நவீன், பூனியான் கதையில் புனைவின் சாகசம் நிகழ்ந்திருக்கிறது. தாமதமாக படிக்கிறேனே என்ற வருத்தமும் ஏற்படுகிறது. பூனியான் உலகை ரீத்தா மனக்கற்பனைக்கும் நிஜத்திற்குமான மெல்லிய கோட்டின் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் விளையாடி இருக்கிறாள். குறிப்பாக ஒவ்வொரு தற்கொலை முயற்சியிலும் காப்பாற்றப்படுவதற்கான சாத்தியங்களை உண்டாக்கிக் கொண்ட நுட்பம் கண்டுபிடிக்க முடியாதவிதத்தில் இருக்கிறது. கதையில் நிதானமும் மனச்சிக்கலும் ஒரு சாகசத்துடன் உருவாகி உள்ளது. திறமையான எழுத்தாற்றல் அது. சபாஷ் நவீன்.
சு.வேணுகோபால்
Brilliant என தன்னிச்சையாவே கதையை வாசித்ததும் மனம் சொன்னது நவின். ‘பூனியான்’ என்பது கந்தர்வர்கள் அல்லது யட்சிகள் போல ஒன்று என உருவகித்துக்கொண்டேன். ஆனால் கதையில் அது முக்கியமில்லை. ரீத்தாவின் கதாபாத்திரம் அற்புதமான வடிவமைப்பு. பன்றியின் மோப்ப சக்தி, மரங்கொத்தியின் தன்மை அறிந்து மர உச்சியில் தேடுவது, சிலந்தி அதிர்வறிந்து பறக்கும் கலையை சொல்வது என விலங்கியல் படிப்பை பாதியிலேயே முடித்து வரும் அவளது மனம் அதிலேயே வியாபித்துள்ளது. உச்சமாக, அவள் ஓராங் ஊட்டான் வழி சொல்லும் உதாரணம் அபாரம். அவள் அறிந்த ஒன்றின் வழி அறியாத உலகை பிடித்துக்கொள்ள அவளாகவே வாய்ப்புகளைத் தேடுகிறாள். இவளுக்கு எதிர்கதாபாத்திரமான கதைச்சொல்லியிடம் இருக்கும் உளவியல் பயிற்சி மாணவனின் அசட்டுத்தனமும் வளர்ந்து வளர்ந்து கடைசியில் ஓடவும் வைக்கிறது. அவனிடம் உள்ளதெல்லாம் நூல் கல்வி. இணைய தேடல். ஆனால் ஒரு கற்பனை அவனை பயமுறுத்துகிறது அல்லவா? ரீத்தா அவனை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி மூலையில் கொண்டு வந்து நிறுத்துகிறாள். அவனால் நகர முடியாது. Chess விளையாட்டில் ஒரு இடம் வரும். எதை செய்தாலும் லாபம் எதிராளிக்கு என தெரியும் இடம் அது. அப்போது விளையாட்டு அட்டையைத் தூக்கிப்போட்டுவிட்டு வெறுப்பில் போய்விடுவோம். அந்த இடம் அருணுக்கு. Brilliant.
ராம்