2022: வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்

எல்லா புத்தாண்டுகளையும் போலவே 2022இன் புத்தாண்டும் வல்லினம் பதிவேற்றும் பணியில்தான் தொடங்கியது. இப்பணி தொழில்நுட்பம் சார்ந்ததுதான். தொடக்கத்தில் நான் வல்லினத்திற்காகப் படைப்புகளைச் சேகரிப்பது, செறிவாக்குவது, இறுதி செய்வது போன்ற பணிகளை மட்டுமே செய்து வந்தேன். 2016 முதல் அதனைப் பதிவேற்றும் பொறுப்பையும் ஏற்க வேண்டி வந்தது. இந்த ஏழு வருடங்களில் ஒவ்வொருமுறை அப்பணியைச் செய்யும்போது புதிதாக ஓர் இணைய இதழை அறிமுகப்படுத்தும் முனைப்பே என்னுள் எழுகிறது. அம்முனைப்பே என்னை இயக்குகிறது.

வல்லினம் இதழ் பணிகளில் காட்டும் ஆர்வம் இத்தனை வருடங்களில் துளியளவும் குறையாததை நானே ஆச்சரியமாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிதாக எழுந்துவரும் எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதும் அது குறித்து உரையாடுவதும் உற்சாகமான பயிற்சிகள். சொல்லப்போனால் அவர்கள் வழி நான் கற்றுக்கொண்டவை அதிகம். அதுபோல இன்று தமிழில் முதன்மையான படைப்பாளிகள் பலரது படைப்புகளும் வல்லினத்தில் இடம்பெற்றுள்ளன. அது வல்லினத்தின் மேல் உள்ள நம்பகத்தன்மைக்குக் கிடைத்த அங்கீகாரம். இன்று வல்லினம் எனும் ஓர் இதழ் இருப்பதும் அது ஓர் அறிவியக்கமாகச் செயல்படுவதும் மலேசியாவில் பிற மொழி இலக்கியவாதிகள் மத்தியிலும் பரவலாகவே அறியப்பட்டுள்ளது. வல்லினத்தை முடக்க வேண்டும் எனும் தொடர் முயற்சிகள் 2014 தொடங்கியே சில தரப்பினரால் நடந்துகொண்டிருக்க, அது தனக்கான இடத்தை மேலும் மேலும் வலுவாக நிறுவிக்கொண்டு, வரலாற்றில் இடம்பெறத் தகுதி கொண்டதாக தன்னைத் தகவமைத்து வருகிறது.

வல்லினம் முன்னெடுப்புகள்

வல்லினம் வழி, இவ்வருடம் கடந்த காலங்களைவிட மேலும் துடிப்புடன் செயலாற்ற முடிந்தது. வல்லினத்தின் மீது நம்பிக்கைகொண்ட இளம் தலைமுறையினர் சிலர் இயல்பாகவே அதன் செயல்திட்டங்களில் இணைந்து பங்காற்றினர். ஒவ்வொரு திட்டமும் கூட்டு முயற்சியால் முழுமை அடைந்தது.

  • நாவல் முகாம்

2022இன் தொடக்கத்திலேயே வல்லினம் ஏற்பாட்டில் பிப்ரவரி 26-27 ஆகிய இரு நாட்கள் நாவல் முகாம் நடைபெற்றது. கோவிட் பெருந்தொற்று காரணமாக பயிற்சியாளர்களான சு.வேணுகோபாலும் ராஜகோபாலனும் மலேசியா வர முடியாத சூழலில் தொழில்நுட்பத்தின் சாத்தியத்தால் அப்பயிலரங்கை நிறைவாகவே நடத்தி முடித்தோம். 28 பேர் கலந்துகொண்ட இந்த நாவல் முகாமில் நாவலை வாசித்து அறியும் வழிமுறைகள் கலந்துரையாடப்பட்டன. நாவலை வாசித்தல் என்பது அதில் உள்ள சம்பவங்களை வாசித்தல் என்பதைத் தாண்டி, ஒரு நாவலினுள் வாசகன் எவ்வாறு பயணித்து நிகர் வாழ்வனுபவத்தை அடைய வேண்டுமென இப்பயிலரங்கு பலருக்கும் வழிகாட்டியது.

  • வல்லினம் விருதுகள் & ஆவணப்படம்

வல்லினம் விருது 2014இல் தொடங்கப்பட்டது. மிகக் கவனமாக ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்தே இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. ஐயாயிரம் ரிங்கிட் மதிப்பு கொண்ட வல்லினம் விருது இவ்வருடம் மா. ஜானகிராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மா. ஜானகிராமன் மலேசியத் தமிழ்ச் சமூகத்திற்கு செய்துள்ள மிகப்பெரிய பங்களிப்பு அவரது ‘மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை’ எனும் நூல். இவ்விழாவின் வழி அவரது ‘மலேசிய இந்தியர்களின் மறக்கப்பட்ட வரலாறு’ எனும் இரண்டாவது நூல் அறிமுகம் கண்டது. பிப்ரவரி 27இல் நடைபெற்ற வல்லினம் விருது விழாவை ஒட்டி, ஜானகிராமனின் வாழ்வைச் சொல்லும் இவ்வருடத்தின் முதல் ஆவணப்படம் ஒன்றும் தயாரிக்கப்பட்டது. மேலும் வல்லினம் இளம் படைப்பாளர் விருது விழாவும் முதன்முறையாக இவ்வருடமே அறிமுகம் கண்டது. இரண்டாயிரம் ரிங்கிட் மதிப்புக்கொண்ட இவ்விருது அபிராமி கணேசனுக்கு வழங்கப்பட்டது.

  • அக்கினி சுகுமார் அறிவியல் சிறுகதைப் போட்டி

இவ்வருடம் மார்ச் மாதம் அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது. வல்லினம் ஒரு போட்டியை அறிவிக்கும்போது அதை ஒட்டிய பயிற்சிகளையும் வழங்குவது வழக்கம். எத்திட்டமும் சடங்குக்காக நிகழ்த்தப்படக்கூடாது என்பதில் கவனமாகவே இருக்கிறோம். அவ்வகையில் எழுத்தாளர்கள் சுசித்திரா, கிரிதரன் ஆகியோர் அறிவியல் சிறுகதைக்கான அடிப்படை பயிற்சிகளை இணையம் வழி மார்ச் மாத இறுதியில் வழங்கினர். நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்தப் பயிற்சிப்பட்டறைக்குப் பின்னர் சுமார் பதினாறு பேர் போட்டியில் கலந்துகொண்டனர். அக்கினி சுகுமார் குடும்பத்தினரின் ஆதரவுடன் நடைபெற்ற இந்தப் போட்டியின் முடிவுகள் 2023இல் அறிவிக்கப்படும்.

  • நவீன கவிதை பயிலரங்கு & யுவன் சந்திரசேகர் படைப்புலகம்

இவ்வருடம் பலருக்கும் மிகப்பயனாக அமைந்த திட்டம் ஜூன் 10-11 நடந்த நவீன கவிதைப் பயிலரங்கு. இப்பயிலரங்கு நவீன கவிதைகளை எப்படி வாசிப்பது என்பது குறித்ததல்ல; நவீன கவிதைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்தே இருந்தது. எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் மலேசிய வருகையும் அவருடனான உரையாடலும் பலருக்கும் கவிதை குறித்த புரிதல்களை கூர்மைப்படுத்தியது. மேலும் யுவன் சந்திரசேகர் படைப்புலகம் எனும் நிகழ்ச்சியும் அவர் வருகையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 11 மாலையில் யுவன் அவர்களின் படைப்புகள் குறித்த விரிவான அறிமுகமும் கலந்துரையாடல்களும் நடந்தன. இதன் வழி யுவன் படைப்புகள் விரிவான வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டன. பல இளம் எழுத்தாளர்கள் இலக்கியத்தின் நுட்பத்தை அறிய இந்த நிகழ்ச்சிகள் வழியமைத்தன.

யுவனுடன்

தனிபட்ட வகையில் யுவன் வருகை எனக்கு முக்கியமானது. யுவன் வெளியில் பார்க்க மென்மையான மனிதர். ஆனால் கூர்மையான விமர்சனங்களை முன் வைப்பவர். விமர்சனத்தை முன் வைக்கும்போது தயவு தாட்சண்யம் பார்க்காதவர். விவாதங்களின் வழி சிந்திக்க வைப்பவர். எனது போதாமைகளை தன்னுடைய வலுவான வாசிப்புப் பின்புலத்தால் சுட்டிக்காட்டினார். வளரும் ஒருவனுக்கு அதுவே தேவை. அவருடனான உரையாடல் எனது அடுத்த நாவலுக்கு உதவக்கூடியதாக அமைந்தது.

  • வல்லினம் & GTLF விழா

மலேசியத் தமிழ் விக்கி அறிமுக விழா, ஷேக்ஸ்பியர் நாடகம், பி. கிருஷ்ணன் அரங்கு, மலேசிய – சிங்கை சமகால இலக்கியக் கலந்துரையாடல், எழுத்தாளர் ஜெயமோகனுடனான கலந்துரையாடல் என இவ்வருடத்தின் மிகப் பிரம்மாண்டமான இலக்கிய விழாவை வல்லினம், GTLF எனும் அமைப்புடன் இணைந்து நடத்தியது. நவம்பர் 25, 26, 27 ஆகிய நாட்களீல் சுங்கை கோப்பில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்யத்திலும் பினாங்கு ஜார்ஜ் டவுனிலும் இவ்விழா நடைபெற்றது. மூன்று நாள் இலக்கிய விழாவான இதில் சிங்கை, தமிழகம் என பல்வேறு நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள் பங்கெடுத்தனர். சில சமயங்களில் ஒருநாள் என்பது எவ்வளவு குறைவான காலம் எனத் தோன்றுவதுண்டு. இந்த விழாவுக்காக உழைத்த காலங்கள் அவ்வாறானவைதான்.

  • நூல் பதிப்பு

இவ்வருடம் வல்லினம் பதிப்பகம் வழி ‘பி. கிருஷ்ணன் படைப்புலம்’ எனும் ஒரு நூல் மட்டுமே வெளிவந்தது. இந்நூலுக்கு சாலினி மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகப் பங்காற்றினர்.

  • மஹாத்மனுக்கு நிதி

எழுத்தாளர் மஹாத்மனுக்கான நிதி உதவி சேகரிக்கும் திட்டத்தை வல்லினம் வழி ஜூன் மாதம் செயல்படுத்தினோம். மூளையில் ஏற்பட்ட வாதத்தால் செயலிழந்து கிடந்த மஹாத்மனுக்கும் அவருக்குத் துணையாக இருக்கும் அவர் மனைவிக்கும் உதவும் பொருட்டு இந்த நிதி சேகரிப்புத் திட்டம் உருவானது. மஹாத்மன் வல்லினம் அச்சு இதழாக வந்தபோது அதன் வளர்ச்சிக்கு உழைத்தவர். எனது முயற்சிகளில் துணை நின்றவர். இலக்கியத்தை மட்டுமே தன் உடமையாகக் கொண்டவர். எனவே அவருக்கு இலக்கிய ஆர்வலர்களே உதவ முடியும் எனும் நோக்கில் இத்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. ஒரு மாதத்தில் 10,598.56 ரிங்கிட் நிதி சேகரிக்கப்பட்டது. இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் அவர் மனைவி வங்கியில் செலுத்தப்பட்டு வருகிறது. மஹாத்மன் தற்போது பேசத் தொடங்கியுள்ளார். மெல்ல மெல்ல தேறி வருகிறார். மக்கள் வழங்கிய நிதி ஒரு தமிழ் எழுத்தாளனை தொடர்ந்து எழுத வைக்குமா தெரியவில்லை; ஆனால் வாழ வைத்துள்ளது. 2023 மார்ச் மாதத்துடன் இந்தத் திட்டம் நிறைவடையும்.

சிகண்டி & விருது

இவ்வருடம் பொங்கலுக்கு ‘சிகண்டி’ நாவல் என் கையில் கிடைத்தது. ஐநூறு பக்கங்களுக்கும் அதிகமாக உள்ள ஒரு நாவல் மலேசிய இலக்கியச் சூழலில் வாசிக்கப்படுமா எனும் சந்தேகத்தில் இருந்தேன். ஆச்சரியமாக ‘சிகண்டி’ பரவலாக வாங்கி வாசிக்கப்பட்டது. ஏராளமான வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வந்தன. முதல் விமர்சனம் லாவண்யாவிடமிருந்து கிடைத்தது. எஸ். ராமகிருஷ்ணன், சுனில் கிருஷ்ணன், லதா, கோ. புண்ணியவான், ஜி.எஸ்.எஸ்.வி நவின், அழகுநிலா என எழுத்தாளர்கள் பலரும் சிகண்டியை ஒட்டி தங்கள் விரிவான வாசிப்பு அனுபவத்தை முன்வைத்தனர். தந்தி தொலைக்காட்சியில் எழுத்தாளர் ஜெயமோகன், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் ‘சிகண்டி’ குறித்து முன்வைத்த நேர்மறையான கருத்துகளால் சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘யாவரும் அரங்கில்’ சிகண்டி அதிகம் வாங்கப்பட்ட நூலாக நிலைகொண்டது. மேலும் சிகண்டி குறித்த உரையாடல் சிங்கப்பூரில் உள்ள வாசகர் வட்டம் இயக்கம் வழி நடத்தப்பட்டது. சிங்கை வாசகர் வட்டமும் அதன் தலைவர் எழுத்தாளர் சித்ராவும் வல்லினம் முயற்சிகளுக்குத் தொடர் ஆதரவு தருபவர்கள். இக்கருத்தரங்கு சிங்கப்பூரில் பல புதிய வாசகர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக ‘சிகண்டி’ நாவலுக்கு வாசக சாலை வழங்கும் ‘சிறந்த நாவலுக்கான தமிழ் இலக்கிய விருது’ டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. ஐயாயிரம் ரூபாய் விருது தொகையும் கேடயமும் விருதாக வழங்கப்பட்டன. நான் தமிழகம் செல்ல முடியாத சூழலில் என் சார்பாக நண்பர் வேல் கண்ணன் விருதினைப் பெற்றுக்கொண்டார். இளம் வாசகர்களைக்கொண்ட இந்தக் குழுவினர் வழி சிகண்டி மேலும் விரிவான வாசகர் தளத்தை அடையும் என்பதே மகிழ்ச்சியாக இருந்தது.

பிற மொழி படைப்புகள் & முதல் மலாய் நூல்

மொழிபெயர்ப்பாளர் சரவணனுடன்

கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் என் படைப்புகள் மலாய் மொழியில் வருவதை தொடர்ச்சியாக உறுதி செய்தேன். ஜனவரி டேவான் சாஸ்திராவில் ‘அகிரா குரோசவா’ குறித்து எனது கட்டுரை மலாய் மொழியில் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. தொடர்ந்து மே மாத டேவான் சாஸ்திராவில் ‘அப்சரா’ சிறுகதையும் ஜூலை மாத இதழில் ‘வெள்ளைப்பாப்பாத்தி’ சிறுகதையும் வெளிவந்தன. எக்ஸ்செந்திரிகா (eksentrika) எனும் இணைய இதழில் ‘ஞமலி’ சிறுகதை மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. இதன் நீட்சியாக, என் நண்பர் சரவணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு பிபிளியோ பிரஸ் (Biblio Press) மூலமாக ‘Pita Suara Mona Fandey’ எனும் நூலாக வெளிவந்தபோது அதைக் கைகளில் ஏந்தி நெகிழ்ந்தேன்.

நான் அடிக்கடி சொல்லி வருவது மலேசிய எழுத்தாளர்கள் தங்களைத் தமிழகத்துடன் சுருக்கிக்கொள்ளக்கூடாது என்பதைத்தான். இது பல இன மக்கள் சேர்ந்து வாழும் நாடு. இங்கு இலக்கியம் வழியாகவே ஒரு சமூகம் இன்னொரு சமூகத்துக்கு தங்கள் மன உணர்வுகளை அறியப்படுத்த முடியும். எனவே மொழிபெயர்ப்பும் அதன் வழியாக பிற இலக்கியங்களுடனான ஊடாட்டங்களும் சமகால எழுத்தாளர்களுக்கு முக்கியம். அவ்வகையில் இந்தத் தொகுப்பை நான் எனது தொடக்கமாகவே கருதுகிறேன். அடுத்தடுத்த மொழிபெயர்ப்பு நூல்கள் உருவாக இது பெரும் ஊக்கத்தைத் தருகிறது.

பிற மொழி இலக்கியச்சூழலில் இணையும் முயற்சியின் பலனாக பினாங்கு மாத இதழ் ஒன்றில் (penang monthly) என்னைப் பற்றிய விரிவான அறிமுகத்துடன் கட்டுரை வந்தபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. மலேசிய இலக்கியச் சூழல் குறித்து நான் வைக்கக்கூடிய விமர்சனங்களும் கருத்துகளும் பிற மொழி அறிமுகங்கள் வழியாகவே விரிவான தளத்தில் சென்று சேர முடியும். அதுவே அரசின் காதுக்கு எட்டி சிறந்த விளைபயன்களைக் கொடுக்கும். இதன் உச்சமாக அனைத்துலக அளவில் கவனம் பெற்றது ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (George Town Literary Festival) 2022க்கான வடிவமைப்புக் குழு உறுப்பினர்களில் என்னையும் ஒருவனாகத் தேர்ந்தெடுத்து தமிழ் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளனாக நியமித்ததைச் சொல்ல வேண்டும்.

வழங்கப்பட்ட வாய்ப்பை முறையாகவே பயன்படுத்திக்கொண்டேன். வல்லினத்தை இந்த உலக இலக்கிய விழாவின் இணை இயக்கங்களில் ஒன்றாக இணைத்ததுடன் தமிழுக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு அரங்குகளைத் தவிர்த்து, கூடுதலாக இரு நூல்களை வெளியீடு செய்யும் வாய்ப்புகளையும் கேட்டுப்பெற்றேன். இனி அடுத்தத்தடுத்த வருடங்களில் GTLF தமிழ் நிகழ்ச்சிகளுக்கு அரங்குகள் ஒதுக்கும் வகையிலான நம்பகமான சூழலை ஆரோக்கியமான வழியில் உருவாக்க முடிந்தது.

உரைகள்

இவ்வருடம் மூன்று நிகழ்ச்சிகளில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ரமா சுரேஷின் ‘அம்பரம்’ நாவல் வெளியீட்டை ஒட்டி மே மாதம் சிங்கப்பூரிலும், வல்லினம் நடத்திய யுவன் சந்திரசேகர் படைப்புலகம் நிகழ்ச்சியில் ஜூன் மாதம் மலேசியாவிலும், தமிழ் மாநாட்டை ஒட்டி நவம்பர் மாதம் நியூசிலாந்திலும் வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றினேன். மேடையில் பேசும் ஒவ்வொருமுறையும் நான் என் ஆரம்பப்பள்ளிக் காலங்களை நினைத்துக்கொள்வேன். நான் அதிகம் திக்குவதால் பேச்சுப் போட்டிகளில் புறக்கணிக்கப்பட்ட காலங்கள் உண்டு. ஆனால் பிடிவாதமாக ஆசிரியர்களிடம் போராடி போட்டிகளில் கலந்துகொள்வேன். என்னால் எது முடியாது எனச் சொல்லப்பட்டதோ அதனுடனேயே காலமெல்லாம் மோதினேன். அவமானம் எனக்குப் பொருட்டல்ல. என்னைப் பார்த்துச் சிரிப்பவர்கள் குறித்து ஒருபோதும் நான் கவலைப்படுவதில்லை. வசைகளும் அவதூறுகளும் என்னை எப்போதும் பின்வாங்க வைத்ததில்லை. மற்றவர்கள் என்னைப் பார்த்து இளக்காரமாகச் சிரிப்பதைவிட, நான் என்னைக் குறைவாக மதிப்பிடக்கூடாது என்பதில் மட்டுமே உறுதியாக இருந்தேன். நானே எனக்கான விமர்சகன். இன்னும் நிறைவான பேச்சாளனாக உருப்பெறாவிட்டாலும் மேடையில் இருந்து இறங்கும்போது என்னை எனக்கு நிரூபித்துக்கொண்டதாகவே நினைத்துக்கொள்கிறேன்.

தமிழாசியா

27.3.2021இல் தமிழாசியாவைத் தொடங்கினோம். இதுவரை தரமான நூல்களை ரூபாய்க்கு 10 காசு விலையில் கொடுக்க வேண்டும் எனும் நோக்கத்திலிருந்து விலகாது சமாளித்து வருகிறோம். வாசகர்களை சிரமப்படுத்தாமல் நியாயமான விலையில் நூல்களை விற்பனை செய்ய முடியும் எனும் திட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளோம். தமிழாசியா வழி நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை விற்பனை செய்துள்ளோம். அவை யாருக்கோ, எங்கோ இலக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிவிக்கும் என நம்பியே முன்னெடுக்கிறோம். அவ்வகையில் நூல்களை விற்பனை செய்வது மட்டுமல்லாமல் நூல்கள் குறித்த அறிமுகக் கூட்டங்களையும் தமிழாசியா வழி செய்து வருகிறோம். இவ்வருடம் பிப்ரவரி மாதம் அருண்மொழி நங்கையின் ‘பனி உருகுவதில்லை’ மற்றும் என்னுடைய ‘சிகண்டி’, ஜூலை மாதம் லதாவின் ‘சீனலட்சுமி’ போன்ற நூல்கள் அறிமுகம் கண்டன. மேலும் இளம் பதிப்பாளராக உருவாகியுள்ள கிரிதரனுடனான சந்திப்பு ஒன்றையும் தமிழாசியா வழி ஏற்பாடு செய்ய முடிந்தது.

பயிலரங்குகள்

கடந்த காலங்களில் அதிகமாக ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு சிறுகதைப் பயிலரங்கை வழிநடத்தியுள்ளேன். இவ்வாண்டு கணிசமாக அதனைக் குறைத்துக்கொண்டேன். கோலசிலாங்கூரில் உள்ள ஓரிரு பள்ளிகளுக்கு மட்டுமே பயிலரங்கு நடத்த நேரம் கிடைத்தது. அது தவிர ‘உப்சி’ பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சிறுகதைப் பயிலரங்கு, கோலசிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த, இருபது தமிழ்ப் பணித்திய பொறுப்பாசிரியர்களுக்குச் சிறுகதைப் பயிலரங்கு, யாழ் சிறுகதைப் போட்டியில் பங்கெடுத்த இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிலரங்கு என கூடுதலான சிறுகதை குறித்த புரிதல் உள்ள தலைமுறைக்கு பயிலரங்கு நடத்தியது சுவாரசியமாக இருந்தது.

யாழ் பதிப்பகம்

யாழ் பதிப்பகம் வழி இவ்வருடம் மாணவர்களுக்கான நூல் எதையும் வெளியிடவில்லை. ஆனால், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தினோம். இந்த முயற்சிக்கு எழுத்தாளர், ஆசிரியர் இளம்பூரணன் ஆலோசகராக இருந்து செயல்பட்டார். முதலில் இணையம் வழி இப்போட்டிக்கான பயிலரங்கை வழிநடத்தினோம். பின்னர் போட்டிக்கு வந்த கதைகளைத் திருத்தி இறுதிச் சுற்றுக்கு மாணவர்களை நேரடியாக மை ஸ்கில்ஸ் வரவழைத்தோம். கலந்துகொண்ட பதினாறு பேருடைய சிறுகதைகளில் பத்து சிறந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பரிசளிப்பு விழாவை 2023இல் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

பெர்னமா – வாசிப்போம்

பெர்னமா தொலைக்காட்சியில் வாசிப்போம் அங்கம் நவீன இலக்கியம் சார்ந்து இடம்பெற துணை நிற்க வேண்டும் என அதன் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டது. அதை ஒட்டி பனிரெண்டு வாரங்களுக்கு வாசிப்போம் அங்கத்தில் இடம்பெற வேண்டிய நூல்களை முடிவு செய்தோம். பெர்னமா தமிழ்ச் செய்தி இன்று மலேசியத் தமிழர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்படுகிறது. எனவே இன்று உருவாகி வந்துள்ள தரமான வாசகர்களைக் கொண்டு நூல்கள், இணையத்தளங்கள், சஞ்சிகைகள் என விரிவாக அறிமுகம் செய்தோம். இந்த அங்கத்தினால் தரமான நூல்கள் பரவலாகச் சென்று சேர்ந்திருந்தால் இதற்கு கொடுத்த உழைப்புக்கு பலன்.

ஒலிநூல்

இவ்வருடம் ஜூலை மாதம் என் சிறுகதைகளை ஒலி வடிவில் வெளியிடும் முயற்சியில் இறங்கினேன். அதற்கான யூ டியூப் சேனல் ஒன்றை நண்பர் ஒருவரின் உதவியுடன் தொடங்கினேன். தமிழில் சிறுகதைகளை வாசிக்க முடியாதவர்களுக்கும் நீண்ட பயணம் செய்பவர்களுக்கும் என் சிறுகதைகளைக் கொண்டு சேர்ப்பது திட்டம். அதுபோல தோழி ரெ. விஜயலட்சுமி தடைசெய்யப்பட்ட என் ‘பேய்ச்சி’ நாவலை ஒலி நூலாகக் கொண்டுவந்து அதை பரவச் செய்துள்ளார்.

ம.நவீன் ஒலிநூல்

பயணம்

இவ்வருடம் பினாங்கு, போர்ட்டிக்சன், கெந்திங்மலை என அவ்வப்போது நண்பர்கள் சரவணன், திருமுத்து, முருகன் ஆகியோரோடு உள்ளூர் பயணங்கள் சில மேற்கொண்டேன். வெல்லஸ்லி ஆரம்பப்பள்ளியில் பயின்ற நண்பர்களைச் சந்திக்கும் பொருட்டு மேற்கொண்ட பேராக் பயணம் குறிப்பிடத்தக்கது. அதேபோல நண்பர்கள் செல்வா, ஹேமாமாலினி ஆகியோர் பரிந்துரையில் நவம்பர் மாதம் அமைந்த நியூசிலாந்து பயணம் இவ்வருடத்தை இன்பமாக்கியது. நான் என்றென்றைக்கும் நினைவு கொள்ளும் பயணமாக அது அமைந்தது. தங்கவேல் போன்ற நண்பர்களை பெறவும் புனைவு மனதுக்கான கச்சா பொருளைச் சேகரிக்கவும் அப்பயணம் எனக்கு உதவியது.

நியூசிலாந்து பயணத்தொடர்

படைப்புகள்

இவ்வருடம் படைப்புகள் ரீதியான என் பங்களிப்பு குறைவுதான். அது அப்படித்தான் இருக்குமென வருட தொடக்கத்திலேயே அறிவேன். சில கட்டுரைகள், சில சிறுகதைகள் மட்டும் எழுதினேன். கோலசிலாங்கூர் அலையாத்தி காடுகளின் அழிப்புக் குறித்து தீவிரமாகவே செயலாற்றினேன். பெருநிறுவனங்களால் ஆடம்பரத் தங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பாகச் செயல்பட்ட அதன் பொறுப்பாளர் வேலை மாற்றலுக்கு உள்ளாகியுள்ளார். அதிகாரம் அப்படித்தான் நகரும். அலையாத்தி காடுகளை நான் பணியாற்றும் பள்ளி மாணவர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்து வைத்தபோது பிற பள்ளிகளும் அங்கு முகாம் நடத்த ஊக்கம் அடைந்துள்ளன. ஒரு வனத்தை மக்கள் திரள்தான் காக்க வேண்டும். எழுத்தாளனின் பணி அதை மக்கள் கவனத்திற்கு எடுத்து வருவது. நான் நாளிதழ், தொலைக்காட்சி என விரிவாகவே இச்சிக்கலை மக்கள் பார்வைக்கு கொண்டு சேர்த்துள்ளேன். ஆனால் பெருநிறுவனங்களின் கண்பட்ட வளங்கள் அவ்வளவு எளிதில் தப்பிப் பிழைப்பதில்லை. அவை வேறு வடிவத்தில் வேறு திட்டத்தில் மீண்டும் அக்காட்டை அணுகும். எழுதி எழுதி மக்களை கூர்மைப் படுத்துவதைத் தவிர என்னிடம் வேறு திட்டமில்லை. அக்காட்டில் உள்ள ஏதோ ஒரு பறவையின் ஓயாத துன்பப் பாடலாக இரைவதைத் தவிர வெறு வழியில்லை. இப்படி 2022 இவ்வருடம் செயலாற்றுவதற்கான வருடமாக வடிவமைந்தது.

இப்படித்தான் இப்பிறவியை அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.

இலக்கியம், அதைச் சார்ந்த செயல்கள் அனைத்தும் என்னை மகிழ்ச்சியாகவே வைத்துள்ளன. இயற்கை இலக்கியம் சார்ந்த எனது எல்லா செயல்களுக்கும் துணை நிற்கிறது. அது துணை நிற்பதை அறிந்ததாலேயே குருவின் கண்காணிப்பில் இயங்குவதைப் போல முழுமையான நேர்மையுடனும் அக்கறையுடனும் செயலாற்றுகிறேன். உலகியல் வாழ்க்கையில் நிறைய தடுமாற்றங்கள் கொண்டவன் நான். குடும்பத்தில் வேலையிடத்தில் குறைகள் கொண்ட மனிதன் நான். எனவே, நான் எடுத்துக்கொண்டுள்ள தவ வாழ்க்கையில் மட்டுமே என் முழுமையைத் தேடுகிறேன். அதில் அறம் பிறழ்ந்தால் மட்டுமே என்னை இருள் சூழும். நான் அழிவை நோக்கி நகர்பவனாவேன். அப்படி மனத்தடுமாற்றங்கள் நிகழாமல் இருக்கவே நமக்கு ஆசிரியர்களும் தேர்ந்தெடுத்த நண்பர்களும் தேவையாக உள்ளனர். அப்படியானவர்கள் சூழ்ந்துள்ள வாழ்க்கை இப்பிறவியில் எனக்கு வாய்த்துள்ளது. எனவே ஒவ்வொரு நாளையும் நான் இன்பமானதாக மாற்றிக்கொள்கிறேன். ஒரு வழிப்போக்கனின் கையில் உள்ள இசைக்கருவியைப் பறிப்பதால் அவனுக்குள் இருந்து உருவாகும் இசை நின்று விடும் என நம்புபவர்களுக்கு மத்தியில் நான் நடனமாடிக்கொண்டே இருக்கிறேன்.

இவ்வருட இறுதியில் எழுத்தாளர் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்ததும் அவரது ஆலோசனைகளைப் பெற்றதும் ஆசிர்வாதம். அவர் அருகாமை மனதை முழுக்கவே புனைவை நோக்கித் தள்ளுகிறது. எனவே 2023 புனைவுக்கானது; பயணங்களுக்கானது.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

2018: கண்டநற் சக்திக் கணமெலாம் நான்

2019: இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்!

2020: அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்

2021: ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்

(Visited 1,529 times, 1 visits today)