
உலகியல் சார்ந்த அடைவுகள் குறித்த பதிவுகளை நான் பொதுவாகவே எழுதுவதில்லை. அவை பெரும்பாலும் தொழில்திறனோடும் அதன் லாபங்களோடும் தொடர்புடையவை. தொழில் சார்ந்த அடையாளத்தை தனது அடையாளமாகக் கொண்டிருப்பவர்களுக்கு அதுவே முதன்மையானது. அரசாங்கக் கருத்தரங்குகளில் கலந்துகொள்வது, உயர்பதவிகளை அடைவது, சொத்துகள் வாங்குவது, இயக்கங்களின் செயற்குழுவில் இருப்பது, தொழில் சார்ந்த விருதுகள் வாங்குவது போன்றவற்றை வெற்றிகளாக நம்புபவர்கள் தாங்கள் செய்யும் தொழிலை தங்கள் அடையாளமாகக் கொண்டிருப்பவர்கள். அது தவறும் அல்ல.
நான் என்னை எழுத்தாளனாக மட்டுமே உணர்பவன். எனவே, தொழில் சார்ந்த முன்னேற்றங்களில் ஆர்வம் காட்டாதது போலவே அதையொட்டிய இலாபங்களுக்காக எனது வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்டதில்லை. விரைவு பணி ஓய்வு பெறுவதும் முழு நேர எழுத்தாளனாக இருப்பதுவுமே இன்றைய எனது கனவு. இந்த நிலையில்தான் டாக்டர் சண்முக சிவா தூண்டுதலில் நான்கு ஆண்டுகளுக்கு முன் முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கினேன்.
தொடக்கம் முதலே நான் ஒரு சாராசரி மாணவன்தான். தொடக்கம் என்றால் ஆரம்பப் பள்ளி முதல். முதலாம் வகுப்பில் நான் சில மாதங்கள் பள்ளிக்கே செல்லவில்லை. அச்சூழல் எனக்கு உவக்கவில்லை. கந்த சஷ்டி கவசமும் சிவபுராணமும் மனனமாகப் பாடியதால் மட்டுமே என் வகுப்பு ஆசிரியர் வியந்து என்னை வகுப்பில் பக்தியுடன் இணைத்துக்கொண்டார். இடைநிலைப் பள்ளியில் படிவம் மூன்றை முடித்த பிறகு அறிவியல் பிரிவு வகுப்பு எனக்குக் கிடைத்தது. அது பலரும் ஏங்கிக்கொண்டிருக்கும் வாய்ப்பு. அப்போது இந்திய மாணவர்கள் பலருக்கும் மருத்துவராகும் கனவு இருந்ததால் அதற்கான பாதையாகவே அதைக் கருதினர்.
முதல்நாள் அவ்வகுப்பினுள் நுழைந்தபோது பெரும்பாலும் நீலநிற உடை அணிந்த கட்டொழுங்கு மாணவர்களே இருந்ததால் கெஞ்சிக் கூத்தாடி என் நண்பர்கள் அதிகமிருந்த வணிகவியல் வகுப்பில் சேர்ந்தேன். படிவம் ஐந்தை முடித்த பிறகு மற்றுமொரு அதிசயம் நடந்தது. அன்றைய மாணவர்களின் லட்சியமாக இருந்த படிவம் ஆறுக்கான வாய்ப்பு இந்திய ஆண் மாணவர்களில் எனக்கு மட்டுமே கிடைத்திருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்க காரணமும் இருந்தது.
இடைநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஓர் இந்தியர். மிகக் கண்டிப்பானவர். எந்த மாணவனையும் அறைந்து விடுவார். எங்கள் பள்ளியில் கட்டொழுங்குப் பிரச்சனை அதிகம் இருந்ததாலும் பழைய பள்ளியில் அவர் மேல் ஏராளமான புகார்கள் இருந்ததாலும் அவர் அங்கிருந்து எங்கள் பள்ளிக்கு மாற்றப்பட்டார். வந்த கொஞ்ச நாட்களிலேயே அவர் எனக்கு ஹாந்து (பேய்) என பெயர் வைத்திருந்தார். சண்டையில் மாட்டிக்கொண்ட எங்கள் நண்பன் ஒருவனை பள்ளியை விட்டு நீக்கும் அவர் நடவடிக்கைக்கு எதிராக நண்பர்களைத் திரட்டிக்கொண்டு வகுப்பினுள் நுழையாமல் போராட்டம் நடத்தியது அதற்கு முக்கியகாரணம். நீக்குவதாக இருந்தால் நண்பனுடன் சண்டையிட்ட வேற்று இன மாணவனையும் நீக்க வேண்டும்; இல்லாவிட்டால் நண்பனையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது பரிந்துரை. இறுதியில் நண்பன் சேர்த்துக்கொள்ளப்பட்டான். அப்போதிலிருந்து எதிலாவது சிக்கலில் மாட்டிக்கொண்டால் சட்டை காலரினுள் மறைத்து வைத்திருக்கும் நீள முடியைப் பிடித்து இழுத்து ‘ஹாந்து ஹாந்து’ என உலுக்குவார். அவரது நம்பிக்கைக்குரிய மாணவர்களுக்கு படிவம் ஆறு கிடைக்காமல் எனக்குக் கிடைத்ததில் அவர் அதிர்ச்சியாகி போனார்.
படிவம் ஆறு பயில கூலிம் நகரில் அமைந்துள்ள இடைநிலைப்பள்ளியில் இணைந்தேன். இரண்டு வாரங்கள் மட்டுமே என்னால் அவ்வகுப்பு மாணவர்களுடன் ஒன்ற முடிந்தது. எந்த நேரமும் படித்துக்கொண்டே இருக்கும் மாணவர்கள் அலுப்பை மூட்டினார்கள். வகுப்பில் ஆசிரியர் இல்லாவிட்டாலும் தடிப்பான புத்தகங்களை மேசை மீது எடுத்து வைத்து வாசிக்கும் அபத்தமான காட்சியையெல்லாம் என்னால் சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை.
ஒருநாள் வகுப்பில் எழுந்து, ஏலம் விடுவதுபோல நான் வாங்கி வைத்திருந்த படிவம் ஆறுக்கான புதிய புத்தகங்களை குறைந்த விலையில் யாருக்கு வேண்டுமோ அவர்களுக்கு விற்றேன். மறுநாள் பள்ளிக்குப் போகப் போவதில்லை என வீட்டில் அறிவித்தேன். நண்பர்கள், சுற்றத்தார், எனப் பலரும் என் முடிவால் எனக்கு இனி எதிர்காலம் இல்லை என வருந்தினர். வீட்டுக்கு ஒருவரையாவது பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதுதான் அன்றைய குடும்பங்களின் லட்சியம்.
நான் பதினாறு வயதில் எழுதத் தொடங்கியிருந்தேன். எழுத்தாளனாக உருமாறும் வேட்கை எனக்குள் பெருகிக்கொண்டிருந்தது. கோலாலம்பூரில் வாழ்வது மட்டுமே என் கனவுகளைப் பூர்த்தி செய்யுமென்று நம்பினேன். கோலாலம்பூருக்கு வந்த சிறிது நாட்களிலேயே இலக்கியத்திற்கான இடம் மலேசியாவில் என்ன என்று புரிந்துகொண்டபோது ‘மன்னன்’ ஆசிரியர் அருண் ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு விண்ணப்பிக்கக் கூறினார். தமிழ்ப்பள்ளி ஆசிரியர் பணி என்பதால் ‘அனா ஆவன்னா’ கற்கும் எளிமையான கல்வியாக இருக்கும் என்று நம்பி விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்வுக்குச் சென்ற பலருக்கும் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘கஷ்டமான கேள்வி’ என விழி பிதுங்கித் திரும்பினர். நான் சென்று அமர்ந்தபோது அனைவரிடமும் கேட்கப்பட்ட கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. “நீயாவது ஏதேனும் நாவல் வாசித்திருக்கிறாயா?” மிக சாதாரணமாக நானே ஒரு தொடர்கதை எழுதியுள்ளதாகக் கூறவும் மலாய் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார். வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறேன் என்று கேட்கவும் பட்டியலிட்டேன். எனக்கு கல்லூரியில் எளிதாக இடம் கிடைத்தது.
கல்லூரிப் படிப்பு நான் நினைத்ததுபோல் இல்லை. ஒருமுறைகூட தமிழ்ப் பாடத்தில் ‘ஏ’ பெற்றதில்லை. தடிமன் தடிமனாக வண்ணத்தாள்களில் ஆய்வேடு அனுப்பும் சாமர்த்தியமும் குறிப்புகளை மனனம் செய்து வாந்தியெடுக்கும் லாவகமும் எனக்கு வாய்க்கவில்லை. சோதனைகளில் பதில் எழுதிவிட்டு மிக விரைவாக வகுப்பிலிருந்து வெளியேறும் மாணவர்களில் நான் முதன்மையானவன். ஒருவாறாக ஆசிரியர் பயிற்சிக்கான டிப்ளோமாவை முடித்துவிட்டு அடுத்து சில வருடங்களில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தேன். அது சுலபமானது. எல்லா பாடத்திற்கும் பாட நூல்கள் இருக்கும். ஒவ்வொரு பாட நூலிலும் உள்ள பத்துத் தலைப்புகளில் எனக்குப் பிடித்த ஐந்து தலைப்புகளை மட்டும் கதைப்புத்தகம் படிப்பதுபோல படித்து வைத்துக்கொள்வேன். சோதனைகளில் கேள்வி என்னவாக இருந்தாலும் பதிலை இந்த ஐந்து பகுதியிலிருந்து மட்டுமே கதை கதையாக எழுதுவேன். அப்படி எழுதியே Dean List வரிசையில் தேர்ச்சி கிடைத்தது. இதோடு கல்விக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று நினைத்தபோதுதான் சண்முகசிவாவினால் முதுகலைக் கல்வி தொடங்கியது.
முதுகலைக் கல்வியைத் தொடங்கியபோது விளையாட்டுத்தனமாக இருந்தாலும் ஒரு தரமான ஆய்வேட்டின் தேவை என்ன என்பதை விஜயலட்சுமி வழி அறிந்தேன். ஒருவாறாக ஆய்வைத் தொடங்கியபோது மேற்பார்வையாளராக (supervisor) இணைப் பேராசிரியர் முனைவர் சபாபதி அவர்கள் இருந்தார். அவர் வழிகாட்டுதலில் ஆய்வு தொடங்கியது. சில சிக்கல்களால் இடையில் எனது ஆய்வுப்பணியைத் தொடராமல் விட்டபோது திரு பி.எம். மூர்த்தி, டாக்டர் சண்முக சிவா, முனைவர் சபாபதி ஆகியோர் என்னைத் தொடரச் சொல்லி வழியுறுத்திக்கொண்டே இருந்தனர்.
ஒரு வருடம் ஒன்றும் செய்யாமல் சும்மாவே இருந்தேன். மீண்டும் தொடங்கியபோது முனைவர் சபாபதி பணி ஓய்வு பெற்றிருந்தார். புதிய மேற்பார்வையாளராக இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் நியமிக்கப்பட்டிருந்தார். ஆய்வேட்டை வடிவமைப்பதின் நுட்பங்களை முனைவர் கிருஷ்ணன் மணியம் வழி மேலும் தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது. அவர் என் தரவுகளைச் செம்மைப்படுத்தினார். தலைப்பை மாற்றியமைத்தார். கவனத்தை ஒன்று குவித்தார். எனவே அது புது வடிவம் கொண்டு தீவிரமாக உருபெறத் தொடங்கியது.
ஒரு பணியைத் தொடங்கும்போது அப்பணியை இன்னொருவரால் செய்துவிட முடியுமென்றால் அதை நான் செய்யாமல் இருப்பதே நல்லதென்று நினைப்பேன். எனவே, இந்த ஆய்வேடு எனக்கானதாக இல்லாமல் பொதுவெளியில் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதில் எனக்குத் தனித்த கவனம் இருந்தது.
இவ்வாய்வு நடவடிக்கையின் எனக்குக் கிடைத்த தனிப்பட்ட அனுபவங்கள் இரண்டு. முதலாவது, ஒரு ஆய்வை மேற்கொள்ளும் தொழில்நுட்பத் திறனை ஓரளவு கிடைக்கப்பெற்றேன். இரண்டாவது, 2006 முதல் 2016வரை மலேசிய இலக்கிய இதழ்களிலும் தொகுப்புகளிலும் தனிநபர் தளங்களிலும் வெளிவந்த 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு எனது இவ்வாய்வு சிறிய பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறேன். ந. பாலபாஸ்கரன் மலேசிய சிறுகதைகளுக்காக 1980கள் வரை வகுத்திருந்த நான்கு காலகட்டங்களே மறுபடி மறுபடி பிற ஆய்வுகளில் பின்கோடிடப் படுகின்றன. 1980களிலிருந்து 2016வரை உள்ள காலகட்ட இலக்கியப்போக்கை தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து மேலும் நான்கு காலகட்டங்களை வகுத்தேன். அத்துடன், 2000 முதல் 2016 வரையான ஆண்டுகளில் மலேசிய இளம் படைப்பாளிகளின் சிறுகதைகளில் உள்ள உளவியல் தன்மையறிய சிக்மன் பிராய்டு, கார்ல் யாங், மெல்வின் சீமன் போன்றவர்களின் கோட்பாட்டு ரீதியான அணுகுமுறைகள் துணைபுரிந்தன. அனைத்திற்கும் மேலாக வல்லினம் மலேசிய இலக்கியத்தில் எவ்வாறான ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆய்வின்வழி நிரூபணம் செய்ய முடிந்தது.
இந்த ஆய்வை மேற்கொண்டபோதுதான் மலாயாப் பல்கலைக்கழகத்தில் அந்நியமாதல் குறித்த எவ்வித ஆய்வுகளும் இதற்குமுன் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. எனவே, இந்த ஆய்வு கோட்பாட்டு ரீதியாக, உள்ளடக்கம் ரீதியாக புதுமையைக் கொண்டுள்ளதில் எனக்கு மகிழ்ச்சியே. அதோடு, மலேசியச் சிறுகதை இலக்கியத்தின் காலகட்டத்தை அதன் உள்ளடக்கத்தையும் வரலாற்றுச் சூழலையும் கணக்கில் கொண்டு காலவரிசைப்படி வகுக்க முடிந்ததில் நிறைவு ஏற்பட்டது.
ஆய்வைத் தொடங்கியபோது ஒரே மாதத்தில் முடிக்கப்போவதாக வீராப்பாக சம்பளமற்ற ஒரு மாத விடுப்பு எடுத்து ஒன்றுமே செய்யாமல் இலக்கியத்தில் மட்டும் திளைத்திருந்த காலங்கள், ஆய்வை கைவிட்டுவிட எண்ணிய தருணங்கள், மொழிபெயர்ப்பதாக வந்த நண்பர்களின் கூகுள் மொழிபெயர்ப்பால் ஏமாந்திருந்த பொழுதுகள், ஆய்வுக்கான அவகாசம் முடிந்து மேலும் அவகாசம் கேட்டு அலைந்த தினங்கள், ஒவ்வொரு முறையும் ஆய்வுக்குள் நிகழ்ந்த மாற்றங்களால் முதலிலிருந்து ஒவ்வொரு முறையும் தொடங்க வேண்டிய நிர்பந்தங்கள், மலேசியாவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் கறாரான மதிப்பீட்டு தரத்தையும் விதிமுறைகளையும் வைத்திருந்த மலாயாப் பல்கலைக்கழகத்தின் சட்டத்திட்டங்கள் என பல்வேறு அலைக்கழிப்புகளை இந்நேரத்தில் நினைத்துக்கொள்கிறேன். சோர்ந்து போகும்போதெல்லாம் சொற்களாக துணைநின்ற டாக்டர் சண்முகசிவா, செயல்களால் என் பணிகளை எளிமைப்படுத்திய விஜயலட்சுமி, கையறுநிலையில் இருந்தபோது மொழிபெயர்ப்புக்கு தோள்கொடுத்த நண்பர் சரவணன், எச்சூழலிலும் வழிகாட்டுவதற்கான மனநிலையில் இருந்த முனைவர் கிருஷ்ணன் மணியம் ஆகியோரை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.
இன்று ஆய்வேட்டை ஒப்படைத்தபோது அடுத்தடுத்து வரக்கூடிய ஆய்வு மாணவர்கள், இலக்கிய வரலாறு எழுதுபவர்கள் வழியே இது தனக்கான இடத்தைத் தேடிக்கொள்ளும் எனத் தோன்றியது. ஆசிரியர் பணிபுரியும் என்னைப் போன்ற ஒருவருக்கு ஊதிய வளர்ச்சிக்கோ, பதவி உயர்வுக்கோ முதுகலைக் கல்வி எவ்வகையிலும் துணைபுரியாது. முனைவர் பட்ட ஆய்வை (பிஎச்டி) மேற்கொள்ளவும் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் வாசலை திறந்துவிடவுமே பெரும்பாலும் அது உதவுகிறது. எனக்கு இந்த இரு ஆசைகளும் இல்லை. இளங்கலைக் கல்வியைப் போலவே முதுகலைப் பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்ளப்போவதில்லை. இந்த ஆய்வின் உழைப்பு மலேசிய இலக்கியத்தின் ஆய்வுலகுக்கு ஓரளவாவது துணை நிற்கும் என்பதும் அது எனக்கு உலகியல் சார்ந்த அடைவல்ல என்பதுமே இன்றைய எனது நிறைவு.