில்தான் தனது அறுபத்து மூன்றாவது வயதில் ‘புதியதோர் உலகம்’ என்ற முதல் நாவலை எழுதத் தொடங்கி எழுபத்து நான்காவது வயதில் ‘நினைவுச் சின்னம்’, எழுபத்து ஐந்தாவது வயதில் ‘லங்காட் நதிக்கரை’ மற்றும் ‘இமயத் தியாகம்’, எண்பதாவது வயதில் ‘விடியல்’, எண்பத்து ஏழாவது வயதில் ‘கருங்காணு’ என அடுத்தடுத்து ஆறு வரலாற்று நாவல்களை மலேசியத் தமிழ் இலக்கியத்துக்குக் கொடுத்துள்ளார்.

அ.ரெங்கசாமி நாவலுக்காகத் தேர்ந்தெடுத்த வரலாற்றுத் தருணங்கள் முக்கியமானவை. ‘புதியதோர் உலகம்’  ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மையான தோட்டத்து ஆண்கள் ரயில் தண்டவாளம் சயாமுக்குப் போட பிடித்துச்செல்லப்பட்ட பின்னர், ரப்பர் தோட்டத்தை நம்பியிருந்த எஞ்சிய மக்களுக்கு ஏற்பட்ட பசி, பஞ்சம், பட்டினி போன்றவற்றை விலாவாரியாகச் சொல்லிச் செல்கிறது. ‘நினைவுச் சின்னம்’ தாய்லாந்தில் தண்டவாளம் போடச் சென்ற மக்களின் துன்பக் கதையைப் பேசுகிறது. ‘லங்காட் நதிக்கரை’ ஜப்பானியர்கள் தோல்வியுற்று நாட்டை விட்டுச் சென்ற பின்னர் ஆங்கிலேயர்கள் மீண்டும் மலேசியாவுக்குள் வருவதற்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது கம்யூனிஸ்டுகள் நாட்டைக் கைப்பற்றி தமிழர்களுக்கு ஏற்படுத்திய சிக்கல்களை அலசுகிறது. ‘இமயத் தியாகம்’ இரண்டாம் உலகப் போரில் இந்திய சுதந்திர சங்கம், இந்திய தேசிய இராணுவத்தின் தோற்றம், நேதாஜியின் தலைமைத்துவம் என விரிவாகப் பேசும் நாவல். ‘விடியல்’ ஜப்பானியர்கள் வருவதற்கு முன்பே 1941ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் மேலாதிக்கத்தை எதிர்த்து தோட்ட மக்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டத்தையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கிள்ளான் கலகத்தையும் ஒட்டி எழுதப்பட்டது.  ‘கருங்காணு’ மேற்சொன்ன ஐந்து வரலாற்றுத் தருணங்களையும் தொகுத்து ஒரு குடும்ப அனுபவத்தின் வழி  சொல்லும் குறுநாவல்.

வரலாற்றில் இவ்வளவு முக்கியமான தருணங்களைக் கண்டடைந்து அவற்றை தரவுகளின் துணைகொண்டு புனைவாக்குவதென்பது வணக்கத்துக்குரிய முயற்சி. மறுபடி மறுபடி தோட்டப்புற வாழ்வையும்  மெல்லுணர்ச்சி கதைகளையும் பாசாங்கான லட்சியவாத குரல்களையும் எழுதிக்கொண்டிருந்த மலேசிய நாவலாசிரியர்களுக்கு மத்தியில் அ.ரெங்கசாமி தனது இரண்டாம் காலகட்டத்தில் வரலாற்று நாவலுக்கு கொடுத்துள்ள கவனமும் அதன் பொருட்டு அவர் செலுத்தியுள்ள உழைப்பும் போற்றுதலுக்குரியவை. ஆனால் நாவல் என்பது மொழியின் கலைவடிவம். அந்தக் கலைக்குள் அவர் உழைப்பு எவ்வகையில் இயந்து மிளிர்ந்துள்ளது என்பது குறித்த புரிதலும் அவசியமானது.

மூன்று குறுநாவல்கள்

அ.ரெங்கசாமியின் லங்காட் நதிக்கரை, விடியல், கருங்காணு ஆகியவை குறுநாவல் முயற்சிகள். நாவலுக்கேற்ற விரிவான சித்திரங்கள் இல்லாமல் சம்பவங்களைத் தொகுத்துச் சொல்லும் முறையிலேயே இவை மூன்றும் எழுதப்பட்டுள்ளன. அதிலும் சம்பவங்களை நிகழ்த்திக்காட்டாமல் ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்திடம் ‘இப்படி நடந்தது’ என  கதைகளாகச் சொல்ல வைப்பதன் மூலமே பெரும்பாலான காட்சிகள் நகர்கின்றன.

இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது காமிராவை அசையாமல் ஊன்றி வைத்துவிட்டு அவர்கள் பேச்சின் வழி காட்சிகளைப் புரியவைப்பது திரைப்படத்தில் ஓர் உத்திதான். பல மேதை திரைப்பட இயக்குனர்களும் அதை செய்துள்ளனர். ஆனால் அந்தக் காட்சியை ரசிகன் இன்னும் கூர்ந்து அறிய துல்லிய விவரணைகள் விரவி இருக்கும். அச்சூழலின் ஒளி, அடுக்கப்பட்டுள்ள பொருள்கள், வண்ணம், எல்லாமே அந்தச் சூழலுக்கு நியாயம் செய்யும்.

அப்படியான நிலைத்த உரையாடல் காட்சிகளே இந்தக் குறுநாவல்களை நிறைத்துள்ளன. ஆனால் எந்த விவரணையும் நுண்தகவலும் இல்லாமல், உரையாடலின் வழி சம்பவத்தை நிகழ்த்திக் காட்டுவதற்கான மொழியின் சாகசமும் கைக்கூடாமல் அவை ஆவாணப்படம்போல பதிவாகின்றன. இதனால்  நாவலின் உக்கிரமான பல சம்பவங்கள் சாவகாசமாக பிராஞ்சாவிலோ கோயிலிலோ அமர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கதை பேசும் பாங்கிலேயே சொல்லப்பட்டு சலிப்பேற்படுத்துகின்றன.

உண்மையில் இந்தக் குறுநாவல்களுக்குள் (விடியல், லங்காட் நதிக்கரை) நிகழும் காலகட்டம் முக்கியமானவை.  ஆங்கிலேயர்களை எதிர்த்து மலாயாவில் தமிழர்கள் நடத்திய முதல் போராட்டம் என்பது வரலாற்றில் அபூர்வமான தருணம். சீனதொழிலாளர்களுக்கு 70 சென்ட் நாள் சம்பளமாக உயர்த்தப்பட்டு, இந்திய தொழிலாளர்களுக்கு 50 சென்ட் சம்பளம் நிலைநிறுத்தப்பட்டபோது இருபது சென்ட் உயர்வுக்காக நடத்தப்பட்ட மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் அது. போராட்டத்துக்குக் காரணமாக இருந்த ஆர்.எச்.நாதனை 1941இல் போலிஸார் கைது செய்யவே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற கலவரத்தை அடக்க பிரிட்டிஷ் இராணுவம் துப்பாக்கி சூட்டையும் கைது நடவடிக்கையையும் பிரயோகித்தது. தோட்டத்து பாட்டாளிகள் பலர் இறந்தனர். கைது செய்யப்பட்டனர். தலைமறைவாகினர்.

அதுபோலவே சி ஜங்காங் எனும் கம்பத்தில் நுழைந்த கம்யூனிஸ்டுகள் செய்யும் கொடுமைகளே ‘லங்காட் நதிக்கரை’. அந்த நாவலில் சிறுவனாக இருந்து இளைஞனாக வளரும் முத்து என்பவன் தாந்தான் என்று ரெங்கசாமி பதிவு செய்துள்ளார். ஆட்சி செய்ய யாரும் இல்லாதபோது, அதுவரை தங்களுடன் நெருக்கமாக வாழ்ந்த சீனர்கள், கம்யூனிஸ்டுகளாக அதிகாரத்தைக் கையில் எடுத்தபிறகு  நிகழ்த்திய வன்முறைகள் தமிழர்கள் வாழ்வில் புதிய திருப்பம். அதிகாரத்தின் ருசி தெரிந்தவுடன் சீனர்கள் முற்றிலும் அந்நியர்களாக தமிழர்களுக்கு புலப்படத்தொடங்கிய காலக்கட்டம் அது. சிறுவனாக இருந்த ரெங்கசாமியின் பயம் மட்டுமே இந்த நாவலில் பதிவாகியுள்ளது. ‘கம்யூனிஸ்டுகள் எல்லாம் கெட்டவங்க’ என ரெங்கசாமி அந்தக் குழந்தை மனநிலையில் நாவலைச் சொல்லத் தொடங்குவதால் 1945 முதல் 1950 வரை ஆங்கிலேய ஆதிக்கத்துக்கும் மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்குமான உள்நாட்டுப்போர் ஒரு கம்பத்தில் நுழைந்து வன்முறைகள் நிகழ்த்திய கம்யூனிஸ்டுகளுடனான நேரடி அனுபவத்துடன் கரைந்துபோகிறது.

இத்தனை உணர்ச்சிமிக்க வரலாற்றுத் தருணங்களில்  ஒரு நாவலாசிரியர் கைவிடக்கூடாத இடங்களை ரெங்கசாமி அசட்டையாகத் தாண்டிச் செல்கிறார்.

‘விடியல்’ நாவலில் ஆங்கிலத் துரைக்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டத்தை  நடத்த தோட்ட மக்களிடம்  ஒரு குழுவினர் ஒரே இரவில் சம்மதம் பெறுகின்றனர். அதுபோலவே தோட்ட மக்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக நிர்வாகம் அழைத்து வரும் மலாய்கார தொழிலாளர்களின் மனதை தங்கள் சூழலை விளக்கி முறியடிக்கின்றனர். ஓரிரு வரிகளில் சொல்லப்படும் இந்தக் காட்சிகள்தான் நாவலில் விரிவாக இடம்பெற வேண்டியவை. இவைதான் அன்றைய மக்களின் மனநிலைகளை விளக்கக்கூடிய சந்தர்ப்பங்களைக் கொண்டவை. போராட்டத்தின் ஆதாரமான சவால்களைக்கொண்டவை. தினசரி வாழ்க்கைக்கு அல்லல்படும் ஒருவன் முன் வேலை நிறுத்தம் என்பதும் ஆங்கிலத் துரையை எதிர்ப்பதும் எத்துணை அசாதாரண அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும். தங்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்பை நழுவ விடுவதென்பது மலாய்க்காரர்களுக்கு எத்தனை எரிச்சலை உண்டாக்கியிருக்கும். முரண்படும் மனித மனங்களில் இருந்து உண்டாகும் எதிர்ப்பையும் அனுதாபத்தையும் சூழ்ச்சிகளையும் நாவலில் அவர் எங்கும் பதிவு செய்யவில்லை என்பதுதான் ஏமாற்றம்.  அதுபோலவே ‘லங்காட் நதிக்கரை’ நாவலில் நண்டு பிடிக்க மலாய்க்காரர்களுக்குத் தமிழர்களே சொல்லிக் கொடுத்தார்கள் போன்ற தமிழர் பெருமைகளும் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்துள்ள தமிழர்களை ‘அரைவேக்காடுகள்’ என்ற ஆசிரியரின் வசைகளும் உள்ளனவே தவிர ஒரு படி மேல் சென்று அதுகுறித்த நுண்சித்தரிப்போ கம்யூனிஸ்டுகளாக உள்ள தமிழர்களின் முரண்பட்ட அரசியல் பார்வையோ எங்குமே பதிவாகவில்லை.

ஒரு வரலாற்று நாவல் தகவல்களின் எல்லைகளை மீற முடியாது. ஆனால் வரலாற்றுக்குள் நாவலாசிரியனின் தேவை என்பது விடுபடல்களை தன் கற்பனையால் உருவாக்குவதுதான். தகவல்களாய் சொல்லப்பட்ட அந்த நிகழ்வுகளில் மானுட உணர்ச்சிகளின் வீரியம் என்ன என்று விவரணை செய்வதில்தான் கலைஞனின் தேவை உள்ளது. ஆயிரக்கணக்கான புள்ளிகள்தான் வரலாற்றுத் தகவல் என்றால் அந்தப்புள்ளிகளை இணைத்து, கோடுகளாக்கி உயிர்ப்பான ஒரு காட்சியை உருவாக்கிக்கொடுப்பதுதான் வரலாற்று நாவலாசிரியனின் பணி. அ.ரெங்கசாமியின் மூன்று குறுநாவல்களிலும் உள்ள அடிப்படையான பலவீனம் அவர் ஒவ்வொரு புள்ளியைச் சுற்றியும் சிறு சிறு வட்டங்களை தனித்தனியாகப் போட்டிருப்பதுதான். வரலாற்றுத் துணுக்குகள் கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படுகின்றனவே தவிர; அவை கோடுகளால் இடைவெளியே நிரப்பி உயிர்ப்பான காட்சியாகவில்லை. 

‘லங்காட் நதிக்கரை’, ‘விடியல்’ ஆகிய குறுநாவல்களில் ஆசிரியர் தலையீடு அதிகம். ‘சப்பானிய படையெடுப்பு ஒருவகையில் தீங்கிழைத்தது என்று கருதினாலும் அந்தப் படையெடுப்பே ஆசிய மக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அந்த வகையில் மலாயா மக்களின் மனத்திலும் துணிச்சலும் மறுமலர்ச்சியும் விடுதலை உணர்வும் வேரூன்றிக்கொண்டன. புதிய சிந்தனையுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர் மலாயா மக்கள் – (லங்காட் நதிக்கரை பக் 70′) என ஆசிரியரே நேரில் வந்து மக்களின் மனநிலையை விளக்குகிறார். ‘விடியல்’ நாவலில் பெரும்பாலும் ஆசிரியரின் கூற்றுகளே கட்டுரைத்தன்மையில் நாவலெங்கும் நிரம்பியுள்ளது.

அ.ரெங்கசாமியின் இவ்விரு நாவல்களும் பலவீனமாக இருக்க மற்றுமொரு காரணம் தமிழ் அடையாளத்தை வகுத்துக்காட்டுவதிலும் அதில் மேன்மையை உருவாக்கி நிலைநாட்டுவதிலும் அவர் கொண்டிருக்கும் மையமான கவனமே ஆகும். அவ்வாறு ஒரு அடையாளத்தை நோக்கி படைப்பாளன் குறுகும்போது அவன் மனமும் குறுகிப்போகிறது. குறுகிய மனதில் வரலாற்றை நோக்கிய விசாலமான பார்வை இருப்பதில்லை. ‘பிறர் வாழ்வதற்காகத் தன்னையே வருத்திக்கொள்பவன் தமிழன். தனது முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில்கொண்டு உழைப்பவன் சீனன் (லங்காட் நதிக்கரை – பக் 12)’ என நாவல் தொடங்கும்போதே ஒட்டுமொத்தாக ஒரு வரையறையைக் கொடுத்து விடுகிறார் ரெங்கசாமி. இனி இந்த வரையறையைச் சுற்றிதான் நாவல் நகரும் என்றால் ஒரு வாசகன் அதை வாசிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியே எதிர்கொள்கிறது.

பண்பாட்டில் உள்ள உள்முரண்பாடுகளையோ உள்விவாதங்களையோ கணக்கில் கொள்பவன்தான் படைப்பாளி. வரலாற்றின் சில மேன்மையான தருணங்களை மட்டும் தொகுத்து அவையே தமிழ்ப் பண்பாடு என்று கூறும் குறுக்கலான மனப்போக்கு படைப்புக்கு எதிரானது. இந்த அறைகூவல் பாணிக்கு எதிராக நாம் எளிய கேள்விகளை முன்வைக்கலாம். இதே காலக்கட்டத்தில் பினாங்கில் வட்டிக்கடை நடத்தி பலரது நிலங்களை வாங்கிக்குவித்த, வட்டிகளால் எளிய மக்களை சிரமத்திற்குள்ளாக்கிய நகரத்தார்களும் தமிழர்கள்தான்.  தோட்டங்களில் கறுப்புத் துரைகளாகத் தமிழர்களை அடித்து அவமதித்த யாழ்பாணத்தவர்களும் தமிழர்கள்தான். எனில், ரெங்கசாமியின் கூற்றுக்கு எவ்விதமான முக்கியத்துவம் நாவலில் உள்ளது? அ.ரெங்கசாமி சமூகப் பண்பாட்டுக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகத் தன்னை இறுக்கி வைத்துக்கொள்கிறார். சமூகத்தை ஒட்டிய சுயவிமர்சனம் இல்லாமல் தன் மீது அடையாளங்களை அள்ளிப் போர்த்திக்கொள்கிறார். அவரது இந்த ஆளுமை அவரது புனைவிலும் எதிரொலிக்கிறது. அது விடியல், லங்காட் நதிக்கரை என்ற பலவீனமான இரு குறுநாவல்கள் உருவாகக் காரணியாகிறது.

இரு நாவல்கள்

‘புதியதோர் உலகம்’,  ‘நினைவுச்சின்னம்’ ஆகிய நாவல்கள் கவனிக்கத் தகுந்த முயற்சிகள். இரண்டும் ஒரே காலக்கட்டத்தை ஒட்டியே பேசுகின்றன. சயாமில் இரயில் போடச்சென்ற துன்ப வரலாறு ஒரு பக்கமென்றால் அனாதைகளாகத் தோட்டத்தில் விடப்பட்டவர்களின் பசியும் வறுமையும் மறுபக்கம்.  இந்த இரண்டு இழைகளையும் பின்னி எழுதியிருந்தால் விரிவான அனுபவத்தைச் சொல்லும் அற்புதமான நாவலாக உருவாகியிருக்கும். ஏறக்குறைய இந்த செய்நேர்த்தியில் உருவான குறுநாவல்தான் சா.அ.அன்பானந்தனின் ‘மரவள்ளிக்கிழங்கு.’

‘புதியதோர் உலகம்’ நாவலில் கருப்பையா கங்காணி நாவலின் மையப் பாத்திரமாக இருக்கிறார். பெரும்பாலான சம்பவங்கள் அவரைச் சுற்றிதான் நிகழ்கின்றன. அவரையும், தோட்ட மக்களையும் ஜப்பானியரிடம் சயாம் மரண இரயில் பாதை போட ஆள் பிடித்துக்கொடுக்கிறார் அத்தோட்டத்து கிராணி. இருப்பினும், இரயிலில் சயாம் போகும்போது கருப்பையா தைப்பிங்கில் தப்பி மீண்டும் தோட்டத்திற்குச் செல்லாமல் அருகிலிருக்கும் கம்பத்திற்கு சென்று வாழ்கிறார். தைப்பிங்கிலிருந்து தப்பிக் காட்டுப்பாதையில் அவர் கம்பத்தை அடைய மேற்கொள்ளும் பயணம் சுவாரசியமானது.

இந்நாவலின் கதை கோலாக்கிள்ளான், பண்டமாரன், துலுக்குஞ்சான் பகுதிகளில் நடைபெறுவதாக உள்ளது. ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கொடுமைகள், பசி, பஞ்சம், பட்டினி போன்றவற்றை விலாவாரியாகச் சொல்லிச் செல்கிறார் ரெங்சசாமி. இவற்றோடு சில கிளைக் கதைகள் உள்ளன. காட்டுப்பன்றி வேட்டை, பூர்வ குடியினரின் பேய் நம்பிக்கைகள், காட்டில் மாட்டிக்கொண்ட கதை என துயரங்களை எதிர்கொள்ளும் விதத்தை மெல்லிய குதூகலத்துடன் சொல்லிச் செல்கிறார்.

ஆம் குதூகலம்தான். நாவலின் பெரும்பாலான பகுதி உணவுக்கான தேவையை எவ்வாறு கருப்பையா கங்காணியும் அவரைச் சார்ந்தவர்களும் பூர்த்தி செய்துக்கொண்டனர் என்பதையே விளக்குகிறது. வறுமை, பசி, பிணியைவிட பல்வேறு சிக்கலான சூழல்களை உருவாக்கி அதிலிருந்து விடுபடும் சுவாரசியங்கள்தான் நாவலில் பெரும்பாலும் வருகின்றன. ஒரு கட்டத்தில் நாவல் ஒரு கொடுமையான காலச் சூழலில் நிகழ்கிறது என்பது மறந்து  ஒரு தோட்டத்தில் வாழும் மனிதர்களின் சுவாரசியமான அனுபவங்கள் என்றே வாசிப்பு தொடர்கிறது.

உண்மையில் அ.ரெங்கசாமியிடம் ஏராளமான தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. பஞ்ச காலத்தில் சுடுகாட்டுக்கு வரும் பிணங்களின் துணிகளைத் திருடி விற்கும் நுட்பம், ரப்பர் மரங்களுக்கு இனி வேலையில்லை என அறிந்தபோது நிரைகளுக்கு இடையில் உணவுக்காக பயிரிடும் பணிகள், ஜப்பானியர்களால் அமுல்படுத்தப்பட்ட ரேஷன் கார்ட் முறை, கல்லைச் சுமந்து விடியும் வரை நிற்பதும் தென்னை மரம் ஏறி இளநீர் அறுப்பதும் என ஜப்பானியர்கள் கொடுக்கும் வினோதமான தண்டனைகள், மரவள்ளித் தழை, மீனா தழையென பஞ்சத்தில் அறிமுகமாகும் புதிய கீரைகள், எலி சமையல் என நாவல் முழுவதும் அவர் ஆங்காங்கு தகவல்களை உதிர்த்துச் செல்கிறார். ஆனால் ஒரு பஞ்ச காலத்தில் கைவிடப்பட்ட மக்களின் வழி எதையும் காட்சியாகச் சொல்லி அவற்றை வாசகனுக்கு அனுபவமாக மாற்றும் பொறுப்பை அவர் ஏற்கவில்லை.  வழக்கமான அவரது அலுப்பேற்படுத்தும் உரையாடல்களில் அனைத்தும் நிகழ்கின்றன. யாரோ இன்னொருவரிடம் எங்கோ நடந்ததை சொல்வதாகவே அவற்றை திணித்தபடி செல்கிறார்.  ‘இருட்டுக்குள் யாரோ வீட்டை நோக்கி நடந்து வந்தார்கள்’ என நாவலில் பல இடங்களில் வருகிறது. அப்படி வருபவரை அமர வைத்து இன்னொருவர் கதை சொல்லத் தொடங்குவார் என வாசகன் முடிவெடுத்துவிடலாம்.

அ.ரெங்கசாமியின் நாவல்களில் மனதுக்குள் நிகழும் போராட்டங்கள் என்றும் அந்தரங்க எண்ணங்கள் என்றும் எதுவுமே இல்லை. ஒருவன் என்ன சொல்கிறானோ அதையே சிந்திப்பவனாகவும் இருக்கிறான். நாவலின் கதாபாத்திரங்கள் இராணுவ கட்டளைக்கு இணங்கியவர்கள்போல எந்தச் சூழலிலும் நெறிமுறைகளுடன் வாழ்கின்றனர். எத்தகைய துன்பத்திலும் ஒழுங்கை கடைப்பிடிக்கின்றனர். ஒன்றுபோலவே சிந்திக்கப் பழகியவர்களாக உள்ளனர். எவ்வித தர்க்கமும் இல்லாதவர்களாக வாழ்வதால் பல இடங்களில் அவர்களுக்கென்று மனதும் சிந்தனையும் உண்டா என்பதுகூடச் சந்தேகமாக உள்ளது.

ரெங்கசாமி ஒரு வரலாற்றை தனக்கு சாதகமான இடத்தில் இருந்து சொல்லவே முயல்கிறார். ‘நினைவுச் சின்னம்’ இரயில் பாலம் போடச் சென்ற தமிழ்ப் பாட்டாளிகளின் சோகக் கதைகளை மட்டுமே தொகுத்துக் கூறும் முயற்சி என்றால் ‘புதியதோர் உலகம்’ தோட்டத்தில் வாழும் ஒரு சிறு குழுவினரின் அனுபவங்களைச் சொல்லும் நாவல் மட்டுமே. இரயில் தண்டவாளம் போடும் பணியில் பலரும் பிடித்துச் செல்லப்பட்டபின் கணவனை இழந்து நிற்கும் பெண்கள், அனாதையான சிறுவர்கள், நோயுற்ற முதியவர்கள், அங்கவீனர்கள் என எஞ்சியிருக்கும் பிற தோட்ட மக்களைப் பற்றி எவ்வித கேள்வியும் நாவலில் உருவாகவே இல்லை. (ஓரிடத்தில் மட்டும் கர்ப்பிணிப் பெண் வருகிறாள்) குறிப்பாக சிறுவர்களுக்கு நாவலில் எந்த இடமும் இல்லை. சமூகம் என்பது எல்லாராலும் ஆனதுதான். ரெங்கசாமி தொகுத்த தகவல்களைச் சொல்ல வசதியான கதாபாத்திரங்களை உருவாக்குகிறார். அவர்கள் வழி தகவல்களை ஒப்புவிக்கிறார். அதற்கிடையில் தமிழர் வீரம், ஒழுக்கம், கற்பு, நேர்மை என அனைத்துமே வந்து போகின்றன.

ஒரு நாவல் எழுத்தாளன் ஆய்வேடு எழுதுவனிலிருந்து வேறுபட்டவன். அவன் ஆய்வேடு எழுதுபவனைப் போல நோக்கத்தை வரையறுத்துக்கொண்டு நாவலை எழுதும்போது அதன் எல்லைகள் சுருங்கி விடுகின்றன. அந்த நோக்கத்தை மீறி வேறொன்றும் நிகழ்வதே இல்லை. கதாபாத்திரங்களை முரண்பாடான சூழலில் இயங்கவிட்டு அதன் வழி எழுத்தாளன் அடையும் வாழ்வு குறித்த தனித்த அபிப்பிராயங்கள் என ரெங்கசாமியின் ஐந்து நாவல்களிலும் எதுவும் இல்லை. ஆனால் அவை வரலாற்றுப் புரிதலுக்கு ஒரு துணைநூல்களாக உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை.

இமயத் தியாகம்

ஆச்சரியமாக தனது ஐந்து நாவல்களில் உள்ள குறைபாடுகளை களைந்த முயற்சியாக அ.ரெங்கசாமியின் ‘இமையத் தியாகம்’ நாவல் உள்ளது. 370 பக்கங்களைக் கொண்ட இமயத் தியாகம் மூன்று பாகம் உடையது. ஒவ்வொரு பாகமும் மிக மெல்லிய இடைவெளியைக் கொண்டவை.

முதல் பாகம் : ஜப்பானிய படை மலாயாவுக்குள் புகுந்து பரவுவது, ஜப்பானியர்களின் போர் தந்திரம், இந்திய தொண்டர் படை தோற்றம் என செல்கிறது.

இரண்டாம் பாகம் : இந்தியச் சுதந்திரச் சங்கம், இந்திய தேசிய இராணுவத்தின் தோற்றம், நேதாஜியின் தலைமைத்துவம் இவற்றினூடே தமிழ் வீரர்களின் தியாகங்கள் என உயிர்ப்போடு நகர்கிறது.

மூன்றாம் பாகம் : ஐ.என்.ஏ வீரர்கள் இந்தியப் போர் எல்லையை நோக்கிப் பயணிப்பது, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பின்னடைவுகள் என விவரித்து நேதாஜி மரணத்துடன் நிறைவு பெருகிறது.

அ.ரெங்கசாமி தனது இதர நாவல்கள் போலவே இதிலும் ஒரு கள ஆய்வாளராக பல ஐ.என்.ஏ வீரர்களை அணுகி, தகவல்களைத் திரட்டியதோடு ஆங்கிலம், தமிழ் என பல நூல்களையும் வாசித்து ஆய்வு செய்த பின்னரே நாவலை உருவாக்கியுள்ளார். காலம், பெயர், சூழல் என மிகத்துல்லியமாக நாவல் நெடுகிலும் அவர் குறிப்பிடுவது அதன் நம்பகத்தன்மையை அதிகரித்தப்படியே செல்கிறது. ஆனால் வழக்கமான தன் தகவல்களைத் தொகுக்கும் விதமாக இல்லாமல் சவாலான பல பகுதிகளில் புகுந்து அசாதாரணமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கிறார் ரெங்கசாமி.

அசைக்க முடியாது என நம்பப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜியம் கிழக்காசியாவில் ஜப்பான் அரசால் தகர்க்கப்படுகிறது. உலக வல்லரசாக ஜப்பான் தனது சாம்ராஜியத்தை விரிவுபடுத்த எண்ணும் போது பிரிட்டிஷ் காலனியின் கீழ் உள்ள இதர நாடுகளை அதிலிருந்து விடுவிக்கவோ அதன் மூலம் தன்னகப்படுத்தவோ எண்ணியிருக்கிறது. ஜப்பானியர்களுடன் போரிட பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்த இந்திய நாட்டு இராணுவ வீரர்கள் மலாயாவில் குவிக்கப்படுகிறார்கள். அந்த இந்திய நாட்டு இராணுவ வீரர்களை இந்திய சுதந்திரச் சங்கத்தைச் சேர்ந்த மலாயா தமிழர்கள் தங்கள் பிரச்சாரத்தின் மூலம் பிரிட்டிஷாருக்கு எதிரான மனநிலையை உருவாக்கி சரணடையவும் வைக்கிறார்கள். அதன்பின்னர் ஐ.என்.ஏ  (இந்திய தேசிய படை)தோற்றம் கண்டது. இந்திய தேசிய படை மூலம் பர்மாவுக்குள் புகுந்து இந்திய நாட்டைக் கைப்பற்ற திட்டமிடுகின்றனர். முதலில் இப்படையைத் திரட்டுவதில் முனைப்பாக இருந்த ராஷ் பிகாரி போஸ் தனது வயோதிகம் காரணமாக இப்படையை முன்னெடுத்துச் செல்ல நேதாஜி அவர்களே பொறுத்தமானவர் என முடிவெடுக்கிறார். ஜெர்மனில் தலைமறைவாகியிருக்கும் நேதாஜி புதிய உத்வேகத்தோடு மலாயா வந்து படை திரட்டிச் செல்கிறார். இறுதியில் போருக்கே உண்டான வெற்றிகளும் பலிகளும் தியாகங்களும் என நாவல் ஓர் உச்சமான இடத்தில் சென்று முடிகிறது.

பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்களிடமும் ஆங்கிலேயர்கள் குறித்த நிறைய புகார்கள் இருக்கின்றன. ஜப்பானியர்கள் மலாயாவை முற்றுகையிடும் காலங்களில் ஆங்கிலேயர்கள் வகை வகையான உணவுகளுடன் பங்களாக்களில் வசதியாக இருக்க, இந்திய இராணுவத்திற்கு மீன் டின்னும் அவித்த சோறும் மட்டுமே வழங்கப்படுகின்றது. கடும் குளிரில் அவர்கள் அவதிப்படுகின்றனர். இந்தப் பாரபட்சம் அவர்களை ‘ஜப்பானியர்கள் இந்தியர்களின் நண்பர்கள்’ என்ற வாசகத்தை எளிதில் ஏற்க வைக்கிறது. ஆனால் சில இந்திய இராணுவத்தினர் சரணடையச் சம்மதிக்கின்றனரே தவிர ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் செயல்படுவதில் தயக்கம் காட்டுகின்றனர். ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் வழங்கிய சத்தியப்பிரமாணத்தை அதற்கு காரணமாகக் காட்டுகின்றனர். மலாயா, ஜப்பான் வசம் சென்றதற்கு இந்திய இராணுவத்தினரின் மனமாற்றம் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது.

இதேபோல ஐ.என்.ஏ படையில் இணையும் பாட்டாளித் தமிழர்களின் நிலையையும் நாவல் தொடர்ச்சியாக விளக்கியபடி செல்கிறது. அவர்களில் பெரும்பாலோர் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். ஒருமுறைகூட இந்தியாவுக்குச் செல்லாதவர்கள். ஆயினும் அவர்கள் இந்திய விடுதலைக்காகத் தங்கள் உயிரைப் பணையம் வைக்கத் தயாராக இருக்கின்றனர். அவர்கள் கால்கள் மலாயாவில் இருந்தாலும் மனம் முழுதும் இந்தியாவில் இருக்கின்றது. இவர்களின் ஒட்டுமொத்த மனப்போக்கின் குறியீடாக இளங்கோ எனும் இளைஞன் வருகிறான். நாவலின் மூன்று பாகங்களையும் மெல்லிய இழையால் இணைக்கிறான். ஓர் இளம் வீரனாகவே நாவலில் அவன் சித்தரிக்கப்படுகிறான். காப்பார் கலகத்தில் பங்கெடுத்த காரணத்தால் ஆங்கிலேயர்களால் தேடப்படும் இளங்கோ, ஜப்பானியர்களின் வருகைக்குப் பின் அவர்களுக்கு ஆதரவாக இந்திய சுதந்திரச் சங்கத்தில் இயங்குகிறான். ஐ.என்.ஏ படைக்கு வீரர்களை இணைப்பதில் பெரும் பங்கு ஆற்றுகிறான். ஜப்பானியர்களுக்காகவும் ராஷ் பிகாரி போஸுக்காகவும் சக நண்பர்களிடம் எல்லாவகையிலும் வாதாடுகிறான். இதுபோன்ற மலாயாத் தமிழர்களின் முயற்சியால் ஐ.என்.ஏ படையில்  ஏராளமான பாட்டாளித் தமிழர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டிருந்த இந்திய இராணுவத்தினர் ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் இருக்கின்றனர். ஐப்பானியர்களிடம் சரணடைந்து திடமான முடிவுக்கு வரமுடியாத அவர்களின் இரண்டுங்கெட்டான் நிலையைக் கண்டு இளங்கோ ஒரு தருணம் “மலாயாவில் பத்து இலட்சம் இந்தியர்கள் இருக்கிறோம். இவர்களில் சுமார் நான்கு லட்சம் இளைஞர்கள் இருக்கிறோம். இவர்களில் இரண்டு லட்சம் இளைஞர்கள் இ.தே.இராணுவத்தில் சேர்ந்தாலே போதும். வெள்ளையர்களை இந்தியாவில் இருந்து விரட்டி விடுவோம். இந்த மண் பொம்மைகளை நம்பிப் பயனில்லை” என்கிறான். இந்திய இராணுவத்தினருக்கும் மலாயாவில் பிறந்த தமிழர்களுக்கும் இருக்கின்ற மனப்போக்கை ஓரளவு இந்த வசனங்களின் வழி கணிக்கலாம்.

இ.சு.சங்கத்தின் சேமிப்புக்கிடங்கில் இந்திய இராணுவத்திற்கான உணவு, உடை, மருந்து போன்ற பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. அங்கிருந்த அரிசி மூட்டையில் இ.சு.சங்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்க அதை மாற்றி ஜப்பானியர் பெயரால் வழங்கப்பட வேண்டும் என ஜப்பானியர்களால் இந்தியர்கள் மிரட்டப்படுகிறார்கள். இப்பிரச்சனை பெரிதாக இந்தியர்கள் சார்பாக கேப்டன் நாதன், சாமிப் பிள்ளை ஆகியோரும் ஜப்பானியர் சார்பாக கர்னல் இவாகுரா, சைத்தோ, ஒமத்தோ ஆகியோரும் பேச்சு வார்த்தை நடத்தி சமரசத்திற்கு வருகின்றனர். அங்கு நடக்கும் அவர்களின் சம்பாஷனை வழி ஜப்பானியர்கள், இந்தியர்களைத் தங்கள் அடிமைகளாகவே நடத்த எண்ணினர் என்பதற்கும் இந்தியாவைக் கைப்பற்ற இந்தியர்களின் நட்பை அவர்கள் பேண வேண்டி இருந்த கட்டாயத்தையும் துல்லியமாக ரெங்கசாமி பதிவு செய்துள்ளார்.

அதேபோல படையை முன்னெடுத்துச்செல்லும் ஒரு வட இந்தியன், ‘கூலி வேலைக்கு வந்தவர்கள் இராணுவ உடை அணிவது வேடிக்கையாக இருக்கிறது’ எனக் கேலி செய்ய கைகலப்பு மூழ்கிறது. ஐ.என்.ஏ வின் வெற்றி இந்தியர்களின் ஒற்றுமையில்தான் இருக்கிறது என நேதாஜி உட்பட ஏனைய மேலதிகாரிகளால் வலியுறுத்தப்படுகிறது. தமிழர்கள் தங்கள் தன்மான உணர்வுகளை அடக்கிக்கொள்கிறார்கள். ஒற்றுமை, போராட்டம் போன்ற வார்த்தைகள் தனிமனிதர்களின் உணர்வுகளை மழுங்கடிக்க எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என நாவல் முழுதும் சம்பவங்கள் விரவிக்கிடக்கின்றன.

இமயத் தியாகத்தில் வரும் தோட்டத்தொழிலாளர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என முனைப்புக் காட்டுகின்றனர். நீண்ட அவர்களின் பயணம் பல இடையூறுகளைக் கொண்டிருக்கின்றது. பல போர் தந்திரங்களால் அடுத்தடுத்த எல்லைகளுக்குத் தாவிச் செல்லும் அவர்கள் பர்மாவில் நுழைகிறார்கள். மழைக்காலம் நெருங்கிவிட்டதால் ‘இம்பாலை’ கைப்பற்ற தீவிரம் காட்டுகிறார்கள். அவ்வாறு கைப்பற்றினால் உணவுக்கும் தங்கும் இடத்திற்கும் 3 மாதங்கள் தொடரப்போகும் மழையால் பிரச்சனை இருக்காது. அதற்குள்ளாக மழைக் காலம் தொடங்க, குளிரால் வீரர்கள் வாடுகிறார்கள். வனத்தில் நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. பாதை தவறுகிறார்கள். பிரிகிறார்கள். இரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளால் இறக்கிறார்கள். பசியால் மடிகிறார்கள். அவர்களின் மாட்டு வண்டிகள் சகதிகளில் சிக்கி போர் விமான குண்டுகளால் நாசமாகின்றன. இந்நிலையில் போரிலிருந்து பின்வாங்கி தற்காப்பு யுத்தம் மட்டும் நடத்த உத்தரவு வருகிறது. அவர்களது அத்தனை சிரமங்களும் அர்த்தம் இழந்து போகின்றன. நேதாஜியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு பின்வாங்கும் போதும் தாங்கள் வெற்றி அடைந்து விட்டதாகவும் புதிய வியூகத்தை நேதாஜி வகுத்துக் கொடுப்பார் என்றும் தங்களுக்குள் பாராட்டிக் கொள்கின்றனர். அது அவர்களுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது.

தனது பிற நாவல்களைப் போலல்லாமல் அ.ரெங்கசாமி விரிவான போர்க்காட்சியுடன் நாவலை தொடங்குகிறார். ஜப்பானியர்கள் மலாயாவின் ஒவ்வொரு ஊரையும் படிப்படியாக  கைப்பற்றும் விதம் தொடங்கி, சிங்கப்பூரைக் கைப்பற்றுவதில் ஏற்படும் திணறல் என விரிகிறது. போர்க் கப்பல்களும், போர் விமானங்களும், போரின் அணுகுமுறைகளும், தந்திரங்களும் அதன் சாகசங்களும் ஒருபுறம் விவரிக்கப்பட, மறுபக்கம் போரில் இயல்பாக ஏற்படும் சந்தேகமும் வஞ்சகமும் துரோகமும் பிணைந்து செல்கின்றன. குண்டுகள் பொழிவதும், துப்பாக்கிகள் சுடுவதும் ஒருபுறம் நடக்க வஞ்சகத்தால், பிரச்சாரங்களால் பிரிட்டிஷ் ராணுவத்தை பலவீனப்படுத்தும் இன்னொரு சரடும் அதை ஒட்டியே செல்கிறது. உண்மையில் ஒரு போரின் சூழலை எழுத்தில் நிகழ்த்திக்காட்டுவது பெரும் சவால். அ.ரெங்கசாமி நாவலின் முதல் பகுதியில் அதை சிறப்பாகச் செய்துள்ளார்.

அதுபோலவே போர்ச் சூழல் வளர்ந்து நேதாஜியின் வழி ஐ.என்.ஏ படை டில்லி நோக்கி புறப்படுகிறது. ஜப்பானியர்களின் போர் வெறி, நேதாஜியை இழக்கும் ஹிட்லரின் மனநிலை, ஜப்பானியர்களைச் சந்தேகிக்கும் இந்திய ராணுவத்தின் குழப்பம், இந்தப் போராட்டத்தில் தாங்கள் யார் என சந்தேகத்துடன் போருக்கு பயணிக்கும் மலேசியத் தமிழர்களின் குமுறல், தோல்விக்குப் பின்பு இந்திய ராணுவத்தை ஜப்பானிடம் ஒப்படைக்கும் பிரிட்டிஷ் அரசின் அவமானம் என ரெங்கசாமி ஒரு சூழலின் அனைத்து திசைகளிலும் பயணிக்கிறார். காட்சிகளுக்குப் பல வண்ணங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

இத்தனை பிணக்குகளும் அழிவுகளும் கோஷங்களும் எவ்வாறு அர்த்தமற்றுப் போகின்ற என நாவலின் இறுதிப் பகுதி முடிகிறது. போர் என்பது தனி மனிதர்களை மறக்கடிப்பது. அவ்வாறான ஒரு மனோநிலையை ஏற்படுத்துவது மூலமே அது தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. அவர்கள் மரணிக்கவே படைக்கப்பட்டவர்கள் போல காட்சி கொடுக்கிறது. அதற்கு ஏதுவாக அவர்களின் அடையாளங்களை அழிக்கிறது. அங்கு போரை முன்னெடுப்பவரின் வாழ்வும் அவரின் வரலாறும் மட்டுமே அவசியம் பெறுகின்றன. நிர்ப்பந்தத்தினாலும் சம்பளத்திற்காகவும் உரிமைக்காகவும் போரில் பங்கெடுக்கும் அல்லது பணயம் வைக்கப்படும் எளிய மனிதர்களின் உயிர் குறித்து வரலாற்றில் எவ்வித அவசியமும் இல்லாமல் போகிறது. வரலாறு பெரும்பாலும் அதிகாரம் உள்ளவர்களால் அதிகாரம் உள்ளவர்களுக்காக புனையப்படுவதாகவே உள்ளது. போரில் உயிரிழப்புகளும் தியாகங்களும் லட்சியங்களும் அதில் பங்கெடுக்கும் எளிய மனிதர்களுக்கு எப்போதும் போல இங்கும் அர்த்தமிழந்து போகின்றது.

நாவலை வாசித்து முடித்தபோது ஒரு காலத்தில் வாழ்ந்து முடித்த அகச்சோர்வு தொற்றிக்கொண்டது. வரலாற்றின் முன் லட்சியங்களின் தியாகங்களின் அர்த்தம் என்ன என்ற கேள்வி முன்வந்து நிற்பதே ‘இமயத் தியாகம்’ நாவலை மேம்பட்ட படைப்பாக்குகிறது.

அ.ரெங்கசாமி எப்போதும் களப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர். தனது எண்பதாவது வயதில் கூட வீடு வீடாகச் சென்று இடைநிலைப்பள்ளி மாணவர்களை தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுக்கச்சொல்லி பிரச்சாரம் செய்தவர். அவர் சிந்தனையும் செயல்களும் நேர்மையானவை. உள் நோக்கங்கள் இல்லாதவை. மொழி, இன உணர்வு அவரை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் தேசிய அரசியலை நோக்கி தள்ளியது. அதன் சுவடுகளை நாவல்களில் பல்வேறு இடங்களில் காணவும் முடிகிறது.

கொள்கைகளைச் சொல்ல அறிக்கைதான் பொருத்தமான வடிவம். கலைக்கு நியாயமாக நடத்தல் என்பது தன்னை படைப்புக்குள் சுக்குநூறாக உடைத்துக்கொள்வதுதான். அதில் உள்ள பாத்திரங்களை தனக்கு விரோதமாகவும் பேச வைப்பதுதான். ஆழ ஆழச்சென்று நமக்குள் இருக்கும் வெவ்வேறு நிஜங்களை தட்டி வெளியில் இழுத்து வருவதுதான். அவ்வனுபவே படைப்பு நிகழ்ந்து முடிந்தப்பின் படைப்பாளிக்குள் அந்தரங்கமான மாற்றங்களை உருவாக்கிக்கொடுக்கிறது. ரெங்கசாமி ‘இமயத் தியாகம்’ நாவலில் மட்டும் அந்தச் சவாலை ஏற்க முயன்றுள்ளார். அது அவர் நாவல் எழுத வந்த நோக்கத்தை அர்த்தமுள்ளதாக்குகிறது. அதுவே மலேசிய இலக்கியத்துக்கு அவர் கொடுத்துள்ள கொடையாகவும் ஆகிறது.

மலேசிய நாவல்கள் குறித்த கட்டுரை:

செலாஞ்சார் அம்பாட்: புனைவின் துற்கனவு

ரெ.கார்த்திகேசு நாவல்கள்: மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்

எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள் : பாலுணர்வின் கிளர்ச்சி

செம்மண்ணும் நீல மலர்களும்

துயரப்பாதை: நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ

இலட்சியப்பயணம்: சென்று சேராத முன்னோடி

ஆர்.சண்முகம், ஆ.ரெங்கசாமி மற்றும் சயாம் மரண இரயில்

(Visited 356 times, 1 visits today)