ம.நவீனின் கன்னி சுவாரசியமான ஒரு கதை. இதை நான் ஒரு கதைப்போர் என்றுதான் வாசிக்கிறேன். கதைசொல்லி ஒரு கதைசொல்லியை சந்திக்கிறான். அந்த கதைசொல்லி ஒரு பேய்க்கதையைச் சொல்கிறான். இவன் அதன் ஓட்டைகள் வழியாக கிரைமை கண்டுபிடிக்க முயல்கிறான். இருவரும் கதைகளால் மோதிக்கொள்கிறார்கள்.
ஆனால் மாரி இன்னும் திறமையான கதைசொல்லி. அவன் கதையை எதிர்காலத்திற்கு நீட்டித்து பத்திரிகையாளனின் எதிர்காலத்திற்கும் கொண்டுசெல்கிறான். அங்கே ஒரு probability ஆக அதே கதை தொடரும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறான். அவ்வாறு கதையின் லாஜிக்கை உடைக்கநினைக்கும் பத்திரிகையாளனின் முயற்சிக்கும் செக்மேட் வைத்துவிடுகிறான்.
ஆர்.ராஜசேகர்
இந்த கொரோனோ காலகட்டத்தில் பேய்க்கதைகள் பெருகியிருக்கின்றன. நவீனத்தமிழிலக்கியத்தில் பேய்க்கதைகள் இந்த அளவுக்கு வந்த காலகட்டம் இருக்குமா என்பது சந்தேகம்தான். பல ஆண்டுகளுக்கு முன் நீங்கள் நிழல்வெளிக்கதைகள் எழுதியபோது பேய்க்கதைகளுக்கும் இலக்கியத்தில் இடமுண்டு என்று புதுமைப்பித்தனின் காஞ்சனையை முன்வைத்து விரிவாக எழுதியது ஞாபகம் இருக்கிறது. இன்றைக்கு இப்படி பேய்க்கதை பெருகியிருப்பதற்கு இந்த நோய்ச்சூழலில் ஏதாவது காரணம் இருக்கலாம் என்று தோன்றுகிறது
எம்.முத்துக்குமார்
கன்னி கதை ஒரு புதிரை போடுகிறது. ஏழுகன்னிகளில் குறையும் கன்னிகள் அந்த சமூகத்தால் கொலைவழியாக ஈடுகட்டப்படுகிறார்கள். கன்னி என்ற அந்த டெம்ப்ளேட் ரொம்ப பழமையானது. அதை கொலைசெய்பவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்களா அல்லது அது கொலைசெய்யவைக்கிறதா என்பது புதிர். அது கதைசொல்லிகளில் ஒருவரை கொலைசெய்ய வைத்திருக்கிறது- அல்லது வைத்திருக்கலாம். இன்னொருவரை கொலைசெய்ய வைக்குமா? ஒன்றை தெரிந்துகொண்டால் அதை செய்யாமலிருக்கமுடியாது என்ற வரி க்ளூவாக அமைகிறது
சுவாரசியமான கதை ம.நவீன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்
செந்தில்குமார்
திருநெல்வேலி மாவட்டத்தின் பெண் தெய்வங்களில் பெரும்பாலானவை கொல்லப்பட்ட பெண்கள். இப்படி கொல்லப்பட்ட பெண்களை அறுகொலை தெய்வங்கள் என்று லூர்து ஐயா வகைப்படுத்துகிறார். இந்த அறுகொலை என்பது ஒரு டெம்ப்ளேட். சமூகத்தின் குற்றவுணர்ச்சிக்கு ஒரு லெட்-அவுட். அப்படி ஒரு வழி கிடைத்துவிட்டால் உண்மையில் கொலைகள் பெருகுமே ஒழிய குறையாது. நீங்களேகூட ஒரு கதை எழுதியிருந்தீர்கள், முத்தங்கள் என்று. அவர்கள் எத்தனை எளிதாக அதைச் செய்கிறார்கள். ஏனென்றால் அதை எப்படிச் செய்வது என்ற டெம்ப்ளேட் அவர்களுக்கு ஏற்கனவே உள்ளது
அந்த டெம்ப்ளேட்டைத்தான் இங்கே மாரி பேசிப்பேசி உருவாக்குகிறான். இப்படித்தான் நேற்றுநடந்தது என்று சொல்கிறான். அதை கதை கேட்பவனுக்கு அளித்துவிடுகிறான். ஒரு லோடட் கன் அளிப்பதுபோலத்தான் அது
டி.ராமகிருஷ்ணன்
ஜெயமோகன் தளத்தில் வந்த கடிதங்கள்