“புதுசா ஜாய்ன் பண்ணுன மூர்த்தி புரோவுக்காக” என முதல் சியர்ஸில் ஷாம் சொன்னபோதுதான் அவர் முகத்தைத் தெளிவாக கவனித்தேன். மந்தமான மஞ்சள் ஒளியில் கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். மனதுக்கு நெருக்கமாகாத அந்நியத்தன்மையில் முகவெட்டு. சடங்காகப் புன்னகைத்தேன். வாயில் வைக்கச் சென்ற கிளாஸை நிறுத்தி, அவர் பதிலுக்குச் சிரிப்பதற்குள் பார்வையை விலக்கிக்கொண்டேன். ‘மங்கி ஷோல்டரில்’ ஆரஞ்சு பழச்சாற்றைக் கலந்து குடிப்பதன் மகத்துவத்தைக் கண்டுபிடித்தவன் வேதியலை அரைகுறையாய் முடித்த மகா கலைஞனாக இருக்க வேண்டும். எப்போதும் தோன்றுவதுதான். ஒரு மிடறு குடித்துவிட்டு தொலைவியக்கியால் ஒலியைக் கூட்டினேன். ராக்கம்மாள் கையைத் தட்டினாள்.
புதிதாக வந்தவர் வசந்தனின் தொடையுடன் உரசி அமர்ந்திருப்பதிலிருந்து அவன் அழைத்து வந்தவராகத்தான் இருக்கும் என ஊகித்துக்கொண்டேன். பேச்சைத் தொடங்கவே மனத்தடை இருந்தது. புதியவர்களால் உரையாடல்களில் தேவையற்ற சீண்டல்கள் எழும். அது போதையின் அற்புத தருணங்களை வீணாக்கும். அரைமணி நேரம் டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு ‘ஸ்வானுக்கு’ வந்து சேர்ந்த ஆர்வமெல்லாம் பாலாகும்.
“கதிர் இன்னும் வரலயா?” ஏதாவது பேச வேண்டும் என்றுதான் கேட்டேன். எங்களுக்கென இருந்த வாட்சப் குழுவில் அவன் கேர்ள் பிரண்டை பத்துமலை கோயிலில் இறக்கிவிட வேண்டுமென்பதால் வரத் தாமதமாகும் என மன்னிப்புக்கேட்டிருந்தான்.
“வரலன்னு தெரிஞ்சிருந்தா கிளாஸுல கைய வச்சிருக்க மாட்டியா நீ? அவ்வளோ டீசன்டா?”
ஷாம் சொல்வதை நான் காதில் வாங்காததுபோல வாத்துக்கறியை எடுத்துக் கடிக்க ஆரம்பித்தேன். ஷாம் சகலத்தையும் வாங்கி வந்து மேசையில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பவன். அவனுக்கு என் வாத்துக்கறி ஈடுபாடு தெரியும்.
“எப்படிடா போவுது ஷூட்டிங்?” வசந்தன் கொஞ்சம் தயங்கியபடிதான் கேட்டான். அவன் முன்னமே குழுவில் இப்படி ஒருவரை அழைத்து வரப்போவதைச் சொல்லியிருக்கலாம். இருபது வருட நட்பு. அவனுக்குத் தெரியும் என் கோபமும் கடுப்பும்.
“போவுது போவுது. அந்த டத்தோ புரோடியூசர்ங்கறதால அந்தாளோட பொண்டாட்டிய கதாநாயகியா போடச் சொல்லி ஒரே இம்ச. மேக்கப்ப அப்பிக்கிட்டு வந்து பக்கத்துல நிக்கிறாங்க. ஒரே சிரிப்புல கையில இருக்குற அத்தன ரேகையும் மூஞ்சில தெரியுது.”
“தடவி ஜோசியம் பாக்க வேண்டியதுதானே” ஷாம் சிரித்தான்.
“அந்தம்மா நான் செக்கன்டரி படிக்கும்போது பாட்டுப்பாடி டிவி ஷோவுல ஆடிக்கிட்டிருந்துச்சி. டத்தின் ஆன பெறகும் இன்னமும் அதையே செஞ்சி உசிரெடுக்குது. இதுல நான் நல்லா நடிக்கிறேன்னு பாராட்டு வேற. இந்தப் பொழப்புக்குப் பேசாம கிராப் ஓட்டப்போவலாம்”
“செங்கமலம் படத்த நான் பார்த்தேன் சார். நல்லா நடிச்சிருந்தீங்க,” மூர்த்தி எந்தத் தயக்கமும் இல்லாமல் இயல்பாகப் பேசினார். குரலில் நல்ல அழுத்தம். நிச்சயம் நாற்பது வயதைத் தாண்டியவர். வசந்தனுடன் இன்சூரன்ஸில் வேலை செய்பவராக இருக்க வேண்டும். அவர்களால்தான் புதிய நபர்களிடமும் பத்துவருடம் பழகியதுபோல உறவாடமுடியும்.
“அந்தப்படத்ததான் ஃபேஸ்புக்குல ஒருத்தன் படத்துக்குப் பேற பாதியா வச்சிருக்கலாமுன்னு கிண்டலடிச்சிருந்தானே,” ஷாம் சிரித்தான்.
“ஷிட்!”
“அதுதான்,” ஷாம் மீண்டும் சிரித்தான்.
“நீயேண்டா டென்ஷன் ஆகுற. ரெண்டு சக்ஸஸ் படம் கொடுத்திருக்க. மலாய்க்கார புரொடியூசர் ரெடியா இருக்காரு. அடுத்த படம் பண்ணலாம் நீ” வசந்தன் கொஞ்ச நாளாக இதைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறான். பணம் போட இளிச்சவாயன் யாராவது கிடைத்தால் பேய் படம் எடுத்துத்தள்ளும் கூட்டத்துக்கு மத்தியில் எனது இரண்டு திரைப்படங்களையும் எல்லா இனத்தவர்களும் பார்த்துக்கொண்டாடவும் தேசிய விருதுகளைப் பெறவும் கதையில் இருந்த உண்மைத் தன்மைதான் காரணம். ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்குமே மூன்று வருட இடைவெளி. இரண்டாவது படம் முடித்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. வாழ்வோடு ஒட்டாத கதையை என்னால் திரைப்படமாக நினைத்துப் பார்க்க முடிந்ததில்லை. ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை தொடர்ந்து நிலைக்க ஏதோ ஒரு வடிவத்தில் உள்ளே இயங்கிக் கொண்டிருக்கவேண்டியுள்ளது. அதனால் கிடைக்கும் வேடங்களில் நடிக்கச் சென்றேன்.
“கதை எதுவும் ஸ்ட்ராங்கா நிக்கல மச்சி.”
“அதுதான்… நான் முன்னால சொன்னேன்ல. எங்கூட வேலை செய்யுற ஒருத்தர் நல்ல கதையோட இருக்காருன்னு. நீ கூட ஒருநாள் மீட் பண்ணலாமுன்னு சொன்னியே…”
எனக்கு இப்போது வசந்தன் அவரை அழைத்து வந்திருக்கும் நோக்கம் புரிந்தது. அவர் தொழிலை முன்னமே அனுமானித்ததில் ஒரு ‘சபாஷ்’ சொல்லிக்கொண்டேன். பொதுவாக நண்பர்கள் என் தொழிலில் தலையிடுவதை நான் அனுமதிப்பதில்லை. ஷூட்டிங் பார்க்கக்கூட எவ்வளவு கேட்டும் இசைந்ததில்லை. கதைகளையும் விவாதிப்பதில்லை. படம் பார்த்து விமர்சனம் சொன்னாலும் பெரிய ஈடுபாடு இல்லாததுபோல முகத்தை வைத்துக்கொள்வேன். அதிகம் இடங்கொடுப்பது எங்களுக்குள் மன ரீதியில் பிளவுகளை உண்டாக்கலாம். எங்காவது ஈகோ சீண்டப்பட்டால் சிக்கல். இந்தச் சூழலைத் தவிர்ப்பதெப்படி என யோசிக்கத் தொடங்கினேன்.
“இல்லடா. நீதான் கதையில லைவ் இருக்கணுமுன்னு சொல்லுவேல்ல. இது இவரோட வாழ்க்கையில நடந்த கதை. கொஞ்சம் கேளேன். சுவாரசியமா இருக்கும். நீ படமா எடுக்க வேண்டியதில்ல. சும்மா… இன்ட்ரஸ்ட்டா இருக்கும். கேக்குறியா? பொழுத ஓட்டன்னு வச்சுக்கயேன்,” இதைச் சொல்லும்போது மூர்த்தி வசந்தனின் தொடையை அழுத்தினார்.
இப்படி ஒருவன் சொன்ன பிறகு கேட்காமல் போனால் அது மூர்த்திக்கு மட்டுமல்ல வசந்தனுக்கும் அவமானம்தான் என்பதால் கிளாஸில் ஒரு ஐஸ் கட்டியைப் போட்டுக்கொண்டே தலையாட்டினேன்.
வசந்தன் தொலைவியக்கி வாங்கி எதிரில் இருந்த கணினித் திரையை அணைத்தான். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மெல்லிருட்டு அறை குளிர்வதுபோல இருந்தது. அமைதி குளிர வைக்குமா என்ன? தன் கிளாஸில் பியரை ஊற்றி நிரப்பி அதை ஒரே மடக்கில் குடித்த மூர்த்தி கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
“நாலு மாசத்துக்கு முன்ன ஒரு கனவு சார். சரியா சொல்லனுமுன்னா எங்கப்பா எறந்த ஒரு மாசத்துக்குப் பிறகு. தியேட்டர்ல லைட் அடச்ச ஒடனே படம் போடுற மாதிரி, தூக்கம் வந்ததும் சட்டுனு கனவும் வர ஆரம்பிச்சிடும். தலைக்கு மேல பெரிய கொண்டையோட ஒரு பொண்ணு. அவ கொண்டையில ஒரு பெரிய வெள்ளைப் பூ. ஆனா கண்ணுல எந்த உணர்வும் இருக்காது. அந்தப் பொண்ணு ஒரு வார்த்த பேச மாட்டா. சிரிக்க மாட்டா. ஆனா, மணிக்கணக்கா கனவுல என்னைய அப்படியே பார்த்துக்கிட்டு இருப்பா. இமை அசையாது. செல சமயம் எவ்வளவு எழுப்பியும் எழுந்திரிக்காம அந்த முகத்தையே நானும் சலிக்காம பாத்துக்கிட்டு இருந்திருக்கேன். அவ்வளவு நீளமான கனவு. ஆனா அசைவில்லாத கனவு சார். மொதல்ல அந்தப் பொண்ணு யாருன்னு குழம்பினேன். அப்பா பிஸ்னஸ பாத்துக்க அடிக்கடி வெளியூர் போகும்படி ஆயிருச்சி. அப்ப அப்படி இப்படி இருக்கிறதுண்டு.”
“சூப்பர் கத சார். மச்சி இந்த சீன்ல நானே டூப் போட்டு நடிக்கிறன்டா” என ஷாம் விஸ்கி நிரப்பிய கிளாஸை கொடுத்து “கதையில கசா முசா சீனுக்காக சியர்ஸ்” என்றான். எங்களில் ஷாமுக்குதான் அளவாக ஆரஞ்சு சாற்றை கலக்கத் தெரியும். மங்கி ஷால்டர் அமிர்தமாக இருந்தது.
“நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல சார். அவங்கள்ள எந்த முகமும் இல்ல. இது வேற. இது எனக்கு நல்ல பழக்கமான முகம். நான் அடிக்கடி பாத்து பழகுன முகம். ஆனா யாருன்னே ஞாபகத்துக்கு வரல. அந்தப் பொண்ண எப்படியும் கனவுல பேச வச்சிரனமுன்னு தூங்குறதுக்கு முன்ன மனசுல ஆழமா சொல்லிட்டுப் படுப்பேன். ஒரு மூவ்மெண்ட் இல்லாம ஒரு நாள் முழுக்கவும் கனவுல என்னைய அந்தக் கண்கள் பாத்துக்கிட்டே இருக்கும். ஒருநாள் ராத்திரி முதன்முறையா நா கொஞ்சம் வெறுப்போட அந்த மொகத்துக்கிட்டேருந்து தள்ளிப் போனேன். அது எனக்கு நிஜத்துல இருந்த வெறுப்பு. அப்பதான் கவனிச்சேன் சார். அது ஒரு ஃபோட்டோ. ஆமா சார். சுத்திலும் பிரேம் போட்டிருந்திச்சி. அது ஒரு ஃபோட்டோவேதான். சட்டுனு மூளையில ஒரு ஸ்பார்க். அது என் அம்மாவோட ஃபோட்டோனு மனசு சொல்லுச்சி. பிடிவாதமா கண்ணத் தொறந்தேன். சார்… அது என் அம்மாவேதான் சார்.”
அவர் நிறுத்தியபோது அறையின் அமைதி அச்சமளித்தது. கனவுகள் எப்போதும் குறியீடுகளாக வருபவை. அவர் சொல்லும் கனவுக்காட்சியைத் திரையில் காட்டுவது கிரியேட்டிவிட்டியாக இருக்காது என நினைத்துக்கொண்டேன்.
“இது ஞாபகம் வந்த அந்த ராத்திரியே அப்பாவோட பெட்டியில ஓடிப்போய் தேடினேன். சார், அப்ப நான் தேடுன வேகத்தப் பாத்துட்டு எம் பொண்டாட்டி எனக்கு ஏதோ பைத்தியம் புடிச்சிருக்குன்னு நெனைச்சிட்டா. ஹாலுக்குக் கொண்டுவந்து அந்தத் தகரப்பொட்டிய உருட்டுனத பாத்துட்டு ரெண்டு வயசு மக அழ ஆரம்பிச்சிடுச்சி. அடியில ஒரு சின்ன டைரிக்குள்ள அந்தப் படம் கெடைச்சது சார். நம்ப மாட்டீங்க. அச்சு அசல் நா கனவுல பாத்த அதே முகம். என் அம்மாவோட பிளாக் அண்ட் வைய்ட் படம்.”
மூர்த்தி படபடப்பாக தன் பணப்பையைத் திறந்து அந்தப் படத்தைக் காட்டினார். அதை அவர் எடுத்த வேகம் அவரை ஒரு பைத்தியக்காரனைப்போலத்தான் காட்டியது. நல்ல அகன்ற நெற்றியும் கூரான மூக்குமாகப் படத்தில் இருந்த பெண் தோற்றமளித்தார். கறுப்பு வெள்ளைப் படத்திலும் அவரது வெண்மை பிரகாசித்தது. இப்போது மூர்த்தியின் முகத்தில் இருந்த அந்நியத்தன்மை புரிந்தது. அவர் ஒரு தமிழரின் முகத்தோரணையில் இல்லை.
“எனக்கு ஒவ்வொன்னா ஞாபகத்துக்கு வர ஆரம்பிச்சது சார். அப்போ எனக்கு அஞ்சு வயசு. என்னோட அப்பா பர்மாவுலேருந்து என்னையக் கூட்டிக்கிட்டு ஊருக்குக் கெளம்பினாரு. அம்மா வாசல்ல அழுதுக்கிட்டே என்னை வாரி அணைச்சி முத்தம் கொடுத்தாங்க. திரும்பத் திரும்ப ஏதோ பர்மா பாசையில சொன்னாங்க. நானும் பதிலுக்கு ஏதோ பேசினேன். ஆனால் இப்ப எனக்கு அந்த பாசையில ஒரு சொல்கூட ஞாபகத்துல இல்ல. ஆனா அவங்க கண்ணுல இருந்த ஏக்கம், துக்கம் எல்லாமே இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு. அவங்க அப்பாகிட்ட ஒன்னுமே பேசல. என்னைய மட்டுமே பாத்து கை ஆட்டுனாங்க. நான் எவ்வளவு தூரம் போய் திரும்பினாலும் அவங்க கை ஆட்டுவது தெரிஞ்சது. ஊர்ல அப்பாவுக்கு வேறொரு மேரேஜ் நடந்துச்சி. புது அம்மா. மலேசியாவுக்கு பிஸ்னஸ் விசயமா வந்தவரு ஒரு வருஷம் கழிச்சி என்னையும் அம்மாவையும் கூட்டிக்கிட்டு வந்து இங்கேயே செட்டலாயிட்டாரு. ஜானகி அம்மாவுக்கு குழந்தையில்ல. என்னைய நல்லாதான் பாத்துக்கிட்டாங்க. அப்பா பிஸ்னஸ் பிஸ்னஸ்னு ஊர் ஊரா சுத்துவாரு.”
“ஒங்களுக்கு அம்மா ஞாபகம் சுத்தமா வரலயா சார்?” ஷாம் கேட்டான். அவன் கதையில் முழுக்க மூழ்கியிருக்கிறான் என நுனி நாற்காலியில் அமர்ந்திருந்த விதத்திலேயே தெரிந்தது.
“இல்ல… ஊருல நிறைய சொந்தம். என் வயசு பசங்க ஜாஸ்தி. அப்பப்ப கேட்டிருக்கேன். நா அழும்போதெல்லாம் அப்பா அம்மாவோட இந்தப் படத்த கையில கொடுப்பாரு. ஊருலேருந்து மலேசியா வந்தபெறகுதான் ரொம்ப அழுத ஞாபகம் இருக்கு. இப்ப நல்லா நெனச்சி பாக்கிறப்ப ஜானகி அம்மா அடிக்கடி பதினெட்டாம் படி கருப்பு கோயிலுக்குக் கூட்டி போயி மந்திரிப்பாங்க. இடுப்புல, கையில கறுப்பு கயிறெல்லாம் கட்டுனாங்க. தாயத்தெல்லாம் போட்டு உட்டாங்க. இதெல்லாம் என் அம்மாவ எங்கிட்டேருந்து மறக்கடிக்கச் செஞ்ச மந்திரமோன்னு இப்ப தோனுது.”
“இப்ப அந்த கயிறு இடுப்புல இருக்கா சார்?” ஷாம் கேட்டான்.
“இப்ப அது ரொம்ப முக்கியமா?” கொஞ்சம் கடுமையாகவே பேசினேன்.
“இல்லடா… நம்ம கதையில மாய மந்திரமெல்லாம் வருது பாத்தியா. படம் நல்லா வருண்டா…” என்றவன் என் கிளாஸில் விஸ்கியை ஊற்றி ஆரஞ்சு பழத்தைப் பிழிந்தான். கையில் கிளாஸைக் கொடுத்து “பேய் சீனுக்காக சியர்ஸ்” என்று அவனாக என் கையில் இருந்த கிளாஸில் இடித்துவிட்டு “நீங்க சொல்லுங்க சார்” எனத் தலையைத் திருப்பிக்கொண்டான்.
“அம்மா எறந்த கொஞ்ச நாளுல்ல அப்பாவும் சீக்காயிட்டாரு. வயித்துல கேன்சர். அப்பவெல்லாம் அடிக்கடி என் கைய புடிச்சி அழுவார். அவர் பார்வையில ஏதோ பெரிய துரோகம் செஞ்சதோட வலி இருக்கும். இறந்ததும் அந்தப் பெட்டியையும் அவரோட பொதைக்கச் சொன்னாரு. ஞாபகமா இருக்கட்டுமுன்னு நா அதச் செய்யல. இந்தக் கனவு வந்து என் அம்மாவோட ஞாபகங்களெல்லாம் ஒவ்வொன்னா வர ஆரம்பிச்சது. அவங்க கடைசியா என் கைய புடிச்சி சொல்லிக்கிட்டே இருந்த அந்த வார்த்த நெஞ்சுக்குள்ள அடைச்சிக்கிட்டு வெளிவரப்பாக்கும். எங்கயோ பக்கத்துலதான் அந்த வார்த்த பறக்குறதாவும் அத புடிச்சிட்டா எங்க அம்மாவ கண்டுபுடிச்சிரலாமுன்னும் படபடக்கும். சில சமயம் அந்த வார்த்தைய ஞாபகப்படுத்த மனசுக்குள்ள பூந்து தேடித் தேடி வாந்தி எடுத்திருக்கேன் சார். அது அவங்க பெயரா? இல்ல என்னோட பர்மா பெயரா? ஒன்னும் ஞாபகத்துல இல்ல. தூக்கம் இல்லாம பைத்தியமா ஆயிட்டேன். பிஸ்னஸ் விசயமா பர்மா போறதா சொல்லிப் புறப்பட்டுட்டேன். அந்த டிராவலிங்கே ரொம்பக் கொடுமையானது சார். இப்ப நினைச்சாலும் நானா எப்படி ஊர் ஊரா அலைஞ்சேன்னு ஆச்சரியமா இருக்கு”
“மியன்மார்ல எந்த ஊருன்னே தெரியாமலா போனீங்க? மை காட்” வெளிநாட்டில் திக்கற்ற பயணம் என்றவுடன் எனக்குக் கதையில் ஒரு பிடிப்பு வந்திருந்தது.
“ஊர் பேரு தெரிஞ்சது சார்… ஓ சாரி நா அத சொல்லலயே” என்றவர் சிரித்தார்.
“ஊரு ஞாபகத்துல இருந்துச்சா?” ஷாம்.
“பலூன்கள் ஞாபகத்துல இருந்துச்சி.” மூர்த்தி.
“பலூன்களா?” என்னுடன் ஷாமும் சேர்ந்தபடி கேட்டான்.
“ஆமா. நல்லா யோசிச்சப்ப என் ஆழ் மனசுல ஊர பத்தி இருந்த ஒரே ஞாபகம் பலூன்கள்தான். சாதாரண பலூன்கள் இல்ல சார்… வானத்துல பறக்குற பெரிய பெரிய ராட்சச பலூன்கள்தான். நா அதை அம்மாவோட அவ்வளவு ஆசையா நின்னு பாத்துருக்கேன். பலூன பிடிச்சிக்கிட்டுக்கு மேல பறக்கணுமுன்னு அம்மாக்கிட்ட அழுதிருக்கேன். நூத்துக்கணக்கான ராட்சச பலூன்கள் சார். அந்த ஒரு க்லூவ வச்சிக்கிட்டு கூகில்ல தேட ஆரம்பிச்சேன். ‘தவ்ங்யிங்’கிற இடத்துல அப்படி ஒரு பெஸ்டிவல் வருஷம் தோறும் நவம்பர்ல நடக்குதுன்னு தகவல் கிடைச்சது. அந்த ஊர் இருக்கிற மாநிலத்த தேடுனேன். சார், நீங்க நம்ப மாட்டீங்க. அந்த ஊரு இருக்கிற ஷாம் மாநிலத்தோட படங்களத் தேடிப் பாக்கப் பாக்க அந்த மண்ணுல ஓடி வெளையாண்ட ஞாபகமெல்லாம் வந்தது. அப்படி நானே நினைச்சிக்கிறனா இல்ல உண்மையாவே பார்த்துருக்கனான்னு முடிவெடுக்கவே முடியல. அன்னைக்கு விடிய விடிய தூங்கல. கூகில் மேப்புல ஷாம் மாநிலம் முழுக்க ஆராய்ஞ்சேன். அப்பதான்… அப்பதான் சார் அத பார்த்தேன். சார் அதே மாநிலத்துல ‘தா பெ’ங்கிற ஊரு இருக்கு. எங்க அம்மா கடைசியா சொன்ன வார்த்த அதுதான் சார். அந்த நிமிஷம் சட்டுனு அம்மாவோட கொரலு கேட்டுச்சி சார். அது எங்க ஊரோட பேரு சார். எங்க அம்மா எவ்வளோ அறிவாளி பாத்தீங்களா? எவ்வளோ அன்பு பாத்தீங்களா? என்னைக்காவது நா வருவேனு எவ்வளோ நம்பிக்க பாத்தீங்களா?”
அவர் அழுதார். தொடர்ந்து பேச முயலும்போது அழுகை முட்டிக்கொண்டு வந்து சொற்களை உடைத்தது. கொஞ்ச நேரம் எல்லாரும் அமைதியாக இருந்தோம். அங்கு அந்த மஞ்சள் ஒளியில் அவரது அம்மாவே அமர்ந்து அழுவதுபோல ஒரு தோற்ற மயக்கம். நான் கனவில் பலூனை பறக்க விடலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன்.
“சார் ஒரு பலூன வச்சிக்கிட்டே ஊர கண்டுப்பிடிச்சீங்கன்னா ஃபுட் பாலோ, நெட் பாலோ கெடச்சா குமரி கண்டத்தையே கண்டுபிடிச்சிருவீங்க சார் நீங்க,” ஷானின் கிண்டலுக்கு யாரும் சிரிக்கவில்லை. ஆனாலும் அவன் பேசட்டும் என தடுக்காமல் இருந்தேன். எல்லோரிடமும் மூர்த்தியின் சோகம் தொற்றியிருந்தது. அதிலிருந்து சீக்கிரம் விடுபட நினைத்தேன்.
“பலூனுக்காக சியர்ஸ்”
“ஊரக் கண்டுபிடிச்ச அந்த ராத்திரி தூக்கமே இல்ல. உடம்பே சிறுசாகி மனச சுமக்க முடியாத மாதிரி தவிச்சது. நா அஞ்சு வயசு பையனா ஆயிட்டேன். பொண்டாட்டி எதப் பேசினாலும் சத்தம்போட்டேன். சுவருல மாட்டியிருந்த எங்கப்பாவோட படத்த தூக்கி மூலையில போட்டேன். ரெண்டு நாளுல புறப்பட்டு அந்த ஊருக்குப் போனேன் சார். இந்த ஒடம்ப தள்ளிக்கிட்டு போனேன். மனசுதான் ஒவ்வொரு நிமிடமும் உருளுதே. எனக்கு வயசானதே அப்பதான் தெரிஞ்சது. மனசு வேகத்துக்கு உருளவோ ஓடவோ முடியல. நஷ்டத்துல ஓடுன எங்கப்பா செஞ்ச மொளகாதூள் பிஸ்னஸ காப்பாத்த ரெண்டு வருஷம் பட்ட பாட்டுல பாதி எனர்ஜி ஒடம்பவிட்டு ஓடிடுச்சி. இப்ப அம்மாவுக்காக ஓடினேன். இங்க மாதிரி இல்ல சார். ரோடெல்லாம் மோசம். ரெண்டு நாளு டிரவல். அந்த ஊரு ரோட்டோரம் அனாதையா நிக்கிற கிழவிங்க மேல அப்படி ஒரு அன்பு பொங்குச்சி. எல்லாருமே யாருக்காகவோ காத்துருக்குற மாதிரியே இருந்திச்சி. ரெண்டு நாளு என்ன சாப்பிட்டேன், எதக் குடிச்சேன்னு எதுவும் ஞாபகம் இல்ல. ஊரு பேர மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிப் பாத்துக்கிட்டேன். ஆனா அங்க போனா பெரிய ஏமாத்தம்.”
கொஞ்சம் நிறுத்தி மூர்த்தி பியரைக் குடித்தபோது அவருக்கு நன்றாக கதை சொல்ல வருகிறதென நினைத்துக்கொண்டேன். மியன்மார் விகாரைகளின் பூமி. அதுவே இங்குள்ளவர்களுக்கு காட்சி இன்பத்தைத் தரக்கூடும்.
“பக்கத்துல ‘மொங் தோன்’ங்கற எடுத்துல அரசாங்கம் பெரிய டேம் கட்டியிருக்காங்க. அந்தப் புரோஜேக்குக்காக அரசாங்கம் பக்கத்துல இருக்குற எல்லா ஊரையும் காலி பண்ணிடுச்சி. சுத்திருயிருக்கிற ஊருல கிராமங்கள்ல உள்ளவங்க எல்லாம் வேற ஊரப் பாத்துக்கிட்டு போய்ட்டாங்கன்னு அங்க இருந்த அதிகாரிங்க சொன்னாங்க. அதுல எங்க ஊரும் ஒன்னு. பாக்குறவங்க கிட்டயெல்லாம் எங்கம்மா படத்தக் காட்டித் தெரியுமான்னு கேட்டேன். மூனு லட்சம் பேரு சார். யாரு எங்க எந்த ஊருக்குப் போனாங்கன்னு யாருக்கும் தெரியல. அங்க உள்ளவனுங்களுக்கு ஒழுங்கா இங்கிலீசும் வரல.”
“நம்ம வசந்தன் மாதிரி!”
“குறுக்க பேசாதடா,” நான் ஷாமை அடக்கினேன். எனக்கு அனைத்துமே துல்லியமாகத் தெரிந்தது. புத்தர் விகாரைகளிடையே ஊர்ந்து செல்லும் காமிரா தெருவில் ஒரு படத்துடன் அலையும் கருத்த இளைஞனிடம் வந்து நிற்கிறது. அற்புதம்.
“இதோ இதோன்னு ரெண்டு நாளா ஓடிப் பார்த்தா ஊர் இருந்த இடம் முழுக்க தண்ணியா இருக்கு. அங்கயே கொஞ்ச நேரம் நின்னு அழுதேன். ஏரிய பாத்து ‘அமெய் அமெய்’ ன்னு கூப்பிட்டேன். அடுத்து எங்க போறதுன்னு தெரியல. பக்கத்துல ஒரு ஹோட்டல்ல தங்கிட்டேன். நல்லா குடிச்சேன். ரூம்ப விட்டு வெளிய வரவே புடிக்கல. எங்க போறது? வீட்டுக்கு போன் பண்ணவும் தோனல. ஏதாவது ஒரு சின்ன நம்பிக்கைத் தெரிஞ்சாலும் ஊரெல்லாம் தேடி அலைவேன் சார். ஆனா டேம சுத்தி இருக்கிற அத்தன கிராமமும் காலின்னா என்ன செய்யுறது சொல்லுங்க. ஆன் லைன்ல திரும்பப் போறதுக்கு டிக்கெட் போட்டுட்டு வெளிய சாப்பாட்டுக்கடைய தேடிப் போனேன். எங்கவும் எதையும் சாப்பிட தோன்ல. பர்மா தூசு மண்டலம் சார். கால் போன போக்குல நடந்து அங்க இருந்த ஏரி ஓரமா நின்னேன். சார் உங்களுக்கு விதி மேல நம்பிக்க இருக்கா?”
“உங்க அம்மாவ பாத்தீங்களா?” என் குரலில் தொணித்த ஆர்வம் எனக்கே அந்நியமாக இருந்தது.
“ஒரு வயசானவர அங்க பாத்தேன். தனியா ஒரு வண்டியில தேயிலை, முட்டகோஸ், தக்காளி, கடலையெல்லாம் கலந்து எதையோ வித்துக்கிட்டு இருந்தார். ரெண்டு மூனு வெள்ளைக்காரனுங்க அதை ஆசையா வாங்கி திங்கிறத பாத்தேன். அவர் கொஞ்சம் ஓஞ்சப்ப பேச்சுக்கொடுத்தேன். ஓரளவு ஆங்கிலம் தெரிஞ்சது. வெள்ளைக்காரனுங்க கிட்ட பேசிப் பேசி பழகியிருக்கலாம். அவர் வித்த சாப்பாட்ட காட்டி ‘திரேடிஷனல் ஃபுட்’ன்னு உற்சாகமாச் சொன்னார். ஸ்லோவா அவர்கிட்ட நான் வந்த காரணத்தச் சொன்னேன். என் அம்மாவோட படத்த வாங்கி உத்துப்பாத்துட்டு தெரியலன்னு ஒதட்ட பிதுக்கினாரு. தெரியலங்கறத சொல்ல எவ்வளவு சிம்பளான முக ஜாடை சார். ஆனா புறப்படும்போது அவர் ஒரு சின்ன டிப்ஸ் கொடுத்தார். அதான் சார் விதி. எங்க ஊர்ல இருந்த ஆட்கள்ல முக்கால்வாசி ‘மினாந்து’ங்கற இடத்துக்குக் கும்பலா போயிட்டதாவும் எதுக்கும் அங்க போயி விசாரிச்சி பாக்கச் சொன்னாரு. உடனே கொஞ்சம் பணத்த எடுத்து நீட்டினேன் சார். சிரிச்சிக்கிட்டே போகச்சொல்லிட்டாரு, பணத்துக்கு செலசமயம் மவுசு கெடைக்கிறதில்ல பாத்தீங்களா. திரும்ப ஒரு நாள் பயணம் சார். எங்க அம்மா ஊரோட ஒன்னா போயிருப்பாங்களான்னு தெரியல. ஆனா எங்க தேடுறதுன்னே தெரியாதப்ப கொரைஞ்சபட்சம் தேடுறதுக்கான ஒரு இடம் கிடைக்கறதே வரம் சார். அந்த ராத்திரியே கார புடிச்சி புறப்பட்டேன். மோசமான ரோடு. மோசமான கார்.”
கதவு திறந்ததும் அனைவரும் திரும்பினோம். கதிர் சிரித்தபடி நுழைந்தான். இவ்வளவு நேரம் நான் வேறு எங்கோ சென்று அந்த அறைக்குத் திரும்பியதுபோல இருந்தது. மூவருமே சோபாவின் விளிம்பில் மூர்த்தியின் முகத்தருகே நெருங்கியிருந்ததை உணர்ந்தேன். கதிரிடம் ஒன்றும் பேசாமல் அவன் அமர இடம் ஒதுக்கினோம். பேசுவது அந்த மனநிலையைப் பாதிக்கும் எனத் தோன்றியதால் அமைதியாகவே இருந்தோம். யாரும் ஒன்றும் பேசாதது அவனுக்கு என்னவோ போல இருந்திருக்க வேண்டும். சடங்காக அனைவருக்கும் கைக்கொடுத்து அமர்ந்துகொண்டான். “ஆரம்பிச்சாச்சா?” என்றான். நான் ஒன்றும் சொல்லாமல் மூர்த்தியைப் பார்த்தேன்.
“அந்த ஊருக்கு போனவுடனே எனக்கு என்னோட அம்மாவ பாத்துடுவேன்னு நம்பிக்க வந்திருச்சி சார். எப்படின்னு கேக்காதீங்க. ஒரு நம்பிக்கதான். பயணத்துல என்னோட கதைய டிரைவர்கிட்ட சொன்னதும் அவருக்கும் என்னை தனியா விட்டுட்டு போக மனசு வரல. அம்மான்னு சொன்னாலே ஒலகம் முழுக்க எல்லா பிள்ளைங்களுக்கும் ஒரே மனசுதான் சார். என்னோடவே ஹோட்டல்ல தங்கினார். மறுநாள் காருலயே போயி சிலர விசாரிச்சோம். காலையில விசாரிக்க ஆரம்பிச்சோம் சார். சாப்பாடு தண்ணியெல்லாம் மறந்து பாக்குற வயசானவங்க எல்லாரையும் ஒருத்தர விடாம கேட்டோம். எல்லாரும் அம்மா பேரத்தான் கேட்டாங்க. நினைவில்லன்னு சொன்னா ஒரு மாதிரி வித்தியாசமா பாக்க ஆரம்பிச்சாங்க. முதல்ல டிரைவர்தான் பர்மா மொழியில விசாரிச்சாரு. அவரு பத்து பதினஞ்சி பேருகிட்ட பேசுறத கேட்டுப் புரிஞ்சிக்கிட்டு நானும் அதேபோல விசாரிக்க ஆரம்பிச்சேன். நாலஞ்சி பேருகிட்ட பேசுனதும் சிக்கலில்லாம லாங்குவேஜ் ஒட்டிக்கிச்சி. தாய்மொழி ரத்ததுல இருக்குமுல்ல சார். ‘தா பெ’ங்கிற ஊரு பேர கேட்ட ஒடனே வயசான கெழவி ஒரு கிராமத்துக்குப் போற சின்ன பாதையக் காட்டுனாங்க. பெருசா எதுவும் சொல்லல. கையக் காட்டுனாங்க. அந்த ஃபீலிங்க வார்த்தையில சொல்ல முடியாது சார். நம்ம அன்பு உண்மைன்னா எங்கேருந்தும் எப்படியும் பாத திறக்கும். அன்னைக்குக் காட்டுனது கடவுளோட கை சார். மனசு தோ வந்தாச்சி வந்தாச்சின்னு சொல்லுது. குறுகலான பாதையில காரா விட முடியல. கார தூக்கிக்கிட்டு என்னால ஓட முடியுங்கற மாதிரி துடிப்பு. என் அம்மாவோட மூச்சி காத்து நா இழுக்கிற காத்துல கலந்துருக்குன்னு மனசு சொல்லுது.” மூர்த்தியின் குரல் கரகரத்தது.
“கார ஓரமா போட்டுட்டு நடந்தே அந்தக் கிராமத்துக்குப் போனோம் சார். அந்த ஊரு தலைவர பார்க்கணுமுன்னு கேட்டோம். வீட்ட காட்டுனாங்க. பலகையால ஆன சின்ன வீடு. கண்ணாடி தெரிச்ச மாதிரி சுருக்கம் செதறி கெடந்த தோலோட ஒரு கெழவன். அவர்கிட்ட என் அம்மா படத்தைக் காட்டி டிரைவர் விசாரிச்சாரு. கிழவருக்கு கண்ணு சரியா தெரியல. கைய நெத்திக்கு தடுப்பு கொடுத்து ஃபோட்டோவ உத்து உத்து பாத்தாரு. என்ன ஏதுன்னு வெவரம் விசாரிச்சாரு. கொஞ்ச நேரம் ஒன்னும் பேசல. என் கண்ணை உத்துப்பாத்துட்டு இந்தப் படத்துல உள்ள பொண்ண தெரியல. ஆனால் இருபது வருசத்துக்கு மேல ஒரு பைத்தியக்காரி இந்தியாவுக்குப் போன தன்னோட பையன் அவள பாக்க வருவான்னு மலைமேல இருக்கிற புத்தர் கோயிலுல காத்திருக்கிறதா சொன்னாரு சார். அங்கயே என் அம்மாவ பாத்துட்ட மாதிரி புரண்டு அழத் தோனுச்சி. காலெல்லாம் நடுங்குது. சார் நீங்க தப்பா நினைக்கக்கூடாது. அந்தக் கிழவர் என் அம்மாவ தெரியாதுன்னு சொல்லனுமுன்னுதான் முதல்ல என் உள் மனசு வேண்டிக்கிச்சி சார். அந்த சிட்டுவேஷன ஃபேஸ் பண்ண எனக்கு தெம்பில்லையோன்னு பயந்தேன். நான் மயங்கி விழுந்து அங்கயே செத்திருவேன்னு தோனுச்சி. டிரைவர்தான் என்னைக் கைத்தாங்கலா புடிச்சி காருக்குக் கூட்டிப் போனாரு. வேகமா நடந்தோம் சார். சின்ன சின்ன வீடுங்களுக்கு இடையில நடைபாத. செவப்புக் கம்பளம் விரிச்ச மாதிரி வழி நெடுக்க வெத்தல எச்சில் கற. ஒரு ஆத்துப்பாலத்த தாண்டுனதும் மலைமேல பிரம்மாண்டமான புத்தர் கோயில் சார். இருந்தா என்ன? அவ்வளோ பெரிய நாட்டுல அம்மா இருக்கிற ஊர கண்டுபிடிக்க முடிஞ்ச எனக்கு இந்தக் கோயிலுல முடியாதா. பாலத்த தாண்டி படியேறி ஓடினேன்.”
“அம்மா இருந்தாங்களா?” என் குரல் தழுதழுத்தது. கமறிக்கொண்டேன்.
“அது மாலை நேரம் சார். சூரியன் செக்கச்செவேல்னு மறையப் போவுது. கோயில் முழுக்க தேடினேன் சார். அப்பதான் ஒரு மூலையில ஒரு அம்மா கோயிலோட ஓரமா ஒக்காந்து மறையிர சூரியன பாத்துக்கிட்டு இருந்தாங்க. மேல காவிய போத்தியிருந்தாங்க. அதுவும் கிழிச்சல். சடை விழுந்த முடி. எனக்குத் தொலைவுலயே தெரிஞ்சிருச்சி சார். அழுக முட்டிக்கிச்சி. அவ்வளவு தூரம் தூக்கமில்லாத பயணமெல்லாம் மறந்துடுச்சி. அத்தன படி ஏறி வந்த டயர்டெதுவும் இல்ல. அவ்வளோ பெரிய கோயில் வளாகத்துல தேடி அலைஞ்சதெல்லாம் ஒன்னுமே இல்லாம போச்சி. அப்ப அங்கதான் நான் அத்தனை வருஷமா வாழ்ந்த மாதிரி மனசு மெதுவாச்சி சார். இதுபோதும் திரும்ப போயிரலாமுன்னு கூட ஒருதரம் மனசு சொல்லுச்சி. மெதுவா நடந்து கிட்டப்போனேன் சார். அவசரப்படல. பர்சுல இருந்த அவங்க படத்த முகத்துக்கு நேரா காட்டுனேன். மெதுவா என்னைத் திரும்பிப் பார்த்தாங்க. அவங்க கண்ணுல எல்லாமே தெரிஞ்சிச்சி சார். அப்படியே மடியில விழுந்துட்டேன். அவங்களும் ஓன்னு அழறாங்க. என்னைய இறுக்கமா புடிச்சிக்கிட்டாங்க. என்னோட தலை முகமெல்லாம் முத்தம் கொடுத்தாங்க. அவங்க மேல வீசுன வாசத்த அஞ்சு வயசுல மோந்துருக்கேன் சார். நாய் மாதிரி அந்த வாசனைய திரும்பத் திரும்ப மோப்பம் பிடிச்சேன். அவங்க ஏதேதோ பேசுனாங்க. எல்லாமே பர்மா பாசைதான். ஆனா எல்லாமே புரிஞ்சதுசார். மனசுக்கு ஏது சார் மொழி…”
ஷாம் அழுதுகொண்டிருந்தான். கதிருக்கு என்ன நடக்கிறது எனத் தெரியாமல் சூழலை எதிர்கொள்ளத் தயங்கி கிளாஸில் விஸ்கியை ஊற்றி ரகசியமாக என் காதில் மட்டும் சியர்ஸ் கூறி பருகத் தொடங்கினான். கொஞ்ச நேரத்தில் கோபமாக அறையை விட்டு வெளியேறினான். மூர்த்தியின் அழுகை ஓலம் அதிகரிக்க அதிகரிக்க வசந்தன் சமாதானம் செய்ய கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தான்.
“அன்னைக்கு ராத்திரிய மறக்க முடியாது சார். எங்க அம்மாவ ஏதோ பைத்தியக்காரின்னு அந்த ஊருல அத்தனை காலம் நெனைச்சிக்கிட்டு இருந்திருக்காங்க. ஆனால் அவங்க தவம் கைக்கூடுச்சி. நா கெடைச்சிட்டேன். தவம் பலிச்சதால அவங்கள ஞானின்னு ஊரே கொண்டாட ஆரம்பிச்சிட்டது. எங்க அம்மாவுக்கு ஏராளமான புது டிரஸ், கொஞ்சம் பணம், பழங்க, காய்கறிங்கன்னு கிராமத்து ஆளுங்க எல்லாம் அம்மாவுக்குப் படையல் வச்சாங்க. அவங்களுக்கு நான் கெடச்ச அந்த நாள ஒரு திருவிழாவபோல அந்தக் கிராமமே கொண்டாடுச்சி. எங்க அம்மாவுக்கு எல்லாரும் மரியாதை செஞ்சாஞ்ங்க. அம்மா என்னோட கைய விடவே இல்ல. அவங்க அதிகம் பேசவும் இல்லை. அப்பாவ பத்தியும் ஒன்னும் கேட்கல. நான் ஃபோனுல காட்டுன படங்க எதையும் பாக்காம என் கண்கள மட்டுமே பாத்துக்கிட்டு இருந்தாங்க. ஒரு குழந்தை மாதிரி என் தலைய தடவி கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. விழாவுல என்னைய பேசச் சொன்னாங்க. நா பேசுனத டிரைவர்தான் ட்ரான்சலேட் செஞ்சாரு. எனக்கு என்னா பேசுறதுன்னே தெரியல. எத சொன்னாலும் யாரையாவது குத்தம் சொல்ற மாதிரி இருக்கும். அத்தன தூரம் போயி என்னைய வளத்த அப்பாவையும் ஜானகி அம்மாவையுமா அசிங்கப்படுத்தணும். கொஞ்ச நேரம் அழுதேன். எல்லாத்துக்கும் நன்றி சொன்னேன். நான் புறப்பட டிக்கெட் போட்டுட்டதையும் மீண்டும் என்னோட மனைவி மகளோட அவங்களயும் ஊர்காரவங்களையும் பாக்க வருவேன்னும் சொன்னேன். அம்மாவுக்கு அதுல விருப்பமே இல்ல. போக வேண்டாமுன்னு கைய பிடிச்சி அழுதாங்க. ஒருநாளாவது அவங்களோட தங்க சொன்னாங்க. அந்த ஊருலேருந்து ஏர்போட்டுக்கு போகவே ஒருநாள் ஆகுங்கறது அவங்களக்கு புரியல. என் மக நான் பொறந்த ஊரையும் அவ பாட்டியையும் பாக்கணுமுன்னு ஆசப்பட்டேன். குடும்பமா வந்து அவங்களயும் கூட்டிப்போயி என்னோடவே வச்சிக்கணுமுன்னு நெனைச்சேன். ஊருகாரவங்க அம்மாவ சமாதானப்படுத்துனாங்க. எல்லார்கிட்டயும் சொல்லிட்டுப் புறப்பட்டேன். அம்மா அழுதுக்கிட்டே கைகாட்டுனாங்க. சின்ன வயசுல என்னைய பிரிஞ்சப்ப அழுதாங்களே அதேபோல.
அதே டிரைவர்தான் என்னை ஏர் போட்ல விட்டாரு. நல்ல மனுசன். இன்னும் கொண்டேக்குல இருக்காரு, ‘நீங்க இனிமே வரமாட்டீங்கன்னு அம்மா எங்கிட்ட சொல்லி அழுதாங்க. நான் வருவீங்கன்னு சொல்லியிருக்கேன் சார். கட்டாயம் வந்துடுங்க’ன்னு சொன்னாரு. அவரைக் கட்டிப்பிடிச்சு அழுதேன். மனுஷனுங்க எவ்வளோ நல்லவங்க சார். ஆனா நான் கே.எல்.ஐ.ஏ வந்து சேந்து ஃபோன ஆன் செஞ்சதுமே அந்த டிரைவர் பலதடவ போன் பண்ணினாருன்னு மெசேஜ் காட்டுச்சி. நான் புறப்பட்ட இரவே அம்மா இறந்துட்டாங்களாம். பிளைட் ஏறுன அன்னைக்குதான் வீட்டை உடைச்சி சடலத்தை மீட்டாங்களாம். வாடை எடுத்ததால உடலைச் சகல மரியாதையோட அடக்கம் செஞ்சிட்டாங்களாம். எனக்காக அம்மா உயிர புடிச்சிக்கிட்டுக் காத்திருந்திருக்காங்க சார். அதுக்குப் பெறகு திரும்ப பர்மாவுக்குப் போகவே இல்ல. எதுக்கு போகணும்? அம்மா சொன்னத கேட்டு ரெண்டு நாள் அவங்களோட இருந்திருக்கலாம். அவங்களோட எடுத்துக்கிட்ட படம் மட்டும்தான் இருக்கு.” கைபேசியில் இருந்த படத்தைக் காட்டியவரின் அழுகை இம்முறை ஒரு பெரும் வெடிப்பாக வெளிப்பட்டது. கொஞ்ச நேரத்தில் கழிவறையை நோக்கி ஓடினார். நாங்கள் அவர் தனியாக அழுதுவிட்டு வருவதுதான் நல்லது என நினைத்து விட்டுவிட்டோம். அறை அமைதியானதும் கதிர் வெளியே சத்தம் போட்டுக்கொண்டிருப்பது கேட்டது.
“இதுல நீ தேடுற வாழ்க்கையோட ரியாலிட்டி இருக்காடா?” வசந்தனின் குரலில் ஏதோ சாதித்துவிட்டவனின் நிம்மதி இருந்தது. கொஞ்சம் சவால் விடும் தொணி.
“இருக்கு ஆனா வேற வகையான ரியாலிட்டி” என்றேன். இருவரும் கூர்ந்து பார்த்தனர்.
“இந்தப் படத்த பார்த்தியா, அவர் அம்மாவோட ஃபேஸ் கட் கொஞ்சம் கூட இல்ல” என்று பழைய படத்துடன் ஃபோனில் உள்ள படத்தை ஒட்டி வைத்தேன்.
“டேய் அது வயசானதால இருக்கலாம்,” என்றான் வசந்தன்.
“நா ஒரு டைரக்டர். மனுசன் முகங்கள ஷார்ப்பா பாக்குறவன். பர்மாவுக்கு சம்பாரிக்க போன தமிழ்நாட்டு காரனுங்களோட ஆயிரமாயிரம் குடும்பம் பர்மாவுல இருக்கு.”
“அப்ப அவர் பார்த்தது அவங்க அம்மாவே இல்லன்னு சொல்றியா?” ஷாம் கொஞ்சம் கடுப்பாகத்தான் கேட்டான். அவன் முகத்தைப் பார்த்தேன். ‘இவன் பெரிய இவன்’ என்பதுபோல முகத்தை வைத்திருந்தான்.
“உறுதியா சொல்ல முடியாது”
“டேய் அவ்வளோ கஷ்டப்பட்டு அவரு அவங்கம்மாவ கண்டுபுடிச்சிருக்காரு, நீ உறுதியா சொல்ல முடியாதுங்குற” ஷாம்.
“அவராலயே சொல்ல முடியாது. அதுக்குதான் சினிமா.”
“அவர் முன்னுக்கு இத சொல்லிடாத. என்னைய செருப்பால அடிக்கனும்” வசந்தனின் குரலில் கோபம் இருந்தது. அவன் கோபப்பட்டு நான் இதுவரை பார்த்ததில்லை. நான் பேசுவது அவர்கள் இருவருக்கும் உவப்பில்லை என்பது புரிந்தது. மூர்த்தி சொன்ன கதை அவர்களை அதிகமே பாதித்திருந்தது.
யாரும் ஒன்றும் பேசவில்லை. கதிர் மட்டும் கத்திக்கொண்டே உள்ளே வந்தான்.
“ஏன்டா அறிவிருக்கா? இது லோக்கல் தண்ணி. மங்கி ஷோல்டர் ருசி தெரியாது ஒங்களுக்கு?என்னாத்தையோ கலந்திருக்கானுங்க. பிராடுங்க! இனிமே இங்க வர வேணாம். காசு கட்ட முடியாதுன்னு சொல்லிட்டேன். மீறி பேசுனானுங்கன்னா ரிப்போட் பண்ணுவோம். மொத்தமா மாட்டுவானுங்க!”
“அதனால என்னாடா மங்கி ஷோல்டர்னு நம்பி குடிச்சதுலதான ருசியோட ஜீவனே இருக்கு,” என்றேன்.
ஷாம் மீண்டும் கிளாஸை நிரப்பி “அதுக்காக சியர்ஸ்” என்றான்.