ஒலிப்பேழை: கடிதம்

சிறுகதை: ஒலிப்பேழை

நவின், ஏன் ஒலிப்பேழையை மறுபடி மறுபடி வாசிக்கிறேன் என என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன். அது என்னை ஈர்க்கும் இடம் எது என ஆராய்கிறேன். நேற்று மனைவியிடம் கதையை வாசித்து காட்டினேன். இன்று அவள் மறுபடி வாசித்ததாக சொன்னாள். கதையில் எதை தேடுகிறேன் என என்னை நானே கேட்டுப்பார்க்கிறேன்.

நுண்ணுணர்வுடைய இசுமாயில், அவருக்கு எதிர்புறம் வணிக லாபத்தை மட்டுமே இலக்காக கொண்ட கதைசொல்லி. கதைசொல்லிக்கு நெருக்கமான பொருள்கள் அனைத்தும் நவீன விஞ்ஞான வளர்ச்சியின் தொடக்கங்களாக உள்ளன. camera, cassette tape, Phonograph record என அவனது கவனம் உள்ளது. அவனுக்கு கிளி என்பது அவன் அப்பாவின் எச்சமாகிறது. மண் படிந்த பொருள்கள் எல்லாம் அழுக்காகிறது. இதற்கு நேர் எதிர் இசுமாயில் வருகிறார். இஸ்திரி பெட்டியில் உள்ள சின்னமும், டிஃபன் கேரியரில் உள்ள மலர்கள் போன்றவையே அவர் கவனத்திற்கு வருகிறது. அவனைவிட இசுமாயில்தான் அந்த கிளியை அறிந்து வைத்துள்ளார். அவன் ரோஜா என நினைத்த மலரை peonies என விளக்குகிறார்.
இந்த நேர் எதிர் குணம் கொண்ட இருவரும் ஒரு உண்மையை கண்டுப்பிடிக்க பேசிக்கொள்கிறார்கள். உண்மையில் அப்படி ஒரு cassette tape உள்ளதா? அல்லது இசுமாயில் பொய் சொல்கிறாரா? என யோசிக்கும்போதே கடிதம் ஒன்று உரையாடலுக்குள் வருகிறது. உண்மைதான் எல்லாம் முடிந்தது என நினைக்கும்போது அதை எரித்துவிட்டதாகவும் சொல்கிறார். மறுபடியும் இசுமாயில் மீது சந்தேகம். நுண்ணுணர்வு கொண்டவர்கள் கற்பனாவதிகள்தானே. அவர் கற்பனையாக சொல்கிறார் என்றே எண்ணம் தோன்றுகிறது. அதற்கு ஏற்ப பணத்தை வாங்கி கொண்டு இடத்தை விட்டு ஓடவே பரபரக்கிறார். ஆனால் cassette tape இல் ஒலியே இல்லை.

எது உண்மை? எது பொய்? யாரை நம்புவது? என குழம்புகையில் முடிவு எல்லாவற்றையும் மாற்றுகிறது.

அவ்வளவு கிளிகள் வருமா? வரும். காரணம் அது யானை அலையும் காட்டு நகரம் என கதையில் ஒரு வரி வருகிறது. அந்தக் காட்டில் வணிகம் நடக்குமா? நடக்கும். ஆங்கிலேயர்கள் வரும் காடு என ஒரு வரி வருகிறது. கிளி இசை அறியுமா? african grey parrot அறியும் என google சொல்கிறது. அப்பாவை மகன் அப்படி வெறுப்பானா? வெறுப்பான். அம்மா மரணத்துக்கு காரணமாக இருந்தால் என கதைக்குள் சிறிய குறிப்பு வருகிறது. எல்லாவற்றுக்கும் காரணமும் தெளிவும் கொடுத்து இறுக்கி நெருக்கி உருவாக்கிய கதையில் கடைசி பத்தி அத்தனைக்கும் புதிய வடிவம் கொடுக்கிறது.

அது கலைஞனுக்கு மட்டுமே கைவந்த இடம்.

எதிர்காலம் அறிந்த மோனா எழுதிய கடிதமும் பாடலும் இசுமாயிலுக்கானவை. அந்த கடிதத்தை காட்டியிருந்தாலும் அதன் எழுத்துகள் கதைசொல்லிக்குத் தெரிந்திருக்காது. மோனா எழுதி வைத்தது ஒலியற்ற ஒலியை அறிந்த ஒருவனுக்காக. அது இசையின் சூட்சும ஒலி. நுண்ணுணர்வு மனிதன் மட்டுமே அறியக்கூடிய ஒலி. அதனால் அது இறைவனின் ஒலி. இறைவனின் ஒலியை அறிந்தவள் சிரித்துக்கொண்டுதானே இருப்பாள்.

ராம்

ஒலிப்பேழை சிறந்த மாயயதார்த்தவாத புனைவு. இந்தக் கதையை வாசித்தப் பின் மோனாவின் சில பாடல்களைக் கேட்டேன். எந்த வகையிலும் மலாய் பாடல்களில் தனித்துவமான பாடல் எனக் கூறிவிட முடியாத பாடல்களாகவே இருந்தன. திரும்ப கேட்டப் போது அந்தக் குரலில் கனிவு ஏற்படுத்த மோனா முயன்றிருப்பதை உணர முடிந்தது. மோனாவின் வாழ்வோடு இணைத்து எண்ணியப் போது அந்தக் குரலில் சூழ இருந்தவர்களால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் குரல் கேட்டது. இந்தக் கதைசொல்லியின் இடத்திலிருந்து அந்தப் பெரியவரின் இடத்திற்கு நானும் நகர்ந்து கொண்டிருக்கிறேன். அறிவாற்றல் நிறைந்த கிளி இறகு உதிர்த்து ரத்தம் வழிய பறந்து சென்று கதைசொல்லியால் கேட்க முடியாத இசையில் இணைவது நல்ல படிமம்.

அரவின் குமார்

(Visited 162 times, 1 visits today)