பூனியான் பிரமாதமான கதை. முற்றிலும் தர்க்க உலகில் வாழும் ஒருவன். அமானுஷ்ய அதர்க்க உலகம் ஒன்றில் வாழும் ஒருவள். இருவருக்கும் இடையே கயிறு இழுக்கும் போட்டி. இந்த உலகுக்கு அவளை இழுக்கும் லாவகத்தை அவன் ப்ரயோகிக்கிறான். அந்த உலகை சோதித்துப் பார்க்க இவனை தூண்டில் புழு ஆக்குகிறாள் அவள். முதல் உணர்வாக திகில் கடந்து அவன் விழுந்தடித்து ஓடி வரும் தருணம் சிரித்து விட்டேன்.
சீனு, கடலூர்
பூனியான் சிறுகதையை வாசித்தேன். புலன்களால் உணரும் மெய் உலகைப் போல அவரவருக்கு ஏற்ப நிகருலகு ஒன்றைக் கற்பனை செய்யத் தூண்டும் கதை. அந்த நிகருலகில் இன்னொருவரைக் கொண்டு வரச்செய்யும் கதை. வாழ்வை சில கோட்பாடுகள் மருந்து பட்டியல்களில் அடக்க முயலும் மனநல மருத்துவர் இந்த நிகழ் உலகின் மெய்யான சாத்தியங்களுக்கு அப்பால் இன்னொன்றை உருவாக்கி அல்லது சீண்டி பார்க்க எண்ணும் பெண் ஒருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். இருவரை வேறுபடுத்தும் மெல்லிய இழை திரை வரை சென்று ஒன்றையொன்று தொட்டு மீள்கின்றனர்.மன நலச் சிகிச்சையின் நுட்பங்களும் விலங்குகளின் நுட்பமான நடத்தைகளின் விவரிப்புகளும் சிறப்பு.
அரவின் குமார்
ஜெயமோகனின் நிழல்வெளிக்கதைகள் நூலை சட்டென நினைவூட்டிய சிறுகதை. அக்கதைகளை வாசித்துவிட்டு அமானுஷ்யம் மூலம் புனைவை கோட்டை விட்டவர்கள் பலர் உள்ளனர். சூழலையும், திடுக்கிடல்களையும், நம்ப இயலாத அனுபவங்களை மட்டும் தொகுத்துக்கூறி ஏமாற்றும் சிறுகதைகள் பல உருவாகியுள்ளன. ஆனால் நல்ல இலக்கியவாதிக்கு இவை எல்லாம் உபகரணங்களே. அவன் இவற்றைக் கொண்டு வேறொன்றை செய்ய முயல்கிறான். உங்கள் சிறுகதை அப்படியானதே. தர்க்கமும் அதர்க்கமும் ஒன்றை ஒன்று மிஞ்சும் ஓட்டம் அழகாக வடிவமைந்திருக்கிறது. உங்களைத் தொடர்ந்து வாசிக்கிறேன். விடாமல் எழுதுங்கள்.
சிவசுப்ரமணியம்
வாசிப்பதற்கு சுவாரசியமாகவும் கொஞ்சம் திகிலும் கலந்த கலவை உங்கள் புனைவு. நடந்து கொண்டு இருப்பது வைத்தியாமா அல்லது அனுமாசியா தாக்குதாலின் விளைவா என ஒரு தேடலோடு கதையை வாசிக்க முடிந்தது. நான் அத்தீவுக்குச் சென்றதில்லை. உங்கள் கதையின் மூலமாக தெரிந்து கொண்டேன்…. கத்தாயி வர்ணனை, கன்னி கதை, பூனியான் கதை எல்லாம் நீங்கள் திகில் நிறைந்த மர்ம கதைகளை எழுதும் ஆற்றல் உங்களிடத்தில் உள்ளது என தெரிகிறது. திகில் நிறைந்த கதையை எழுத என்னுடைய வாழ்த்துகள்.
பாரதி