க்யோரா 15: பச்சைக்கல் குறியீடுகள்

தங்கா, செல்வா, ராணி ஆகியோருடன்

காலை கொஞ்சம் பரபரப்பாகவே விடிந்தது. விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணங்கள் அனைத்தும் அவ்வாறுதான் மாறிவிடுகின்றன. என்னைப் போன்ற குழப்படி ஆசாமிகளுக்கு விமானப் பயணம் இன்னும் சவாலானது.

நிகழ்வுகள் நினைவில் இருக்கும் அளவுக்கு பெயர்களும் எண்களும் எனக்கு இருப்பதில்லை. எனக்கு நெருக்கமான பலருக்கும் தெரிந்த குறைபாடு இது. வகுப்பில் மாணவர்கள் பெயர் நினைவிருக்காது. ஒருவர் என்னிடம் சில மாதங்கள் பேசவில்லை என்றால் அவர் பெயரை மறந்திருப்பேன்; ஆளை மட்டும் நினைவிருக்கும். பின்னர், கைப்பேசியில் ஒவ்வொரு பெயராக வரிசையாகப் பார்த்தே அவர் பெயரை நினைவுக்குக் கொண்டு வருவேன். எவ்வளவு முயன்றும் என் காரின் எண் நினைவில் இருப்பதில்லை. பெரும்பாலும் ஒருவரின் பெயரை நினைவு வைத்துக்கொள்ள எப்போதும் நினைவில் இருக்கும் இன்னொன்றின் வழியாகவே நுழைந்து செல்வேன்.

நியூசிலாந்திலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. செல்வா அவர்கள் “ராணி உங்களிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என விரும்புகிறார்” என்றார்.

நான் “யார் ராணி” என்றேன்.

“என் மனைவிதான்” என்றார்.

எனக்கு அவர் பெயர் மனதில் நிற்கவில்லை.

“உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டாம். இங்க உள்ளவரை நினைவு வைத்திருக்கலாமே” என்று சிரித்தார் செல்வா. அந்த நகைச்சுவை சட்டென சிரிப்பை மூட்டியது. இந்த நகைச்சுவை உணர்வுதான் அவரை துடிப்புடன் வைத்துள்ளது.

தங்கா என்னைத் தொடர்ந்து வாசிக்கிற படியால் என் சிக்கல் புரிந்திருக்கலாம். நான் சில இடங்களில் இது பற்றி எழுதியுள்ளேன். காதின் அருகில் வந்து “செல்வாவை ராஜா என நினைவு வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால் அவர் மனைவி ராணி என நினைவில் இருக்கும்” என்றார். அது நல்ல உபாயம். பெயருக்கே இப்படியென்றால் எண்களாலும் அதைச் சார்ந்த விதிமுறைகளாலும் நிரம்பிய விமான நிலையத்திற்குள் நுழையும் முன் நான் பல ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டிருந்தது. அதற்கு முன் வாங்கிய பொருட்களை முறையாக அடுக்கி வைத்தேன்.

நான் நியூசிலாந்தில் சில நினைவு பரிசுகளை மட்டும் வாங்கியிருந்தேன். அவற்றில் முக்கியமானது மாவோரிகளின் குறியீட்டுச் சின்னங்களைக் கொண்ட சங்கிலிகள். இந்தச் சின்னங்கள் மாவோரி பண்பாட்டில் முக்கியமானது. எழுத்து மொழி இல்லாத பண்டைய மாவோரிகளின் வரலாறு, நம்பிக்கை, புனைவு, ஆன்மிக மதிப்புகள் போன்றவை இந்தக் குறியீடுகளில் அடக்கியுள்ளன. இன்று அவை கலை வடிவங்களாக மாறி விற்பனை செய்யப்படுகின்றன. பலவிதமான குறியீட்டுச் சின்னங்கள் இருந்தாலும் சில வகையானவற்றை மட்டுமே திரும்ப திரும்ப எதிர்கொண்டேன். அவற்றில் சில:

கொரு (Koru)

இதுதான் மிகவும் பிரபமான குறியீடு. அமைதி, புதிய தொடக்கம், வளர்ச்சி, மீளுருவாக்கம் போன்றவற்றைக் குறிக்கிறது. ஒரு சுழற்றியைக் காட்டும் வடிவம் அது. சிறிதிலிருந்து பெரியதாக மாறும் சுழற்சி.

பிகோருவா (Pikorua)

இது ஆகக்கடைசியாக உருவான மாவோரிகளின் சின்னம். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் இந்தச் சின்னத்தை உருவாக்கும் கருவி மாவோரிகளிடம் இல்லை என்பதால் அவ்வாறு கருதப்படுகிறது. இது வாழ்க்கையில் காணக்கூடிய பல பாதைகளைக் குறிக்கிறது. மேலும் இரண்டு அன்புக்குரியவர்களிடையே வலுவான பிணைப்பையும் இது அர்த்தப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

தோக்கி (Toki)

வலிமையைக் குறிக்கிறது. குறிப்பாக இது மாவோரிகளின் மதிப்புமிக்க கருவியாகத் திகழ்ந்தது. தொடக்கத்தில் இது கோடரி போன்று பயன்பட்டது. ஒரு மர கைப்பிடியில் இணைத்து மரங்கள் வெட்ட உதவியது. காலப்போக்கில் இது வலுவான தலைவர்களிடம் சடங்கு கோடரியாக நிலைத்துள்ளது. அதன் சுருக்கப்பட்ட வடிவம் இது.

மானியா (Manaia)

உயிர் உள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்குமான ஒரு தூதுவர் இவர். அமானுஷ்ட சக்திகளைக் கொண்ட ஓர் ஆன்மிக பாதுகாவலர். ஒரு மீனின் வால், ஒரு மனிதனின் உடல் மற்றும் ஒரு பறவையின் தலை ஆகியவை இவ்வுருவத்தில் அடங்கியுள்ளன. அதன் உடலில் ஒரு பாதி பூலோகத்திலும் மறுபாதி இறந்தவர்களின் உலகிலும் இணைந்து இணைக்கிறது.

திக்கி (Tiki)

மாவோரி புராணத்தில் உள்ள முதல் மனிதனைப் பிரதிநிதிக்கிறது. இவன்தான் உலகத்தின் முதல் மனிதன். அவர் நட்சத்திரங்களில் இருந்து வந்தவன். உலகின் முதல் மனிதன் என்பவனே அனைத்துக்கும் ஆசிரியர். எனவே அறிவு, சிந்தனை தெளிவு, பண்பு, வலிமை என்பதன் குறியீடாக இச்சின்னம் உள்ளது.

மாத்தாவ் (Matau)

மீன் தூண்டில் சின்னம் இது. வாழ்வு செழிப்பாக இச்சின்னம் பயன்படுத்தப்படுகிறது. மாவோரிகள் மத்தியில் மீன் தூண்டில் மதிப்புமிக்க சின்னம். அவர்கள் உயிர்வாழ கடலையே நம்பினர். அவர்கள் உண்ணும் உணவுகள் கடலில் இருந்து கிடைத்தன. எனவே கடலில் பாதுக்காப்பான பயணத்துக்கும் ஆரோக்கியத்திற்கும் இந்தச் சின்னம் அர்த்தம் கொடுக்கிறது.

பொதுவாக இந்தச் சின்னங்கள் பௌனமு (paunamu) என்ற கல்லில் செதுக்கப்படுவதுதான் சிறப்பு. இது நியூசிலாந்தில் காணப்படும் பச்சை நிற கல். ஆற்றோர கற்பாறைகளில் இவை கிடைக்கின்றன. மாவோரிகள் இக்கல்லை புதையல் என்றே குறிப்பிடுகின்றனர். மாவோரிகளின் ஆயுதங்களாக இந்தக் கற்களே விளங்கின. அவ்வளவு உறுதி.

இந்தக் கல்லில் செதுக்கப்பட்ட சின்னங்கள் ஒவ்வொன்றும் மலேசிய ரிங்கிட்டில் நூறை தாண்டின என்பதால் சின்னங்களை ஏற்றிக்கொண்ட நவீன தயாரிப்பு பொருள்களை மட்டும் வாங்கினேன். தங்கா எனக்கு பௌனமு கல்லில் செதுக்கப்பட்ட கொரு சின்னம் கொண்ட கயிற்றுச் சங்கிலி ஒன்று வாங்கிக்கொடுத்தார்.

விமான நிலையத்துக்கு செல்வா அவர்களே அழைத்துச் செல்வதாக இருந்தது. ஆனால் தங்கா காலையில் வந்துவிட்டதால் அவருடனே புறப்பட்டேன். விமான நிலையம் வரை அதிகாலை அமைதியுடனே கார் சென்றது. அங்கிருந்த நான்கு நாட்களில் நிறைய உரையாடிவிட்டோம். நிறைய கதைகளைப் பேசிவிட்டோம். எழுத்து, வாழ்க்கை, எழுத்தாளன் என அதிகமே பேசி புரிந்துகொள்ள முயன்றோம். நான் தங்காவிடம் கற்றுக்கொண்டவை அதிகம். நமக்கு உலகம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை எனக்காட்டும் நண்பர்கள் கிடைப்பது அதிஷ்டம். நான் ஷோபா சக்தியையும் சு. வேணுகோபாலையும் வாசிக்கும்படி மறுபடி மறுபடி கூறிக்கொண்டிருந்தேன். என் வாசிப்பில் தமிழின் வெவ்வேறு வலுவான முகங்கள் அவர்கள்.

விமான நிலையத்திற்கு வந்தபிறகு தங்கா கேட்டார், “நீங்கள் கேட்டவைகளை எல்லாம் நிறைவேற்றி விட்டேனா?”

நான் “ஆம்” என்றேன்.

“இன்னும் இல்லை… நீங்கள் நியூசிலாந்து ஸ்ட்ராபெரி சுவைக்க ஆசைப்பட்டீர்கள்” எனக்கூறி பையில் இருந்த இரு பழங்களை நீட்டினார்.

மனது கனத்துப்போனது. பிரிதலுக்கான கனமா?

மலேசியாவில் உள்ளதைவிட சற்று பெரிய ஸ்ட்ராபெரிகள். சுவையும் அதிகம். நியூசிலாந்தில் பிரபல சாக்லெட்டான whittakers வாங்கிக்கொண்டேன். தழுவி விடைகொடுத்துக்கொண்டோம்.

வெலிங்டனிலிருந்து ஆக்லாந்து சென்று அங்கிருந்து சிங்கை செல்ல வேண்டும். விமான நிலையத்தில் என் வாயிலைத் தேடிச் சென்றேன். ஒரு நியூசிலாந்து பெண்மணி முகம் மலர டிக்கெட்டைக் கேட்டாள். நான் கொடுத்து விட்டு “க்யோரா” என்றேன்.

அவள் முகம் மேலும் மலர்ந்தது. “க்யோரா” என்றாள் உற்சாகமாக.

முற்றும்

(Visited 152 times, 1 visits today)