க்யோரா 14: இறுதி நாள் பயணங்கள்

எண்பதுகளில் பிறந்த மலேசியக் குழந்தைகள் அனைவருக்கும் ‘Fernleaf’ பால்மாவு மூலம் நியூசிலாந்து, நன்கு அறிமுகம் இருக்கும். பசும் புல்வெளியில் மேயும் பெரிய கருப்பு மாடுகள் உடலில், உலக வரைப்படம் போன்ற வெண் வடிவங்கள் திப்பித்திப்பியாய் இருப்பதை தொலைக்காட்சி விளம்பரங்களில் நாங்கள் ஆச்சரியமாகப் பார்த்ததுண்டு. அந்த பசுமையான புல்வெளிகளில் மேயும் பசுவின் பாலை, சிறுவனாக நான் குடித்தபோது அடைந்த பரவசம் இன்று எளிதில் சென்று சேர முடியாத தொலைவில் உள்ளது. அறிவும் புரிதலும் எத்தனை சந்தோஷங்களைக் கெடுத்துவிடுகின்றன.

ஆனாலும் நான் அந்த மாடுகளைப் பார்க்க ஆசைப்பட்டேன். எனவே ஞாயிறு காலையிலேயே கிராமப்புற பகுதிக்குச் செல்ல முடிவானது. எங்களுடன் வினோட்டும் இணைந்தது நல்லதாக போனது. வினோட் தகவல் தொழில்நுட்பத் துறையில் பயின்று அதை சார்ந்த வேலை செய்தாலும் ஆர்வத்தின் பெயரால் தோட்டக்கலையில் (horticulture) டிப்ளோமா முடித்திருந்தார். அவர் தீவிரமான இடதுசாரி. எனவே, என்னிடம் வலது சாரி தன்மை உள்ளதாக அவருக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழுந்தன. “நடுநிலையாளன் என மட்டும் சொல்லிடாதீங்க… அவங்களதான் நம்ப முடியாது” என கிண்டல் செய்தார். அவரிடம் பேசுவது சுவாரசியமாக இருந்தது. அதற்கு முதல் காரணம் கருத்து வேறுபாடு உள்ளவர்களிடம் காட்டக்கூடிய வெறுப்பு முகம் இல்லாமல் அன்பாக உரையாடினார். கருத்துகள் வேறு; மனிதர்கள் வேறு எனும் தெளிவிருந்தது. நியூசிலாந்து நிலம் அதைக் கொடுத்திருக்கலாம்.

என் வரையில் ஒருவன் வலது அல்லது இடது என ஏதும் ஒன்றில் இருக்க வேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லை. என் இரண்டு நாவல்களும் இரு பெண் தெய்வங்களை மையமாகக் கொண்டவை. எனது ‘உச்சை’ தொகுப்பில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள், அறிவு அதுவரை அறிந்தவைகளை இன்னொரு புரிதலின் வழி கேள்வி எழுப்புவதாகவே உள்ளது. இவை நான் திட்டமிட்டு எழுதாதவை. என்னுள்ளிருந்து இயல்பாக வெளிவந்தவை. என் ஆழ்மன படிவங்கள் அவை. அன்னை தெய்வங்கள் மீது எனக்கு ஆழமான பிடிப்புண்டு என்பதை நான் என் புனைவுகள் வழியாகவே அறிந்தேன்.

ஆரம்பப் பள்ளி காலங்களில் நான் கோயிலிலேயே அதிகம் இருந்திருக்கிறேன். பூசையின்போது மணி அடிப்பது என் கடமைகளில் ஒன்று. ஏழு வயதிலேயே கந்த சஷ்டி கவசமும் சிவபுராணமும் மனனம். இடைநிலைப்பள்ளியில் பயின்றபோது ஓர் ஆன்மிகவாதியாவதே என் வாழ்க்கை லட்சியமாக இருந்தது. அது குறித்து கட்டுரையும் எழுதியுள்ளேன். நவீன இலக்கியம் வாசிக்கத் தொடங்கியபோதே பெரியாரையும் சேர்த்தே வாசித்தேன். பின்னர் தமிழக இடதுசாரிகளில் நூல்களை தீவிரமாக வாசித்த காலம் உண்டு. அவர்கள் வழியாக அயோத்திதாசர் உள்ளிட்ட சில சிந்தனையாளர்கள் அறிமுகமானார்கள். வாசிப்பு எனக்குச் சொல்லிக்கொடுத்தது இது குறித்தெல்லாம் எனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியவில்லை என்பதைத்தான்.

ஆனால் நான் மெல்ல மெல்ல கண்டடைந்த ஓர் உண்மை உண்டு. எனது ஆழத்தில் நான் யாரோ அதுவாக வாழ்வது மட்டுமே இன்பமானது. நான் தீவிரமான கடவுள் மறுப்பாளன் என நிறுவத்தான் நவீன இலக்கியம் வாசிக்கத் தொடங்கிய காலங்களில் பெரும்பாலும் முயன்றுள்ளேன். அறிவின் கூர்மையைச் சோதித்துப்பார்க்க அது அவசியமாக இருந்தது. ஆனால் அந்தரங்கமாக உடலைப் பிடித்து தைக்கப்பட்ட ஆடைபோல அந்த சிந்தனை என்னை அதிகம் தொல்லை செய்தது. அது என் உடையல்ல. வேறொருவரது உடை. அது எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் என் உடலுக்குப் பொருந்தாமல் இருந்தது. அதேபோல என்னால் மதம் சார்ந்த எந்தச் சடங்குகளிலும் ஈடுபட முடிந்ததில்லை. அப்படி இருக்கும் நிலை ஏற்பட்டாலும் என் உடலில் இருந்து நான் பிரிந்துவிடுகிறேன்.

இதை உணர்ந்துகொண்டபோது என் உடலை இறுக்கி நானே அணிந்துகொண்ட அணிகலன்கள் தளர்ந்தன. அப்போதுதான் நான் ஓர் எழுத்தாளன் மட்டுமே என்பதே அந்தரங்கமாக உணர்ந்தேன். வினோட்டிடம் சில சிந்தனையாளர்களின் நூல்களை வாசிக்கச் சொன்னேன். வாசிப்பு வினோட் சிந்தனையை வடிவமைக்கலாம். தன்னை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தலாம். இல்லாவிட்டாலும் தவறல்ல; அவர் நிலைப்பாட்டில் அவர் ஆழுள்ளம் அழுத்தம் அடையாமல் இருக்குமாயில் அதுவே மகிழ்ச்சி.

வினோட்டுக்கு தாவரங்கள், விலங்குகள் குறித்து நன்கு தெரிந்திருந்தது. சென்ற வழியில் செம்மறி ஆட்டுப்பண்ணை இருந்தது. அதை கடந்து சென்றபோது Battle Hill எனும் மலைப்பகுதி வந்தது. அங்கிருந்த மரங்கள் குறித்து விளக்கினார். இந்த மலையில் 1846இல் மாவோரிகளுக்கும் பிரிட்டிஷாருக்கும் நடந்த சண்டையின் நினைவு சின்னங்கள் வைக்கப்பட்டிருந்தன. கொஞ்ச தூரம் நடந்தோம். கோடை காலம் தொடங்குவதால் ஆங்காங்கு முகாம்கள் அமைத்து தங்கும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. வீட்டை விட்டு குடும்பம் குடும்பமாக பொது இடத்தில் முகாமிட்டு, சமூகமாக ஒன்று திரள்வதைக் காண சந்தோசமாக இருந்தது.

அவ்விடத்தைச் சுற்றி வந்தபின் மீண்டும் எங்கள் பயணம் தொடங்கியது. தங்காவுக்கும் வினோட்டுக்கும் மாடுகள் கண்களின் படும் என்ற நம்பிக்கையே இல்லை. முன்புபோல அல்லாமல் இப்போது பண்ணை உரிமையாளர்கள் தனித்தனி நிலங்களில் மாடுகளை வளர்ப்பதால் பார்ப்பது அரிது என்றனர். ஆனால் ஓர் இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் புல்வெளிகளில் மேய்வதைப் பார்த்ததும் நாங்கள் மூவரும் உற்சாகமடைந்தோம்.

நான் காரை விட்டு இறங்கி வேலியோரம் இருந்த செடிகளைப் பறித்து காட்டவும் தூரத்திலிருந்து மாடுகள் ஓடி வந்தன. அவை ஓடி வந்த வேகத்தில் எங்களைத் தாக்கதான் வருகின்றனவோ என கொஞ்சம் பயந்துதான் போனேன். ஆனால் காலம் முழுவதும் ஒரே மாதிரியான புற்களை மேயும் அவைகளுக்கு நாக்குக்கு ருசியாக வேறு வகை செடிகள் தேவைப்பட்டுள்ளன. செடிகளைக் கொடுத்தபோது நாக்கை கீழ் நோக்கி சுழற்றி பெற்றுக்கொண்டன. அப்படி வெளியில் இருந்து செடிகளைத் தருவது தவறு. ஆனாலும் பசி என வந்த ஜீவனுக்கு உணவு கொடுக்காவிட்டால் எப்படி. அந்த மாடுகள் பயந்த சுபாவம் கொண்டவை. யாரையும் தாக்காது. கொஞ்சம் கை அசைத்தாலே ஓடிவிடும் என தங்கா கூறினார். நான் அவற்றைத் தடவிக்கொடுத்தேன். இதன் மூதாதையர்களில் இருந்து வந்த பாலைத்தான் நான் சிறுவனாக இருந்தபோது மலேசியாவில் பருகியிருப்பேன். எல்லாம் ஒருவித ரத்த பந்தம்தான்.

மீண்டும் திரும்பியபோது சில இடங்களில் திராட்சை, ஸ்ட்ராபெரி தோட்டங்கள் இருக்கும் எனச் சொன்னார்கள். எனக்கு ஸ்ட்ராபெரி சாப்பிட ஆசை வந்தது. மலேசியாவில் கேமரன் மலையில் உற்பத்தியாகும் பழங்கள் எல்லாம் முற்றிலும் இராசயனம். எனக்கு அந்தக் குளிர் நில ஸ்ட்ராபெரியை தின்ன ஆசை வந்தது. ஆனால் அதற்கான அவசாகம் இல்லை.

தொடர்ந்து அப்பகுதியில் புதிதாகக் குடிவந்த மலேசியர் ஒருவரை மரியாதை நிமித்தமாகக் காணச் சென்றோம். மலேசியாவில் அரசு வேலையில் இருந்து விடுபட்டு இப்போது நியூசிலாந்தில் குடியேறி இருந்தார். அது மாவோரிகள் அதிகம் வாழும் பகுதியென வினோட் கூறினார். மாவோரிகள் வாழும் பகுதிகளில் வீட்டு வாடகை சற்று குறைவு. இதுபோன்ற இடங்களில் போதை வஸ்துகள் விற்கப்படும் என கேள்விப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் தங்கா.

“எங்கு விற்பார்கள்” என்றேன்.

“தெரியவில்லை. ஆனால் இரு காலணிகளின் கயிறுகளை ஒன்றாகச் சேர்த்துக்கட்டி விளக்குக் கம்பத்தில் மாட்டியிருந்தால் அங்கு போதை வஸ்துகள் விற்பதாகப் பொருள்” எனத் தான் கேள்விப்பட்டதைக் கூறினார்.

அது உண்மையாக இருந்தாலும் ஆச்சரியம் அல்ல. இன்று நமது ஒழுக்க மதிப்பீடுகளை வைத்துக்கொண்டு பூர்வக்குடிகளை அணுகுவதில் எந்த நியாயமும் இல்லை. அவர்கள் எந்தவகையான போதை வஸ்துகளை உபயோகிக்கிறார்கள் என அறியவே ஆவல் இருந்தது. கூடவே இன்னொரு சந்தேகமும் வந்தது.

“அது ஏன் எல்லா இடத்திலும் க்யோரா என்கிறார்கள். அப்படியானால் வணக்கமா?” எனக்கேட்டேன்.

“அப்படி திட்டவட்டமான அர்த்தமில்லை. க்யோரா (Kia Ora) என்பது மாவோரி மொழி. நல் வாழ்க்கையைப் பெற்றிடுங்கள் அல்லது ஆரோக்கியமாக இருங்கள் என நேரடியாகப் பொருள் கொள்ளலாம். ஆனால் அதை அப்படியான பொருளில் அடக்கிவிடவும் முடியாது. நல்வரவு என்பதற்கும் அதை பயன்படுத்தலாம். நன்றி எனச் சொல்வதற்கும் ‘க்யோரா’ எனலாம். இதற்கெல்லாம் தனித்தனி மாவோரி சொற்கள் உள்ளன. ஆனால் க்யோரா இதனை ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதிக்கிறது” என்றார்.

கொஞ்சம் புரிந்துகொள்ள சிரமமாக இருந்தாலும் அச்சொல் நல்லெண்ணத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் ஆத்மார்த்தமான சொல் எனப் புரிந்துகொண்டேன். யாரிடமாவது அதைப் பிரயோகித்துப் பார்க்கவேண்டுமெனத் தோன்றியது.

நியூசிலாந்துக்குப் புதிதாகக் குடிபெயர்ந்த மலேசியர், நாங்கள் வருவதை ஒட்டி சமைத்திருந்தார். சில நல விசாரிப்புகள் செய்துக்கொண்டோம். மலேசிய அரசியல் பேசினோம். அமர்ந்து சாப்பிட நேரமில்லை என்பதால் உணவை பொட்டலம் கட்டிக்கொண்டு விக்டோரியா குன்றுக்குப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

வினோட் உடன் விக்டோரியா குன்றில்

விக்டோரியா குன்று 196 மீட்டர் கொண்ட ஒரு மலை. அந்த வெயில் நேரத்தில் அங்கு சென்றதே நல்ல அனுபவம். வானம் தெளிவாக இருந்தது. “இது நல்ல பொழுது” என தங்கா சொன்னார். மலையைச் சுற்றிலும் வெலிங்கடனின் வெவ்வேறு பகுதிகளைப் பார்க்க முடிந்தது. காற்று உடலுக்கு இதமாக இருந்தது. அரை மணி நேரம் அங்கு செலவிட்ட பின்னர் தங்காவின் அலுவலகம் நோக்கி நகர்ந்தோம்.

இடையில் நான் ஒரு பழைய தேவாலயத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். 1879 நிறுவப்பட்ட St. Peter’s Anglican Churchக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள சூழலை பார்த்துவிட்டு மீண்டும் பயணம் செய்து அலுவலகத்தில் நுழைந்தோம். அன்று ஞாயிறு என்பதால் விடுமுறை. ஆனால் தங்கா உள்ளே நுழைய அனுமதி இருந்தது. மலேசியர் கட்டிக்கொடுத்த உணவை பகிர்ந்து உண்டோம். என் தட்டில் எதையும் மிச்சம் வைக்கவில்லை. வைத்தால் தங்கா எடுத்து வாயில் போட்டுக்கொள்வார் என எச்சரிக்கையாக இருந்தேன். தங்கா அவர் வேலை செய்யும் பகுதிகளைக் காட்டினார்.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில்

தங்கா மதியம் 1 மணிக்கு நாடாளுமன்றத்தைச் சுற்றிப்பார்க்க அனுமதி வாங்கியிருந்தார். தேன்கூட்டை மாதிரி வடிவமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடம் போல இருந்தது நாடாளுமன்றம். கோவிட் காலத்தில் தடுப்பூசிகளுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த மக்களின் எதிர்ப்புக்கூட்டங்கள் குறித்து இருவரும் பகிர்ந்துகொண்டனர். உள்ளே ஒருமணி நேர சுற்றுலா. மெதுவாக நடந்து காலங்களைக் கடந்து வந்தோம்.

வாழப்பழத் தோப்புல

அன்று மாலையில் ரவீன் அவர்களின் ஏற்பாட்டில் தீபாவளி கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. நியூசிலாந்து வந்ததிலிருந்து ரவீன் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சி எதிலும் பங்குபெறவில்லை என்பதால் அவசியம் அதில் கொஞ்ச நேரமாவது இருந்துவிட்டு வருவது நாகரீகம் எனத் தோன்றியது. நாங்கள் சென்றபோது அரங்கில் நல்ல கூட்டம். ஆடல் பாடல் என ஜெகஜோதியாய் இருந்தது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ‘வாடா மாப்புள வாழப்பழ தோப்புல’ எனும் பாடலை ஒருவர் பாட அரங்கு அதிர்ந்து உற்சாகமானது. தங்காவும் ரெண்டு குத்து குத்திவிட்டு வந்தார். அவர் சைவம் என்பதால் வாழைப்பழம் என்றவுடன் துடிப்பேற்பட்டிருக்க வேண்டும். வினோட் உற்சாகமாக விசில் அடித்தார். ரவீன் மேடையில் அட்டகாசமான நடனத்தை வழங்கினார். கடந்த இரண்டு நாள் நிகழ்ச்சி ஏற்பாட்டின் மொத்த அழுத்தத்தையும் ஆடித்தீர்த்துவிட்டே கீழே இறங்கினார்.

மறுநாள் எனக்கு விமானம். சீக்கிரமாகச் சென்று படுப்பதுதான் பயணத்துக்கு உதவும் என்பதால் நண்பர்கள் இருவரிடமும் விடைபெற்று செல்வாவுடன் புறப்பட்டேன். போகும்வழியில் ஏதும் கோயிலுக்குச் சென்று பார்க்க வேண்டும் என்றேன். ஒரு முருகன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றனர். கோயில் ஒரு கட்டடத்தின் உட்புறம் அமைந்திருந்தது. குளிரும் நிலநடுக்கமும் கொண்ட ஊரில் அதுதான் பாதுகாப்பான முறை.

உள்ளே சென்றேன். அமைதி. எங்கள் மூவர் அன்றி யாரும் இல்லை. அந்நிமிடமே பயணம் நிறைவுக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது.

(Visited 106 times, 1 visits today)