வணக்கம் நவீன் அவர்கள். தங்களின் zoom உரையாடலில் எனக்கு ஒரு கேள்வி இருந்தது. அதை கேட்க சூழல் அமையவில்லை. நேரநிர்வகிப்பை நீங்கள் எவ்வாறு மேற்கொள்கிறீர்கள். வல்லினம் திட்டங்களை எவ்வாறு நேர்த்தியாக வடிவமைக்கிறீர்கள். அதை சொன்னால் எங்களைப் போன்றவர்களுக்குத் தெளிவு கிடைக்கும். உதவியாக இருக்கும். மேலும் இன்னொரு கேள்வி. விருப்பம் இருந்தால் பதில் சொல்லலாம். (இல்லாவிட்டால் தனியாக அனுப்பலாம்) அரசாங்க ஊழியராக இருந்துகொண்டு சர்ச்சைகளில் ஈடுபடுவது சிக்கலாக இல்லையா? பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லையா?
பாரதி.
வணக்கம் பாரதி. மன்னிக்கவும். உங்கள் கடிதத்தைத் தவற விட்டிருந்தேன். இப்போதுதான் பார்த்தேன்.
நேர நிர்வாகம் என்பதில் என் படைப்புலகுக்கு இடமில்லை. காரணம் படைப்பு எனக்கு ஒரு பணியோ பொழுதுபோக்கோ அல்ல. நான் ஒவ்வொரு நிமிடமும் எழுத்தாளனாக மட்டுமே வாழ்கிறேன். வேலையிடத்திலும் உறவினர்கள் மத்தியிலும் மட்டுமே தற்காலிகமாக வெவ்வேறு உடைகளை அணிந்துகொள்கிறேன். ஒரு புனைவை வாசிக்காத என் நண்பர்களுக்குக் கூட ஜெயகாந்தனையும் ஜெயமோகனையும் தெரியும். காரணம், நான் அவர்கள் குறித்து ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறேன். அனேகமாக ஒவ்வொரு நாளும். சிலர் அவர்கள் வாசகர்களாக மெல்ல மாறி வருகின்றனர்.
வல்லினம் செயல்பாடுகளின் நேர நிர்வகிப்பு குறித்து ஏற்கனவே எழுதியுள்ளேன். அப்போது சொன்னதுதான். அதற்கான அடிப்படை பயிற்சியையும் மனநிலையும் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரனிடமிருந்தே பெற்றேன். குறைந்தது நான்கு ஆண்டுகள் நான் அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். முக்கிய பிரமுகரின் குடும்ப விருந்து அழைப்பில் இணைந்துகொள்ளும் அளவுக்கான நெருக்கம் அது. அவர் எழுத்தாளர் சங்க செயலாளராக இருந்து தலைவரான காலகட்டம் வரை இயக்கத்தில் காட்டிய தீவிரமான அணுக்கத்தை நான் நேரிலேயே கண்டுள்ளேன்.
ஒரு மாநிலத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு எனத் தனியாக இருந்தாலும் அதன் செயல்திட்ட முன்னேற்றங்களை நேரில் சென்று காணும்போதும், நிகழ்ச்சி நடக்கும் நாளில் தொடக்கம் முதல் முடிவு வரை இருக்க வேண்டிய பொருள்களின் பட்டியல் அடிப்படையில் ஒவ்வொன்றாக தேடிச்சென்று முன்னமே தயார் செய்வதையும், உறுப்பினர்களுக்கு அறிக்கை அனுப்பும்போது கூட தன் முகவரிக்கும் ஒன்றை அனுப்பி கடிதம் சென்று சேர்வதை உறுதி செய்வதையும், தனக்கான ஒரு கார் வாங்கும்போதுகூட அது இயக்கத்துக்கு எவ்வாறு பலனளிக்கும் என யோசிப்பதையும் அருகில் நின்று கண்டவன் நான். எழுத்தாளர் சங்கத்தின் மீது நான் வைக்கும் விமர்சனங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஊதியமற்ற இயக்கத்தில் ராஜேந்திரனின் உழைப்பு அசாதாரணமானது. ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டில் அனைத்து பகுதிகளிலும் கவனம் வைப்பதன் அவசியம் அவர் வழியே கற்றேன். மற்ற விசயங்களில் நான் அவ்வளவு நேர்த்தியானவன் அல்ல. இரண்டு ஆண்டுகளில் முடிக்கவேண்டிய முதுகலை படிப்பை நான்கு ஆண்டுகளுக்குப் பின்பே முடித்துள்ளேன். பள்ளியின் கோப்பு வேலைகளில் இன்னமும் திணறிக்கொண்டே இருக்கும் ஆசிரியன் நான்.
வல்லினம் அச்சு இதழ் காலத்திலிருந்தே என் மீது கல்வி அமைச்சுக்குப் புகார்கள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. முதல் புகார் ஒரு மலேசிய இயக்குனரிடமிருந்து சென்றது. அதை தொடர்ந்து பல்வேறு தரப்பு; பல்வேறு காரணங்கள். இரண்டு மணி நேர விசாரணைகள், அலைக்கழிப்புகள், கடிதங்கள், எச்சரிக்கைகள் என அவை என்னைத் தொடர்ந்து வருகின்றன. ஒரு விமர்சனம் எழுதும்போதும் ஒரு எதிர்ப்பைத் தெரிவிக்கும்போதும் அதனால் உட்சபட்ச எதிர்வினை என்னவாக இருக்கும் என்று என்னால் ஓரளவு ஊகிக்க முடியும். இதை எதிர்கொள்ள ஒரு வழிதான் உண்டு. அது எழுத்தாளன் தன் நேர்மையை விட்டு விலகாதிருப்பது.
மூன்று விதமாக அதை வகுக்கலாம்.
முதலாவது, நாம் ஒரு விமர்சனம் எழுதும்போது விமர்சிக்கப்படும் நபர் மீது தனிப்பட்ட முறையில் காழ்ப்பு கொண்டவர்கள் நம்முடன் வந்து இணையக்கூடும். இவர்கள் மலப் புழுவைப் போன்றவர்கள். கருத்தியல் ரீதியாகவோ இலக்கிய ரீதியாகவோ இவர்களிடம் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. உள்ளதெல்லாம் மனப்புழுங்களின் வாடைகள் மட்டுமே. உதாரணமாக, எழுத்தாளர் சங்கத்தை நான் விமர்சிக்கும்போதெல்லாம் சங்கத்தின் மூலம் விருது பெறாதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் அழுகிய மனதுடன் என்னைத் தொடர்புகொள்வர். நான் அவர்கள் சொற்களையோ கைக்கோர்த்தலையோ ஒருபோதும் ஏற்பதில்லை. அவர்கள் கடிதங்களைப் பிரசுரிப்பதில்லை. மாறாக அவர்களை அடையாளம் காட்டி நட்பு வட்டத்தில் இருந்து நீக்கியிருக்கிறேன். விமர்சனத்தை முன்வைக்க தயக்கம் இருக்கலாகாது என்பதைப் போலவே இந்தப் புழுக்களிடம் இணையாமல் இருப்பதும் விமர்சன அறமே.
இரண்டாவது, வல்லினம் அச்சு இதழ் காலத்தில் பெ.ராஜேந்திரன் உடை சார்ந்து சிறிய கிண்டலை என் எழுத்தில் கண்டபோது சண்முகசிவா அழைத்து கடிந்துகொண்டார். ஒருபோதும் எதிர்வினைகளில் கருத்துகளன்றி தனிமனித கேலிகள் இருக்கக்கூடாது என்றார். ஒரு கருத்தை கேலி செய்வதும் ஒரு நபரை கேலி செய்வதும் வேறு என அறிந்துகொண்ட நாள் அது. அன்று முதல் எதிர்வினைகளில் தனிமனிதர்கள் குறித்த சீண்டல்கள் வராமல் பார்த்துக்கொண்டேன். பத்து வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரைகளை இப்போது வாசிக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கும். (ஜெயகாந்தனுக்கும் அப்படியான வருத்தங்கள் இருந்ததை வாசித்துள்ளேன்) ஒன்றும் செய்ய முடியாது. அது அப்போதைய வயதில் எழுதப்பட்டது. அன்றைய மனநிலையைக் காட்டுவது. வல்லினம் 100 களஞ்சியத்தை வழங்க ஒருமுறை என் இடைநிலைப்பள்ளி ஆசிரியரிடம் இலக்கிய நண்பர்களை அழைத்துச்சென்றபோது சொன்னார், “பாடம் படிச்சி கொடுத்துக்கிட்டே திரும்பி பாத்தா கிளாசில இருக்க மாட்டான். வெளிய எங்காயாவது எவனையாவது குத்திக்கிட்டு இருப்பான். ஆனா அப்பவே நல்லா கதை எழுதுவான்.” எழுதத் தொடங்கிய புதிதில் அப்படியான துடுக்குப் பையனாகவே இருந்துள்ளேன். இலக்கியத்தில் அதையே செய்ய முயன்றுள்ளேன். இன்று எல்லாமே நினைவுகளாக உள்ளன. சிரித்துக்கொள்ள வேண்டியதுதான்.
மூன்றாவது கீழ்மைகளுக்கு இடம் தராமல் இருப்பது. மனம் கீழ்மைகளாலும் ஆனதுதான். அது வழுக்கும்போதெல்லாம் வள்ளுவரின் இழுக்கல் உடையுழி ஊற்றுகோலை நினைத்துக்கொள்வேன். உதாரணமாக, புனைவில் கொச்சை வார்த்தைகள் குறித்த சர்ச்சையில் ஈடுபாடு காட்டிய ஒருவரின் அண்ணன் மகன் இயக்கிய குறும்படங்களின் இணைப்பை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அதில் ஏராளமான கொச்சை வார்த்தைகளும் சர்ச்சைக்குரிய காட்சிகளும் இருந்தன. ஒரு நிமிடம் மனம் தடுமாறியது. இலக்கிய நூலைவிட காட்சி ஊடகம் இன்னும் வலுவான பாதிப்பை உருவாக்கக் கூடியது. அவற்றை வைத்து எதிர்வினையாற்றலாம் என்று தோன்றியது. அப்படி எண்ணம் எழுந்த மறுநாள் ஜெயமோகனிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஜெயமோகன் இவ்வாறு கூறினார், “நவீன், கலையில் தீவிர சூழல் உருவாக ஈடுபடும் எழுத்தாளன் ஒவ்வொருவரும் கடந்து வரவேண்டிய பாதைதான் இது. இந்தப் புறச்சூழலை நீங்கள் மாற்ற முடியாது. ஆனால் இதில் நீங்கள் அந்தரங்கமாக உணர வேண்டியது ஒன்றுதான். ஒருவேளை உங்கள் எதிராளி ஒருவர் இவ்வாறான இலக்கியம் புனைந்து அதற்கு இவ்வளவு கீழான எதிர்ப்புகள் வருமாயின் அவருக்குப் பக்கத்தில் இருக்க வேண்டிய முதல் மனிதன் நீங்கள்தான். உங்கள் எதிரியை கலை அறியாதவர்கள் எதிர்க்கும்போது அவர்களுடன் இணைந்தால் நீங்கள் மிகச்சிறியவர் ஆகிவிடுவீர்கள். உங்கள் மனம் குறுகிவிடும். குறுகிய மனதிடம் இருந்து பெரிய படைப்புகள் ஒருபோதும் வராது.” என்றார். நான் இத்தனைக்கும் ஜெயமோகனிடம் அந்தக் குறும்படங்கள் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவர் அந்த நிமிடம் அதைச் சொல்ல காரணம் என்ன? அதனால்தான் அவர் ஆசான். ஆசான்கள் வழிதான் நம் மனம் மேலும் பக்குவமடைகிறது. அவர்களின் மேன்மைகளை கொஞ்சம் அள்ளி நம்மீது பூசிக்கொள்கிறோம்.
இந்த மூன்றும் இலக்கியச் சூழலில் நம் நேர்மையை அறத்தை உறுதி செய்பவை. இதில் விலகும்போது எதிர்ப்புகள் உங்களை பாதிக்கும். விலகாதவரை அறமே உங்களை காக்கும். வாழ்வை பார்க்க இரு கோணங்கள் உள்ளன. ஒன்று நேருக்கு நேராக காணுதல். அதில் நம் கண்களுக்குச் சிக்கல்கள் மட்டுமே தெரியும். மேலிருந்து பார்க்கும் பார்வை மற்றொன்று. முன் வாசலில் சிக்கல்கள் வடிவமைத்துக்கொடுக்கும் பாதை உங்களை அழைத்துச்சென்று பயணிக்க வைக்கும் புதிய தடங்களை அதில் நீங்கள் காண்பீர்கள்.
பாரதி, இன்று எனக்குப் பிறந்தநாள். முப்பத்து எட்டு வயதில் இவற்றையெல்லாம் நினைப்பதும் எழுதுவதும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.