பூனியான்: கடிதம் 4

பூனியான் சிறுகதை தொடக்க வரியைப் படித்ததும், என் நினைவிற்கு வந்தது, பேய்ச்சியில் இராமசாமியும், அப்போயும் காட்டிற்குச் செல்லும் பயணம்தான். அதில் பூனியான் பற்றிய எச்சரிக்கைகள் வழங்கப்படும் இருப்பினும் மிகப் பெரிய பாதிப்பைக் கொண்டு வரவில்லை.

கதையினைப் படிக்க படிக்க பேய்ச்சி என்னிடம் அனுமதியோடு விடைபெற்றாள். மன சிதைவு நோயால் அல்லல் படும் ரீத்தா, உளவியல் பயிற்சி மருத்துவர் அருண் அவர்களின் உரையாடல்கள் சிகிச்சை வாயிலாக அக்கதை சிந்தனையில் படர்ந்தது.
நவீன் சார், சிறுகதையினை வாசிக்கும் போது ஒரு வாசகன் கையில் விளக்கைத் தந்துவிடுவார். அது ஒரு குகை பயணம். வாசகன் அவ்வொளி வழியே அக்கதையில் எல்லா மர்ம முடிச்சுகளையும் கண்டறியவேண்டும். தேர்ந்த வாசகர்கள் பல அடுக்குகளைக் கண்டறிந்து தரிசனத்தையும் அடைந்துவிடுவார்கள். பூனியான் கதையில் அதிக வெளிச்சத்தைப் பரப்பி நம்மைத் தடுமாறி பயணிக்க வைத்திருக்கிறார். உண்மையா? அல்லது மாயையா ? என்பதை மிக நுட்பமாக இக்கதையில் சித்தரித்துள்ளார். ஓர் உன்னதப் படைப்பாளி, அவனது ஆளுமைகள் மீறிச் சென்று விடும் போது உந்துசக்தியில் வழி ஒரு நல்ல காவியம் தானாகவே எழுதிக் கொள்ளும் இதுவே இக்கதை எனக் கூறலாம்.

மன அழுத்தம் என்பது இரு வகைப்படுகிறது நேர் அழுத்தம் (eustress positive stress) மற்றும் சவால்களை, அல்லது அதிக பளு என பொருள்படும் எதிர்மறை அழுத்தம் (distress -negative stress) அதிகமாகும் போதும், நம்மால் கட்டுப்படுத்தாத ஒன்றைப்பற்றி கவலைகள் வளர்ந்து கொண்டு அதில் இருந்து ஓர் அதீத சக்தியை உருவாக்கி, மீள மன சிதைவு உள்ளவர்கள் முயல்வார்கள்.
கதையில் வரும் ரீத்தா பூனியன் இடையே உள்ள மிக நுட்பமான மனக்கிளர்ச்சியையும் ஆழ்ந்த அக புற அனுபவங்களை அறிவார்த்த முறையில் விளக்கும் போதும், அறிவியல் விட்டுச் செல்லும் ஒரு கவிதையாக தோன்றியது. அமானுஷ்ய சக்தியான பூனியான் மூன்று பிரிவுகளாக வாழ்வார்கள் என்பதைக் கூறும் போது அதன் தோற்றத்தை வர்ணிக்கும் போதும், ரீத்தா இறந்தக்கால நிழலை நிகழ்க்காலத்தில் நிஜமாக்கித் தருகிறார் எண்ணம் தோன்றாத வகையில் அவளின் பதில்கள் மிகவும் நேர்த்தியாக உள்ளது.

டாக்டர் அருண் கேட்கும், கேள்விகள் அனைந்தையும் முறுக்கி நிமிர்த்தி ஒர் கூர்மையான இரும்புத்துண்டு கண்ணைக் குத்துவதுப் போல பதிலாக தந்துக் கொண்டே இருக்கிறாள். அவள் கர்ப்பமாக இருக்கிறாள் எனக் கூறும் போது அதற்கான அவள் செய்யும் பரிசோதனைகள் எப்படிச் சாத்தியம்? எனக் மனக் குழப்பத்தை நவீன் சார் தந்துவிட்டார். அவரின் சித்து வேலையை ஆரம்பித்து விட்டார். பூனியன் மீது சந்தேகங்கள் எழுந்தால், உடனே அவனை விட்டுச் சென்று விடுவான், என அவள் கூறியதும், திடீரென்று எனக்கு பேய்ச்சி மீண்டும் வந்து விட்டாள்.

தோக் குரு இராமசாமியைச் சந்திக்கும் போது நுட்பமான உயிரிங்கள் உண்மை என்பதற்கு வெள்ளை நிறமும், பொய் என்பதற்குக் கருப்பு நிறம் எனும் இரண்டு குணங்களை அவை கொண்டிருக்கும் என்பதை விளக்கி இருப்பார். மனிதர்கள் சந்தேகங்கள் , குழப்பங்களைச் சாம்பல் நிறத்திற்கு ஒப்பிட்டு இருப்பார். இந்த சூட்சமம் தான் இக்கதையில் வரும். பூனியான் ரீத்தாவின் பிரிவிற்கும் இதுவே காரணமாக இருக்கிறது.

ரீத்தா தன், அக அனுபவத்திற்கு வலிமைச்சேர்க்கும் அறிவியல் காரணிகள் திகைப்பை ஏற்படுத்துகிறன. சிலந்தியின் பறக்கும் தன்மை, சிலந்தியின் வினோதப் பண்போடு ரீத்தா தன்னை உள்புகுத்திக் கொள்வதும். நாய்க்கும் பன்றிக்கும் இடையினான மோப்பசசக்தியை ஒப்பிடுவது, அருண் மர உச்சியில் உள்ள ஓராங் ஊத்தான் கண்டு பயப்படும் போதும், அவளின் விளக்கம், NATIONAL GEOGRAPHIC ஆவணப்படத்தின் விளக்காத ஒன்றாகும். இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க நவீன் சார், ரீத்தா விலங்கியல் துறையில் படித்தவள் என்பதைப் பதியவைக்கிறார். அது அவளின் தர்க்கத்திற்கும் விவாதத்திற்கும் மிகப்பெரிய பலம்.

இந்தக் கதையில் வரும் திறப்புகள் இன்னும் அந்தரங்கமாக இக்கதையை அணுகும் முறையினை தருகிறது. ரீத்தா தன் உயிரைப் பணையவைந்து பூனியான் வருவதைச் சோதனைச் செய்கிறாள். எதிர்தரப்பினர் (டாக்டர் அருண்) அவரின் விவாதச் சூழலின் சிதறடித்து நிலைகுலையவைக்கும் இத்தருணங்கள் எனலாம். உதாரணம் தோழி வந்து காப்பாற்றினார் என டாக்டர் அருண், முரண் பட்ட கேள்வியைக் கேட்கும் போது, அவளின் பதில் கைப்பேசியை அவள் பூட்டி விட்டு, சாவியை ஜன்னல் வெளியே வீசியதாக கூறுவதும், அதில் உள்ள சாத்தியங்களும், உதாரணங்களும் அசாதாரணமானவைகள். அமானுஷ்ய சக்தியா? அல்லது கற்பனைச் சக்தியா ? என அச்சம் கொள்ள வைக்கிறது. ஃபிக்‌ஸ்டெலூஷன் நோயாளிகள் அறிவு ஜீவிகளாக தர்க்கம் செய்வது, அவர்களின் சாமார்த்தியம் என பேராசிரியர் கோதண்டம் அருணிடம் கூறும் பொது, எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.
என் அண்ணன் மருத்துவ பயிற்சியில் இருக்கும் போது, எல்லா வகை நோயாளிகளிக்கும் சிகிச்சையளிக்குப் பணியில் ஈடுப்படவேண்டும். அவர் சிகிச்சியையளித்த மனவழுத்தம் கொண்ட இரு நோயாளிகளைப் பற்றிக் கூறினார். ஒருவர் கானா நாட்டைச் சார்ந்த கறுப்பின பல்கலைக்கழக மாணவர். மனசிதைவால் பாதிப்படைந்தவர். அவர் பல்கலைக்கழகத்தில் மிகச் சிறந்த மாணவர். தங்கப்பதக்கம் பெற்றவர். அவரின் ஆய்வுக்கட்டுரைகள் உலக தரப் பல்கலைக்கழத்தில் ஆங்கீராம் பெற்றவை இருப்பினும், பல தடவை தற்கொலை முயற்சிகள் செய்துள்ளார். அந்த மாணவர் கூறியது தன் படிப்பிற்கும், தனிமைக்கும் எப்பொழுது துணையாக இருப்பவர் அவரின் குல தெய்வம், ஒவ்வொரு முறையும் தன்னைக் காப்பாற்றியது குல தெய்வம் என்று கூறுவாராம். அம்மாணவன் பேசும் போது, மிக அறிவார்ந்த பதில்கள் வரும் என்று கூறியுள்ளார்

இன்னொருவர் 10 வயது சிறுமி அவர் பள்ளிக்குச் செல்வதில்லையாம், அவரின் அம்மா தொலைக்காட்சித்தயாரிப்பாளர், அவரின் நாடக வசனங்களை எழுத உதவுவது இச்சிறுமிதான். இவருக்கு Kleptomania எனும் திருடும் மன நோய், பல முறை பேரங்காடியிலும், பொது இடங்களிலும் பிடிப்பட்டுள்ளாராம். இச்சிறுமியிடம் பேசும் போது தன்னை வழி நடத்துவது ஓரு தேவதை என்று கூறினாராம். அவர் கரு நீல குல்லா அணிந்த நீண்ட அங்கி அணிந்திருந்தாராம். அந்த அங்கியில் சிறு சிறு மஞ்சள் நிறத்தில் பிறை இருக்கும் என்றும் வர்ணிப்பாராம். அக்குழந்தையின் பேச்சுத் திறனும் மொழிப்புலமையும் மிகவும் அபாரம் எனக் கூறுவார் என் அண்ணன். இதை நான் இங்குக் குறிப்பிட்ட நோக்கம், இல்லாத ஒன்றை போலியாகத் தந்து நவீன் சார் அவர் கதைக்கு அலங்காரம் சேர்க்கவில்லை என பதிவு செய்யத்தான்.

ரீத்தா, பூனியன் வருகைக்காக, தற்கொலை முயற்சிகள் செய்ததுப்போல அவனை விட்டு முற்றாக விலக தானே முயற்சி எடுக்கிறான். ரீத்தாவின் அச்சம், அகத்தில் ஊன்றி இருக்கும் பூனியான் உறவு இவையாவும் மாயை என நம்ப அவள் முயற்சித்தாலும், வெறும் கற்பனைத்தான் என நிரூபிக்க ஓர் உண்மை சாட்சியைத் தேடுகிறாள். டாக்டர் அருண் உதவியை நாடுகிறாள். தகுந்த சூழலும் சாத்தியக்கூறும் உண்மையின் அருகில் அமைந்தால், ஓர் அறிவுசார்த்த ஆளுமையும் அச்சூழலுக்கு அடிமைத்தான்.

தர்க்கம் உண்மையை வெளிக் கொண்டு வருமா? விவாதம் அறிவின் ஆழத்தை மீட்டெடுக்குமா? அறிவின் ஆணவத்தின் வெளிப்பாடே இத்தர்க்கமும் விவாதமும். கவிதை என்பது மெய்யுணர்வை இரசிக்க வைப்பது ஆகவே, தர்க்கத்தை விட ஒரு படி மேலே நிற்கின்றாள் ரீத்தா.

ஆழ்ந்த படிமங்களைக் குறியீடாகச் சொல்லி அமானுஷ்ய வித்தைகளைக் கவித்துவமாக்கி, பிரஞ்ஷைகளின் விளிம்பில் நின்று, மொழியில் எல்லைக் கடந்து உண்மையை வடிக்கட்டி, சாத்தியங்களுக்குச் சவால் விடும் எழுத்து பூனியான் சிறுகதை எனக் கூறலாம். தர்க்கங்களின் தடைகளை உடைக்கா அறிவியல் யுக்தி, பூடகத் தன்மை, சலனம், மாய ஏதார்த்தம் போன்றவை இக்கதையில் தெவிட்டாமல் இருக்கிறது. பூலாவ் கெச்சீல் அதுவும் மாலாக்காவிலா? இதைப் படித்ததும் சிறு புன்னகை மலருகிறது. ரீத்தாவின் அழகை வர்ணிக்கும் போது, அவளைப் பார்க்க ஆசை தூண்டுகிறது. ஒரு துளி நெய் விட்டால் சறுக்கி விழும் கூர்மையான நாச, ஜப்பான் காட்டூனின் வரும் பொம்மையின் சிறிய உதடும், கண்ணை முடியும் கரு விழிகள் நடனம் ஆடும் நளினம். என்ன சொல்வது என்று தெரியவில்லை திகைப்பில் ஆழ்ந்தேன்.

அதிகம் எழுதுங்கள் சார் என வாசகியாக உத்தரவு இட உரிமை எனக்குண்டு.

புனிதவதி

(Visited 107 times, 1 visits today)