
அண்ணா, பூனியான் கதை வாசித்துவிட்டேன்.
பூனியான் அமானுஷ்யம் அறிவியல் என இரண்டு எதிரீடுகளின் நடுவில் நிற்கும் ஒரு சாம்பல் நிறத்தை தொடும் கதை. ரீத்தா, அருண் இருவரும் இந்த இரண்டு எதிரீட்டின் ஒன்றைப் பற்றிக் கொண்ட புள்ளிகள்.
இரண்டும் ஒன்றை ஒன்று கலைக்க முயற்சிக்கிறது அல்லது டிஸ்மிஸ் செய்ய. அருணின் சொற்கள் வழியாக ரீத்தாவின் நம்பிக்கையை உடைக்க முயற்சிக்கிறான், ரீத்தாவின் கதைகள் வழியாக அருணின் அறிவியல் தர்க்கத்தை மறுக்கிறாள்.
இரண்டும் ஒன்றுடன் ஒன்று போரிட்டு எது கடைசியில் வெல்கிறது என்பதே பூனியான். கோதண்டம் இரண்டையும் அறிந்து அதனைக் கடந்த ஒருவர் அதனாலேயான அமைதி அவருளிருக்கிறது. வேண்டுமென்றே தான் ரீத்தாவின் கேஸை அவர் அருணிடம் குடுக்கிறார்.
இந்த கதையின் பலமே இரண்டு தர்க்கங்களும் வலுவாக எழுவதால் நிகழ்வது தான் அருண் ரீத்தாவின் அசட்டுத்தனத்தை தனது ஒவ்வொரு தர்க்கத்தாலும் கடக்கிறான் அவளின் கர்ப்பம், தற்கொலை முயற்சி என ஒவ்வொன்றிற்கும் அவனுள் ஒரு வலுவான அறிவியல் தர்க்கமெழுகிறது. ரீத்தாவின் பூனியான் என்ற தொன்மத்திலிருந்த அருண் இட்டுக் கொள்ளும் ஒவ்வொரு தர்க்கமும் நிகராகவே உடைகிறது.
இரண்டு நிகர் வல்லமைப் பொருந்திய மள்ளர்கள் துவந்தமிட்டுக் கொள்ளும் போது நிகழும் சாகசம் கதையில் நிகழ்ந்திருக்கிறது. அத்தகைய நிகர் வல்லமைகளாலேயே கதை அதன் உச்சத்தை அடைந்திருக்கிறது.
ஜி.எஸ்.எஸ்.வி.நவின், பெங்களூரு
அன்பான நவின். நலம் மலர்க.
எத்தனையோ அறிவியல் வளர்ச்சிகள். எவ்வளவோ புதிய கண்டுப்பிடிப்புகள். உளவியல் குறித்தும் பயம் குறித்தும் ஆயிரம் ஆயிரம் தெளிவுகள். எல்லாவற்றையும் சொல்லி முடித்தபின் அதெல்லாம் இல்லை என இன்னும் ஒரு அடி முன் சென்று நிர்கிறது மனம். அது அப்படித்தான் நிற்கும் அல்லவா? இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எவ்வளவு நிரூபணங்கள் நிகழ்ந்தாலும் ‘அதெல்லாம் சரி… அப்போ இது’ என கேள்வி கேட்கும் அல்லவா? அத்தனை ஆண்டுக்கான மனதை சொல்வதில் சிறக்கிறது கதை.
ஶ்ரீபாலா