நேர்காணலைக் கேட்டேன். மிகவும் தெளிவான பதில்கள். நிச்சயமாக மலேசிய இலக்கியம் குறித்த ஆழமும் அகலமும் எனக்கும் அதிலிருந்தே புலப்பட்டது. இரண்டு கருத்துகள் அல்லது கேள்விகள் எனக்குத் தோன்றியது. உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
1.மலேசியாவில் தீவிர/வணிக இலக்கிய வகைமைகள், வாசகப் பரப்பு வேறுபாடு என்பது குறைந்து வருகிறது/அல்லது ஒட்டுமொத்தமாகவே வாசகப் பரப்பு என்பது குறைவானதாக இருக்கிறது.
2. பருவக்காலப் பறவைகள் தொடங்கி பேய்ச்சிக்குச் செல்லும் அந்த வாசிப்பு, எழுத்து அலைவு இல்லாமை. எடுத்தக் கணமே நவீனையும் ஜெயமோகனையும் வாசிக்கத் தொடங்குகிறவர்கள் அதன் ஆழத்தை அறிய இன்னும் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது.
அர்வின் குமார்
அன்பான அர்வின்,
மலேசியத் தமிழ் இலக்கியத்தில் நடந்த அபூர்வ நிகழ்வென்றால் அது கு.அழகிரிசாமியின் வருகையைச் சொல்வேன். மரபிலக்கியம் அறிந்த நவீன எழுத்தாளர். அந்தத் தமிழ் நேசன் ஆசிரியர் பொறுப்புக்கு ஒருவேளை ஜெயகாந்தனே வந்து அமர்ந்திருந்தாலும் மலேசிய இலக்கியம் குறித்த வகுப்புகளும், வாசிப்புப் பயிற்சிகளும், அதை ஒட்டிய விவாதங்களும் நடந்திருக்குமா? ஒரு படைப்பாளி என்பதை மீறி ஒரு நாட்டின் இலக்கியச் சூழலை மாற்ற வேண்டும் என முனைப்புள்ள மிகப்பெரிய ஆளுமை ஒருவர் இங்கு ஐந்து ஆண்டுகள் செயல்பட்டுள்ளார் என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை. அந்தத் தொடக்கம் மெல்ல திராவிட இலக்கியம், லட்சியவாத இலக்கியம் எனச் செல்வதை அன்றைய வரலாற்றுச் சூழலுடன்தான் புரிந்துகொள்ள முடிகிறது.
மலேசியத் தமிழ்ச் சமுதாயத்திற்கு உண்மையான அர்ப்பணிப்புடன் உழைத்த கோ.சாரங்கபாணி, தோட்டங்களை வாங்க உழைத்த துன்.வி.தி.சம்பந்தன் போன்றவர்கள் ஒரு சமுதாயத்தின் சிந்தனை எழுச்சிக்குக் காரணமாக இருந்தனர். அந்தச் சிந்தனை எழுத்தாளர்கள் வழியும் வெளிப்பட்டது. அப்படித்தானே இருக்கும். மக்களிடம் கொந்தளித்த சுதந்திர தாகம்தானே பாரதியின் பாடல்களில் வெளிபட்டன.
சிக்கல் தொடங்கும் இடம் வானம்பாடியில். எழுபதுகளில் எங்கெல்லாம் புத்திலக்கியத்தை ஒட்டிய குரல் எழுகிறதோ அதையெல்லாம் தனதாக்கிக்கொண்டது. எங்கெல்லாம் இளைஞர்களின் புதிய முயற்சி தொடங்குகிறதோ அதற்கெல்லாம் ஆதாரவு தெரிவித்தது. இன்று யோசிக்கையில் வானம்பாடி அன்றைய இளைஞர்களையும் அவர்களின் இலக்கிய தேடல்களையும் உள்ளிளுத்துக்கொண்டது தனது வணிகத்துக்காக மட்டுமே என்று தோன்றுகிறது.
நாளிதழ்களை மட்டுமே நம்பியிருந்த அன்றைய இளம் படைப்பாளிகளுக்கு வார இதழான வானம்பாடியின் வருகை பெரும் களமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக மாதம் ஒரு நாவல் முயற்சியென தொடங்கி அதையும் பரவலாக வணிகம் செய்தது. அவற்றில் 7 மட்டும் கையில் கிடைத்து வாசித்தேன். ராணி முத்துவின் தரம்.
இதை நான் சொல்ல காரணம் தமிழகத்திலிருந்து மலேசியா வந்து, ஒரு தினசரியில் ஞாயிறு ஆசிரியராகப் பணியாற்றிய கு.அழகிரிசாமிக்கும் மலேசிய புத்திலக்கியத்தை முன்னெடுப்பதாகச் சொல்லிக்கொண்ட வானம்பாடிக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் வணிக நோக்கம். தமிழகத்தில் மிகத்தெளிவாக இந்த வணிக நோக்கத்தை வெளிப்படுத்தி இதழியல் முயற்சி நடந்தது என்றால் மலேசியாவில் தமிழை வளர்ப்பதாக, இலக்கியத்தை வளர்ப்பதாக போலி பாவனைகள் செய்து இந்த வணிகத்தைத் தொடர்ந்தனர்.
இன்றும் வணிகம் செய்ய ஏற்ற கச்சா பொருளாக ‘தமிழ் வளர்ப்பும், இலக்கிய வளர்ப்பும்’ உள்ளதை கவனிக்கலாம். காலகாலமாக இதை வைத்து வணிகம் செய்பவர்கள் தீவிர இலக்கியத்திற்கு வணிக இலக்கியத்திற்குமான இந்த வித்தியாசம் தெரியக்கூடாது என்பதை உணர்ந்தே செயல்படுகின்றனர். இலக்கியம் குறித்த புரிதல் இல்லாதவர்கள் இதுபோன்றவர்களை நம்பி பணத்தை வாரி இறைக்கின்றனர். நாம் இந்த வித்தியாசத்தைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அதன் பின் நடக்கும் வணிகத்தைச் சுட்ட வேண்டியுள்ளது.
வானம்பாடியில் இருந்து, அல்லது அதனை முன்னெடுத்தவர்களின் முகாமில் இருந்து புறப்பட்டு வந்தவர்கள் இன்றுவரை இதழியலில் இயக்கங்களில் செய்துவரும் அரசியலைப் பாருங்கள். சினிமா கிசு கிசுக்களையும் மேம்போக்கான படைப்புகளையும் தாங்கிவரும் இதழைக் காட்டி ஆண்டு சந்தா செலுத்தினால் மலேசியாவில் தமிழ் வளரும் என்கிறார்கள். வைரமுத்துவுக்கு இங்கு விழா எடுப்பது தமிழ் இலக்கியத்தை வளர்க்க என்கிறார்கள். யாரெல்லாம் மீடியக்கர் (mediocre) எழுத்தாளர்களோ அவர்களெல்லாம் புலனத்தில் ஒன்று சேர்ந்து அவர்களைப் போன்ற ஒரு மீடியக்கரை முன்னிலைப்படுத்த முயல்கிறார்கள். இவர்களின் நோக்கம் இலக்கியம் அல்ல. வணிகம் கொஞ்சம் கூடுதலாகப் போனால் அடையாளம்.
வேறு வழியில்லை. எது இந்நாட்டின் தரமான இலக்கியம்; யார் இலக்கியத்தின் முகம் என இன்னொரு தரப்பாக நின்று பேசியே தீரவேண்டியுள்ளது. அதுதான் இன்று நமது வரலாற்றின் கடமை. மற்றபடி என் அனுபவத்தில் தீவிர இலக்கிய வாசிப்பாளர்களின் எண்ணிக்கை மலேசியாவில் அதிகரித்துள்ளதை வல்லினம் செயல்பாடுகள் வழியாக உணர்கிறேன்.
இரண்டாவது கேள்விக்கு, எடுத்த உடனேயே நல்ல படைப்புகளை வாசிப்பதுதான் சிறந்தது. நான் சுஜாதா, ஜெயகாந்தன் எனத் தொடங்கினேன். ஆனால் இவர்களைவிட பதினேழு வயது தொடங்கியே ஓஷோவை தொடர்ச்சியாக வாசித்ததன் விளைவு என்னால் தி.ஜா, கு.அழகிரிசாமி, சு.ரா என எளிதாகப் புக முடிந்தது. எங்கு சென்றாலும் ஓஷோவில் நூல் ஒன்று என்னுடன் இருக்கும். எனவே பிற நூல்களை வாசிப்பது எளிமையாக இருந்தது. ஜெ ஜெ சில குறிப்புகள் ஏன் வாசிக்க சிரமம் எனச் சொல்கிறார்கள் என குழம்பினேன். புவியரசுவின் மொழிப்பெயர்ப்பின் வழி என்னால் ஓஷோவின் கவித்துவமான வரிகளை அடைய முடிந்தது. எனவே நவீன கவிதைகள் வழங்கும் கவித்து அனுபவங்களையும் உணர முடிந்தது. ஒருவேளை நான் ஓஷோவை வாசித்திரா விட்டால் மொழியின் நுட்பம் கைக்கூடியிருக்காது என்றே நினைக்கிறேன்.
ம.நவீன்