க்யோரா 13: ஹக்கா

தமிழ் விழா முடிந்தபிறகு பங்கேற்பாளர்களுக்கான விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எங்களுக்கு வேறு திட்டம் இருந்தது.

அன்று பெண்களுக்கான ரக்பி (Rugby) உலகக் கிண்ண விளையாட்டுப்போட்டி ஆக்லாந்து ஏடன் பார்க்கில் (Eden Park, Auckland) நடைபெற்றது. இரவு ஏழு மணிக்கு நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன என செல்வா பரபரப்பாக இருந்தார். எனக்கு எந்த விளையாட்டிலும் ஆர்வம் இருந்ததில்லை. காற்பந்து விளையாட்டு ரசிகர்கள் ஒன்றாகச் சேரும்போது நான் கூட்டத்தில் தொலைந்த சிறுவனாகிவிடுவேன்.

ரக்பி விளையாட்டு குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. தலை கவசமும் பல்வேறு அங்க வஸ்திரங்களை அணிந்த வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். “அது அமெரிக்கன் ரக்பி” என்றார் செல்வா. “இது ரக்பி. அப்படி கவசங்கள் ஏதும் இருக்காது. ஆனால் இதுவும் ஒரு போர் போலத்தான்” என்றார். எனவே விருந்திலிருந்து கழண்டு கொண்டோம்.

ரக்பி விளையாட்டை ஏதாவது பொது இடத்தில் பார்க்கலாம் எனத் திட்டமிடப்பட்டது. எனக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லாவிட்டாலும் பொது இடங்களில் மாவோரிகளின் விளையாட்டு உற்சாகம் எப்படி உள்ளன எனப் பார்க்க ஆர்வம் இருந்தது. செல்வா அவர்கள் நெடுகாலமாக நியூசிலாந்தில் இருப்பவர். எனவே அவரால் பல அனுபவங்களை மீட்க முடிந்தது.

“இன்று நீங்கள் சாலைகளில் போலிஸ்காரர்களைப் பார்க்கலாம். இங்கு கிரிக்கெட்டும் ரக்பியும்தான் தேசிய விளையாட்டுகள். எனவே உற்சாகமும் அதை ஒட்டிய வன்முறைகளும் நடக்க வாய்ப்புண்டு. மாவோரிகள் இன்று பண்பட்டு விட்டனர். ஆனால் அவர்கள் பழங்குடி வாழ்க்கையில் காலகாலமாக போர் புரிந்தவர்கள். அந்த போர் மனம் இன்னும் அவர்களுக்குள் உள்ளது. இதுபோன்ற விளையாட்டு தினங்களில் அது வெளிபடுவதுண்டு. பொதுவாகவே மாவோரிகள் மத்தியில் போதை பழக்கம் இருப்பதால், அது சீண்டும்போது தன் ஆதி குணத்துடன் ஒரு மாவோரியன் எதிரில் இருப்பனை ஓங்கி குத்துவது உண்டு. ஒரு மாவோரின் குத்தை நம்மால் தாங்க முடியாது. முகம் உடைந்துவிடும். சில சமயம் மரணம் கூட நிகழும்” என்றார்.

இதையெல்லாம் காரில் ஏறி கிளப்பை நோக்கி செல்லும்போதுதான் சொன்னார். புறப்படும் முன்னரே சொல்லியிருந்தால் காய்ச்சல் என வீட்டில் படுத்திருப்பேன். அல்லது ஏஞ்சலைத் தேடிப் போயிருப்பேன். ‘நல்லா கொடுக்குறாங்கய்யா டீட்டெய்லு’ என நினைத்தபடி முகத்தைத் தடவிப்பார்த்துக்கொண்டேன். நல்லபடியாக ஊர் திரும்பினால் போதும் என இருந்தது.

நாங்கள் முதலில் சென்ற ஒரு கிளப்பில் ஏதோ திருமண விருந்து இருந்ததால் ரக்பியை ஒளிபரப்ப மாட்டார்கள் எனத் தெரிந்ததும் செல்வா பரபரப்பானார். நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. “நீங்க கட்டாயம் இந்த விளையாட்டை முதலில் இருந்து பார்க்கணும். அவங்க ஹக்கா செய்யுறத கட்டாயம் பார்க்கணும்” என்றார்.

கப்பா ஹக்கா

ஹக்கா என்பது நடனம். கப்பா ஹக்கா (Kapa Haka) என்பதுதான் முழுமையான சொல். ‘கப்பா’ என்றால் குழு. ஹக்காவை குழுவில் மட்டுமே ஆடுவர். தனி நபர் நடனங்கள் கிடையாது. உடலில் தாளமிட்டும் கால்களை தரையில் அடித்தும் இந்த நடனம் ஆடப்படுகிறது. மரண வீடுகள், பெரிய விழாக்கள், வெற்றிகள், திருமண வைபவங்கள் என முக்கிய நிகழ்ச்சிகளில் இந்த நடனம் ஆடப்படுகிறது.

இன்று ஹக்கா நடனம் போர் மனநிலையில் இருந்து உருவானது எனச் சொல்லப்பட்டாலும் மாவோரிகளின் தொன்மக்கதை கூறும் வரலாறு சுவாரசியமானது. அவர்கள் கதையின் படி இந்த நடனம் வாழ்வை கொண்டாடுவதற்கானது. மாவோரிகள் சூரியனை வழிப்படக்கூடியவர்கள். அவர்கள் நம்பிக்கைப்படி சூரியனுக்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவி குளிர்காலம். அவள் பெயர் ரௌமாட்டி (Raumati) மற்றுமொரு மனைவி கோடைக்காலம். அவள் பெயர் தக்குருவா (Takurua). இவர்களில் தக்குருவா எனும் மனைவிதான் இந்த நடனத்தை உருவாக்கினாள். கோடைக்காலத்தில் உஷ்ணமும் காற்றும் இருக்கும். எனவே பஞ்ச பூதங்களில் இந்த இரண்டு பூதங்களைக் கொண்டு ஹக்கா நடனம் உருவாக்கப்பட்டது. தக்ருகுவாவின் மகன்தான் இந்த நடனத்தை முதன்முறையாக ஆடினாராம்.

ஹக்காவில் நிறைய வகை நடனங்கள் உண்டு. இதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது போருக்கு முன்பான நடனம்தான். போர் நடனம் ஆயுதங்களை வைத்துக்கொண்டு ஆடப்படுவது. இரண்டு காரணங்களுக்காக இந்நடனம் ஆடப்படுகிறது. முதலாவது தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக்கொள்ள. மற்றொன்று எதிராளியிடம் தாங்கள் எவ்வளவு உக்கிரமானவர்கள் எனக்காட்டி பயமுறுத்த. அதற்காக இந்த நடனத்தை ஆடும்போது கண்களை விரித்து நாக்கை வெளியே நீட்டி முகத்தை கோரமாக்கி அதீத உணர்ச்சியை வெளிபடுத்துவர். மருள் வந்ததைப் போல எனக் கற்பனைச் செய்துக்கொள்ளலாம்.

நியூசிலாந்து எப்போதெல்லாம் அனைத்துலக அளவிலான போட்டிகளில் கலந்துகொள்கிறதோ அப்போதெல்லாம் இந்த நடனம் ஆடப்படுகிறது. ரக்பியில் இந்த நடனம் புகழ்பெற்றாலும் கல்லூரிகளில் இதற்கான பயிற்சிகள் உண்டு. இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுக்கும் இந்நடனம் பயிற்றுவிக்கப்படுகிறது.

செல்வா அவர்கள் மற்றுமொரு கிளப்பை கண்டுப்பிடித்தார். உள்ளே சில உணவுகளை ஆர்டர் செய்துக்கொண்டு அமர்ந்தோம். அப்போதுதான் எனக்கு வயிற்றைக் கலக்கியது. எனவே அங்கிருந்த கழிப்பறைக்குச் சென்றேன். இதற்குள் தங்காவும் அவர் நண்பர் வினோட்டும் வந்திருந்தனர். நான் கழிப்பறையில் இருந்தபோது ரக்பி தொடங்கிவிட்டது. தங்கா என்னைத் தேடிக்கொண்டு கழிப்பறைகள் இருந்தப் பகுதிக்கு வந்தார். “சீக்கிரம் வாங்க… நீங்க ஹக்கா பாக்க வேண்டாமா?” என ஆர்வமாகக் கேட்டார். “நான் கக்கா போக வேண்டாமா?” என வாய்க்குள் முணகியபடியே ஒருவாராகச் சிரித்தபடி வெளியே வந்தேன்.

ஹக்கா உக்கிரமான நடனம்தான். நாம் மற்போர் செய்யும் முன்பு சுயமாக உடலையும் தொடையையும் அடித்து ஓசை எழுப்புவதுபோல இவர்கள் கூட்டாக எழுப்புவது எதிராளியை பயமுறுத்தக்கூடியவைதான். நான் இதே தன்மை கொண்ட சிபி நடனத்தைப் பார்த்துள்ளேன். அது பிஜி மக்களால் ஆடப்படும் போர் நடனம். இங்கிலாந்து அணி ‘இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம்’ என கண் அசையாமல் அவர்கள் நடனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது.

“மாவோரிகள் ஒருவிதத்தில் பயமுறுத்தினால், ஆங்கிலேயர்கள் அவர்கள் நம்பிக்கையை உடைக்கும் வகையில் எவ்வளவு கூர்மையாக ஹக்காவை பார்க்கிறார்கள் பாருங்கள்” என செல்வா கூறினார்.

ஹகா நடனம் பார்க்க

‘ஆல் பிளேக்’ (All Black) எனும் நியூசிலாந்து ஆண்களுக்கான ரக்பி குழுவும் ‘பிளேக் ஃபெர்ன்ஸ்’ (Black Ferns) என்ற பெண்களுக்கான நியூசிலாந்து ரக்பி குழுவும் இன்று உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு பிரியர்கள் மத்தியில் பிரபலம். சில்வர் பெர்ன் (Silver Fern) இலைதான் இக்குழுக்களின் அடையாளம். மேலே பச்சையாகவும் அடியில் வெள்ளி நிறத்திலும் காட்சியளிப்பதால் இதற்கு இப்பெயர். காற்பந்து அணி, கிரிக்கெட் அணி, தேசிய விமானம் என அனைத்திலும் இந்த சில்வர் பெர்ன்தான் அடையாளமாக உள்ளது. 1880 முதல் இதுதான் நியூசிலாந்தின் தேசிய அடையாளம். மாவோரிகளுக்கு இந்த இலைகளின் நேர்த்தியான வடிவம் வலிமை, உறுதியான எதிர்ப்பு நிலை மற்றும் நீடித்த சக்தியின் குறியீடாக உள்ளது. மாவோரி அல்லாத நியூசிலாந்தர்கள் இந்தச் சின்னத்தை தங்கள் தாய்நாடான நியூசிலாந்தின் மீதான பற்றுதலுக்கு அடையாளமாக குறிப்பிடுகின்றனர்.

சில்வர் பெர்ன்

அந்தக் கிளப்பில் அதிக உற்சாகமாக இருந்தது செல்வாதான். நியூசிலாந்து கோல் அடித்தால் துடிப்புடன் எழுந்து ‘கோல்’ எனக் கத்தினார். இளமையில் மனிதர் இன்னும் துள்ளலுடன் இருந்திருக்கக்கூடும். இடைவேளை வந்தபோது வேறு கிளப்புக்குச் சென்று பார்க்கலாம் என முடிவெடுத்தோம். அந்தக் கிளப்பில் கூட்டம் சேரவில்லை. எனவே உற்சாகம் குறைவாக இருந்தது. வேறு கிளப்பைத் தேடிக் கண்டடைந்தபோது அங்கு ஆங்கிலேயர்களே அதிகம் இருந்தனர். மிக நாகரீகமான கிளப் என்பதால் உற்சாகமும் குறைவாக இருந்தது. ஆட்டம் தொடங்கிவிட்டதால் வேறு வழியில்லை என அமர்ந்தோம். அப்போது எனக்கு மலேசியாவில் இருந்து சில முக்கிய அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. வேலை நிமித்தமானவை. நான் முன்னறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தேன்.

தொலைவில் நண்பர்களின் உற்சாகம், ஒலியற்ற காட்சிகளாக நிகழ்ந்துகொண்டிருந்ததை ரசிக்க முடிந்தது. செல்வா அவர்களே துருதுருவென இருந்தார். கடைசியாக நண்பர்களின் கை உயர்ந்தது நியூசிலாந்து வெற்றி பெற்றதற்கு அடையாளமாக இருந்தது. மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அது எனக்கே ஆச்சரியமாகவும் இருந்தது.

  • தொடரும்
(Visited 100 times, 1 visits today)